இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு பெரும் சோதனைக்காலம். வெளியானபெரும்பாலான படங்கள் தடம் தெரியாமல் போனது. பொங்கலுக்குக் கூட பெரிய போட்டியில்லை. முன்னணி நட்சத்திரங்கள் யாருமின்றி பிப்ரவரி மாதம் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மலையாள திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வசூலை வாரிக்குவித்துக்க, அதைத்தொடர்ந்து வெளியான ஆவேஷம், பிரேமலு, ஜெய்கணேஷா போன்ற மலையாளப்படங்களும்நல்ல வசூல் செய்தன. ஆனால், பேட்டைக்காரனுக்கு பந்தயம் விட சேவல் இல்லாத ரத்னவேலு பார்ட்டியைப்போல அவர்களுக்கிணையாக தமிழில் சொல்லிக்கொள்ளும் படங்கள் பெரிய அளவில் இல்லாத சூழலில், ‘கில்லி’ ‘பில்லா’ போன்ற பழைய படங்களை மறு வெளியீடு செய்ய வேண்டிய மோசமான நிலைக்கு தமிழ் சினிமா நகர்ந்துகொண்டிருந்தது.
இன்னொரு பக்கம்மாஸ்டர், உப்பெனா, ஜவான், விக்ரம், விடுதலை போன்ற வெற்றிப்படங்களிலும், ஏனைய மற்ற மொழித்திரைப்படங்களிலும், வெப்சீரியஸ்களிலும் தனக்கான நாயக பிம்பத்தைத்தாண்டி வில்லனாகவும், கதாப்பாத்திரங்களாகவும்விஜய் சேதுபதிநடித்தது ஆரோக்கியமானதாக இருந்தாலும், ஒரு நாயகனாக தனிப்பட்ட பிரம்மாண்ட வெற்றி என்பது நீண்ட காலம் அவருக்கு பிடிபடாமல் இருந்தது.இச்சூழலில், விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே ஒரு கம்பேக் படமாக வெளியாகிருக்கிறது மகாராஜா.
சலூன் வைத்திருக்கும்மகாராஜா(விஜய் சேதுபதி), ஒரு அசாதாரண கோரிக்கையுடன் காவல் நிலையத்திற்கு செல்கிறார். அவரது வீட்டிலிருந்த லட்சுமியை மூன்று பேர் திருடிவிட்டதாகவும், விளையாட்டுப் போட்டிக்காக ஒரு வாரம் வெளியூர் சென்ற அவரது மகள் ஜோதி (சஞ்சனா நமிதாஸ்) மீண்டும் வருவதற்குள் கண்டுபிடிக்கச்சொல்லும் அவரது உருக்கமான வேண்டுகோளும், FIR போட வலியுறுத்துவதும் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால் காவல்துறை உயர் அதிகாரி வரதராஜன் (நட்டி) மகாராஜா மீது எரிச்சல் கொள்கிறார். இருந்தாலும், லட்சுமி கிடைக்கஐந்து லட்சம் தருவதற்கும் தயாராகிறார் மகாராஜா. இதனால் மகாராஜாவின் உள்திட்டம் அறிந்துகொள்ள அவர் மீது கண் வைக்கத்துவங்குகிறார் வரதராஜன்.
இன்னொரு புறம், எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் செல்வம் (அனுராக் கஷ்யப்) இரவு நேரத்தில் தனது நண்பன் சபரியுடன் (வினோத் சாகர்) பணக்கார வீடுகளில் கொள்ளையடிக்கிறார். கார் மெக்கானிக் தனா (பாய்ஸ் மணிகண்டன்), ஏரியா கவுன்சிலர் கருணாகரனுடன் (‘ஜிகர்தண்டா’ காளையன்) மோதுகிறார்.அதைச்சார்ந்து சுழலும் காட்சிகளுடனும் அதன் மனிதர்களுடனும் நகர்கிறது மீதிக்கதை.
பார்த்துப்பார்த்து அலுத்துப்போன ஒரே விதமான கதாப்பாத்திரங்களுக்கு மத்தியில் விஜய்சேதுபதி நரைத்த நாவிதராக காதில் பஞ்சு ஒட்டப்பட்டு, பழைய சட்டையுடன் வருகிறார்.இவருக்கெல்லாம் கோவமே வராதா என யோசிக்கும் அளவுக்குகாவல் நிலையத்தில் முன்பின் தெரியாதவர்களிடத்தில் அறை வாங்குகிறார்.‘குப்பைத்தொட்டி’ என கேவலப்படுத்தப்படுகிறார்.படம் முழுக்க விஜய் சேதுபதியே நிறைந்திருக்க, நுணுக்கமான மாற்றங்களில் பஞ்ச் வசங்கள் எதுவுமின்றி மொத்தப்படத்தையும் தனி ஒருவராக தாங்குகிறார்.
