வல்லூறு

–மழை மிக மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது. கமாண்டர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் குதிரையைவிட்டு நிதானமாக இறங்கினார். கருநீலக் கண்கள். அகன்ற நெற்றி, படிய வாரிய தலை, பின்புறம் சுருண்டு கிடக்கும் முடிக்கற்றைகள். ஆரஞ்சுச் சுளையைக் கீறியது போன்ற உதடுகள். கீழ்த்தாடையில் தொங்கும் தசை. ஒரு கனவான் என்பதான தோற்றம். அவரின் ராணுவக் கண்கள் சுற்றிலும் இடத்தை நோட்டம் இடும்போதே மனம் அதனை ஆராயத் தொடங்கியது. ஒரு தென்னந்தோப்பை வளைத்து, நடுவில் இருந்த மரங்களை வெட்டி மைதானமாக்கி இருந்தார்கள். புத்திசாலித்தனம்தான். பயிற்சி எடுப்பதற்கு இப்படியான இடம்தான் பாதுகாப்பு. ஒரு வேலையாள் ஓடி வந்து அவரின் குதிரை முன்பு மண்டியிட்டுக் குனிந்தான். கமாண்டர் அவன் முதுகில் கால் வைத்து இறங்கினார். ஓர் ஆங்கிலேயன்.  இளம் வயதுக்காரன் துப்பாக்கி தோளில் தொங்க ஓடி வந்து சல்யூட் அடித்தான். “போட்டி நடந்திட்டு இருக்கு கமாண்டர்” அவர் தலையசைத்துவிட்டுத் தென்னம் ஓலைகள் வேய்ந்த மேடையை நோக்கிச் சென்றார். அதன் மரப்படிகளில் டப் டப்பெனச் சத்தம் எழ மேடை ஏறினார். அங்கே அமர்ந்திருந்த அந்த மனிதன் எழுந்து நின்று விரைப்பாய் சல்யூட் அடித்தான். இவர் தலையைச் சிறிதாக ஆட்டி அதனை ஏற்றுக்கொண்டார். ”இறுதிச் சுற்றுப் போட்டி” என்றான் அந்த மனிதன். இவர் ஏதும் சொல்லாமல் அமைதியாகப் போட்டியைப் பார்த்தார். ஒரு குதிரையில் சென்றபடியே முன்னும் பின்னுமாக நடப்பட்டிருக்கும் வாழை மரங்களை வரிசையாகச் சுட வேண்டும். ஓர் இளைஞன் கட்டுமஸ்தானவன். குதிரையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். விசில் அடித்ததும் குதிரையை அவன் கால்களால் தட்ட அது விசைகொண்டு ஏகியது இவன் முதல் மரத்தை மிக எளிதாக சுட்டுவிட்டுக் கண நேரத்தில் துப்பாக்கியை மடக்கிக் குண்டை நிரப்பி அடுத்த மரத்தை லாவகமாகச் சுட்டுவிட்டு அதற்கடுத்த மரத்தை அதற்கடுத்த மரத்தை என வரிசையாகச் சுட்டுச் சென்றான். “இவன்தான் சிறப்பாகச் செயல்படுகிறான். வேகம். திட்டமிடல், மனக்குவிப்பு இவனிடம்தான் சிறப்பா இருக்கு” அந்த மனிதன் சொல்லவும் கமாண்டர் கேட்டுக்கொண்டார். அவனை மேடைக்கு அழைத்தார்கள். அவன் நிதானமாக வந்து துப்பாக்கியை மேலே உயர்த்தி உடலை விரைத்து சல்யூட் அடித்தான். கமாண்டர் அவர் கரங்களால் ஒரு பதக்கத்தைக் குத்தினார். அவன் முகம் இன்னமும் வியர்த்திருந்தது. ”தளர்வாகு பையா. உன்னைப் பற்றி நான் வீட்டிலிருந்து கிளம்புபோதே சொன்னார்கள்” என்றார் கமாண்டர். அருகில் இருந்த மனிதன் புன்னகைத்தான். அந்த இளைஞனும் ஸ்நேகமாய்ப் புன்னகைத்தான். “டூப்ளேவின் முதுகெலும்பை உடைக்க இவன் ஒருவன் போதும். இவன் போல் ஆட்களைப் பிடி க்ளைவ். ப்ரஞ்சுப் படைகளை பாரிஸுக்கே துரத்திவிடலாம்” “இவன் போல் ஒருவன் கிடைக்க வாய்ப்பில்லை கமாண்டர்” ”இவனை உனக்கு ஏற்கனவே தெரியுமா க்ளைவ்?” கமாண்டர் கேள்வியோடு இருவரையும் பார்த்தார். ராபர்ட் க்ளைவ் புன்னகையோடு, ”தெரியும் கமாண்டர். அது