***
மயிலேறும்பெருமாள் முக்கியமான , உயர்ந்த , மனம் விரும்பின இருக்கையில் அழைக்கப்பட்டு அமர்ந்தார். எதிரே அமர்ந்திருந்தவர்களைப் பெருமையாகப் பார்த்தார்.
வந்திருந்த அனைவருமே களத்தில் முக்கியமானவர்கள்தான்.
***
முதலில் அமைப்பாளர் பேசினார். ”உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி. தமிழகத்தின் சிறந்த கட்டுரையாளரான உயர்திரு மயிலேறும் பெருமாள் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவருக்கும் உங்களுக்கும் இடையில் நான் குறுக்கீடாக அதிக நேரம் நிற்க விரும்பவில்லை .இந்த அமர்வு சுமார் இரண்டு மணி நேரம் நடக்கலாம் . இடையிடையே காஃபி, தேநீர் வழங்கப்படும். அமர்வின் இறுதியில் சிறிய அளவில் சுவையான சிற்றுண்டியும் காத்திருக்கிறது.
கட்டுரையாளர் உரையாடலுக்கும் விவாதத்திற்கும் மிகவும் தயாராக இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. கூட்டம் சிறப்பாக நடந்தேற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் “
பின்னே திரு மயிலேறும் பெருமாள் தன் உரையைத் துவங்கினார்.
“அனைவருக்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும். சிறந்த அமைப்பின் சார்பாக உங்களையெல்லாம் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனக்குக் கட்டுரைகளை எழுதுவதில், அதற்கான தரவுகளைத் தேடித்தேடி அலையாய் அலைவதில்தான் விருப்பம். நான் உங்களைவிட ,ஒரு அமர்வில் இப்படி கட்டுரை வாசிப்பதில் மிகவும் இளையவன்.
வட்டவடிவத்தில் நாற்காலிகளில் இங்கே அமர்ந்திருக்கிறோம்.நாற்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் நாம் இருப்பதால் ஒருவர் பேசுவது மற்றவருக்கு நல்லபடியாகவே கேட்கும். மேலும் இது ஒரு குளிரூட்டப்பட்ட அறை. வெளித்தொந்தரவுகள் இருக்காது.
கட்டுரை வாசிப்பின் போது நீங்கள் யாரும் ஏதாவது சந்தேகம் கேட்க நினைத்தால் உடனடியாகவே கேட்டுக் கொள்ளுங்கள். குறுக்கிடுகிறோம் என்ற மனத் தாங்கலே தேவையில்லை.
நான் அறிந்த வரையில் புரிந்து கொள்வதற்கு உரையாடல்களை விட மேம்பட்டது எதுவுமில்லை.
***
சரி, எனது கருத்துப் பயணத்தை உங்களோடு சேப்பாக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். சென்னையின் சேப்பாக்கம் நீங்கள் அறிந்த ஊர்தானே ?”
நாம் சென்னையில்தானே இருக்கிறோம். நமக்குச் சேப்பாக்கம் தெரிந்ததுதானே என்றார் ஒருவர்.
” உண்மைதான். “ சே பாக் “ என்றால் ஆறு தோட்டம் அல்லது ஆறு தோட்டங்கள்
என்று புரிந்து கொள்ளலாம் .இது உருது மொழியிலிருந்து வந்ததாக நம்பப் படுகிறது.
இந்தச் சேப்பாக்கத்தில் அமைந்திருப்பதுதான் ”முத்தையா அண்ணாமலை சிதம்பரம் அரங்கம்” அல்லது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அல்லது
“M. A. Chidambaram Stadium” அல்லது “Chepauk Stadium”
கட்டுரையில் நீங்கள் இப்போது பேசப்போவது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் பற்றியா என்றார் வேறொருவர்.
” ஆமாம். ஒருவிதத்தில் ஆமாம்தான் , இன்னொரு விதத்தில் இல்லைதான்.”
லேசான சிரிப்பலைகளின் மத்தியில் ஒருவர் தன் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்தார், ”கட்டுரை இப்போதுதான் சுவாரஸ்யம் பிடிக்கிறது”, என்று.
***
மயிலேறும் பெருமாள் தொடர்ந்தார்.
”இந்த மைதானம் பற்றியும் மைதானத்தை இலக்காக வைத்துப் பல்வேறு வரலாற்று உண்மைகளையும் அறிந்துகொள்ளப் போகிறோம்.
