நிர்மல் பிரதேஷ் என்ற கற்பனையான மாநிலம். அலைபேசி மக்களிடைய பரவலாகப் புழங்குவதற்கு முன்பான காலகட்டத்தில் துவங்குகிறது கதை. வெளியுலகம் காணாத வெள்ளந்திப் பெண்ணான ஃபூல் குமாரியை மணக்கிறான் தீபக் குமார். திருமணம் முடிந்து ரயிலில் இருவரும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு அருகில் இன்னொரு திருமண ஜோடி அமர்கிறார்கள். இரண்டு மணமகன்களும் ஒரே நிறக் கோட்டும், இரு மணப்பெண்களும் ஒரே நிறச் சேலையும் அணிந்து அவர்கள் கலாச்சாரப்படி முக்காடிட்டுத் தங்களது முகத்தை மறைத்திருக்கிறார்கள். தனக்கான ஊர் வந்த அவசரத்தில் கிளம்பும் தீபக், உறங்கிக்கொண்டிருக்கும் தனது மனைவியை எழுப்பிச்சென்றுவிடுகிறான். சில கிலோமீட்டர்கள் கடந்து வீட்டில் ஆரத்தி எடுக்க முக்காடை எடுக்கும்போதுதான் தவறாக வேறொருவரை அழைத்து வந்துவிட்டது தீபக்கிற்கு தெரிகிறது. தங்களது மனைவிகளைத் தொலைத்த இரண்டு கணவர்களும் தங்களது காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். அடையாளம் கேட்கும் அதிகாரிகளிடம் முக்காடிட்டிருக்கும் மணப்பெண்ணின் புகைப்படம் ஒன்றைக்காட்டுகிறான் தீபக். இதை வைத்து எப்படிக் கண்டுபிடிப்பது என்று தலையில் அடித்துக்கொள்கிறார் அதிகாரி. இப்படியான நகைமுரணுடனும், நகைச்சுவையுடனும், நையாண்டியுடனும் இவர்களின் கதையைச் சொல்கிறது ‘லாபட்டா லேடீஸ்’.
அவசரத்தில் கிளம்பும் தீபக் கவனிக்கவில்லை சரி. ஆனால், தெரிந்தே ஏன் இன்னொரு பெண் ரயிலில் இருந்து கீழிறங்கினாள்? அவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று காத்திருந்தால் திறக்கிறது இன்னொரு கதை. பெற்றோரின் தற்கொலை மிரட்டலுக்குப் பயந்து வேறு வழியின்றித் திருமணம் செய்துகொண்டு கணவன் பிரதீப்புடன் செல்கிறாள் ஜெயா. தனது கணவன் உறங்கும் வேளையில், தீபக் அழைக்கும்போது இதுதான் சரியான வாய்ப்பென மறுக்காமல் தீபக்குடன் சென்று விடுகிறாள்.
‘படிங்கடா வடக்கன்களா’ என்ற மாதிரியான பதிவுகள், மீம்கள் பகிர்வதில் தொடங்கி ஏற்கனவே நாம் வடக்குத் தேச மக்களை போதுமான அளவுக்கு நகைத்துவிட்டோம். ஆனால் அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சூழல், அறியாமையில் திணறும் அடித்தட்டு மக்களது வாழ்க்கை முறையின் தீவிரம் எதையும் நாம் அறிந்ததில்லை. வட மாநில கிராமங்களின் நிலை இன்னமும் அப்படித்தான். கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப்போலப் பெண்களும் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு ஊட்டப்படும் பழமையான குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு, ‘இதுதான் நமது நாட்டின் கலாச்சாரம் போல’ என்று அவர்கள் மனத்தினுள் ஆழப்பதிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களை மனதளவில் மாற்றிவிடுகிறது. அப்படியாகக் கிராமங்களுக்கே உண்டான பிற்போக்கான புரிதல்களுக்கு உட்பட்டு வெளியுலகம் தெரியாமல் வீட்டுவேலைகள் மட்டுமே தெரியும் திருமணத்திற்காக வளர்க்கப்பட்ட குமாரி தன் கணவன் வந்து கூட்டிப் போவார் என்று ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள். தன் கனவுகளை நோக்கி பறக்கத் துடிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணாக ஜெயா/புஷ்பா (பிரதிபா ரந்தா), தன் கூடு எதுவென்றே தெரியாத ஓர் அப்பாவிப் பெண்ணாக ஃபூல் குமாரி (நிதான்ஷி கோயல்) என இரண்டு கதாப்பாத்திரமும் வேறு வேறு படிநிலைகளில் வாழ்கிறார்கள். (ஃபூல் மற்றும் புஷ்பா இரண்டிற்கும் ஹிந்தியில் ‘மலர்’ என்று பொருள்)
