பர்ணசாலைக்கு எதிரில் குரங்குகளாக இருந்ததைப் பார்த்த சீதா, “அயோத்தியில்தான் குரங்குகளின் கூட்டம் அதிகம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், தண்டகாரண்ய வனத்திலும் மற்ற விலங்குகளைவிடக் குரங்குகள்தான் அதிகம் போல! இந்த வனத்தில் இலுப்பை மரங்களும், மஹூவ மரங்களும் நிறைந்திருப்பதுபோல் தெரிகிறது. பக்கத்தில்தானே கோண்டு இன ஆதிவாசிகள் வாழும் பஸ்தர் என்ற இடம் இருக்கிறது?” என்று கேட்டாள்.
“ஆமாம்” என்று ராமன் சொன்னான்.
“இந்த வனத்திற்குள் வந்தபிறகு நாள் என்ன, நேரம் என்ன, எதுவும் தெரியவில்லை. இந்த வனத்தின் வனப்பை எந்த வார்த்தைகளாலும் சொல்லிவிட முடியாது.”
“ஆமாம் சீதா. நீ சொல்வதைப் போலத்தான் இந்த வனம் இருக்கிறது. அருகில்தான் கோதாவரி ஆறு இருக்கிறது. அந்த இடம் இன்னும் அழகாக இருக்கும்.”
“சற்று முன்தான் மரங்களின்மீது சூரிய ஒளி படர்ந்திருந்தது. சிறிது நேரம்கூட ஆகவில்லை. அதற்குள் சூரிய ஒளி மறைந்து கருமேகங்கள் சூழ்ந்துவிட்டன. மழை வரும்போல இருக்கிறது. குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்துவிட்டது.” தன்னை மறந்து வனத்தின் பெருமைகளைப் பட்டியலிட ஆரம்பித்தாள். வாழ்விலே புதிய ஒளியைக் கண்டவள் மாதிரி அவளுடைய முகம் மலர்ந்திருந்தது. ராமன் சீதாவை விநோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
வனவாசத்திற்காகப் புறப்பட்டபோது போகிற வழி எப்படி இருக்குமோ, தங்குகிற இடம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் சீதாவின் மனத்தில் இருந்தாலும் ராமன் இருக்கிறான், கூடவே நிழல்போல லட்சுமணன் இருக்கிறான் என்ற தைரியமும் இருந்தது. தண்டகாரண்ய வனத்திற்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தபிறகு வடக்கு-தெற்கு தெரியவில்லை. மேற்கு-கிழக்கு தெரியவில்லை. வனத்திற்குள் எந்த இடத்தை நோக்கி நடக்கிறோம், எந்த இடத்தில் இருக்கிறோம். எந்த இடத்தில் பர்ணசாலை அமைத்துத் தங்கப் போகிறோம், பர்ணசாலையை எப்படி அமைப்பது என்பது பற்றியெல்லாம் யோசித்தாள்.
தண்டகாரண்யம் ஒரே நேரத்தில் சீதாவினுடைய மனத்தை மயக்கவும், அச்சுறுத்தவும் செய்தது. நடைபயணக் களைப்பு, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியதால் ஏற்பட்ட சிரமம், காட்டு விலங்குகள் பற்றிய பயம் என்று பல விஷயங்களை மறந்துவிட்டு வனத்திலிருந்த மரம், செடி, கொடிகளை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின், குருவிகளின், வண்டுகளின் சத்தம் அவளைச் சிறு பிள்ளையைப் போல மாற்றிவிட்டிருந்தது.
“இது என்ன மரம், இது என்ன செடி, இது என்ன பூ, அங்கே தெரிகிற பறவையின் பெயர் என்ன?” என்று ராமனிடமும் லட்சுமணனிடமும் கேட்டுக்கொண்டே வந்தாள். சாதாரணமாக ஒவ்வோர் அடியை எடுத்துவைத்து நடப்பது என்பது சாகசமாகவே இருந்தது. சாகசப் பயணம் சீதாவுக்குப் பிடித்திருந்த மாதிரிதான் தெரிந்தது.
சீதா நிற்பதற்கும் நடப்பதற்கும் சிரமப்படுவது தெளிவாகத் தெரிந்தது. அவள் படுகின்ற சிரமத்தைக் குறைப்பதற்கான வழி எது என்றுதான் ராமனுக்குத் தெரியவில்லை. தண்டகாரண்ய வனத்திற்குள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போதும் படாத அவஸ்தைப்பட்டாள். பாதை என்று எதுவுமில்லை. நாம் நடக்கிற வழிதான் நமக்கான பாதை என்ற நிலை. அடிக்கடிக் கற்களில் இடறிக்கொண்டாள். விரல்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தபோதும், முட்கள் குத்தியபோதும், கால்களில் குத்திய முட்களைப் பிடுங்கும்போதும் ஏற்படும் வலி குறித்து சீதா முகம் சுளித்து, ‘என்ன இப்படிப்பட்ட வனாந்தரத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டீர்கள்’ என்றோ, ’இந்த வனத்தில் எப்படி வசிக்க முடியும்’ என்றோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. காட்டு வண்டுகள், குளவிகள், பூச்சிகள் அவ்வப்போது வந்து கடித்தபோதும், அது குறித்துப் புகார் சொன்னதில்லை. வலியையும் வெளியே காட்டிக்கொண்டதில்லை.
வனத்திற்குள் பர்ணசாலை அமைத்துத் தங்கிய முதல் மூன்று நாள்கள் சீதாவால் ஒர் அடிகூட எடுத்து வைத்து நடக்க முடியவில்லை. ராமனும் லட்சுமணனும் வலிபோக்கும் இலைகளைப் பறித்துக்கொண்டு வந்து சாறு பிழிந்து சீதாவின் கால்களில் ஊற்றினார்கள். இன்று நான்காவது நாள். இப்போதும்கூட அவளால் இயல்பான முறையில் நிற்கவோ நடக்கவோ முடியவில்லை என்பதைப் பார்த்த ராமன், “பாதங்களைக் காட்டு, காயங்கள் ஆறிவிட்டனவா என்று பார்க்கலாம்” என்று கேட்டான்.