ஒரு முக்கியமான சந்திப்பு. இவனை நான் முதன் முதலாகத் தஞ்சையில்தான் பார்த்தேன். அதுவும் எமன் என் முகத்தின் முன்னே கத்தியை நீட்டிக்கொண்டிருக்கும்போது…” “ஓ பெரிய கதையாக இருக்கும் போல் இருக்கிறதே இன்றிரவு நாம் இதைப் பேசுவோம்”, “சரி பையா நீ சென்று வா… ஆமாம் உன் பேர் என்ன சொன்னாய்?” “யுசுப் கான் கமாண்டர்” என்றான். “மருதநாயகம் என்பது உன் செல்லப் பெயரா?” என்றான் ராபர்ட் க்ளைவ். அது பெற்றோர் வைத்த பெயர் பிரபு” என்றான் யூசுப் கான்.

ஒரு பெரிய வல்லூறு. தன் உடல் வலுவைத் திரட்டி விறிச்சிடுகிறது. காற்றில் படபடவென சிறகுகள் அடிக்கும் ஓசை. ஆனால், பறக்க இயலவில்லை. அது ஒரு கூண்டு. பறக்க எத்தனிக்கையில் உதிரிறும் இறகுகள் கூண்டுக்குள்ளும் வெளியிலும் சிதறியிருக்கிறது. வல்லூறு பெருங்கோபத்தில் வீறிடக் கூண்டு உடைகிறது. வானம் மிகப் பெரிய நீல வானம். அதில் ஏறிப் பறக்கிறது. இந்த பூமி அத்தனை சின்னதாகத் தெரிகிறது. இறகடிப்பதை நிறுத்திய கணம் வானில் அப்படியே கொஞ்சம் நேரம் மிதக்கிறது. சட்டென இறகுகள் காணாமல் போய்விட்டன. பூமியை நோக்கி வேகமாக மிக வேகமாக வல்லூறு சரிகிறது. வல்லூறின் முகத்தில் தன் முகம் இருப்பதைப் காண்கிறான். தடாலெனப் பூமியில் மோதும் விநாடி, வெண்ணிற மேக அலைகள். விழிப்புத் தட்டிவிட்டது. விடிகாலைக் குளிர்ச்சி. குக்கூவின் ஓசை.  இது எந்த இடம். சலுப்பா. இல்லை தஞ்சை அருகே ஒரு கேம்ப். ஸ்டெய்ச்சியில் தன்னுடைய மர வீட்டில் இருப்பது போல் ஒரு கணம் உணர்ந்தான். இது என்ன கனவு இதற்கு என்ன அர்த்தம். தெரியவில்லை. க்ளைவுக்கு அவன் பால்யத்தில் மார்க்கட் ட்ரேடனில் இருந்த புனித மேரி ஆலயத்தின் கோபுரத்தின் மேலே ஏறி மழை நீர் தூம்பின் மீது நின்றபடி ஊராரை அழைத்து கலாட்டா செய்தது நினைவுக்கு வந்தது. அந்தக் காட்சிதான் கனவில் வந்தது. மேலிருந்து வேகமாகக் கீழே விழும் கற்பனையும் கீழே நோக்கும்போது புவி எப்படி இருக்கும் என்ற சித்திரமும் அங்குத் தோன்றியதுதான். எத்தனை வருடங்கள் கழித்துத் தண்ணீரில் மீன்கள் எழுந்து வருவதுபோல்  கனவில் அது மேல் எழுந்து வருகிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது. சில நாட்களாகவே கனவுகள் வித்தியாசமாகத்தான் வருகின்றன. சில நாட்கள் முன்பு டெர்ன் நதியில் சிங்கங்கள் நீந்திக்கொண்டிருப்பதுபோல் கனவு வந்தது. இவன் இது போலவே திடுக்கிட்டு விழித்தான். பின்பு ஒருநாள் யானை ஒன்று மாலை போடுவது போலக் கனவு. இன்று வல்லூறு கனவில் வருகிறது. இக்கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று இங்கு யாரிடமாவது கேட்கலாம். வேண்டாம். இவர்கள் இந்தியர்கள். இவர்களின் அகம் வேறு. என்னுடைய அகம் வேறு. இவர்கள் இவர்களின் தொன்மங்களில் இருந்து எதையாவது சம்பந்தமில்லாமல் சொல்லக்கூடும். அது தேவையில்லாத குழப்பத்தை அச்சத்தைத்தான் நமக்குக் கொடுக்கும். நான் போதுமான அளவு குழப்பத்தில் இருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டான் க்ளைவ்.

