இந்த ஆண்டு தொடங்கியது முதலாகவே தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் படங்களோ, கவனிக்கத்தக்க படங்களோ இல்லாமல் போனதால் மலையாள திரைப்படங்கள் கோலோச்சிய நிலையில், ஆண்டின் இரண்டாம் பகுதி தமிழ் சினிமாவிற்கே திரும்பியுள்ளது. அதுவும் தலித் மக்களின் குரலாய் தங்கலான், வாழை, பரீச்சார்ந்த முயற்சியாக கொட்டுக்காளி என கவனிக்கத்தக்க படைப்புகளாக வெளியாகியுள்ளன.
மாரி செல்வராஜ் மீண்டும் தனது நிலத்தில் இருந்து தனது பால்ய காலத்தில் இருந்து ஒரு கதையை கொண்டு வந்து திரையில் படைத்துள்ளார். 1999ல் ஸ்ரீவைகுண்டத்தில் வாழைத்தார் ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் புளியங்குளம், கீழநாட்டார் குளத்தை சேர்ந்த 19 தொழிலாளிகள் பலியானார்கள். அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த விபத்தை மையமாக கொண்டு, தான் பார்த்து பழகிய கதாப்பாத்திரங்களை புனைவாக்கி ‘வாழை’யை உருவாக்கியுள்ளார் மாரி. அந்த சமயத்தில் மாரியும் சிறுவனாகவே இருந்திருப்பார் என்பதால் அதன் வலியை எப்படி உணர்ந்தாரோ அதை அப்படியே திரையில் கடத்தி மற்றவர்களை கலங்க செய்து தான் செய்ய நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
‘பரியேரும் பெருமாள் பிடித்தவர்களுக்கு கர்ணன், மாமன்னன் பிடிக்கவில்லை. ஏனென்றால் பரியன் திரும்ப அடிக்கவில்லை. ஆனால் கர்ணனும் மாமன்னனும் திரும்ப அடித்தார்கள். அதனால்தான் பலருக்கு பிடிக்கவில்லை’ என்று பா. ரஞ்சித் ‘வாழை’ விழா மேடையிலேயே சொன்னார். அந்த கூற்றுப்படி பார்த்தால் இது மக்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். ஏனென்றால் இந்த படம் ஏகத்துக்கும் பார்வையாளர்களை அழ வைக்கிறது. புளியங்குளம் கிராமத்தின் அழகு தேனி ஈஸ்வரின் கேமரா கண்களில் அழகாக பதிவாக்கப்பட்டிருக்கிறது.
சந்தோஷ் நாராயணின் இசை மாரிக்கு மட்டும் எப்போதும் போல சிறப்பாகவே இசைக்கிறது. சிறுவயதில் வேலைக்கு சென்றுகொண்டே படித்த பலரும் தங்களை சிவனைந்தனுடன் பொருத்தி பார்த்துக் கொள்வதற்கான பல காட்சிகள் உள்ளன. இறுதியில் வரும் விபத்துக்காட்சி பலரையும் அழ செய்யும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இது மாரியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடனான புனைவு என்பதால் இப்படிதான் எடுத்திருக்க வேண்டும் என்று சொல்லமுடியாது. என்றாலும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதம் குறித்த கேள்விகளும் எழாமல் இல்லை.
படத்தின் சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவையாக கூடத் தோன்றின. ஒரு காட்சியில் சிவனைந்தன், தான் மேய்க்கும் மாட்டை கவனித்துக் கொள்ளாமல், தனது விருப்பமான ஆசிரியை பூங்கொடியுடன் மில்லுக்கு சென்று விடுகிறான். கயிறு அறுத்த மாடு விவசாய நிலத்திற்குள் புகுந்துவிட, நிலத்துக்காரன் மாட்டைக் கொண்டு வந்து சிவனைந்தன் தாயார் முன் நிறுத்தி வாக்குவாதம் செய்வான். அதற்கு கனி (கலையரசன்) ஆண் துணை இல்லாத வீட்டில் எதற்கு சத்தம் போடுகிறாய் என கேட்கப் போக இருவருக்கும் கைக்கலப்பாகிவிடுகிறது. அந்த சமயத்தில் சிவனைந்தனின் தாயார் தனது கம்மளை கழட்டி கொடுத்து பயிர் சேதத்திற்கு ஈடாக எடுத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, மகளை உள்ளே இழுத்து சென்று தாழிட்டுக் கொள்கிறாள். பின்னர் தனது கணவர் இல்லாத நிலையை எண்ணி தாயார் அழ, கூட மகன், மகள் அழ அந்த அழுகாட்சியோடே இடைவேளை முடிகிறது. இத்தனைக்கும் நிலத்துக்காரனான அந்த ப்ரோக்கர் அவ்வளவு மோசமாகவும் எதையும் பேசியதாக தெரியவில்லை. அவை சிவனைந்தன் தன் சிறுவயதில் அந்த சுமையை எவ்வாறு உணர்கிறான் என்று காட்டப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தாலும், ஒரு காட்சியாக அது பச்சாதாபத்தை உருவாக்குவதை தவிர்க்க இயலவில்லை.
