“ஜனநாயகத்தோட சாபக்கேடு ஊழல்னு சொல்லத் தொடங்கி, ஊழல ஒழிக்கணும்’னா ஜனநாயகத்தை ஒழிக்கணும்’னு வந்து நிப்பாங்க. இவங்களோட பிரச்சனை ஊழல் இல்லை…! ஜனநாயகம்…! ஜனநாயகத்தை ஒழிச்சு ஃபாசிஸத்தைக் கொண்டுவர்றதுதான் இவங்க திட்டம்…!”

என்று ஒரு வசனம்! இன்றைய மத்திய அரசின் போக்கை எடுத்துக்காட்டும் அற்புதமான வசனம்! இந்த வசனத்திற்காகவே தலைமைச் செயலகம் என்ற வெப் சீரிஸைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.

இயக்குநர் ஜி. வசந்த பாலனுக்குச் சில தனித்தன்மைகள் உள்ளன. அவர் தமிழ் இலக்கியவாதிகளோடும், இலக்கியங்களோடும் நெருக்கமாக இருப்பவர். தன்னுடைய படங்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்துபவர். வெற்றியோ தோல்வியோ புதிய களங்களில் பயணிக்க விரும்புபவர். இப்போது வெப் சீரிஸ் உலகிற்குள் நுழைந்திருக்கிறார்.  இந்தி வெப் சீரிஸ்  பலவற்றில் சமூக நீதிக்கெதிரான குரல் எதிரொலித்துக்கொண்டிருக்கும் சூழலில், மாநில உரிமைகளை வலியுறுத்திப் பேசும் தென்னாட்டின் குரலாகத் தன் வெப் சீரிஸைக் கொடுத்திருப்பதைக்கூட அவரின் தனித்தன்மையாகவே நான் பார்க்கிறேன்.

இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர் ஜெயமோகனோடு இணைந்து இந்த வெப் சீரிஸ்க்கான கதை எழுதியிருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இவர்களைத் தவிர எஸ். கே. ஜீவா, பரணி கிரி என்ற இருவர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். கதைக்காக இவர்கள் அதிகம் மெனக்கெட வேண்டிய தேவை இல்லை. Political Thriller என்ற வகைமைக் கதை என்பதால் கடந்த காலத்தில், தமிழக அரசியல் சூழலில் நடந்த பல நிகழ்வுகளை முடிந்தவரை பட்டி டிங்கரிங்க் பார்த்துக் கதையாக்கிவிட்டார்கள். நமக்கு நன்கு தெரிந்த கதையாக இருந்தாலும், சொன்ன விதத்தில் சுவாரஸ்யமாகத் தந்துள்ளார்களா என்று பார்க்கப் போகிறோம். முதலில் தலைமைச் செயலகத்தின் கதையைப் பார்க்கலாம்.

“மக்கள் மீதான காதல்தான் நீதி. அந்த நீதி கிடைக்கிறதுக்காகச் சில குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அந்தக் குற்றத்துக்குத் தண்டனைகூட கிடைக்கும். அத சட்டம்’னு சொல்லணும்மே தவிர நீதி’ன்னு சொல்ல முடியாது. ஒரு தலைவனோ தலைவியோ மக்கள்மீது வச்சிருக்கிற காதல்தான் நீதி” என்ற முகவுரையோடு கதை தொடங்குகிறது. சுற்றிவளைத்துச் சொன்னாலும், “நாலு பேருக்கு உதவனும்’னா எதுவுமே தப்பில்லை” என்ற நாயகன் வாக்குதான் கதையின் கரு. அதனை ஒரு முதல்வரை மையப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல்வர் அருணாச்சலம் நல்லவர். ‘தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர்’ என்ற பெயர் வாங்கியவர். “இந்தியா’ன்ற கனவு, இந்தியா’ன்ற தத்துவம் ஜெயிக்கணும்’னா மாநில தன்னிறைவு, மாநில சுயாட்சி ரெண்டும் முக்கியம். அதை மேலிருந்து யாரும் தடுக்கவும் கூடாது. ஆட்டி வைக்கவும் கூடாது. ஒரு மாநிலம் சுயமாக இயங்கணும்” என்ற கொள்கை உடையவர்; மத்திய அரசின் நெருக்கடிக்கு அடிபணிந்தால் கட்சி காணாமல் போய்விடும் என்ற சிந்தனையுடையவர்