“எல்லாம் சரியாகிவிட்டன.” என்று சொன்ன சீதா, ராமனை வாஞ்சையுடன் பார்த்து, “முட்கள் குத்தி, கற்களில் இடறி உங்களுடைய கால்களிலும் ரத்தம் வரவும் காயம் ஏற்படவும்தான் செய்தன?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“நான் ஏற்கனவே வனத்திற்கு வந்து பழக்கப்பட்டவன். நீ அப்படியல்ல. வனவாசத்திற்காக அரண்மனையைவிட்டு நீ வெளியே வருவதற்கு முன்பு உன் உடலில் சூரிய ஒளி பட்டிருக்காதுதானே. என் பொருட்டு நீ படும் கஷ்டங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனம் மிகவும் வேதனை அடைகிறது. கந்தர்வ, யாஷ், கின்னர பெண்களைவிட அழகான நீ இந்த வனத்தில் வந்து படும் துயரத்தைப் பார்க்கும்போது நான் எடுத்த முடிவு சரியானதுதானா என்ற கேள்வி எனக்குள் திரும்பத்திரும்ப எழுந்துகொண்டிருக்கிறது” என்று மனம் தளர்ந்துபோய்ப் பேசியதைக் கேட்டதும் சீதா பதறிப்போனாள். ராமனுக்கு மிக அருகில் வந்து நின்றுகொண்டு, அவனுடைய கண்களையும் முகத்தையும் ஆராய்வதுபோல் பார்த்தாள்.
“என்னுடைய ராமனா இப்படிப் பேசுவது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள். சீதா கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ராமன் பர்ணசாலைக்கு வெளியே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அவனுடைய முகம் வாடிப்போயிருந்தது.
“கைகேயியின் மீதும், மந்தரையின் மீதும் எனக்கு ஒரு வருத்தமுமில்லை. அவர்கள் நம்மால் வணங்கத் தக்கவர்கள். வனவாச வாழ்க்கைக்கான முடிவு அவர்கள் எடுத்தது” என்று சொல்லிவிட்டு ராமன் அணிந்திருந்த மரவுரி மேலாடையைச் சரிசெய்தாள். வாடிப்போயிருந்த ராமனுடைய முகத்தைப் பார்த்து, “என் பொருட்டு அறுபதாயிரம் பேரால் மட்டுமே இழுத்துவரமுடிந்த சிவதனுசுவில் நாண் ஏற்றி, அந்த வில்லை நீங்கள் உடைக்கவில்லையா? அவ்வளவு வலிமை பொருந்திய ராமனா என் காலில் குத்திய முள்ளிற்காக வருத்தப்படுவது? பிறக்கும்போதே தெய்வ அம்சங்கள் பொருந்தியவன் ராமன் என்றுதானே அயோத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னாள்.
“நீ சிவதனுசுவைப் பார்த்திருக்கிறாயா?”
“ஆம், பார்த்திருக்கிறேன். ஒருமுறை எனது இடது கையால் அதைத் தூக்கித் தூரமாக வைத்திருக்கிறேன்” என்று சீதா சொன்னதும் “என்ன சொல்கிறாய்?” என்று ராமன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“ஒருநாள் நானும் எனது சகோதரிகளும் பந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, பந்து மரத்தில் சிக்கிக்கொண்டது. பந்தை எடுப்பதற்கு இடையூறாக இருந்தது சிவதனுசு. அதனால் அதை எடுத்துச் சற்றுத் தள்ளிவைத்தேன். விஷயத்தை என் தந்தையிடம் சொன்னபோது, அவர் நம்பவில்லை. நீங்களும் நம்பவில்லையா?” என்று சீதா கேட்டதற்கு உடனடியாக ராமன் எந்தப் பதிலும் சொல்லாமல் சீதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். “ஏன் என்னை வியப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். சீதா கேட்டது ராமனுடைய காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. அவன் ஏதோ யோசனையில் நின்றுகொண்டிருப்பதுபோலத் தோன்றியது.
“சிவதனுசுவை மட்டுமா உடைத்தீர்கள்? ‘சிவதனுசு என்ன பிரமாதம்? விஷ்ணு தனுசுவையும் உடை பார்க்கலாம்!’ என்று பரசுராமர் விட்ட சவாலை ஏற்று விஷ்ணு தனுசுவையும் உடைத்தவர் நீங்கள்தானே. எல்லாம் மறந்துபோய்விட்டதா?”
சீதா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “லட்சுமணன் எங்கே இருக்கிறான் என்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சாக்குப்போக்கு சொல்லிவிட்டுப் பர்ணசாலையைவிட்டு வெளியே சென்ற ராமன் சிறிது நேரம் கழித்துத் திரும்பிவந்தான்.
“தங்கத் தட்டிலும், வெள்ளித் தட்டிலும் சாப்பிட்டுக்கொண்டிருந்த உனக்கு இப்போது காட்டு மரங்களின் இலையில் வைத்துச் சாப்பிடுவது சிரமமாக இருக்கும்.”
“எனக்கு எந்தச் சிரமமுமில்லை.”
“பணிப் பெண்கள் இல்லாதது பெரிய கஷ்டம்” ராமன் வருத்தமான குரலில் சொன்னான்.
“அரண்மனையும் பணியாள்களும் உங்களையும் என்னையும் தனித்திருக்கவிடவில்லை. இந்த வனவாச வாழ்க்கை உங்களை என்னுடன் நெருக்கமாக்கியிருக்கிறது. இதைவிடச் சிறந்த பரிசு எனக்கு என்ன வேண்டும்! ஒரு விதத்தில் அரண்மனை வாழ்க்கை கட்டுப்படுத்தப்பட்டதுதானே. வரையறைக்குட்பட்டதுதானே.”