சிறுவனாக இருக்கும் யாவருக்கும் விடுமுறை நாளில் வேலைக்கு போவது பிடிக்காத காரியம்தான். 80, 90களை சேர்ந்தவர்களிடம் பேசினால் அவர்களது பால்யகாலம் அப்படிதான் இருந்திருக்கும். பலரும் விடுமுறை நாட்களில் தனது கொத்தனார் அப்பாவுக்கு பாண்டு சட்டி தூக்குவது தொடங்கி பல வேலைகளை செய்திருப்பார்கள். அதனால் அவன் வாழைக்குழை சுமப்பதை வெறுக்கும் காட்சிகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். விடுமுறை நாள் என்றால் அப்பா வேலைக்கு அழைத்துப் போய் விடுவாரோ என உடல் சுகமில்லை, வீட்டுப்பாடம் இருக்கு என சாக்குப்போக்கு சொல்வோர் ஏராளம். 80களின் குடும்ப பொருளாதாரத்தில் கணவன் மட்டுமல்லாமல், மனைவி, குழந்தைகளின் உதவியும் பெரும்பங்கு வகித்திருக்கிறது. சிவனைந்தன் பள்ளி படிப்பு ஒருபக்கம், வேலை மறுபக்கம் என இரு வேறு உலகங்களை தூக்கி சுமப்பதன் பாரத்தை படம் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
பள்ளி படிப்பவர்களுக்கு எப்போது விடுமுறை வரும் என்ற ஆசை இருக்கும். மாறாக சிவனைந்தனுக்கு, அவன் நண்பன் சேகருக்கும் விடுமுறையே வந்துவிடக்கூடாது என்பதே விருப்பமாக இருக்கிறது. வாழைக்குழை சுமப்பதை வெறுக்கும், அதனால் மனதளவில் பெரும் பாதிப்புகளை சந்திக்கும் சிவனைந்தனுக்கு பள்ளியும், அவனது விருப்பமான ஆசிரியை பூங்கொடியும்தான் மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களாக உள்ளது. ஆனால் பூங்கொடி கதாப்பாத்திரமும் பொதுவான ஒரு க்ரஷ் மனநிலையிலிருந்து அணுகப்பட்டதை தாண்டி அந்த கதாபாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவமும் படத்தில் இல்லை. அவர் சிவனைந்தன் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மற்ற மசாலா படங்களில் வந்து போகும் நாயகிகளைப் போல இவரும் வந்து போகிறார். சிவனைந்தனுக்கும் சேகருக்கும் இடையே நடக்கும் ரஜினி, கமல் ரசிக சண்டை, பூங்கொடி டீச்சர் என பொதுவான நாஸ்டால்ஜியா காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், வாழைத்தோட்ட தொழிலாளிகளுக்கு அளிக்கப்படவில்லை. சிவனைந்தன் வாழைக்குழைக்கும், பள்ளி படிப்புக்கும் இடையே அல்லாடுவதையும் ‘ஒரு ஊருல ராஜா’ போன்ற பாடலின் மாண்டேஜுகளில் கடந்து விடுவதால் அந்த பாடுகளால் அழுந்தப்பதியாத தோற்றம் உருவாகிறது. படம் முழுவதும் சிவனைந்தனை சுற்றியே செல்வதால் அவன் இன்பங்களும், துன்பங்களும் மட்டுமே படத்தில் பிரதானமாக அமைகிறது.
