முருகேசன் இன்று மகள் வீட்டுக்கு வந்து விட்டு ஊர் திரும்புகிறான். . வீட்டிலென்றால் வழக்கமாக இரவுச் சாப்பாட்டிற்கு ஒன்பது மணியாகி விடும். ரயில் பயணத்தில் பொதுவாக எட்டு மணிக்குப் பசித்து விடுகிறது. உண்மையில் ரயிலுக்குக் கிளம்புவதில் எப்போதுமே அதிகப் பரபரப்புடன் இருப்பான் முருகேசன். மனைவி காமாட்சி கிண்டல் செய்வாள், “ஊரு உலகத்தில யாரும் ரயிலில் போகாமலா இருக்காங்க, ஒரு ஊரு வழி போகறதுன்னா நீங்க பண்ணுகிற எமத்து இருக்கே, நாலு தடவை பையைப் பிரிக்கிறதும் சாமான்களைச் சரி பாக்கறதும் மூடறதும் மறுபடி திறக்கறதும், அதில என்ன இருக்கு ரெண்டு நாளைக்கி ரெண்டு செட் ட்ரெஸ், ஒரு டவல், ஒரு சாரம் இவ்வளவுதானே. சீப்பு, பேஸ்ட்டு, ப்ரஷ், பவுடர் எல்லாம் அதுக்குள்ள சின்னப் பையில எப்பவும் ரெடியாவே இருக்கு. அதையும் ட்ராவல் பேக்ல வச்சாச்சு. அதெல்லாமும் இப்ப லாட்ஜிலேயே தர்றாங்க,,அதையும் சுமந்துக்கிட்டு வேற போறீங்க, இன்னும் ஆட்டோ வந்துட்டா என்று பத்து தடவை வாசலைப் பாக்கறீங்க, தெரிஞ்ச ஆட்டோதானே, உங்க குணம் தெரிஞ்சே அவன் அஞ்சு நிமிஷம் முன்னாலேயே வந்துருவான், எதுக்கு இந்தப் பரபரப்பும் அவசரமும்,” என்று எரிச்சல் பாதி கிண்டல் பாதியாகச் சொல்லுவாள்.
ரயிலில் ஏறி சரியான எண்ணில் உட்காரும் வரை டென்ஷனாகத்தான் இருப்பான். ஏறி சரியான இருக்கையில் உட்கார்ந்து, அதை ரெண்டு தரம் சரி பார்த்து, ஆசுவாசம் அடையவும் கரெக்டாகப் பசிக்கவும் சரியாக இருக்கும். மணி எட்டு ஆகட்டும் என்று காத்திருப்பான். அன்றும் அப்படித்தான், எட்டு மணிக்கு மகள் கட்டித்தந்திருந்த பார்சலைப் பிரித்தான். மகளுக்கும் அம்மாவின் கைப்பக்குவம் வந்திருக்கிறது போல, வறுத்துத் திரித்த கறிவேப்பிலையும், எள்ளும், உளுந்தம் பருப்புமாக புது மிளகாய்ப் பொடி வாசனை ரயில் பெட்டியில் இருந்தவர்களை இவனை நோக்கிக் கவர்ந்தது.. அதிலும் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் சற்று அகலமாகவே சிரித்தபடி இவனையும் பார்சலையும் பார்த்தாள். வேறு யாராவதாக இருந்தால் “சாப்பிடறீங்களா என்றோ, டேஸ்ட் பார்க்கறீங்களா,” என்றோ கேட்டிருப்பார்கள். முருகேசனுக்கு அப்படிப் பேச்சுக் கொடுக்கும் சாமர்த்தியமெல்லாம் வரவே வராது. ஆனாலும் லேசாகச் சிரித்தான்.
