‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்’

இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்பொழுது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே அவன் எழுதிய எழுநூறு பக்க நாவல் அக்னிக்கு உணவாவதை அவன் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவனே எரிந்து கொண்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. இந்த அநுபவம் எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்? அதோ அங்கே எரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் அவன் உதிரத்தில் பிறந்தது. அவனுக்கே சொந்தமானது. அவனுக்கே மட்டும் புரியக்கூடிய புனிதமான அந்தரங்கம்.

இலக்கிய உலகம் அவன் எழுத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. அதனால்தான் அவன் தன்னுடைய மாபெரும் படைப்பை எரிதழலுக்கு அர்ப்பணித்து விட்டான். அதோ அது எரிந்து கொண்டிருக்கிறது!

‘தலைப்பு நன்றாக இருக்கிறது.இதை வைத்துக்கொண்டு வேறொரு நாவல் எழுதித் தாருங்களேன்’ என்கிறான் ஒருவன். இன்னொருவன், ‘இதை எட்டுப் பக்கங்களில் ஒரு சிறு கதையாக்கித் தர முடியுமா?’ என்று கேட்கின்றான். எல்லாவற்றையும் விட, தன்னை ஒரு விமர்சகனாகப் பாவித்துக் கொண்டவன் சொன்னதுதான், தான் எழுதியதை எரிக்கத் தூண்டியது அவனை.. ‘நல்ல எழுத்து ஜவ்வு மிட்டாய் மாதிரி மெல்வதற்குச் சுலபமாக இருக்க வேண்டும். கூழாங்கற்களாய் இருந்தால் யாரால் மெல்ல முடியும்?’ என்றான் அவன்.

அவன் எரிகின்ற ஜ்வாலையில் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். அவன் எழுதிய எழுத்துக்கள் புகைபுகையாய் வெளி வந்தன. பிறகு வட்ட வடிவமான வளையங்களாய்…… என்ன அழகான வளையங்கள்.!

அவன் கட்டிலில் போய் சாய்ந்து கொண்டான். தீடிரென்று ஒரு விவரிக்க இயலாத சோகம் அவனை ஆட்கொண்டது. அவன் ஒரு தோல்வியா? இந்தக் கேள்வி விஸ்வரூபம் எடுத்து அவன் முன் நின்றது.

எது வெற்றி? எது தோல்வி?

அவன் நண்பன் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து விட்டு அரிச்சுவடி கூட தெரியாத மந்திரிகளிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறான். இதுவா வெற்றி? அவனால் அவன் எழுதியவற்றை எரிக்க முடியும், அவன் நண்பனால் அலுவலகக் கோப்புக்களை எரிக்க முடியுமா? அவ்வாறு எரிப்பதற்கு முன்னால், அவன் எத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவசியமாகிறது! அரசாங்கம் அவனுக்குக் கொடுத்திருக்கும் கார், மனைவியின் சிவந்த உடலை அலங்கரிக்கும் தங்க ஆபரணங்கள், வைர நெக்லெஸ், பங்களா, வேலைக்காரர்கள்.. தேவைக்கு மேல் தேவையை அதிகரித்துக் கொண்டு ஆடுகின்ற சூதாட்டத்தின் விலை.. மந்திரிகளிடம் மண்டியிட வேண்டும்!

ஆனால் தான் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியமில்லை. எழுதி எழுதி எரிக்கலாம். அவனைப் படைப்பாளியாகப் பெறுவதற்கு இந்தத் தமிழ் உலகுக்குத் தகுதி இல்லை என்பதினால் நஷ்டம் யாருக்கு?

அனைத்துப் பக்கங்களும் எரிந்து ஓய்ந்தன. அவன் அதனருகில் சென்று அந்தச் சாம்பலைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. இந்தச் சாம்பலைப் பொட்டலமாகக் கட்டி அந்த விமர்சகனுக்கு அனுப்பி வைக்கலாமா? ‘இது என் நாவலின் எளிய மறு வடிவம்.. ‘ஜவ்வு மிட்டாய் மாதிரி இல்லாவிட்டாலும், இப்பொழுது இந்த வடிவில், மெல்வது கடினமில்லை,’ என்ற குறிப்புடன்

சாம்பல் புனிதமானது.அது அஸ்தி. அவனுள் இருந்த ஏதோ ஒன்று எழுத்தாக மாறி, எரிந்து போன அஸ்தி.

