மஞ்சுவுக்கு நடப்பது பிடிக்கும். இவ்வளவு அவ்வளவு என்றில்லை. ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பெருந்திடலில் இல்லை என்றாலும் இந்தச் சிறுமுடக்குத் தெருவில் நடக்க வாய்த்திருந்தது. அதையும் இடையில் நிறுத்திவிட யோசனை வரும் என்று நினைத்திருக்கவில்லை.
அதிகாலையில் பேருந்து நிலையத்திற்குச் செல்ல நேர்ந்த சந்தர்ப்பங்களில் இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து சாலையில் நடப்பதைப் பார்த்திருக்கிறாள். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் இவர்களுக்கு வாய்த்திருக்கும் என்று எண்ணிப் பெருமூச்சு விட்டிருக்கிறாள். வழியிலிருக்கும் அரசுப் பள்ளி விளையாட்டுத் திடலில் ஆண்கள் கூட்டம் நடைப்பயிற்சி செய்வதையும் கண்டிருக்கிறாள். இவர்களுக்கென்ன, புண்ணியம் செய்த பிறவிகள் என்று தோன்றியிருக்கிறது. வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் காலியாகக் கிடந்த பெரும் மனைப்பரப்பில் ஏராளமான பேர் நடப்பார்கள். அந்தக் கூட்டத்தில் தானும் ஒருத்தியாக இருக்க மனதில் அத்தனை ஆசை. அன்றாட வேலைகளில் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளச் சாத்தியப்படவில்லை.
விடிகாலையில் எழும் வழக்கம் ஏற்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நிர்ப்பந்தம். இருவேளைக்குச் சமைக்க வேண்டும். பிள்ளைகளை எழுப்பித் தயார் செய்து பள்ளிப் பேருந்துக்குக் கிளப்ப வேண்டும். கணவனுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்து அலுவலகம் அனுப்ப வேண்டும். வீட்டில் ‘சில்லு’ என்றொரு சாம்பல் நிறக் கடுவன் பூனை உண்டு. அதற்கான வேலைகளுக்கும் நேரம் செலவிட வேண்டும். அவள் வேலைகளைத் தொடங்கும்போது சில்லுதான் உடனிருப்பான். கத்திக்கொண்டு காலைச் சுற்றுவான். சமையலறை மேடை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அவள் செய்பவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பான். அங்கேயே படுத்திருப்பான். அவனிடம் ஏதாவது பேசினால் பதிலுக்குக் குரல் கொடுப்பான். அவள் பேசுபவை எல்லாமே அவனுக்குப் புரியும். அதற்கேற்பச் சிற்றொலியாகவோ நீளமாகவோ அவன் குரல் வரும். துணையாக இருக்கும் அவனுக்குச் செய்யும் வேலைகளில் அலுப்புத் தோன்றுவதில்லை.
எல்லோரும் வெளியேறிய பிறகும் சில்லுதான் துணை. வீடு கூட்டுதல், துடைத்தல், துணி துவைத்தல் என எந்த வேலை செய்தாலும் அவ்விடத்திற்கு அவனும் வந்துவிடுவான். காய்க்காரர் சைக்கிளில் வந்து நின்று மணியடிக்கும்போது மட்டும் கதவருகில் எட்டிப் பார்ப்பான். வெளியாள் பழக்கம் அவ்வளவு இல்லை. பகல் உணவு உண்ட பின் படுக்கையில் தலை சாய்த்தால் அருகில் வந்து ஒட்டிப் படுத்துக் கொள்வான். அவனை அணைத்தபடி கொஞ்ச நேரம் தூங்குவாள். பிள்ளைகள் பள்ளியிலிருந்து ஏழரை மணிக்குத்தான் வந்து சேர்வார்கள். கதிரவன் வர எட்டு மணியாகும். மாலையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை நடைக்குப் பயன்படுத்துவாள். வேறெங்கும் செல்வதில்லை. வீடிருக்கும் தெருவிலேயே நடப்பாள். தெருவில் இருக்கும் சில முதியவர்கள் அப்படி நடப்பதைப் பார்த்த பிறகுதான் அவளும் தொடங்கினாள். முதலில் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு இயல்பாகிவிட்டது.