அவள் மீண்டும் ஒரு சிரிப்போடு “புது இட்லிப் பொடி போல” என்றாள். அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கொஞ்சம் நன்றாகப் பார்த்தான். லட்சணமான முகம்., யாரையோ நினைவுபடுத்திற்று, லேசான நெளிவு நெளிவான தலைமுடி சற்றே வயிற்றுக்குள் ஒரு அமிலத்தைச் சுரந்தது. அவனுடன் படித்த சண்முக வடிவின் ஜாடை போலிருந்தது. கூடவே மனசுக்குள் “ஆரம்பிச்சுட்டியா, லேசா ஜாடை இருந்துரக்கூடாதே உனக்கு, வடிவு ஞாவகம் வந்திருமே,” என்று அவனுக்குள் ஒரு குரல் கேட்டது.
அவளுடன் இருந்த கொஞ்ச வயதுப் பெண், “ ஆமாம்மா, பொடி நல்ல வாசனையா இருக்கு, சாரோட மனைவி நல்லா சமைப்பாங்க போல இருக்கு,” என்றாள் படித்துக் கொண்டிருந்த பத்திரிகையிலிருந்து தலையை நிமிர்த்தியபடி. இது மகள் செய்தது என்று சொல்ல நினைத்தான். அடக்கிக் கொண்டான்.
அவள், `அம்மா’ என்று சொன்ன விதத்தில் அது அம்மாவாக இருக்காது, இந்தக் காலத்துப் பெண்கள் மாமியாரை அம்மா என்று அழைக்கிறார்களே அது போல மாமியாரும் மருமகளுமாக இருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் தயக்கத்தோடு, பிரித்த பார்சல் பிரித்தபடி இருக்க, “நீங்க சாப்பிடலியா,” என்றான். “சாப்பிட வேண்டியதுதான், புறப்படுகிற அவசரத்தில் சாப்பாடு தயார் பண்ண முடியவில்லை, ஸ்டேஷனுக்கு வெளியே ஹாட்சிப்ஸில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வந்தோம். அங்கே அதை எடுத்து விட்டார்கள் போல, வேறு ஒரு சைவமும் அசைவமும் சேர்ந்த ஸ்டால்தான் இருந்தது, அவசரத்துக்குப் பாவமில்லையென்று இரண்டு செட் சப்பாத்தி பார்சல் வாங்கி விட்டோம். ஆனால் சாப்பிடத் தயக்கமாயிருக்கு.” என்றாள்.
“ஏன்,” என்றான். இரண்டு பேர் முகத்திலும் ஏதோ ஒரு தயக்கம் ஒரே மாதிரியாக ரேகையிட்டது. கொஞ்ச நேர ரயில் சினேகிதத்தில் நிறையப் பேசிப் பகிர்ந்து கொள்வது சரியா என்கிற மாதிரி தெரிந்தது. எப்படித் தோன்றியது என்று முருகேசனுக்கே தெரியவில்லை. “ரெண்டு பேருக்கும் போதும் என்றால் இதை நீங்க சாப்பிடுங்க, நான் ஒரு சப்பாத்தி பார்சலை எடுத்துக் கொள்கிறேன்,” என்றான். இரண்டு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அந்தச் சிறிய வயதுப் பெண் தயங்கினாலும் பெரியவள், “சரி சார், இன்றைக்கும் நாளைக்கும் இரண்டு நாள், நான் அசைவ வாசனை இல்லாம விரதமா இருக்கலாம்ன்னு நினைச்சேன், பெரிய உபகாரமா இருக்கும் நீங்க தர்றது, குடுங்க சார்,” என்றாள். திறந்த பார்சலை அப்படியே தந்தான். அவள் நீட்டிய ஒரு பார்சலை வாங்கிக் கொண்டே. “என் வீட்டில் அசைவம் சமைக்க மாட்டாங்க, ஆனா நான் சாப்பிடுவேன்,” என்றான். அப்படிச் சொன்னது அதனால உங்க விரதத்திற்கு பங்கம் வராது என்று சொல்கிற மாதிரி தோன்றியது. அதைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றும் நினைத்தான். எதையெடுத்தாலும் தயக்கம், சொல்லவும் தயக்கம், சொன்னாலும் தயக்கம்.
