அதற்கு மேல் அறையில் படுத்திருப்பதற்கு சிரமமாக இருந்தது. லேசாகப் பசித்தது. முதல் நாள் இரவு மிகவும் தாமதமாக உணவு அருந்தியதும் ஒரு வகையில் நல்லதுதான். காலையில் எழுந்தவுடனே பசிக்கவில்லை. ஒரு தேநீர் அருந்தியது போதுமானதாக இருந்தது. செந்திலுக்கு காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தியே ஆகவேண்டும் என்பதால், தெருமுனையில் இருக்கும் டீக்கடையில் இருந்து அந்த சிறுவன் இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் தேநீர் கொண்டு வந்து தந்திருந்தான். இன்னொரு கிளாஸை நான் எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டேன். இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு கொஞ்சம் இடமும் அதையொட்டிய குளியலறையும் ஒரே ஒரு படுக்கையறையும் கொண்ட அந்த வீட்டில் சன்னல் எதுவும் இல்லாததால் ஈரமும் புழுக்கமும் கொண்ட அவிந்த மனம் எப்போதும் இருக்கிறது. அதுவும் கூட எங்காவது வெளியில் போய்விட்டு உள்ளே வந்தால் அந்த வாடை முகத்தில் வந்து மோதும். பாயில் படுத்துக்கொண்ட சற்று நேரத்தில் பழகிவிடும். எப்போவாவது அபூர்வமாக அறைக்கு வரும் செந்திலின் நண்பர்கள் கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பதற்கு இந்த நாற்றம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நான் பாயில் சுருண்டு படுத்துக்கொண்டு அவர்கள் பேசுவதை எப்போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கும் வேலை கிடைத்துவிட்டால் நண்பர்கள் கிடைத்துவிடுவார்கள்.
செந்திலின் நண்பர்களை என்னுடைய நண்பர்களாக நினைக்க முடிவதில்லை. தயக்கமாக இருக்கும். மது அருந்தும்போது அந்தத் தயக்கம் விலகும் நேரங்களில் அவர்கள் என் மீது அதீத கரிசனம் கொண்டார்கள். வேலை தேடி அலைந்த நேரம் போக மீதி நேரங்களை நான் எப்படி அறையிலேயே கழிக்கிறேன் என்று ஆச்சர்யமடைந்தார்கள். அறையில் தொலைக்காட்சி இல்லை என்பதும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. செந்திலுக்குத் தொலைக்காட்சி பார்க்கப் பிடிக்காது என்பதைத் தவிர, அறையில் தொலைக்காட்சி இல்லாததற்கு சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எனக்கு படம் பார்க்கப் பிடிக்கும். அதனால் என்னிடம் இருக்கும் சாம்சங் போனில் முடிந்தவரை நான் படங்களைப் பார்த்துக்கொள்கிறேன். அலைபேசியின் திரையில் கீழிருந்து மேலாக ஒரு கீறல் இருக்கிறது. ஆனால் அது படம் பார்ப்பதற்கு அத்தனை தொந்தரவாக இருப்பதில்லை.
“அவன் பாக்குற படத்தை நம்மால ஒரு அஞ்சு நிமிஷம் கூட பாக்க முடியாதுடா, அவ்ளோ கண்றாவியா இருக்கும்…” என்று செந்தில் தனது நண்பர்களிடம் அலுத்துக்கொள்வான்.
“எப்படி ப்ரோ பொழுது போகுது? எவ்ளோ நேரம் ரீல்ஸ் மட்டுமே பாப்பீங்க…?”
“இல்ல, நான் ரீல்ஸ், ஷாட்ஸ்லாம் பாக்க மாட்டேன்…!”
“அப்புறம்…?”
“படிப்பேன்…”
“என்ன படிப்பீங்க…?”
அதற்கு எப்போதும் பதில் சொல்வதில்லை. அதுவொரு சம்பிரதாயமான கேள்வி. நான் பதில் சொல்லவில்லையென்றாலும் அது பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை என்பதால் அமைதியாக இருந்துவிடுவேன். பேச்சு எப்படியோ வேறு திசையை நோக்கி நகர்ந்துவிடும். அந்த இருட்டான அறையின் மூலையில் இருக்கும் சிமெண்ட் அலமாரியில் எனது உடைகளோடு உடையாக கலைந்து கிடைக்கும் புத்தகங்களை யாரும் இதுவரை கவனித்ததில்லை. அவர்களையும் குறை சொல்ல முடியாது, உற்றுப் பார்த்தால்தான் எங்களுக்கே தெரிகிறது. செந்திலுக்கு வாசிக்கும் பழக்கம் இல்லாததால், அது பற்றிய உரையாடல்களும் நடப்பதில்லை. அது எனக்கு ஆசுவாசமாக இருந்தது. அந்தரங்கமான தனிமையை பராமரித்துக்கொள்ள எனக்கு அது உதவியது. வாசிப்பது குறித்து ஃபேஸ்புக்கில் கூட நான் எதுவும் எழுதுவதில்லை. வாசிப்பது, தனியாக இருக்கையில் அது குறித்து கற்பனை செய்வது, கதையில் வரும் பாத்திரங்களை மாற்றியமைத்து அதனுடன் மானசீகமாக உரையாடுவது என்பதாக எனக்கு பொழுது போகிறது.