ஆனால், 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, கார் கம்பனி ஊழல் வழக்கு ஒன்று, இப்போது முடியும் தறுவாயில் இருக்கிறது. எப்படியும், தீர்ப்பு முதல்வர் அருணாச்சலத்திற்கு எதிராகத்தான் வரும் என்ற சூழல் நிலவுகிறது. இந்தச் சுழலைப் பயன்படுத்திக்கொண்டு, மத்திய அரசின் இடைநிலைத் தரகராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தியும், மத்திய அரசிற்குச் சார்பாக இருக்கும் வழக்கறிஞர் ரங்கராஜனும் முதல்வருக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார்கள். அருணாச்சலத்தைச் சிறையிலடைப்பதும், கட்சியைப் பிளவுபடுத்தி, அவர்களில் சிலரைக் கொண்டு மத்திய அரசுக்கு இணக்கமான அரசைக் கொண்டுவருவதும்தான் அவர்கள் திட்டம்.

கொற்றவை என்ற பத்திரிகையாளர் முதல்வரின் கொள்கைகளுக்குத் துணையாக இருக்கிறார். “ஊழல் ஊழல்’னு மாநில கட்சிகள நசுக்குறதுக்குதாங்க இந்த ஊழல் குற்றச்சாட்டு! ஏதாவது ஒரு தேசியக் கட்சியோட ஒரு தலைவர் கைதாகிச் சிறைக்குப் போயிருக்காங்களா? அப்ப ஊழல் ஊழல்’ன்னு சொல்றது என்னது? ஒரு மிரட்டல் ஒரு எச்சரிக்கை. ‘நான் சொன்ன இடத்துல கையெழுத்துப் போடு! என் கால்’ல விழுந்து கிட!’ன்னு மேலிடத்திலிருந்து வர்ற மிரட்டல்தானே தவிர வேற ஒண்ணும் இல்லை!” என்று பொது இடங்களில் பேசி விழிப்புணர்வு தருகிறார்.

கதையில், முதல்வர் ஊழல் செய்யவில்லை என்று சொல்லவில்லை. 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விசயத்தை, மத்திய அரசு பழிவாங்கும் செயலுக்குப் பயன்படுத்துகிறது என்றுதான் சொல்கிறார்கள். ஒருவேளை தீர்ப்பு முதல்வர் அருணாச்சலத்திற்கு எதிராக இருந்து, அவர் சிறைக்குப் போய்விட்டால், கட்சியை அடுத்து யார் நடத்துவார்? முதல்வரின் வீட்டிற்குள்ளேயே இரண்டு பிரிவு இருக்கிறது. ஒருவர் மகள் அமுதவல்லி. அவர் துடிப்பான அரசியல்வாதியாக இருக்கிறார். இன்னொருவர் மருமகன் ஹரிஹரன். இவர் எப்படியாவது பணத்தைச் செலவு செய்து முதல்வர் நாற்காலியை அடைந்துவிட வேண்டும் என நினைக்கிறார்.

முதல்வர் அருணாச்சலத்தின் நேசத்திற்குரிய கொற்றவை, பாசத்திற்குரிய மகள் அமுதவல்லி, அன்புற்குரிய மருமகன் ஹரிகரன் என்ற மூன்று பேரில் அவருக்கு அடுத்து யார் வரப்போகிறார்? தலைமையை நோக்கிய அவர்களின் செயல்பாடுகள் என்ன? என்பன ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் கொற்றவை யார்? அவளுக்கு உரிமையாகக் கட்டளையிடும் மாவோயிஸ்ட் துர்கா யார்?  இவர்களின் மர்மங்களைத் தேடி தமிழ்நாட்டிலிருந்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் என்பவர் வடநாட்டிற்குச் செல்கிறார்; ஒரு சிபிஐ ஆபிஸர் வடநாட்டில் தொடங்கி தென்னாட்டில் வந்து நிற்கிறார். முடிவில் அவர்கள் கொற்றவை யார் என்பதைக் கண்டறிந்தார்களா? இல்லையா? என்பன ஒரு பக்கம்.

