நாவல் தொடர் – 7

பாரடா முன்னுரைத்த முப்பூவெல்லாம் பரிவாகச் சித்தருக்கு சிலயோகம் அங்குச் சேரடா அன்பதற்குள் சொன்ன உவப்பு அதிலுள்ள மானிடர்க்குச் செய்ய வேண்டி ஊரடா வீறுகொண்ட ஒழுத்தடுக்கு உறுதியாய்த் தேகமது வலுத்துப் போச்சு சூரடா வேனைப் போமே சொல்லப் பொறார் சீரிய முப்பூவின் அருமை பாரேன்……தானென்ற நோய்களினால் செத்துப் போனால் தாரணியும் உண்டோ தானே சொல்லுவான் என்ற சிவனைக் கேள் மைந்தா எய்துமாறு சொல்லு மாதாவே நீ சொல்லு தேனென்று மதுவினொடு மணியால் சிவனைக் கேட்டு செகத்திலே மதுவைத் திட்டி இதே தான் ஊனென்ற வியாதிகளே உடனே விட்டு ஓகோகோம் என்றால் உய்வதேதோ…..ஜலபூரணி முணுமுணுத்தபடி கசாயத்தைக் காய்ச்சினாள்.

அடுப்பையும் பாத்திரத்தையும் கவனித்தவாறே அடிக்கடி ஜீவகனைப் பார்த்தாள். அவன் நல்ல மயக்கத்தில் சுவரோரம் ஒண்டிக் கிடந்தான். அவனிடத்தில் மெல்லிய குறட்டையொலி எழுந்தது. ஊண் நாற்றமடிப்பதாகவும் கருதினாள் ஜலபூரணி. அடிக்கடி முகத்தைச் சுருக்கினாள்.

மயங்கிக்கிடந்த மகனையும், மிதிவண்டியையும் வீட்டுக்குக் கொணர்ந்து சேர்த்த வீராப்பில் சாக்கிலும் சைகையிலும் எல்லாரையும் திட்டிக் கொண்டு இருந்தாள் பொம்மக்கண்ணி. ஜீவகனையும், மிதிவண்டியையும் இறக்கி வீட்டிற்குள் கிடத்துவதற்கு உதவி செய்த அக்கம் பக்கத்தார் முகம் சுழித்தனர்.

தன்னையும், தன் பிள்ளைகளையும் ஊரார் எவ்விதம் பார்க்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். மைவண்ணன் செத்த பிறகு மந்திரக்காரன் பட்டியிலிருந்து கிளம்பித் திருநகரின் எல்லைப் புறத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். மந்திரக்காரன் பட்டியிலிருந்து அவர்கள் புறப்படும் சமயம் மாலை மங்கியிருந்தது. வானத்தில் நிலவும் முளைத்திருந்தது. இப்படி பொழுதமர்ந்து போவதே நல்லதென்று பொம்மக்கண்ணி நினைத்தாள். ஊராரின் கண்களில் விழுவதற்கு அவள் தாயாரில்லை.

வண்டியில் உட்கார்ந்து செல்கையில், பொம்மக்கண்ணியின் பேச்சுக்கு அஞ்சி உருத்திர பாணி வாய்மூடிச் சென்றான். பொருட்களையெல்லாம் ஓர் இரட்டை மாட்டு வண்டி சுமந்து நடந்தது. பெண்பிள்ளைகள் அம்மாவை நெருக்கியடித்து அமர்ந்திருக்க, ஜீவகன் மட்டும் பித்தளைப் பாத்திரங்களுக்கு மேலாக வைக்கப்பட்டிருக்கும் துணி மூட்டையில் சாய்ந்தவாறு வானத்தை ஏறிட்டு வந்தான்.

”மல தொறத்திணு வருது!”

“இல்ல, நிலா தொறத்திணு வருது!”