முக்காடு அணிந்து பின்பற்றப்படுகின்ற திருமணச் சடங்குகள், ‘வரதட்சணை கேட்காவிட்டால், மணமகனுக்கு ஏதோ வியாதி இருக்கிறது’ என்ற தவறான புரிதல், இன்னமும் பின்தங்கியிருக்கும் வட இந்திய கிராமங்கள் என அறியாமை சூழ்ந்திருக்கும் இக்கதைக்களம் அறியாமையின் அடித்தளத்தை உன்னிப்பாகக் கவனிக்க வைக்கிறது. அறியாமை ஒரு புறமிருந்தாலும் அதிர்ந்தும் பேசாத நாயகன் தீபக் குமார் (ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ்) எங்க வீட்லயே English பேசுறது நான்தான் எனப் பெருமையோடு காட்டிக்கொள்வதிலும், தனக்குத்தெரிந்த இன்னொரு பெரிய ஆங்கில வார்த்தையாக “I Love You” என்று சொல்லி முடிக்கும் போது முகம் சிவந்து பரவசப்படும் வெட்கம் கலந்த பெருமிதமும் அதைக் கேட்கும் குமாரியின் விழிகளில் விரியும் ஆச்சரியம் என அவர்களிடம் இருக்கும் வெள்ளந்தித்தனம் கலந்த காதல் எளிய மனிதர்களின் அழகிய வாழ்வின் ஒரு சோற்றுப்பதம். நேர்மறை எதிர்மறை என இரண்டும் கலந்திருந்தாலும், நேர்மறையான விஷயங்களின் விகிதம் அதிகமாக இருப்பது ஒரு நல்ல படைப்புக்கான தரம்.
கணவன் தீபக்கிற்காக ரயில் நிலையத்தில் குமாரி காத்திருக்கும் வேளையில், கொஞ்சம் கொஞ்சமாகப் புது முகங்கள் அவளுக்கு அறிமுகமாகின்றன. அதே ரயில்வே பிளாட்பாரத்தில் தேநீர்க்கடை வைத்திருக்கும் பாட்டி மஞ்சுவின் (சயா காதம்) அடைக்கலம் கிடைக்கிறது. தீபக் தவறாக அழைத்துவரப்பட்ட ஜெயா, தன்னைப் புஷ்பா என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். அவர்களின் குடும்பத்தில் ஜெயா போன்ற முற்போக்கான பெண்ணுடன் இணையும் ஒரு பிற்போக்கான பெண் கதாப்பாத்திரமும், தன் கணவனின் பெயரை உச்சரிக்கவே பயப்படும் பிற்போக்கான ஜெயாவுடன் இணையும் ஒரு முற்போக்கான பெண் கதாப்பாத்திரமும் கதையின் திசையில் நிகழ்த்துகிறது வானியல் மாற்றங்கள். அர்ஜுனனுக்கு உபதேசம் கொடுக்கும் கிருஷ்ணரைப்போல வயதான மஞ்சு மாயி வழியே உலகம் தெரியாத குமாரிக்குக் கொடுக்கும் உபதேசங்களும், அதே போல தீபக் குடும்பத்திடம் ஜெயா பேசும் காட்சிகளும் மறைமுகமாக ஆதிக்க சமூகத்தை அறைகிறது.
“நீ முட்டாளாக இருப்பது தவறில்லை.
ஆனால் முட்டாளாக இருப்பதை நினைத்துப்
பெருமைப்படுவதுதான் அவமானம்”.
சமுத்திரக்கனி போன்ற ஒரு நடிகர் தமிழ்சினிமாவில் பேச வேண்டிய வசனம் இது. ஆனால் இங்கே ஒரு வயதான பெண்மணியைச் சொல்ல வைத்து சுயாதீனமான ஒரு பெண் கடைக்கோடி மனிதர்களுக்கு நடுவிலும் வாழ்கிறார் என்பதை வெகு யதார்த்தத்துடன் காண்பிக்கிறது. இது போன்ற வசனங்கள் கதையின் சூழலுக்கு தகுந்தாற்போல இயல்பாக எழுதப்பட்டிருப்பது படத்தைப் பிரச்சார பாணியின்றி ரசிக்க வைக்கிறது. ஆதங்கத்துடனும், அக்கறையுடனும் குமாரியுடன் பேசும் மஞ்சு, கனவுகள் நிறைவேறாமல் போன ஒரு ஜெயாவாகக் கண் முன் நிற்கிறார்.
