“பொணம்… பொணம்…”

கேசவன் மீண்டும் போதையில் அரற்றினான். எனக்கு மேலும் சலிப்பு மேலிட்டது. நாற்காலியில் நன்கு சாய்ந்து தலையைப் பின்னுக்குத் தொங்கவிட்டுச் சிலநொடி அண்ணாந்து வெறித்தபடியிருந்தேன். தலைக்கு மேல் வெளிர்நீல ஒளியுருண்டைகள் பிரத்யேக ஒழுங்கோடு சுழன்றுகொண்டிருந்தன. உற்று நோக்க நோக்க நானும் அதே விசையில் சுழல்வதாய்த் தோன்றிற்று. மெலிதாக ஒலிக்கும் மேற்கத்திய இசையோ அறையின் இருட்டை வெட்டி மறையும் நீல ஒளிக்கீற்றோ என்னை ஆசுவாசப்படுத்தப் போதுமானதாக இல்லை.

வீட்டின் பக்கம்தான் என்பதால் ‘மெர்மேய்டு’ பாருக்கு நடந்தே வந்திருந்தேன். இரு நாற்காலிகள் எதிரெதிர் இருக்கும் மேசையில் நானும் கேசவனும் உட்கார்ந்துகொண்டோம். முதல் இரண்டு சுற்றுகள் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பின் அவனேதான் ஆரம்பித்தான். போதை தலைக்கேறியதும் இப்படித்தான். துயரங்களைத் தேடித்தேடிக் கோப்பையை நிரப்பிக்கொள்வான்.

“பெரியப்பா அன்னிக்கு வீட்டுக்கு வராரு. இவ வாங்கனுகூட சொல்லல. முவத்துல பேருக்குக்கூடச் சிரிப்பில்ல. அப்படியே பொம்மை மாதி நிக்கா. அம்மாக்கு ஒரு மாதி ஆயிட்டு. அவளுக்கு ஒடம்பு சரியில்லனு சொல்லித்தான் சமாளிச்சோம்.”

“இப்பத்தான கல்யாணம் ஆயிருக்கு. புது இடம் புது ஆட்களு. பழக கொஞ்சம் டயம் எடுக்கத்தான் செய்யும்.”

சத்தமின்றி பேருக்கு ஓடும் தொலைக்காட்சியைப் பார்த்தபடி சொன்னேன். என் பதிலைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் பேசினான்.

“இங்க சென்னையில தனி வீட்லதான இருக்கோம். இங்க மட்டும் என்ன வாழுது? இது நா வரை சாப்ட்டீங்களா… தண்ணி வேணுமான்னு… என்ட்ட ஒரு வார்த்த கேட்டதில்ல. அவ பாட்டுக்குத் தனியா காப்பி போட்டுக் குடிச்சுட்டு வேலைக்குப் போயிருவா. சாயங்காலம் நான் வீட்டுக்கு வரும்போ ஒண்ணு டிவியப் பார்த்துச் சிரிச்சிட்டிருப்பா, இல்ல அவ அப்பனுக்குப் போன போட்டுப் பேசிட்ருப்பா. என்னயப் பாத்ததும் முகம் ஒடுங்கிரும். தனக்கு மட்டும் மூணு தோச சுட்டு எடுத்துட்டு நேரா அவ ரூமுக்குப் போயிருவா. இந்த மயித்துக்கு எதுக்குக் கல்யாணம்?”

ஆத்திரம் தாளாமல் தலையை வேகமாக அசைத்தான்.

“அவ ரூமா?” நாற்காலியில் சற்று முன் நகர்ந்தபடி கேட்டேன்.

கேசவனும் தன் நாற்காலியை முன்னுக்குத் தள்ளிக்கொண்டான்.

“வெளிய சொன்னா கேவலம். இது நாவர ஒண்ணும் நடக்கல. ஊருக்குத்தான் புருசன் பொண்டாட்டி.  ஒரே வீட்ல தனித் தனி ரூம். பக்கத்துல நின்னு ஒரு நா துணிய மடிச்சுட்ருந்தா. பொண்டாட்டிதான. தோணிச்சு. சட்டுனு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தேன். அப்படியொரு நடுக்கம் அவ உடம்புல. ஒரே உதறு. நேரா ரூமுக்குள்ளப்போய் கதவ சாத்திட்டு கேவிக் கேவி அழறா. அன்னிலேந்து அவ பக்கம் திரும்பறதில்ல. இங்க யாரும் வெறி புடிச்சு அலையில. சரிதான் போடீனு விட்டுட்டேன்.”

பக்கத்து மேசைக்காரன் எங்களையே வெறித்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என்னைப் பார்த்து அடிக்கடித் தன் நண்பனிடம் ஏதோ முணுமுணுத்தான். நான் பார்வையை விலக்கிக்கொண்டேன்.

“எப்பப் பாத்தாலும் குளிச்சிட்டேதான்டா இருக்கா. நடுராத்திரிலயும் பாத்ரூம்ல பொத்பொத்னு தண்ணி விழுற சத்தம் கேட்கும். அக்கம்பக்கத்துல என்ன நெனைப்பாங்க சொல்லு. ஏதோ ரெண்டுபேரும் கொஞ்சிக் குலாவி குடும்பம் நடத்துற மாதிதான்.”

கேசவன் இன்னொரு ரவுண்ட் விஸ்கி சொன்னான். நான் பெப்பர் தூக்கலாய் இரண்டு பிளேட் முட்டை பொடிமாஸ் சொன்னேன்.

‘ரெண்டா’ என்று இருமுறை கேட்டு உறுதிபடுத்திக்கொண்டு ஒடிசலான வெயிட்டர் தன் உள்ளங்கை நோட்டில் குறித்துக்கொண்டான். மூன்று சுற்று கடந்திருந்து. மட்டமான விஸ்கியின் காட்டமான வாடை. முகத்தை ஒரு பக்கமாய்ச் சுழித்து ஒரே வீச்சில் கோப்பையைக் காலி செய்து கேசவன் பட்டென்று மேசையில் வைக்கவும் பக்கத்து மேசைக்காரன் என்னை முறைத்துப் பார்த்தான்.

“தன் குழந்தையோட பர்த்டே பங்ஷனுக்கு ஃபேமிலியா வாங்கனு மானேஜர் இன்வைட் பண்ணிருந்தாரு. வேற வழியில்லாம இதக் கூட்டிப் போனேன். எவன் கூடவோ பைக்ல வரமாதித்தான் சீட் நுனில உட்காந்து வரா. அப்படியே பைக் நிப்பாட்டி ஆட்டோ பிடிச்சுப் போடீனு வீட்டுக்கு அனுப்பிட்டேன்.”

என்னிடம் கேசவனுக்கு உதவக் கூடிய யோசனை ஒன்றுமில்லைதான். இருந்தும் ஒரு முறை மனைவியோடு அமைதியாக மனம்விட்டுப் பேசிப் பார்க்கச் சொன்னேன்.

“அந்த மயித்தெல்லாம் பண்ணிப் பாத்தாச்சு. என்னதான்டீ பிரச்சனைனு கேட்டா பதில் இல்ல. பொணம் மாதி பேசாம இருக்கா. பொணம்… பொணம்…”

போதையில் மீண்டும் அரற்றினான். எனக்கு எரிச்சலாய் வந்தது.

“என்ன லட்சணத்துல பொண்ண வளத்திருக்கனு கேட்டா அவ அப்பனும் ஆத்தாளும் இவளாட்டம் மரம் மாதி நிக்குதுங்க. கல்யாணத்துக்கு அவங்க வீட்ல அவசரப்படுத்தும்போதே நெனைச்சேன்டா. ஏதோ பிரெச்சனைனு. ஏமாத்தி பொம்மைய என் தலையில கட்டிட்டாங்க.”