கோட்டமாரியும், சொக்கம்மாளும் ஜீவகனுக்கு மறுத்துச் சொல்லிக் கொண்டார்கள். மூவரையும் மறுத்து “நெலாவும், மலையும் சேந்து வருது!” என்றாள் ஜலபூரணி. ”என் வாயில நல்லா வருது!” என்றாள் பொம்மக்கண்ணி. எல்லாரும் வாயை மூடிக்கொண்டார்கள்.

திருநகருக்கு வந்து குடியேறியதிலிருந்து இதுநாள்வரைக்கும் அந்த ஊராரையும், அவர்களையும் வேறுகழிக்கும் ஒரு மெல்லிய தடுப்பு இழை காற்றில் பறப்பதாகவே பொம்மக்கண்ணி நினைத்தாள். வேற்றோரிடத்தில் இருக்கும் ஓர் ஆணை மணந்து சென்றுவிட்டால், ஊரும் வேறாகிவிடுமோ? கட்டிக்கொண்டு போன ஊரிலேயே, பிறந்து வளர்ந்த இடத்துக்கு மரியாதை செய்திடும் வகையில், அவளை “நகரத்தாள்” என்றே அழைப்பார்கள். ஆனால் இங்கு? இத்தனைக்கும் அது அவளுக்கு ஒன்றும் அசலூர் அல்ல. அவளின் தாத்தனும், அப்பனும் வாழ்ந்த ஊர். பெற்றவர்கள் பாத்தியதையில் கிடைத்த விஸ்தாரமான இடம் என்னவோ இங்கு இருந்தாலும், அது மனையில் வீடு கட்டிக்கொண்டு வாழ்வதைப் போலில்லை. ஊராரின் கண்களுக்குள்ளும், கசடுகள் இருக்கும் நெஞ்சுக்குள்ளும் கட்டிக்கொண்டு வாழ்வதாகவே இருந்தது.

ஜீவகனின் நாட்பட்ட போதையைத் தெளிவிப்பதற்குப் பொம்மக்கண்ணி  பலவிதமான உபாயங்களைக் கையாண்டாள். எலுமிச்சைச் சாற்றில் உப்புக்  கலந்து குடிக்கக் கொடுத்தாள். தயிர்ச்சோறு தந்தாள். கருப்புக் காபியையும், பால் கலந்திடாத தேநீரையும் அருந்த வைத்தாள். நாட்டுக்கோழி முட்டையை உடைத்து அப்படியே குடிக்கச் சொன்னாள்.  இஞ்சியைக் கொதிக்க வைத்துக் கொடுத்தாள். அலைந்துத் திரிந்து எங்கிருந்தோ பில்பத்திரி இலைகளைப் பறித்து வந்து ஜலபூரணியிடம் கொடுத்த அவள் அதில் தனியாவையும், ஏலக்காயையும் நுணுக்கிப் போட்டு வெல்லத்தைச் சேர்த்துக் காய்ச்சிடச் சொன்னாள்.

ஜீவகனின் மயக்கம் தெளிந்து வந்தது. மயக்கத்தினூடாகப் பலவிதமான மனப்பதிவுகளின் காட்சிரூபங்கள் திரையிட்டு அணைந்தன. மாட்டுப் பட்டிக்குள் நின்றிருக்கும் மைவண்ணனைப் பார்த்த காவலர் இறுகிய முகத்துடன் இரைந்தார்.

“போனதடவ போனா போதுன்னு குடிச்சிருக்கிறதா கேசு போட்டேன். இந்த தபா சாராயம் காச்சிறன்னே போடப்போறேன். இனிமேல்ட்டுக்கு அவ்ளோதான். ஜென்மத்துக்கு நீ தலதூக்க முடியாது. என்னாடா, நா பேசினேகீறேன். நீ உம்முனு கீற? குடிச்சிக்கிறயா? இப்பிடி முன்னால வந்து வாய ஊதுடா!”