மூன்று பேரும் சாப்பிட்டு முடிக்கும் வரை கூடத் தயக்கம் வடிந்து விடவில்லை. மகள் ஆறு இட்லி வைத்திருந்தாள். காமாட்சி என்றால் ஐந்துதான் கட்டித் தருவாள். அவனும் ஐந்து இட்லிகள்தான் வழக்கமாகச் சாப்பிடுவான். அந்தச் சின்னப் பெண்ணும் சப்பாத்தி போக ஆசையாக ஒரு இட்லி சாப்பிட்டது. நிச்சயம் போதுமான அளவுதான் சாப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றியது. சப்பாத்தியும் நன்றாகவே இருந்தது ஆனால் வயிற்றுக்குக் காணாது. ஆனால் அவர்களில் பெரிய பெண் பசியும் பிரச்னையும் தீர்ந்த முகத்துடன் பேச ஆரம்பித்தாள், “இட்லிக்கு எவ்வளவு உளுந்து சார் போடுவாங்க, எனக்கெல்லாம் இவ்வளவு சாஃப்ட்டா வராது” என்றாள். “ என் மனைவி நாலுக்கு ஒண்ணு போடுவாங்கன்னு நினைக்கேன், ஆனா பொங்கப் பொங்க அரைப்பாங்க அதைப் பார்த்திருக்கேன்,” என்றான்.
“சாருக்கும் சமையல் பத்தி நல்லாவே தெரியும் போல” என்று பேச்சில் சின்னப்பெண்ணும் சேர்ந்து கொண்டாள்.“அப்படில்லாம் இல்லை, எப்பவாவது சமையல் கட்டை எட்டிப் பார்ப்பேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க, அவங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது குழந்தைகளுக்குத் தலை பின்னுகிற நேரம், சாப்பாடு ஊட்டுகிற நேரம் என்று அவங்களைப் பள்ளிக்குத் அனுப்பற நேரத்தில் ஏதாவது சின்ன வேலையா அடுப்பைப் பார்த்துக்கிடச் சொல்லுவாங்க. அவ்வளவுதான்,” என்றான்.
அந்தப் பெரிய பெண்ணின் முகம் பெரிதாக மலர்ந்தது. ஒருவேளை அனுசரணையான கணவன் என்று நினைத்திருப்பாளோ என்னவோ. ஆனால் அதில் கொஞ்சங்கூட உண்மையில்லை. காமாட்சிக்கு அவள்தான் எல்லா வேலையையும் செய்ய வேண்டும், ஏதாவது அடுப்படி வேலை சொல்லி இவன் அதைச் செய்யத் திணறுவதைப் பார்த்து விட்டால், “ சரி, சரி, நீங்க அடுப்பை விட்டுத் தூரப் போங்க, ஒரு வேலைக்கு இரு வேலை பார்த்து வச்சிராதீங்க,“ என்பாள். அவள் கைப்பிரகாரமே எல்லா வேலையையும் செய்தாக வேண்டும் அவளுக்கு, முருகேசன் செய்தால் எதையாவது கவிழ்த்து, எங்காவது கொட்டி மொழுகி வைத்து விடுவான் என்பதும் உண்மைதான்.
“இவங்க,” என்று மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கும் சின்னப் பெண்ணைக் காண்பித்தான். “ஜெயக்கொடி என் மருமகள், என் பேர் மயிலம்மா. கொஞ்சம் பாடாவதியான பெயர். ஆனா இவங்க மாமாவுக்கு ரொம்பப் பிடிச்ச பேர். அதுதான் எங்க வீட்டுக்காரர். அவரு எப்பவும் மயிலூன்னு கேலியாக் கூப்பிடுவார். இவளும் கூட என்னை அவரு கூப்பிடற மாதிரியே கூப்பிட்டுக் கேலி பண்ணுவா. நாங்க மாமியார் மருமகளாப் பழகறதில்லை,” என்று நிறுத்தினாள். அதை ஆமோதிப்பது போல ஜெயக்கொடி, பத்திரிகையிலிருந்து தலையை நிமிர்ந்து சிரித்தாள்.