“பளிங்காசனத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நீ இங்கே மண் தரையில் அமர்ந்திருக்கிறாய். ஹம்ச தூலிகை மஞ்சத்தில் படுத்திருக்கவேண்டிய நீ இங்கே புல் தரையில் படுத்திருக்கிறாய். மகாராணியாகப் பணிப் பெண்களுக்கு ஏவல் இடவேண்டிய நீ இங்கே எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறாய். பட்டாடையும் பொன்னும் மணியும்தான் உன் உடலை அலங்கரித்துக்கொண்டிருக்கவேண்டும். இங்கே நீ மரவுரி தரித்துக்கொண்டிருக்கிறாய். நீ கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது என் மனம் வேதனையால் துடிக்கிறது. நான் அன்று ஒரே ஒரு வார்த்தை பேசியிருந்தால் எல்லாமே மாறியிருக்கும்” என்று சொன்ன ராமனுடைய குரல் வருத்தத்தை வெளிப்படுத்தியது.
“அந்த வார்த்தையைச் சொல்லாததால்தான் நீங்கள் ராமன்.”
“அரசப் பதவி என்பது சூதுகளால் நிறைந்தது”
“அரண்மனையைவிட்டு வெளியே வந்து முதல்நாள் தமஸா நதிக்கரையில் தங்கியது, வேதசுருதி நதி, கோமதி நதி, ஸ்யந்திகா நதி, தல்பேர், கன்ஹர் நதி என்று கடந்து ஐந்தாம் நாள் கங்கையும் யமுனையும் இணையும் இடமான பிரயாகைக்கு வந்தது, சியாம மலையைக் கடந்தது, சுமத்திரனின் தேரில் மூன்று நாள்கள் தெற்காகப் பயணம் செய்தது, நிஷாத அரசன் குகன் உதவி செய்தது, பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு நான்காம் நாள் சென்றது என்று ஒவ்வொரு நிகழ்வும் கொடுங்கனவுபோல இருக்கிறது. நான் இதுவரை என்மேல் கொண்டிருந்த பற்று, நான் விரும்பியது, அடைய வேண்டும் என ஆசைப்பட்டது எல்லாம் அவசியமற்றது என்பதை ஏகந்தமான இந்த வனம் எனக்கு உணர்த்திவிட்டது” என்று சீதா சொன்னாள்.
“அதனால்தான் ரிஷிகளும், முனிவர்களும் தவம் செய்ய வனத்திற்கு வருகிறார்கள்” என்று சொன்னான். பிறகு பர்ணசாலையை நோக்கித் துஷ்டமிருகங்கள் ஏதும் வருகின்றனவா என்று வெளியே எட்டிப் பார்த்தான். ராமனின் நடவடிக்கை ஒரு வேடனின் நடவடிக்கையைப் போல இருந்தது.
“துறவறம் ஞானத்திற்கு இட்டுச்செல்லும். நிஜமான ஞானம் உலகில் நமக்கென்று எதுவும் சொந்தமில்லை. யாருக்கும் எதுவும் சொந்தமில்லை என்பதைச் சொல்லித் தரும்” என்று ராமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட சீதா, “அரசப்பதவிகூடவா?” என்று கேட்டாள்.
“ஆம் சீதா. இந்த வனவாசத்திற்கான பாதையை நான்தான் தேர்ந்தெடுத்தேன்” என்று ராமன் சொன்னான்.
“தெரியும். அதனால்தான் ராம நாமம் அயோத்தியில் இரவும் பகலும் பேசுபொருளாக இருக்கிறது. கங்கையில் நீங்கள் குளித்த படித்துறை இப்போது ‘ராம் சௌரா’ என்ற புனித இடமாக மாறி இருக்கும்” என்று சீதா சொல்லிக்கொண்டிருக்கும்போது லட்சுமணனுடைய உருவத்தின் நிழல் பர்ணசாலையின் வாசலில் விழுவதைப் பார்த்தாள். அந்த நிழல் கண நேரம்தான் இருந்தது. பிறகு மறைந்துவிட்டது. லட்சுமணனுடைய நிழல் விழுந்த இடத்தைப் பார்த்ததுமே, அவளுக்கு அடக்க முடியாத அளவிற்குக் கோபம் உண்டாயிற்று. சகித்துக்கொள்ள முடியாத விஷயத்தைச் சகித்துக்கொள்ளும்போது விடுவதுபோலப் பெருமூச்சுவிட்டாள்.
“லட்சுமணனுக்கு அண்ணன்மீது இருக்கும் அன்பில் ஒரு துளி அளவு அவருடைய மனைவி ஊர்மிளைமீதும் இருக்க வேண்டுமல்லவா? அண்ணனுடன் நானும் வனவாசம் போகிறேன் என்று அவர் சொன்னபோது ஊர்மிளையின் மனம் எப்படித் துடித்துப்போயிருக்கும். கணவன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமைகளும் இருக்கத்தானே செய்யும்” என்று சீதா சொன்னதை ஆமோதிப்பதுபோல, “சரியாகச் சொன்னாய் சீதா. ஊர்மிளை பாவம்தான். அவளைப் பற்றிச் சிந்திக்கத் தவறியது குற்றம்தான்” என்று சொன்னான் ராமன்.
“லட்சுமணன் நம்முடன் வந்துவிட்டார். ஊர்மிளை நிர்க்கதியாக இருக்கிறாள். ‘எனது அண்ணன் வனவாசத்திலிருந்து திரும்பி வரும்வரை நான் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கப் போகிறேன்’ என்று பரதன் அறிவித்திருப்பதாக அறிகிறேன். சத்ருகன் ஏதோ ஒரு தேசத்தின் மீது போர் தொடுக்கத் தயாராகிக்கொண்டிருப்பதாக அறிகிறேன். சுருத கீர்த்தியும் மாண்டவியும் வனவாச வாழ்க்கையைவிட மோசமானதொரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். தசரத மகாசக்கரவர்த்தியின் மகன்களுக்கு மனைவிகளுடன் இணைந்து வாழக்கூடாது என்ற சாபம் இருக்குமோ!” என்று சீதா கசப்பான குரலில் சொன்னாள். அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “சந்தோஷம் என்பதும், துக்கம் என்பதும் மனத்தின் உருவகங்கள்தான்” என்று சொன்ன ராமன் வில்லையும் அம்பையும் எடுத்தான்.