என் அலுவலக நண்பன் ஒருவனுக்கும் இதே போல்தான். மனைவிக்குத் தன் மீதான வெறுப்பின் காரணம் கடைசிவரை தெரியாமலேயே கல்யாணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்தாகிவிட்டது. கேசவனிடம் அதைப் பற்றியெல்லாம் எதுவும் சொல்லவில்லை.

“இந்தக் குடும்பம் நமக்குச் சரிபட்டு வரும்னு அய்யாதான் ஒத்தக் காலுல நின்னு கட்டிவச்சாரு. இப்போ பேச்சில்ல.”

“அவரு என்ன செய்வாரு? பாவம் மகன நெனெச்சு வருத்தம் இல்லாமலா இருக்கும். நீதான் இன்னொருவாட்டி அவகிட்ட பேசிப் பாக்கணும்.”

“அதெல்லாம் வேலைக்கு ஆவாது மச்சான். அவ பேசமாட்டா.”

மடமடவென்று கோப்பையைக் காலிச் செய்தான்.

“பொம்மை எப்படிப் பேசும்? மரப்பாச்சிடா அது.”

ஒரு கட்டத்தில் கேசவனின் புலம்பல் அதீத அழுத்தத்தைக் கொடுத்தது. அதைவிட அந்த ‘மரப்பாச்சி’ வார்த்தை ஏனோ மதுவின் அகச்சூட்டிலும் குளிரை உணரச் செய்தது.

“அதான் ஒன் அப்பன் வீட்டுக்கே கிளம்புடீனு பத்திவிட்டேன். அப்பவும் ஒரு வார்த்த பேசலியே. அவ பாட்டுக்குக் கிளம்பிப் போயிட்டா.”

கல்யாணமாகி முழுதாய் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் விவாகரத்துவரை போயிருக்கும் விதியை எண்ணி உச்சுக்கொட்டினேன். பாறாங்கல்லாய்த் தலை கனத்தது. உலகின் அத்தனை பெண்கள் மீதும் காரணமற்ற கோபம் எழுந்தது. கேசவன் முஷ்டியால் மேசையில் ஓங்கிக் குத்தினான். சத்தம் கேட்டுப் பக்கத்து மேசைக்காரன் மீண்டும் என்னைப் பார்த்து முறைத்தான். பின் போதையூறும் கண்களைச் சுருக்கி இளக்காரமாகச் சிரித்தான்.

“தயோலி ஒன் மொவரைய பேத்தாத்தான் அடங்குவ.”

கண்ணாடிக் கோப்பையை வேகமாய் அவன் மீது வீசினேன். நொடிப்பொழுதில் அவன் சுதாரித்து விலகினான். சுவற்றில்பட்டுக் கோப்பை நொறுங்கிச் சிதறவும் கைகலப்பு எழுந்தது.

எல்லாவற்றுக்கும் சேர்த்துக் காசு வாங்கிக்கொண்டு வெளியேற்றினார்கள். ஒடிசலான வெயிட்டர் மட்டும் வாசலுக்கு வந்து “சாரி சார் நெக்ஸ்ட் டைம் எந்தப் பிரச்சனையும் வராது” என்றான். நூறு ரூபாய் கொடுத்தேன்.

“நானும் இன்னிக்கு ஒன் ரூம்கே வரேன்டா”  என்ற கேசவனிடம் வேண்டாமென மறுத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன். அந்நேரம் இரவின் குளிர்ந்த காற்றும் தனிமையும் எனக்குத் தேவைப்பட்டது.

.

ஒரே ஊர் ஒரே பள்ளிக்கூடம் என்பதால் கேசவன் எனக்குச் சிறுவயதிலிருந்தே பழக்கம். ஆச்சியோ அம்மாவோ என்னை எங்கும் தனியாக விளையாட அனுப்பமாட்டார்கள். அய்யா கோபப்படும் என்று அம்மா மறுத்துவிடுவாள். ஒரு முறை அய்யாவுக்குத் தெரியாமல் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.

‘இவ்வளவு தூரம் வந்தாச்சுல கடல்ல கால் நனைச்சுரலாம்’ என்று தொடங்கி பின் இரண்டு மூன்று முறை முங்கியெழுந்து அதுவும் போதாமல் ஆசை தீர மணிக்கணக்கில் கடலில் குளித்துவிட்டு வந்ததை அம்மா இன்னொரு நாளில் அய்யாவிடம் சொன்னபோது “அவன்தான் சின்ன பையன். விவரம் தெரியாது. ஒனக்கு எங்க போச்சு புத்தி?” எனக் கத்தினார். பளார் என்று சத்தம் கேட்டது.

அந்நாட்களில் கேசவன் மட்டும் என்னோடு விளையாட வீட்டுக்கு வருவான். மேலுக்குச் சட்டை அணியாமல் குட்டையான காம்பவுண்ட் சுவரில் இரு பக்கமும் கால்போட்டு உட்கார்ந்து கதை பேசுவோம். கேசவன் வெளியாட்களோடு அத்தனை எளிதில் பழகக்கூடியவனல்லன். என்னைத் தவிர வேறு நெருங்கிய நண்பர்கள் அவனுக்கு இருந்ததாக நினைவில்லை. என்னோடு விளையாடும்பொழுது கலகலப்பாக இருப்பான்.

தினமும் எனக்கு ஏதாவது கதை சொல்வான். பெரும்பாலும் பேய்க் கதைகளாகத்தானிருக்கும். ஆச்சி அப்படியே சோறூட்டுவாள். ஆளுக்கு ஒரு உருண்டை. முதலில் கேசவன் கூச்சப்பட்டான். பின் அவனும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான். கடையைப் பூட்டிவிட்டு அய்யா டவுனிலிருந்து திரும்பும்போது நாங்கள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், “லூசு கணக்கா எதையாச்சும் ஒளறிட்டு. போய் புஸ்தகத்த எடுத்துப் படிக்கற சோலியப் பாரு” என்பார். இரண்டு பேருக்குமே சேர்த்துத்தான் ஏச்சு விழும். அதற்குப் பயந்தே நாளடைவில் கேசவன் வருவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக்கொண்டான். சிறுவயதில் அறுபட்டுப்போன உறவைச் சமீபத்தில்தான் சென்னையில் மீண்டும் புதுப்பித்துக்கொண்டோம். மாநகரின் தனிமை கேசவனை எனக்கு மீண்டும் நினைவுபடுத்தியது. அதைவிட  சமீப நாட்களின் வெறுமையைக் கடக்க பழக்கமான பேச்சுத் துணையொன்று இருவருக்கும் தேவைப்பட்டது.

.

“நேத்து ஹைதராபாத்ல ஒருத்தன் தன் புது அப்பார்ட்மென்ட்லேந்து குதிச்சுச் செத்துருக்கான். கடன் எதுவுமில்ல. ஆபிஸ்லயும் பிரஷர் இல்ல.”

“அப்புறம் ஏன் தற்கொலை பண்ணான்?”

“மாரேஜ் ஃபைலியர்தான். கல்யாணமாகி ஆறு மாசம்தான் ஆயிருக்கு. இதேயிது அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிருக்கட்டும் அவனைச் சும்மா விட்ருப்பாங்களா? டாக்சிக் சொசைட்டி.”