“ரொம்ப ஆர்வமாப் படிக்கிறீங்களே” என்றான். “ஆமாங்க, எப்பவும் புஸ்தகமும் கையுமாகத்தான் இருப்பா, கட்டில் பூராவும் புஸ்தகமும் பத்திரிகையுமாத்தான் கிடக்கும். ஏதோ எழுதி அதெல்லாம் பத்திரிகையில் வரும். காண்பிப்பா, அத்தோட சரி, வேற எதையும் நானும் கண்டுக்கறதில்லை.. … ஏதோ அந்த ஆசையாவது நிறைவேறுதே…“ ஏதோ சொல்ல வந்ததைப் பாதி மட்டுமே சொல்வது போலவே மயிலம்மாவின் பேச்சு இருந்தது.
அதைப் புரிந்து கொண்டது போல ஜெயக்கொடி ஒரு சிரிப்புடன் ஆரம்பித்தாள். “சார், எனக்குக் கொஞ்சம் இளைப்பு மிகுதியாக வரும் சார். அதனால பெரும்பாலும் படுக்கைதான் என் இருப்பிடம். என்னை முகம் கோணாமல் பாத்துக் கொள்வது இவங்களுக்குக் கூடுதல் வேலை.” அவள் பேச்சு, எழுதுகிற மாதிரி இருந்தது. இது ஒரு அதிசயமான உறவுதான் என்று நினைத்துக் கொண்டான் முருகேசன்.
மயிலம்மா குனிந்து அவர்கள் பையில் எதையோ தேடினாள். ஜெயக்கொடி “என்னம்மா வேணும், முட்டு வலி மருந்தா,” என்றாள். “இல்லம்மா, உன் புஸ்தகம் இருந்துது தேடறேன்,” என்றாள். கொஞ்சம் வெட்கமான சிரிப்பு வந்தது ஜெயக்கொடியிடம். “என்ன எழுதறீங்க?” முருகேசன் கேட்டான். ஜெயக்கொடி பதில் சொல்லவில்லை. ஆனால், “நல்லா கவிதைல்லாம் எழுதறாளாம், வீட்டுக்கு வர்ற இவ சினேகிதிங்க சொல்லறாங்க. நீங்க புஸ்தகமெல்லாம் படிப்பீங்கதானே?” மயிலம்மாதான் பேசினாள்.. “படிப்பேன், ஆனா ரயிலில் எல்லாம் படிக்க மாட்டேன், எனக்குப் படிக்கறதுக்கு என் வீட்டிலேயே தனி இடம் வேணும். புக் இருந்தா குடுங்க, அப்பறமாப் படிக்கறேன்.”
என்ன நினைத்தாளோ இல்லை வேறு என்ன அவசரமோ ஜெயக்கொடி எழுந்து டாய்லெட் பக்கமாகப் போனாள். அந்த நேரத்தில் மயிலம்மா தேடி எடுத்து விட்டாள். ஒல்லியான ஒரு கவிதைப் புத்தகம். வாங்கி அதை ஒன்றிரண்டு பக்கம் திருப்ப முயலும் போது, “நல்லா எழுதறாளா,’’ என்று கேட்டாள் மயிலம்மா. சட்டென்று மூடி வைத்தான் முருகேசன். “இந்த மாதிரிதான் இவளைப் பத்தி சொன்னாலோ, என்னம்மா எழுதறேன்னு கேட்டாலோ, இப்படித்தான் இவளும் வெக்கப்படுவா, படிக்கிறதை மூடி வச்சிருவா,” என்றாள் மயிலம்மா. தன்னைத் தன் தயக்கத்தைச் சரியாக உணர்ந்து கொண்டு விட்டதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. முருகேசனுக்கு. அதிலும் அதைத் தனது வெட்கம் என்று உணர்ந்து கொண்டது அவள் வயதையும் மீறி ஏதோ கூடுதல் அழகானவள் போலக் காட்டிற்று. உண்மையில் அந்த வயதே ஒரு அழகு போலத் தோன்றியது.