“ஒரு பெண் எந்தத்துணையுமின்றித் தனியாக வாழ்வது என்பது மிகக்கடினமான ஒன்று. ஆனால் அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் அதன் பின்னால் யாரும் உன்னை அசைக்கக்கூட முடியாது!” என்று ஜெயா சொல்லும் இடம் மிக முக்கியமானது. குடும்ப அமைப்புகளின் பின்னாலிருக்கும் குரூரங்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் ஓடி ஒளியும் பெண்கள் ஒரு கட்டத்தில் தலைவிதியே எனக் குழந்தைகளுக்காகவோ, பெற்றோர்களுக்காகவோ நடைபிணமாகப் பல குடும்பங்களில் வாழ்வதைப்பார்த்திருக்கிறோம். அதே வகையிலான ஒரு பெண்ணாகத்தான் குமாரியும் அவரது புகுந்த வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தாள். குமாரியைப்போலவே தீபக்கும் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறான். ஆனால், ஜெயாவின் கணவன் பிரதீப்பை போல ஆதிக்கத்திமிர் கொண்டவனாக இல்லாமல், தன் வீட்டில் அடைக்கலமிருக்கும் ஜெயாவுடன் தனக்கான இடைவெளியைக் கடைப்பிடிக்கிறான்.
ரயில்நிலையத் தேநீர்க்கடையில் வேலை செய்யும் குமாரி முதல்முறையாகத் தனது உழைப்பிற்கான பணத்தை மஞ்சுவிடமிருந்து பெறும் போது அவள் கண்களில் சுடர்கொள்கிறது நம்பிக்கையின் ஒளி. அதே வேளையில் படித்த ஜேயாவுடனிருக்கும் சுழலில் தீபக்கிற்கும் பெண்கள் மீதான புரிதல்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு பக்கம் காவல் துறையினர் சந்தேகிக்க, இன்னொரு பக்கம் தீபக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்காணிக்க, இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் படித்த பிறகு தன் வாழ்க்கை மாறும். தனது குடும்பத்தின் சூழல் மாறும் என நம்புகிறாள் ஜெயா. கல்வி தரும் நம்பிக்கையும், சுதந்திரமும் எளிய மனிதர்களால் வேறு எதன் வழியிலும் பெற முடியாது.
பிரதீப்பிடம் தப்பிக்க தீபக்குடன் வந்து யாருக்கும் தெரியாமல் மீண்டும் கல்லூரிக்குச் சேர முடிவு செய்தாலும், தன்னால் மனைவியை இழந்து தவிக்கும் தீபக்கைப் பார்க்கும் அவளுக்குள் ஒருவித குற்ற உணர்வு குடிகொள்கிறது. ஓவியம் வரையும் திறமையைக் கொண்டிருந்தாலும், எங்கோ தூரத்தில் பணிபுரியும் கணவனை நினைத்துக்கொண்டு குடும்பம் என்கிற அமைப்பிற்குள் சிக்கியிருக்கும் பெண் ஒருவரின் துணை கொண்டு குமாரியின் உருவத்தை வரைகிறாள் ஜெயா. அவள் கெட்டிக்காரி. அதனால்தான் புகைப்படம் எடுக்கும்போது கூட முக்காடை எடுக்க விடாமல் தப்பிப்பது, அப்பாவின் பெயரை கேட்கும் போது காவல் நிலையத்தில் இருக்கும் முன்னாள் குடியரசுத்தலைவர் ’ராஜேந்திர பிரசாத்’ புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் பெயரை சொல்வது, ஜெயா என்ற பச்சை குத்தப்பட்ட பெயரை ஷ்ரேயா என மாற்றுவது என ஒவ்வொரு முறையும் காவல்துறை அதிகாரி ஷ்யாம் மனோகரிடம் (ரவி கிஷான்) தப்பிக்கிறாள். எங்குச் சுற்றினாலும் தேர் ஒரு நாள் தேரடி வந்தே தீரும் என்பது போல ஒரு வழியாக மனோகரும் அவளை கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால், படிப்பதற்காக அவள் படும் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளும் அவர் தன் காக்கிச் சட்டைக்கே உண்டான கண்ணியத்துடன் அவளை விட்டுவிடுகிறார்.
திருமணம் வரை பெண்ணுக்குப் பொழுது போகட்டும் என்பதற்குத்தான் முந்தைய தலைமுறையில் பெண் கல்வியைச் சில குடும்பங்களில் அனுமதித்தார்கள். அதன் பின்னால் மேற்படிப்பு, வேலை என்பதெல்லாம் கணவன் அனுமதித்தால் மட்டுமே. தீபக்குடன் சென்றிருந்தால் தன் வாழ்க்கை இப்படித்தான் ஆகியிருக்கும் என்று ஜெயாவுக்கு நன்றாகத்தெரியும். அதனால்தான் மீண்டும் குமாரியைச் சந்திக்கும் ஜெயா “உன்னால்தான் என்னையே நான் கண்டுபிடித்தேன்” என்று குமாரியிடம் சொல்லுவாள். அதே போல, ஜெயா இல்லாமல் போயிருந்தால் தன் கணவனின் தவிக்கும் அன்பும், வெளியுலகின் நிதர்சனமும் குமாரிக்குத் தெரியாமலே போயிருக்கும். எனவே “உன்னால்தான் என் வாழ்க்கையை கண்டுபிடித்தேன்” என்று குமாரி நெகிழ்ந்து போவாள்.