நாளடைவில் மனைவி மீதான கேசவனின் வெறுப்பு பொதுவாக எல்லாப் பெண்களின் மீதும் திசை திரும்பியது. மர்மமாகத் தற்கொலை செய்துகொண்ட ஆண்கள், போலிப் பாலியல் வழக்கில் சிக்கியவர்கள்,மன உளைச்சலுக்கு ஆளானவர்கள்  எனத் தேடித் தேடிச் செய்திகளைச் சேகரித்து அடுக்கினான். சட்டமும் சமூகமும் பெண்களுக்கு மட்டுமே சாதகமாக  இருப்பதாகவும்  அவர்களால் வஞ்சிக்கப்பட்ட உலகில் ஆண்கள் வாழ்வதாகவும் நினைத்துக்கொண்டான்.

பொதுவெளியில் சத்தமாகச் சிரித்துப் பேசும் பெண்களைக் கண்டு பொறுமினான். உதடுகள் துடிக்கக் கைவிரல்களை மடக்கி கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வான். இதேபோன்ற சந்தர்ப்பங்களில் அவனோடு விவாதிப்பதில்லை. அவன் சொல்வதை வெறுமனே தலையசைத்து ஆமோதித்தேன். ஒருவேளை மறுத்துப் பேசினால் கைவோங்கிவிடுவான் என அஞ்சினேன்.

சாப்பிட்டு முடித்துப் பழமுதிற்சோலை சென்றோம். பார்க்கிங்கில் குறுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்கூட்டியைப் பார்த்ததும் கேசவனின் முகம் சிவந்தது. கோபத்தில் கத்தத் தொடங்கினான். கைவிரல்கள் நடுங்கின. நான் அவனை அமைதியாக இருக்கச்சொல்லி உள்ளே சென்றேன். ஆண்கள் பெண்கள் எனக் கூட்டமாக வந்திருந்த கல்லூரி நண்பர்கள் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.  எல்லாருக்கும் கேட்கும்படி “வயிட் ஸ்கூட்டி வழில நிப்பாட்டிருக்கு. ஓரமா விடச் சொல்லுங்க” எனக் கடைக்காரரிடம் சொன்னேன். “ஸாரிணா.” என்று ஓர் இளைஞன் எழுந்து செல்லவும் கேசவனை முறைத்துப் பார்த்தேன். “அவனோட வண்டியா இருக்காது” என்றான் தீர்க்கமாக. முகத்தில் அவ்வளவு வெறுப்புக் கொப்பளித்தது.

“டாக்டர கன்சல்ட் பண்ணலாம்ல” என்றேன். அவன் முகம் சட்டென மாறியது. சுதாரித்துக்கொண்டு  “மெடிசின்ஸ் எடுத்தா உனக்கும் ஸ்ட்ரெஸ் குறையும். நல்ல ஸ்லீப் கிடைக்கும்.”

“அந்த முண்ட டைவர்ஸ் கொடுக்கறவரை எனக்கு நிம்மதியில்ல.”

தடம்புரண்ட அவனின் வாழ்க்கையை எண்ணி என்னால் இரக்கப்பட மட்டுமே முடிந்தது.

.

“ஒத்துவராதுனு போனவாரம்தான்டா பேசி முடிச்சோம். மூணாவது நாளே அந்த முண்ட பெட்டியத் தூக்கிட்டு மறுபடியும் வீட்டுல வந்து நிக்கா. நான் என்ன சத்திரசாவடியா நடத்றேன்? வேதாளம் மாதி திரும்ப திரும்ப வந்து என் கழுத்தயே நெறிக்குது.”

எரிந்துமுடிந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் கோபமாய்த் தேய்த்துவிட்டு அடுத்ததைப் பற்ற வைத்தான்.

“அவளுக்குத் தங்கச்சி வேற இருக்குல. அடுத்து அவளுக்குக் கல்யாணம் முடிக்கணும். இவ எப்படி அங்க வாழாவெட்டியா இருக்க முடியும்?”

“அதுக்கு? நான்தான் கடச்சேனா?”  சட்டெனச் சுவரில் ஓங்கிக் குத்தினான். நல்லவேளை இந்தமுறை பாரின் பக்கத்து மேசையில் ஆளில்லை.

“சேர்ந்துதான் வாழ்வேனு பொண்டாட்டி உறுதியா இருந்தா டைவர்ஸ்லாம் கெடைக்காது.”

“ஒண்ணா வாழனும்னு வரவ மறுபடியும் தனி ரூமுக்கா போவா? டைவர்ஸ்க்கும் ஒத்து வரமாட்டா. விரட்டி அடிச்சாலும் திரும்ப வந்துருவா. சனியன் வாழவும் மாட்டேங்கு சாவவும் மாட்டேங்கு.”

கைப்பேசி ஒலித்தது. புருவங்கள் சுருங்க வெறித்துக்கொண்டிருந்தவன் கடைசி நொடியில் எடுத்துப் பேசினான்.

“அதுக்கு? என்னயக் கேட்டா? சரி பாக்குறேன்.”

கைப்பேசியை வைத்ததும், “அப்படியே எங்கயாச்சும் ஒழிஞ்சா நல்லதுதான்.” என்றான்

“என்ன ஆச்சு?”

“அவ அப்பன்தான். ‘இந்நேரத்துக்கெல்லாம் தினமும் பேசிருவா. இன்னிக்கு அவகிட்டேந்து ஃபோனயும் காணும். நான் ஃபோன் போட்டாலும் போவல. என்ன ஏதுனு சீக்கிரமா பாத்துச் சொல்லுங்கனு கேக்கறான்.’ நான் என்ன அவங்க வச்ச வேலைக்காரனா?”

“என்னடா இப்படிப் பேசுற. ஒன் பொண்டாட்டிடா.”

“வேற என்ன செய்யச் சொல்ற? என்ட்ட சொல்லிட்டா எல்லாஞ் செய்யுறா. இந்த மழையில எங்கனு போய்ப் பாக்க.”

கேசவன் சொன்னதும்தான் ஜன்னல் திரையினூடே வெளியே மழை பெய்வதைக் கவனித்தேன். மனைவிக்கு ஃபோன் செய்தான். சுவிட்ச் ஆப் என்று வந்தது.

“சரி வீட்டுக்குப் போய்ப் பாக்கலாம்.”

கேசவனின் வீடு பக்கம்தான் என்பதால் மெலிதான தூறலில் நனைந்தபடியே நடந்து சென்றோம். அடுக்குமாடிக் குடியிருப்பில் கேசவன் வீடு மட்டும் இருண்டிருந்தது. வாசல் விளக்குக்கூட  இடவில்லை. பூட்டியிருக்கும் வீட்டு வாசலில் நின்று மீண்டும் அழைத்துப் பார்த்தான். இன்னமும் அவளது கைப்பேசி அணைந்திருந்தது.

“அவ ஆபீஸுக்கு ஒரு எட்டுப் போய்ப் பாத்துட்டு வந்துரலாம்டா” என்றான். அவன் அப்படிச் சொன்னது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆட்டோ பிடித்துப் போனோம். இரு பக்கமும் இழுத்துவிடப்பட்ட ரப்பர் ஷீட்டில் தடித்த மழைத் தூறல்கள் விழும் சப்தம் இடைவிடாது தொடர்ந்தது.

“இதுக்கு முன்னாடி இந்தமாதி லேட்டா வந்துருக்காளா?”

இல்லை எனத் தலையசைத்தான்.

ஒருவேளை கோபப்பட்டு அப்பா வீட்டுக்கே கிளம்பியிருப்பாளா? அப்படிச் சென்றிருந்தால் அவருக்காவது முன்கூட்டியே சொல்லியிருப்பாள். இல்லை சொல்ல விரும்பாத வேறெங்காவது? வேறு யாரோடாவது??