அவளும் அதை உணர்ந்தாளோ என்னவோ, அந்தச் சூழல் மாறி ஒரு மௌனம் இருவர் மத்தியிலும் உண்டானது. முருகேசன் தான் மறுபடி ஆரம்பித்தான், என்ன விஷயமாக எங்கே போகிறீர்கள் என்று. ஜன்னல் வழியே தெரியும் இருட்டைப் பார்த்தபடி இருந்த மயிலம்மா மெதுவாக எழுந்து அவன் அருகே அமர்ந்து கொண்டு தயங்கியபடி சொன்னாள், “ என் வீட்டுக்காரரு இறந்துட்டாங்க, ஒரு வருஷமாச்சு. மகனுக்கு என்ன சடவோ வீட்டுக்கு வர்றதே இல்லை. எனக்கு வெளியே வரவே பிடிக்கலை, மூட்டு வலி போல சில்லறை உபத்திரவங்கள். இவளுக்கு வேற இளைப்பு அடிக்கடி வருது. கொஞ்சம் பண வரவு செலவுகளும் அவ்வளவு சரியில்லை. சிலவங்க விருத்தாச்சலமா ஏதோ கோயிலுக்குப் போய் செத்துப் போனவருக்கு என்னவோ தீபம் ஏத்துனா கொஞ்சம் மாறுதல் வரும்ன்னு சொன்னாங்க. எனக்கு இல்லைன்னாலும் இந்தப் பொண்ணுக்காவது நல்ல வழி கிடைச்சா நல்லாருக்கும்ன்னு தோணுச்சு.. இவ எனக்காக எங்கேன்னாலும் வருவா. அதுதான் ரெண்டு பேரும் கிளம்பிட்டோம்,” ஒரு பாட்டம் மழை பெய்து ஓய்ந்த மாதிரி சொல்லி முடித்தாள்.
அவள் அருகாமையை மீறி, இவனை நம்பி, அவள் தன் பிரச்னைகளைச் சொன்ன விதம் முருகேசனை என்னவோ செய்தது. அத்தோடு அவள் அருகில் இருக்கும் போதுதான் சட்டென்று பிடிபட்டது. அவளுக்குத் தன் மனைவி வயதுதான் இருக்கும் என்று. ஏன் இது இவ்வளவு நேரம் தோன்றவில்லை என்று யோசித்ததும் சற்றே அந்த அருகாமை ஒரு கூச்சத்தை உண்டு பண்ணியது. அதை முற்றாக உணரும் முன், அதைப் போக்கும் விதமாக “ நீங்க அந்த தீபம் ஏத்தறது பற்றிக் கேள்விப் பட்டிருக்கீங்களா?” என்று கேட்டாள்.
முருகேசனும் கேள்விப்பட்டிருக்கிறான். சில கோயில்களில் மோட்ச தீபம்ன்னு ஏத்துவாங்க. அதிலும் குற்றாலத்தில் ஏற்றினால் விசேஷம்ன்னு சொல்லுவாங்க. ஆனால் அதன் விபரங்கள் தெரியாது. குற்றாலம் என்றால் தெரியாத ஊர் இல்லை. ஆனால் இவள் விருத்தாச்சலம் என்கிறாள். அங்கேயும் ஆள் இல்லாமல் இல்லை. விசாரித்து விடலாம். ஆனால் மணி பத்தாகப் போகிறது. இந்த ட்ரெயின் விருத்தாச்சலத்திற்கு நடு ராத்திரியில் போய்ச் சேரும்.எப்படி அந்த இருட்டில் போய், இரண்டு பெண்கள் என்ன செய்வார்கள் என்று நினைத்தான். ஆனால் அதற்கு உதவுவது பற்றி அவள் இன்னும் கேட்கவும் இல்லையே என்றும் யோசித்தான்.