நடையைப் போலவே மஞ்சுவுக்கு நாய்கள் மேலும் ஈடுபாடு உண்டு. அம்மா வீட்டில் பட்டிக் காவலுக்கும் வீட்டுக் காவலுக்கும் நாய்கள் இருந்தன. வாசலில் எப்போதும் பூனைகளும் திரிந்து கொண்டிருக்கும். இங்கும் நாய் வளர்க்கும் ஆசை இருந்தது. வேலைகளை யோசித்து அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள். இப்போதைக்குச் சில்லு மட்டும் போதும் என்றிருந்தது. நாய் வளர்க்கும் ஆசையை ஓரளவு தெருநாய்கள் தீர்த்து வைத்தன. அந்தத் தெருவில் இப்போது ஐந்து நாய்கள் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடுவன் நாய் ஒன்று மட்டும் எங்கிருந்தோ இங்கே வந்து சேர்ந்தது. அப்போது அது ஆறுமாதக் குட்டியாக இருக்கலாம். பிற நாய்களிடம் கடிபட்டோ ஆட்களிடம் அடிபட்டோ ஒருகாலில் காயத்தோடு விந்தி விந்தி நடந்து வந்து காலி மனையிலிருந்த வேம்படியில் படுத்துக் கிடந்தது.
அதை முதலில் கவனித்துச் சோறு வைத்தது மஞ்சுதான். அப்புறம் வேறு சில வீடுகளிலும் மிஞ்சும் சோற்றைக் கொண்டு வந்து தெருவோரம் கொட்ட ஆரம்பித்தார்கள். சோற்றுக்குப் பிரச்சினையில்லை என்றதும் அது இங்கேயே தங்கிவிட்டது. செந்நிறம் கொண்டிருந்ததால் ‘செம்மி’ என்று பெயர் வைத்தாள் மஞ்சு. முதல் சோறு வைத்த மஞ்சுவை அது நன்றாக நினைவில் கொண்டிருந்தது. வீட்டு வாசலில் உரிமையோடு காத்துக் கிடப்பதும் வாலாட்டிக் குழைவதும் எனச் சொந்தம் கொண்டாடியது. கொஞ்ச நாள் கழித்து இன்னொரு பெட்டை நாய் வந்து சேர்ந்தது.
‘இந்தச் செம்மியான் பாரு… எங்கிருந்தோ ஒரு பொண்டாட்டியப் புடுச்சுக்கிட்டு வந்திட்டான்’ என்று மஞ்சு சொன்னாள்.
‘ஆமா… அப்படியே குடும்பத்தப் பெருக்கி ஒரு நாய்ப்பண்ண வச்சிரு’ என்றான் கதிரவன்.
‘இருக்கட்டுமே. மனுசங்கதான் இருக்கோணுமா என்ன?’ என்றாள்.
‘தெருநாய்க்குச் சோறு போட்டு வளத்தீனா உனக்குத்தான் எடஞ்சலு பாத்துக்க’ என்று அவன் எச்சரித்தான்.
‘இதெல்லாம் தத்தேரியாத் திரியற தெருநாயில்ல. சொன்ன பேச்சு கேக்கும்’ என்றாள்.
‘அந்தளவுக்குப் பழக்கி வெச்சிருக்கறயா?’ அவன் குரலில் கேலி மிகுந்தது.
‘ஆமா. உசுப்பெருத்தி உட்டு உங்களக் கடிக்க வெக்கட்டுமா?’