சென்னைக்கு வந்து ஆறு மாதம் ஆகிவிட்ட போதும் வேலை கிடைக்காமல் இருப்பதற்கு, எனது சோம்பேறித்தனமும் ஒரு காரணமாக இருக்குமோ என்று எனக்கே அவ்வப்போது சந்தேகம் வந்தது. இல்லை. அம்பத்தூர் எஸ்டேட், பெருங்குடி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை என்று வேலை தேடி அலையாத இடம் இல்லை. கிடைக்கவில்லை. அல்லது கிடைத்த இரண்டு வேலைகளிலும், சில வாரங்களுக்கு மேல் நிலைக்க முடியவில்லை. அதற்கு என்னுடைய பலவீனம் எதுவும் காரணம் இல்லை என்று எனக்கு தெளிவாகத் தெரியும். செந்தில், அறைக்கு வாடகை கேட்பதில்லை. சாப்பாட்டுக்கு ஒன்றும் பெரிதாக செல்வாவதில்லை. மாதத்துக்கு ஒருமுறை ஊருக்குச் செல்கையில் அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா தரும் காசு போதுமானதாக இருக்கிறது. மீறிப் போனால், சென்னையிலேயே இருக்கும் கல்லூரி கால நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொள்ள முடிகிறது. செந்திலிடம் அப்படியான நெருக்கம் அமையவில்லை. அவனும் சாப்பிட காசு இருக்கா என்று கேட்பதில்லை. நான் அவனது அறையில் இருக்கிறேன் என்பதைத்தாண்டி என் இருப்பு அவனை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. முழு இரவும் அறைக்கு வராமல் இருந்தாலும், மறுநாள் அறைக்கு வரும்போதுதான் “எங்கடா போயிருந்த…” என்று கேட்பான்.
காலையில் இரண்டு தேநீரில் ஒன்று மிச்சம் இருக்கையில் மட்டும் நான் இல்லாதது அவனுக்குத் தோன்றுமோ என்னவோ.
“எங்கடா போன…?”
ஒப்புக்கு எதாவது சொல்வேன்… அடுத்த கேள்வி இருக்காது. அது எனக்கும் வசதியாக இருக்கும். அவன் அலுவல் ரீதியாக எங்காவது போனால் அவன் எத்தனை நாள் கழித்துத் திரும்பி வந்தாலும் நான் எதுவும் கேட்பதில்லை. ஆரம்பத்தில் அவனுக்கு அது விசித்திரமாக இருந்திருக்கவேண்டும். பிறகு அப்படி இருப்பதில் என்னைப் போலவே ஒருவித சொகுசைக் கண்டடைந்திருந்தான். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் இருவரைப் போல அல்லது ரயில் நிலைய சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர்களைப் போல என்று நான் அதை ஆலோசிப்பதுண்டு. செந்திலுக்கு இத்தகைய உவமைகள் தோன்ற வாய்ப்பில்லை. அவனுக்குத்தான் வாசிக்கும் பழக்கம் கூட இல்லையே! உவமைகள்தான் தோன்றாதே தவிர, இதைப் போன்ற சொகுசுகளை அவனால் எளிதாக வரித்துக்கொள்ள முடிகிறது.
செந்தில் கிளம்பி வேலைக்குப் போய்விட்டான். மறக்காமல் மின்விளக்கை அணைத்துவிட்டுப் போயிருந்தான். அவனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் கதவைப் பழையபடி சாத்தி வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டுக் கிளம்பியிருந்தான். சன்னல் இல்லாத அந்த அறை முழு இருட்டுக்கு வந்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று முயன்று பார்த்தேன். தூக்கம் வரவில்லை. பிறகு வெறுமனே படுத்துக்கிடந்தேன். அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். பத்து மணியாகி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஏதாவது படிக்கலாம் என்று இருந்தது. படிக்கவேண்டும் என்றால், மின்விளக்கைப் போடவேண்டும். ஆனால் அந்த இருட்டிலேயே இருக்கவேண்டும் போல இருந்தது. வெளிச்சம் ஒரு அத்துமீறலாகவே எப்போதும் இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு மேல் அப்படியே கிடந்தேன். பசிக்க ஆரம்பித்துவிட்டது. எழுந்து குளியறைக்குப் போய் பல் துலக்கி முகம் கழுவினேன். குளித்து விடலாமா…? பல் துலக்கிய சொற்ப நேரத்துக்குள்ளேயே குளியறைக்குள் வெளிப்பட்ட புழுக்கம் உடலை நனைத்துவிட்டிருந்தது. இப்போது குளித்தால், குளித்தது போலவே இருக்காது என்பதால் வெளியே வந்து சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அலமாரியில் பேண்டுக்கு அடியில் கைவிட்டு அங்கிருந்த சொற்ப பணத்தை எடுத்து அப்படியே கால் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். பூட்டும் சாவியும் கதவை ஒட்டிய கைப்பிடியில் இருந்தது. பூட்டினேன். நடந்து தெருமுனைக்கு வந்தபோது, தண்ணீர் லாரி வந்துவிட்டிருந்தது. நைட்டியுடன் இருந்த பெண்கள் கும்பலாக தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