“ரொம்ப மூளையைப் பிழியாத. நீ யோசிக்குற அளவுக்கு அவ எந்த வெளியாள் கூடவும் பேசவும் மாட்டா. பழகவும் மாட்டா. குறிப்பா ஆம்பளைங்ககூட.”

அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு வெளியே எட்டிப் பார்த்தான். மழை வலுத்திருந்தது. மீண்டும் அவளது கைப்பேசி எண்ணுக்கு முயற்சித்தான். பலனில்லை. ஆட்டோ ஓட்டுநர் நடுக்கண்ணாடியில் என் முகவோட்டத்தை அளந்தபடி சற்றுத் தயக்கத்துடன் கேட்டார் “என்ன சார் எதுவும் பிரச்சனையா?”

“அதலாம் ஒண்ணுமில்ல. நீங்க ரோட்டப் பாத்து மட்டும் ஓட்டுங்க.”

அதன்பின் அவர் எதுவும் கேட்கவில்லை. ஆபிஸ் வந்ததும் ஆட்டோவைக் காத்திருக்கச் சொல்லி நான் மட்டும் மழையில் இறங்கி செக்யூரிட்டியிடம் விசாரித்தேன்.

“மணி என்ன ஆச்சு சார். உள்ள ஒருத்தரும் இல்ல.” என்றார் எரிச்சலோடு.

நான் அவரை அதிகப்படியான கேள்விகளால் துளைத்தெடுக்க விரும்பவில்லை. சில நிமிடங்களுக்குள் தொப்பலாய் வேறு நனைந்திருந்தேன். ஈரத்தோடு ஆட்டோவில் ஏறி “ஆபிஸ்ல யாரும் இல்ல” என்றேன்.

“சவாரி ஏத்துன இடத்துக்கே கொண்டு போய் விடு.” கேசவன் சொல்லவும் ஆட்டோக்காரன் குழப்பமாய் என்னைப் பார்த்தான். ஏதோ கேட்க நினைத்தவன் மௌனமாகப் பார்வையை விலக்கிக்கொண்டான்.

ஆட்டோவிலிருந்து இறங்கும்போது மழை நின்றிருந்தது. கேசவன் வீட்டு வாசல் மின்விளக்கு பளிச்சிட்டது.

வீட்டினுள் நுழைந்ததும் கவனித்தேன். ஹாலின் வலப்பக்கக் குளியலறையிலிருந்து படுக்கையறைவரை ஈரக்காலடித் தடங்கள். தரையில் திட்டுத்திட்டாய்ப் பதிந்திருக்கும் உலராத அக்காலடிச் சுவடுகளில் ஆங்காங்கே பொடி மணல் ஒட்டியிருந்தது. ஈரக்கூந்தலைத் துவட்டியபடி தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“எங்கடீ போய்த் தொலைஞ்ச? நாய் மாதி மழைல நனைஞ்சுட்டு வந்து நின்னா ஒன்பாட்டுக்குப் பகுமானமா குளிச்சிட்டு வர.”

கோபத்தில் அவன் கையோங்கவும்  பயந்துபோனாள். ஓங்கிய வேகத்தில் தன் பிடரியிலேயே அடித்துக்கொண்டான். மிரண்ட கண்களோடு என்னைப் பார்த்தாள். குறுக்கும் நெடுக்கும் நடந்து அவளின் அறைக் கதவை எட்டி மிதித்தான். சுவரில் மடாலென அடித்து நிலையில் மோதி நின்றது. அவள் உடல் லேசாய் நடுங்கிற்று. ஏன் இங்கு வந்தோம் என்றிருந்தது எனக்கு. தேவையில்லாத மனச்சகதியில் மாட்டிக்கொண்டேன்.

அவளது ஈரத்தலை முடியைப் பிடித்து உலுக்கியவன் பின் ஒருவாறு தன் சீற்றத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு கத்தினான், “அப்படியே எங்கயாச்சும் போய்ச் செத்தொழிய வேண்டியதுதான. ஏன் என் உசுர வாங்குற?”

அந்நிமிடம் அவளின் உயிர் முலாம் பூசிய விழிகள் என்னையே வெறித்துப் பார்த்தன. பொருள் விளங்கா அப்பார்வையின் தீவிரம் தாளாதவனாய்த் தலையைத் தாழ்த்திக்கொண்டேன். எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அடுத்த சில தினங்கள் அவ்விழிகள் என்னைக் கனவிலும் நினைவிலும் விடாது விரட்டின.

பாசிபடிந்த கிணற்றின் ஆழத்திலிருந்து மெல்ல மேலெழுந்து பார்க்கிறேன். எதிரே மூழ்கிக்கொண்டிருக்கும் விழிகள் என்னையே வெறித்தபடியிருக்கின்றன. நீரின் குளிர்ச்சியைத் தாண்டி ஒருவிதப் பதற்றம் என்னுள் தீவிரமாய்ப் பாய்கிறது. உடல் வெடவெடத்து உற்றுப் பார்க்கிறேன். முகம் தெளிவாகப் புலப்படவில்லை. முகத்தை மறைத்திருக்கும் ஈரக் கருங்கூந்தல் நீரின் ஆழம்வரை வேர்விட்டிருப்பதைப் போல் நீண்டுகொண்டே போகிறது. நீரும் அவளைப் போல் சலனமற்றுக் கிடக்கிறது. உப்பி வெளுத்திருந்த அவ்வுடல் மெல்ல மிதந்தபடி என்னை நெருங்க என் இதயத் துடிப்பைச் சத்தமாக உணர்கிறேன். உயிர்ப்பற்ற அக்கருமணிகள் என்னை நோக்கிச் சட்டென லேசாய் அசையவும் உதறல் எடுத்தது.

கைப்பேசி ஒலிக்க வியர்த்து விறுவிறுத்து எழுந்தேன். நீலாங்கரைக் கடற்கரையில் அவள் உடல் கரையொதுங்கி இருக்கும் செய்தியோடு அன்றைய சாம்பல் பூத்த வானம் விடிந்தது.

.

“அப்பலேந்து தட்டிட்டே இருக்கேன். எவ்வளவு நேரமாடீ குளிப்ப?”

குளியலறைக் கதவை மடமடவென்று கேசவன் தட்டியதில் தூக்கம் கலைந்து எழுந்தேன். எரிச்சலோடு சென்று அவன் அறையில் எட்டிப் பார்த்தேன். பிளாஸ்டிக் வாளி நிரம்பி வழிய ஆளில்லாக் குளியலறையை நோக்கிக் கேசவன் கைநீட்டிக் கத்திக்கொண்டிருந்தான்.

“இப்போ நீ நடுராத்திரில குளிக்கலனு யாருடீ அழுதா?”

என்னைப் பார்த்ததும் “சொல்ல சொல்ல கேட்கறாளா பாருடா” என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும் தன் படுக்கையறைக் கதவை வேகமாய்ச் சாத்தினான்.

“பதில் சொன்னா என்னடீ? என்னதான்டீ ஒன் பிரச்சனை?”

சத்தம் வெளியே கேட்டது. எனக்குப் பின்மண்டை கனத்தது.

“நைட்லாம் இப்படி டாப்பத் திறந்துவிட்டுக் கூத்தடிச்சா தண்ணிக்கு நாங்க எங்க போறது? மத்த அப்பார்ட்மெண்ட் ஆட்கள் என்ன பண்ணுவாங்கனு சென்ஸ் வேணாம்” பக்கத்து வீட்டுக்காரர் நேற்று உரத்த குரலில் கேட்டபோது என்னிடம் பதிலேதும் இல்லை.