கணவன் பெயரையே சொல்ல அச்சப்படும் குமாரி, படத்தின் இறுதியில் தீபக் குமாரை உரக்கக்குரல் எழுப்பி அழைக்கும் காட்சி அழகிய ஹைக்கூ கவிதை. ’சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படம் போல, சில படங்கள் காலங்கள் தாண்டி என்றைக்குமானவை. அதன் வரிசையில் லாபட்டா லேடீஸ் தனக்கான அசைக்க முடியாத இருக்கையில் அமர்ந்திருக்கிறது. பிப்லக் கோஸ்வாமியின் மூலக்கதையில், சினேகா தேசாய் திரைக்கதையும், திவ்யாநிதி ஷர்மாவின் கூடுதல் வசனங்களுடன் பல்வேறு கதாப்பாத்திரங்கள் இருப்பினும் ஒவ்வொன்றிற்குமான தனித்தன்மை அறிந்து அவர்களுக்கான காட்சியமைப்பை உருவாக்கி, எழுத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்து, யதார்த்தத்திற்கு மிக அருகில் கதை நடப்பது போல நடிகர்களைக்கொண்டு இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அமீர்கானின் முன்னாள் மனைவியான கிரண் ராவ்.
மே மாத மழை போல, எப்போதாவது அகப்படும் இது போன்ற சில திரைப்படங்களே பாலிவுட்டிற்கு ஆறுதல். லகான், மங்கள் பாண்டே, ரங் தே பசந்தி, 3 இடியட்ஸ் என அமீர்கான் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்களில் இருக்கும் சமூகத்தின் மீதான பார்வை ஒரு புறமிருக்க, 2001 ஆம் ஆண்டு லகான் திரைப்படத்திற்காகத் தயாரிப்பில் இறங்கிய அமீர் கான், அதன் பின்னர் சிறுவர்களின் உலகில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசும் ’தாரே ஜமீன் பர்’ (2007), விவசாயிகளின் தற்கொலையை நையாண்டித்தனத்துடன் சுட்டிக்காட்டும் ‘பீப்ளீ லைவ்’ (2010), பெண் பிள்ளைகளைத் திருமணத்திற்கு தயார்செய்யும் குடும்பங்களுக்கு நடுவில் மல்யுத்தம் விளையாட்த் தன் மகள்களை தயார்படுத்தும் தகப்பனின் ‘தங்கல்’ (2016), கட்டுக்கோப்பான முஸ்லீம் குடும்பத்தில் வளரும் இசையில் ஆர்வம் கொண்ட பெண்ணின் போராட்டங்களைக் காட்டும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் (2017) எனச் சமூகத்தின் களையப்படவேண்டிய சிக்கல்களைத் தான் தயாரிக்கும் சிறந்த படைப்புகளின் வழியே ஆவணப்படுத்திக்கொண்டே, சமூகத்தைக் கேள்வி கேட்பதற்கான முன்னெடுப்பில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
நாயக சினிமாக்களில் அலுப்புற்று, மலையாள சினிமாவிற்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நம் மக்களுக்கு ஏற்ற எளிமையான திரைப்படமாக அறிமுகமாகி வாழைப்பழத்தில் ஊசியேற்றிய கதையாக நமக்கு நாமே வைத்திருந்த பல்வேறு பழைமைவாதப் பழக்க வழக்கங்களை நகைச்சுவைப் பூச்சோடு பகடி செய்து அதே மக்களையே சிரிக்க வைத்து அவர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருப்பது ஆரோக்கியமான முன்னெடுப்பு. நெட்பிலிக்ஸில் காணத்தவறாதீர்கள்.
வாழ்வின் அடுத்தடுத்த கட்டம் நுழையும் தருணங்களில் நாம் நிறைய இடங்களில் தொலைந்து போய்விடுவோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நான் இதுவல்லவே என்று இப்போதுகூட உங்களுக்குத் தோன்றலாம். காதல், திருமணம், பிள்ளைகள் என வாழ்வின் படிநிலைகளின் ஏதோ ஒரு சூழலில் நாம் தொலைந்துகொண்டேதான் இருக்கிறோம். ஆனால், நம்மை நாமே இழந்துகொண்டிருப்பதை உணரும் சமயம், ஃபூல் குமாரியைப்போலச் சட்டென்று மீட்டெழுந்து தொலைந்த உங்களைக் கண்டுபிடித்துவிடுங்கள்.
“உங்கள் கனவிற்காக நீங்கள் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை.”