சங்கீதா எப்போதும் போல ஒரு குடத்துக்கு இரண்டு ரூபாய் என்று வாங்கி அதை டேங்கர் லாரி ஓட்டுனரிடம் கொடுக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தாள். நைட்டியைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு, குடங்களை வாங்கி வைப்பதும், நிரம்பிய குடத்தை நகர்த்துவதுமாக பரபரப்பாக இருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் பெரிய முலைகள். தளும்பும் அவை அதிர்வுடன் அசைந்துகொண்டிருந்தன. சில நேரங்களில் ஒரு சிறிய நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு தண்ணீர்க் குடங்களை நிர்வகிப்பாள். அவளது லூசான நைட்டியின் வழியாக பார்க்கக் கிடைக்கும் அவளது கிளிவேஜ் அழகாக இருக்கும். அவளுக்கு என் மேல் கிரஷ் இருந்தது. கேலி செய்வாள். தண்ணீர்க் குடத்துக்குத் தர என்னிடம் சில்லறைக் காசு இல்லையென்றால், அதைப் பொருட்படுத்த மாட்டாள். நான் செல்வதற்குத் தாமதமாகும் சமயங்களில், டேங்கர் லாரி கிளம்பிவிட்டாள் கூட, அவளிடம் இருக்கும் உபரி குடத்தில் தண்ணீர் பிடித்துவைத்திருப்பாள். எனக்கு அவளை விட அவளது முலைகள் பிடித்திருந்தன. அவள் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு நடக்கையில் நான் நிதானமாக அவளை ரசிப்பேன். அவளுக்கு அதைப்பற்றி போதம் இருக்குமா என்று தெரியவில்லை. எப்படி அவள் அதை மறைப்பதற்கு மெனக்கெடுவது இல்லையோ அதே போல என்ன வசீகரிப்பதற்கும் அவள் முயல்வதில்லை. எனக்கு அவள் மீது காமம் தோன்றுவதற்கு அது கூட காரணமாக இருந்திருக்கலாம். ஈரம் படர்ந்த நைட்டி ஒட்டியிருக்கும் அவளது பசிய முலைகள் நிறைய முறை என் சுயமைதுனத்துக்கு உதவியிருக்கிறது. இருபது வயதுக்கு மேல் இருக்கும் என்றாலும் அவளது சுபாவத்தில் சிறுமியின் தன்மைகளே கூடியிருந்தன. எனக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட சம வயது தான் இருக்கும் என்றாலும், நான் ஏன் அவளை விட வயது கூடியவனைப் போல் யோசிக்கிறன் எனது எனக்கே சலிப்பாக இருந்தது.
அவள் மீது சமீபத்தில் சட்டென்று ஆர்வம் குன்றிப் போனது. நான் குடத்தை எடுத்துக்கொண்டு அவளது முலைகளைப் பார்த்தபடி நகரும்போது ஒருநாள், அந்த குட்டி நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் அண்ணாந்து என்னைப் பார்த்து சிரித்தாள். அவளது நாசி சுத்தமாயிருக்கவில்லை. காய்ந்த பற்றுடன் இருந்தது. அவள் மீதான வசீகரம் எனக்கு வடிந்துவிட்டது. அன்று முதல் அவளது முலைகள் என்னைக் கிளர்ச்சியூட்டவில்லை. எனது சுயமைதுனத்திற்கான நூலகத்திலிருந்து அவளது புகைப்படங்களை நீக்கிவிட்டேன். ஆனால் அவளைப் பார்த்து புன்னகைப்பதிலும் அவளது கேலிகளுக்குப் பதில் சொல்வதிலும் தடை ஏற்படவில்லை.
நான் அவளைக் கடக்கும்போது, “தண்ணீ…?” என்று என்னைப் பார்த்து கேட்டாள்.
“இருக்கு…!” என்று சொன்னேன்.
மாலையிலும் லாரி வரும் என்பதால் அவள் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
இடது புறம் திரும்பி சைதாப்பேட்டை ரயில் நிலையம் செல்லும் சாலையில் நடந்தேன். அதையொட்டி ஒரு மெஸ் இருக்கிறது. அங்கு ஊத்தப்பம் நன்றாக இருக்கும். காலையிலேயே ஆம்லெட் கிடைக்கும். ரெண்டு ஊத்தப்பமும் ஒரு ஆம்லெட்டும் சாப்பிட்டால் சாயந்திரம் வரை தாங்கும் என்ற எண்ணத்துடன் அங்கு போனேன். சாப்பிட்டுவிட்டு ரயில் நிலையத்தின் உள்ளே போய் உட்கார்ந்து மதியம் வரை வேடிக்கை பார்ப்போம் என்பதுதான் திட்டமாக இருந்தது. மொபைல் டேட்டா இன்னும் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால் கையில் கிடைத்த ஒரு கவிதைப் புத்தகத்தையும் எடுத்துவந்திருந்தேன்.
மெஸ்ஸில் கூட்டம் இல்லை. இருக்கைக்கு அருகில் கிடந்த காலி நாற்காலியில் புத்தகத்தை வைத்துவிட்டு, உள்ளே போய் கை கழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். பரிமாறுபவனுக்கு என்னைத் தெரியும். மெலிதான புன்னகையுடன் ஊத்தாப்பத்தைக் கொண்டு வந்து வைத்தான்.
ரயில் நிலையம் காலை நேர பரபரப்பு முடிந்து அமைதியாக இருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆட்களின் தலைகள் தெரிந்தன. அடுத்த மின்சார ரெயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நேரத்திலும் ஆட்கள் சேகரமாகிக்கொண்டிருந்தார்கள்.