மைவண்ணன் அந்தக் காவலரின் முகத்துக்கு நேராக வந்து நின்று, சடாரென்று தீக்குச்சியைக் கிழித்துப் பிடித்து, வாயிலிருக்கும் சாராயத்தை ஊதினார். அது குபீரென்று பற்றி, பெருந்தீயாகிக் காவலரின் முகத்தைப் பொசுக்கியது. அந்தக் காவலர் சிவந்த வானத்துக்கு நேரே ஓலமிட்டபடி ஓடினார். ஜீவகன் மயக்கத்திலிருந்து விதிர்த்து எழுந்து உட்கார்ந்தான். எல்லாரையும் மலங்க மலங்கப் பார்த்தான். அவனுக்குத் துப்புரவாகத் தெளிந்திருந்தது. அப்போது அவன் சகோதரிகளும், நலம் விசாரிக்க வந்த ஊராரும் அதிர்ச்சியடையும் விதமாகச் சிவுக்கென எழுந்து சென்று ஜீவகனின் கன்னத்தில் அறைந்தாள் பொம்மக்கண்ணி.

“மாட்டத் தேடிணு போனவன், பொருளு இல்லேன்னதும், போன நூக்குலியே ஊட்டுக்கு வரவேண்டியதுதானே? புத்தியுள்ள பையன் செய்ற வேலையாடா இது? உங்கொப்பங்காரனோட பட்டனோ பட்டனோ அப்பிடிப் பட்டேன். இப்ப நீ எழுந்துக்கினியா?”

ஜீவகனின் கண்கள் கலங்கின. அவன் சகோதரிகளைப் பரிதாபமுடன் பார்த்தான். அவர்களுக்கும் கண்கள் கலங்கின. ஆனால், பொம்மக்கண்ணியிடம் பேசுவதற்குப் பயந்தார்கள்.

“எனுமோ ஒன்ன சாப்புட்றதுக்கு குடுத்தாங்க எம்மா. அப்போ புடிச்சி என்னா நடக்குதுன்னே தெரில. மயக்கம் மயக்கமா வந்துடுச்சி”

“ம்க்கும். நீ சின்ன கொளந்த பாரு! சீ, எள்றா. மொதுல்ல போயி அந்த சைக்கிள பாயி கடையில குடுத்துட்டு வா. வர்ற வழியில அவருகிட்ட சொல்லிட்டு வந்துக்கிறேன் பாரு!”

ஜீவகன் அம்மாவை அதலையாகப் பார்த்தான். பொம்மக்கண்ணி அவனை அப்படியே ஆரத்தழுவியபடிக் குலுங்கி குலுங்கி அழுதாள்.

“இந்த நாலு பொம்ணேட்டிகளையும் அனாதையா ஆக்கிப்புடாதடா சாமீ”

அவளோடு சேர்ந்து சகோதரிகளும் அழுதார்கள். சொற்கள் கிடைக்காமல், என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தான் ஜீவகன்.

“மா, உங்கள உட்டுபுட்டு நா என்னாமா பண்ணுவேன்? இப்பிடிப் பேசறத இதோட உட்டுரு. போம்மா எழுந்து கம்முனு!”

ஜீவகன் வெளிவாசலுக்கு வந்து மிதிவண்டியைத் தள்ளி மிதிப்பதை நான்கு பெண்களும் வீட்டுக்குள்ளிருந்தபடியே ஆறுதலாகப் பார்த்தார்கள்.

ஜீவகனுக்கு ஊர் புதிதாகத் தெரிந்தது. நாலுகம்பம் சாலை நடமாட்டமின்றிக் கிடந்தது. ஜீவகன் மிதிவண்டியைக் கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு ரவூப்பாயைப் பார்த்தான். தொடை வரைக்கும் கருப்பு லுங்கியை தள்ளிவிட்டபடி இரும்புக் குந்தாவின் மீது உட்கார்ந்து, மிதிவண்டி ஒன்றின் சக்கரக் கவசத்தை மண்ணெண்ணெய் விட்டுக் கழுவிக் கொண்டிருந்தார் ரவூப்பாய்.