அந்த நேரம் ஜெயக்கொடி இருக்கைக்கு வந்தாள். இருவரும் அருகருகே இருப்பதற்கு எதிரான எந்த உணர்வையும் அவள் முகத்தில் காண முடியவில்லை. “சாரிடம் கோயிலில் தீபம் ஏற்றுகிற நடைமுறை பற்றி விசாரித்தீர்களா, அது பற்றித்தான் பேசுகிறீர்களா” என்றபடியே அவள் இடத்தில் அமர்ந்தாள். “ஆமாம் எங்கே போகிறோம் என்று சொன்னேன். நீ வாசலில் நின்று விட்டு வருகிறாயா, குளிர் பிடிக்காமப் போயிராமே” என்றாள்.
முருகேசன் எழுந்து டாய்லெட் பக்கமாக நடந்தான். திரும்பி வரும்போது மயிலம்மா தனது இருக்கைக்குத் திரும்பியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். உள்ளபடியே அப்படி விரும்புகிறோமா என்றும் கேட்டுக் கொண்டான். இரண்டுக்கும் பதில் இல்லை. அப்படியானால் தான் அந்த அளவுக்கு யோக்கியமானவன் என்றும் தோன்றியது. ரயிலின் வேகத்தில் திறந்து கிடக்கும் கதவு வழியாகக் காற்று காதைப் பிய்க்கிற மாதிரி அடித்தது. இந்தக் காற்றிலா ஜெயக்கொடி இவ்வளவு நேரம் நின்று விட்டு வருகிறாள். மயிலம்மாவின் ஆதங்கம் நியாயமானதுதான். நாம் ஏதாவது உதவ முடியுமா என்று யோசித்தவன் காமாட்சியிடம் பேசலாம் என்று நினைத்தான்.
எப்போதுமே ரயில் ஏறியதும் பேசி விடுவான் .இல்லை என்றால் அவள் கூப்பிடுவாள். அவளும் அழைக்கவில்லையே என்றபடியே அலைபேசியில் கூப்பிட்டான். அவள் “ ரயிலில் ரொம்பக் கூட்டமா, வழியில் டிராஃபிக் நெரிசலா அதெல்லாம் இல்லையே, டயத்துக்கு ஏறிட்டீங்களா,” என்று கேள்வியாக அடுக்கினாள். அவள் கேள்விகள் இவனுக்குப் பதற்றத்தையே கூட்டிற்று. அவளிடம் மயிலம்மாவிற்கு உதவுவது பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தான். சாப்பிட்டீர்களா என்று அவளே கேட்டாள்.. அதிலிருந்து ஆரம்பிக்க வசதியாய் இருந்தது. கோவில் குளமென்றால் காமாட்சிக்குத் தெரியாத விஷயமே கிடையாது.
“ஆமா, விருத்தாச்சலம் கோயிலில் தீபம் ஏத்துவதும் விசேஷம்தான், கோயில் ஆபீஸில் உண்டான பணத்தைக் கட்டினா அவங்களே, ஏத்திருவாங்க, இதுக்கு இப்படி ரெண்டு பொண்ணுங்க புறப்பட்டு வருவானேன், தனியாகவா வந்திருக்காங்க, உங்க ஃப்ரெண்டு ஒருத்தரு உண்டே அவரு கிட்ட கேளுங்க,” என்றாள்.
