மூன்று மாதங்களுக்கு முந்தைய சம்பவம்தான். என்றாலும் சமகால அரசியல் உரையாடல்களில் அடிக்கடிக் குறுக்கீடு நிகழ்த்துகிற ஓர் அரசியல் போக்குக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை.டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழா, பாபர் மசூதி இடிப்பு என்னும் இரு அரசியல் நிகழ்வுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியல் போக்கைத் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன. நூற்றாண்டையொட்டி அம்பேத்கர் புதிய வெளிச்சத்தில் வாசிக்கப்பட்டு கலை, இலக்கிய, அரசியல் வெளியில் தலித் எழுச்சி நிகழ்ந்தது. இன்னொருபுறம் பாபர் மசூதி இடிப்பையொட்டி இந்துத்துவ அரசியல் எழுச்சியும் நடந்தது. இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சி இப்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவை ஆளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
ஒருபுறம் இந்துத்துவ அரசியல், மறுபுறம் இந்துத்துவ அரசியலுக்கு எதிர் திசையில் திராவிட இயக்கம், இடதுசாரிகள், இவர்கள் இருவரின் கருத்தியல் பொருத்தப்பாட்டைக் கணக்கிலெடுத்துள்ள, சமகால எதார்த்தத்தை உள்வாங்கிய காங்கிரஸ் – இவற்றுக்கிடையில் ஒடுக்கப்பட்டோரின் அரசியலை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கான அளவுகோலை உருவாக்கிக்கொள்ள மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்து தீவிர விவாதத்துக்குள்ளான ஒரு சம்பவத்தை நினைவுகூரலாம்.
அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தை ஆண்டுதோறும் ‘தலித் வரலாற்று மாதமாக’க் கொண்டாடிவரும் நீலம் பண்பாட்டு இயக்கம் இந்த ஆண்டும் ‘வானம் – தலித் இலக்கியக்கூடுகை’ நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் ‘பொது உரையாடல்களில் தலித்துகள்’ என்னும் அமர்வில் ஷாலின் மரியா லாரன்ஸ் ஆற்றிய உரை, அதற்கு எதிர்வினையாக எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரையில் இருந்த சில அம்சங்கள், மறுநாள் நிகழ்வில் நீலம் பண்பாட்டு இயக்கத்தை நடத்தும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் உரை ஆகியவை பல விவாதங்களைக் கிளப்பின. இந்த விவாதங்களின் தொடக்கப்புள்ளியாக அமைந்த ஷாலின் மரியா லாரன்ஸின் உரை, ஆழமான வாசிப்போ, வரலாற்றறிவோ, கருத்தியல்தெளிவோ, அரசியல் அனுபவமோ இன்றி எந்த உள்ளீடுகளும் அற்ற, தன்முனைப்பும் அறியாமையும் நிரம்பிய உரையாகவே இருந்தது. இந்த உரை என்றில்லை, பொதுவாகவே ஷாலின் மரியா லாரன்ஸின் எழுத்துகளும் மேடையுரைகளும் நேர்காணல்களும் இத்தகைய தன்மை கொண்டதாகவே இருக்கின்றன.