முதல்வர் அருணாச்சலம் தண்டனை பெற்றுச் சிறை சென்றாரா? இல்லையா? அவருடைய கட்சி என்ன ஆனது என்பன ஒரு பக்கம். இப்படி பல்வேறு கதைகள் ஒரு இடத்தில் வந்து முடிகின்றன.

பொதுவாக இந்தி வெப் சீரிஸ் பார்த்துவிட்டு, தமிழ் வெப் சீரிஸ் பார்க்கும்போது நடிப்பில் மிகப் பெரிய வெற்றிடம் தெரியும். இந்த வெப் சீரிஸில் தெரியவில்லை. ஷ்ரேயா ரெட்டி, கிஷோர், ரம்யா நம்பீசன் என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.  வசனங்கள் பல இடங்களில் நன்றாக இருந்தன.

“இங்க நடக்கிற பெரிய ஊழல் எல்லாமே சட்டபூர்வமாகத்தான் அரங்கேறுது. ஆனா நம்ம கண்களுக்கு அதெல்லாம் ஊழலாவே தெரியலை. வரிவிலக்கு அப்பிடி’ன்ற பேர்ல நூறு பெரிய முதலாளிக்கு, இந்த வருசம் மட்டும் 180000 கோடி ரூபாய் குடுத்திருக்காங்களே அது மக்கள் பணம் இல்லாம கட்சி நிதியா?”

“ஒரு குழந்தைய ஒரு பெண்ணாலதான் பெத்துக்க முடியும். அத நாம Natural birth’ன்னு சொல்றோம். அதே ஒரு ஆணைப் பெண் கொன்னுட்டானா…? அதையும் ஒரு வகையில Natural death’ன்னு  சொல்லலாம்’ல்ல”

“டெல்லியோட காம்ப்ரமைஸ்’ன்னா – கட்சியிலர்ந்து கட்டுன வேட்டி வரைக்கும் எழுதிக் கேப்பான்! பரவாயில்லையா?”

”இந்தியன் ஜெயில்’ல்ல இருக்குற 50 சதவீதம் பேருக்கு, ஏன் அரஸ்ட் பண்ணாங்க எதுக்கு ஜெயில்’ல்ல இருக்கோம்’னு அவங்களுக்கே தெரியாது”

”பதில் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? அமைதிதான் பதில்’ன்னு அர்த்தம்!”

இப்படி நிறைய வசனங்கள்.

ஒரு காட்சியில் வரும் வசனத்தை வைத்து, அதை ஜெயமோகன்’தான் எழுதியிருக்க வேண்டும் என யூகிக்கிறேன். அந்த வசனம்:

“ராசாவா இருக்குறவன், தான் குற்றவாளி இல்லை… குற்றவாளி இல்லை…’ன்னு கைமுக்குப் போட்டுக்கிட்டே இருக்கணுன்’டே கைமுக்குக்குப் பயந்து கோபுரதிலர்ந்து சாகுறதுக்கு நீ என்ன கோழையா? நீ வீரன்’டே” என அருணாச்சலத்தின் அம்மா சொல்கிறார்.  இதில் கைமுக்கு என்பது குற்றம் சாட்டப்பட்டவர், தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிருபிக்க, கொதிக்கும் நெய்யில் போடப்பட்ட அனுமன் சிலையை வெளியில் எடுக்க வேண்டும். இந்த கைமுக்கை அடிப்படையாகக் கொண்ட கூழங்கைத் தம்பிரான் கதையை ஜெயமோகன் சில மாதங்களுக்கு முன் உயிர்மையில் எழுதியிருந்தார் என்பது கூடுதல் தகவல். கைமுக்கு என்ற தகவலை ஒரு காட்சியில் வைத்ததோடு, அருணாச்சலத்தின் பேத்தி அருணாச்சலத்திடம், “கை வேகாம எடுத்திருவீங்களா?” எனக் கேட்கும் இடம் அருமையாக இருந்தது.