ஒரு பிடிச் சாம்பலைக் கையில் எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டான்.’நீ என் ரத்தம். என் சிந்தனை..என் கற்பனை. நீ வேறல்ல, நான் வேறல்ல. நீதான் நான், நான் தான் அஸ்தியாகப் போகிற நான், அஸ்தியாகிவிட்ட என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்..பார்க்கின்றவனும், பார்க்கபடுகின்றவனும் ஒருவனே! தத்வமஸி.’ என்று உரக்க நாடகத்தில் வசனம் சொல்பவன் போல தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

‘இந்த வாசக உலகம் என்னைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அக்கறை எனக்குள் ஏன் எழுகிறது? ‘ என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. அவன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது, இதுதானே சுய உருவ வேட்டையின் எல்லைக்கல்?அப்படியிருக்கும் போது, அவன் ஏன் எழுநூறு பக்கங்களைத் தீயிலிட்டான்? யாரைப் பழி வாங்க வேண்டுமென்று?

தன்னையேதான்.

திடீரென்று அவனுக்கு அழுகை வந்தது. ‘ சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய்..’  ஆனால். ஆனால். அவன் வாழ்க்கையில் ஒரு தோல்வி..

அவனுக்கு வாசிப்பவர்களை ஈர்க்கும்படி எழுத வரவில்லை என்கிறார்கள்.அந்த விமர்சகன் சொல்வது உண்மையாக இருக்கலாம்..அற்புதமான அழகு மாளிகை அவன் மணக்கண் முன் நிற்கிறது. ஆனால் அதைத் திறந்து மற்றவ்ர்களுக்குக் காட்ட, சாவி அவனிடம் இல்லை!

அவனுக்கு எழுத வரவில்லை என்று யார் சொன்னார்கள்/ அவனுக்குப் பிடித்திருக்கிறது

அவன் எழுதுவது..அவன் அவனுக்காகத்தான் எழுதுகிறான். அப்படியானால் பிரசுராமாக வேண்டுமென்று ஏன் இந்த அரிப்பு? எழுதி எழுதி எரித்துத் தன்னையே அழித்துக் கொண்டு அவன் எழுதுகிறான்.. தினம் ஒரு தற்கொலை! இலக்கியம் படைப்பதே ஒரு தற்கொலைதான்! படைத்து முடித்த பிறகு எஞ்சியிருப்பது என்ன? முடிந்துவிட்டதே என்ற வரையறுத்துச் சொல்ல முடியாத ஏக்கம்..

அப்பொழுது அறைக் கதவைத் தட்டும் சப்தம் அவனுக்குத் துல்லியமாகக் கேட்டது.. கனவு உலகத்திலிருந்த அவனுக்கு அது ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

ஒசை இப்பொழுது பலமாகக் கேட்டது. ஆயிரம் மைல்கள் தூரம் குறைந்து கொண்டே வந்து, யதார்த்த உலகின் ‘நான்-நீ’  உறவை நிச்சியப்படுத்துவதாய், மிகவும் உரக்கக் கேட்டது.

அவன் கதவைத் திறந்தான்.

அவன் மனைவி. கோகிலா நின்று கொண்டிருந்தாள்.

அவள் பார்வை அறை ஓரத்தில் குவிந்திருந்த சாம்பலின் மீது விழுந்தது.

‘என்ன அது?’ என்றாள் கோகிலா.

‘நான்..’ என்றான் சண்முகம்.

‘ நானா?’

‘ஆமாம், நான்தான் எரிஞ்சு சாம்பலாயிட்டேன்..’

அவள் அவனைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

‘நீங்க எழுதிகிட்டிருந்தீங்களே அந்த நாவலா?’

அவளுக்குத் தெரிந்திருக்கிறது. சீண்டுவதற்கென்றே கேட்கிறாள்.

அவன் பதில் கூற வில்லை. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

மேஜையிலிருந்த ஒரு தாளில், அவள் நிதானமாகச் சென்று அந்தச் சாம்பலை ஒரு குவியலாக அள்ளிப் போட்டாள்.

‘ இனிமே நீங்க எழுதப் போறதில்லையா?’ அவள் கேட்ட போது குரலில் ஒரு நம்பிக்கை தொனிப்பது போல் அவனுக்குப் பட்டது.

‘உனக்குச் சந்தோஷந்தானே?’

அவள் அந்தக் குவியலை மேஜையின் மீது வைத்துவிட்டு அவனருகில் வந்தாள்.

