“Social Justice is the surest guarantor of peace in the world”

– என்ற ஐக்கிய நாடுகள் சபை துணைச் செயலர் கை ரைடரின் (Guy Ryder) தத்துவ வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம் இந்தியாவின் இனக்குழுக்களுக்கு உள்ளேயும், இடையேயும், எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருக்கும் வகையில் மேலாதிக்க சாதியின் சனாதன சமூக அநீதி இந்த மண்ணில் நிலை பெற்றிருந்தது. அதை உடைத்து, சமூக நீதியை நிலைநிறுத்தி, மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கி நிம்மதியான வாழ்வளிக்கும் பொருட்டு அறிவார்ந்த தமிழர்களின் சிந்தனையில் உதித்த உன்னதமான தேற்றம் தான் சமூகநீதி என்ற மனிதநேயம் மிக்க தத்துவமாகும் அதன் திசைவழி பயணங்களில் ஒன்றுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கின்ற இடஒதுக்கீட்டு கொள்கை. அதுதான் திராவிட இயக்க அரசியலில் அடிப்படை ஜீவாதார தத்துவம்.

இட ஒதுக்கீடு என்பது கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் சமூகங்களுக்கிடையே சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படைதான். பெரும்பாலான மக்களுக்கு கல்வி கிடைக்காத வண்ணம், ‘எதைக் கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதே’ என்ற மனுதர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டு மேல் ஜாதியினரால் கட்டியமைக்கப்பட்ட சமூக அமைப்பு நிலைபெற்று இருந்த நிலையில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் தனது காலனி ஆதிக்க இந்தியாவிற்கு கல்வி கொடுக்கும் பொருட்டு 1834-ல், மெக்காலே என்பவரை கல்வித்துறை தலைவராக்கி அனுப்பி வைத்தது. அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால்,  சொற்பமான உயர் ஜாதியினருக்கு மட்டுமே கல்வி கிடைக்க மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலை. இந்த அவல நிலையை மாற்ற வேண்டி,  பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு பேசி, ‘எல்லோருக்கும் கல்வி’ கிடைக்கும் வண்ணம் பொதுக் கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதுவரைக்கும் இந்த மண்ணில் ஒரு வகுப்பினருக்கு மட்டுமே கல்வி சொந்தம் என்று இருந்த குருகுல கல்வி முறையை ஒழித்து, எல்லாருக்குமான பொதுக் கல்வி முறை உருவானது. அதுவரைக்கும், கோவில்கள், மடங்கள் மற்றும் அக்ரஹாரங்களில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட வந்த துவக்க கல்வி, மெக்காலே-வின் முன்னெடுப்பினால், பொது இடங்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டு, எல்லோரும் கல்வி கற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும் சனாதன கூட்டம் இங்கிலாந்து சென்று இயன்றவரை தடுத்து நிறுத்தப் பார்த்தது. பயிற்று மொழியாக சமஸ்கிருதமும், பாடங்களாக புராணங்களும், இதிகாசங்களுமே இருக்க வேண்டும் என்று  போராடி பார்த்தது. ஆனால், ஆங்கிலத்தை பயிற்று மொழியாக்கி, அறிவியலையும், கணிதத்தையும் பாடங்களாக்கி, சமூக நீதிக்கு அடித்தளமிட்டார் மெக்காலே. இதனால்தான் இன்றைக்கும் மனுதர்மவாதிகள் மெக்காலேவை புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மெக்காலே போட்ட விதை முளைத்து மூன்று இலை விடுவதற்கே இயலாத வகையில் மூர்க்கத்தனமான எதிர்ப்பு ஏறத்தாழ 165 ஆண்டுகளைக் கொண்டு சென்றது.   1920-ல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சிதான் 9.3.1923-ல் அரசாணை எண்: 376-ன் படி, ‘அனைவருக்கும் கல்வி’ என்பதை உறுதி செய்தது. அரசாணை பிறப்பித்த பின்பும், துவக்க கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததை உணர்ந்து 21.6.1923 அரசாணை எண்: 849 மற்றும் 24.9.1923 அரசாணை எண்: 25 ஆகியவற்றின் முறையே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கட்டாயமாக சேர வேண்டும் என்று அறிவுறுத்தி வலியுறுத்தியது. இப்படித்தான் அனைவருக்குமான கல்விக்கு திராவிட இயக்கத்தின் மூல இயக்கமான நீதிக்கட்சி உறுதி செய்தது. இப்படி ஒரு வகையாக கல்விக்கு வழிவகை கண்டபோது, சென்னை Executive Council தலைவர் அலெக்சாண்டர் கார்டியோ ஒரு அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு  தெரியப்படுத்தினார்.  அதாவது, சிவில் சர்வீஸ் போட்டியிட்ட தேர்வு, உதவி பொறியாளர் வேலைக்கு ஆள் எடுப்பு, தணிக்கை துறை அலுவலர் தேர்வு, மாவட்ட நடுவர்கள், உதவி கலெக்டர் தேர்வு என அரசு நிர்வாகப் பணியிடங்களில் 75% முதல் 85% வரை பிராமணர்கள் என்ற ஒரு வகுப்பினரே ஆக்கிரமித்து இருந்ததை எடுத்துக்காட்டினார். அதிகார வர்க்கத்தில் நியமிக்கப்பட்ட பார்ப்பனர்கள், அதிகாரிகள், கீழ்நிலை உத்தியோகஸ்தர்கள் பதவியில் தங்களது வகுப்பினரை அல்லது தங்களது சுற்றத்தை நியமித்துக் கொண்டார்கள். நெல்லூர் மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகத்தில் இருந்த 49 பேரும் பிராமணர்கள் என்பதை அன்றைய சென்னை மாகாணத்தின் கணக்கீட்டுத் தலைவர் W. R. கார்னிஷ் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியதோடு, உத்தியோகத்துறையில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நிர்வாகத்திற்கு பெரும் சீர்கேட்டை விளைவிக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார்.