“ஒரு கதை சொல்லட்டுமா சார்” எனும் வில்லத்தனமான ‘விக்ரம் வேதா’விற்கு அப்படியே நேர்மாறாக, “அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்” என்ற ரோபோ சங்கரைப்போல, “என் பெயர் மகாராஜா…” எனத்தொடங்கி ஒவ்வொருவரிடமும் அச்சு பிசகாமல் லட்சுமி தொலைந்த கதையை மகாராஜா விசித்திரமாக விவரிப்பது, திரும்பத் திரும்ப சொல்வதன் மூலமும், காணாமல் போன பொருளால் உணர்ச்சி முறிவின் விளிம்பில் இருக்கும் நாயகனின் நேரடியான முக சித்தரிப்பின் மூலமும் வினோதமான நகைச்சுவையாக மாறுகிறது.
அதிகாரிகளின் முதுகை தொட்டுப்பார்ப்பது (காரணம் இருக்கிறது), பாட்டில் தண்ணீரை மொத்தமாக குடிப்பது என மகாராஜா செய்யும் அத்தனை செயல்களிலும் நிறைந்திருக்கிறது நுணுக்கமானdetailing. ஒரு கதாப்பாத்திரம் எப்படிப்பட்டது என அவரைப்பற்றி மற்றவர்கள் கூறுவதை விட, பார்வையாளர்களே அவரை புரிந்துகொள்வது தான் ஒரு சிறந்த கதாப்பாத்திரம் வடிவமைக்கப்படும் விதம். ஏனெனில், இன்னொரு காட்சியில் தாகமாக இருக்கிறது என அவர் தண்ணீர் கேட்கும் போது பார்வையாளர்களேசிரித்து விட்டார்கள்.
அந்தந்த காலகட்டத்தின் முன்னணி நடிகர்கள் புகைப்படமிருக்கும்சலூன்களுக்கு மத்தியில்,வித்தியாசமாக ‘ராம்கி’ பெயர் கொண்ட சலூன் ஒன்று வருகிறது.அதே போல, மறைந்த நடிகர் குணால் அணிந்த கண்ணாடியை தேடி கவுன்சிலர்வருகிறார். யதார்த்தத்தில்காண முடியாத கற்பனையான ரசனையும் ஒரு விதத்தில் நன்றாக பொருந்துகிறது.
‘இமைக்கா நொடிகள்’ சரியாக கைகூடாமலும், ‘லியோ’வில் ஒரு காட்சியிலேயே கரைந்திருந்தாலும்,இப்படத்தின் மூலமே தமிழில்பரிட்சையமாகிறார் இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப்.சில இடங்களில்அவர் பேசியது டப்பிங் படம் பார்த்த உணர்வைக்கொடுப்பதுடன், நம்மூர் பார்வையாளர்களுக்கு இன்னும்வடக்கன் சாயலில் தான்தெரிகிறார்.மனைவி கோகிலாவுடன் (அபிராமி) பேசும்ஒரு முக்கியமான காட்சியில் மிகவும் சிரமப்படுகிறார். இருந்தாலும் இறுதிக்காட்சியில் அழும் தகப்பனாக தன் குறைகளை சமன் செய்கிறார்.ஒரு சில காட்சிகளில் வந்தாலும் தன் நடிப்பால் காட்சிக்குவலு சேர்க்கிறார்அபிராமி.
நீண்ட இடைவேளைக்குப்பிறகு ‘பாய்ஸ்’ மணிகண்டனுக்கு ஒரு தரமான கம்பேக். ஆனால், ’புறாவுக்கு அக்கப்போறா’ என்பது போல, ஒரு கண்ணாடிக்காக கவுன்சிலரை அடிக்க வேண்டுமா என்ன? இவரைப்போன்ற தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் அரசியல், பணபலம் உள்ளவர்களிடம் நேரடியாக மோத தயங்குவார்கள். ஆனாலும், ரோஷக்கார இளைஞனாக அறிமுகமாகும் மணிகண்டன் நிறம் மாறுவது எதிர்பார்க்காதது. விஜய் சேதுபதிக்கும் மணிகண்டனுக்குமான சண்டைக்காட்சிகளை ‘அனல் அரசு’ வடிவமைத்த விதமும், அதற்கு ஒளிப்பதிவு செய்த ‘தினேஷ்குமார் புருஷோத்தமனின்’ ஒளிப்பதிவும் கூடுதல் பலம்.
