கொல்கத்தா ஆர்.ஜி. கார்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமான வகையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 36 மணி நேரம் தொடர் பணியில் இருந்த மருத்துவ மாணவி, சற்று நேரம் ஓய்வுக்காகத் தனியறையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது, அதுவும் நடு இரவில். மருத்துவமனையில் சுற்றி திரிந்துகொண்டிருந்த ஒரு பாதுகாப்பு நபரே இந்த சம்பவத்தை செய்திருப்பது மருத்துவர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவப் பணியாளர்கள்மீதான வன்முறைகளைத் தடுத்திட நிரந்தரத் தீர்வு வேண்டி, 2019 முதலே மருத்துவர்கள் அங்கங்கு தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். மருத்துவப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்குமிடையேயான வழக்கமான வன்முறை சம்பவங்களுடன் கொல்கத்தா மருத்துவ மாணவியின் மரணத்தை ஒப்பிட முடியாது என்றாலும், இந்த சம்பவத்தை ஒட்டி மருத்துவர்களின் பாதுகாப்பின்மீது, மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இருக்கக்கூடிய அலட்சியங்கள் வெளிவந்திருக்கின்றன.

ஏராளமான கனவுகளோடு மருத்துவம் படிக்க வந்திருக்கும் இளைய தலைமுறை மருத்துவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது, அரசாங்கத்தின்மீதும், பொதுமக்களின்மீதும் ஒரு அவநம்பிக்கை மருத்துவர்களுக்கு எழுந்திருக்கிறது, அதன் விளைவாக, நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள், பொதுமக்களும்கூட இந்தப் போராட்டத்தில் தன்னிச்சையாக இணைந்திருக்கிறார்கள்.

பின்னணியில் அரசியல்?

மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பற்ற பணிச் சூழல், இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஒன்றிய அரசிற்குத் தெரிய வந்ததுபோல அவர்களின் செயல்பாடு இருக்கிறது. அதுவும் கொல்கத்தாவில் மட்டும்தான் இப்படிப்பட்ட சூழல் இருப்பது போலவும், ஒன்றிய அரசின் மருத்துவ நிறுவனங்களும், பிற மாநில மருத்துவமனைகளும் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போலவும் இந்த சம்பவத்தை மேற்கு வங்க ஆளும் அரசிற்கு எதிராகக் கட்டமைக்க முற்படும் அவர்களின் அரசியலை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த இந்தக் கொடூரமான சம்பவம் “மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையாக” மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது.  பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நம் நாட்டில்  நடக்கும் மற்றுமொரு பாலியல் வன்கொடுமையாகவும் இதைப் பார்க்க வேண்டும். இந்த சம்பவங்கள் இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக நடந்து வருவதை நாம் கவனித்து வருகிறோம், அதுவும் உத்தரப் பிரதேசம், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இவையெல்லாம் அன்றாட நிகழ்வாகவே மாறியிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரமான சம்பவங்களை நிரந்தரமாக எப்படித் தடுப்பது என்பதைதான் ஒன்றிய அரசு திட்டமிட வேண்டுமே தவிர, தங்களின் அரசியலுக்கான எரிபொருளாக இப்படிப்பட்ட சம்பவங்களைப் பயன்படுத்திக்கொள்ள கூடாது.

தொடரும் வன்முறை சம்பவங்கள்:

மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் என்பவை புதிதான ஒன்றல்ல, நீண்ட காலமாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சினை. 2007 இல் இருந்து 2009 ஆண்டு வரை கிட்டத்தட்ட 153 வன்முறை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2020 இல் இது 225 ஆக உயர்ந்திருக்கிறது, அதற்குப் பிறகு இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் இந்த வன்முறை சம்பவங்களுக்கு இலக்காக மாணவர்களும், கீழ்நிலையில் உள்ள பணியாளர்களுமே இருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களை தடுக்கக்கோரி பல்வேறு மருத்துவ அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன, இதன் விளைவாக ஒன்றிய அரசு ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு சில நடவடிக்கைகளை கொண்டுவந்தது, அதாவது மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதியப்படும், மேலும் 3 மாதத்திலிருந்து ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டணை கொடுக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் புதிய அறிவிப்புகள் மருத்துவர்களுக்கு திருப்தி அளிக்காததால் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.