அதை அடிப்படையாகக் கொண்டு நீதிக்கட்சி முதல்வர் பனகலரசர் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த சட்டமன்றத்தில் 16.8.1921 அன்று மசோதாவைத் தாக்கல் செய்தார். இதை கடுமையாக எதிர்த்த சனாதனவாதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம், ‘எங்கள் இந்திய பாரம்பரியத்தை மாற்ற நினைக்க வேண்டாம்’, என்று பிரிட்டிஷ் அதிகாரத்திடம் கெஞ்சிக் கூத்தாடி இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த முடியாமல் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், 1928-ம் ஆண்டு நீதிக்கட்சி அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை 4.11.1928 நாளிட்ட அரசாணை எண்: 1071 மூலம் சட்டமாக்கினார். இச்சட்டத்தின் படி, அரசு பணியிடங்களை 12 அலகுகளாகப் பிரித்து பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 5 பேர், பார்ப்பனர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர் மற்றும் பிறமதித்தனர் தலா 2 பேர், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவர் என பிரதிநிதித்துவப்படி பணியாணை வழங்க அரசு அணை பிறப்பிக்கப்பட்டது. இதுவே இன்று வரை வரலாற்று சிறப்புமிக்க இட ஒதுக்கீட்டின் Communal G. O ஆகும்.  1947 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற ஓமந்தூர் ராமசாமியார் வகுப்புரிமை அரசாணையைத் திருத்தி  பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 6 பேர், பார்ப்பனர்,  பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் தலா 2 பேர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர் தலா ஒருவர்  என 14 அலகுகளாக பிரித்து  அரசாணை பிறப்பித்தார். இதன் மூலம் 1100 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது மட்டுமல்ல   அனைத்து துறைகளிலும் ஆட்சி புரிந்த மேலாதிக்க சாதியினரின் சனாதன ராஜ்ஜியம் சரியத் தொடங்கி புழுதி மண்ணில் புரண்டு கிடந்த பூர்வ குடிகள் ஆட்சி அதிகாரம் தழைத்தோங்க ஆரம்பித்தது.