சமீபத்தில் ‘நியூஸ்மினிட்’ யூ ட்யூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் ‘கீழ்வெண்மணியில் தலித் பெண்கள் இயக்கத்தை நிலப்பிரபுக்கள் ஒடுக்கிவிட்டதாக’வும் ‘பெரியார் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றம்சாட்டியதாக’வும் கூறியிருக்கிறார். உண்மையில் கீழ்வெண்மணியின் வரலாறு தெரிந்த யாரும் இப்படி அபத்தமாகப் பேசமாட்டார்கள். கீழத்தஞ்சையில் விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி சங்கமும் திராவிடர் கழகத்தின் திராவிட விவசாயத்தொழிலாளர் சங்கமும்தான். விவசாயக் கூலித்தொழிலாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் தலித் மக்கள்தான். ஆனால் அவர்களை ஒருங்கிணைத்தது தலித் இயக்கமல்ல. மாறாகக் கம்யூனிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களுமே ஒருங்கிணைத்தார்கள். இவர்களில் பி.சீனிவாசராவ் முதல் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் வரை தலித் அல்லாதாரே அதிகம். கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கை, அவரது அரசியல் வாழ்க்கையில் மாபெரும் கரும்புள்ளி என்பதே என் கருத்து. பெரியாரின் கீழ்வெண்மணி குறித்த அறிக்கையை விமர்சித்து நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அதேநேரம் கீழ்வெண்மணியை வைத்து மட்டுமே பெரியாரைத் தலித் விரோதியாகவும், ‘கோபாலகிருஷ்ண நாயுடுவை ஆதரித்த தமிழர் விரோதி’யாகவும் முன்வைக்கப்படும் சித்திரிப்புகளை நான் ஏற்பதில்லை.அதிலும் கீழ்வெண்மணி அறிக்கையில் பெரியார் கம்யூனிஸ்ட்களைத்தான் குற்றம்சாட்டுகிறாரே தவிர, ஷாலின் மரியா லாரன்ஸ் சொல்வதைப் போல, ‘பாதிக்கப்பட்ட தலித்துகளை’ அல்ல.
இப்படித்தான் அவர் குமுதம் இதழில் எழுதிய தொடரில் ‘பெரியாரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு அழைத்து வந்தவர் மீனாம்பாள் சிவராஜ்’ என்று எழுதியிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பெரியார், அதிலிருந்து வெளியேறி 1925இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மொழிப்போர் என்னும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ராஜாஜியின் இந்தித் திணிப்பு அரசாணைக்கு எதிராக சுயமரியாதை இயக்கம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் அன்னை மீனாம்பாள் சிவராஜ் கலந்துகொண்டு முன்னணியில் நின்றார் என்பது உண்மைதான். ஆனால் பெரியாரையே அவர்தான் போராட்டத்துக்கு அழைத்துவந்தார் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. இப்படி ஷாலின் மரியா லாரன்ஸின் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் ஏராளமான தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, அதைத் தனிநபர் தாக்குதலின் மூலம் அவர் எதிர்கொள்வது, அடிக்கடி இயக்குநர் பா.இரஞ்சித் வலியுறுத்தும் ‘உரையாடல்’ என்னும் கருத்தாக்கத்துக்கு முற்றிலும் எதிரான ஜனநாயக விரோதப் பண்பு. (இந்தக் கட்டுரையையும்கூட அவர் தனிநபர் தாக்குதல் வழியே எதிர்கொள்ளக்கூடும்)
ஷாலின் மரியாவை அடுத்துப்பேசிய ஆதவன் தீட்சண்யாவின் உரை பல விஷயங்களை மய்யப்படுத்தியிருந்தது. உரையின் சிறுபகுதியே ஷாலின் உரைக்குப் பதில் சொல்வதுபோல் அமைந்திருந்தது. தலித் அடையாள அரசியலை முன்வைக்கும் தலித் தலைவர்களில் கணிசமானவர்கள் இந்துத்துவ அமைப்புகளுடன் உறவு கொண்டாடும் நிலையைச் சுட்டிக்காட்டிய ஆதவன் தீட்சண்யா, ராம்விலாஸ் பாஸ்வான், அவர் மகன் சிராக் பஸ்வான், மாயாவதி, டாக்டர்.கிருஷ்ணசாமி எனப் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் கம்யூனிஸ்டுகள் மீது கொட்டப்படும் வெறுப்பு வழக்கறிஞர்கள் ரத்தினம், பா.பா.