மனைவி இறந்ததிலிருந்து கேசவன் என்னோடுதான் தங்கியிருக்கிறான். என் வீட்டில் காலியாக இருக்கும் படுக்கையறையைப் பயன்படுத்திக் கொள்கிறான். பொதுவாக என்னிடம் எதுவும் பேசுவதில்லை. நானும் அதையே விரும்பினேன். எப்போதும் தனக்குள் பொருமியபடி அவன் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பான். அடிக்கடி சரக்குச் சாப்பிடக் காசு கேட்பான். மது பாட்டிலோடு தன் அறைக்குச் சென்று தாழிட்டுக்கொள்வான். திடீரென்று உள்ளே பேச்சுச் சத்தம் கேட்கும்.

ஒரு நாள் கொட்டும் மழையில் நள்ளிரவு நடுவீதியில் நின்று கத்தினான் “இன்னும் ஆளக் காணும். இவளத் தேடி அலையறதே என் பொழப்பா போச்சு.”

ஆபிஸ் கேண்டினில் சக ஊழியர் ஒருவர்  “ரொம்ப வாடிப் போயிட்டீங்களே சார். கவுன்சிலிங் எதுவும் ட்ரை பண்ணலாம்ல” எனக் கேட்க,  “ஒன் சோலி மயித்தப் பாரு” என்று அவர் சட்டையைப் பிடித்திருக்கிறான். கேசவனைத் தற்காலிகமாக வேலையைவிட்டு நிறுத்தி இரண்டு வாரங்கள் ஆகின்றன.

“சனியனே செத்து ஒழி.” கேசவன் ஆவேசமாய்க் கத்தவும் மீண்டும் உறக்கம் கலைந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன். மணி நள்ளிரவு இரண்டு. ஆத்திரமாய் வந்தது. வழக்கத்தைவிட அவனது குரலின் சீற்றம் ஓங்கியிருப்பதை உணர்ந்து என் எரிச்சலை மட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து சென்றேன்.

எனக்கு முதுகைக் காட்டியபடி குளியலறையின் ஈரத்தரையில் முட்டிப்போட்டு உட்கார்ந்து “சாவுடீ சாவுடீ” எனக் கத்தினான். முழங்கைவரை இரு கைகளையும் தண்ணீர் வாளிக்குள் விட்டு ஆக்ரோஷமாய்ச் சத்தமிட்டான். மெதுவாகப் பக்கத்தில் சென்று எட்டிப் பார்த்தேன். உள்ளங்கையளவு மரப்பாச்சி பொம்மையொன்றைத் தண்ணீருக்குள் பலம்கொண்டு அழுத்திக்கொண்டிருந்தான்.

“சாவுடீ! சாவுடீ!”

நீர்க்குமிழிகள் மேலெழுந்து உடைந்தன.

.

வீட்டுவாசல் செம்மண்ணில் நான்கு கம்பிகளை அழுத்தமாய் ஊன்றி நீலநிறக் காடாத்துணியில் சாமியானா கட்டியிருந்தார்கள். பொருட்கள் ஒதுக்கப்பட்டிருந்த வீட்டை வெறுமையும் அழுகுரலும் நிரப்பியிருந்தன. கேசவன் தூணில் சாய்ந்திருந்தான். அம்மாவைச் சுற்றிச் சொந்த ஊரின் பழகிய முகங்கள் சோகத்தோடு நெருங்கி உட்கார்ந்திருந்தன.

“பாடி எப்போ கெடைக்கும்?”

“போஸ்மார்ட்டம் முடிச்சுக் கொடுக்க சாயங்காலம் ஆயிரும்.”

“நேத்து மதியம்தான் தம்பி பேசிட்ருந்தோம். அப்பகூட ஒன்னைய நெனச்சுத்தான் வருத்தப்பட்டாரு. வீட்டு வேலை முடிஞ்சதும் மவனுக்கு வேற நல்ல இடமா பாத்துக் கட்டி வைக்குணும்னு சொன்னாரு. பாவம் யாருக்கும் எந்தக் கேடும் நெனைக்காத மனுசன். அவருக்கு இப்படியா சாவு வரணும்.”

பழுப்புச் சட்டைக்காரர் உச்சுக்கொட்டினார்.

கேசவன் என்னிடம் “கொஞ்சம் நேரம் வெளிய போய் நிப்போம்” என்றான். புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் மாடியிலிருந்து அய்யா கீழே விழுந்து இறந்துவிட்டதாக நேற்று இரவு தகவல் கிடைத்ததும் கார் பிடித்து சென்னையிலிருந்து இன்று விடியற்காலை ஊருக்கு வந்திருந்தோம்.

“மச்சில புதுசா வீட்டு வேல போகுதுல, அதான் நேத்து நைட் எட்டு மணிபோல மாடிக்குப் போயிருக்காரு. மேலேந்து தவறி கீழ விழுந்தவரு ஸ்பாட் அவுட். பின் மண்டையில அடி. வேற எங்கயும் சின்ன கீறல் கூட இல்ல.” கேசவனின் சொந்தக்காரர் யாரிடமோ ஃபோனில் சாவை விவரித்துக்கொண்டிருந்தார்.

வீட்டு வாசலில் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒதுக்கிவிட்டு சாமியானாவைத் தாண்டி ஓரமாகப் போய் நின்றோம். வாசல் கதவு பக்கம் மணலும் ஜல்லியும் கொட்டிக் கிடந்தது.

“ஏன்டா எனக்கு மட்டும் அடுத்தடுத்து இப்படி நடக்குது?” அழுதழுது கேசவனின் கண்கள் சிவந்திருந்தன. “நல்ல நிமிர்வான ஆளு கடைசில என் நெனைப்புலயே பாதி ஒடிஞ்சு போயிட்டாரு. ரெண்டு நாள் முன்னாடிதான்டா திரும்ப வீட்டு வேலைய ஆரம்பிச்சாரு.” நடுநெற்றியில்  சொத்தென்று அடித்துக்கொண்டான்.

“என் தப்புதான். அப்பவே அய்யாவையும் அம்மையும் என்னோட சென்னைக்குக் கூட்டி வந்துருக்கணும்.”

மாடியில் காரைப்பூச்சு முடியாத செங்கல் அடுக்குகளின் மத்தியில் துருத்திக்கொண்டிருக்கும் கம்பிக்கட்டுகளை வெறித்துப் பார்த்தேன். அம்மாவின் அழுகுரல் வெளியே சத்தமாகக் கேட்டது.

“அய்யா செத்துட்டாருனு அம்மாவால இன்னமும் நம்பமுடியலடா. கீழ விழுந்து கிடந்தப்போ அவரு முகம் முழுசும் ரெத்தமா இருந்துச்சுனு சொல்லிச் சொல்லி அழுவுது.”

கேசவனின் மனவலியை எனக்குள் பொருத்திப் பார்த்தேன். தாங்க முடியாத சுமையாய்க் கனத்தது. என் எண்ணவோட்டத்தைத் திசைதிருப்பிக்கொண்டேன்.

மேலுக்குச் சட்டை அணியாத இரண்டு வயசாளிகள் தங்களுக்குள் பேசுவது காதில் விழுந்தது.

“அப்பன் உசுரக் காவு வாங்கன மச்சி வீட்ட இனி மவன் எப்படிடே எடுத்துக் கட்டுவான்?”

“இருட்டுனதுக்கு அப்புறம் வெள்ளையப்பன் எதுக்கு மாடிக்குப் போனான்? அவன் ஒண்ணும் மயங்கி விழுற அளவு நொடிசலான ஆள் இல்லயப்பா.”

“ஏன் போனான்? எப்படி விழுந்தானு விவரமில்ல. சாவணும்னு விதி.போய்ச் சேர்ந்துட்டான்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சுமங்கலியா போய்ச் சேர்ந்தவதான் இன்னமும் ஆறாம காவு வாங்கிட்ருக்கா.”