துரை எழுந்துவிட்டாரா என்று பார்க்க வந்த பட்லர் முருகப்பனை அழைத்து, ஆட்டுக்கறி மிளகிட்டு வறுக்கச் சொன்னான். இங்கிலாந்தில் இருந்துகொண்டு வந்த ப்ரெட்டையும் ஒயின் பாட்டிலையும் முருகப்பன் கொண்டுவந்து வைத்தான்.  இவன் கார்க்கைத் திருகு போட்டு உருவிச் செந்நிறத் திரவத்தை ஒரு அழகான கண்ணாடித் தம்பளரில் ஊற்றினான். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, குதிரையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பினான். மதிய வெயில் வானில் ஏறுவதற்குள் தஞ்சையை நெருங்கிவிட வேண்டும். கமாண்டர் லாரன்ஸ் அங்கே காத்திருக்கிறார். சுற்றிலும் மரங்களாய் இருந்த ஆள் அரவமற்ற வனம். அதன் நடுவே செம்பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் பாதை. அதில் குதிரை சீரான தாள லயத்துடன் சென்றுகொண்டிருந்தது. என்னென்னவோ எண்ணங்கள் மனதில் அலைமோத க்ளைவ் சென்றுகொண்டிருந்தான். திடீரெனக் குதிரை தடுமாறிப் பிளிறியபடி விழுந்தது. க்ளைவ் தூக்கி வீசப்பட்டான். வேகமாய்ப் போய் விழுந்ததில் தலையில் நல்ல அடி. சில விநாடிகள் கிர்ரென இருந்தது. குதிரை விழுந்த இடத்தில் புழுதி பறந்தது. புழுதியின் தெளிவில் நான்கு பேர் வாட்களுடன் ஓடி வந்தார்கள். இருவர் கையில் வேல் இருந்தது. க்ளைவ் துப்பாக்கியைத் தேடினான். அது அவர்களுக்கு இரண்டடி தூரத்தில் கிடந்தது. இவன் போவதற்குள் அவர்களுள் ஒருவன் அதை கையில் எடுத்துக்க்கொண்டான். அவர்கள் வெற்று மேலுடன் வேட்டி மட்டுமே கட்டியிருந்தார்கள். அதுவும் மல்யுத்தம் செய்யப்போவது போன்ற வேட்டிக்கட்டு. தலையில் உரிமாலை இருந்தது. மீசை பெரிதாக வைத்திருந்தார்கள். எல்லோரும் குடுமி போட்டிருந்தார்கள். க்ளைவ் தன் வாளில் கை வைத்தான். அவன் உடலில் இயல்பாகத் திரளும் வன்முறையின் அமுது ஊறியது. சிரிப்புடன் உடல் விரைக்க வாளை உருவிச் சண்டையிட்டான். மனதில் மார்க்கட் ட்ரேனில் தன் நண்பர்களோடு இணைந்து ஒரு க்ரூப்போடு வாட்சண்டை இட்டது நினைவுக்கு வந்தது. பட படபடவென மோதின வாட்கள். எதிர்பாராத சமயத்தில் பக்கவாட்டில் நின்றவன் இவன் இடுப்பில் வேலை பாய்ச்சினான். க்ளைவ் தடுமாற இருவர் கையில் இருந்த வாளைத் தட்டிவிட்டார்கள். கையில் உதிரம் தெறிக்க வாள் கீழே விழுந்தது. ஒருவன் கத்தியை இவனின் முகத்துக்கு நேரே நீட்டினான்.