“காலையிலேயே எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்?”
“நேற்று பழம், தேன் மூங்கில் அரிசி, கிழங்கு போன்றவற்றைச் சேகரிப்பதற்காகச் சென்றிருந்தபோது சில முனிவர்கள் என்னிடம் வந்து, “நாங்கள் தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது, யாகம் வளர்த்துக்கொண்டிருக்கும்போது காட்டு விலங்குகளாலும், சரபங்கன், இல்வலன், வாதாபி போன்ற பல அரக்கர்களாலும் இடையூறுகள் ஏற்படுகின்றன. எந்த இடையூறுகளும் இல்லாமல் இருக்க உதவவேண்டும்” என்று கேட்டனர். “நானும் அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டேன்.
“ரிஷிகளும் முனிவர்களும் நேரடியாகக் கடவுளிடம் பேசுவார்கள். தங்களுக்குத் தேவையான வரங்களைப் பெற்றுக்கொள்வார்கள்தானே. அவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதா?” என்று அடங்கின குரலில் சீதா கேட்டாள்.
“தங்களுடைய தவ வலிமையால் அழிக்க முடியும்தான். ஆனால் அரக்கர்களை அழித்துத் தங்களுடையை தவ வலிமையின் ஆற்றலை இழப்பதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதோடு முனிவர்களும் ரிஷிகளும் வேட்டையாடுபவர்கள் அல்லர். அரசர்களுக்கும் இளவரசர்களுக்கும் அரசாட்சி பற்றிச் சொல்லித் தருவது, போர்ப் பயிற்சி அளிப்பதுதான் அவர்களுடைய முக்கியமான வேலை. அதற்காக அவர்களைப் பாதுகாப்பது சத்திரிய தர்மம்” என்று சொல்லிவிட்டு லட்சுமணன் எங்கே இருக்கிறான் என்று வெளியே சென்று பார்த்தான். அவன் பர்ணசாலைக்குச் சற்றுத் தள்ளி துஷ்ட மிருகங்கள் வருகின்றனவா என்று பார்த்துகொண்டிருப்பது தெரிந்ததும் திரும்பிவந்தான்.
“ரிஷிகள், முனிவர்கள் எதற்காகப் போர்ப் பயிற்சியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்று சீதா கேட்டதும் ராமனுடைய முகம் மாறிவிட்டது. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. கோபத்தை வெளிக் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றான்.
“முனிவர்களுடைய, ரிஷிகளுடைய தியானம் கலையாமல் பாதுகாப்பது அரசரின், இளவரசரின் கடமை என்பது உனக்கு நன்றாகத் தெரியும்.”
“நாம் இந்த வனத்திற்கு வந்ததிலிருந்து ஒரு விலங்கு, ஒரு ஆதிவாசிகூட நம்மைத் துன்புறுத்தவில்லை.”
“நாளை நடந்தால்?”
“இந்த வனத்திற்குள் வந்த அன்று உதவியவர்கள் ஆதிவாசிகள்தானே. அவர்கள்தானே உணவளித்தார்கள். இந்த பர்ணசாலையைக் கட்டுவதற்கு உதவியர்கள், வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று சொல்லித் தந்தவர்கள்.”
“தண்டகாரண்ய வனம் உன்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது.” ராமன் சிரித்தான். அவனுடைய சிரிப்பு செயற்கையாக இருந்தது.
“ஆமாம்” என்று உறுதியான குரலில் சீதா சொன்னாள்.
“நான் பாதுகாப்பிற்காக மட்டுமே செல்கிறேன். வேட்டையாட அல்ல. லட்சுமணன் வெளியே நின்றுகொண்டிருக்கிறான்” என்று சொன்னதும் சீதாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“நீங்களும் நானும் வனவாசம் வந்ததற்கு, இந்தப் பர்ணசாலையில் தங்கியிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. லட்சுமணன் இருப்பதற்குக் காரணம் இருக்கிறதா?” என்று சீதா கேட்டாள்.
“பிறந்ததிலிருந்தே ராம லட்சுமணன் என்றுதானே பெயர். எனக்கும் லட்சுமணனுக்குமான பந்தம் என்பது பிறப்பிலிருந்தே தொடங்கிவிட்டது” என்று ராமன் சொல்லிமுடிப்பதற்குள் “மனைவியின் அன்புக்கும் பக்திக்கும் சகோதரனின் அன்புக்கும் பக்திக்கும் வேறுபாடுகள் இருக்கிறதல்லவா” என்று சீதா சற்றுக் கோபமாகக் கேட்டாள்.
“நீ எப்போதும் லட்சுமணன்மீது குறைசொல்கிறாய். சந்தேகம் கொள்கிறாய்” என்று சொன்னான்.
“என் கணவரின் தம்பி. என் தங்கை ஊர்மிளையின் கணவர். அப்படியிருக்கும்போது அவர்மீது குறை சொல்ல, சந்தேகம் கொள்ளக் காரணம் ஏதுமில்லை.”
“நான் கிளம்புகிறேன். லட்சுமணனைக் காவலுக்கு விட்டுச் செல்கிறேன்” என்று ராமன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே “தேவையில்லை” என்று சொன்னாள்.
“மந்தாகினி, பம்பா ஆறுகளுக்கு அருகிலுள்ள முனிவர்களை அரக்கர்கள் கொன்று சாப்பிடுவதாகச் சொல்கிறார்கள்.” என்று ராமன் சொன்னான்.
“நீங்கள் சொல்வது விந்தையாக இருக்கிறது.”
“முனிவர்கள் பொய் சொல்லமாட்டார்கள்.”