ஆமோதித்துத் தலையசைத்தவர் தாழ்ந்த குரலில் கிசுகிசுத்தபோது புழுக்கமான ஈரவாடை காற்றில் வீசியது.

.

“ஆச்சி ஒரு மாதி நமைச்சலா ஈரவாடை அடிக்கி.” முகத்தைச் சுழித்தபடி சொன்னேன்.

“ஐயா இந்த வாடையப் பழிக்காத. இது அவ உடம்பு வீச்சம். முத்தம்மாதான் நேத்து நடுசாமாத்துல கிணத்தடில குளிச்சுட்டுப் போயிருக்கா. ஒரு நா முழுசும் தண்ணில ஊறி மிதந்த உடம்புல. இப்படித்தான் வீச்சம் அடிக்கும். எத்தனை ராத்திரி மொண்டு மொண்டு குளிச்சாலும் அந்த வாடை போகுமா?”

“அவ ஏன் ஆச்சி கம்மாயில விழுந்து செத்தா?”

கைப்பிடிச் சுவரில் இரு பக்கமும் கால்போட்டபடி உட்கார்ந்து வாயில் சோற்றுருண்டையோடு நான் கேட்கும்போதெல்லாம் ஆச்சி அதே ஏற்ற இறக்கத்துடன் அக்கதையைச் சொல்லுவாள்.

“ஒன் அப்பன் எனக்குப் பொறந்து ஒரு வருஷம் கழிச்சுத்தான் ஒங்க தாத்தாவோட தம்பிக்கு முத்தம்மா வாக்கப்பட்டு வந்தா. நல்ல வடிவான பொண்ணு. தஞ்சாவூர் பொம்மையாட்டம் மூக்கும் முழியுமா அவ்வளவு அம்சமாயிருப்பா. நல்ல தெளிச்சியான முகம். எந்நேரமும் கிணத்தடிலேதான் கெடப்பா. கொல்லையிலேந்து சமயக்கட்டு வரைக்கும் அவ ஈரக்காலடியாதான் இருக்கும். அக்கா அக்கானு என் பின்னாடியேதான் சுத்துவா. ஆனா அம்புட்டு பழகுன என்கிட்டகூட கடைசிவரை விவரத்தைச் சொல்லல.”

பெருமூச்சுவிட்டு மீண்டும் தொடர்ந்தாள், “அப்போ ஒன் அப்பன் வாயில எச்சில் ஒழுவ நரநரனு எதாச்சும் கடிக்கக் கேப்பான். அவன்கிட்ட ஒரு மரப்பாச்சியக் கொடுத்து இவளும் குழந்தையாட்டம் அவனோட விளையாண்டுகிட்ருப்பா.”

“நம்ம சாமி அலமாரில சேலை சுத்தி குங்குமம் வச்சுருக்க அந்த மரப்பாச்சியா?”

ஆமா எனத் தலையசைத்த ஆச்சி முகத்தில் குறுக்காக விழுந்த நரை முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டுத் தொடர்ந்தாள்.

“அடுத்த வருசம் ஒன் மடியிலயே புள்ள இருக்கும். இன்னும் என்ன சின்ன நொன்னயாட்டம்னு கேட்டதும் பட்டுனு முகம் சுருங்கிரும். அதுவும் அவ புருசனக் கண்டா அவ்வளவுதான். ம்ம்ம்…. ஆவவே ஆவாது. வெளியாளப் பாத்த மாதி உடம்பு உதறும். அவரு மாடில இருந்தா இவ கொல்லைப் பக்கம் ஓடிருவா. அவரு கிணத்தடிக்குக் குளிக்க வரும்போ சமயகட்டுக்கு வந்துருவா. பக்கத்துல அண்டமாட்டா.  புருசன்காரன் அவள வீட்டைவிட்டு விரட்டினப்போ நான் அடுப்படியில நின்னுட்ருந்தேன். என்னால என்ன செஞ்சுர முடியும்? பாவம் புள்ள அழுதமேனிக்கே போச்சு. இவ வாழாவெட்டியா வீட்ல இருந்தா சின்னவ வாழ்க்கை பாழாயிரும்னு அவ அப்பன் பெரியவங்க கையில காலுல விழுந்து முத்தம்மாவ மூணே நாளுல திரும்பக் கூட்டியாந்துவிட்டுப் போனாரு.

அப்புறமும் பழைய குருடி கதவத் திறடி கதைதான். எதுவும் மாறல. அவ புருசன் கோபத்துல காச்சுபூச்சுனு கத்துவான். இவ நட்டுவச்ச மரங்கணக்கா நிப்பா. சாவுறதுக்கு முந்தன ராத்திரிகூட என்கிட்ட எப்பவும் போலதான் சிரிச்சுப் பேசிட்ருந்தா.  ‘வாக்கா விடியப்போகுது குளிக்கப்போவோம்னு’ முதல் ஆளா அவதான் வந்து கூப்பிடுவா. ஆனா அன்னிக்கு எங்குட்டுத் தேடியும் ஆளக் காணும். கடைசில இசக்கி மவன்தான் ஓடியாந்து சொன்னான், கம்மாயில மிதந்து கிடக்கானு.  வாழ வேண்டிய புள்ள. பாவம், வருசம் ஆகியும் பூப்படையாத உடம்புக்காரி எம்புட்டு நாள்தான் ஒடுங்கியே வாழ்வா? அதான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துட்டா.” ஆச்சி உச்சுக்கொட்டினாள்.

“என்ன சடங்கு செஞ்சு என்ன? வீட்டு ஆம்புளைங்க மேல அப்படியொரு கோபம் அவளுக்கு. மவனுக்கு வேற புள்ளயக் கட்டி வைக்க அசலூருக்குப் பேசப் போன மாமனாரப் போகுற வழியிலயே ஆத்துச் சுழில காவு வாங்கிட்டா. குடும்பத்துல பொட்டப்புள்ள பெத்துப் போட்டவ பிழைச்சா. வீட்ல ஒரு ஆம்புளப்புள்ள தழைக்கல. ஒன் அப்பனத் தவிர. என் மேல மட்டும் அவளுக்கு ஏனோ கொஞ்சம் கரிசனம். ஒன் அப்பனும் நுரை தள்ளிக் கிடந்தப்போ ‘ஆத்தே என் புள்ளய ஒண்ணும் பண்ணிராத ஆத்தானு’ அவளத்தான் கும்ட்டேன்.

‘அக்கா ஒங்க புள்ள எனக்கு இப்போ வேணாம். கொடுத்துருறேனு’ கனவுல வந்து சொன்னா.” ஆச்சியின் புறங்கை ரோமங்கள் குத்திட்டு நின்றன.

“அப்புறம்?” வாயோரத்தில் சோற்றுருண்டையை ஒதுக்கியபடி கேட்டேன்.

“கோடாங்கி வச்சுக் குறிகேட்டு அவளக் கும்பிட ஆரம்பச்ச பொறவுதான் அமைதியானா. ஆனா எப்போ உக்கிரமாவானு யாருக்குத் தெரியும்? அதான் உன்னயத் திருச்செந்தூர் கடலுக்குக் கூட்டிப் போனதுக்கு நேத்து உங்கப்பன் அம்மையப் போட்டு அடிச்சான். என் வவுத்து ஆண் வம்சம் மட்டும்தான் மிஞ்சி நிக்குது. இன்னமும் எல்லாருக்கும் அவ மேல உள்ள பயம் தெளியல.”

.