தமிழக அரசியல் களத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையில் முழுக்க அதையே பேசிக்கொண்டிருக்க முடியாது. கமர்ஷியலுக்காக எதையாவது செய்துதான் ஆகவேண்டும். அது லாஜிக் மீறிய ஒன்றாக இருக்கும் என்றாலும், செய்துதான் ஆகவேண்டும். ஆனால், இந்த வெப் சீரிஸில் லாஜிக் மீறல் அதிகமானதைவிட, சொன்னவிதமும் சுவாரஸ்யமாக அமையவில்லை. சான்றாக, முதல்வருக்கு மிக நெருக்கமாக இருக்கும் கொற்றவை கி.பி. 2000-த்தில் டெல்லியில் DNU-வில் படித்தவர் என்றால்? அவர் முதல்வோரோடு நெருக்கமாக இருந்தார் என்றால்? வெளி உலகத்திற்குத் தெரியாமலா போய்விடும். அவர் என்ன மோடியா? யாருமே படிக்காத ஒழுங்கிணைந்த அரசியல் விஞ்ஞானம் (Entire Political Science) படிக்க?

ஒரு பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் படித்தார் என்றால், அதுவும் அரசியல் அறிவியல் படித்தார் என்றால், அதுவும் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தார் என்றால் அவருடைய ரகசியத்தை ஒரு இன்ஸ்பெக்டரும், சிபிஐ ஆபிஸரும் அவ்வளவு மெனக்கெட்டுத் தேடவேண்டுமா? திரைக்கதையின் சுவாரஸ்த்திற்காக என்று நினைத்து செய்த விவசயம், நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் அசல் திரைக்கதையைச் சிதைத்துவிட்டது.

கதையின் இன்னொரு பலகீனம் மாவோயிஸ்ட் துர்கா. அவள் சர்வ சாதாரணமாகச் சென்னையில் சுற்றுகிறாள். கேஸுவல் சர்ட், கேப் என தன்னுடைய கெட் அப்பைக் கொஞ்சம்கூட மாற்றிக்கொள்ளவில்லை. அந்தக் காலத்துப் படத்தில் மரு வைத்து வந்தால் ரவுடி என எளிதாகக் கண்டுபிடிப்பதுபோல, துர்காவின் தோற்றத்தைப் பார்த்தால் மாவோயிஸ்ட் என எளிதில் சொல்லிவிடலாம். அவள் சென்னை ஈசிஆரில் துப்பாக்கிச் சண்டைபோட்டு மிக எளிதாக சென்னைக்குள் ஒளிந்துகொள்கிறாள். எல்லாவற்றையும்விட கன்சைன்மெண்ட் ஆந்திரா போகும்போது கான்வாய் போலிஸ்போல காரில் பின்னால் போகிறாள். முதல்வரின் வீட்டருகில்கூட காரில் போகிறாள். இவ்வளவு பவர்ஃபுல்லான மாவோயிஸ்டை நாம் வேறு எங்கும் பார்க்கமுடியாது!