சில மாதங்களாக இந்த ரயில் நிலையத்துக்கு வருவது, அங்கு கிடக்கும் சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் உட்கார்வது, வேடிக்கை பார்ப்பது, அங்கிருக்கும் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்குவது, கையில் எதுவும் புத்தகம் இல்லாதபோது அந்தக் கடையில் இருந்து ஆனந்த விகடனோ, ஜுனியர் விகடனோ அல்லது குமுதமோ வாங்கிப் படிப்பது என்பது வழக்கமாகியிருக்கிறது. அங்கு வாங்கும் புத்தகங்களை அறைக்கு எடுத்துப் போவதில்லை. அப்படியே அந்த பெஞ்சில் வைத்துவிட்டு எழுந்து போய்க்கொண்டிருந்தேன். ஒருநாள் நான் எதேச்சையாக திரும்பிப் பார்க்கையில், என் தலை மறைந்ததும் அந்தக் கடைக்காரனே வந்து அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய் மீண்டும் கொக்கியில் மாட்டுவதைப் பார்த்தேன். எனக்கு அவனது செய்கை பிடிக்கைவில்லை. இத்தனைக்கும் அடிக்கடி நான் அங்கு சென்று உட்கார்வதில் அவன் எனக்கு பரிச்சயமாகியிருந்தான். புன்னகைப்பான், ஏதாவது என்னிடம் கேட்பான். “படித்துவிட்டு, நீங்க எடுத்துக்கொண்டு போகவில்லை என்றால், என்னிடமே கொடுத்துவிடுங்கள் ப்ரோ” என்று அவன் என்னிடம் கேட்டிருக்கலாம். காசு கொடுத்து வாங்கி, பிறகு படித்துவிட்டு அதை அவனிடம் திருப்பிக் கொடுப்பதற்கு நான் தயங்குவேன் என்று அவன் நினைத்திருக்கலாம், அல்லது திரும்பி வாங்கிக்கொள்ளும் புத்தகத்தை முழு விலைக்கு விற்பது அவனுக்கு சங்கடமாக இருந்திருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், அவன் எப்போது நான் புத்தகத்தை வைப்பேன் என்று காத்திருந்து அதை எடுத்துக்கொண்டு போய் மீண்டும் விற்பனைக்கு வைத்தது எனக்கு அதிருப்தியாக இருந்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு, புத்தகத்தை அந்த பெஞ்சில் வைத்துவிட்டு வராமல் திரும்பி வரும்போது ரயில்வே டிராக்கைக் கடக்கும் வழியில், அதைப் போட்டுவிட்டு வந்தேன். ஒருமுறை அதை எடுத்துக்கொண்டு என் பின்னாலயே ஓடி வந்து என்னிடம் தர முயன்றான் ஒருத்தன். எனக்குத் தெரியாமல் என் கையிலிருந்து நழுவி விட்டதாக அவன் நினைத்துவிட்டான். கல்லூரி செல்பவன் போல இருந்தான்.
“இல்ல, நானே தான் தூக்கி போட்டேன், நீ வேணா படி…” என்று சொன்னேன். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. இறந்துபோய்விட்ட ஒரு அனிலைக் கையில் வைத்திருப்பவன் போல கொஞ்ச நேரம் தவிப்புடன் நின்றவன், பிறகு அதை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றான்.
நான் கையிலிருந்து புத்தகத்தின் நடுப்பகுதியில் பிரித்து ஒரு கவிதையை வாசித்தேன். “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்ற புத்தகம். மனுஷ்யபுத்திரன் என்று ஒரு கவிஞருடையது. எழுத வந்த காலத்தில் சிறிய சிறிய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சமீபகாலங்களில் அவரது நூல்கள் எல்லாம் தலையணை சைஸில் இருக்கின்றன. விலையும் அதிகமாக இருக்கிறது. அதனால் நான் வாங்குவதில்லை. இங்கு தூக்கிக்கொண்டு வந்து படிப்பதற்கும் சிரமம். சென்ற புத்தகச் சந்தையில் அவரது வாசகி ஒருத்தி ஒரு பெரிய புத்தகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள். நான் அந்தப் புத்தகத்தையும் அவளது முலையையும் ஒப்பிட்டுப் பார்த்து அதிருப்தியடைந்தேன். கவிதையைப் பொறுத்த வரை எனக்குக் குறைவான பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகங்களே வசதியாக இருக்கிறது.