அவள் நம்பிக்கையோடு சொன்னதும் கதிரவன் ஏதும் பேசவில்லை. மஞ்சுவின் மாலை நடையின்போது அவள் பின்னாலேயே செம்மி வருவான். சிலசமயம் முன்னோடுவான். யாரிடமாவது பேசுவதற்கு அவள் நின்றால் அவனும் நின்றுகொள்வான். ‘சொந்தத் தெருவுல நடக்க உனக்குப் பாதுகாப்பு வேண்டியிருக்குது’ என்று ஒருமுறை சொன்னான் கதிரவன். ‘ஆமா. அவனுக்கும் ஒருவேல வேணுமில்ல?’ என்று சிரித்தாள். அவன் பெண்டாட்டிக்குச் ‘சிங்காரி’ என்று பெயர் வைத்தாள் மஞ்சு. செம்மியைப் போலச் சிங்காரி இணக்கம் காட்டுவதில்லை. அருகில் வருவதேயில்லை. செம்மி அருகில் வந்து வாலாட்டுவான். பசி என்றால் வீட்டுக்கு முன்னால் வந்து குரல் கொடுப்பான். வாசலிலேயே படுத்துக் கொள்வான். யாராவது புதிதாக வீட்டுக்கு வந்தால் குரைத்து எச்சரிப்பான். கிட்டத்தட்ட வீட்டு நாய் போலத்தான். மீந்ததைப் போடுவதைத் தவிர அவனுக்கென்று ஏதும் செய்ய வேண்டியதில்லை.
தெருவின் வலப்பக்கம் கடைசி வீடு அவர்களுடையது. எதிரில் ஒரு வீடுண்டு. பக்கத்து மனைகள் சில காலியாகக் கிடந்தன. தன் வீட்டிலிருந்து தொடங்கிச் சாலையில் வந்து தெரு சேரும் முனைவரை நடப்பாள். ஐந்தரை மணிக்குத் தொடங்கினால் ஆறரை வரைக்கும் நடை தொடரும். அவ்வளவு நேரமும் செம்மி பின்னால் வந்து கொண்டேயிருப்பான். அவள் யாரிடமாவது பேச்சுக் கொடுக்க நின்றால் தெருவோரமாகப் படுத்து அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவள் மீண்டும் நடக்கத் தொடங்கியதும் எழுந்து பின்தொடர்வான். ஒருபோதும் முன்னோடுவதில்லை. அப்படி ஒரு ஒழுங்கை அவனே வகுத்துக் கொண்டிருந்தான். அவனைத் தெருநாய் என்று எப்படிச் சொல்வது?
தினமும் நடப்பதில் எத்தனையோ நன்மைகள் இருந்தன. தெருவில் மொத்தம் இருபத்திரண்டு வீடுகள். எட்டுக் காலி மனைகள். இரண்டு மாடிக் கட்டிடங்கள் ஒன்பது. ஒருமாடி கொண்டவை ஆறு. கீழ்வீடு மட்டும் உள்ளவை ஏழு. இப்படிப் பல புள்ளி விவரங்கள் மஞ்சுவிடம் உண்டு. சொந்தக்காரர்களே குடியிருப்பவை எத்தனை வீடுகள், வாடகைக்குக் குடியிருப்பவை எத்தனை, சொந்தக்காரர்களும் வாடகைக்கு இருப்போரும் சேர்ந்தவை எத்தனை என்பதெல்லாம் மஞ்சுவுக்குத் தெரியும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குழந்தைகள், அவை படிக்கும் பள்ளிகள் உள்ளிட்டவை பற்றிய அறிதலும் உண்டு. ஒவ்வொரு வீட்டுப் பிரச்சினையும் அவள் கவனத்துக்கு வந்துவிடும். காலி செய்து செல்வோர் மஞ்சுவிடம் உருகி விடைபெறுவார்கள். குடிவருவோரிடம் தானாக வலியப் பேசி மஞ்சு அறிமுகம் ஆகிவிடுவாள்.
ஒருமுறை கதிரவன் கேட்டான், ‘எந்த வீடு எந்தச் சாதிக்காரங்களுது? குடியிருக்கறவங்க எந்தச் சாதி? எந்த ஊருல இருந்து இங்க வந்து வீடு கட்டியிருக்கறாங்க?’
