தற்போதைய உலகில் காலநிலை மாற்றம் (Climate Change) என்ற பேஷன் சொல்லாடல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் தங்களின் சுற்றுச்சூழல் அமைச்சகங்களை காலநிலை மாற்றம் என்று பெயர் மாற்றம் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அமைச்சகப் பெயருடன் காலநிலை மாற்றம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் புவி வெப்பமயமாதல் நிகழ்வு காரணமாக உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது. உலகின் விஞ்ஞானக் கோட்பாடுகள் உருவாகத் தொடங்கிய காலக்கட்டம் முதலே அது சார்ந்து மாற்றுக்கோட்பாடுகளும் முன்வைக்கப்பட்டன. காரணம், விஞ்ஞானம் என்பது நிரூபணம் செய்யப்பட்ட தர்க்கரீதியான உண்மைகளின் தொகுப்பாகும். அந்த உண்மைகள் கூட சில நேரங்களில் பல உண்மைகளாக மாற்றம் பெற்று முந்தைய உண்மைகளை மாற்றம் செய்து விடுகிறது அல்லது மறுத்து விடுகிறது. இதன் தொடர்ச்சியில் இன்றைய கால நிலை மாற்றத்தை உலகம் எவ்வாறு அணுகுகிறது. சம கால பிரபஞ்ச இயக்கத்தில்  அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதைக்  குறித்து விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது.

Climate Change என்றழைக்கப்படும் காலநிலை மாற்றம் குறித்து தமிழ் இலக்கிய உலகில் போதுமான அறிவியல் ரீதியாக உரையாடல்கள் நடைபெறவில்லை என்றே குறிப்பிடலாம். நான் கடந்த பத்தாண்டுகளாகத் தொழில் சார்ந்தும், துறை சார்ந்தும் அது சார்ந்த ஆய்வுகளிலும், வாசிப்புகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதன் காரணமாக இதனைக் குறிப்பிடுகிறேன். மனித குலம் வரலாற்றில் சந்தித்த துயரங்களை விட மாபெரும்  துயரம் இந்தக் காலநிலை மாற்றம் என்று குறிப்பிடலாம். இதனை நாம் பிரபஞ்சத்தின் வெறுமனே இயல்பான போக்காக கடந்துவிட முடியாது. மாறாகச் சமகால உலக இயக்கத்தின் மிகப்பெரும் மனிதப் பேரழிவு என்றே குறிப்பிட வேண்டும். இதன் தொடர்ச்சியில் காலநிலை மாற்றத்தை தொட்டுரண முடிந்த அதன் நேரடி உணர்வாக்க நிலையை அல்லது  தொட்டுணர முடியாத அதன் மறைமுக நிலையை சராசரி மனிதனாக எவ்வாறு புரிந்து கொள்வது? அதற்கான விடை சமகால உலகம் சந்தித்து வரும் இயற்கை சார் பேரழிவுகளில் இருந்து தொடங்குகிறது. மேலும் காலநிலை மாற்றத்தின் நீட்சியான புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகும் பசுங்குடில் வாயுக்களின்  ஒட்டுமொத்த உமிழ்வைப்  புரிந்துகொண்டால் நாம் இதனை உணர்ந்து கொள்ள முடியும்.

பிரபஞ்ச இயக்கமானது வெப்பமும், குளிரும் இணைந்த முரண்களானது. இந்தப்  பிரபஞ்சம் தனக்குள்ளே முரண்களைக் கொண்டிருக்கிறது என்பதற்கான அடிப்படை உதாரணம் இது. இதில் வெப்பமானது சூரியனையும், குளிரானது சந்திரனையும் சார்ந்திருக்கிறது. இதில் மனிதன் சூரியனை நெருங்க முடியாத காரணம், இதன் அதீத வெப்பம்தான். அதே நேரத்தில் சந்திரனை அடைய முடிந்ததற்கு அதன் குளிர்ந்த தன்மையே காரணம். இந்த பூமி உருவாகிய நாள் முதல் இந்த இரு இயற்கை இயக்கங்களும் சம அளவில் இருந்தன. காலத்தொடர்ச்சியில் சந்திரனின் தன்மை மாறத்தொடங்கியது. இதற்கு மனித நடவடிக்கைகளால் எழுந்த காலநிலை மாற்றமும் ஒரு காரணம்.