தண்ணீர் நிரம்பிய வெங்கலச் சொம்பைக் காரைத் தரையில் வைக்கும் சத்தம் கிணற்றடியில் சன்னமாகக் கேட்கிறது. கிறங்கடிக்கச் செய்யும் ஒருவித உடல் வாசம். நிலவொளியில் கண்களைக் கசக்கி உற்றுப் பார்க்கிறேன். நள்ளிரவின் இருட்டில் துலக்கமற்றுத் தெரியும் அவ்வுருவம் முழுதாய் நனைந்திருக்கிறது. தண்ணீர்த் திவலைகள் சீரான இடைவெளியில் தரையில் பட்டுத் தெறிக்கின்றன.

அவள் குளித்துக்கொண்டிருக்கிறாள்.

வீட்டுக் கொல்லைப்புறக் கிணற்றை ஒட்டிய கல்லில் தன் பின்னுடலின் செழுமை அப்பட்டமாய்த் தெரிய எனக்கு முகம் காட்டாமல் அமர்ந்திருக்கிறாள். தண்ணீர்த் திரை அவளுடலை மறைத்திருக்கிறது. பிருஷ்டம் வரை நீண்டிருக்கும் ஈரக்கூந்தலை முன்னுக்கு வாரிப்போட்டு என்னைத் திரும்பி பார்க்காமல் கேட்கிறாள்.

“தண்ணி தீந்து போச்சு. கொஞ்சம் இரைச்சுக் கொடேன்.”

சரி எனத் தலையசைத்து நான் கிணற்றை நோக்கி நடக்கிறேன். ஆனால் எவ்வளவு இரைத்தும் வாளி நிரம்பவில்லை. வளையல் குலுங்க கைத்தட்டிச் சிரிக்கிறாள்.

“ஆழத்துலதான் தண்ணி கெடக்கு.” அவள் குரல் குழைந்திருந்தது.

கிணற்றுக் கயிற்றிலிருந்து வாளியைக் கழற்றி வைத்துவிட்டு இருண்ட கிணற்றினுள் எட்டிப் பார்க்கிறேன். சத்தம் கேட்டு அம்மா கொல்லைக்கு ஓடிவருகிறாள்.

“இந்த நேரத்துல இங்க என்னடா பண்ணிட்ருக்க?”

நான் பதிலேதும் சொல்லாமல் கிணற்றை வெறித்தபடி இருக்கிறேன். அம்மா என் முதுகைத் தட்டி உலுக்குகிறாள்.

“என்னையக் கேக்காத. அவளக் கேளு. தண்ணி இரைச்சுத்தா… தண்ணி இரைச்சுத்தானு கெஞ்சுதா.”

வருடக்கணக்காய் ஆள் புழக்கமில்லாமல் புதர்மண்டிக் கிடக்கும் இடிந்த கிணற்றைப் பார்த்தபடி என்னை நெஞ்சோடு இறுகக் கட்டியணைத்தவள் கட்டுப்படுத்த முடியாமல்  அழுதாள்.

.

இரண்டு வார விடுமுறைக்குப் பின் மீண்டும் சென்னை திரும்பினேன். கேசவனிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அய்யாவின் இழப்பிலிருந்து முழுதாய் மீண்டிருக்கமாட்டான். எனக்கும் அந்நேரம் ஒரு விலகல் தேவைப்பட்டது. அம்மாவும் பயந்துபோயிருந்தாள். ‘இந்த ஊரவிட்டுப் போனா எல்லாஞ் சரியாயிரும்’ என்றாள். சுடலைமாடன் கோயிலில் மந்திரித்துத் தாயத்துக் கட்டிவிட்டாள்.

சென்னை திரும்பிய பின்னும் இரவு சரிவர உறக்கமில்லை. கனவுவெளிகளில் அலைந்து திரிந்தேன். முகம் தெரியா உடல்கள் சகதிபடிந்த ஆற்றில் மிதந்தபடி என்னையும் தண்ணீருக்குள் இழுத்தன. கனவுகளுக்கு அஞ்சி இரவுகளை மதுக்குப்பிகளால் நிறைத்துக்கொண்டேன். எச்சரிக்கை உணர்வோடு அலுவலகத்தில் என்னை  எல்லோரும் அணுகுவதாய்த் தோன்றியது. அம்மா அடிக்கடி ஃபோன் செய்து விசாரித்தாள். குலச்சாமியைக் கும்பிடச் சொன்னாள். கேசவனைப் பற்றி நான் கேட்கும்போதெல்லாம் பேச்சைத் திசை மாற்றினாள்.

அலுவலகத்தின் ஏசி அறை நிசப்தமாயிருக்க என் புறமுதுகில் இரு விழிகள் வெறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. காதுக்குள் ஒரு குரல் ஏதோ முணுமுணுத்துவிட்டு மௌனமானது. உள்ளுணர்வு எச்சரிக்கவும் சுழற்நாற்காலியில் அமர்ந்தபடி மெல்ல திரும்பிப் பார்த்தேன். எல்லாரும் அவரவர் மடிக்கணினித் திரையில் ஆழ்ந்திருந்தனர்.

“ஒரு மாதி வாடை வருதுல” பக்கத்துச் மேசைக்காரன் முகத்தைச் சுழித்தான்.

என் சட்டைக் காலரை யாருக்கும் தெரியாமல் நுகர்ந்து பார்த்தேன். சோப்பு வாசனை அடித்தது.

“ஆமா ஏதோ ஸ்மெல்லா இருக்கு.”

எதிர் வரிசையிலிருப்பவள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னாள்.

லேசாய் வெடவெடத்தது. ஏசி ரூமிலும் உள்ளங்கை வியர்த்தது. யாரும் கவனிக்கும் முன்பு கைக்குட்டையால் வேகமாய்த் துடைத்துக்கொண்டேன். ஆனால் இப்போது வியர்வை செங்குத்தான கீறலாய் நெற்றியிலிருந்து நேராக இறங்கியது. குறுக்காக வெடிப்புவிட்ட சுவரைப் போல் என் உருவம் இரண்டாக உடைபடுவதாய்த் தோன்ற மடமடவென முகத்தைத் துடைத்தேன். உடம்பு முழுதும் வியர்த்து உதறியது. அதே வாடை. நீரில் உப்பி மிதக்கும் புகைச்சலான பிணவாடை. அலுவலகத்தின் பல ஜோடிக் கண்கள் என்னை வெறித்தன. மடிக்கணினி உட்பட அத்தனையும் அப்படியே மேசையில் விட்டுவிட்டு விருவிருவென வீட்டுக்குக் கிளம்பினேன். என் முதுகுப் பின்னால் அலுவலகம் லேசாய்ச் சலசலத்து அடங்கியது.

வீட்டுக் குளியலறை ஷவரைத் திறந்துவிட்டு இரு கால்களைக் கட்டிக்கொண்டு குந்தி உட்கார்ந்தேன். உடம்பெல்லாம் நுரை பொங்க சோப் தேய்த்தேன். உறுப்பு உறுப்பாய் நுகர்ந்து பார்த்தேன். அதே வாடை. சோப்பைத் தூக்கி எறிந்தேன். வெறிபிடித்தவனாக நரநரவென நகம் பதியக் கீறித் தேய்த்தேன்.

நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டுப் படுக்கையில் எழுந்து அமர்ந்தேன். தாழ்ப்பாள் போடாத குளியலறைக் கதவு காற்றில் அடித்துக்கொண்டிருந்தது. நீல நிற இரவு விளக்கு வெளிச்சத்தில் அறையை உற்றுப் பார்த்தேன். தரையெங்கும் உலராத ஈரக்காலடித் தடங்கள். குளியலறையிலிருந்து என் கட்டில்வரை. சுவரிலும்… மேற்கூரையிலும்… மேசையிலும்… கட்டில் விளிம்புகளிலும்… என்னைச் சுற்றி எங்கும் ஈர்க்காலடிகள். பயத்தில் என்னை மீறிய குரலில் கத்தினேன்.