அவன் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்தது. கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
‘இல்ல, நாளைக்கு உள்ளாட்சித் தேர்தல்ல கவுன்சிலருக்கு நின்னயின்னா இந்த விவரமெல்லாம் தேவப்படுமில்ல? அதுக்குத்தான் சொன்னன்’ என்றான் சமாதானமாக.
‘நான் தேர்தல்ல நின்னா நீங்க உடுவீங்களா?’ என்று காட்டமாகக் கேட்டாள்.
‘எம் பொண்டாட்டி கவுன்சிலருன்னா எனக்குத்தான பெரும. ஓட்டுக் கேக்க மட்டும் நான் வர முடியாது. வந்தா வேல போயிரும். மத்தபடி எனக்கொன்னும் பிரச்சின இல்ல’ என்றான்.
அவன் கேலியாகச் சொன்னாலும் அது அவளுக்குப் பிடித்திருந்தது. இந்தத் தெருவில் எத்தனையோ பிரச்சினைகள். சாக்கடை வசதியே இல்லை. பக்கத்துக் காலி மனையில்தான் கழிவுநீரை விட வேண்டியிருக்கிறது. சில மனைக்காரர்கள் வருவதேயில்லை. சிலர் அவ்வப்போது வந்து பார்ப்பார்கள். தங்கள் மனையில் கழிவுநீரை விடக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டுப் போவார்கள். அடுத்தடுத்து வீடுகள் இருப்பவர்கள் தெருவில் ஆழக் குழி பறித்து அதில் தொட்டி கட்டிக் கழிவுநீரைத் தேக்குகிறார்கள். நிறைந்துவிட்டால் கழிவுநீர் ஊர்திகளை வர வைத்துக் காலி செய்ய வேண்டும். சிலர் தெருவோரம் வாய்க்கால் போட்டுச் சிறுகுழி வெட்டி அதில் தேங்கும்படி விட்டிருப்பார்கள். நாற்றமும் கொசுவும் எந்நேரமும் அலைந்து கொண்டிருக்கும். இந்தத் தெரு வசிக்க லாயக்கற்றது என்று தோன்றும் போதெல்லாம் சாக்கடைப் பிரச்சினைதான் முன்னால் நிற்கும். பாதாள சாக்கடைத் திட்டம் வருகிறது, வருகிறது என்று பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வந்தபாடில்லை.
சாலைக்குத் தார் ஊற்றிப் பல காலமாகிறது. எப்போதோ தார் ஊற்றியிருக்கிறார்கள் என்பதைக் காட்ட அங்கங்கே சில துணுக்குகள் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தன. திருமணமாகி மஞ்சு இங்கே வந்த பின் ஒன்றுமே செய்யவில்லை. தெருவுக்குக் கான்கிரீட் சாலை இருந்தால் நன்றாக இருக்கும். தண்ணீருக்கு இன்னும் வீட்டு இணைப்பு இல்லை. தெருக்குழாய் இருக்கிறது. அதில் எப்போதாவது தண்ணீர் வரும். யாரும் பிடிப்பதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஆழ்துளைக் கிணறு இருக்கிறது. உப்புத்தண்ணீர். அதில் குளித்துக் குளித்து மயிர் மொரமொரப்பாகி விட்டது. தெருக்குழாயில் எப்போது தண்ணீர் வரும் என்று பார்த்துப் பிடித்து வந்து குளிக்க வாய்ப்பதில்லை. தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதைக் கௌரவக் குறைவாகக் கருதுபவர்கள் தெருவாசிகள். அவர்கள் பார்வைக்குப் பதில் சொல்ல முடியாது. வீட்டு இணைப்பு கொடுத்தால் நல்ல தண்ணீரில் தலை குளிக்கலாம்.