ஒரு மிதிவண்டியை முழுவதுமாகப் பிரித்துக் கழுவிப் பூட்டுகிறார்கள் போலிருந்தது. அவருக்கு இரண்டு இளைஞர்கள் பொருட்களை எடுத்துக் கொடுத்து உதவியபடி அலைந்தனர். ரவூப்பாய் கட்டியிருக்கும் லுங்கியானது வாங்குகையில் நிச்சயமாக வெள்ளையாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் அந்த நேரத்தில் அவனுக்கு வலுத்தது. சக்கரக் கவசத்தை இரும்புத் தக்காரியில் தேங்கும் மண்ணெண்ணெயில் அலசிக்கொண்டே ஜீவகனிடத்தில் பேசினார் ரவூப்பாய்.

“வாப்பா. ஒக்காரு. நீ நம்ப ருத்ராணி அண்ணன் மொவன்னு நம்பக்கிட்ட சொல்றதில்லியா? நேத்து வண்டில போறப்போ, உங்கொம்மா சொல்ட்டுப் போச்சி. அப்பாலத்தான் எனுக்கே தெரியும். எங்கப் போனாலும், மின்ன நாம யாரு, என்னான்றத சொல்ணும்!”

ஜீவகன் தயங்கியபடியே அங்கிருந்த முக்காலியின் மேல் உட்கார்ந்தான். கிரீஸ் கறையும், தூசும் பட்டு முக்காலி நன்றாகக் கருத்திருந்தது. அங்கிருந்தபடியே அரண்மனை வீட்டுச் சுவரின் பக்கமாகப் பார்த்தான். குதிரை வண்டிகளும், மாட்டு வண்டிகளும் சுவர் அருகில் நின்றன. கோணி மூட்டையிலிருந்து அவிழ்த்துக் கொட்டப்பட்ட அருகம்புற்களை குதிரைகள் மேய்ந்தன. மாடுகளுக்குச் சோளப்பயிர்க் கட்டுகளை போட்டிருந்தார்கள். சாணத்தாலும், கோமியத்தாலும் அந்தப்பிரதேசம் பசிய நிறத்திலிருந்தது. சுவரின் பாதி நீளத்துக்கு இருந்த தண்ணீர் தொட்டி பாசிபிடித்துக் கருத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

அரண்மனை வீட்டுச்சுவரில் தமிழ் மற்றும் இந்திப் படங்களின் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். எம்.ஜி.ஆர் படச் சுவரொட்டிக்கு அருகில், மழுங்கச் சிரைத்த நீள்முகத்து நெற்றியில் காவிப் பொட்டை வைத்திருக்கும் சுவரொட்டி நாயகன் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் எழுந்தது.

“அந்தப் போஸ்டர்லக்கீறது யாரு பாய்?”

“அது ஆரானா இருந்துட்டுப் போட்டும் உடுப்பா. நமுக்கு பொளப்பல்லுவா முக்கியம்? நீ என்னா குடிக்கிற சொல்லு?”

ரவூப் பாய் கண்டிப்புடன் சொல்லிவிட்டு எடுபுடி சிறுவனிடம் இரைந்தார்.

“டேய், ஜம்ஜித் கடையில போயி நாலு ச்சா சொல்ட்டு வா. நல்லா குடுக்கச் சொல்லு”

சிறுவன் போவதை அனிச்சையாய்ப் பார்த்துவிட்டு, ஜீவகன் பக்கம் திரும்பிக் கேட்டார்.

“என்னா தொயில் செய்றே?”

“பீடி சுத்தறேன் பாய். அதுகூடக் கொஞ்ச நாளாத்தான். அதுக்கு மின்னாடி கெணத்து வேல செஞ்சேன். வெடி வெய்ப்பேன். ஜம்புரு கம்பி புடிப்பேன். சோதன குழி போடுவேன். கெட்ட இசுப்பேன். சகலமும் பாத்து உட்டேன். இத்தான்றதில்ல”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே தேநீர் வந்தது. அதை வாங்கிக் குடித்ததும் உடல் உற்சாகமடைந்து மேலும் சொற்கள் உற்பவமாயின. அவன் தொடர்ந்து பேசினான்.