தாம்பரம் மார்க்கமாக செல்லும் ஒரு ரயில் வந்து நின்றது. சொற்பமானவர்கள் இறங்கினார்கள். நிறைய பேர் ஏறினார்கள்.நான் ரயிலை நோக்கியபடி பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். ரயிலில் இருந்து இறங்குபவர்களிடம் பதட்டமில்லாத உடல்மொழியும், ரயிலை நோக்கி நடப்பவர்களிடம் கூட்டமே இல்லாவிட்டாலும் கூட கொஞ்சம் பரபரப்பான உடல்மொழியையும் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். இன்றும் அப்படித்தான் இருந்தது. அப்போது ரயிலுக்கு இணையாக நான் உட்கார்ந்திருக்கும் திசையை நோக்கி ஒருத்தி நடந்து வந்துகொண்டிருந்தாள். ரயிலில் ஏற வருபவள் போலவோ அல்லது ரயிலில் இருந்து இறங்கி வருபவளைப் போலவோ அவள் இல்லை. பரபரப்பான ஆட்களுக்கு மத்தியில் தனியாக ஒருத்தி மிதந்து வருபவளைப் போல இருந்தது அவளது சுபாவம். அத்தனை பரபரப்புக்கு நடுவிலும் அவள் தனியாகத் தெரிந்தாள். நான் அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவள் தனது முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கக் கூடும். மாநிறம். தோல் மினுமினுப்பாக இருந்தது. நடு வகிடு எடுத்து தலை சீவியிருந்தாள். கேசம் முழுக்கவும் காற்றில் அலைந்துகொண்டிருந்தது. கழுத்தில் சிறிய மணி. மிகச் சாதாரண புடவையும் ரவிக்கையும் அணிந்திருந்தாள். உடம்பில் கூடுதல் சதை என்று எதுவும் இல்லை. ஆனால் அவள் ஒல்லியாக இல்லை. நல்ல உயரமாக இருந்தாள். புடவையின் முந்தானையை இறுக்கமாக இடுப்பில் சொருகியிருந்தாள். நான் சற்று முன்பு படித்திருந்த கவிதையின் ஆதிக்கத்தில் இருந்தேன். அந்தக் கவிதைக்கும் அவளுக்கும் எந்தத் தொர்பும் இல்லை. அக்கவிதை பெண்களைப் பற்றிய கவிதையும் அல்ல. ஆனால் அக்கவிதை என்னைத் தொந்தரவூட்டியிருந்தது. விசித்திரமாக அது தனியாக நடந்துவரும் அவள் மீது பார்வையைக் குவிக்கத் தூண்டியது. ஒரு நல்ல கவிதை இருக்கும் சூழலில் இருந்து நம்மைத் தனியனாக்கும் போல. அது தனியாக நடந்து வரும் ஒருத்தியை, அல்லது கூட்டத்தில் இருக்கும் ஒருத்தியைக் கூட தனியாக இருக்கிறாள் என்று உருவகிக்க வைத்தது.
சில வினாடிகளில் நான் மீண்டும் கவிதைக்குள் தலையைப் புதைத்தேன். ரயில் நிலையம் மீண்டும் அமைதிக்குள் விழுவதை என்னால் உணர முடிந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன். நான் உட்கார்ந்திருந்த பெஞ்சின் மறுமுனையை ஒட்டி அவள் நின்றிருந்தாள். அவள் என்னை பிரத்யேகமாக கவனிக்கவில்லை. ஆனால் என்னைத் தவிர்க்கவும் இல்லை. அவளும் என்னைப் பார்த்தாள். அவள் புன்னகைக்கிறாளா, ஹலோ என்று சொல்வதைப் போன்ற பாவனையை வெளிப்படுத்துகிறாளா என்று எனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு அருகில் யாருமில்லை. அவள் சாவகாசமாக பெஞ்சின் அந்த முனையில் உட்கார்ந்தாள். அதுவொன்றும் அத்தனை நீளமான பெஞ்ச் அல்ல. நநான்கு பேர் நெருக்கியடித்து உட்காரலாம் அவ்வளவுதான். நான் புத்தகத்தின் நடுவே விரலை வைத்து மூடி என் மடியில் வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தேன். அவளும் திரும்பி என்னைப் பார்த்தாள். அவளைப் போல எந்த சமிக்ஞயும் இல்லாமல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. நான் மெலிதாகப் புன்னகைத்து என்னை சகஜமாக்கிக்கொள்ள முயன்றேன். அவளும் சிரித்தது போலவே தோன்றியது.
அவளது நெற்றி உயர்ந்திருந்தது. அங்கிருந்து நேர்க்கோடாக அவளது கூரான நாசி அவளை ஆளுமையானவளாகக் காட்டியது. அதற்குத் தொடர்பே இல்லாமல் அவளது கண்கள் சாந்தமாக இருந்தன. அவளது மேவாய் நுட்பமாக வரைந்தது போன்ற பள்ளத்துடன் அழகாக இருந்தது. சொற்ப விநாடிகளில் நான் இத்தனை தீவிரமாக அவளை ஆராய்ந்துவிட்டு புத்தகத்தை விரித்து அடுத்த கவிதைக்குப் போனேன்.
“என்ன புக் அது…?”
அவள்தான் கேட்கிறாள்.
நான் நிமிர்ந்து ஸ்நேகமான பாவனையில் புத்தகத்தை அவளிடம் நீட்டினேன்…
“இல்ல… நீங்க சொல்லுங்க என்ன புக்குனு…”
சொன்னேன். அவளுக்கு அதைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு அதில் ஆச்சர்யமில்லை.
“உங்களை நான் இங்க அடிக்கடி பாக்குறேன். நீங்க என்ன பண்றீங்க…?”
எனக்கு அவள் கேட்டது ஆச்சர்யமாக இருந்தது. நான் அவளை ஒருமுறை கூட அங்கு பார்த்திருக்கவில்லை.
“சும்மாதான் இருக்கேன். பக்கத்துலதான் ரூம். போரடிக்கும்போது இங்க வருவேன். படிச்சிட்டிருப்பேன். எதாவது வேடிக்கை பாத்திட்டிருப்பேன்…”
“இங்க என்ன இருக்கு வேடிக்கை பாக்க…”
சொல்லிவிட்டு என்னுடைய பதிலை எதிர்பார்க்காதவள் போல அவளாகவே சிரித்துக்கொண்டாள். நான் எதுவும் சொல்லவில்லை.