‘எனக்கென்ன சந்தோஷம்? உங்களுக்கே தெரியணும்? கல்யாணம் செய்துகிட்டீங்க, ரெண்டு பசங்களையும் பெத்துக்கிட்டீங்க.. அவங்களும் உங்க படைப்புக்கள்தானே, அவங்க எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சீங்களா? எங்க வீட்டுக்க்காரர் அற்புதமான கதாசிரியர்னு சொன்னா, எந்த மளிகைக்கடைக்காரரு லட்சியம் பண்றாரு? ‘சரிதான்மா, ரெண்டு மாசமா பாக்கி வச்சிருக்கீங்க, அதெ கொடுத்திட்டு இந்த மாச சாமான் வாங்கிக்கங்கங்கிறாரு.. இப்பொ குழம்புக்கு மசாலா பொடி இல்லே, வாங்கிட்டு வாங்க.’

என்றாள் அவள்.

‘மசாலா பொடி இல்லாமெ செய்..’

‘உப்பு சப்பில்லாமெ எனக்குக் குழம்பு செய்யத் தெரியாது.. நீங்க உங்க கதையிலே மசாலா போடறதில்லேங்கிறதினாலேத்தான் ஒரு ‘பப்ளிஷரும்’  உங்க கதையைப் போட மாட்டேங்கிறான்..உங்க ஃப்ரெண்ட் ரெங்கராஜனைப் பாருங்க, வரிக்கு வரி மசாலா, அதான் அவர் எழுத்துக்கு அவ்வளவு ‘டிமான்ட்’ இருக்கு..’

‘ மை காட்! நீயும் ‘லிட்டரரி கிரிடிக்’ கா ஆயிட்டியா? நான் கதை எழுதறதையே விட்டு விட வேண்டியதுதான்..’

‘குட் நியூஸ்..பிழைக்க வழி பாருங்க.. கல்யாணம் ஆன பத்து வருஷத்திலே ரெண்டு குழந்தைங்க, ஆறு உத்தியோகம்..மூணு மாசமா வேலையும் இல்லே..யாரும் ‘பப்ளிஷ்’ செய்ய மாட்டேங்கிறான்னா எதுக்காக எழுதணும்? ‘

‘ நான் உனக்காகவோ, யாரோ என்னைப் படிக்கப் போறாங்ககிறத்துக்காகவோ எழுதலே.. எனக்காக எழுதுகிறேன்.. இது சுய உருவ வேட்டை. என் அடையாளம்..’ என்றான் சண்முகம் சிறிது உஷ்ணத்துடன்.

‘இதோ இருக்குது உங்க அடையாளம்’ என்று சாம்பல் பொட்டலத்தைக் காட்டிவிட்டுச் சொன்னாள், ‘ இது சமைக்க அடுப்பு மூட்டக் கூட உதவாது.. நம்ம வீட்டிலே அடுப்பு எரியறதுக்குப் பதிலா கதை கதையா எரிஞ்சுகிட்டிருக்குது… பேசாமா, நான் சொல்லறதைக் கேளுங்க.. அண்ணா சாலையிலே ஒரு கம்பனியிலே ‘ஸ்டோர் கிளார்க்’ வேலை காலியிருக்காம். சுந்தரம் மாமா வந்து சொல்லிட்டுப் போனாரு.. அவருக்கு மானேஜர் தெரிஞ்சவராம்.. அவருக்கு ஃபோன் போட்டுச் சொல்றேன்னாரு..நீங்க என்ன பண்றீங்க, காலையிலே டிபனுக்கப்புறம் பத்து மணிக்கு அவரைப் போய் பாக்கறீங்க..’

‘ஸ்டோர் கிளார்க்’ வேலைக்கா?’

‘என்ன நினைச்சுகிட்டுருக்கீங்க நீங்க? பத்து வருஷத்திலே எட்டு உத்தியோகம் பாத்தவங்களுக்கு வேற என்ன வேலை கிடைக்கும்? எத்தனை நாளைக்குத் தான் வேலையில்லாமெ குப்பை கொட்ட முடியும்? கல்யாணத்துக்கு முன்னாலே நான் வேலையிலேருந்தேன்.. அதையும் நிப்பாட்டியது நீங்கதானே? நீங்க இப்பொ போகாட்டி, நான் போய் பாக்கிறேன்..நீங்க கதை எழுதி எழுதி எரிச்சுகிட்டிருங்க’

என்று குரலைச் சற்று உயர்த்திக் கூறினாள்.