“உயிர் வதைக்கு அஞ்சாதவர்கள், உயிர் வதையைத் தூண்டுபவர்கள் எப்படி அரச தர்மத்தையும், நீதியையும் கற்றுத்தர முடியுமா? தன்னை இழிவு செய்பவர்களிடமும் ஆத்திரப்படாதவர்கள், பிறர் மனம் நோகும்படி, புண்படும்படி பேசாதவர்கள், சினம் கொண்டு பேசுபவர்களையும் சமாதானம் செய்பவர்கள், பிறருடைய துன்பத்தைத் தங்களுடைய துன்பமாகக் கருதுகிறவர்கள், சுயநலமின்றி உதவுபவர்கள், உயிர் வதை செய்யாதவர்கள், உயிர்போகும் நிலையிலும் பொய் பேசாதவர்கள், மன்னிக்கத் தெரிந்தவர்கள், மனிதச் சிறுமைகள் என்று எதுவும் அண்டாதவர்கள்தான் ஞானம் பெற்றவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது” என்று கேட்டாள் சீதா.
“இன்று உனக்கு என்ன ஆயிற்று?” என்று ராமன் கேட்டான்.
“உங்களுக்குத் தீங்கு செய்யாத எந்த ஒரு ஆதிவாசியையும் கேடு விளைவிக்காத எந்த ஒரு விலங்கையும் வதம் செய்யாதீர்கள். மீறிச் செய்தால், அதர்மமான காரியங்களை ராமன் செய்தான் என்று பெயர் வந்துவிடும்.”
“பூமியில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தர்மம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தர்மத்தை நான் மீறுவது சரியா?” என்று கேட்டான்.
“மனம் ஆசைகளால் நிரம்பியிருக்கும்போது, சுயநலத்தின் பிடியில் மனம் சிக்கியிருக்கும்போது, மரணத்தைக் கண்டு மனம் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும்போது, அச்சத்தில் உடல் நடுங்கிக்கொண்டிருக்கும்போது, தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான வேறுபாட்டை உணராதபோது, யாகம் செய்து, தவம் செய்து, சாகாத வரம் வேண்டும், மந்திரத்தாலும், தந்திரத்தாலும் சாகசங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகின்ற மனம் இருக்கும்போது, தவம், யாகம் செய்து பெறுவது ஞானமா? என்ற கேள்வி வரும். வசிஷ்டரும் விசுவாமித்ரரும் தங்களுடைய தவத்தால் யாகத்தால் பெற்றது ஞானமா? தங்களுடைய தவம், யாகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக், காட்டில் வாழும் ஆதிவாசிகளைக் கொன்று உயிர்ப் பலி கொடுக்கச் சொல்வது தர்மமில்லை என்பது என் கருத்து” என்று சொன்ன சீதாவின் குரலில் நிதானம் கூடியிருந்தது. ராமன் எந்தப் பதிலும் சொல்லாததால், சற்று முன்னோக்கி வந்தாள். அவளுக்குப் பின்னால் ராமனும் வந்தான்.
“உன் மனம் இன்று அமைதியில் இல்லை என்று தோன்றுகிறது” என்று சொன்னான். என்ன காரணத்தினாலோ இன்று அவன் அதிகம் பேசுவதற்கு விருப்பமில்லாதவனாக இருந்தான். வனவாசம் செல்வது என்று முடிவான பிறகு ராமன் பேசுவது ராமனின் பேச்சுப் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை ஏற்கனவே சீதா அனுமானித்திருந்தாள். இப்போதும் அப்படித்தான். அவள் பேசியதில் பத்தில் ஒரு பங்குகூட ராமன் பேசவில்லை.
“இந்த வனத்தை, இங்குள்ள பறவையினங்களை, விலங்குகளை, ஆதிவாசிகளை நாம் உருவாக்கவில்லை. அதனால் அவற்றை அழிக்கும் உரிமையும் நமக்கு இல்லை. பிறருடைய இடத்தில் பிரவேசிப்பதும், பிறருடைய இடத்தை ஆக்கிரமிப்பதும் அழிப்பதும் அதர்மம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுடைய கையிலிருக்கும் ஆயுதம் இந்த வனத்தில் இருக்கும் அமைதியில் தீயை வைத்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு உண்டாகிறது” என்று சொன்னாள்.
“உனக்குள் ஏற்பட்டிருக்கும் அச்சம் அவசியமற்றது. நம்முடைய வனவாசம் விரைவில் முடிந்துவிடும். அரசாட்சியும் நம்மிடம் வந்துவிடும். நீ எந்தக் கவலையும் கொள்ளாமல் இரு, சீதா” என்று சொல்லி சீதாவை ஆறுதல்படுத்த முயன்றான்.
“கோசல நாட்டின் அரண்மனையையும், அரண்மனைக்குள் நடந்த அதிகாரத்துக்கான சூதுகளையும் நான் எப்போதும் மறக்க மாட்டேன். எந்த இடத்தில் அதிகாரம் நிறைந்திருக்கிறதோ, அதே இடத்தில்தான் சூதும் வஞ்சகமும் நிறைந்திருக்கும்? அப்படியிருப்பதுதானே அதிகாரத்தின் மர்மம். அதிகாரம் எப்போதும் தனிமையையும் பாதுகாப்பின்மையையும்தான் கொண்டுவரும்” என்று சொன்ன சீதாவின் குரலிலிருந்த துயரம் ராமனைக் கவலைகொள்ள வைத்தது.
“நீ அச்சம்கொள்ள எதுவுமில்லை. ராமன் இருக்கிறான், மிதிலையின் இளவரசியுடன்” என்று சொன்ன வார்த்தைகள் சீதாவை நெகிழச் செய்யவில்லை.
“என்னுடைய கவலை எல்லாம் அதிகாரத்திற்கானது அல்ல. வனத்திற்குள் வந்த பிறகு மிதிலை, அயோத்தி எல்லாம் மறந்துபோனது. தண்டகாரண்யத்தில் நானிருக்கிறேன். எனக்குள் தண்டகாரண்யம் நிறைந்திருக்கிறது” என்று சீதா சொன்ன விதம் மனம் நிறைந்து சொன்னதுபோல் இருந்தது.