மாவோயிஸ்ட் இவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கும் கதையில் முதல்வர் மிகவும் பல்ஹீனமாக இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பரிதாபமான ஒரு கதாப்பாத்திரம் என்றால் அது பெரிய பழுவேட்டரையர்தான். ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சுரங்கப் பாதை வழியாகச் சென்று பெரிய பழுவேட்டரையர் மனைவி நந்தினியைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போவார்கள். ஆனால், கடைசிவரை தன் வீட்டில் ஒரு சுரங்கப்பாதை இருப்பது பெரிய பழுவேட்டரையருக்குத் தெரியாது. அதுபோல, கொற்றவை யார் என்பதோ? துர்கா என்ற மாவோயிஸ்டிடம் தன் மருமகன் பேசுகிறான் என்பதோ? அவரைப் பற்றி ஒரு கட்டுரை வந்தால்கூட அதை அவரிடம் காட்டாமல் மறைத்துவிடுவார்கள் என்பதோ? தன் கட்சிக்காரர் எதிர்க் கட்சி தரகரிடம் பேசுகிறார் என்பதோ? முதல்வர் அருணாச்சலத்திற்குத் தெரியாது எனக் கதாப்பாத்திரைத்தை வடிவமைத்திருக்கிறார்கள். பாவம் உளவுத்துறையே இல்லாத முதல்வர்!

முதல்வர் மருமகன் ஹரிக்கு, “சிலுவை: இனங்காண முடியாத எதிரிகள் உன்னைச் சுற்றிலும் ஒரு கரும்புகையைப் போல ரத்தம் குடிக்கும் ஆயிரம் நாக்குகளுடன் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரியும்போது உனக்கான சவக்குழி தோண்டப்பட்டிருக்கும்.” என்பது போன்ற அசரீரிகள் அவ்வப்போது வருகின்றன. இந்த அசரீரிக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள் இயக்குநருக்கு வலிந்து திணித்த உத்தியாக இது இருக்கும். Money Heist, Prison Break, Breaking Bad, Better call Saul போன்ற வெப் சீரிஸைப் பார்த்துக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இளைஞர் உலகத்திற்கு இது அதர பழசான உத்தி என்பதைத் திரைக்கதை எழுதியவர்கள் உணரவில்லை என்று தெரிகிறது.

கதையில் சிபிஐ ஆபிஸர் (சிஜிஐ) வருகிறார். அவர் ஓர் இஸ்லாமியர் National commission for Anti-Terrorism என்ற கமிட்டியில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். சிபிஐ, ரா, இன்ன பிற இந்திய உளவு அமைப்புகளில் இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதிலும் தீவிரவாதம் என்ற சொல் இஸ்லாமியர்களோடு நெருங்கிய தொடர்புகொண்ட ஒன்றாக இருக்கும்போது, அதைக் கண்டுபிடிக்க சிபிஐ ஆபிஸரை நியக்கமிக்கமாட்டார்கள் என்ற நிஜம் இருந்தாலும், இந்தக் கதையில் வரும் சிபிஐ ஆபிஸர் கண்டுபிடிக்கும் விசயங்களும், முறையும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல, இந்தக் கதையில் வரும் கவிதா பாரதிக்கும் முதல்வருக்கும் என்ன உறவு என்று கடைசிவரை தெரியவே இல்லை.

முதல்வர் அருணாச்சலம் தொடர்ந்து மூன்றுமுறை முதல்வராக இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் 17 வருடத்துக்கு முன்னால் புழச்சலூர் கார் கம்பனி ஊழல் வழக்கு என்கிறார்கள். அதுவே இடிக்கிறது. கொற்றவை 2000 வருசத்தில் டெல்லியில் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்திருக்கிறார். அதன்பிறகு சில பல கொலைகள் செய்துவிட்டு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு வருகிறார். எதுவும் இல்லாமல் ஒரு ரயிலில் வருகிறார்! வந்த இடத்தில் பத்திரிகையாளராக இருந்திருக்கிறார். அப்போது  அவள் நெருப்பு மாதிரி கேள்வி கேட்டதாக முதல்வர் சொல்கிறார் சரி! ஆனால் அவருடைய வீடு முதல்வரின் வீட்டைவிட பிரமாண்டமாக இருக்கிறதே அதை எப்படிக் கட்டினார்.