உலகில் ஹோமோ சேபியன்ஸாக மனிதன் உருவாகிய நாள் முதல் நியாண்டர்தாலாக மாறிய தருணத்தில் இருந்தே அதன் தாக்கம் இயற்கைமீது பிரதிபலித்தது. பின்னர் அது வேட்டை சமூகம், நாடோடிகளின் நிலையான குடியாக்கம், இயந்திரங்களின் உருவாக்கம் என்று பரிணமித்த  நிலையில் இயற்கைமீது அதன் தாக்கம் மேலும் அதிகமானது. கற்காலம், இரும்புக் காலம், தாமிரக் காலம், நாகரீக காலம் என பரிணமிக்கத் தொடங்கிய காலத்தில் இயற்கை வளங்கள்மீதான சுரண்டல் தொடங்கியது எனலாம்.இதன் தொடர்ச்சியில் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் தொழிற்புரட்சியின் காலம். இந்த காலத்தில் தான் ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகளாக இருந்த போர்ச்சுகிரீஸ், ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவை தங்களின் சொந்த நலன்களுக்காக ஏராளமான தொழில் நிறுவனங்களைத் தொடங்கின. இதன் ஒருபகுதியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கும் பயணத்தை வாஸ்கோடகாமா, கொலம்பஸ் ஆகியோர் தொடங்கினர். இந்தக் கடல் வழித்தடத்தின் வெற்றி காலனியாதிக்க நாடுகளுக்கு தங்களின் வணிக நலன்களைத் தொடர மிக உகந்ததாக இருந்தது. இதன் தொடர்ச்சியால் ஏற்பட்ட தொழில் புரட்சி   காரணமாக சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு அப்போதே அது வளிமண்டலத்தை பாதிக்கத் தொடங்கியது. குறிப்பாகப் பசுங்குடில் வாயுக்கள் (Green House Gases) எனப்படும்  கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன். நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன், சல்பர் ஹெக்ஸா புளோரைடு, நைட்ரஜன் டிரை புளோரைடு  ஆகிய ஆறு வாயுக்களின் அதீத உமிழ்விற்கு காரணமானது. இதன் நகர்வில் ஐரோப்பிய வரலாற்றில் 1750 இல் தொடங்கிய தொழில் புரட்சி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்தது. ஐரோப்பா அப்போதுதான் கிறிஸ்தவ திருச்சபையின் பிடியிலிருந்து விடுபட்டு மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நிலக்கரி சுரங்கத்தில் தொடங்கிய இந்த தொழில்புரட்சி கனரகத் தொழில்கள் வரை நீண்டது.  இதன் தொடர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் இரு உலகப்போர்கள் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை அதிகப்படுத்தின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் (1911) ஈரானில் முதன் முதலாக பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு 1853 இல் அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்படது.  ஈரானைத் தொடர்ந்து ஈராக்கிலும், சவூதி அரேபியாவிலும் எண்ணெய் கிணறுகள் உருவாக்கப்பட்டு பெட்ரோலியப் பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பிரித்தெடுக்கப்பட்டன. அதுவரை  நிலக்கரி மட்டுமே எரிபொருளாக இருந்த உலகில் பெட்ரோல், டீசல், மண்ணென்ணெய் ஆகியவை புதிய மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கனரக மற்றும் இலகுரக போக்குவரத்து வசதிகள் பெருகின. அதுவரை நிலக்கரி சார்ந்த நீராவி இயந்திரம் மூலம் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் டீசலுக்கு மாறின.கார்களின் உற்பத்தி தொடங்கியது. இதன் காரணமாக புதைபடிவ எரி பொருட்கள் (Fossil Fuel) மூலம் ஏற்படும் வளிமண்டல பாதிப்புகள் உருபெற தொடங்கின. அது கொஞ்சம் கொஞ்சமாக வளிமண்டலம்மீது படிந்து ஒளிக்கதிர்களை  பூமிமீது பிரதிபலிக்கச் செய்தது. காரணம், புதைபடிவப் பொருட்கள் மீது உள்ளார்ந்து படிந்திருக்கும் கார்பனே. இதன் தொடர்ச்சியில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பெட்ரோல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. “ஓரு துளி பெட்ரோல் எங்களுக்கு ஒரு துளி ரத்தத்தைப் போன்றது” என்றார் அப்போதைய பிரான்சு அதிபர். இதன் தொடர்ச்சியில் மேலும் உலகப்போர்கள் மூலம் ஏற்பட்ட  அழிவுகள் விஞ்ஞானிகளை காலநிலை மாற்றம் நோக்கித் திருப்பியது. சுமார் 150 வருட கால தொழில் புரட்சி குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது ஏற்படுத்திய தாக்கத்தைப் பின்வருமாறு விவரிக்கின்றனர். உலகின் மொத்த வரலாற்றை நாம் ஒரு வருடமாக மாற்றினால் தொழில்புரட்சியானது புத்தாண்டு தொடக்கத்தின் நடுநிசியில் ஒன்றரை நொடி பொழுது மட்டுமே இதன் மூலம் மிக குறுகிய காலத் தொழில்புரட்சி ஒட்டுமொத்த உலகைப் புரட்டிப் போட்டு பூமியின் வெப்பநிலை வித்தியாசத்தை 1.5 டிகிரி செல்சியஸாக மாற்றியது.