“மிலேச்சனே! உயிர் மீது ஆசை இருந்தால், உன்னிடம் இருக்கும் காசுகளை கொடுத்துவிட்டு ஓடிப்போ” இவன் தன்னிடம் காசு இல்லை என்பதுபோல் தலையாட்டினான். ஒருவன் இவனைச் சோதனையிட்டான். க்ளைவின் ஜோப்பில் சிறிது சில்லறை மட்டும் இருந்தது. அவன் க்ளைவின் முகத்தில் காறித் துப்பினான். “இவனை வெட்டி வீசுங்கள். எதற்கும் உதவாத வெள்ளைப் பன்றி” ஒரு குடுமி கத்தினான். அவன் வெட்டுவதற்கு வாளோங்கிய போது ஒரு வேல் பாய்ந்து வந்து அவன் முதுகில் பாய்ந்தது. அவர்கள் கோபமாய்த் திரும்பினார்கள். அங்கே ஓர் இளைஞன் குதிரையில் நின்றுகொண்டிருந்தான். அவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான். “என் தம்பிகளே, வெள்ளையர்கள் நம்முடைய விருந்தினர்கள். விருந்தினர்களுக்கு இப்படித்தான் மரியாதை கொடுப்பீர்களா?” என்றபடியே வாளை உருவியபடி தடதடவெனத் தாக்கினான். சுழன்று சுழன்று அடித்தான். அவன் கால் வைக்கும் லாவகம், கைவீசும் லாவகம். வாளைச் சுழற்றும் வேகம். ஒருகையில் இருந்து இன்னொரு கைக்கு வாளை மாற்றும் அநாயசம். எவரையும் கொல்லாமல் வெறுமனே தாக்கி விரட்டிவிடும்படியான தாக்குதலில் வெளிப்படும் நுட்பம் எல்லாவற்றையும் ஆச்சர்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் க்ளைவ். சற்று நேரத்தில் திருடர்கள் களைத்தார்கள்,. ஆளுக்கு ஒரு திசையாய் ஓடினார்கள். க்ளைவ் சோர்வாய் எழுந்து நின்றான். “நன்றி வீரனே… உன் பெயரென்ன?” “யுசுப் கான் துரை அவர்களே… மருத நாயகன் என்றும் சொல்வார்கள்” அவன் தெளிவாக ஆங்கிலம் பேசினான். உனக்கு ஆங்கிலம் தெரியும். “ப்ரஞ்சும் தெரியும். அரபியும் தெரியும்” என்று சொன்னான். “நீ செய்தது ஒரு பெரிய உதவி. இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் யுசுப் கான்” “ஆகட்டும் துரை. நீங்கள் எங்கள் விருந்தினர். உங்களைக் காப்பது என் கடமை” க்ளைவ் புன்னகைத்தான். “உன்னை நான் மீண்டும் சந்திப்பேன் என நினைக்கிறேன்” என்றான் க்ளைவ். “வாய்ப்பு உண்டு என்றுதான் நானும் நினைக்கிறேன்” என்று சிரித்தான் யுசுப் கான்.