அவள் அமைதியாக உட்கார்ந்து வெறுமனே கிடந்த தண்டவாளங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். தூரத்தில் காக்கி உடை அணிந்த ஒரு போலீஸ்காரன் எங்களை நோக்கி வருவது தெரிந்தது. இப்போது அவளது உடல் மொழியில் விறைப்பு வந்துவிட்டது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள். சற்று முன்பு என்னிடம் இணக்கமாகப் பேசிக்கொண்டிருந்தவள் இல்லை அவள். இப்போது அவள் என்னிடமிருந்து முழுவதுமாக துண்டித்துக்கொண்டாள். எனக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாதவள் போல அமைந்திருந்தது அவளது இருப்பு.
ரயில் நிலையத்தில் காவலர்கள் இங்கும் அங்கும் நடப்பதை நான் கண்டிருக்கிறேன். அதனால் எனக்கு அதில் வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. வந்தவன் நேராக எங்கள் அருகில் வந்து நின்றான்.
“ஒன்னும் தொந்தரவு இல்லையே சார்…?” என்று என்னைப் பார்த்து கேட்டான். எனக்கு அவனது கேள்வி குழப்பமாக இருந்தது.
“இல்லை, தொந்தரவு ஒன்னும் இல்லை” என்று சொன்னேன். அவள் இந்த உரையாடலுக்குத் தொடர்பில்லாதவள் போல அதே விறைப்புடன் வேறெங்கோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். இப்போது நான் அவளது முகத்தைப் பார்த்தேன். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. சில வினாடிகள் எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த போலீஸ்காரன் எங்களைத் தாண்டி பிளாட்ஃபாரத்தில் நடக்கத் தொடங்கினான். அவன் விலக விலக அவளது உடல் தளர்ந்து நிதானத்துக்கு வந்தது. இப்போது என்னைப் பார்த்து பழைய இயல்புடன் புன்னகைத்தாள். எனக்கு அவளது செய்கை விசித்திரமாக இருந்தது. நான் மீண்டும் புத்தகத்துக்குள் நுழைந்துகொண்டேன்.
“என்னோட வீடு இங்க பக்கம்தான்…” என்று நான் வீடு திரும்பும் திசைக்கு எதிர்த் திசையில் ரயில்வே கேட்டுக்கு எதிர்ப்புறம் கைகாட்டினாள்…
“பீச் போற ட்ரைனுக்கு வெயிட் பண்றீங்களோ…”
“இல்ல, கஸ்டமருக்கு வெய்ட் பண்றேன்…”
“கஸ்டமர்னா…?”
“கஸ்டமர்னா… கஸ்டமர்தான்…!”
இப்போது அவளது சிரிப்பில் மெல்லிய சங்கடமும் வரவழைத்துக்கொண்ட சகஜமும் இருந்தது. அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. அதே நேரத்தில் அவள் இயல்பாக இருப்பதாகவும் பட்டது.
“அதனால்தான் அந்த போலீஸ்காரனைப் பார்த்ததும் முகத்தை திருப்பிகிட்டீங்களா..?”
“அப்படி ஒன்னும் இல்ல. அவங்களுக்குத் தெரியும். ஆனா எதாவது கஸ்டமர்கிட்ட நாங்களா பேசிடக் கூடாது, வலிய போயி கூப்பிட்டுற கூடாதுனு கண்டிஷன் பண்ணுவாங்க…”
“ஓ அதான் எங்கிட்ட வந்து ஏதும் பிரச்சினை இல்லையேன்னு கேட்டாரா…?”
“ஆமா. நல்ல வேலை நீங்க அப்படி ஒன்னும் சொல்லல…”
“நீங்க ஒன்னும் பிரச்சினை பண்ணலையே எங்கிட்ட” என்று சொன்னேன். என்னுடைய தொனி அவளுக்கு நகைப்புக்குரியதாக இருந்திருக்கவேண்டும். அல்லது வெகுளித்தனமாக தோன்றியிருக்கவேண்டும். ஒரு காலைத் தூக்கி பெஞ்சின் மீது வைத்துக்கொண்டு அதில் முழங்கையைப் பதித்தபடி உள்ளங்கையால் கன்னத்தில் தாங்கியபடி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். காற்றில் தலைமுடிகள் பறந்துகொண்டிருந்தன. அந்த சூழலில் அவள் மிகவும் ரம்மியமாகத் தோன்றினாள்.
நான் புத்தகத்தை மூடி எனக்கு பக்கத்தில் வைத்துவிட்டு, “ரொம்ப ரம்மியமா இருக்கீங்க…” என்று அவளிடம் சொன்னேன்.
“அப்படின்னா…?”
“அழகா இருக்கீங்க…!”
“ஓ..!”
அவள் எழுந்து போய் பக்கத்தில் இருந்த கடையில் இரண்டு ஜூஸ் பாட்டில்கள் வாங்கி வந்தாள். எனக்கொன்றைக் கொடுத்தாள். நான் சம்பிரதாயமாகக் கூட அதை மறுக்கவில்லை. இரண்டு பேரும் அதைக் குடித்தபடி மீண்டும் அமைதியாகக் கிடந்த தண்டவாளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். புறநகர் ரயில் ஒன்று அதீத சத்தத்துடன் ரயில் நிலையத்தில் நிற்காமல் தடதடவெனக் கடந்து மறைந்தது.
நான் அவளுக்கு இணையாக அவளுடைய வீட்டை நோக்கி அவளுடன் நடந்துகொண்டிருக்கையில், “நான் முன்னாடி நடக்கிறேன் நீங்க கொஞ்சம் இடைவெளி விட்டு என் பின்னாடி வாங்க…” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
“லெஃப்ட் சைட்ல ஒரு மாரியம்மன் கோவில் இருக்குல்ல, அதை ஒட்டி போற தெருவுல உள்ள போனா அஞ்சாவது காம்பவுண்ட்.” சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.