“எனக்குப் புரிகிறது சீதா” என்று ராமன் சொன்னான்.
“நீங்கள் உங்களுடைய கையில் இருக்கும் ஆயுதத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று சொன்னாள்.
“அரசனுக்கு ஆயுதமும் முக்கியம்” என்று ராமன் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட சீதா, “உங்களுடைய ஆயுதத்தைப் பயன்படுத்தி யாரையெல்லாம், எவற்றையெல்லாம் அழிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“துஷ்ட மிருகங்களையும், துஷ்ட அரக்கர்களையும்தான்” என்று சொன்ன ராமனுடைய குரலில் தான் செய்யப்போகிற காரியம் பெருமைக்குரியதே அன்றி இழிவானது அல்ல என்ற தொனி வெளிப்பட்டது.
“துஷ்ட மிருகங்களையும் துஷ்ட ஆதிவாசிகளையும் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? வலிமை நிறைந்த எதிரிகளை அழிப்பதுதானே போரின் தர்மம்? தனக்கு நிகராக இல்லாதவர்களுடன் போர் செய்வது அதர்மம் என்றுதானே நீதிசாஸ்திரம் சொல்கிறது” என்று சொன்ன சீதாவினுடைய முகத்தில் அலட்சிய பாவம் படர்ந்திருந்தது.
“யார் எதிரி என்பதை நாம் முடிவுசெய்ய முடியாது. சிலரைப் பாதுகாக்கச் சிலரை அழித்தாக வேண்டும். தன் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக எதிரி நாட்டினரைக் கொல்வதைப் போன்றதுதான். ரிஷிகளும் முனிவர்களும் பிராமணர்களாக இருந்தாலும் முன்கோபிகள். அவசரக்காரர்கள். அவர்களுடைய சாபம் நமக்குத் தேவையற்றது” என்று ராமன் சொன்னான்.
லேசாகச் சிரித்த சீதா, “கொசுக்களும், அட்டைப்புழுக்களும் நிறைந்த இந்தக் காட்டில் வாழும் வனவாசத்தைவிடப் பெரிய சாபம் இனி ராமனுக்கு இருக்கப்போகிறதா?” என்று கேட்டாள்.
“சீதாவுடன் இருப்பது எனக்கு எப்படி வனவாசமாகும்?” என்று கேட்ட ராமன் லேசாகச் சிரித்தான்.
“இந்த வனவாச வாழ்க்கை எனக்கு அக்னிப் பிரவேசம் போன்றது. நான் இறப்பதற்கு முன்பாக இதுபோன்று இன்னும் எத்தனை அக்னிப் பிரவேசங்களைச் சந்திக்க வேண்டுமோ!”
“அதீத கற்பனை” என்று சொன்ன ராமன் சீதாவிடம் பேசுவதைத் தவிர்ப்பது போல நின்றுகொண்டிருந்தான்.
சீதாவுக்கு மனத்தில் என்ன தோன்றியதோ, மெல்ல நடந்து பர்ண சாலையைவிட்டு வெளியே வந்தாள். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோலிருந்தது. தன் கண்முன்னே விரிந்து பரந்து கிடந்த வனத்தைப் பார்த்தாள். வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த காற்று அவளுடைய மனத்தைக் குளிர்வித்தது. குளிர்ந்த காற்றின் சிலுசிலுப்பு வனம் முழுவதும் நிறைந்திருக்குமா, இந்த இடத்தில் மட்டும்தான் இருக்குமா?” என்று தன்னிடமே கேட்டுக்கொண்டாள். வனத்திற்குள் சிறிது தூரம் நடந்துசென்றுவிட்டுவரலாமா என்று யோசித்தாள். முதல்நாள் பார்த்த ஆதிவாசிப் பெண்களையும் ஆண்களையும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அவர்கள் எங்குத் தங்கியிருப்பார்கள், எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மனத்தில் உண்டானது. அப்போது ஒரு செங்குருவி கத்திக்கொண்டிருப்பது கேட்டது. செங்குருவி கத்துகிற சத்தம் தாயை இழந்த குழந்தையினுடைய அழுகைச் சத்தத்தைப்போல இருந்தது.
ஒருநாளுமில்லாமல் ஏன் இன்று தனக்கு ராமன்மீது கோபம் வருகிறது என்று யோசித்தாள். கோபத்தைக் குறைக்கவேண்டும் என்று நினைத்தாள். தவறு செய்கிறோமோ என்று கவலைப்பட்டாள். எதனால் இன்று இந்தக் குழப்பம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். ராமனுக்கு அரசப் பதவி போய்விட்டது. வனவாச வாழ்க்கை வாழும்படி நேர்ந்துவிட்டது என்ற ஆதங்கம்தான் கோபத்துக்குக் காரணமா? என்று தன்னிடமே கேட்டுக்கொண்டாள்.
தனக்குப் பக்கத்தில் வந்து நின்ற ராமனைப் பார்க்காததுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண் எதிரிலிருந்த பெருத்த மரங்களைப் பார்த்தாள். மேலும் இரண்டடி தூரம் முன்னே வந்தாள். ஆடும் இலைகளையும், சிறு கிளைகளையும் பார்த்தாள். குருவிகள் ஓயாமல் கத்திக்கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டாள். யானைகள் கூட்டம் ஒன்று தூரத்தில் நடந்துபோவதைப் பார்த்தாள். “யானைக் கூட்டம் போகிறது” என்று சொன்னதும் பதற்றத்துடன், “எங்கே? எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வில்லையும் அம்பையும் தயாராக்கிக்கொண்டு சீதா கையைக் காட்டிய திசையில் பார்த்தான். பத்துக்கும் அதிகமான யானைகள் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. யானைகள் தொலைவில் போய்க்கொண்டிருந்ததால் ஆசுவாசமடைந்த ராமன் “பர்ணசாலைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை” என்று சொன்னான். ஆனாலும் ராமனின் பார்வையும் கவனமும் யானைக் கூட்டத்தின் மீதுதான் இருந்தது. முக்கியமான ரகசியத்தைச் சொல்வதுபோல, “இந்த வனத்தில் கேட்கும் சிறு சத்தத்தையும் ஓசையையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில்தான் நம்முடைய உயிரின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. இங்கு இருக்கும் எறும்புகூட ஆபத்தானதுதான். ஈயைக்கூட நம்பக்கூடாது.” என்று சொன்னான்.