தன் தெருவுக்கு இருக்கும் பிரச்சினைகள் அந்த வார்டில் இருக்கும் எல்லாத் தெருக்களுக்கும் உண்டு. அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றால் கதிரவன் சொன்னது போலத் தானே தேர்தலில் நின்று வெற்றி பெற்று வர வேண்டும் என்று நினைத்தாள். இந்த ஒரு தெருவை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதுமா? இன்னும் மக்களிடம் கலந்து பழக வேண்டும். பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்குப் போய்விட்டால் பிறகு என்ன வேலை? தேர்தலில் நிற்கும் கற்பனை அவ்வப்போது உதிக்கும். அப்போதெல்லாம் தெருவாசிகளிடம் நின்று நின்று பேசிவிட்டு வருவாள். நடப்பது குறைவாகவும் பேச்சு அதிகமாகவும் ஆகிவிடும். தேர்தலில் நின்றால் குறைந்தபட்சம் இந்தத் தெரு வீடுகளில் வசிக்கும் எல்லோரும் தனக்கே வாக்களிப்பார்களா? ஒவ்வொரு வீட்டையும் தனித்தனியாக யோசித்து அதில் இருக்கும் வாக்காளர் பெயர்களையும் பட்டியலிடுவது ஒரு விளையாட்டானது. எல்லோரும் வாக்களிப்பார்கள், ஒரே ஒரு வீட்டைத் தவிர.
நேராக வந்து சட்டென இடப்பக்கம் வளைந்து அரைவட்டமிட்டு மீண்டும் நேராகத் தொடரும் தெரு இது. இடப்பக்க வளைவின் முதல் வீட்டிலிருக்கும் இரண்டு வாக்குகள் மட்டும் தனக்கு விழ வாய்ப்பில்லை. அந்த வீட்டுக்காரருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ஆய்வகப் பணியில் இருந்தார். வேலைக்குப் போவது போலவே தெரியாது. மாலை மூன்று மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடும்படி ஓர் அரசுப்பணி இருப்பது ஆச்சரியம். கதிரவனுக்கு மாலை ஐந்தே முக்காலுக்குத்தான் அலுவலகம் முடியும். உடனே கிளம்ப முடியாது. அரசு வேலை என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி விதித்திருக்கிறது.
அந்த வீட்டுக்காரருக்கு ‘அற்பனார்’ என்று இவர்களாகப் பெயர் வைத்திருந்தார்கள். அற்பனார் தலைக்கும் மீசைக்கும் வாரம் ஒருமுறை தவறாமல் சாயம் பூசுவதோடு முகத்தில் ஒன்றரை இஞ்ச் அளவுக்குப் பவுடரை அப்பிக் கொண்டு காலையில் அலுவலகம் கிளம்புவார். அப்போது அவர் மனைவி வெளியே வந்து சுற்றுச்சுவர்க் கதவைத் திறந்து வழியனுப்புவார். அதன் பிறகு மாலையில் அவர் திரும்பும் போதுதான் அந்தம்மா மீண்டும் வெளியே வருவார். ஒரே ஒரு பையன். அவன் வெளியூரில் எங்கோ படிக்கிறான். அவன் முகம்கூட மஞ்சுவுக்கு நினைவில் இல்லை. விடுமுறை நாட்களில் வீட்டுத் தோட்டத்தைப் பராமரிக்கும் வேலையை அற்பனார் செய்வார். எப்போதாவது அந்தம்மாவின் முகமும் தென்படும்.
மனை முழுவதையும் வீடாக்காமல் சுற்றிலும் செடிகொடிகள் வைக்க இடம் விட்டிருந்தார்கள். அவ்வீட்டுக்கு இருபக்கத்திலும் காலி மனைகள். எதிரிலும் காலி மனை. அதனால் புழங்கப் பெரிய நிலப்பரப்பு அவர்களுக்குக் கிடைத்திருந்தது. சுற்றுச்சுவரை ஒட்டித் தெருவிலும் மூன்றடியை ஆக்கிரமித்துச் செடிகொடி வைத்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் செடிகொடிகள். அவற்றுக்கிடையே ஆள் நடமாட்டத்தைக் கண்டறிவது கஷ்டம். தங்கள் வீடு, அதைச் சுற்றிய பகுதி தவிர வேறெதிலும் கவனம் கொள்ளாதவர் அவர். ஆனால் தெருப் பெண்களை மட்டும் அப்படிக் கவனிப்பார்.