புலிக்கோட்டை

இந்தக் கதை பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்ததாக இருக்கலாம். இக்கதையின் மூல வடிவை மீரட் அருகிலிருந்த சர்தானா மாகாணத்தை ஆண்டவரும் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரே கிறிஸ்துவ அரசியும் நச்சனா எனப்படும் வட இந்திய சதிராட்டக்காரருமான பேகம் சாம்ருவின் கணவரும் அரசருமான வால்ட்ர் ரெயின்ஹார்ட் சாம்ரே என்பவர்தான். அவரின் சகோதரி வயிற்று மகனும் அவரின் மருமானுமான ஆர்த்தர் ரெயின்ஹார்ட் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் என்று அவர் இதைக் குறிப்பிடுகிறார். வெள்ளையர்களுக்குப் பொழுது போகவில்லை எனில் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு வேட்டைக்குச் செல்வது ஒரு பொழுதுபோக்கு. இந்தியக் காடுகள் பற்றியோ அதன் குணாதியசங்கள், வாழ்வுயிரிகளின் குணங்கள் என எது பற்றியும் அறிதல் இல்லாமல் ஒரு மரக்கட்டைத் துப்பாக்கியை நம்பி, களத்தில் குதிப்பதுதான் பெரும்பான்மையானவர்கள் வழக்கம். அப்படி மழை கொட்டித் தீர்க்கும் ஓர் ஆவணி மாதத்தில் துப்பாக்கியைத் தோளில் போட்டுக்கொண்டு களத்தில் இறங்கினான் ஆர்த்தர் ரெயின்ஹாட். இனி கதை அவன் சொல்லில் விரிகிறது…

நாங்கள் மிளாக்களைத் தேடிக்கொண்டிருந்தோம். சாரல் மெல்லக் கொட்டினாலே புலி வேட்டையில் இறங்கிவிடும். அதற்கு வெயில் அல்லது வெளிச்சம்தான் பிடிக்காது. மழையைப் புலி நேசிக்கும். வனம் மழையில் துளிர்க்கும் என்பதால் சின்னஞ்சிறு குட்டிகளைக்கூட அழைத்துக்கொண்டு மான்கள் உற்சாகமாய்ச் சுற்றும். மேலும், மழை புலியின் வாசனையை மானின் மூக்கிலிருந்து அழிக்கும். அதனால் மான்கள் ஏமாறும். புலிகள் சுற்றும் என்று தெரிந்தாலும் மிளாக்கள் வராமல் இருக்காது. அதனால் அதைத் தேடிக்கொண்டிருந்தோம். மழை சற்றே பெருசானது. நான் ஓர் அரச மர நிழலில் ஒதுங்கினேன். குதிரை கனைத்தது. என்னோடு வந்தவர்கள் சற்றுத் தள்ளி ஒரு புங்க மர நிழலில் நின்றுகொண்டிருந்தார்கள். என் குதிரை கனைத்துக்கொண்டே இருந்தது. ஓடுவதற்குத் தயார் என்பது போன்ற சமிக்ஞை. நான் அதன் கழுத்தில் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருந்தேன். மெல்லிய உறுமல் கேட்டது. அதை உணர்வதற்குள் சராலென என் மீது ஒரு வேங்கை பாய்ந்தது. கால்கள் அனிச்சையாய்க் குதிரையின் வயிற்றில் தட்ட குதிரை வெறிகொண்டு ஓடத் தொடங்கியது. என் நண்பர்களின் கூச்சல் ஒலி, துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டது. வேகமாய் ஒரு சாலமர அடியில் குதிரை பாய கீழ்க் கிளை என் நெற்றியில் பட்டுக் கிறுகிறுவென வந்தது. அப்படியே குதிரையிலேயே சரிந்தேன். ஏதேதோ நினைவுகள். ஊரில் படகில் செல்வதுபோல… பிறகு படகு கப்பலாகிறது. பிறகு அது ஒரு குதிரை. முற்றிலும் நினைவிழந்தேன். எழுந்தபோது நன்கு இருட்டியிருந்தது. இது எந்த இடம்? தெரியவில்லை. ஏதோ ஒரு பெரிய மதில் சுவர். நிச்சயம் ஏதும் அரண்மனையாய் இருக்கவேண்டும். உள்ளே போகலாமா வேண்டாமா யோசனையோடு நின்றுகொண்டிருந்தேன். தூரத்தில் சிறு வெளிச்சம் தெரிந்தது. “யாரு?” இளம் பெண் குரல். குதிரை மென்மையாகக் கனத்தது. வெளிச்சம் மீண்டும் உள்ளே சென்றுவிட்டது. பத்து நிமிடம் கழித்து மீண்டும் வெளிச்சம் வந்தது. இம்முறை