இந்த மைதானத்தில் அமைந்த அரண்மனை 1916-இல் கட்டப்பட்டது. இந்த மைதான அரண்மனையில் அமைந்திருப்பது ”கலச மஹால்”, இது இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு அரண்மனை.
இந்த அரண்மனை 1768இ லிருந்து 1855 வரை ஆற்காடு நவாப்பின் உத்தியோகப்பூர்வ இல்லமாக இருந்தது.”
வெண்ணிறச் சிகை கலைந்த கனத்த கண்ணாடியணிந்திருந்த ஒருவர் கேட்டார் சரசானிக் பாணி என்றால் என்ன ?
சரசானிக் என்பது கட்டடக் கலையில் அந்நாளில் ஒரு பிரபலமான மதிப்பிற்குரிய பாணி.
மத்தியக் கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் அரபு மொழி பேசும் மக்களை குறிக்க சொல்லப்பட்ட பதமே சார்செனிக். சார்செனிக் கட்டடக் கலை பாணி என்பது 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் சமஸ்தானங்களிலும் பொது மற்றும் அரசுக் கட்டிடங்கள் பிரித்தானிய கட்டிட கலைஞர்களால் கட்டப்பட்ட பாணி. இது ஒரு இந்தியக் கலைவடிவமாகவும் சொல்லப்படுகிறது. இதில் இந்துக் கோவில்களின் கட்டிடக்கலையும் சேர்ந்துகொண்டது. ஹென்றி இர்வின் என்பவரின் வழிகாட்டுதலின் வழி வடிவமைக்கப்பட்டது.
உயர்ந்த கோபுரங்கள்,வெங்காயக் குவி மாடங்கள், பூ வேலைப்பாடுள்ள கல்தூண்கள், கல்லான சாளரங்கள்
சென்னை உயர் நீதி மன்றம் , சென்னைப் பல்கலைக் கழகம் ,எழும்பூர் ரயில் நிலையம், விக்டோரியா பப்ளிக் ஹால், ரிப்பன் கட்டடம் தவிரவும் கல்கத்தா பம்பாய் பெங்களூரு நகரங்களிலும் இம்மாதிரியான கட்டடங்கள் தோன்றின. காலனிய கட்டடக் கலையில் இந்தியாவின் நவீன மயமாக்கலின் ஒரு புதிய அத்தியாயமாகவே இதைக் கொள்ளலாம்.
இந்த மாதிரியான கட்டடங்கள் இந்தியா முழுவதும் அதிகம் உண்டு அதிலும் குறிப்பாகச் சென்னை மாநகரில் மட்டும் சுமார் 450 கட்டிடங்கள் உள்ளன.
ஆனால் நான் இங்கே உங்கள் மத்தியில் பதிவு செய்ய விரும்புவது ஆற்காடு நவாப்பின் இந்தச் சேப்பாக்கம் அரண்மனை 117 ஏக்கரில் பால் பென் பீல்ட் என்பவரால் இந்தியாவிலேயே முதன் முதலாக சார்செனிக் பாணிக் கட்டடமாக நிறுவப்பட்டது என்பதுதான் .
***
நாம் இந்தச் சமயத்தில் ஆற்காடு நவாப்புகளைப் பற்றியும் மைசூர் ராஜ்ஜியத்தை சுமார் இருபத்தியிரண்டு ஆண்டுகளாக ஆண்ட ஹைதர் அலி பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் .
கர்நாடகப் போர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு நெருக்கமாக இருந்தவர் கர்நாடக சுல்தானகத்தின் நவாப்பாக இருந்தவர் நவாப் முகம்மது அலிகான் வாலாஜா.
தென்னிந்தியக் கர்நாடகப் பகுதிகளை 1690 இலிருந்து 1801 வரை ஆண்டவர்கள் ஆற்காடு நவாப்புகள்.இவர்களது தலைநகரம் சென்னைக்கு அருகிலுள்ள ஆற்காடு.இவர்கள் கர்நாடக நவாப்புகள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கலிமா உமர் இப்புனு அல் கத்தாப்பு வழி வந்தவர்கள்.
இவர்கள் 1692 இல் மொகலாயச் சக்கரவர்த்தி ஔரங்சீப்பால் கர்நாடகப் பிரதேசத்தில் வரி வசூல் செய்யும் உரிமைக்காக நியமிக்கப்பட்டார்கள்.முதல் நவாப் சுல்பிக்கார் அலி மராட்டியத்தையும் வென்று தனது பிராந்தியத்தையும் கிருஷ்ணா நதி வரையிலும் நீட்டித்தார். இவருக்குப் பின்வந்த நவாப் தோஸ்து அலிகான் தன் பிராந்தியத்தை மதுரைவரை நீட்டித்தார். இவருக்கும் பின் 1749 இல் ஆட்சிக்கு வந்தவரே முகம்மது அலிகான் வாலாஜா.