காலநிலை மாற்றம் என்ற சொல்லாடலானது 1956 இல் கில்பர்ட் பிளாஸ் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. அவரின் காலநிலை மாற்றத்தின் கார்பன்டை ஆக்சைடு  என்ற ஆய்வுக்கட்டுரையானது உலகின் காலநிலை மாறி வருகிறது என்பதைக் குறித்து வெளிப்படுத்தியது. இதன் தொடர்ச்சியில் 1975 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த வேலஸ் என்ற விஞ்ஞானி புவி வெப்பமயமாதல் என்ற சொல்லாடலை முன்வைத்தார். பின்னர் இது காலநிலை மாற்றத்தோடு இணைத்துப் பயன்படுத்தப்பட்டது. 1979 இல் இந்தச் சொல்லாடலானது தேசிய அறிவியல் ஆய்வுமையத்தால் பயன்படுத்தப்பட்டது.. பின்னர் 1988 இல் இது சர்வதேசக் காலநிலை மாற்ற அரசுகளின் குழுமத்தோடு (Inter Governmental Panel on Climate Change) இணைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் காலநிலை மாற்றத்திற்கு மனித நடவடிக்கைகளே காரணம் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அது சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 90களுக்குப் பிறகே உலகம் காலநிலை மாற்றம் என்பதை பிரக்ஞை பூர்வமாக உணரத்தொடங்கியது. மேலும் 1992 இல் பிரேசிலின் ரியோ நகரில்  நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்கான  பூமி உச்சி மாநாடானது புவி வெப்பமயமாதல் மூலம் ஏற்படும் காலநிலை மாற்றத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. மேலும் வனங்கள் மற்றும் வன உயிரிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனை அதில் கலந்து கொண்ட 173 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதன் பின்னர் கெயொட்டோ பிரகடனம், அதனைத் தொடர்ந்து 2015 இல் காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தம்  உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டது. இது காலநிலை மாற்றத்தை தழுவுதல், தணித்தல் மற்றும் நிதி ஒதுக்கல் ஆகிய அம்சங்களைக் கொண்டதாக இருந்தது. இது காலநிலை மாற்றம் குறித்து அதுவரை ஏற்பட்ட ஒப்பந்தங்களில் முக்கியமான ஒன்றாக இருந்தது. இதன் தொடர்ச்சியில் ஒவ்வொரு வருடமும் Conference of Parties எனப்படும் அரசுகளின் கூட்டமைப்பு அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றில் மாநாடு நடத்தி காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கிறது.

காலநிலை மாற்றம் பூமிவாழ் உயிரினங்கள்மீது அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உலகம் கவலையுடன் தொடர் சிந்தனையிலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் இன்றைய சூழலில் காலநிலை என்பது உலகம் உருவாகிய காலந்தொட்டு மாறிவரக்கூடியது. ஆகவே அதனைப் பற்றி சிந்திப்பது போலி அறிவியல் பார்வை. அதனை அதன் போக்கில் அப்படியே விட்டுவிட வேண்டும் என்கின்றனர். இவர்கள் காலநிலை மறுப்பாளர்கள் (Climate Change Deniers) என்று காலநிலை விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் என்பது காலநிலை முனைப்பாக்க கூறுகள் (Climate Tipping Elements) என்றழைக்கப்படும் உயிர்க்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம், பனிக்கோளம் மற்றும்  வளிக்கோளம் ஆகியவற்றின் தாக்கங்கள் குறித்துதான். குறிப்பாக, ஹாலோசீன் என்றழைக்கப்படும் பனிப்பாறை காலம் என்பது உலகம் தோன்றிய நாள் முதல் இருக்கிறது. அது உருகுவதும், நிலைகொள்வதுமாக மாறி மாறி வருகிறது. ஆகவே காலநிலை மாற்றம்தான் அதற்குக் காரணம் என்பது ஏற்புடையதல்ல. உலகம் அதன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனித நடவடிக்கைகளால் அதனை மாற்றி விட முடியாது என்கிறார்கள். அதற்குப் பின்வருமாறு ஆறு விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்கள்.