மோகன் போன்றோரை அவமதிப்பதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். திராவிட அரசியலை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் திராவிடக் கருத்தாக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பார்ப்பனியத்துக்கும் இந்துத்துவத்துக்குமே வலுசேர்க்கும் என்ற விமர்சனத்தை முன்வைத்த ஆதவன் தீட்சண்யா, புதிய கல்விக்கொள்கை முதல் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் வரை எப்படித் தலித்துகளையும் பாதிக்கின்றன என்பதை விரிவாக விளக்கினார். சமூக சனநாயகச் சக்திகளை விலக்கி வைப்பதுடன் மட்டுமல்லாது அவர்களையே தலித் மக்களின் முதல் எதிரியாகவும் சித்திரிக்கும் இந்த விலகல்வாதத் தலித்தியம், ஷாலின் மரியா லாரன்ஸிடமிருந்து தொடங்கியதல்ல. அதன் வரலாற்றுப்பின்னணியை அறிய வேண்டியது அவசியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான அரசியல் அடையாளத்துடன் அமைப்பாகத் திரள்வதற்கு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உண்டு. ‘ஒருபைசா தமிழன்’ இதழ், திராவிட மகாஜன சபை அமைப்பு மூலம் இயங்கிய அயோத்திதாசர், ‘திராவிட பாண்டியன்’ இதழ், திராவிடர் கழகம் என்னும் அமைப்பின் மூலம் செயல்பட்ட ஜான்ரத்தினம், எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவசன், எல்.சி.குருசாமி, சாமி சகஜானந்தா, சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ் என்று ஏராளமான தலித் முன்னோடிகள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். இவர்கள் நீதிக்கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்துடன் நட்பும் விலகலும் கொண்ட உறவைக்கொண்டவர்கள். குறிப்பாகப் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் அடையாளங்களுடன் அமைப்பாகத் திரள்வதை ஆதரித்தார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இலங்கையிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் செயற்பாடுகள் தன் கவனத்துக்கு வரும்போதெல்லாம் அதை ஆதரித்துத் தன் இதழ்களில் பதிவுசெய்தார். சுயமரியாதை இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் மாநாடுகளும் பௌத்தர் மாநாடுகளும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் அம்பேத்கரை அறிமுகப்படுத்தி அவர் நூல்களையும் சிந்தனைகளையும் கொண்டுசெல்வதில் பெரியார் முனைப்புக் காட்டினார். தனிவாக்காளர் தொகுதி, பௌத்த மதமாற்றம் என்ற அம்பேத்கரின் மிக முக்கியமான இரு அரசியல் நகர்வுகளை இந்திய அளவில் ஆதரித்த ஒரே தலித் அல்லாத தலைவர் பெரியார்தான். தலித் மக்கள் மட்டுமல்லாது பிற சாதிகளும்கூடச் சங்கங்களாகத் திரண்டு உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்ததையும் ஆதரித்த பெரியார், பார்ப்பனரல்லாத இடைநிலைச்சாதிகள் தலித் மக்கள்மீது சாதி ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் மேடையிலேயே கண்டித்துப் பேசினார். பார்ப்பரனரல்லாத சாதி இந்துக்கள் தலித் மக்கள் மீது நிகழ்த்திய சாதிவெறித் தீண்டாமைக் கொடுமைகளையும் தொடர்ச்சியாக்க் ‘குடியரசு’, ‘விடுதலை’ இதழ்களில் பதிவு செய்ததுடன் அதற்கெதிரான செயற்பாடுகளையும் பெரியாரியக்கம் முன்னெடுத்தது. தி.மு.க உருவாகி ஆட்சிக்கு வந்த காலத்தில் தலித் மக்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான நலத்திட்டங்கள் தீட்டப்பட்டன.
90களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலித் அரசியல் எழுச்சி இரண்டாம் அலை உருவானது. கன்னட, மராத்தி தலித் இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்திலும் தலித் இலக்கியமும் தலித் எழுத்தாளர்களும் உருவானார்கள். குறிப்பாக நிறப்பிரிகை இதழ் இந்த இயக்கத்தை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டியது. அ.மார்க்ஸ் தலித் அரசியல் அறிக்கையை உருவாக்கினார். ரவிக்குமார் தலித் அரசியல் குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவந்ததுடன் அதற்கு இணையான கறுப்பின மக்களின் இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த அறிமுகங்களையும் தமிழில் ஏற்படுத்தினார். ராஜ்கௌமன் தலித் பண்பாடு குறித்தும் தலித் விமர்சனமுறை குறித்தும் விரிவாக எழுதினார். நவீன இலக்கியங்களில் சாதிய மனநிலை குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இப்படியான செயற்பாடுகள் நடந்தபோது திராவிட இயக்கம் குறித்தும் இடதுசாரிகள் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பெரியார் தலித் மக்களின் நட்புச்சக்தியாகவே முன்வைக்கப்பட்டார். இந்துத்துவம், பார்ப்பனியம் ஆகியவை தீவிரமாக எதிர்க்கப்பட்டதுடன் இடைநிலைச்சாதிகளின் சாதியாதிக்கமும் விமர்சிக்கப்பட்டது.