1749 இல் நவாப்புகளின் வாரிசுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரில் ஒரு தரப்பினரை பிரெஞ்சுக்காரர்களும் எதிர் தரப்பினரை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். ராபர்ட் க்ளைவ் தலைமையில் பிரிட்டீஷ் படை வென்றதால் அவர்கள் ஆதரித்த வாலாஜா நாவாப்கான் முகம்மது அலி அரியணை ஏறினார்.
***
அரியணை ஏறினாலும் அரசியல் ஆபத்துகளை நினைத்து ஆங்கிலேயர்கள் வசித்து வந்த ஜார்ஜ் கோட்டையிலேயே தனக்கும் ஒரு அரண்மனை கட்டிக் கொள்ள நினைத்தார். முதலில் ஆங்கிலேயர்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் பின்பு இது கைவிடப்பட்டது. எனவே நவாப் சேப்பாக்கத்தில் 117 ஏக்கரை தனியாரிடமிருந்து பெற்று பால் பென்பீல்ட் என்ற கிழக்கிந்தியக் கம்பெனிப் பொறியாளரை வைத்து இந்த அரண்மனையை 1768 இல்கட்டி முடித்தார்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி முடிப்பதில் பெரும் பங்காற்றின பால் பென் ஃபீல்ட் ஐ இதற்காக அணுகினார் நவாப். பேசி முடித்து அவருக்கே முழுப் பொறுப்பையும் தந்தார்.
இருவருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் விசித்திரமாக இருந்தது. மொத்தக் கட்டடமும் கட்டி முடித்த பிறகே செலவாகும் தொகையையும் அதைக் கட்டித் தந்ததற்கான முழு சன்மானத்தையும் தருவது என்பதே நிபந்தனை.
அதன் படியே 117 ஏக்கர் பரப்பளவில் எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்தார் பால் பென் ஃபீல்ட் .இதன் மூலமாக பால் பென் ஃபீல்ட் பெரும் பணக்காரர் ஆனார். புகழும் பெற்றார்.
***
ஆற்காடு நவாப் 1765இல் முகலாயர்களுக்குப் கப்பம் கட்ட மறுத்துத் தனது ஆட்சியையும் தனக்குக் கீழுள்ள பிராந்தியத்தையும் சுதந்திர நாடாக அறிவித்தார். அதே சமயத்தில் தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நட்புறவையும் ஏற்படுத்திக்கொண்டார் .
ஆங்கிலேயர்களோடு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டதால் இவர் இந்திய மக்களின் சுதந்திர உணர்வுக்கு எதிரானவர் என்ற பெயரையும் தனக்கு ஏற்படுத்திக் கொண்டார்.
நவாப் முகம்மது அலிகான் வாலாஜா ( 07.07.1917 – 13.10.1795 ) 1749 லிருந்து 1795 வரை அதாவது இவர் இறப்பு வரை நவாப்பாகவே இருந்தார். இவரே ஆற்காட்டின் மூன்றாவது நவாப்.”
***
உரை இறுக்கமாகச் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த அமைப்பாளர், தேநீருக்கு கண் அசைத்தார்.
தேநீர் நிரம்பிய காகிதக் கோப்பைகளை இரண்டு தாம்பாளத்தில் இரண்டு பேர்கள் எடுத்து வந்து ஒவ்வொருவருக்கும் பணிவோடு தந்தார்கள். உரையை சற்று நிறுத்தியிருந்த மயிலேறும் பெருமாளும் ஒரு தேநீரை எடுத்துக்கொண்டார். இஞ்சி கலந்த தேநீர் சுவையாக இருந்தது. கிடைத்த இடைவெளியில் சிலர் இயற்கையின் முதல் அழைப்பிற்கு வெளியே சென்று வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
***
கட்டுரையாளர் மேலும் தொடர்ந்தார்.
” இனி ஹைதர் அலி .ஹைதர் அலி 07.12.1720இ லிருந்து 07.12.1782 வரை வாழ்ந்தவர். இவர் மைசூரைத் தலைநகராகக் கொண்டு 1760இ லிருந்து 1782 வரை மைசூரை ஆண்டவர். ஹைதர் என்றால் சிங்கம் என்று பொருள்கொள்பவர்களும் உண்டு.