‘சரி சரி நான் போறேன்.. கத்த ஆரம்பிச்சுடாதே..’

அவனுக்கு வேறு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஏதாவதுபேசினால் இன்னும் பெரிய சண்டையாகி விடும்..

அவன் பார்வை சுவரின் மீது சென்றது. ஒரு பல்லி விளக்குக்கு அருகேயிருந்த பூச்சியை எப்படிப் பிடிக்கலாமென்ற மோன தவத்தில் ஆழ்ந்திருந்தது. அதற்கும் வயிற்றுப் பிரச்னைதான்.. ஆனால் பல்லிக்கு அதற்கு என்ன வேண்டுமென்று தெரிந்திருக்கிறது. அவனுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அவன் கல்யாணமே செய்து கொண்டிருக்க மாட்டான்..

அடுத்த நாள் குறித்த நேரத்தில் அண்ணா சாலயிலிருந்த அந்த அலுவலகத்துக்குச் சென்றான்.

வரவேற்பு அறை மிகவும் குளுமையாக இருந்தது. ‘கவுண்டரி’ல் இருந்த பெண் ஜீன்ஸ், டீ-ஷர்டில் இருந்தாள். அழகாக இருந்தாள். தொலைபேசியில் உதட்டளவு ஆங்கிலத்தை நேர்த்தியாகப் பேசிக் கொண்டிருந்தாள். இயந்திர கதியில் முகத்தில் தோன்றிய புன்னகையுடன், அவனை உட்காரும்படி சமிக்ஞை செய்தாள். முகத்தில் புன்னகை வந்த வேகத்தில் மறைந்தது.

சிறிது நேரம் கழித்து அவனைப் பார்த்து,’ எஸ்?’ என்று அழகான புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

‘என் பேர் சண்முகம். மானேஜர் மிஸ்டர் கல்யாணராமனைப் பார்க்க வேண்டும். அவர் என்னை வரச் சொல்லியிருக்கிறார்..’

தொலைபேசியில் மறுபடியும் சன்னமான உரையாடல்.

‘ உட்காருங்கள். கூப்பிடுகிறேன்..’

அவன் உட்கார்ந்தான்.

எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்? நேற்று அவன் நண்பனைப் பற்றி யோசித்தது, அவன் நினைவுக்கு வந்தது,. அவனால் அலுவலகக் கோப்புக்களை எரிக்க முடியுமா என்று. இப்பொழுது தன்னால் போய்விட முடியுமா, நீயும் வேண்டாம், உன் வேலையும் வேண்டாமென்று?. நண்பன் வேறு எத்தனையோ விஷயங்களைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டுமென்றால், தன் வீட்டில் அடுப்பு எரிவதைப் பற்றி அவன் நினைத்தாக வேண்டும்.

மனைவியும் வேண்டாம், குழந்தைகளும் வேண்டாமென்று,போய்விடலாமா, சித்தார்த்தனைப் போல்.. சித்தார்த்தன் அரசகுமாரன். அவன் குடும்பம் பட்டினிக் கிடந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அந்தப் பெண் அப்பொழுது அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாள்.

முதல் மாடி. மூன்றாவது அறை. ‘செக்ரட்ரி’ யைப் பாருங்கள். அவள் உங்களை அழைத்துக் கொண்டு போவாள்..’

அலுவலகத்தின் துப்புரவு அவனை அச்சுறுத்தியது. அவன் மூன்றாவது அறைக்குச் சென்று அங்கு உட்கார்ந்திருந்த மற்றொரு இளம் பெண்ணிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

‘ ஓ எஸ்.. என்னுடன் வாருங்கள்’

அவன் அவளைத் தொடர்ந்தான்.

பெரிய அறை. பளபளப்பான மேஜை.  மிஸ்டர் கல்யானராமனுக்கு அவன் வயதுதான் இருக்கும். கழுத்தில் சங்கிலி மின்னுவது தெரிந்ததே வொழிய, கழுத்துத் தெரியவில்லை. அவ்வளவு வளப்பமான சரீரம். அதற்கேற்ற உயரம்..

அவனை உட்காரும்படி கையமர்த்தினான் கல்யாணராமன்.

சண்முகம் உட்கார்ந்தான்.

‘ மிஸ்டர் மீனாட்சிசுந்தரம் உங்களுக்கு…..?’ என்றான் அவன்.