அவ்வப்போது, சனாதானவாதிகளின் குறுக்கீடுகள் இருந்த போதிலும் தமிழகத்தில் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த பிரதிநிதித்துவ முறைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்து வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக அமைந்தது. அதாவது 1872 ஆம் ஆண்டு மேயோ பிரபு காலத்தில் துவங்கி, 1881 ஆம் ஆண்டு ரிப்பன் பிரபு காலத்தில் முறையாக நடத்தப்பட்டதுடன் 10 ஆண்டுகளுக்கு  ஒருமுறை நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.  1931 வரை சாதிவாரி கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. 1941 முதலாம் உலகப் போரைக் காரணம் காட்டி அன்றைய பிரிட்டிஷ் அதிகாரி ஈட்ஸ்,  ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது’ என்று அறிவித்துவிட்டார். அதன் பிறகு, சுதந்திர இந்தியாவில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் தவிர யாருக்கும் இட ஒதுக்கீடு இல்லை என்கிற காரணத்தினால் அவ்விரு இனமக்களின் கணக்கெடுப்புதான் முறையாக நடந்து வந்தது. எனவே, 1931-ல், எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் இதர  பிற்படுத்தப்பட்ட மக்களின் இறுதி சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும்.  தமிழகத்தில் Communal G. O மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து செண்பகம் துரைராசன் மற்றும் C. R.  ஸ்ரீனிவாசன் என்ற உயர் ஜாதியினர் தொடுத்த வழக்கில் இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதையே, உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது. நீதிக்கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டதால், அதன் வழி வந்த பெரியாரின் தலைமையிலான தி.க-வும், பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திமுக-வும் வலுவான எதிர்ப்பை தெரிவித்து, போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக, சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு அவர்களின் முன்னேற்றம் கருதி மாநில அரசாங்கம் செய்யும் எந்த தனி ஏற்பாட்டையும் அரசியலமைப்பு சட்டத்தின் 15-வது விதியின் ஒரு பிரிவோ அல்லது 25-வது விதியின் 2-வது உட்பிரிவோ என்று தடை செய்யாது என்று முதல் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.  இதற்கான தீர்மானத்தை, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு 10.5.1951-ல், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பாராளுமன்ற விவாதங்களுக்குப் பிறகு 18.6.1951-ல் சட்டமாக்கப்பட்டது.

1951ல் குமாரசாமி ராஜா தலைமையிலான தமிழக அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 16%, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 25%, என 41% இட ஒதுக்கீடு செய்தது. 1969-ல்  ஆட்சி பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை ஆய்வு செய்ய சட்டநாதன் குழு அமைத்து அக்குழு  அளித்த அறிக்கையின்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 31%,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 18% என்று இட ஒதுக்கீடு விகிதத்தை உயர்த்தி அறிவித்தார். 1979-ல் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அதிமுக செய்த அறிமுகம் செய்த எம்.ஜி.ஆர், அந்த தேர்தலில் கிடைத்த படுதோல்வியை அடுத்து,  1980-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தி, மொத்தம் 68%-ஆக உயர்ந்தது. 1987-ல், வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினர் தங்களுக்கான பிரதிநிதித்துவம் தனியாக தேவை என்று போராடிய போது அன்றைய எம்ஜிஆர் அரசு, 25 பேரை சுட்டுக் கொன்றது. அதற்கு பிறகு, 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி பிற்படுத்தப்பட்ட வகுப்பை இரண்டாகப் பிரித்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% (வன்னியர் உள்ளிட்ட 106 உட்பிரிவுகளுக்கும்), தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18%, மேலும் பழங்குடியினருக்கு 1% என இட ஒதுக்கீட்டு விகிதம் 69%-ஐ எட்டியது.  இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் 69% இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