ஔரங்கசீப் மரணத்திற்குப் பிறகு 14 வருடங்கள் கழித்துப் பிறந்தவர் ஹைதர் அலி. ஔரங்கசீப் மரணத்திற்குப் பிறகு அவரது வாரிசுகளின் திறமையின்மையின் காரணமாக நாட்டில் பெருங் குழப்பம் நிலவியது.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்குக் கீழ் இருந்த நவாப்புகளும் நிஜாம்களும் அவரவர்களின் பிராந்தியத்திற்குத் தன்னிச்சையாகத் தங்களுக்குத் தாங்களே முடி சூட்டிக் கொண்டனர்.
” வாரிசு இழப்புக் கொள்கை” அல்லது லாப்ஸ் கோட்பாடு என்பது கிழக்கிந்தியக் கம்பெனியால் கொண்டுவரப்பட்டது. இதன்படி கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த எந்தவொரு மன்னரும் ஆளத் தகுதியற்றவராக இருந்தாலோ நேரடி வாரிசு இல்லாமல் இருந்தாலோ அந்த ஆட்சியையும் ஆட்சிக்கு உட்பட்ட பிராந்தியத்தையும் கிழக்கிந்தியக் கம்பெனியே எடுத்துக் கொள்ளும் .
இது தவிரவும் வங்கக் கடலோரம் கிழக்கிந்தியக் கம்பெனி மிகுந்த அரசியல் தந்திரங்களுடன் தங்கள் வியாபார உலகை விரிவுபடுத்திக்கொண்டிருந்த இதே நேரத்தில்தான் பிரஞ்சுக்காரர்களும் ஆளுமையாகச் செயல்பட்டு வந்தனர்.
***
முதலில் மைசூர் அரசு கொஞ்ச காலம் விஜய நகர அரசின் கீழும் கொஞ்ச காலம் பாமினி சுல்தானுக்குக் கீழும் இருந்தது. அப்புறம் உடையார்களிடம் வந்து சேர்ந்தது.
இந்த சமயத்தில் கிருஷ்ண ராஜ உடையாரின் படையில் ஹைதர் அலியும் அவரது அண்ணனும் சாதாரணப் படைவீரர்களாக வந்து சேர்ந்தனர். 1749 இல் தேவனஹள்ளி போரில் காட்டிய வீரத்திற்காகப் பாராட்டப் பெற்ற ஹைதர் குதிரை படைகளுக்குத் தலைவரனார்
***
தில்லி முகலாயப் பேரரசால் 26 ஆகஸ்டு 1765 இலிருந்து முகம்மது அலிகான் வாலாஜாவுக்குத் தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது.
1751இல் திருச்சிறாப்பள்ளியை ஆற்காடு நவாப் ஏற்கனவே கைப்பற்றியிருந்தார். அதே திருச்சிறாப்பள்ளியை ஹைதர் அலியிடம் ஒப்படைத்து விடும்படி ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் நவாப் அதற்குச் சம்மதிக்காமல் மறுத்து விட்டார். சரித்திரத்தின் இந்த நிகழ்ச்சியே ஆங்கிலேயர்களுக்கும் ஹைதர் அலிக்கும் பிணக்குகள் துவங்கக் காரணமாக இருந்தன.
***
கர்நாடகத்தில் பொதுவாக நான்கு யுத்தங்கள் பேசப்படுகின்றன. முதலாம் யுத்தம் 1767 இல் துவங்கியது.இது 1769 வரை நீடித்தது.இந்தப் போரில் கிழக்கிந்திய கம்பெனியின் யுத்தப் பார்வையை வடக்குப் பகுதியிலிருந்து மைசூர் ராஜ்ஜியத்தின் மீது தந்திரமாக ஹைதராபாத் நிஜாம் திருப்பினார்.
ஆற்காடு நவாப்புக்கும் ஹைதர் அலிக்கும் தமிழ்நாடு பகுதிகள் சம்பந்தமாக ஏற்கனவே பிணக்குகள் இருந்தன.இந்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி ஹைதர் அலிக்கு எதிராகவும் ஆற்காடு நவாப்புக்கு ஆதரவான நிலையையும் எடுத்தது. ஆற்காடு நவாப்புக்குப் போர்ப் படைகளையும் வழங்கியது.