2019 மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தைப் பாரளுமன்றத்தில் நிறைவேற்றிய ஒன்றிய அரசு, அதை சில மாதங்களிலேயே மருத்துவர்களுக்கு மட்டும் பிரத்தியேகப் பாதுகாப்பு கொடுத்தால் பிற அமைப்பை சார்ந்தவர்களும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென சொல்வார்கள் எனச் சொல்லி அந்த சட்டத்தைத் திரும்ப ப்பெற்றுக்கொண்டது. மருத்துவர்களின் பாதுகாப்பிற்கென்று பல மாநிலங்கள் பிரத்தியேகச் சட்டங்கள்  இயற்றிக்கொண்ட நிலையில், இன்னும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள யூனியன் பிரதேசங்களிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும் இப்படிப்பட்ட எந்த சட்டங்களும் நடைமுறையில் இல்லை.

மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்குக் கொதித்தெழும் அரசு, மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தில் இன்னும் அலட்சியம் காட்டி வருவது மட்டுமில்லாமல், சமீபத்தில் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களின்படி, மருத்துவக் கவனக்குறைவிற்காக மருத்துவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதியலாம் என்றும், அதற்காக உடனடியாக மருத்துவர்களைக் கைது செய்யலாம் என்றும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மருத்துவர்களுக்கு எதிரான இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி இந்திய மருத்துவ சங்கம் ஒரு மாதத்திற்கு முன்புதான் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது, இது தொடர்பான கண்டனத்தையும் எழுப்பியிருந்தது. உண்மையில் மருத்துவர்களின்மீதும் மருத்துவப் பணியாளர்களின் மீதும் அக்கறையுள்ள அரசு இதைச் செய்திருக்குமா என்பதைத்தான் நாம் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மருத்துவர்கள்மீதான தொடர் வன்முறைகள்- காரணம் என்ன?

கொல்கத்தா சம்பவம் என்பது மருத்துவர்களின்மீதான மற்ற வன்முறைகளிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால் மருத்துவர் என்பதையும் தாண்டி பெண்களின்மீது நிகழ்த்தப்படும் குற்றங்களில் ஒன்றாகவே இதைக் கருத முடியும், அப்போதுதான் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை சட்டத்தின்படி உறுதி செய்ய முடியும். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின்படி, மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் என்பவை அவர்களின் பணி சார்ந்து அவர்களின்மீது நிகழ்த்தப்படுபவைகளையே குறிக்கிறது.

மருத்துவப் பணியாளர்கள் தங்களின் பணியைச் செய்யும்போது ஏற்படும் முரண்களால் உருவாகக்கூடிய வன்முறைகளே மருத்துவப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் என வரையறை செய்யப்பட்டிருக்கிறது. கொல்கத்தாவில் நிகழ்ந்தது அப்படி ஒன்றல்ல, குற்றமிழைத்தவன் தனிமையில் இருக்கும் ஒரு மாணவியை வன்கொடுமை செய்திருக்கிறான், படுகொலை செய்திருக்கிறான். அந்தக் கொலை பணியின் நிமித்தம் ஏற்பட்ட முரணல்ல, அவள்மீது திட்டமிட்டு செய்யப்பட்ட வன்முறை. மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை இந்த சம்பவத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாமே தவிர, இது மாணவியின்மீதான கொடூரமான வன்முறையாகவே பார்க்க முடியும்.

மருத்துவப் பணியாளர்களின்மீதான வன்முறைகளை எப்படி அணுகுவது?

சமீப காலங்களில் பொதுமக்களுக்கு மருத்துவர்களின்மீது வெறுப்பும், வன்மமும் அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணம், மருத்துவர்களின் மீதான நம்பிக்கையின்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று தமிழ்நாட்டில் நடந்த ஒரு பிரச்சினையில் ஒரு மருத்துவர் கொல்லப்பட்டார். ஒரு காலத்தில் மருத்துவர்களைக் கடவுளுக்கு சமமாக மதித்துக் கொண்டிருந்த இந்த சமூகம்தான் மருத்துவர்களைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்று இருக்கிறது. இதை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் நாம் இன்னமும் சுருக்கிப் பார்த்துகொண்டிருக்க முடியாது. மக்கள் மருத்துவர்களின்மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை மருத்துவர்கள் இந்தச் சம்பவங்களின் வழியாக உணர வேண்டியது அவசியம். மருத்துவர்களின்மீதான தாக்குதல்கள் என்பது இந்த நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுகள் அவ்வளவே. நாம் இந்த வெளிப்பாடுகளின்மீது அதிகபட்ச வெளிச்சத்தைப் பாய்ச்சுவதன் வழியாக இதனுள் நடந்து கொண்டிருக்கும் ஆதாரமான பிரச்சினைகளைக் கவனிக்க மறுக்கிறோம்.

மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் நாம் அவர்களின் நலன்மீது உண்மையான அக்கறையுடன் இருக்க வேண்டும். மருத்துவர்களுக்கு மக்களின் நலன்மீது அக்கறையை வெளிப்படுத்துவதற்கு இங்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவத்துறையின்மீதும், அல்லோபதி மருத்துவத்தின் மீதும் தொடர்ச்சியான போலி பிரச்சாரங்கள் இங்கு திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்றன. மருத்துவர்கள் அந்தப் பிரச்சாரங்களுக்கு எதிராக எந்த அடிப்படை அறிவியல் விளக்கத்தையும்கூட மக்களுக்குத் தர முன் தரவில்லை. உதாரணமாகத் தடுப்பூசிகளுக்கு எதிராக சமீப காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களை நாம் அறிவோம். எத்தனை மருத்துவர்கள் அல்லது மருத்துவச் சங்கங்கள் அந்தப் பிரச்சாரங்களை முறியடித்து மக்களைக் காக்கும் வேலையை செய்தன? உண்மையில் மக்களின் நலன் மீதும், மருத்துவத் துறையின் மீதும் அக்கறையிருந்தால் அதை எதிர்த்துப் பேசியிருக்க வேண்டும்தானே?  தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் வணிக கொள்ளைகளுக்கெல்லாம் எதிராக மருத்துவர்கள் பேசாமல் போனதின் விளைவாகவே மருத்துவர்களுக்கும் அதில் பங்கு உண்டு என மக்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தேவையற்ற பரிசோதனைகளையும், தேவையற்ற வைத்தியங்களையும் செய்ய சொல்லி கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவர்களை நிர்ப்பந்திக்கும்போது அதை எதிர்த்து மருத்துவர்களின் குரல் ஒலித்திருந்தால் அது மக்களின் குரலாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே!

“கார்ப்பரேட் மருத்துவமனைகளின்மீதும், தனியார் மருத்துவமனைகளின்மீதும் மக்களுக்குக் கோபமிருந்தால் ஏன் அரசாங்க மருதுவமனையில் உள்ள மருத்துவர்களையும் தாக்குகிறார்கள்?” என்ற கேள்வி இங்கு எழலாம். அது உண்மைதான். மருத்துவர்களின்மீதான பெரும்பாலான தாக்குதல்கள் அரசாங்க மருத்துவமனையில்தான் நடக்கின்றன. அதுவும் பயிற்சி மாணவர்கள், இளநிலை மருத்துவர்களே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வணிகக்கொள்ளைக்கு ஏதோ ஒரு வகையில் அரசாங்க மருத்துவமனைகளும் காரணம் என மக்கள் நினைக்கிறார்கள். அரசாங்க மருத்துவமனைகளின் போதாமைகளின் விளைவாகவே மக்கள் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். இந்தப் போதாமைகளுக்கு எதிராக எந்த அரசாங்க மருத்துவர்களும் இதுவரை குரல் கொடுத்ததாய் தெரியவில்லையே. “அரசாங்க மருத்துவமனைகளின் போதாமைகளுக்கு மருத்துவர்கள் காரணமல்ல, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளே காரணம்” எனக் காரணம் சொல்லி மருத்துவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். தனக்கென்று ஒரு பிரச்சினை ஏற்படும்போது தன்னை அரசாங்கத்தின் பிரதிநிதியாக முன்னிறுத்திக் கொள்ளும் மருத்துவர்கள் அரசாங்கத்தின் போதாமைகளுக்கும் பொறுப்பு ஏற்பதுதானே முறை?