‘உங்கிட்ட இல்லாத ஒரு புள்ளிவிவரம் அற்பனார்கிட்ட இருக்கும் தெரியுமா?’ என்று ஒருமுறை கதிரவன் சொன்னான்.
‘என்ன?’ என்றாள்.
‘இந்தத் தெருவுல எத்தன பொம்பளைங்க இருக்கறாங்க, ஒவ்வொருத்தருக்கும் என்ன வயசு, வேலக்கிப் போறாங்களா, வீட்டுல இருக்கறாங்களா, காலையில எந்நேரம் எந்திரிக்கறாங்க, வாசல்ல கோலம் போடறவங்க யார் யாரு…’
‘போதும் போதும்’ என்று பேச்சைத் துண்டிக்க முயன்றாள் மஞ்சு.
கதிரவன் விடவில்லை.
‘உனக்குத் தெரியாது. காலையில இருளிருக்கவே நடையுடப் போவான். ராத்திரி ஒருநட. தெருவிவரம் எல்லாம் வெரல் நுனியில இருக்கும்’ என்றான்.
‘உங்களுக்கு இதெல்லாம் எப்படித்தான் தெரீதோ?’
‘அற்பனாருக்குக் கண்ணும் கேமரா. வீட்டச் சுத்தியும் கேமரா வெச்சிருக்கறான்’ என்றான்.
எல்லோரையும் அற்பனார் கண்காணிப்பது உண்மையோ, கதிரவன் வேண்டுமென்றே இப்படிப் பயமுறுத்துகிறானோ தெரியவில்லை. தெருவில் நடப்பது பிடிக்காமல் ஏற்றிவிடுகிறானோ? நாள் முழுக்கவும் இந்த வீட்டுக்குள்ளேயே கிடந்தால் அவனுக்கு உவப்பாக இருக்கும் என்றெல்லாம் கோபமாக யோசனைகள் ஓடினாலும் அடுத்த இரண்டு மூன்று நாட்கள் தன்னை யாரோ உற்று நோக்கியபடியே இருப்பது போலத் தோன்றிக் கொண்டிருந்தது. கழிப்பறைக்குள் நுழையவும் பயமாக இருந்தது. மாலை நடையைச் சில நாட்கள் விட்டுவிட்டாள். எந்த நாதாரியோ எப்படியோ இருந்துவிட்டுப் போகிறது, நமக்கென்ன என்று ஓரளவு தெளிந்து நடக்கப் போன நாளே ‘மஞ்சம்மா, ரண்டு மூணு நாளா ஆளையே காணோம்’ என்று அவளை வரவேற்றவர் அற்பனார்தான். நெஞ்சு திக்கென்று அடித்துக்கொள்ள ஏதோ சொல்லிவிட்டு விரைவாக அவ்விடத்தை விட்டு அகன்றாள். அவள் பதில் சொல்லாமல் போவதைப் பார்த்ததும் அவர் பக்கம் திரும்பி ‘லொள்’ என்று ஒருமுறை குரைத்துவிட்டுத் தொடர்ந்தான் செம்மி.
‘இந்த நாய்க்குத் திமிரப் பாரேன்’ என்று பற்களைக் கடித்துக் கொண்டு கற்களைத் தேடினார் போல. அதை உணர்ந்து வழக்கத்தை மீறி அவளுக்கு முன்னால் ஓடினான் செம்மி. பின்னால் திரும்பாமலே சிரித்துக்கொண்டு ‘சூப்பர்டா செம்மி’ என்றாள். வயதாக வயதாக ஆளுக்கு இளமை ஏறி வருவதாக எண்ணம். மேலே பனியன்கூட இல்லை. பயில்வான் நெஞ்சு என்று நினைப்பு. இடுப்பில் மடித்துக் கட்டிய லுங்கி. அதுவும் பாதித் தொடை தெரிய ஏற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார். நின்று பேசவே அருவருப்பாயிருந்தது. நடந்துகொண்டே ஏதோ சில வார்த்தைகள் சொன்னாள். திரும்ப வருவாள் என்று வாசல் வெளியிலேயே அவர் நிற்பது தெரிந்து தாமதித்து மூன்றாம் வீட்டுப் பாட்டியிடம் பேச்சுக் கொடுத்து அங்கேயே வெகுநேரம் நின்றுகொண்டாள். ஆள் கிடைக்காத பாட்டி மஞ்சுவிடம் ஆவலாகப் பேச ஆரம்பித்துவிட்டார். காது பாட்டியிடம் இருந்தாலும் கண் அந்தாள் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது.