1992-ல் இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் 50% உச்சபட்ச இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயித்தது. இதனால் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட  ஒதுக்கிட்டிற்கு ஆபத்து வருமோ? என்ற அஞ்சி தி.க, திமுக மற்றும் சமூக நீதி இயக்கங்கள் அதைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியதால், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமரை சந்தித்து 9-வது அட்டவணையில் சேர்த்து இட ஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை எடுத்தார். அதன் மூலம், இன்று வரை 69% தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த  நிலையில் துணை வகுப்பு வாரி முறை (உள் ஒதுக்கீடு) அறிமுகப்படுத்தப்பட வேண்டிய காலச் சூழல் ஏற்பட்டது. அதாவது, தாழ்த்தப்பட்ட சமூகத்திற்குள் அருந்ததியர் சமூகத்திற்கு தனியான பிரதிநிதித்துவம் தேவைப்பட்டது.  2006-ல், ஐந்தாவது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 25.3.2008-ல் நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் குழு தந்த அறிக்கையில் , அன்றைய தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 15.7% அருந்ததி மக்களுக்கு 3% பரிந்துரை செய்தது.  அதாவது  பட்டியல் சமூகத்திற்கான 18% ஒதுக்கீட்டில் 3% அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் முடிவை  27.11.2008-ல் எடுத்ததைத் தொடர்ந்து 29.4.2009-ல் உள் ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதோடு, 8.7.2007 அன்று, தமிழக முஸ்லிம்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான 30% ஒதுக்கீட்டிலிருந்து 3.5%-ஐத் தனியாக உள் ஒதுக்கீடு செய்து, 12.9.2007 அன்று, அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டார்.

இதைத் தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு தனியாக 10.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இத‌னிடையே 2011 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது . வன்னியர் உள்ஒதுக்கீடு, சம்பந்தமாக  ஆய்வு செய்ய 12.12.2020-ல், நீதிபதி குணசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து, அந்த ஆணையம் முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் முன்னரே, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வன்னியர்களுக்கு தனியாக 10.5% உள் இட ஒதுக்கீட்டு வழங்கி 26/02/2021 அன்று ஆணை பிறப்பித்தார்.வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, 25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதிகள், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது ஆனா‌ல் செ‌ன்னை உய‌ர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்பிசிக்களில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடும்போது வன்னியர்களை தனிக் குழுவாகக் கருதுவதற்கு சட்டம் எந்த கணிசமான அடிப்படையையும் வழங்கவில்லை என்பது கருத்து. எனவே, 2021 சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அது கூறியது.

சட்டம் இயற்றும் அரசின் அதிகாரத்திற்கு எந்த தடையும் இல்லையென்றாலும், அத்தகைய உள் இடஒதுக்கீட்டிற்கு சாதி அடிப்படையாக இருக்க முடியும் என்றாலும், அது மட்டுமே அடிப்படையாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா சாவ்னி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிடும் பெஞ்ச், “சாதி அடிப்படையிலான வகைப்பாடு பிரச்சினையில்”, “சாதி ஆரம்ப புள்ளியாக இருக்க முடியும் ஆனால் ஒரே அடிப்படையாக இருக்க முடியாது என்று கூறியது. அதேபோல், ஜாதியானது உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்க முடியும், ஆனால் அந்த முடிவின் நியாயத்தை உறுதி செய்ய  சாதி மட்டுமே அடிப்படை அல்ல என்பதை நிரூபிப்பதும் மாநில அரசின் கடமையாகும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஆட்சி மாறி திமுக ஆட்சிக்கு வந்தது வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி ஆய்வு மேற்கொண்ட போது இந்த விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதிலும் சமூக நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில்தான்  தீர்வு காண முடியும் என்பதை புரிந்து கொண்டார். ஆனால் அந்த கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் இருப்பதாக மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு பீஹார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் உறுதியாக தெரிவித்துள்ளது  எனவேதான் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய பாஜக அரசை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.   அப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் அதிகாரப்பூர்வமாக இந்த இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முடியும் என்று முதல்வர் சொன்னார். ஆனால் அரசியலுக்காக அதிமுக மற்றும் பாமக ஆடிய அழுகுணி ஆட்டத்தில் திமுகவை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.  எனினும்

அரசியலுக்காக அல்லாமல் சமூக நீதி கொள்கையில் ஆழ்ந்த பற்று கொண்ட திமுக அரசு விரைவில் hஇதை நிறைவேற்றி காட்டும். மாநில அரசு என்பது எந்த தனி ஒரு சமூகத்திற்கும் சொந்தம் அல்ல. அது எல்லாருக்கும் பொதுவான அட்சய பாத்திரம். அள்ளிக் கொடுக்கும் மனம் படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்னியர் கேட்கும் நியாயமான உரிமைககளை நிச்சயம் நிறைவேற்றுவார் .