சில நாட்களுக்குமுன் பீகாரில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை அலற்சியால் இறந்து போனார்கள். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தின் போது அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்த பத்திரிகையாளர்கள் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களை நோக்கி தங்களது மைக்குகளை நீட்டி அவர்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஏராளமான குழந்தைகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில், இருக்கும் வெகு சில மருத்துவர்களையும் அவர்களது பணியைச் செய்ய விடாமல் ஊடகத்தினர் அவர்களைக் குற்றவாளிக்கூண்டில் நிற்க வைத்து தங்களது கடமையை முடித்துக் கொண்டனர். “ஏன் அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது?” என்ற ஒற்றைக் கேள்வியைக் கூட அவர்கள் அரசாங்கத்தை நோக்கி வைப்பதற்குத் தயாராக இல்லை. வழக்கம் போலவே மருத்துவர்களைப் பலிகடாவாக்கும் போக்குதான் அங்கு இருந்தது. அந்த பிரச்சைனையில் அரசு என்ன விதமான நிலைப்பாடு எடுத்தது என்பதை மருத்துவர்கள் கவனித்தார்களா என தெரியவில்லை. “அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையின் போதாமைகளும், மருத்துவர்களின் திறமையின்மையும்தான் காரணம்” என்ற வகையில் தான் அரசின் விளக்கம் இருந்தது. அரசாங்கமும் பழியைத் தூக்கி மருத்துவர்களின்மீதும், மருத்துவமனையின்மீதும் போட்டுவிட்டு அரசு தனது கையைத் துடைத்துக் கொண்டது. மருத்துவர்களைச் சுற்றி நிகழும் அந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் மக்கள் ஆபத்தானவர்கள் என்று சித்தரிப்பதையே மருத்துவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தால் எப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்?

மக்களின் நலன் தொடர்பாக அரசாங்கத்தின் போதாமைகளை மறைத்துக் கொள்ள மருத்துவர்களை ஒரு துருப்புச் சீட்டாக அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இதை மருத்துவர்கள் இன்னமும் உணர்ந்து கொள்ளாமல் மக்களிடம் இருந்து தங்களைக் காக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தால் மக்களிடம் இருந்து இன்னும் அந்நியப்பட்டுதான் போவார்கள். மருத்துவத் துறையின் வணிகமாக்கலில் ஒரு மிகப்பெரிய மோசமான விளைவாக நான் நினைப்பது மக்களையும், மருத்துவர்களையும் எதிரெதிர் துருவத்தில் நிற்க வைத்ததுதான். இந்த நிலைக்கு மருத்துவர்களும் ஒரு வகையில் காரணமே. ஒரு அரசாங்க மருத்துவத்தில் போதுமான வசதிகள், குறைகள் இருக்கும்போது மக்களின் சார்பாக மருத்துவர்கள் நின்று அந்தக் குறைகளையெல்லாம் சரி செய்ய முயற்சிகள் எடுத்திருந்தால் மக்கள் மருத்துவர்களின் பக்கம் நின்றிருந்திருப்பார்கள். மருத்துவர்கள் செல்ல வேண்டிய பாதை இதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்களின் பொது நலனுக்கு எதிராக தீட்டப்படும் எந்த ஒரு தீவிரமான திட்டத்தையும் மருத்துவர்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின்படி, அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலான அரசாங்க மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட்டு விடுவோம். தமிழகத்தின் அடிப்படை மருத்துவக் கட்டுமானம் வேறெந்த மாநிலத்தை விட பலமானது. மருத்துவத் துறையின் அத்தனைப் புள்ளிவிவரங்களிலும் தமிழகம் மேலானதாக இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை, மருத்துவமனை பிரசவங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் இருக்கும் ஏராளமான துறை சார்ந்த மருத்துவர்கள் போன்று இன்னும் நிறைய விஷயங்களில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னணீயில் இருக்கிறது. இன்று இவை அத்தனையும் ஆபத்தில் இருக்கின்றன. “நீட்” டின் வழியாக ஏராளமான வெளி மாநில மாணவர்கள்  நமது மருத்துவ இடங்களில், மருத்துவக் கல்லூரிகளில் நிறைய தொடங்கிவிட்டார்கள். இதன் விளைவாக கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது, மாவட்ட மருத்துவமனைகளைத் தனியார் மயமாக்கும் நிதி ஆயோக்கின் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் இந்த அடிப்படை மருத்துவக் கட்டுமானம் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். அடிப்படை மருத்துவம் என்பது முசாஃபர்பூரில் மட்டுமல்ல, தமிழகத்திலும் எளிய மக்களுக்கு எட்டாததாக மாறிப்போகும் வாய்ப்பிருக்கிறது. ஒரு எளிய ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவன் மருத்துவராகவே ஆக முடியும் என்ற நிலை மாறிப்போய் அவர்களுக்கு அடிப்படை வைத்தியமே இனி எட்டாத கனிதான் என்பது எத்தனை கொடுமையானது? இந்த பிரச்சினைகளின் தீவிரத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட மருத்துவர்கள்தானே இதையெல்லாம் எதிர்த்து மக்களுக்காகப் போராட வேண்டும்? நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வேறு எந்த வகையில் நம் மக்களுக்கு உணர்த்த முடியும்? அதற்கு இதை விட சிறந்த வாய்ப்பு எது?

சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட மருத்துவக் கட்டுமானம் சீர்குலைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் அதை சீரமைக்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. அதை முன் வைத்து மருத்துவர்கள் முன்னெடுக்க வேண்டிய பல விஷயங்கள் இங்கிருக்கின்றன அதில் முக்கியமானவை: அரசு மருத்துவமனைகளின் போதாமைகளைக் களைய வேண்டும், மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை மருத்துவர்கள் முன்னெடுக்க வேண்டும், எளிய மனிதர்களின் அடிப்படை மருத்துவ வசதிகள் பாதுக்காக்கப்பட வேண்டும், மருத்துவ அறிவியலின் அத்தனை வளர்ச்சிகளும் நாட்டின் கடைக்கோடியில் இருப்பவருக்கும் எந்தவித தங்குதடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும், அதற்காகத் தன்னலமற்ற உரையாடலை மேற்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்; மருத்துவமனைகளின் கதவுகளுக்கு உள்ளே ஒரு எளிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும், அவர்களின் வைத்தியம் சார்ந்த சிக்கல்கள், சங்கடங்கள், சந்தேகங்கள் போன்றவற்றைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும், மிக முக்கியமாக நோயர்களுடன், அவர்களின் உறவினர்களுடன் முன்முடிவுகளற்ற, அதிகாரமற்ற, பகட்டற்ற உரையாடலுக்குத் தங்களைத் தயார் செய்ய வேண்டும். நோய்மையில் இருந்து ஒருவரை வெளிக்கொணருவது என்பது தங்களது கடமை அந்த நோய்மைக்கான வைத்தியத்தைப் பெறுவது நோயர்களின் உரிமை என்ற வகையில்தான் ஒரு மருத்துவரின் நிலைப்பாடு இருக்க வேண்டும்.

ஒரு மருத்துவமனையில், நோயின் தன்மையால் ஒருவர் இறக்கும்போது அதற்குக் காரணம் ‘மருத்துவர்களின் போதாமை’ என்ற முடிவுக்கு நோயரின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் வருவது ஆபத்தானது. ஆனால் அப்படி உடனடியாக அந்த முடிவுக்கு அவர்கள் வருவதற்கு என்னவெல்லாம் காரணம்? மருத்துவத்தின்மீதும் மருத்துவத்துறைமீதும் சமீப காலங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும் வெறுப்புப் பிரச்சாரங்கள், அதிகரித்து கொண்டே வரும் மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி, அரசாங்க மருத்துவமனைகளின் போதாமைகளும், அதை இன்னும் பலவீனப்படுத்தும் அரசின் கொள்கை முடிவுகளும், கார்ப்பரேட் மயமாகிவரும் மருத்துவத்துறை என நிறைய காரணங்கள். இவையெல்லாம் மருத்துவர்களின்மீது மட்டும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதில்லை மருத்துவத்துறையின்மீதே மக்கள் நம்பிக்கையிழந்து வருகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

மருத்துவர்களின்மீதான தாக்குதல்களை நாம் இந்தக் காரணங்களின் வழியாகவே புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவத்துறையின் பிரதிநிதிகளாக மக்கள் மருத்துவர்களையே நினைக்கிறார்கள் அதனால்தான் அதன் போதாமைகளுக்காக மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். தங்களது பாதுக்காப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக மருத்துவர்கள் நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்களை மருத்துவத்துறையின் பிரதிநிதிகளாக இன்னும் உணரவில்லை என்பதே பொருள். மருத்துவத்துறையைப் பாதுக்காக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்குதான் இருக்கிறது என்று மக்களுக்குத் தெரிகிறது ஆனால் மருத்துவர்கள் அதை உணராமல் இருப்பதுதான் வேதனை. வேறு யாருடைய நலனையும்விட மக்களின் நலன்தான் முக்கியம் என்பதை ஒரு மருத்துவர் உணரும்போது மருத்துவர்களின் பக்கம் மக்கள் நிற்பார்கள். மக்களின் உரிமைக்காக மருத்துவர்கள் போராடினால் மருத்துவர்களின் உரிமைக்காக மக்கள் போராடுவார்கள். இல்லையென்றால் ஒருவரை எதிர்த்து இன்னொருவர் காலம் முழுக்கப் போராடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது மருத்துவர்களுக்கும் நல்லதல்ல, மக்களுக்கும் நல்லதல்ல, மருத்துவத்துறைக்கும் நல்லதல்ல.

sivabalanela@gmail.com