ஆனால் அதன் அடுத்தகட்டமாக, நிறப்பிரிகை கூட்டணி உடைவுக்குப் பின் ரவிக்குமார் பெரியார் குறித்த விமர்சனங்களைக் ‘காலச்சுவடு’ இதழிலும் விடுதலைச்சிறுத்தைகளின் ‘தாய்மண்’ இதழிலும் முன்வைத்தார்.தொடக்கத்தில் பெரியாரை இணக்கமாகப் பார்த்துவந்த, சிவகாமியின் ‘புதிய கோடாங்கி’ இதழும் பெரியார் மீதான விமர்சனங்களை முன்வைத்தது. பெரியாரைத் தலித் மக்களின் எதிரியாகவும் இடைநிலைச்சாதிகள் பிரதிநிதியாகவும் முன்வைத்த விமர்சனங்களுக்கு அ.மார்க்ஸ், புனிதப்பாண்டியன், வளர்மதி, சுகுணாதிவாகர், விடுதலை ராசேந்திரன், சு.அறிவுக்கரசு உள்ளிட்ட பலர் எதிர்வினை நிகழ்த்தினர். திராவிடர்கழகம், அப்போதைய பெரியார் திராவிடர்கழகம் போன்ற அமைப்புகளும் இத்தகைய நிலைப்பாட்டை விமர்சித்தன. பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்திய போக்கு, மெல்லத் தீவிரமடைந்து சமூக ஜனநாயகச் சக்திகளிடமிருந்து தலித்துகளைத் தனிமைப்படுத்தும் விலகல்வாதத் தலித்தியமாகப் பரிணமித்தது.
அதேநேரத்தில் இத்தகைய விலகல்வாதத் தலித்தியம் முன்வைத்த எல்லா விமர்சனங்களிலும் நியாயங்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது. திராவிட இயக்கத்திலும் இடதுசாரி இயக்கங்களிலும் தலித்துகளின் பிரதிநிதித்துவம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பைப் போலவே இடைநிலைச்சாதி ஆதிக்கத்தையும் எதிர்க்க வேண்டியதன் அவசியம், தலித் மக்களுக்கான எல்லாப் போராட்டங்களையும் கம்யூனிஸ்ட்களும் திராவிட இயக்கமுமே முன்னெடுத்தன என்பது தவறு, ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த இயக்கச்செயற்பாடுகள் குறித்த வரலாறு எழுதப்பட வேண்டும் என்னும் குரல் ஆகியவை முக்கியமானவை, பொருட்படுத்தி விவாதிக்க வேண்டியவை. அதன் தொடர்ச்சியாக அயோத்திதாசர் குறித்த ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன; எம்.சி.ராஜா போன்றோரின் பேச்சுகளும் எழுத்துகளும் தொகுக்கப்பட்டன; தலித் இதழ்கள், இயக்கம் குறித்த செய்திகள் ஆவணப்படுத்தப்பட்டன. தமிழ் அறிவுச்செயற்பாட்டில் இது ஒரு முக்கியமான நகர்வு.