என்னால் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. கால்கள் மரத்திருந்தன. கனத்த போர்வையால் என்னை முழுதும் மறைத்துக்கொண்டேன். யாரோ குதிகால் பதிய நாலாபுறமும் நடக்கும் சத்தம் விடாமல் கேட்டது. இரு கைகளாலும் அழுத்தமாய்ச் செவிகளை மூடிக்கொண்டேன். காலடியோசை ஓயவில்லை. உடம்பு ஜில்லிட்டிருந்தது. சற்று நேரத்தில் சகலமும் முடிவுக்கு வந்ததைப் போல் திடீர் நிசப்தம். என் இதயத் துடிப்பு சத்தமாக ஒலித்தது. பயத்தில் கண்களை இறுக மூடிக் குப்புறக் கிடந்தேன்.  அப்படியே கண்கள் அயர நான் அரை டிரௌசர் போட்ட சிறுவனாய்  வீட்டுக் கைப்பிடிச் சுவரில் உட்கார்ந்திருந்தேன். ஆச்சி சோறூட்டிக்கொண்டிருந்தாள்.

“ஆச்சி! முத்தம்மா இறந்த பொறவு சின்ன தாத்தா என்ன ஆனாரு?”

“பாவம் அந்த மனுசன்! பொஞ்சாதி போய்ச் சேந்ததுக்குப் பொறவு கோட்டிப் புடிச்சுல அலைஞ்சாரு. வேலைக்குப் போவாம யார் கூடவும் பேசாம கிணத்தடியே கதியா நிப்பாரு. ‘பாருங்கண்ணி எம்புட்டு நேரமா குளிக்கானு’ என்னையக் கூப்ட்டுக் கூப்ட்டுச் சொல்லும்போ பாவமா இருக்கும். எத்தனை கோயில்குளம். எவ்வளவு வைத்தியம். கடைசில சட்டை வேட்டியக் கிழிச்சுட்டு ரோட்ல ஓடுனவருதான் ரெண்டு நாள் கழிச்சு அதே கம்மாயில மிதந்து கிடந்தாரு.”

வாயில் அப்பியிருந்த சோற்றுப் பருக்கைகளை ஆச்சியின் வெள்ளைச் சீலை முந்தானையால் துடைத்துக்கொண்டேன். உச்சந்தலையில் செல்லமாய்க் கொட்டினாள். தலையைத் தடவியபடி போர்வையை விலக்கிப் பார்த்தேன். விடிந்திருந்தது. கைப்பேசியைத் தேடியெடுத்துக் கேசவனுக்கு அவசரஅவசரமாய் ஃபோன் செய்தேன். இப்போதும் அழைப்புப் போகவில்லை. ஏதோ ஆபத்தில் இருக்கிறான் என்று மட்டும் உரைத்தது.

அம்மாவுக்கு அழைத்தேன். குரலுடைந்து அழுதாள். இணைப்பைத் துண்டித்துக் கைப்பேசியை அணைத்து வைத்தேன். இரண்டு செட் சட்டை பேண்ட்டைப் பையில் சுருட்டித் திணித்து ஊருக்குக் கிளம்பினேன்.

.

பையோடு நேராக கேசவன் வீட்டுக்குச் சென்றேன். எழவு வீட்டுக் காரியங்கள் முடிந்திருந்ததால் வீட்டில் வெளியாட்கள் கூட்டமில்லை. வாசல் கிரில் கதவைத் திறந்த வேகத்தில் கிரீச்சிட்டது. சத்தம் கேட்டு அம்மா வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.

“கேசவன் இருக்கானா இல்ல அவனும் போய்ச் சேர்ந்துட்டானா?”

பொத்தென்று துணிப்பையை வீசி எறிந்தேன். இருண்டிருக்கும் வீட்டில் எல்லா அறைகளிலும் அவனைத் தேடினேன்.

“கேசவா! கேசவா!”

“என்னடா ஆச்சு ஒனக்கு?” ஈரக்கையைப் புடவையில் துடைத்தபடி என் பின்னால் பதற்றமாய் வந்தாள்.

“இதுக்கு மேல என்ன ஆவணும்? உடம்பெல்லாம் அவதான் மணக்கா. இந்தா… இந்தா… மோந்து பாரு.” புறங்கையை நீட்டினேன்.

“அவ வாடைதானே. அவ வாடைதானே. எனக்குத் தெரியும். எவ்வளவு குளிச்சும் போவல. தலைமுடி… சட்டை…கையு…காலு… பூராவும் அவதான் மணக்கா.”

சட்டையைக் கழற்றி அவள் முகத்தில் வீசினேன்.

“ஏன்டா இப்படிப் பேசுற. ஃபேனுக்குக் கீழ உக்காரு. அம்மா தண்ணி எட்டு வரேன்.”

நாற்காலியை இழுத்துப் போட்டு என்னை அமரச் செய்தாள். பின் வேகமாகச் சமையலறைக்குள் புகுந்தவள் சொம்பில் தண்ணீர் மொள்ளும் சத்தம் கேட்டது. இருப்புத் தாளாமல்  அவள் பின்னால் சமையலறைக்குள் சென்றேன்.

”எல்லாத்துக்கும் இந்தக் கேசவன் தயோலிதான் காரணம்.”

“ஏன்யா இப்படி ஒளருற? ஒன் அய்யாவுக்குக் கொள்ளி வச்ச கையால அப்படியே என்னையும் உசுரோட கொளுத்திடு.”

குங்குமமற்ற நெற்றியில் ஓங்கி அறைந்தபடி அம்மா சுவரில் சரிந்தாள்.

அவள் கண்களை உற்று நோக்கித் தண்ணீர்க் குடத்தைத் தள்ளிவிட்டேன். சாமி அலமாரியிலிருந்த மரப்பாச்சி பொம்மையை எடுத்து வீசினேன். “இந்தா பொறுக்கிக்கோ” மீண்டுமொரு முறை வீசினேன். பயந்து போனவள் கண்களை மூடிக் காதைப் பொத்திக்கொண்டு தரையில் அமர்ந்தாள்.

“என்னங்கடீ ஆளுக்காளு நாடகம் ஆடுறீங்க. எனக்குச் சொல்லாமலேயே கேசவனுக்கும் நெருப்பு வச்சுட்டியலா?”

“எஞ்சாமி! அம்மா சொல்றத கேளுடா. டாக்டரப் போய்ப் பாப்போம். ட்ரீட்மென்ட் எடுத்தா எல்லாஞ் செரியாயிரும்.”

அவள் பேசுவதைப் பொருட்படுத்தாமல் வாசலுக்குச் சென்றேன்.

“டேய் கேசவா! கூப்புடுதது காதுல விழல?”

“யாராவது பாக்கப் போறாங்க. உள்ள வாடா”

என் கையைப் பிடித்து உள்ளே இழுத்தவளை எத்தித் தள்ளிவிட்டு ஓடினேன். அதற்குள் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டு ஆட்கள் வெளியே வந்து நின்றனர். உள்ளிருந்து அம்மா யாரையோ கூப்பிடும் சத்தம் கேட்டது. நான் கேசவனை விளித்தபடி கைம்மணிக்கட்டுத் தாயத்துக் கயிற்றை அறுத்து வீசி கண்மாய் நோக்கி ஓடினேன். என் மூளைக்குள் கௌளிச் சத்தம் விடாமல் கேட்டது.  .