”எல்லா வேலையும் செஞ்சேன் பாய்! வண்டிமாடு ஓட்டினேன். குடியாத்தத்துல வெறகு டிப்போவுல போயி வேல செஞ்சேன். ஆந்திரா ரவிக்கிட்ட புளியாம் வெறகு வாங்கி வித்தேன். மாங்கா மரம் வாங்கி வெட்டுனேன். வெறகு வேபாரம் தனியா பண்ணும்போது கொஞ்சம் துட்டு கூட வெச்சிக்கிணு இருந்தேன். எதுவும் நெலைக்கல. சமாளிக்க முடியல பாய். ஒரு அக்கா, ரெண்டு தங்கச்சிங்க. உன்னும் யாருக்கும் கல்யாணமாகல. அம்மா தெனத்திக்கும் அழுவுறாங்க. ஒன்னும் புரியல பாய். ரெண்டு மாட்டையும், இந்த பீடி வேலையையும் வெச்சிக்கிணு என்னா செய்யப்போறேன்னு தெரியில”

”ஏந்தெர்ல? ஏதோ பஸ்சு ஏறி ஊரூராப் போயி எறங்கி, அப்பிடியே ஏறி வந்துட்டாபுலக்கீது நீ சொல்றது! தொழில்னா, புடிவாதம் ஓணும்பா. உடாப்புடியா ஒன்னுத்திலியே உளுந்து ஏந்திரிக்கணும். அப்போதான் நெளிவு சுளிவு தெரியும். பொளப்பு நெலபடும். நா, இந்த சைக்கிள் தொயில எவ்ளோ நாளா செய்றேன்னு நெனைக்கிற? 1940 லேர்ந்து செய்றேன். உங்கொப்பாவே எனுக்கு இந்தத் தொயில் மூலமாதான் பழக்கம்!”

ரவூப்பாயை ஜீவகன் கவனமாகப் பார்த்தான். கடையைப் பாதி அடைத்து இருந்த மிதிவண்டிப் பொருட்களின் பின்னணியில் அவர் உறுதியாகப் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரே வரிசை எண் பொறித்த பத்துக்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே பழைய மிதிவண்டிகளும் அவற்றின் பொருட்களும் கிடந்தன.

“நம்ப ஊர்லியே மொதுல்ல சைக்கிள் கட வெச்சது எங்க பாவாதான். அப்பல்லாம் சைக்கிள்னு ஒன்னு கீதுன்றதே யாருக்கும் தெரியாது. யாராவது வெள்ளக்கார கிறிஸ்டின் மிசினரிங்க மெறிச்சிணு போனா, அதிசியமா பாக்குவாங்க. அப்பாறம் மிலிட்டரி ஆளுங்க. இந்த பி.எஸ்.ஏ பிராண்டு சைக்கிள் கீதே, அது மிலிட்டிரி ஆளுங்க மடிச்சி பையில வெச்சிணு போறத்துக் கோசிரி தாயார் பண்ணண்டே! பொறவு கல்கட்டாவுக்கும், பம்பாய்க்கும் சைக்கிள் வந்துச்சு. அப்ப, ராலி கம்பெனிதான் ரொம்ப பேமசு. அப்பாறம் ஹெர்குலிஸ். இந்த பிராண்டுங்குள்ள கூட ஏற்றத்தாழ்வு! ஜேம்ஸ் சைக்கிள்னு ஒன்னு வரும். அத்த டாக்டருங்க, வக்கீலுங்க மாத்ரம் வாங்கி ஓட்டுவாங்க. ராலி பிராண்டு பணக்காரங்க வாங்கி ஓட்றது. ஒழப்பாளி ஜனங்களுக்கு ஹெர்குலிஸ்தான்! எங்க பாவா இத்தையெல்லாம் பாக்கல. பம்பாய்க்குப் போயி அம்பது ராலி சைக்கிளுங்கள வாங்கி ரயில்ல ஏத்திணு வந்தாரு. அதும் யாராண்ட பேசி தெரியுமா? சைக்கிள்ளயே ஒலகத்த சுத்திணு வந்த ஆதில் ஹக்கிம் பாய்க்கிட்ட! ஆதில் ஹக்கிம் எங்களுக்கு பல்லாரி வகையறாவுல சொந்தம்! அப்போ பளக்கமானவருதான் ஒங்கொப்பா!”