எனக்கு அவள் சொல்லும் தெருவைத் தெரிந்திருந்தது. அதுவும் செந்தில் இருக்கும் தெருவைப் போலவே இருக்கும். தெரு முனையில் பெரிய கருப்பு நிற பிளாஸ்டிக் தண்ணீர் டேங்க் இருக்கும். ஆண்கள் முண்டா பனியனுடன் பெண்கள் நைட்டியுடனும் தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதைத்தாண்டி ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது. சின்ன சந்துக்குப் பக்கத்தில் மாடியேறிப் போகவேண்டும். கசகசவென வியர்வையுடன் சாப்பிட்டு விட்டு வரலாம். ஆனால் சாப்பாடு நன்றாக இருக்கும்.
கோவிலையொட்டி வளைந்து நடந்தேன். இரண்டு பேர் இடித்துக்கொள்ளாமல் நடக்கிற அளவுக்கு நடைபாதையும் அதன் இருபுறமும் வரிசையாக அறைகளும் கொண்ட காம்பவுண்ட் வீட்டில் அவளது வீடு இரண்டாவதாக இருந்தது. ஒரே அறைதான். பத்துக்குப் பத்து இருக்கும். கதவுக்கு இடது பக்கம் ஒரு சிறிய சன்னல் இருந்தது. அது நடைபாதையை ஒட்டி இருந்ததால், எப்போதும் அதைத் திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்தேன். சன்னலுக்குக் கீழே ஒரு மர பெஞ்ச் இருந்தது. அதன் மீது அடுப்பு செட் பண்ணியிருந்தாள். பக்கத்தில் சுவரில் ஆணி அடித்து பதிக்கப்பட்டிருந்த இன்னொரு பலகையில் சமையல் பொருட்கள் இருந்தன. அறையின் குறுக்காக இருபுறமும் விலக்கும்படியான திரை தொங்கிக்கொண்டிருந்தது. திரையை விலக்கவும் சுவரை ஒட்டி ஒரு கட்டில் கிடந்தது. திரைக்கும் கட்டிலுக்கு ஒரு அடி இடைவெளிதான் இருக்கும்.
“உக்காருங்க…” என்று கட்டிலைக் காட்டினாள். நான் செருப்பைக் கழட்டி கதவு ஓரமாக விட்டுவிட்டு கட்டிலில் போய் உட்கார்ந்தேன். இரும்புக் கட்டில் மெலிதாகக் கிறீச்சிட்டது. மெத்தை தடிமனாக அழுத்தமாக இருந்தது. மெத்தைக்கான எந்த சொகுசும் அதில் இல்லை. கொஞ்சம் மென்மையான மரக்கட்டிலில் உட்கார்ந்திருப்பது போல இருந்தது. சொற்ப பொருட்களே அறைக்குள் இருந்தன. சுவரில் பதிக்கப்பட்டிருந்த இன்னொரு அலமாரியில் அவளது துணிகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அலமாரிக்குக் கதவில்லை. அறை ரொம்பவும் சுத்தமாக இருந்தது. எங்களது அறையில் வருவதைப் போன்ற அவிந்த மனம் இல்லை. அந்த அறையின் தனிமையின் புழுக்கம் இல்லை. அறையில் நிரம்பியிருந்த பெண் தன்மை எனக்குப் பிடித்திருந்தது. அவள் வந்து என் அருகில் உட்கார்ந்தாள். நான் அப்படியே கால்களை நீட்டி அந்தக் கட்டிலில் படுத்துக்கொண்டேன். அவள் என் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி அவளது உடைகள் மடித்து வைக்கப்பட்டிருக்கும் அலமாரியின் மீது வைத்தாள்.
“அவள் வர்றீங்களா” என்று கேட்டபோது, “இல்லை எனக்கு ஆர்வம் இல்லை” என்றுதான் சொன்னேன். பிறகு காசு இல்லை என்று சொல்லியிருந்தேன். எனக்கு இப்போதும் கூட அவள் மீது எந்த ஆர்வமும் தோன்றவில்லை. ஆனால் அந்த அறை பிடித்திருந்தது. “பரவால்ல வாங்க” என்று என்னை ஏன் அவள் அங்கு அழைத்து வந்திருக்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேசியுடன் அவளது அறைக்குப் போய் அதை ரசித்துக்கொண்டிருப்பதில் எதுவும் சாகசம் இருக்கிறதா என்று ஆலோசித்தேன். செந்திலிடம் சொன்னால், அதில் அவனுக்கு ஆர்வம் வந்து “அப்படியா, என்னடா பண்ண…” என்று கேட்பானா என்று தோன்றியது. எனக்கே ஆர்வமில்லாத ஒரு விஷயத்தை அவனிடம் எப்படி ஆர்வத்துடன் பகிர்வது என்றும் குழப்பமாக இருந்தது.