சரி போகட்டும்! கொற்றவை புத்திசாலித்தனமாக சம்பாதித்துவிட்டாள் என்றே வைத்துக்கொள்வோம். அவளை அவளது பழைய தோழி மாவோயிஸ்ட் துர்கா சந்திக்கிறார். சந்தித்து “ஹார்பரில் ஒரு கன்சைன்மெண்ட் இருக்கிறது முதல்வரிடம் சொல்லி எடுத்துக்கொடு” என்கிறார். முதல்வர் தலைக்கு மேலேயே கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. அவர் இன்றைக்கோ நாளைக்கோ ஜெயிலுக்குப் போக வேண்டிய சூழலில் நிற்கும்போது எந்த மாவோயிஸ்ட்டாவது இவ்வளவு முட்டாள்தனமான உதவியைத் தோழியிடம் கேட்பாளா என்று தெரியவில்லை?

கதையில் உச்சகட்டமாக ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் நடிகர் பரத்தைச் சொல்லவேண்டும். அவரிடம் இயக்குநர், “உங்களுக்கு கதையில் இரண்டு Gun fights, நீங்க இந்தியா முழுவதும் தேடுறீங்க?” என்று சொல்லியிருப்பார்போல. அவரும் ஏன் எதற்கு என்று கேட்காமல் இரண்டு துப்பாக்கிச் சண்டையை நிகழ்த்திவிட்டு, இயக்குநரிடம்கூட சொல்லாமல் இந்தியா முழுவது தேட ஆரம்பித்துவிட்டார். கடைசியில் மேற்கு வங்காளத்தில் சென்று, அங்கு இருப்பவர்களிடம் “நான் யார் தெரியுமா? தமிழ்நாடு போலிஸ்” என்கிறார். அவர்கள் அவரை ஒரு சாக்கில் போட்டுத் தூக்கிச் சென்று, முட்டுச் சந்தில் வைத்து அடித்துத் துவைத்துக் கீழே போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். வடிவேல் காமடியை சீரியஸாகப் பார்த்ததுபோல இருந்தது!

எட்டு எபிசோட்டில் சொல்லவேண்டிய முக்கியமான விசயமே கொற்றவை யார்? துர்காவும் கொற்றவையும் ஒருத்தியா வேறு வேறா? கொல்லப்பட்ட துர்காவுக்கும் கொற்றவைக்கும் இருந்த உறவு என்ன? அவள் ஏன் இத்தனை கொலைகளைச் செய்தாள்? இப்படியான விசயங்கள்தானே! இதை எல்லாம் கடைசியில் ஒரு கடிதத்தில் சொல்கிறார்கள். அப்படி என்றால் எட்டு எபிசோட்டைக் கதற கதற பார்த்தவர்கள்மீது நீங்கள் காட்டும் கருணை இதுதானா? எனக் கேட்க வைக்கிறார்கள்.

இப்படியாக ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், தமிழில் வந்த நல்ல சீரிஸ்களில் ஒன்றாக தலைமைச் செயலகத்தைக் குறிப்பிட முடியும். முதலாவது அம்சம், நடிகர்களின் நடிப்பு. சில ஆங்கில, இந்தி வெப் சீரீஸ்களைப் பார்த்துவிட்டுத் தமிழ் வெப் சீரிஸ்களைப் பார்த்தால் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கும். தலைமைச் செயலகத்தில் ஷ்ரேயா ரெட்டியின் தோற்றமே கம்பீரமாக இருந்தது. கிஷோரின் நடிப்பைக் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு கதாப்பாத்திரத்திற்குள் தன்னைப் புகுத்திக்கொள்வார். ஏனைய நடிகர்களும் சிறந்த நடிப்பைத் தந்திருந்தார்கள்.

கதையின் மையக் களம்கூட நன்றாக இருந்தது. முதல்வராக இருப்பரின் உளக் கொதிப்பையும், போராட்டத்தையும் வித்தியாசமானக் கோணத்தில் காட்டியிருந்தார்கள். House of Cards போன்ற அமெரிக்க சீரியல்கள் எல்லாம் பெரும்பொருள் செலவில் எடுக்கப்பட்ட அரசியல் வெப் சீரிஸ்கள். நமக்குக் கிடைக்கும் குறைவான பட்ஜெட்டை வைத்து மிகப் பெரிய அரசியல் காவியத்தை எடுத்துவிடவும் முடியாது.  அப்படி இருந்தும் முதல்வர் அவரைச் சுற்றியிருந்த களங்களை நன்றாகவே காட்டியிருந்தார்கள்.