ஆனாலும் எல்லாவற்றையும் மீறி 29.03.1769இல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் படி கிழக்கிந்தியக் கம்பெனியும் ஹைதர் அலியும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதில்லையெனப் போர் பிரகடனம் செய்தனர்.
***
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரில் ( 23.07.1780 ) 80000 முதல் லட்சம் படைகளை அனுப்பி ஆற்காட்டை ஹைதர் அலி கைப்பற்றியிருந்தார்.
ஆனால் நவாப்போ ஆற்காட்டின் பாதுகாப்பிற்காக ஆண்டிற்கு 40000 பகோடாக்கள் (16000 க்ஷெல்லிங் ) ஆங்கிலேயக் கம்பெனிக்குச் செலுத்த முன் வந்தார். இவர் தனது பாதுகாப்பிற்காக ஆங்கிலேயப் படைகளையே நம்பி இருந்தார். இதன் படி சென்னை மாகாணத்தின் 21 படையணிகளில் 10 படையணிகள் ஆற்காடு அரசை காப்பதற்கு அனுப்பப்பட்டது. பிரதிபலனாகத் தனது நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நில வரி வசூலிக்கும் உரிமைகளை ஆங்கிலேயர்களுக்கு நவாப் வழங்கினார்.
***
இது ஒரு புறம் இருக்க ஆற்காடு நவாப்கள்தான் ஒரிசா முதல் தென்னிந்தியாவின் பெரும் பகுதியை 1690 முதல் 1801 வரை ஆண்டவர்கள். இவர்களது தலைநகரம் சென்னைக்கு அருகிலுள்ள ஆற்காடு. தமிழக வரலாற்றில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். .ஒரிசா முதல் தமிழ்நாடு வரை பெரும்பாலான இடங்களை 17 ஆம் நூற்றாண்டில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆற்காடு நவாப் 1764 இல் தன் சொந்த பாதுகாப்புக் கருதி செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் தனக்கும் ஒரு அழகியஅரண்மனை கட்ட நினைத்தார். ஆனால் அந்த நினைப்பு கைகூடவில்லை.
அதனால்தான் சேப்பாக்கத்தில் அரண்மனை . இது இரண்டு தொகுதிகளை கொண்டது.ஒன்று அதாவது வடக்குத் தொகுதி ” கலாஸ மஹால் “தெற்குத் தொகுதி “ ஹுமாயூன் மஹால் “ என்றும் பெயரிடப்பட்டிருந்தது. அரண்மனையின் பரப்பளவு 117 ஏக்கர். ஹுமாயூன் மஹால் மட்டும் 66000 சதுர அடி அளவுள்ளது. இதன் மொட்டை மாடியிலிருந்து கலாஸ மஹாலுடன் இணைக்கும் தாழ்வாரமும் உண்டு.
உண்மையில் மசூலா மீனவர்களின் குடியிருப்பாக இருந்தது சேப்பாக்கம். அவர்கள்தான் சென்னையில் குடியேறிய முதல் குடிகள். இவர்கள் பின்பு ராயபுரத்துக்குத் தங்கள் இடத்தை மாற்றிய பிறகு இருந்த காலி மைதானத்தில் ஏற்கனவே ஆற்காடு நவாப் கேட்டுக்கொண்டபடி அரண்மனை கட்ட வாய்ப்பு கிடைத்தது.
ஆங்கிலேயர்கள் நவாப்புக்குக் கேட்டபோதெல்லாம் கடன் வழங்கினார்கள். இதையே பயன்படுத்தி ஆற்காட்டு நவாப்பின் நிலப்பரப்பில் வரி வசூலிக்கும் உரிமையைக் கொஞ்சம் ஞ்சமாக அதிகப்படுத்திக்கொண்டனர். கடன் சுமை ஏறிக் கொண்டேபோனது.13 ஆம் நவாப் வாரிசில்லாமல் இறந்துபோக கடைசியில் கர்னல் வெல்லெஸ்லி பிரபு ஆற்காட்டை கிழக்கிந்தியக் கம்பெனியுடன் இணத்தார். 1867 இல் நாடில்லாத நவாப்புகளுக்குச் சில பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இன்றைய ராயப் பேட்டையில் ஒதுக்கப்பட்டதே அமீர் மஹால்
***
1916இல் நிறுவப்பட்ட இந்த மைதானம்தான் கல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்துக்கு அடுத்தபடியான இந்தியாவின் பழமையான மைதானம். முதலில் இது மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் என்று அழைக்கப்பட்ட போதும் , ராஜா சர் அண்ணாமலைசெட்டியாரின் இரண்டாவது மகனான எம் ஏ சிதம்பரம் அவர்களின் பெயரால் குறிப்பிடப் படுகிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மைதானம்.