வடிவேலு அழைத்து வரும் ‘குருநாதா’வைப்போல, பாரதிராஜா மற்றும் மம்தா மோகன்தாஸ் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கு போதுமான காட்சிகளின்றி, தரை தட்டுகிறது அவர்கள் கதாப்பாத்திரம். ஒருவேளை படத்தொகுப்பு மேசையில் இவர்களது காட்சிகள் பலியாக்கப்பட்டிருப்பின், அதற்கு என் வருத்தங்கள். ‘சதுரங்க வேட்டை’ மோசடி நாயகன் ஒளிப்பதிவாளர் நட்டி, ஊழல் செய்யும் காவல்துறை அதிகாரியின் நாற்காலியில் மிகவும் வசதியாக அமர்கிறார். என்ன தான் படத்திற்கு பிரத்யேகமாக மூன்று வில்லன்கள் இருந்தாலும், எதிர்பாறாத விதமாக காண்பிக்கப்படும் நான்காவது நபர் நம்மை மிரட்சியடைய வைக்கிறார்.
விபரம் அறியாத தந்தையை திட்டித்தீர்ப்பது, தனது ஷூவை கேட்காமல் எடுத்து சென்ற தோழியிடம் கோபிப்பது, பிறகு அவளுக்கே பரிசளிப்பது, தன் நிலை கண்டு பதறும் பரிதவிப்பு என பல்வேறு சூழ்நிலைகளில் தன் இயல்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் விஜய் சேதுபதியின் மகளாக வரும் சஞ்சனா நமிதாஸ்.ஒரு குழந்தையைக் கூட அழகாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அனுராக் கஷ்யப்பின் மகளாக வரும் குழந்தை, தான் விரும்புகிற நகையை ஆசையாக சுட்டிக் காட்டுகிறகாட்சி கொள்ளை அழகு. எத்தனை டேக் போனார்களோ!…
மற்றதிருடர்களிடம் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் கழுத்தில் மாஸ்டர் சாவியை வைத்துக் கொண்டு, டிவிஎஸ்50வண்டிகளை மட்டுமே திருடுகிற “போலீஸ்” என்ற கதாப்பாத்திரம் (‘குரங்கு பொம்மை’ கல்கி)“எனக்கு கியர் வச்ச வண்டி ஓட்டத்தெரியாதுங்கய்யா…” என்று சொல்வது, “குப்பைத்தொட்டில குப்பை கூடவா இல்ல?” என அதிகாரி கேட்பது போன்றுஆங்காங்கே வரும்ராம் முரளியின் வசனங்கள் இடையிடையில் அறிமுகமாகும் சின்னச்சின்ன கதாப்பாத்திரங்களுக்கும் வலு சேர்க்கின்றன.
விஜய் ஆண்டணி ஒரு நேர்காணலில் “நீங்கள் எழுதியதை காகிதத்தை கொடுத்தால் யாரும் படிக்க மாட்டார்கள். அதே காகிதத்தை கசக்கிக்கொடுங்கள். என்ன தான் இருக்கிறது என ஆர்வத்தில் பிரித்துப்படிப்பார்கள்” என குறிப்பிட்டிருப்பார். அப்படிப்பார்த்தால், இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதையை தான் சொல்லவில்லை என்பது இயக்குநர் நித்திலனுக்கு நன்றாகவே தெரியும். எனவேவிஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், மணிகண்டன் என மூன்று வேறு கதைகளை நான்லீனியர் (nonlinear) வகையில் கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டைப் போல, முன்னும் பின்புமாக நகர்த்துகிறார். இறுதியில் அசாத்திய திரைக்கதை மூலம் அவை ஒரே நேர்கோட்டில் இணைகிறார் (ஹைப்பர்-லிங்க்).
இதே கதையை நேரடியாக சொன்னால் இத்தனை விறுவிறுப்பு இருந்திருக்குமா என்று கேட்டால், சந்தேகம் தான். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘மெமண்டோ’ (Memento, 2000) திரைப்படத்தை நீங்கள் ஒரே நேர்கோட்டில் (linear) பார்த்தால் கொட்டாவி விடுவீர்கள். படம் துவங்கியது முதல், மகளின் வாய்ஸ் நோட் கேட்பது, மற்ற இருவரின் கதைகள் இணைவது என ஒரு கட்டம் வரை லீனியராக (linear) சென்றுகொண்டிருப்பதைப்போல நாம் நம்பும் அளவுக்கு காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதம் ஆச்சரியத்தை அளிக்கிறது.