மிக நெருங்கி வந்தது. கரிய ஆண் ஒருவன் கையில் தீவட்டியுடன் வந்தான். ஆமணக்கு எண்ணெய் மணக்கும் பந்தத்தை என் முகம் முன் காட்டி யாரு சாமி நீங்க என்றான். நான் ஆங்கிலேயன் என்பதில் கொஞ்சம் குழப்பம். ஆனால், பயமும் மரியாதையும் இருந்தது குரலில்… நான் யாரெனச் சொன்னேன். “அவரை உள்ளே வரச் சொல்” மீண்டும் அதே பெண் குரல். அது அத்தனை இனிமையாய் இருந்தது. அவளும் இங்குதான் இருக்கிறாள். “இல்லை நான் போகணும். தேடுவாங்க” அவள் முன்னே வந்தாள். பந்தத்தின் ஒளியில் அவள் முகத்தைக் கண்டேன். பொன்னில் மினுங்கல் இருப்பதைப் போன்ற பளபளப்பான சருமம். கருவண்டு விழிகள். ரசமூறும் உதடுகள். நான் முதன் முதலாய் ஓர் இந்தியப் பெண்ணிடம் தன் வசம் இழந்தேன். “தேடுவாங்க”. அவள் சரளமாய் ஆங்கிலத்தில் பேசினாள். “மழை இரவில் தனியனாய் எப்படிச் செல்வீர்கள். உங்களைப் பார்த்தால் களைத்து இருப்பதைப் போல் இருக்கிறது. உள்ளே வாருங்கள். ஓய்வு எடுத்துவிட்டு நாளை செல்லுங்கள்” அது கிட்டதட்ட ஒரு கட்டளை. ஆனால், அது அத்தனை அன்பான குழைவான குரலில் இருந்தது. என்னால் மறுக்க இயலவில்லை.

அரண்மனைக்குள் நுழைந்தேன். மழை வாசம் எங்கும் நிறைந்திருந்தது. சிறு சிறு பூச்சிகள் முகத்தில் மோதின. கட்டடத்தின் முன்புறம் ஒரு ஆலமரம் இருந்தது. அதன் இலைகள் தரை எங்கும் வீழ்ந்திருந்தன. பல ஆண்டுகளாய்ப் பராமரிக்கப்படாத இடம் போல் எங்கும் கோரைப் புற்கள். கோட்டை மதில் சுவர்களில் ஆலம் வித்துக்கள், குதிரைப்புற்கள். உள்ளே செல்லும் படிக்கட்டு சிதிலமடைந்திருந்தது. நான் குதிரையை மரத்தடியில் கட்டினேன். இது கோட்டையின் பின்பக்கமாய் இருக்கவேண்டும். பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதுபோல் தோன்றுவது ஏன் என்று குழம்பியவனாய் கேட்டேன். இது என்ன அரண்மனை அவள் திரும்பாமல் சொன்னாள். இது ஷேரகிளா. அதாவது புலி அரண்மனை. நீங்கள் இப்போது சஹ்ரன்பூரில் இருக்கீங்க. நான் இந்த வீட்டுப் பணிப்பெண். இங்க ஒரு முதிய பெண்மணி மட்டும் இருக்காங்க. அப்புறம் சில புலிகள் இருக்கு.  எத்தனை இருக்கு. நாலு சில சமயம் அஞ்சு. எனக்குக் கணக்கு சரியா தெரியல. எல்லாப் புலியும் ஒரு புலிதான் என்றவள் முறுவலித்தாள். எனக்கு அங்கு ஓர் அறை கொடுத்தார்கள். இரவு உண்பதற்குப் பழங்கள், குதிரை மாமிசம் மற்றும் கொஞ்சம் முந்திரி சாராயம் தந்தார்கள். பருகியவன் அசதியில் அப்படியே தூங்கிவிட்டேன்.

யாரோ என் மார்பை வருடுவது போல் இருந்தது. சூடான மூச்சு. நன்கு பழகிய வாசனை. ஆம் பசுந்தழை வாசனை. புலிதான் என்னை முகர்கிறது. கண்களைத் திறக்க முடியவில்லை. இல்லை இது பெண்ணின் விரல்கள். அவள் ஆமாம். மனம் பரபரக்க்க் கண் விழித்தேன். யாருமே இல்லை. கனவா இது. இல்லை நிச்சயமாய் உணர்ந்தேன். எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். எங்கும் இருள். வெளியே குதிரை திமிறும் ஓசை. தொலைவில் எதிரில் உள்ள நெடிய மண்டபத்தில் சிறு மங்கலான வெளிச்சம். அவள்தான் நடந்துகொண்டிருந்தாள். கொலுசொலிகூடக் கேட்டது. உற்றுப் பார்த்தேன். அது ஒரு புலி. இருள வெளிச்சம் போல் நடக்கும் புலி. இல்லை அவளா அது. எனக்குத் தலை வலித்தது. மீண்டும் வந்து படுத்துவிட்டேன். எப்படியோ உறங்கினேன்.