எனக்கு லாஜிக் மீறல்களோ அல்லது பட்ஜெட்டோ மிகப் பெரிய குறைபாடாகத் தெரியவில்லை. கதையின் பார்வைக்கோணம்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உதாரணத்திற்கு,

”நமது அய்யாவின் மாபெரும் தமிழ்க் கனவை என்னோடு சேர்ந்து சுமப்பவர்களே!” என்றுதான் முதல்வர் அருணாச்சலம் தன் பேச்சைத் தொடங்குகிறார். இந்த முன்னுரை திராவிட அரசியல் தலைவர்களை முன்னிலைப்படுத்துகிறது. யாரை முன்னிலைப்படுத்துகிறது என்றுகூட நமக்குத் தெரியும்.  அகில இந்திய எழுச்சி தமிழக முற்போக்குக் கழகம் என்பதுதான் கட்சியின் பெயர். (‘எழுச்சித் தமிழக‘ என்றுதான் இருக்க வேண்டும். வேண்டுமென்றே ‘த்’ போடாமல், ஏதாவது மெஸேஜ் சொல்கிறார்களா என்று தெரியவில்லை) இந்தக் கட்சியின் பெயர்கூட திராவிடக் கட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. முதல்வரின் மகள் அரசியலில் துடிப்போடு இருக்கிறார் என்பதும், அவர் மருமகன் தவிர்க்கமுடியாத சக்தியாக இருக்கிறார் என்பதும் பொதுவாக முன்வைக்கப்படும் குற்றசாட்டுகள்தான்!

இப்படி நிஜ உலகத்தில் வாழும் அரசியல்வாதிகளையும், அவர்களின் அரசியல் செயல்பாடுகளையும் ஞாபகப்படுத்துவதுபோலக் கதையாக்குவதில் எந்தத் தவறும் இல்லை. அப்படிக் கதையாக்கும்போது, அந்தக் கதாப்பாத்திரத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கக் கூடாது. ஆனால், இந்த வெப் சீரிஸில் வரும் முதல்வர் திராவிடக் கட்சித் தலைவரின் சாயல் கொண்டிருந்தாலும், அவர் வீட்டில் சமஸ்கிருத மந்திரம் ஒலிக்கிறது. ருத்ராட்சமும், ஸ்படிக மாலையும் அணிகிறார். நெற்றியில் விபூதியும் குங்குமமும் இல்லாமல் இருப்பதில்லை. திராவிடக் கட்சித் தலைவர் தமிழ் நலன், சமூக நீதி, மாநில உரிமைகள் பேசும் தலைவர் ஊழல் செய்வார்; மகளுக்கு ஒரு பதவி கொடுப்பார்; ஆசை நாயகிக்கு ஒரு பதவி கொடுப்பார்; மருமகனை மந்திரியாக்குவார். ஆனால், அவர் சமயங்களைக் கடந்தவராகவோ அல்லது நாத்திகராக இருக்கமாட்டார் என்றால் என்ன நியாயம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இயக்குநர், அந்தப் பாத்திரத்தின் அடிப்படை குணத்தைக் காட்டவேண்டும் அல்லவா? ஏன் ஜெயலலிதா இல்லையா? எனக் கேட்கலாம். இந்தக் கதையின்படி அவரைக் காட்டவில்லை!