பெரும்பாலும் இது மாதிரியான பரிட்சார்த்த முயற்சிகள் படத்தொகுப்பு அறையில் தான் நிகழும். ஒருவேளை இக்கதையும், திரைக்கதையும் எழுதப்பட்ட விதமே நான்லீனியர் வகையிலிருந்தால், இது உண்மையிலேயே சிறப்பாக எழுதப்பட்ட திரைக்கதை. ‘நட்டி’ சொன்னது போல, இனி வரும் இது போன்ற படங்களுக்கு இது ஒரு ட்ரெண்ட் செட்டர்.இதற்கு முன்பு அந்த வகையில்பேசப்பட்ட திரைப்படம் டன்கிர்க் (Dunkirk, 2017).
பிடிவாதமான தந்தை ஒருவரின் புகாரைப்பற்றிய படம் என்று முதல் பாதியில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் வேகமெடுக்கிறது திரைக்கதை. காவல் நிலையத்தில் பல கதாபாத்திரங்களின் அறிமுகமும், திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும்,ஒவ்வொரு திருப்பத்தையும் சாமர்த்தியமாக அவிழ்த்து புள்ளிகளை இணைக்கும் இயக்குனர் ஆச்சரியப்படுத்துகிறார்.
உண்மையில் இது தான் சாமானிய ரசிகனை கட்டிப்போடும் வித்தை. அதனால், சீட்டின் நுனியில் அமரும் ரசிகன் முன்னால் காட்சிகளை முன்பின்னாக மாற்றிப் போட்டு காட்சிகளை குழப்பினாலும்அவனுக்குள் கணக்கிட்டு காட்சியின் வரிசையை கணக்கிட்டுக்கொள்வான். (உதா: Pulp Fiction, 1994) இது தான் தரமான த்ரில்லர் வகை திரைப்படங்களின் வெற்றி.
Pulp Fiction என்று உதாரணத்திற்கு சொன்னதுமே ஒட்டிக்கொள்கிறதுவன்முறை.ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட திரைப்படங்களின்வன்முறைக்காட்சிகளுக்கு சிறிதும் குறைவில்லாமல் தலையை வெட்டுவது, வெட்டப்பட்ட கையை காண்பிப்பது, மாடியிலிருந்து குதிப்பது, இறந்தவன் உடலில் இருந்து வழியும் ரத்தம் ஆறாக ஓடுவது என இப்படத்திலும் தொடர்கிறது வன்முறை. ஏனைய சிறிய தயாரிப்பாளர்களிடம் ‘தங்கப்பதக்கம்’சிவாஜி கணக்கில் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக விரைப்பாக நடந்துகொள்ளும் தணிக்கைக்குழு, இந்தத் திரைப்படத்திற்கு மட்டும் எப்படி U/A தணிக்கை சான்றிதழ் அளித்தார்கள் என்று தெரியவில்லை.
ஒடிடி, தொலைக்காட்சி உரிமம் என U/A சான்றிதழுக்குபின்னால் இருக்கிறதுபெரும் வியாபாரம்.ஒருவேளை அதற்குதகுந்தார் போல பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்றால் முதலில் தணிக்கை செய்ய வேண்டியது தணிக்கை குழுவைத்தான். அவர்கள் கொடுக்கும் சான்றிதழ் தான் இரத்தம் கொட்டும் ஒரு திரைப்படத்தை சின்னக்குழந்தைளை பார்க்க வைக்கிறது.பெற்றோர்கள் எப்படித்தான் திரையில் எதிர்நோக்குவார்கள் என்று தெரியவில்லை.
“தேவையான வன்முறை இருப்பதனால் தான் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது” என விஜய் சேதுபதி குறிப்பிடுவது, படத்தில் அவசியமிருக்க வேண்டிய பாலியல் வன்முறைக்காட்சி என்று நினைக்கிறேன். ஏனெனில் சமூக அக்கறையுள்ள எந்த நாயகனும் தனது படத்தை பார்க்கும் 10 வயது குழந்தையிடம் கழுத்தறுக்கும் காட்சியை காண்பிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்.