விடிந்தபோது அவள்தான் வந்து எழுப்பினாள். போய் நீராடி வாருங்கள். உண்டுவிட்டுப்போய் அரசியைப் பார்க்கலாம். நான் அங்கேயே இருந்த குளத்தில் குளித்தேன். ஆடைகள் அணிந்துகொண்டேன். உண்பதற்குக் கோதுமைக் கஞ்சியும் வெங்காய வறுவலும் இருந்தன. கோழி முட்டையும் இருந்தது. சிறிது ஒயின் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

சாப்பிட்ட பின்பு அரசியைப் பார்க்கச் சென்றோம். அவர் ஓர் உலர்ந்த சருகுபோல் படுக்கையில் கிடந்தார். வயது நூறுக்கும் மேல் இருக்கலாம் என்று தோன்றியது. வா மகனே இடிந்த கோட்டையின் பழம்பெருமைக்கும் முடிந்த வரலாற்றின் எச்சத்துக்கும் நான் ராணி. இந்த வறியவளைப் பார்க்க வந்திருக்கும் உனக்கு அன்பு. “நான் வழிமாறி வந்துவிட்டேன் தாயே.. உங்களுக்கு உபத்திரவம் கொடுக்கும் எண்ணம் எனக்கில்லை” என்றேன். “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று முணுமுணுத்தார் அரசி. “நான் கிளம்ப அனுமதியுங்கள் தாயே” “கிளம்புவதாவது. நீ என் விருந்தினன். மூன்று நாட்களாவது விருந்துண்ணாவிட்டால் அந்தப் பாவம் எனக்கல்லவா” “மன்னிக்கவும் ராணி…” அவள் காதில் வாங்காமல் இச்சா இன்று மாலை நாச்சு நடனத்துக்கு ஏற்பாடு செய்” என்றாள். “சரிங்க ராணி” என்றாள்.

இது என்ன அரண்மனை. இங்கு எந்தப் பொருளிலுமே உயிரில்லை. எதிலும் ரதி இல்லை. ஆள் நடமாட்டமே இல்லாத அரண்மனை. இவனுக்குத் திகிலாக இருந்தது. மதியம் அவள் உணவு பரிமாற வந்தபோது கேட்டான். நாச்சு நடனம்னா என்ன? “ஒரு மிலேச்சன் உனக்கு இது தெரியாதா?” உங்களைப் போன்ற கனவான்களை மகிழ்விக்க எங்களைப் போன்ற எளிய பெண்கள் ஆடும் சதிராட்டம்.” “நீ ஆடுவியா?” அவள் வாய்க்குள் சிரித்தாள்.  ராணி ரூப்மதி கேள்விப்பட்டிருக்கியா… மல்வா சுல்தானின் அரசி. அவளும் ஒரு காலத்தில் நாச்சோ ஆடினவள்தான். இந்த உலகத்திலேயே அவளை மாதிரி நாச்சோ ஆடறவங்க இல்லைன்னு சொல்வாங்க. நான் அவளைவிட நல்லா ஆடுவேன். “ராணி ரூப்மதி கேள்விப்பட்டிருக்கேன். அவளோட அழகில் மயங்கிச்சிவந்து. பேரரசர் அக்பர் மாளவத்தின் மீது படையெடுத்தார்னு சொல்வாங்க.” இதைக் கேட்டதும் அவளின் கன்னம் சிவந்தது. போரில் சுல்தான் பாஸ் பகதூர் தோற்றதும் அவ தற்கொலை செய்துகிட்டா இல்ல…” “அது அப்படி இல்ல… “” பின்ன” சரி விடு அது பழைய கதை. சாப்பிட்டுவிட்டுப் போய்த் தூங்கு. இங்க நிறைய புலி சுத்துது. வெளியே வராத என்றபடி சென்றாள்.