‘என் மனைவியின் மாமா..’

‘ உங்க ‘சர்டிஃபிகேட்ஸ்’ லாம் அப்புறம் ‘ஆஃபீஸ்’லே கொடுங்க.. நீங்க எம்.ஏ லிட்ரச்சர் அப்படின்னாரு மிஸ்டர் மீனாட்சிசுந்தரம்..’

‘ஆமாம்..’

‘ ப்ரொஃபஸரா’ போயிருக்கலாமே?..’

அவன் பதில் சொல்லவில்லை.

‘ இப்பொ இந்த எங்க ‘ஆபீஸ்’ வேலை  பெரிய வேலையில்லே, உங்க ‘க்வாலிகேஷனு’க்கு.. அதுக்காகச் சொன்னேன்..’

அவன் தொடர்ந்து பேசாமலிருந்தான்.

‘ நீங்க ‘ரைட்டர்’னு சொன்னார் மிஸ்டர் சுந்தரம்.. எதிலே எழுதறீங்க..?’

‘எதிலியும் இல்லே..’

‘அப்படின்னா?’

‘நான் ஒரு ‘கிளார்க்’ வேலைக்கு வந்திருக்கேன்..’ரைட்டரா’ இருக்கிறதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை, அந்தக் காலத்திலே ‘கிளார்க்’குக்கும் ‘ரைட்டர்’னுதான் பேரு.. ‘ஈஸ்ட் இண்டியா கம்பனி’க் காலத்திலே.. கல்கத்தாவிலேருக்கிற ‘செக்ரடேரியட்’டுக்கும் அதனால்தான், ‘ரைட்டர்ஸ் பில்டிங்’னு பேரு..அந்த அர்த்ததிலே சொல்றீங்களா?’

கல்யாணராமன் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.

‘எனக்கும் கொஞ்சம் ‘லிட்ரச்சர்’ லே ஈடுபாடு உண்டு.. அதனாலே கேட்டேன்..’ என்றான் கல்யாணம்.

‘ரியலி? ஐ ஆம் ஸாரி.. நான் ‘ஸீரியஸா’ எழுதறதினாலே இது வரைக்கும் எதுவும் ‘பப்ளிஷ்’ ஆகலே.. நான் தமிழ்லே எழுதறேன்..’

‘ஐஸீ.. நான் ‘டமிள்’லே அதிகம் படிச்சதில்லே.. என் ‘வொய்ஃப்’ ‘டமிள்’ நிறைய படிப்பா..உங்க ‘ஸ்கிரிப்ட்’டைக் கொடுத்தீங்கன்னா அவ ஒரு வேளை படிக்கலாம்.. எனக்கு ‘டமிள்’ படிக்கணும்னுதான் ஆசை..எங்கே ‘டைம்’ இருக்கு.. நீங்க எந்த மாதிரி நாவல் எழுதுவீங்க? ‘

‘ ஆர்ட் நாவல்’.

‘சிற்பங்களைப் பத்தியா? நாங்க ‘antique things’ எக்ஸ்போர்ட் செய்யறோம்.. உங்களுக்கு ‘ஆர்ட்’ டைப் ப்பத்தியெல்லாம் தெரியுங்கிறது எங்களுக்கு ஒரு போனஸ்..’

‘ இல்லே.. ஆர்ட் நாவல்ங்கிறது ஒரு வகை, ஒரு genre. அதுக்கும் சிற்பங்களுக்கும் சம்பந்தமில்லே.. ஹென்றி ஜேம்ஸ் படிச்சிருக்கீங்களா?’

‘Who? படிச்சிருப்பேன்.. நீங்க எழுதின நாவலையெல்லாம் கொண்டு கொடுங்க.. படிச்சுப் பாக்கறேன்..பை தி வே.. இப்பொ ‘ஸ்டாக் டேகிங் செக்ஷன்’ லே உங்களுக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம்னுருக்கேன்.. உங்க மாமா மிஸ்டர் சுந்தரம் ஒரு நல்ல மனுஷன்..என்னுடைய ‘இன்கம் டாக்ஸ்’ பிரச்னையெல்லாம் அவர்தான் பாத்துக்கிட்டிருக்காரு.‘வொண்டர்ஃபுல் மான்’! அவருக்காக நான் ‘ப்ரொஸீஜர்’ அதெல்லாம் ஒண்ணும் பாக்காமே உங்களுக்கு  வேலை போட்டுக் கொடுக்கிறேன்.. புரிஞ்சுதா?..நீங்க அடிக்கடி வேலையை விட்டுறீங்கன்னு சுந்தரம் வருத்தப் பட்டுகிட்டாரு..இங்கேயே பொறுமையா வேலை செய்தீங்கன்ன, ‘ப்ரொமோஷன்’ கிடைக்கும்..’