அதேபோல செல்வ புவியரசன் என்ற கதாப்பாத்திரம்கூட திராவிட அரசியல் தலைவர்களைக் குறைத்துக் காட்டுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் அவர் மத்திய அரசின் தரகராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்கிறார். அவருக்கு வெள்ளிக் குவளையில் (tumbler) தேநீர் கொடுக்காமல் சாதாரண குவளையில் தருகிறார்கள்.  அதன்பின் அரசியல் பேசுகிறார்கள். புவியரசனை தேசிய கட்சியோடு சேரச் சொல்கிறார்கள். ஆனால் அவர், “சமூக நீதியும், சுயமரியாதையும் படிச்சிட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஆனா கௌரவம் இல்லாத இடத்தில ஒரு நிமிஷம்கூட இருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

அவர் போனப் பின்பு, “அந்த வெள்ளி tumbler matter irritate பண்ணிருக்கு… அது வேணும்’னே பண்ணதுதான?” எனச் சிரிக்கிறார்கள். சமூக நீதி, சுயமரியாதை என்று பேசினாலும், தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சித் தலைவர்கள், தங்கள் உயர்ஜாதி மனோபாவத்திலிருந்து கீழே இறங்கிவர மாட்டார்கள் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தக் காட்சியை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், இப்படி இருக்கும் கட்சியில் கொற்றவை கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆனதும், “கட்சியின் மாபெரும் தமிழ்க் கனவான தமிழகத்தின் ‘யாவரும் கேளிர்’ திட்டத்தை மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெரியாரிய தத்துவங்களை முன்வைத்து என் பணியை நடத்திச் செல்வேன்” என்கிறார்.  அவர் கொள்கைப் பரப்புச் செயலாளரான பிறகு ஒரு யூடூபருக்குக்கூட பேட்டி தரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்! கட்சியின் பெயரில் தமிழக முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. மாபெரும் தமிழ்க் கனவு என்றுதான் தொடங்குகிறார்கள். அப்படியென்றால் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸிய என்றுதானே கொள்கைப் பரப்புச் செயலாளர் சொல்லவேண்டும். ஏன் சொல்லவில்லை?

ஊழல், குடும்ப அரசியல் என்றால் திராவிடக் கட்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டும்! அவர்கள் பேசும் சுயமரியாதை, சமூக நீதியைக் கிண்டல் செய்ய வேண்டும்! கொள்கை என்றால் மார்க்ஸியத்தை முன்னால் கொண்டுவரவேண்டும்! இந்த நுண் அரசியலைச் செய்தவர் யார்? வசந்த பாலன் செய்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். சநாதனத்தை உயிர்மூச்சாகக் கொண்ட ஒருவரை வைத்து திராவிட அரசியலின் கதையை எழுதச் சொன்னால் எப்படி இருக்கும்? சர்க்கரைப் பொங்கலுக்கு வடைகறிதானே கிடைக்கும்!

இயக்குநரின் மேன்மையான சிந்தனை என்பது சமீபகால அரசியலின் உண்மையை, உண்மையாகவே மக்களிடம் கொண்டுபோவதில் காட்டும் தன்முனைப்பாக இருக்கவேண்டும். ஒரு மூத்த இயக்குநர் திரைப்பட உலகத்திலிருந்து வெப் சீரிஸ் உலகத்திற்கு வந்திருக்கிறார். லாஜிக் மீறல்களே இல்லாமல் கதை சொல்ல வேண்டும் என்பதில்லை. நடிகர்கள் அற்புதமாக நடித்திருந்தும், ஜிப்ரானின் இசை அற்புதமாக இருந்தும், தரமான தயாரிப்பு இருந்தும் திரைக்கதையில் இதுபோன்ற விசயங்களில் கோட்டைவிட்டுவிட்டார்கள்.

வெயில், அங்காடித் தெரு எடுத்த இயக்குநர் வசந்தபாலனிடம் நாம் சில எதிர்ப்பார்ப்புகளோடு இருக்கிறோம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். சில விசயங்களைச் சுட்டிக்காட்டியதுகூட எதிர்காலத்தில் அவர் இதுபோன்ற விசயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.  என்றாலும், தேசிய கட்சியின் எதேச்சதிகாரத்தைக் கேள்விகேட்கும் குரலாக; மாநில சுயாட்சியை வலியுறுத்தும் குரலாக; சமூக நீதியை முழங்கும் தென்னாட்டின் முதல் குரலாகத் தலைமைச் செயலகம் வரலாற்றில் பேசப்படும்!

drsankardass@gmail.com