கடையின் ஒரு மூலையில் மாட்டியிருக்கும் படத்தை வேலைக்காரச் சிறுவனிடம் எடுத்து வரச்சொல்லி ஜீவகனிடம் கொடுத்தார் ரவூப்பாய். பழைய ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றை அப்படியே சட்டமிட்டு இருந்தார்கள். நல்ல உறுதியான மரச்சட்டம். கண்ணாடியின் மேல் அங்கங்கே துள்ளுப் பூச்சிகள் கறுப்பு எச்சத்தால் புள்ளி வைத்திருந்தன. செய்தியின் நடுவில் வட்டத் தொப்பிகளோடு ஆளுக்கொரு மிதிவண்டியைப் பிடித்தபடி ஆறுபேர் நின்றிருந்தார்கள்.

மிதிவண்டிகள் இந்தியாவில் அறிமுகமான காலத்தில், பெரும் பணக்காரர்களும் தொழில் ஆர்வம் மிக்க பார்சிகளும் மட்டுமே அவற்றை வாங்கி ஓட்டினர். பெண்கள் மிதிவண்டி ஓட்டுவதற்குத் தடை இருந்தது. அப்போது நிறைய மிதிவண்டி சாகச நிகழ்ச்சிகளும், பயணங்களும் நடத்தப்பட்டன. பம்பாய் பளுதூக்குவோர் சங்க உறுப்பினர்களான ஆதில் ஹக்கிம், ஜல் பாப்பாசோலா, ருஸ்தம் பூம்காரா, குஸ்தட் ஆதிராம், கேகி போச்கானாவாலா, நாரிமன் கபாடியா ஆகியோர் 1923 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலக மிதிவண்டிப் பயணத்தைத் தொடங்கி, நான்கு வருடம் ஆறு மாதம் பயணம் செய்து, எழுபதாயிரம் கிலோமீட்டர் கடந்து, 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பம்பாய் திரும்பினர்.

இந்த உலகப் பயணத்தை ஒழுங்காக நிறைவு செய்தது ஆதில் ஹக்கிம், ஜல் பாப்பாசோலா, ருஸ்தம் பூம்காரா ஆகிய மூன்றுபேர் மட்டுமே. மற்ற மூவரில் ஒருவர் பயணத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டார். இருவர் அமெரிக்காவில் தங்கிவிட்டனர். ஜீவகன் எழுந்து சென்று கையிலிருந்த படத்தை ஆணியில் மாட்டும் போது, சற்றுத் தள்ளி ஒருவரின் உருவப்படம் சுவரில் தொங்குவதைக் கவனித்தான். ஒருவேளை அவர்தான் ஆதில் ஹக்கிம் பாயாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டான்.