“ராமன் என்பதும் ராமனுக்கான அதிகாரம் என்பதும் அவனுடைய கையிலிருக்கும் ஆயுதம்தான். ஆயுதம் இல்லாத ராமனுக்கு எந்த அதிகாரமுமில்லை. ஆயுதம்தான் அதிகாரத்தைக் கொண்டுவருகிறது. போர்க்கருவிகளின் வலிமைதான் அதிகாரத்தின் வலிமை. நாம் பிறப்பதற்கு முன் பல நூறு ஆண்டுகளாக இந்த வனம் அதன் இயல்பில் இருந்துவருகிறது. இப்போது ராமனின் ஆயுதத்தால் இந்த அழகிய வனத்தில் உயிர்ப் பலிகள் நிகழப்போகின்றன. ரத்தம் கொட்டப்போகிறது. அது கதையாக, வரலாறாக மாறலாம்” என்று சொன்ன சீதாவின் முகம் சிவந்து போயிற்று. சின்ன விஷயத்திற்காக ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாள் என்று யோசித்த ராமன், “உன்னுடைய உள்ளம் எனக்குப் புரிகிறது. அதே நேரத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டியது அரச நீதி” என்று சொன்னான்.
“இப்போது நீங்கள் அரசனுமல்லர், இளவரசனுமல்லர். நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டவர்.” என்று சொன்னாள் சீதா.
“______”
“சித்திரை மாதம், சுக்ல பட்ச நவமி திதியில், புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த ராமனின் புகழ் கோசல நாட்டில் மட்டுமல்ல, இந்தப் பாரதத் தேசமெங்கும் பரவி யுகம்யுகமாக நிலைத்திருக்கப்போகிறது. அப்படி நிலைத்திருக்கப்போகும் அந்தப் புகழுக்குச் சிறு களங்கமும் வந்துவிடக் கூடாது என்பதுதான் என் கவலை.”
“எனக்கு மட்டுமா யுகம்யுகமாகப் புகழ் இருக்கப்போகிறது? முன்பெல்லாம் என்னை ராமன் என்று மட்டும்தான் அழைத்தார்கள். இப்போது ‘சீதாராமன்’, ‘ஜானகிராமன்’ என்றுதானே அழைக்கிறார்கள். என்னுடைய தலைப்பு எழுத்தாக இப்போது நீதான் இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சி நிறைந்த குரலில் சிரித்தான்.
“சீதாராமன் என்று சொன்னாலும் ஜானகிராமன் என்று சொன்னாலும் கோசல ராஜ்ஜியம் முழுவதும் ராம நாமம்தானே நிறைந்திருக்கிறது” என்று சொன்னாள் சீதா.
“நீ சொல்வது தவறு. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி என்ற கோஷத்தைவிட ஜெய் சீதாராம் என்ற கோஷம்தான் இப்போது கோசல நாட்டில் அதிகம் ஒலிக்கிறது” என்று சொன்னான்.
“நான் ஒன்று உங்களிடம் கேட்கலாமா?”
“தாராளமாக.”
“மன ஒழுக்கத்தையும் ஆத்ம குணங்களையும் பேணுகின்றவர்கள், புலன்களை அடக்கி, உலகப் பற்றை நீக்கி, கோபத்தை, தாபத்தை, பொறாமையை, சுயநலத்தை விட்டவர்கள்தானே நிஜமான முனிவர்கள்?”
“ஆமாம்.”
“வசிஷ்டர், துர்வாசர், விசுவாமித்திரர், அத்ரி முனிவர் போன்றவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான முனிவர்கள், ரிஷிகள் தங்களுடைய தவத்தினால், யாகத்தினால் அதிகாரத்தைத்தான் கேட்கிறார்கள். தான் ஆயிரம் வருஷம் வாழவேண்டும், நினைத்தது நடக்கவேண்டும், சொன்னது பலிக்கவேண்டும், அண்ட சராசரமும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், தன்னை மிஞ்சி மண்ணுலகில், விண்ணுலகில் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே யாகமும் தவமும் செய்கிறார்கள்.”
“நீ கேட்கின்ற கேள்விகளுக்கு நான் விரிவாகத்தான் பதில் சொல்லமுடியும். இப்போது அதற்கு நேரமில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து நாம் பேசலாம்” என்று சொன்னான். சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சீதா அடுத்த கேள்வியை கேட்டாள்.
“நினைத்ததற்கெல்லாம் சாபமிடுகிறார்கள். பிறகு சாபத்திற்குப் பரிகாரமும் கூறுகிறார்கள். சூழ்ச்சி செய்யாத முனிவர் என்று நான் ஒருவரையும் இதுவரை பார்த்ததில்லை. துஷ்ட பிராமணர்கள். இரும்பு உள்ளம் படைத்தவர்கள்” என்று சொன்ன சீதா எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பதுபோல இருந்தாள்.
“எந்தத் தேசத்தில் மக்கள் ஆயுதங்களை அழித்து ஏர் செய்கிறார்களோ, எந்தத் தேசத்தில் மக்கள் இன்னொரு தேசத்தின் மக்கள்மீது ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் இருக்கிறார்களோ, எந்தத் தேசத்தில் போர்ப் பயிற்சியும், போருக்கான ஆயுதங்களையும் தயாரிக்காமல் இருக்கிறார்களோ அந்தத் தேசமே புண்ணிய பூமி. அந்தப் பூமியில் நான் வாழவும், சாகவும் விரும்புகிறேன் என்று” என்று சீதா சொன்னாள்.