அந்த நண்பரை அழைத்தான். நினைத்த மாதிரியே அழைப்பை ஏற்கவில்லை என்று பதில் வந்தது. பாத் ரூம் போய் விட்டு இடத்திற்கு வந்தான். அதற்குள் மற்ற பயணிகள் படுப்பதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். எதிர் பக்கத்து அப்பர் பெர்த்தில் ஒரு ஆசாமி படுத்தே விட்டார். அவர்களே இவர்கள் மூவருக்கும் ஒரு பக்கத்தை ஒதுக்கி விட்டார்களா, இல்லை மயிலம்மா கேட்டாளா தெரியவில்லை மயிலம்மாவும் ஜெயக்கொடியும் பரிதாபமாக விழித்தபடி அருகருகே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் படுக்க முயற்சிக்கவில்லை. முருகேசனுக்கு லோயர் பெர்த் தான். விருத்தாச்சலம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வந்து விடும். அவர்கள் படுத்து எழுந்திருப்பதற்குள் வந்து விடலாம். காமாட்சி சொன்னது போல இவர்கள் இரு பெண்கள் அர்த்த ராத்திரியில் போய் என்ன செய்வார்கள். ஆபத்திற்குப் பாவமில்லை என்பது போல மயிலம்மா அருகிலேயே மீண்டும் உட்கார்ந்தான்.
“அங்கே யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டான். இல்லை என்பது மாதிரி இருவரும் ஒன்று போலத் தலையை அசைத்தார்கள். குற்றாலத்தில் தீபமேற்றலாமாம், என்று சொல்ல நினைத்தான். அவர்கள் டிக்கெட்டே விருத்தாச்சலத்திற்கு எடுத்திருந்தால் என்ன செய்வது என்று தோன்றிற்று. இன்னொரு முறை நண்பரை அழைத்தான். பதிலில்லை. அவர் எடுத்தாலுமே இந்த ராத்திரியில் ஸ்டேஷனுக்கு வந்து உதவி செய்யச் சொல்ல, இவர்கள் யார் என்ன விபரமென்றே தெரியாதே.
“அலாரம் வைத்திருக்கிறீர்களா? ” என்று கேட்டான். “இல்லை, எப்போ போய்ச் சேரும், சார்” என்றாள் ஜெயக்கொடி. “பன்னிரெண்டு மணிக்குப் போகும், இன்னும் ரெண்டு மணிநேரம் ஆகும்,” என்றான். “ரயில்வே ஸ்டேஷனில் வெயிட்டிங் ரூமெல்லாம் இருக்குமா ,”என்று கேட்டாள். `நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் அது எப்படியான நிலையில் இருக்கும் என்று சொல்ல முடியாது, என்பதைச் சொல்லாமல்,“இருக்கும்” என்று மையமாகச் சொன்னான். “கோயில் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்றாள் கோயிலுக்கும் ஸ்டேஷனுக்கும் மூன்று கிலோ மீட்டராவது இருக்கும் என்று நினைவிலிருந்து சொன்னான். ஆனால் இவனை ஒரு முறை ரயிலேற்ற நண்பர் அழைத்து வந்த போது நல்ல இருளில் கஷ்டப்பட்டு பைக்கில் வந்த நினைவு வந்தது.
அதையெல்லாம் இவர்களிடம் சொல்லி ஏன் பயமுறுத்த வேண்டும் என்று நினைத்துத் தவிர்த்துவிட்டான். அப்போது விளக்கை அணைத்து விடலாமா என்று யாரோ கேட்டார்கள். என்ன பதி சொல்ல என்று தயக்கமாக இருந்தது. தலையை ஆட்டினான். அணைத்து விட்டார்கள். நடை பாதையில் நீல விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. மயிலம்மா சேலையை விலக்கி இரண்டு முட்டுக்களிலும் ஏதோ களிம்பைத் தடவிக் கொண்டாள். “இந்த மூட்டு வலி என்ன செஞ்சாலும் போக மாட்டேங்கு,” என்று சொல்லிக் கொண்டாள். அரையிருளில் முட்டு வரையிலான வெண்ணிறக் கால்களை என்ன தவிர்த்தும் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நல்லவேளை, அடுத்தாற் போல அமர்ந்திருந்தாள். முகத்தைத் திருப்பி நன்றாகப் பார்க்க தயக்கம் இடம் கொடுக்கவில்லை. முதலிருந்தது போல எதிரில் அமர்ந்திருந்தால் அவளே தவறாக நினைக்காமல் நன்றாகப் பார்க்கலாமோ என்று நினைத்தான்.