அதேநேரம் இந்த விமர்சனங்களில் உள்ள நியாயங்களைக் கணக்கிலெடுத்து திராவிட மற்றும் இடதுசாரி இயக்கங்களிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டும். 90களின் இறுதியில் தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதியமோதல் குறித்து ஆராயச் சென்ற பெரியார் திராவிடர்கழகத்தின் உண்மையறியும் குழு, ‘அங்கு நடைபெற்றது சாதிக்கலவரம் அல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கான போராட்டங்களும் அதன் எதிர்வினையான இடைநிலைச்சாதிகளின் ஆதிக்க வெறியாட்டமும்’ என்று பதிவு செய்தது. ராமதாஸ் தலித் அல்லாத சாதிகளை ஒருங்கிணைத்து அமைப்பை உருவாக்க முயன்றபோது அதற்கு எதிராக விடுதலை ராசேந்திரன் தலைமையில் பெரியார் தி.க சென்னையில் போராட்டம் நடத்தியபோது இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் நடந்தன. ஒருங்கிணைந்த பெரியார் தி.க மூலம் தமிழ்நாடெங்கும் இரட்டைக்குவளைக்கு எதிரான போராட்டங்கள், கோவை அன்னூரில் தலித் மக்களைக் குடிநீர் பிடிக்க அனுமதிக்காததை எதிர்த்துப் போராட்டம் ஆகியவை நடந்தன. தர்மபுரியில் இளவரசன் – திவ்யா பிரச்னை எழுந்தபோது திராவிடர் கழகம் சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. தொடர்ச்சியாகப் பெரியாரியக்கங்கள் தலித் இயக்கங்களுடன் இணைந்தும் தனியாகவும் தீண்டாமைக்கு எதிராகப் போராடின. தி.மு.க. தலைவர் கலைஞர் தன் கட்சித் துணைச்செயலாளர் பதவிகளில் கண்டிப்பாக ஒரு தலித்தும் ஒரு பெண்ணும் இடம்பெற வேண்டும் என்பதைக் கட்சி விதியாக்கினார். அதேபோல் கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் இந்து அறநிலையத்துறையின்கீழ் வரும் கோயில்களின் அறங்காவலர்களில் ஒருவர் தலித்தாகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கவேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்டோரில் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியருக்குக் கலைஞர் உள் இட ஒதுக்கீடு கொண்டுவந்தார். 2006 – 2011 ஆட்சிக்காலத்தில் கலைஞர் தலித் மக்களுக்கான பல சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்கினார். இப்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட ஏராளமான தலித் மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேசும் ‘அசுரன்’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களைப் பாராட்டித் தன் ஆதரவையும் தெரிவித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தி.மு.க.வின் இளைஞரணிச்செயலாளரும் தற்போதைய விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இத்தகைய திரைப்படங்களை ஆதரித்துடன் தானே ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாமன்னன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ‘திராவிடப் பேரொளி’ என்று அயோத்திதாசப் பண்டிதரைப் போற்றும் தி.மு.க அரசு, அவருக்கான மணிமண்டபத்தையும் தலித் தலைவர் இளையபெருமாளுக்கான மணிமண்டபத்தையும் அறிவித்தது.
கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை சாதி, வர்க்கம் எதற்கு முன்னுரிமை அளிப்பது, சாதி மேற்கட்டுமானமா, அடிக்கட்டுமானமா என்ற விவாதம் போன்றவற்றில் அம்பேத்கரும் பெரியாரும் கம்யூனிஸ்ட்களுடன் முரண்பட்டனர். அதேநேரத்தில் களத்தில் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்ததில் கம்யூனிஸ்ட்களின் அர்ப்பணிப்பைக் குறைசொல்ல முடியாது. கீழத்தஞ்சையில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் தர்மபுரியில் செயற்பட்ட தொடக்ககால நக்சல்பாரி இயக்கமாக இருந்தாலும் சட்டீஷ்கர், ஜார்க்கண்ட பகுதிகளில் செயற்படும் மாவோயிஸ்ட்களாக இருந்தாலும் அவர்களின் போராட்டம் என்பது தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைக்கான போராட்டங்களுடன் இணைந்திருப்பதையே பார்க்கிறோம். 1992 பாபர் மசூதி இடிப்பையொட்டி உருவான இந்துத்துவ அரசியல் எழுச்சியும் அம்பேத்கர் நூற்றாண்டும் கம்யூனிஸ்ட்களின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்தன. அம்பேத்கரையும் பெரியாரையும் முதலாளித்துவச் சீர்திருத்தவாதிகளாக மட்டுமே வரையறுத்த கம்யூனிஸ்ட்கள் இப்போது அவர்களை இந்தியச் சூழலில் முக்கியமான சிந்தனையாளர்களாக ஏற்றுக்கொண்டு முன்னிறுத்துவதைப் பார்க்கிறோம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் தலித் மக்களுக்கான உரிமைப்போராட்டங்களைத் தீவிரத்துடன் முன்னெடுக்கின்றன.