மேல்பட்டி ரயில் நிலையத்துக்கு பல்லாரி சுகையில் சாகிபுவின் மிதிவண்டிகள் வந்து சேர்ந்துவிட்டன என்பதே திருநகரின் பேச்சாக இருந்தது. சரக்கை ஏற்றிவந்த கூட்ஸ் ரயில் வண்டி எல்லாவற்றையும் இறக்கும் வரை இரண்டு மூன்று நாட்களுக்கு ரயில் நிலையத்திலேயே நிற்கும் என ஆச்சர்யப்பட்டுச் சொல்லிக் கொண்டார்கள். பல்லாரி சுகையில் சாகிபு, இளைஞனாயிருந்த மகன் ரவூப்பை அழைத்துக் கொண்டு மேல்பட்டிக்குச் சென்று முதலில் மிதிவண்டிப் பொருட்கள் அடங்கிய மரப்பெட்டிகளை நிலைய அதிகாரியிடம் கையெழுத்திட்டு இறக்கி வைத்தார். அதற்கு மேல் தான் அவருக்கு நிறைய வேலைகள் இருந்தன.

அதிக பாரம் கொண்ட அந்தப் பெட்டிகளை மாட்டு வண்டிகளிலோ, சொகுசான குதிரை வண்டிகளிலோ திருநகருக்கு ஏற்றிச் செல்ல இயலாது. ஆகவே, ரயில் நிலையத்துக்கு முன்னால் சிறு மசூதியை ஒட்டி இருக்கும் ஹக்கிம் சாயபுவின் இடத்தில் அந்த மரப்பெட்டிகளைப் பிரித்து, அங்கேயே மிதிவண்டிகளைப் பூட்டி, வாலிபர்களை விட்டு மிதிக்கச் செய்து, மேல்பட்டியிலிருந்து திருநகருக்குக் கொண்டு சென்று விடுவது என்று திட்டம் போட்டார் பல்லாரி சுகையில் சாகிபு.

ஹக்கிம் சாயபுவிடம் சென்று இடத்துக்கு அனுமதி வாங்கிக்கொண்டார். அவர் நினைத்தபடியே எல்லாம் நடந்து முடிந்தன. மிதிவண்டிகளை ஒழுங்காகப் பூட்டிக் கொடுப்பதற்கு பம்பாயிலிருந்தே ஒருவர் பிரத்தியேகமாக வந்திருந்தார். அவரைப் பார்த்த ஆட்கள், அவர் மிதிவண்டி சாமான்கள் அடங்கிய பெட்டிக்குள்ளேயே உட்கார்ந்து வந்தாரா? அல்லது சரக்குப் பெட்டிகளுடன் கூடிஸில் ஏறி வந்தாரா? என்றெல்லாம் வினவிக் கொண்டனர். பல்லாரி சுகையில் சாகிப், அவர்களின் வாய்களை அடைத்திடும் விதமாக, அந்த உதவியாளரைத்தான் வானத்திலேயே பறந்து வரச்சொன்னதாகச் சொல்லி முடித்து வைத்தார்.

மிதிவண்டிகள் அனைத்துமே பூட்டப் பட்டவுடன் அவற்றைத் திருநகருக்குக் கொண்டு செல்லும் வகையில் திடகாத்திரமான ஐந்து வாலிபர்கள் மேல்பட்டிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் உருத்திரபாணி மட்டும் பார்ப்பதற்கு மாறுபட்டவனாக நெற்றி நிறைய திருநீருடன் அமைதியாக நின்றான். அவன் தன்னுடைய அத்தை மாமா வீட்டுக்கு வந்திருந்தான். ஐந்தைந்து மிதிவண்டிகளாகப் பத்து தடவை மிதித்துச் செல்வது என்று முடிவாகியது. மேல்பட்டியிலிருந்து திருநகருக்குச் செல்லும் வழி காட்டுப் பாதையாகவும், மண்பாட்டையாகவும் இருந்தது. சுமார் பத்து மைல் மிதிக்க வேண்டும்.