  1. கார்பன் டை ஆக்சைடு உண்மையில் அதிகரிக்கவில்லை.
  2. ஒருவேளை அதிகரித்தாலும், அது காலநிலைமீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் அதுதான் வெப்பநிலையை அதிகரிக்கிறது என்பதற்கான திருப்திகரமான ஆதாரம் எதுவுமில்லை.
  3. ஒருவேளை வெப்பம் அதிகரித்தால் அது இயற்கையான காரணங்களால் ஏற்படுவது.
  4. மேலும் இயற்கையான காரணங்களால் வெப்பநிலை உயர்கிறது என்பதை விவரிக்க முடியாவிட்டால் மனித தாக்கம் என்பதும் பசுங்குடில் வாயுக்களின் மூலம் ஏற்படும் தொடர்ச்சியான தாக்கம் என்பதும் மிகக் குறைவே.
  5.  பூமியின் தட்பவெப்பநிலையில் தற்போது மற்றும் எதிர்காலத்தில் மனிதனால் ஏற்படும் தாக்கம் அலட்சியப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தாலும் மாற்றங்கள் நமக்கு நல்லதாகவே இருக்கும்
  6. மேலும் ஒருவேளை இந்த மாற்றங்கள் நல்லதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் இந்த மாற்றங்களை உள்ளிழுக்கும் திறமையை கொண்டிருக்கிறார்கள். மேலும் நமக்குத் தேவைப்படும்போது உண்மையிலே ஒரு தொழில்நுட்ப மாற்றம் வரக்கூடும்.

மேற்கண்ட காலநிலை மறுப்பாளர்கள் உலகின் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். இதில் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி ஜான் எஃப், கிளவ்சர் முக்கியமானவர். மேலும் ஆட்சியாளர்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்களான சில செனட் உறுப்பினர்கள் காலநிலை மறுப்பாளர்கள் கூட்டத்தில் முக்கியமானவர்கள். மேலும் காலநிலை மறுப்பாளர்களின் நிலைபாடு முதலாளித்துவ சமூகத்தின் இயற்கை சுரண்டல் நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் ஒன்றாகும். இதனை அறிவியல் பூர்வமாக உணர்ந்து கொண்டதன் காரணமாகத்தான் சோவியத் ரஷ்யா காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொண்டது. மேலும் 1988 இல் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. சபையின் தனி அமைப்பில் மிக முக்கிய பங்கு வகித்தது. இதன் தொடர்ச்சியில் உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளை முன்வைத்ததன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை இதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு UNFCC எனப்படும்  காலநிலை மாற்றத்திற்கான தனி அமைப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உலகின் பெரும்பாலான நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றம் குறித்த மாநாடுகளை நடத்துகின்றது.

காலநிலை மாற்றம் சமீப ஆண்டுகளாக உலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் ஆழ்ந்து அவதானிக்கிறார்கள். குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு உலகின் வெப்பநிலை முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக இருந்ததை குறிப்பிடுகிறார்கள். இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதுவரை காலநிலை மாற்றம் ஏற்படுத்திய தாக்கத்தினால் உலகில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது தொடர்ந்தால் இன்னும் நூறாண்டுகளில் உலகின் மக்கள் தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்கிறார்கள். மேலும் அது உலகின் வரைபடத்தை, குறிப்பாக கண்டங்களின் எல்லைகளை மாற்றி அமைத்துவிடும் என்கிறார்கள். ஆகவே இதனை மாற்ற இயற்கை வளங்கள்மீதான அதீத கட்டுப்பாடும், இயற்கையின் கூறுகள் மீதான கரிசனமும், மனித வாழ்வியல் முறை மாற்றமும், காடுகளின் பரப்பை அதிகரித்தல் மற்றும் காங்கிரீட் காடுகளைக் குறைத்தல் போன்றவை முக்கிய தடுப்பு நடவடிக்கைகள். மேலும் இயற்கை சமநிலை கோட்பாடும் பின்பற்றப்பட வேண்டும். இயற்கையை நாம் அழித்தால் அது நம்மைத் திருப்பி அழிக்கும் என்பது இயற்கை கோட்பாடு மற்றும் வரலாற்றின் உண்மை. அதற்கான நிகழ்கால சாட்சியங்கள் தான் தற்போது நிகழும் பேரழிவுகள். இதனை மனித இனம் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

peerzeena@gmail.com