சாதியம், பார்ப்பனியம், இந்துமதம் மீதான கருத்துநிலைகளிலும் இடதுசாரிகளிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது சி.பி.எம். கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என்பது நாமறிந்ததே. ஆனால் திராவிட இயக்கங்களிலும் கம்யூனிஸ்ட்களிடமும் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களை அங்கீகரிக்காமல் தொடர்ந்து அவர்களைத் தலித் மக்களின் எதிரிகளாகச் சித்திரித்துத் தலித்துகளைத் தனிமைப்படுத்த முயல்வதே விலகல்வாதத்தின் போக்காக இருக்கிறது.
மேலும் விலகல்வாதத் தலித்தியத்தின் சில ஆபத்தான கூறுகள் குறித்தும் பரந்துபட்ட தளத்தில் உரையாடல்கள் நடைபெற வேண்டியது அவசியம். விலகல்வாதத் தலித்தியர்கள் சாதி ஆதிக்கச்சக்திகளை விமர்சிப்பதை விடவும் சாதி எதிர்ப்பு சனநாயகச் சக்திகளையும் இயக்கங்களையும் விமர்சிப்பதிலேயே அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னொருபுறமோ இந்துத்துவம் இந்த விலகல்வாதத் தலித்தியத்தைத் தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. ஒருபுறம் மோகன் ஜி, பேரரசு, பிரவீண் காந்தி போன்றோரின் தலித் விரோதப் பேச்சுக்கு ஆதரவளிப்பது, இடைநிலைச்சாதிவெறியைத் தூண்டுவது, சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராக இருப்பது, காதலர் தினத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சாதியத்துக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் துணைநிற்பது, சாதிக்கயிறுகளையும் சாதித் திலகங்களையும் தடை செய்யக்கோரும் நீதிபதி சந்துருவின் அறிக்கையை இந்துக்களின் மத அடையாளங்களைத் தடை செய்வதாகத் திரித்து இடைநிலைச்சாதி ஆதிக்கத்துக்குத் துணைநிற்பது ஆகியவற்றைச் செய்யும் இந்துத்துவவாதிகள்தான் விலகல்வாதத் தலித்தியர்கள் மற்றும் திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியவாதிகளின் விமர்சனங்களையும் திராவிட மற்றும் கம்யூனிச இயக்கங்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். விலகல்வாத தலித்தியவாதிகளோ இந்துதுவவாதத்தை எதிர்க்காதது மட்டுமல்ல, இந்துத்துவத்துக்குத் துணைபோகும் ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது, பி.ஜே.பியுடன் கூட்டணியில் இருந்தும் விலகியும் இந்துத்துவ, பார்ப்பனிய, இடைநிலைச்சாதி ஆதிக்கத்தைக் காப்பாற்றும் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் புரட்சி பாரதம், செ.கு.தமிழரசனின் இந்தியக் குடியரசுக்கட்சி போன்றவற்றை ஆதரிப்பது, இவர்கள் தொடங்கி இளையராஜா வரை பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கும்போது விமர்சனங்களை முன்வைப்பவர்களைத் தலித் விரோதிகளாகச் சித்தரிப்பது ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்துத்துவத்தின் கைகளில் தலித்துகளை ஒப்படைப்பதே விலகல்வாதத் தலித்தியத்தின் முதன்மை அபாயம்.
இன்னொருபுறம் 90களில் தலித் என்ற பரந்துபட்ட அடையாளத்தில் முன்நகர்ந்த தலித் அரசியலை, இப்போது ஒரு சாதி அரசியலாக விலகல்வாதத் தலித்தியர்கள் மாற்றி குறுக்கிவிட்டார்கள். தங்கள் சொந்தச் சாதியைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், தலைவர்கள், இயக்கங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவது, ஆண்டசாதிக் கதைகளுக்கு இணையாக தலித் மக்களிடமும் சாதியப்பெருமிதக் கதையாடல்களை முன்வைப்பது, தலித் மக்களுக்குப் பூணூல் அணிவிப்பது, முக்கால் நூற்றாண்டாகப் சாதிப்பட்டத்தை ஒழித்த மரபைக் கொண்ட தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு ‘பிள்ளை’ போன்ற சாதிப்பட்டங்களை அளிக்கும் நிகழ்வை நடத்துவது ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். இது எந்தவகையிலும் தலித் மக்களுக்கு விடுதலை அளிக்கப்போவதில்லை. மாறாகச் சாதியமைப்பை உறுதி செய்யவே உதவும்.
இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நிலைப்பாடு குழப்பம் அளிப்பதாகவும் வருந்தத்தக்கதாகவும் உள்ளது. இயக்குநர் இரஞ்சித் மரியாதைக்குரிய படைப்பாளி. ஓர் இயக்குநராக மட்டுமல்லாது இயக்கமாகவே செயற்படுபவர். சாதியம் கெட்டிதட்டிப்போன தமிழ் சினிமாவில் மாபெரும் உடைப்பை நிகழ்த்தியவர். சாதி ஒழிப்புக்கான குரலைத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன் நகர்த்துபவர். அவரது சினிமாக்கள் அரசியலைப் பேசுகின்றன என்பதுடன் அது கலைத்தன்மை கொண்ட படைப்புகளாகவும் இருக்கின்றன என்பது முக்கியம். தான் படங்கள் இயக்குவது மட்டுமல்லாது விடுதலை அரசியலைப் பேசும் சினிமாக்களை உருவாக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுப்பவராகவும் சினிமாவுக்கு வெளியே மாற்றுக் கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பவராகவும் இரஞ்சித்தின் இடம் தனித்துவமானது. ஆனால் உண்மையிலேயே மேற்கண்ட விலகல்வாதத் தலித்தியம் குறித்து அவரது நிலைப்பாடு என்னவென்பதை அவர் எங்கும் தெளிவுபடுத்தியதில்லை.
ஷாலின் மரியா லாரன்ஸ், ஆதவன் உரைகள் விவாத அலைகளை எழுப்பிய மறுநாள் ‘வானம்’ நிகழ்வில் பேசிய இரஞ்சித், ”ஷாலின் மரியா லாரன்ஸுக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்குமான முரண்பாடு இரு தலித்துகளுக்கு இடையேயான முரண்பாடு. இதை ‘மற்றவர்கள்’ பயன்படுத்திக்கொள்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டினார். உண்மையில் அது இரு தனி நபர்களுக்கு இடையிலான முரண் அல்ல, இருவேறு சித்தாந்தங்களுக்கு, இருவேறு அரசியல் வழிமுறைகளுக்கு இடையிலான முரண் அது. இந்த முரணில் தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் அதைத் தனிநபர் பிரச்னையாக அடையாளப்படுத்துவதும் இதை முன்வைத்து எழுந்த உரையாடல்களைச் சாதிக்கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுவதும் எப்படி சரியாகும்? மேலும் ‘சேரியில் இந்துத்துவம் நுழையவில்லை’ என்ற இரஞ்சித்தின் பேச்சு கேட்பதற்கு இனிமையானது என்றாலும் எதார்த்தம் அதுவல்ல என்பதைத்தான் ராம்விலாஸ் பாஸ்வான் முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை ஆதவன் தீட்சண்யா முன்வைத்த பட்டியல் தெரிவிக்கிறது. அடிக்கடி ‘உரையாடல்’ என்னும் கருத்தாக்கத்தை முன்வைக்கும் பா.இரஞ்சித், அடையாள அரசியலின் பிரச்னைகள், மற்ற ஜனநாயகச் சக்திகளுக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான உறவு, இந்துத்துவத்துக்குத் துணை போகும் தலித் தலைவர்கள், உட்சாதி அரசியலை உயர்த்திப் பிடிக்கும் போக்கு, பண்பாட்டின் பெயரால் பூணூல், சாதிப்பட்டங்களை ஆதரிக்கும் போக்கு ஆகியவை குறித்த உரையாடலைத் தொடங்கியிருக்கவேண்டும், தொடர்ந்திருக்கவேண்டும் என்பதே உண்மையிலேயே உரையாடலை நேசிப்பவர்களின் விருப்பம்.
—