இந்தச் சேப்பாக்கத்துக்குக் காலனீய ஆற்காட்டுச் சரித்திரங்கள் அதிகம் என்றாலும் இன்று சேப்பாக்கத்தின் அடையாளமாகவே இந்தக் கிரிக்கெட் மைதானம் விளங்குகிறது.
***
1855இல் லாப்ஸ் கோட்பாட்டின்படி கர்நாடக சமஸ்தானமும் ஒழிக்கப்பட்டது. இதன் பொருட்டுக் கடனாளியான நவாப்பின் கடனை அடைக்க அரண்மனை ஏலம் விடப்பட்டது.
சமஸ்தானம் ஒழிக்கப்பட்டதற்கும் வரிவசூல் நின்றுபோனதால் கடனாளியான நவாப்பின் நிலைக்கும் அரண்மனை கட்டிதந்த பால் பென் ஃபீல்ட் நவாப்பிடம் கேட்ட அதிக தொகைக்கும் நவாப்பால் தரமுடியாமல் போனதால் சென்னை அரசே இந்த அரண்மனையை வாங்கிக்கொண்டதற்கும் பின்னால் கம்பெனியின் பெரும் சதி உண்டு என்று சொல்பவர்களும் உண்டு.
இந்த அரண்மனையே அரசின் வருவாய் வாரிய அலுவலகமாகவும் பொதும்பணித் துறைச் செயலகமாவும் செயல்பட்டது.
***
“1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப்பின் வசிப்பிடமாக இருந்த சேப்பாக்க அரண்மனையை அந்தச் சமயத்தில் ஆங்கிலேயர்கள் தாங்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாகவும் உபயோகித்துக் கொண்டனர்.
முதலில் மைதானத்தைச் சுற்றி அரங்கமே இல்லை. ஒவ்வொரு போட்டிக்கும் மைதானத்தைச் சுற்றித் தற்காலிகமாக மூங்கில் அல்லது சவுக்குக் கம்புகளில் அரங்கம் அமைத்தார்கள்.
ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு மட்டுமே விளையாட அனுமதி. பின்பு புச்சி பாபு நாயுடு என்ற செல்வந்தரே பெரும் முயற்சிக்குப் பிறகு இந்தியர்களும் விளையாடும்படியாக மாற்றி அமைத்தார்.
முதலில் இங்கு வந்து குடியேறிய ஆங்கிலேயர்களாலும் பெரும் தனவந்தர்களாலும் இராணுவ வீரர்களாலும் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இந்தியர்களில் பார்ஸியினர்களே இதை முதலில் விரும்பத் தொடங்கினார்கள்.
கிரிக்கெட்டின் தோற்றம் முதலில் பிரான்ஸா இங்கிலாந்தா ஸ்காட்லாந்தா என்று இன்றுவரை வரையறுத்துச் சொல்லமுடியவில்லை. இங்கிலாந்து அரச நூலகத்தில் 1344இல் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் கிரிக்கெட் விளையாடுவதுபோல ஒரு காட்சி தீட்டப்பெற்றிருக்கிறது.
முதலில் கல்கத்தாவிலும் பின்பு பம்பாய் சென்னையிலும் கிரிக்கெட் பரவியது.
1859’ல் அரண்மனை நிலமான இந்த மைதானத்தில் பந்தல் போடும் பொருட்டு இந்த நிலத்தை மெட்ராஸ் பிரிசிடென்சியால் கையகப்படுத்தப்பட்டது.
இந்த மைதானம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உரியது.இது ஒரு சர்வ தேச கிரிக்கெட் மைதானம். 1916இல் “மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்“ மைதானமாக நிறுவப்பட்ட அன்றிலிருந்தே இது தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தாய் வீடாக இருந்து வருகிறது.
சேப்பாக்க அரண்மனையின் குறுக்கே இது அமைந்துள்ளது. 1859இல் மெட்ராஸ் பிரிஸிடென்ஸி ரூ.589000/-. க்கு இந்த அரண்மனையை ஏலத்தில் எடுத்தது. 1865இல் அரண்மனை மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களிக்கும் படியாக ஒரு பந்தல் அமைக்க அரசு கிரிக்கெட் க்ளப்பிற்கு அனுமதி வழங்கியது. இது ஒரு வருடத்தில் நிறைவேறி பின்பு 1852இல் புனரமைக்கப்பட்டது. கடைசியில் இதுவே இப்போதுள்ள மைதானமாக 1916இல் மாறியது.