அவர்கள் இறங்கினதும் படுத்துக் கொள்ளலாம் அல்லது அவர்கள் படுத்தால் படுத்துக் கொள்ளலாம். என்று நினத்தான். நான் படுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்கத் தயக்கம். இதுவே காமாட்சியாக இருந்தால் நான் கொஞ்சம் படுத்துக்கறேன் என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லியிருப்பாள். மேற்கொண்டு பேசவும் தயக்கம். அவர்களும் பேசவில்லை. படுக்கிறீர்களா என்றும் கேட்கவில்லை. வேறு உதவியும் கேட்கவில்லை. கூடவே இறங்கி உதவலாமா என்று நினைத்தான். இங்கிருந்து பெர்த் வசதியுடன் நாளை டிக்கெட்டே கிடைக்காது. பஸ்ஸில்தான் போக முடியும். இன்னொரு முறை நண்பரை அழைக்கலாமா என்று மணி பார்த்தான். பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. லேசாகத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது
ரயில் வேகம் குறைந்தது. அவர்கள் இருவரும் பரபரப்பு காண்பித்தார்கள். “இது விழுப்புரமாக இருக்கும் இன்னும் முக்கால் மணிநேரம் வரை ஆகும் நீங்கள் இறங்க, “ என்றான் மெதுவாக. “எங்களால் உங்களுக்குச் சிரமம் சார்” என்றாள் ஜெயக்கொடி. விளக்குகள் எரிந்தால் அவள் படித்துக் கொண்டாவது இருந்திருப்பாள். “அதெல்லாம் ஒன்றுமில்லை,” என்றான். மயிலம்மா. வலி போக கால்களை உதறி விட்டுக் கொண்டவள் சற்று நெருங்கி உட்கார்வது போலிருந்தது. நன்றி சொல்கிறாளோ என்று தோன்றியது. உடனேயே பயப்படுகிறாளோ என்றும் தோன்றியது.
“ அந்த ஸ்டேஷனில் எவ்வளவு நேரம் ரயில் நிற்கும்,” என்று கேட்டாள் மயிலம்மா. “ஒரு நிமிடம் அதிகம் போனால் ரெண்டு நிமிடம்” என்றான். “அது எப்படிப் போதும் ஏறி இறங்க,” என்றாள்.“அதெல்லாம் போதும்” என்றான். ஆனால் மனதுக்குள் பரபரப்பை உணர்ந்தான். ஏதோ ஒன்றிரண்டு ரயில் நிற்காத ஸ்டேஷன்களில் வேகம் குறைந்து கூடியது. அப்போதெல்லாம் மூவருக்குமே பரபரப்பு தொற்றியது. அப்போதெல்லாம் மணியைப் பார்த்தது முருகேசன் தான். ஒரு வழியாய் மணி பதினொன்று ஐம்பதை நெருங்கியதும், “ இப்போ ஸ்டேஷன் வந்திரும்,” என்றான் படபடவென்று எழுந்து ஆளுக்கொரு பைகளை எடுத்துக் கொண்டு எழுந்து வாசல் பக்கம் போய் நின்று கொண்டார்கள்.
முருகேசன் தனியாய் இருந்தான். அருகாமையிலிருந்த ஒரு வெம்மை அகன்றது போல உணர்ந்தான். ரயில் வேகம் குறைந்தது. இது நிற்கப் போவதற்கான வேகக் குறைவு. எழுந்து படுக்கைகளைப் போட நினைந்தவன், ஏதோ தயக்கம் வடிய, சட்டென்று பையைத் தூக்கிக் கொண்டு வாசலில் நிற்கும் இருவரையும் நோக்கி நடந்தான்.