‘என்ன ‘ப்ரொமோஷன்?’ என்றான் சண்முகம்.

‘ஹெட் கிளார்க்’ ஆகலாம்.. ஆனா ஒண்ணு..’ஆஃபீஸ்’லெ கதை எழுதக்கூடாது..’

‘ ‘ஸ்டாக் டேகிங்’ னா என்ன?’

கல்யாணம் மணியை அழுத்தினான். ஒரு பணியாள் வந்தான்.

‘இவரை ஜடாதரன்கிட்டே கூட்டிக்கிட்டு போ.. மிஸ்டர் சண்முகம், ஜடாதரன் எல்லாத்தியும் உங்களுக்கு விளக்கமா சொல்வாரு.. ‘ஸ்டாக் டேகிங்’ வேலையிலே மூழ்கிட்டீங்கன்னா, அதிலியே ஆழ்ந்துடுவீங்க..கதை எழுதறதெல்லாம் மறந்துடுவீங்க..’இட் ஈஸ் அ குட் ரெமெடி ஃப்ர் சச் இல்னெஸ்’..’ என்று கூறிவிட்டு உரக்கச் சிரித்தான் கல்யாணம்.

சண்முகத்துக்குக் கோபத்தில் முகம் சிவந்தது..ஆனால்..ஆனால்.. வீட்டில் அடுப்பு எரிந்தாக வேண்டும்..

சண்முகம் அறையை விட்டு வேளியே வந்தான். அந்தப் பணியாள் அவனை ஜடாதரனிடம் அழைத்துச் சென்றான்.

கீழே இருந்த ‘பேஸ்மென்ட்’ டில் ஜடாதரன் அலுவலகம் இருந்தது.

பெயருக்குப் பொருத்தமான் தலைமுடியுடன், ஒரு நீண்ட வெண் தாடியுடனும் இருந்தார் ஜடாதரன். அவர் வயதை நிர்ணயித்துச் சொல்ல முடியாது போல் தோன்றிற்று..ஐம்பதும் இருக்கலாம், நூறும் இருக்கலாம்.

‘என் பேரு சண்முகம்.. உங்க ‘செக்ஷன்’ லே வேலைக்குச் சேரப் போறேன்..முதல்லே இந்த வேலையைப் பத்தித் தெரிஞ்சக்கணும்..மிஸ்டர் கல்யாண ராமன் உங்ககிட்டே அனுப்பினார்..’ என்றன் சண்முகம்.

‘முதல்லே ‘பாஸ்’னு சொல்லப் பழகிக்கோங்க..’ என்றார் ஜடாதரன்.

‘ஐ ஆம் ஸாரி.. ‘பாஸ்’.. நீங்க எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க?’

‘ நினவில்லே.. ரொம்ப வருஷமா. ‘ஸ்டாக் டேகிங்’ றது அவ்வளவு சுலபமா முடிஞ்சுடற வேலையில்லே.. உங்களை விட இன்னும் சின்னவனா இந்த வேலைக்கு வந்தேன்.. இன்னும் ‘ஸ்டாக் டேகிங்’ எடுத்திண்டிருக்கேன்..’

‘ எப்பொ முடியும்?’

‘அது முடியாது.. நாமதான் முடிஞ்சுடுவோம்.. நான் போயிடுவேன்..இப்பொ நீங்க வந்திருக்கீங்க.உங்களுக்கப்புறம் இன்னொருத்தன் வருவான்.. ‘ஸ்டாக் டேகிங்’ நடந்திண்டே இருக்கும்..’ என்று கூறிவிட்டு அவர் உரக்க வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். அவர் சிரிப்பு ஓயவேயில்லை.

சண்முகத்துக்கு அவரைப் பார்க்க பயமாக இருந்தது. அவனுக்கும் நீண்ட ஒரு வெண் தாடி வளர்ந்து விட்டாற் போல ஒரு பிரமை அவனுக்கு ஏற்பட்டது.

Indira Parthasarathy

#3,’Ashwarooda’

330,T.T.K. Road,

Chennai-600018.