சீதை நின்றுகொண்டிருந்த விதமும், அவளுடைய முகத்தோற்றமும் ராமனை மனவருத்தமடையச் செய்தன. அவளைச் சமாதானப்படுத்த விரும்பிய ராமன், “சீதா நீ சொன்னதன் பொருளை நான் உணராமல் இல்லை” என்று சொன்னான். சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு நிதானமான குரலில், “போர்க்கருவிகள் தயாரிப்பதும், ஒரு நாட்டின் மீது போர்த் தொடுப்பதும் மன்னனுடைய முடிவு மட்டுமல்ல. அது அந்த நாட்டின் மக்களுடைய விருப்பமாகவும், முடிவாகவும் இருக்கிறது. அதனால்தான் போருக்குப் போகும்போது வாழ்த்தி அனுப்புகிறார்கள். வெற்றிபெற்று வரும்போது ஆர்ப்பரித்து வரவேற்கிறார்கள். தோற்றுப்போகும் மன்னனை எந்த நாட்டு மக்களும் விரும்புவதில்லை. ஒவ்வொரு போருக்குப் பின்னாலும் உந்துசக்தியாக மக்களின் ஆதரவுதான் இருக்கிறது. மக்களின் ஆதரவின்றி எந்த மன்னனும் வெற்றி அடைய முடியாது. இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், பிறப்பின் பெயரால் பிறரை, வேறு நாட்டவரை மட்டுமல்ல, சொந்த நாட்டு மக்களையே அழித்தொழிக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் காலம் நெடுகிலும் நடந்திருக்கும் உண்மை” என்று சொன்ன ராமனின் குரலில் நிதானம் கூடியிருந்தது. அவன் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சீதா, “வனவாசம் முடிந்து நீங்கள் அமைக்கப்போகும் ராம ராஜ்ஜியத்திலும் இப்படித்தான் இருக்குமா? நடக்குமா?” என்று கேட்டதற்கு ராமனால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
“இந்தப் பூமி தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை யாருக்குமே சொந்தமாக இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. இந்த உண்மை சாதாரண மனிதனுக்கு மட்டுமல்ல, நாடாளும் மன்னர்களுக்கும், நிர்வாணமாகத் திரிகிற முனிவர்களுக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை. இந்த சீதா ஏரால் உழப்பட்ட மண்ணிலிருந்துதான் கண்டெடுக்கப்பட்டாள். ஒருநாள் பிளவுண்ட மண்ணுக்குள் மண்ணாக மறைந்துபோய்விடுவாள். இந்த மண் ஒவ்வொருவருக்கும் ஒரு காலத்தை நிர்ணயித்திருக்கிறது. மண் நிர்ணயித்த காலத்தை மீறிச் சாதாரண மனிதன் மட்டுமல்ல, நாடாளும் மன்னரும் கூடுதலாக ஒரு கண நேரம்கூட வாழ்ந்திடமுடியாது. மனிதர்கள் நிச்சயமான மரணத்தைத் தவிர்த்து, நிச்சயமற்றவற்றை மட்டுமே பேசியும் சிந்தித்தும் கனவும் கண்டுகொண்டிருக்கிறார்கள். நாம் வாழும் வாழ்வு – தாய் தந்தை தந்தது மட்டுமல்ல, நிலம், நீர், காற்று, சூரியன் இந்த வனமும் தந்ததுதான்.” என்று சொல்லி முடித்தபோது சீதாவினுடைய முகத்தில் அமைதியும் சாந்தமும் நிறைந்திருந்தன.
“இந்த ராமனுக்கு சரயு நதியில்தான் மரணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீ அறிய மாட்டாய் சீதா” என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்ட ராமன் “நான் வாழும் வாழ்க்கையும், என்னுடைய ஆயுதங்கள் பிரயோகிக்கப்படும் விதமும், சத்திரியனுக்கு வேதம் சொல்லியிருக்கிற தர்மத்தின் பாதையாக மட்டுமே இருக்கும். வெகுநேரமாகிவிட்டது நான் போய்விட்டு வருகிறேன். முனிவர்களுடைய நல்லாசியைப் பெற்றுவருகிறேன். நாளை காலையில் நாம் அகத்தியரின் ஆசிரமத்திற்குச் செல்கிறோம். மறுநாள் பஞ்சவடிக்குச் செல்கிறோம். இடங்கள் மாற மனமும் மாறும்” என்று சொன்ன ராமன் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
ராமனைச் சீதா மறிக்கவில்லை.
“விலங்குகளையும் ஆதிவாசிகளையும் கொன்றுதான் சத்திரிய தர்மத்தைக் காக்க வேண்டும் என்றால், எனக்கு அந்தச் சத்திரிய தர்மமும் வேண்டாம், ரிஷிகளின், முனிவர்களின் ஆசீர்வாதமும் வேண்டாம். ராமன் தனக்கான அடையாளத்தைப் பிறருடைய ரத்தத்திலிருந்து வரையப்போகிறான். கொலைகளைச் செய்பவர்களே உலகில் அதிகமாகப் புகழை ஈட்டுகிறார்கள். அத்தகைய புகழைத் தேடியே ராமனும் போகிறான். மனிதர்களுக்குத் தேவை உண்மைகளல்ல, பொய்கள். கற்பனைகள், அதீத கற்பனைகளும் அதீதமான பொய்களும் எந்த மனிதனை முன்வைத்துக் கட்டப்படுகின்றன பின்னாளில் அவனே கடவுளாக்கப்படுவான்” என்று கசப்பு மிகுந்த குரலில் சொன்னாள்.
ஒரு காட்டெருமையின் மரண ஓலம் கேட்டதும் சீதா சொன்னாள்: “தண்டகாரண்யத்தின் அழிவு தொடங்கிவிட்டதுபோல.”