படத்தில் ஒன்றிபோக முடியாத கேரக்டர் சிவனைந்தனின் தாய். தெரியாமல் கூட சிரித்துவிடாத அந்த தாயார் படம் முழுவதும், சோகமாகவும் அழுது கொண்டுமே இருக்கிறார். அதையே பார்வையாளர்களுக்கும் கடத்தி விடுகிறார். பிழைப்புக்காக வாழைக்குழை அறுப்பதையே முழு நேர தொழிலாக கொண்ட ஒரு கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் சென்று படித்து தனது மகன் வகுப்பிலேயே முதல் மாணவனாக வருகிறான் என்பதைப்பற்றி அவருக்கு பெரிய மகிழ்ச்சியில்லை. அதுகுறித்து அவர் அக்கறை கொண்டதாக எதுவும் தெரியவில்லை. வாழைக்குழை வெட்டினால்தான் அவன் பிழைக்க முடியும் என தீர்க்கமாக அவர் நம்புவதாகவே தெரிகிறது. தனது மகன் பள்ளிக்குப் போவதை விட வாழைக்குழை அறுக்க போவதே அவருக்கு முக்கியமாக இருக்கிறது. ‘அவனுக்கும் சேர்த்து வாங்கிய முன்பணத்திற்காக யாராவது வாசலில் வந்து நின்று கத்தினால் அவருக்கு மானக்கேடு ஆகிவிடுமே’ என்றே அவர் சிந்திக்கிறார். ஒரு காட்சியில் “இவன் அப்பன் இப்படிதான் கொடியை தூக்கிட்டு போராட்டம்னு போய் ஆத்தோட அடிச்சிட்டு போனான்” என சொல்கிறார். தனது மகனும் அப்படி போராட்டக்காரனாக போய் விடுவானோ என்று அவர் பயப்படுகிறார் என்றாலும், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை.
சிவனைந்தன் அவனுக்கு நெருக்கமான கதாப்பாத்திரங்களை இறுதியில் இழக்கிறான். ஒரு பக்கம் உணவு கிடைக்காமல் தோட்டத்துக்காரனால் சிவனைந்தன் விரட்டியடிக்கப்பட்டு அலையும் சூழலில், மற்றொரு பக்கம் கூலிக்கு கணக்கு பார்த்த முதலாளியால் தொழிலாளிகள் பலியாகிறார்கள். அந்த விபத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தியதன் வாயிலாக ஒரு உள்ளார்ந்த வலியை இயக்குனர் ஏற்படுத்துகிறார். மைனா, கல்லூரி போன்ற படங்களிலும் இப்படியான வலி க்ளைமேக்ஸில் காட்டப்பட்டிருக்கும். இப்படியான காட்சிகள் எவரையும் கண்கலங்க செய்துவிடுபவை. நிஜக்கதை என்றாலும் இந்த கமர்ஷியல் உத்தியே இங்கு ஆடியன்ஸை அழ செய்யப் பயன்பட்டிருக்கிறது. படம் முழுவதும் வெகுளியாக திரிந்த சேகர், விருப்பமான அக்காள், தந்தையை நியாபகப்படுத்தும் கனி அண்ணன் உள்ளிட்டவர்களை படம் முழுக்க எல்லாரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தி கடைசியாக அவர்கள் பலியாவதை கண்ணுக்கு நேராக காட்டுகையில் ஏற்படும் சோகம் அது. தற்போதைய சூழலிலும் தமிழகம் முழுவதுமே பல பகுதிகளிலும் லோடு வாகனங்களில் கூலி ஆட்களை ஏற்றி செல்வது சர்வசாதாரணமாக பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் அப்படி பாதுகாப்பற்ற வகையில் அழைத்துச் செல்லப்படுவதை குறித்த விவாதங்களை மாரி முன்வைக்கவில்லை. அது கூலி உயர்த்தி கேட்ட தொழிலாளர்களுக்கு, கஞ்சமான வியாபாரியால் ஏற்பட்ட வினையாகவே முடிகிறது. கூலி உயர்த்தி கொடுத்ததால் லோடு லாரியிலேயே ஊருக்கு திரும்ப செல்லுமாறு வியாபாரி சொல்வதாக காட்டப்படுகிறது. கூலி உயர்த்தி கொடுக்கும் முன்பும் கூட அந்த தொழிலாளிகள் லோடு லாரியில் ஏறி செல்வதாகதான் காட்டப்பட்டிருக்கும். ஆக கூலி கொடுக்கும் முன்னரும், பின்னரும் கூட வியாபாரி அவர்கள் பேருந்தில் போக காசு கொடுப்பதில்லை. அவர்கள் உயிர் அன்றாடம் ஊசலாடியபடிதான் இருந்திருக்கிறது. அந்த விபத்தை அப்படியாக காட்சிப்படுத்திய அளவிற்கு அவர்களின் ஆபத்தான அந்த பயணம், அந்த ஊசலாட்டம் முந்தைய காட்சிகளில் காட்டப்படுவதில்லை. அன்று லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்த விபத்து ஏற்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் அந்த விபத்து நடந்திருக்கும். இந்த ஆபத்து இன்றும் பலருக்கு உள்ள நிலையில் அதை பொதுவெளி விவாதத்திற்குள் கொண்டு வராமல் ஒரு சிறுவனின் நினைவுகளோடே நின்றுவிடுகிறது.