மாஸ் ஹீரோக்களுக்கு உண்டான மாஸான காட்சிகள் இல்லாவிட்டாலும், அதை நேரடியாக காண்பிக்காமல் வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி போல காவல்நிலையத்தை கலவரமாக்கி விடுவது மட்டுமின்றி மகள் படிக்கும் பள்ளி அலுவலகத்திலும், விஜய் சேதுபதியை அத்தனை வலிமை கொண்ட பாகுபலியாக காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். காட்சியின் விறுவிறுப்பில்,நம்மை கவனிக்க விடாமல் மறக்கச்செய்யும் திரைக்கதையின் வித்தை இது.
ஆனால், செல்வம் போனில் பேசுவதை மகாராஜா கேட்டாரா இல்லையா என்பது தெளிவாக புலப்படவில்லை. அத்துடன், மகாராஜாவுடன் காவல்துறை அதிகாரிகள் செல்வம் வீட்டுக்கு வருவது யதார்த்தமா அல்லது விஜய் சேதுபதி அழைத்து வருகிறாரா என்பதும் தெளிவாக விளக்கப்படவில்லை. ஒருவேளை தெளிவாக விளக்கப்பட்டிருந்தால், ‘நல்ல மனதுடன் நகையை திருப்பி கொடுக்க சென்ற மகாராஜாவுக்கு இப்படியாகிவிட்டதே’ என்ற கூடுதல் கவலையும், பச்சாதாபமும் மக்கள் மனதில் கூடியிருக்கும். ஆனால் இப்போது பெண் பிள்ளைகளை பெற்ற இரண்டு தந்தைகள் மோதிக்கொண்ட,ஒரு பழி வாங்கும் கதையாக மாறிவிட்டது. இதே சிக்கல் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்” படத்திலும் இருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தப்படத்தின் வில்லனும் ’அனுராக் கஷ்யப்’.
மகாராஜாவை பார்க்கும் பலரும் ஒரு பிரபலாமான கொரிய திரைப்படத்தையும், இரட்டா, சித்தா போன்ற படங்களையும் நினைவூட்டுவதாக கணிக்கிறார்கள். ஆனால், அதனுடன்அமர்க்களம்திரைப்படத்தையும், சுஜாதாஎழுதிய ‘இருள் வரும் நேரம்’நாவலையும் எனக்கு நினைவூட்டியது.
‘இரட்டா’ படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் ’ஜோஜு ஜார்ஜ்’ இயல்பிலேயே ஒரு மோசமான மனிதராக இருப்பார். அதிகாரத்திமிரில் இருக்கும் ஒருவர் தவறு செய்வதற்கும், தவறு செய்வதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அந்த வகையில் செல்வம் கதாப்பாத்திரம் (அனுராக் கஷ்யப்), கண்டுகொள்ளாமல் விட்ட ஒரு கதாப்பாத்திரமாகவே மனதில் நிற்கிறது. ஒருவேளை இரட்டா திரைப்படத்தைப்போல, இதிலும் குரூரமானவனாக காண்பித்திருந்தால் படத்தின் போக்கே வேறு விதத்தில் மாறியிருக்கும். அந்த வகையில் பெரிய அளவில் சர்ச்சையை உண்டாக்கிவிடக்கூடும் என்ற நோக்கில் இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
பொதுவாக ஒரு நடிகரை இதுவரை எப்படி பார்த்தோமோ, அதற்கு எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் அவர்களை வைத்துப்பார்க்க விரும்புவதாக இயக்குநர் நித்திலன் பரத்வாஜ் ரங்கனுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார். ‘அபியும் நானும்’ படத்தில் சாதுவாக வரும் இளங்கோ குமரவேலை‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தில் ஒரு கொடூர வில்லனாக மாற்றி அதை சாத்தியப்படுத்தியிருப்பார்.
இம்முறை அவர் பரிசோதித்தது, நடிகர் &இயக்குநர் சிங்கம்புலி. “குறுக்க இந்த கௌஷிக் வந்தா!” என நக்கலாக கேட்கும் சிங்கம்புலியைத்தான் நமக்குத்தெரியும். ஆனால், இப்படத்தில் விஜய் சேதுபதியை தூக்கி சாப்பிட்ட ஓர் உன்னத கலைஞன் என்றால் அது சிங்கம்புலி தான். முகத்தில் முளைக்கும் பயம் கலந்த பாவனைகள், “இன்னொரு வாட்டி போயிட்டு வரட்டுமா?” என கேட்பது, விஜய் சேதுபதியிடம் சிரித்தக்கொண்டேமிரட்டுவது என நாம் காணாத இன்னொரு பரிமாணத்தை காண்பித்ததில் இம்முறையும் இயக்குநரின் பரிசோதனை வென்றிருக்கிறது.