மைதானத்தின் மொத்த பரப்பளவு சுமார் 70000 சதுர மீட்டர். இந்த மைதானம் அரசாங்கத்துக்கும் கிரிக்கெட் க்ளப்பிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது. இந்த ஒப்பந்தம் 2015 இல் காலாவதியாகிவிட்டது. பின் 2019இல் 2015 தேதியிலிருந்து 21 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தால் நீட்டிக்கப்பட்டது.
முதல் போட்டியாக 1934இல் ரஞ்சிக் கோப்பைப் போட்டியும் 1952 இல் சர்வ தேசப் போட்டியும் நிகழ்ந்தது. 1952 இல் இந்தியா தேர்வுப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது. இதுவே இந்தியாவின் முதல் வெற்றி.
சச்சின் தனது வாழ்நாளில் அதிக ரன்களை இந்த மைதானத்தில்தால் எடுத்துக்குவித்தார்.
***
இதற்குள் உரை வாசிக்கும் அரங்கத்துக்குள் புதிதாக ஐந்து பேர்கள் வந்திருந்தார்கள். ஏற்கனவே இரண்டு பேர்கள் வெளியேறி இருந்தார்கள். அவர்கள் திரும்பி வரவில்லை.
அமைப்பாளருக்கு செவித்திறன் கூர்மை. எங்கிருந்தோ மெல்லிய குறட்டை ஒலி அவர் காதுக்கு மட்டும் கேட்டது. உடனடியாக அமைப்பாளர் செயல்பட்டார்.
இம்முறை தேநீருக்குப் பதிலாகக் காபி சொல்லலாமான்னு யோசிக்கிறேன் என்றார் அநேகர் தலையசைக்க காபி வந்தது. மயிலேறும் பெருமாள் மட்டும் இஞ்சித் தேநீரை நினைத்துக்கொண்டே காபி அருந்தினார்.
***
கட்டுரை முடிவுக்கு வந்தது. மயிலேறும் பெருமாளிடம் நிறையக் கேள்விகள் கேட்கப்பட்டன . அவரும் பொறுமையாகப் பதிலளித்தார்.
அவற்றில் ஒரு சில :
ஒருவர் கேட்டார், சரசானிக் கட்டிட பாணியா அல்லது சார்செனிக் பாணியா எப்படி உச்சரிக்க வேண்டும்.
இன்னொருவர் கேட்டார், ஆற்காடு நவாப், மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம், சோழர்கள், விஜய நகர அரசு, பாமினி சுல்தான்கள், ஹைதர் அலி, உடையார்கள், கிழக்கிந்தியக் கம்பெனி, பிரெஞ்சுகாரர்கள் இப்படி எத்தனையோ பேர்கள். இவர்களுக்குள் நிரந்தரமான உறவும் இல்லை. பகையும் இல்லை. இவர்களில் யார்தான் மக்களுக்கு நெருக்கமாக இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா.
வேறு ஒருவர் கேட்டார் 1765 இல் ஆற்காடு நவாப்புக்கு முகலாய மன்னர்களால் தன்னாட்சி வழங்கப்பட்டதா அல்லது அவரே தன்னை நியமித்துக்கொண்டாரா
மற்றுமொருவர் கேட்டார், சில இடங்களில் கிழக்கிந்தியக் கம்பெனி என்கிறீர்கள்; சில இடங்களில் ஆங்கிலேய அரசு என்கிறீர்கள். இரண்டையும் எப்போதிலிருந்து எப்படித் தனித் தனியாக நாம் அடையாளம் கண்டு கொள்வது
கடைசியாக ஒருவர் மிகுந்த கவலையோடு ஒரே ஒரு கேள்வி கேட்டார். இத்தனை யுத்தங்களைப் பற்றிச் சொன்னீர்கள். பிரதேசங்களைக் கைப்பற்றி மக்களிடம் அரசர்களின் வரி வசூலிக்கும் அதிகார ஆசையினால் நிகழ்ந்த இந்த யுத்தங்களில் வீரர்களும் சாதாரணமானவர்களும் நிறைய பேர்கள் இறந்திருப்பார்களே. அவர்களைப் பற்றி சின்னதாகக்கூட நீங்கள் எதுவும் சொல்லவில்லை , கவலையும் கொள்ளவில்லையே?