இரவு வந்தது. நான் பேரரசி முன் அழைத்து வரப்பட்டேன். எங்கும் இருள். ஆங்காங்கே பந்தங்கள் இருந்தன. அரசியின் தலைமாட்டில் மேலே ஒரு விளக்கு எரிந்தது. நடனமாடும் வட்டத்துக்கு அருகே ஒரு பந்தம். எனக்குப் பின்புறம் பந்தம். இச்சா நடனத்தை தொடங்கினாள். முதலில் மோர் நாச் எனப்படும் மயில் நடனம். பெண் மயிலை வசீகரிக்க ஆண் மயிலாடும் கூத்து. இவன் முந்திரி சாராயத்தைப் புசித்தபடியே பார்த்தேன். அவள் கண்களில் பரவும் காமம் அதில் மெலிதாய்த் துடிக்கும் அழைப்பு. நான் அவளையா நடனத்தையா எதை ரசிப்பது எனத் தெரியாமல் தவித்தேன். இப்போது கிழவியின் அருகே ஒரு புலி அமர்ந்திருந்தது. அவள் அதன் தலையை வருடிக்கொண்டிருந்தாள். இச்சா ஆடிக்கொண்டிருந்தாள். மனம் முழுக்க மதியம் அவள் சொன்ன கதை. ரூப்மதியின் எண்ணங்கள். அவள் மயில்போல் சுழன்று வந்து என் மடியில் அமர்ந்தாள். சிறு முத்தம். அடுத்த நடனம் தொடங்கியது. இது பதங் நாச். அதாவது பட்டம் விடுபவனுக்கும் பட்டத்துக்குமான ஆட்டம்.  அவள் காற்றுப்போல் பட்டம்போல் வளைந்து வளைந்து ஆடினாள். அவளின் சிறுவளைவில் என்னுள் காமம் துளிர்த்தது. கிழவியைப் பார்த்தான். அவள் அங்கில்லை புலி இருந்தது. நான் சாராயத்தைப் பருகிந்னேன். ஆட்டம் தொடர்ந்தது. பட்டம் மெல்ல காற்றில் இறங்கி தள்ளாடித் தரையில் அமர்வது போல் நளினமாய் இவன் இருபுறமும் காலிட்டு அமர்ந்தான். இதழ்கள் பொருந்தின. மதுவை எடுத்து ஊட்டினாள். நான் நிலையிலேயே இல்லை. ரூப்மதி ரூப்மதி எனப் பிதற்றினேன். அவள் எழுந்து நடன்மிட்டாள். இது நடனமல்ல வெறும் காம உரசல். அவள் உடல் முழுதுமையும் என் மீது தேய்த்தாள். நான் வசமிழந்தேன். அவள் முகத்தை பிடித்தேன். ரூப்மதி ரூப்மதி என்றேன். அவள் முகமெல்லாம் மலர பாஸு மேரே சுல்தான் என்றாள். இருவரும் ஆரத் தழுவினோம். இவள் உடல் குழகுழவென ஆனது. பச்சைப் புல் வாசம். புலியின் வாசம். நான் புலியைத் தள்ளிவிட நினைத்தேன். இருவரும் கட்டி உருண்டோம். வீடெங்கும் புலிகள் நடந்தன. இறுக இறுக இறுக அந்த உடல் தளர்ந்தது. இது ஐயோ அந்தக் கிழவியின் உடல். அப்படியானால் இவள் அந்தக் கிழவிதானா… புலியும் இவள்தானா… ரூப்மதி யார் அவள் இந்தக் கிழவியா? அதாவது இந்த இச்சா எனக்குப் புரட்டிக்கொண்டு வந்தது. ஓவென வாந்தி எடுத்தேன். மறுநாள் நான் கண் விழித்தபோது நன்கு விடிந்திருந்தது. ஒரு பாழடைந்த கட்டடத்தில் கிடந்தேன். என்னைத் தேடி பேகம் சம்ரூவின் படையினர் வந்திருந்தனர்.