நிஜத்தில் நடந்தகதையை மனதில் வைத்துக்கொண்டு அதே நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரியிடம், இறுதியாக கண்ணீர் மல்க வேறு ஒரு கதையாக விவரிக்கும் போது, செவி வழியே ஒரு கதையும் திரையில் ஒரு கதையும் என காட்சிகள் விரிகிறது. ஒவ்வொருவரிடமும் சொல்லும் போது மனதிற்குள் எப்படி இதைத் தாங்கியிருப்பார் என்று நமக்குள் ஐயம் கொள்கிறது.
15 ஆண்டுகளில் 50 படம் என்பது இமாலய இலக்கு. அதைவிட, பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு 50வது படம் என்பது சோதனையாகவே இருந்த நிலையில் இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததிற்கும், வளர்ந்து வரும் நித்திலன் போன்ற ஒரு இயக்குநரை நம்பி தனது 50வது படமாக ஏற்றுக்கொண்டதற்கும் விஜய் சேதுபதிக்கு சரியான கிரீடம் சூட்டப்பட்டிருக்கிறது.
2012ஆம் ஆண்டு நாளைய இயக்குனர் மூன்றாவது சீசனில் நித்திலன் இயக்கிய ‘புன்னகை வாங்கின்னால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படம் வெற்றிமாறன், பாலச்சந்தர், கமல்ஹாசன் உட்பட பல இயக்குநர்களிடம் பாராட்டை பெற்றது. நாளைய இயக்குநரில் வெற்றி பெற்றாலும், நீண்ட காலத்திற்கு பிறகே 2017-ல் குரங்கு பொம்மை வெளியானது. ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது மகாராஜா.
ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடைப்பட்ட காலம் என்பது ஒவ்வொரு திரைக்கலைஞனுக்கும் ஒருவித பிரசவ காலம். திருமணமான தம்பதிகளை எப்போது குழந்தை என்று நச்சரிப்பது போல, அடுத்த படம் பற்றி கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார்கள். இதற்கிடையில் சில படங்கள் கைவிட்டுப்போகும். ஆண்டுக்கணக்கில் தாமதமாகும். அப்படியாக, வணிக சமரசங்களுக்கு ஆட்படாமல் நிறைய வாய்ப்புகள் வந்த போதும் ஆண்டுக்கணக்கில் பொறுமையாக காத்திருந்து தனக்கான உறுமீனை பிடித்திருக்கிறார் இயக்குநர் நித்திலன்.
தமிழ் சினிமாவிற்கென பிரத்யேகமான சாபம் ஒன்றுள்ளது. ஒரு படம் அதீத வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதே சூத்திரத்தை பிடித்துக்கொண்டு வதவதவென திரைப்படங்களை எடுத்து கலங்கிய குளமாக்கிவிடுவார்கள். உதாரணமாக, சிவாஜி புகைத்துத்தீர்த்த காதல் தோல்வி, ரஜினியின் படங்களில் வாங்கும் பழிக்குப்பழி, கமல்ஹாசனுக்கு பின்பு வளர்ந்த புற்று நோய் நாயகர்கள், பருத்திவீரனுக்கு பின்னால் உருவான கிராமத்து சண்டியர்கள், முனி மற்றும் அரண்மணை வெற்றிக்குப்பிறகு ஒரிஜினல் பேய்களே ஓடி ஒளியும் அளவுக்கு வெளியான பேய் படங்கள் என லோகேஷ் கனகராஜ் வகையறா திரைப்படங்கள் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதாவது பரவாயில்லை. சில ஆண்டுகள் முன்பு, விவசாயத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று தொடர்ந்து வெளியான படங்களில், விவசாயிகளே ‘எங்கள விட்ருங்க சார்’ என்று புலம்பும் அளவுக்கு விவசாயிகளை பாடாய்படுத்தி விட்டார்கள். இப்போது எனக்கிருக்கும் ஒரே பயமெல்லாம் சித்தா, மகாராஜா வெற்றியைத்தொடர்ந்து பெண் பிள்ளைகளை காக்க ஆளாளுக்கு படமெடுக்க துவங்கிவிடுவார்களோ என்று தான்.