அவளது அலைபேசி ஒலித்தது. ரவிக்கைக்குள் கையை விட்டு அலைபேசியை வெளியே எடுத்தாள். சிறிய மட்ட ரகமான அலைபேசி. நம்பர்கள் எல்லாம் தேய்ந்து போயிருந்தன. “என்னால் நீ சொன்ன நேரத்துக்கு வர முடியவில்லை, இன்னொரு நாள் வருகிறேன்” என்று எதிர்முனை சொல்வது எனக்கே கேட்டது. அந்தக் குரலை வைத்து வயதை அனுமானிக்க முடியவில்லை. அவள் வேறு ஏதோ அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அதுவொரு உரையாடலாக நீண்டது. ஒரு கையால் செல்போனில் பேசியபடி இன்னொரு கையால் என் கால்களை மாற்றி மாற்றி அமுக்கிவிட்டாள். நான் இன்னும் கொஞ்சம் கீழே நகர்ந்து என் கால்களை எடுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டேன். அவள் பேசிக்கொண்டே என் கால்கள் முழுக்க அமுக்கி விட்டாள். அலைபேசியை அவ்வப்போது மற்றொரு கையில் மாற்றிக்கொண்டு என் கால்களை அமுக்கிக்கொண்டே இருந்தாள். எனக்கு அது அத்தனை இதமாக இருந்தது. தூக்கம் கண்களைச் சுழற்றியது.
இப்போது அவளது அலைபேசியில் சார்ஜ் குறைந்துவிட்டது. எதிர்முனையில் அவன் ஏதோ தீவிரமாக சொல்லிக்கொண்டிருந்தான். நான் என்னுடைய போனை அவளுக்குள் கொடுத்தேன். அந்த உரையாடல் முடிந்ததும், அவளுக்கு வேறு சில எண்களுக்கும் அழைக்க வேண்டியிருந்தது. என்னுடைய அலைபேசியில் இருந்தே அழைத்தாள். எந்த நபருக்கும் பெயர் இல்லை. ஒன்று இரண்டு என்றே பெயர்களை சேமித்திருந்தாள். பதினெட்டாவது எண்ணின் நம்பரை எடுத்து என்னை டயல் பண்ணித் தரச் சொன்னாள். பிறகு என்னிடம் போனைக் கொடுத்துவிட்டு வெளியே போய் ஒரு குவளையில் தேநீர் வாங்கி வந்தாள். சூடான தேநீரை அவள் ஆற்றியது நளினமாக இருந்தது. இருவரும் அருந்தினோம். பிறகு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். நான் அவளது பெயரைக் கூட கேட்கவில்லை. நான் அப்படியே உறங்கிப் போனேன். எனக்கு வந்த அலைபேசி அழைப்பு என்னை எழுப்பி விட்டது. அந்தப் பதினெட்டாம் நம்பர் கஸ்டமர். நான் போனை அவளிடம் கொடுத்தேன். வாங்கிப் பேசியவள், அவன் வந்துகொண்டிருப்பதாக என்னிடம் சொன்னாள்.நான் கிளம்புவதற்குத் தயாரானேன்.
அவள் நிலைப்படியில் நின்று என்னை வழியனுப்பி வைத்தாள். ரவிக்கைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணம் எடுத்து என்னிடம் கொடுத்து, வச்சிக்க என்று சொன்னாள். அப்போது நான் அந்த நடைபாதையில் நின்று என் உடலை வளைத்து செருப்பின் வாரை மாட்டிக்கொண்டிருந்தேன். வரும் வழியில் அந்த ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வந்து செந்திலின் அறையில் படுக்கும்போதுதான், “அவள் ஏன் காசு கொடுத்தாள்” என்பது அபத்தமாகத் தோன்றியது. நான் மறுத்திருக்கவேண்டும் நினைத்தேன். அதே சமயம் அவள் பணம் கொடுத்ததும் எனக்குப் பிடித்திருந்தது. ஊருக்குப் போய் இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிறது. என்னிடம் பணம் இருக்கவில்லை. அம்மாவுக்கு வேறு வகைகளில் பணம் அனுப்பத் தெரியாது. வீட்டிற்குப் போனால் மட்டும் தான் அவளால் எனக்குப் பணம் கொடுக்க முடியும்.
அதற்குப் பிறகு நான்கைந்து முறை அவளை ரயில் நிலையத்தில் வைத்துப் பார்த்தேன். பேசிக்கொண்டிருப்போம். சில சமயம் அவளது கஸ்டமர்கள் என்னை அழைத்தார்கள். ஒருமுறை எங்கள் ரூமுக்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்ட ஒருத்தனை நான்தான் செந்திலின் வண்டியில் அழைத்துக்கொண்டு போய் அவள் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு வந்தேன். ஒருமுறை அந்தப் போலீஸ்காரன் அவளது அலைபேசியைப் பிடுங்கி தண்டவாளத்தில் எறிந்து உடைத்துவிட்டிருந்தான். அவள் இன்னொரு போன் வாங்குவதற்கு ஒரு வாரம் ஆனது. அப்போது நான்தான் அவளுக்கு உதவி புரிந்தேன். அவளது கஸ்டமர்கள் எனக்குதான் அழைப்பார்கள். அதில் ஒரு அழைப்பை செந்தில் எடுத்தபோதுதான், “அட பிம்ப் தாயோளி” என்று என்னை அறைந்து அந்த நடு ராத்திரியில் அறையை விட்டு வெளியேற்றினான்.
எங்கு செல்வது என்று தெரியாமல் நள்ளிரவில் நீண்ட நேரம் நான் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அவளிடமிருந்து அழைப்பு வந்தது. வழக்கமாக அப்படியான நள்ளிரவுகளில் என்னை அழைப்பவள் இல்லை அவள். நான் அவளது எண்ணை Home 2 என்று சேமித்து வைத்திருந்தேன். அந்த அழைப்பை நான் எடுக்கவில்லை. அதற்குப் பிறகு அவள் என்னை அழைக்கவே இல்லை.