இளைஞர்கள் மிதிவண்டியை மிதிப்பது கோலாகலமானதொரு திருவிழாவாக மாறியது. மேல்பட்டி ஊர்மக்களும், சுற்றுப்பக்க கிராம மக்களும் சாலையின் இரண்டு பக்கங்களிலும் குழுமி விட்டனர். இளைஞர்கள் மிதிவண்டியில் ஏறி அமர்கையில் எழுந்த கைத்தட்டல்களும் கூச்சல்களும் விண்ணைப் பிளந்தன. முதலில் இளைஞர்கள் உலோக வண்டிகளை மிதிக்க முடியாமலும், ஹேண்டில் பார்களை ஒழுங்காக வளைக்க முடியாமலும் கீழே விழுந்து எழுந்த நேரங்களில் மக்கள் சிரித்தனர். அவர்தம் சிரிப்புக் காற்றென எழும்பிச் சென்று ஜவ்வாது மலைத்தொடரில் மோதித் திரும்பியது.

பல்லாரி சுகையில் சாகிபு எல்லாவற்றையும் நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கையிலேயே மழை வந்து மக்களை விரட்டியது. அவர் சந்தோஷப் படுவதற்குள், திருநகருக்குச் செல்லும் காட்டுவழி மழை நீரால் இளகி வழுக்குப் பாதையாக மாறியிருந்தது. இளைஞர்கள் இரண்டாவது சுற்றுக்கே தொய்வடைந்து போயினர். பாதையில் மிதிவண்டியைச் செலுத்த முடியாமல் வழுக்கி விழுந்து எழுந்தனர். எங்கே மழையில் நனைந்த மிதிவண்டிகளுக்குச் சிலும்பு பிடித்துவிடுமோ என்று கவலைக் குள்ளானார் பல்லாரி சுகையில் சாகிபு.

“உங்கொப்பாவ உட்டுட்டு மிச்ச பேர்லாம் வரமாட்டேன்னு நின்னுட்டாங்களாம். ருத்ராணியண்ணந்தான் மிச்சமிருந்த சைக்கிளுங்களையெல்லாம் தனி ஆளா கொணாந்து இங்க சேத்தாராம். எங்க பாவா சொல்லுவார். அதுக்கு பெராயசித்தமா உங்கொப்பம்மா கண்ணாலத்துக்கு எங்க பாவா ஒரு சைக்கிளயே குடுத்திருக்கிறாருன்னா பாத்துக்கியேன்”

சாலைக்கு எதிரிலிருக்கும் மசூதியிலிருந்து அஜான் சத்தம் ஒலித்ததும் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எழுந்த ரவூப்பாய் மசூதியை நோக்கிச் சென்றார். அவர் போவதை அனிச்சையாகக் கவனித்திருந்த ஜீவகன், நினைவு வந்தவனாக எழுந்து அவர் அருகில் ஓடினான்.

“பாய் நானு ஒரு சைக்கிள எடுத்துணு எருகூரு வரைக்கும் போயிட்டு வந்துட்றேன். அங்க ஒரு பிரண்ட பாக்கணும். அவங்கிட்ட வேலைக்கிச் சொல்லி வெச்சிருந்தேன்!”

“நல்லது நடக்கட்டும். போயிட்டு வா”

ரவூப்பாய் சொல்லிவிட்டு மசூதிக்குள்ளே நுழைந்த பிறகு, ஜீவகன் அந்தத் தெருவை நோக்கினான். முட்டுச்சந்தாக ஆள் நடமாட்டம் இல்லாமல் சிந்துபாத் கதையில் இருக்கும் வீடுகளுடன் தெரிந்தது தெரு. நடுப்பகல் வெய்யில் வீதியில் கவிழ்ந்திருந்த ஒளி, வீடுகளுக்கருகில் நீளமான இரண்டு கறுப்புக் கோடுகளை விட்டு வைத்து, ஒரு தடத்தை உருவாக்கியிருந்தது.

ஜீவகன் சாலையைக் கடந்து வந்து கடைச் சிறுவனிடம் சொல்லிவிட்டு ஒரு மிதிவண்டியை எடுத்து இரண்டு சக்கரங்களிலும் காற்றைப் பரிசோதித்த பின்னர் ஏறி மிதித்து ஒளித்தடத்தில் மறைந்தான்.

*