மயிலேறும் பெருமாள் கண்களை மூடி யோசித்தார். பிறகு சொன்னார், மன்னிக்கவும். தற்போது இது சம்பந்தமாக என்னிடம் பதில் இல்லை. இந்த விதத்தில் யோசிக்கவும் இல்லை. உண்மையில் இதுதான் கட்டுரையின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்
விரைவில் உங்களுக்குப் பதில் சொல்வேன், உங்களுக்காகவும் என் மனசாட்சிக்காகவும் என்றார்.
அமைப்பாளர் அவையினருக்கு நன்றிகள் சொல்லவும் சிற்றுண்டியைக் கவனப் படுத்தவும் எழுந்து பேசலானார்.
கலந்துகொண்டவர்களில் சிலர் ஏற்கனவே அரங்கத்தின் நாலு சுவர்களிலும் இடம் பெற்றிருந்த எண்பதுகளில் பிரபலமாயிருந்த ஜே பி ஸிங்காலின் காலண்டர் பிரதிகளில் பெருங்காதலுடன் மனதைப் பறி கொடுத்திருந்தனர்.
அவர்கள் மட்டும் அரங்கத்திலிருந்தும் ஜே பி ஸிங்காலின் காலண்டர் பெண்களிடமிருந்தும் கடைசியாகப் பிரியா விடை பெற்றனர்.
***
”அப்பா, அப்பா” ன்னு எவ்வளவு நேரமாகக் கூப்பிடுகிறேன் காதில் விழவே இல்லையா . அப்பா இப்படிக் கடற்கரையில் இரண்டு மணி நேரமா அமர்ந்து குனிந்தும் நிமிர்ந்தும் யார் யாரையோ பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்
செய்வது எதுவும் எனக்குப் புரியவில்லை . நாம புறப்படலாம். அம்மா நீயும் எழுந்திரு போகலாம் என்றான் அரவிந்தன்.
” சரி, போகலாம் “கடைசியில் ஒரு வழியாக அவர் வாய் திறந்து பேசினார்.
ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து முடித்த மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. காரை நிறுத்தி வைத்திருந்த இடம் நோக்கிச் சென்றார்கள்.
கருப்பஞ்சாறு விற்கிறான். இவ்வளவு நேரம் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தது தாகமாக இருக்கிறது. நாம குடிக்கலாமா என்றான் மகன் .
வேண்டாம். நான்தான் இரு முறை தேநீரை அரங்கத்தில் அருந்தினேனே .
சிற்றுண்டியும் எடுத்துக்கொண்டேனே. நீங்கள் இருவரும் கவனிக்கவில்லை போல.
அரவிந்தனும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
காரில் ஏறியதும் அவர் கேட்டார் ,” நாம இப்போது எங்கே போகிறோம் . நீ என்னை ஆவணக் காப்பகத்துக்கும் கன்னிமாரா நூலகத்துக்கும் ரோஜா முத்தையா ஹாலுக்கும் கூட்டிப் போகிறேன் என்று சொல்லியிருந்தாயே.”
அப்பா இப்போதே நேரமாகிவிட்டது. இருட்டிவிட்டது. நாம நேரா வீட்டுக்கே போகலாம். இது மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ளும் நேரம் .வரும் சனி ஞாயிறு நீங்கள் சொன்ன இடங்களுக்கு எல்லாம் ஒண்ணு விடாம நாம போகலாம் . நீங்கள் மட்டும் எல்லோரிடமும் இயல்பாகவும் கலகலப்பாகவும் பேசுங்கள். அது போதும் எங்களுக்கு. எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் எங்களோடு இல்லை. வேறொரு உலகத்தில் எப்போதும் இருக்கிறீர்கள்.எனக்கும் அம்மாவுக்கும் மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அம்மா கண்களை மூடி நீர் மல்க அவளுக்கு எப்போதும் அனுசரணையாக இருக்கும் பெண் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தாள்.
”மஞ்சண வடிவம்மா தாயே, எனக்கும் அவருக்கும் நீயே கதி. சீக்கிரமா அவரை முழுசாக் குணப்படுத்து. முன்னைக்கு இப்போது அவர் பரவாயில்லைதான். எனக்கு இப்போதே அறுபத்தியேழாகிறது. என் காலத்துகுள்ளேயே அவர் முழுசா குணமாகணும். அவரை யாரை நம்பியும் நான் விட்டுட்டுப் போகத் தயாரில்லை.”
BoomaEswaramoorthy@gmail.com