மொத்தத்தில் உண்மையில் நடந்த ஒரு சம்பவம் மாரி நினைவில் இருக்கிறது. அவர் சகோதரியையே அவர் அதில் இழந்துள்ளார். அதை சுற்றி ஒரு உலகத்தை உருவாக்குகிறார். ஆனால் அந்த உலகம் ஒரு சிறுவனுடையது. அந்த உண்மை சம்பவம் அந்த சிறுவனின் வாழ்க்கையில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. ஆனால் சிறுவனின் உலகத்தை விட, வலியை விட அந்த சம்பவத்தின் பாதிப்பு வீரியமாக உள்ளது. அதை சிறுவனின் கண்ணோட்டத்தில் காட்டும்போது கழிவிறக்கமும், அழுகையையும் ஏற்படுத்துவதை தாண்டி அரசியல்படுத்த தவறுகிறது. படம் முழுக்க எல்லாரும் அழுதுகொண்டிருக்கும்போது, ஒரு மோசமான விபத்தை காட்டும்போது பார்ப்பவர்களும் அழுதுவிடுவது இயல்பு. ஆனால் அந்த அழுகை ’ஐயோ பாவம்’ என்ற கழிவிரக்கத்தால் ஏற்படுகிறதா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கு இது எங்கோ வாழ்ந்த சிறுவனின் நினைவலைகளாக எஞ்சிவிட்டால், தனக்கு எதிரே இருக்கும் சிவனைந்தன்களை அவர்கள் கண்டுகொள்வார்களா?
கர்ணனும், மாமன்னும் திரும்ப அடிப்பதில் கூட விவாதிக்க நிறைய இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வலிகளில் இருந்து மீண்டெழுவதை காட்டும்போது கிடைக்காத வரவேற்பு, வலிகளில் உழன்றுகொண்டே இருப்பதை காட்டும்போது கிடைப்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இறுதிக் காட்சி கொடுத்த உண்மை சம்பவத்தின் அழுத்தமும், முதல் பாதி கொடுத்த 90களின் சிறுவர்கள் குறித்த வாழ்வியலும் கமர்ஷியலாக இந்த படம் வெற்றியாக உதவும் என்றாலும், மாரியின் மற்ற படங்களை போல ஒரு தீவிர அரசியல் விவாதத்தை ஏற்படுத்தாத, கழிவிரக்கம் கோரும் படமாக இருக்கிறது வாழை. இது படம் பார்த்தவர்கள் வீட்டுக்கு சென்று அடுத்த வேலைக்குள் நுழையும் வரை தொடரக்கூடிய ஒரு சிறு அதிர்வாக மட்டுமே இருக்கும். அதை தாண்டியதொரு விவாத பார்வைக்குள் செல்லுமா அல்லது இதை இத்தனை நாளும் கண்டுகொள்ளாதிருந்தவர்கள் இடையே ஒரு சலனத்தையாவது ஏற்படுத்துமா என்பது என்னை பொறுத்தவரையில் சந்தேகத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது. ஆனால் மாரிக்கு தன்னுடைய இந்த கதையை ஜஸ்ட் சொல்ல வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்திருக்குமானால் அதை அவர் சொல்லிவிட்டார். அவ்வளவே..!