அதன்பின் அவ்வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அவளை அறியாமலே கால்கள் வேகம் காட்டின. பார்வை திரும்புவதில்லை. அப்படியும் சில நாள் இரும்புக் கதவுக்குள்ளிருந்து அவர் விளிக்கும் குரல் அசரீரி போலத் திடுமென வரும். திட்டிவாசல் திறப்பது போல கதவு தானாகத் திறக்கும். ஒருசில வார்த்தைகள் பேசத்தான் செய்தார். தவிர்ப்பது தெரிந்தும் பேச்சுக் கொடுக்க வெட்கமாக இருக்காதா? நெருப்பின் மேல் நிற்பது போல ஓரிரு நொடிகள் நின்று குறைசொற்களால் பதில் சொல்லிவிட்டுச் செல்வாள். அப்போதெல்லாம் செம்மி நாயின் உடனிருப்பு அவளுக்குப் பெருந்துணையாகத் தோன்றும். ‘வாடா செம்மி’ என்று தேவையில்லாமல் அவனை அழைத்து ஏதாவது சொல்லி நகர்வாள்.
அற்பனாரைப் பற்றி எத்தனையோ சம்பவங்கள் தெருவோருக்குத் தெரியும்.
குப்பை அள்ள வண்டி தள்ளிவரும் பெண் தீபாவளிப் பணம் கேட்டார் என்று அவர் கொதித்துக் கத்திய ஒரு அதிகாலையில் எல்லா வீட்டுக்காரர்களும் தெருவுக்கு வந்து நின்றுவிட்டார்கள்.
‘உனக்குப் பணம் குடுக்கோணும்னு ரூல் இருக்குதா? எந்த அடிப்படையில நீ எங்கிட்ட காசு கேக்கற? கை நீட்டிச் சம்பளம் வாங்கிக்கிட்டுத்தான வேல செய்யற?’
இப்படி எத்தனையோ கேள்விகள். ஒன்றிரண்டு வார்த்தைகள் பதில் சொல்லிப் பார்த்த அந்தப் பெண் கடைசியாக ‘இல்லைன்னா இல்லீனு சொல்லீட்டுப் போங்க சார். அதுக்கெதுக்கு என்னென்னமோ பேசறீங்க’ என்று சொல்லியபடி வண்டியை அடுத்த வீட்டுக்குத் தள்ளிப் போனார். அவர் விடவில்லை. ‘நான் என்னென்னமோ பேசறனா? குப்பக்காரிக்கெல்லாம் பேச்சப் பாரு’ என்று தொடங்கிக் குப்பை வண்டி தெருமுனையைக் கடந்து செல்லும் வரை கத்திக் கொண்டேயிருந்தார். ஒவ்வொரு வீட்டின் முன்னும் வைக்கப்பட்டிருந்த கூடையை எடுத்து வந்து வண்டியில் குப்பையைக் கொட்டும் வேலையைப் பார்த்துக்கொண்டே ‘ஆமா… நான் குப்பக்காரிதான். உங் குப்பய அள்ளியள்ளிப் பாக்கறன். முடியவே மாட்டேங்குது’ என்று சொன்னபடி போய்விட்டாள்.
அன்றைக்குக் கதிரவனிடம் ‘என்னங்க அந்த ஆளு இப்பிடி ஒரு அற்பனா இருக்கறான்’ என்று சொன்னாள் மஞ்சு.
‘ஆமா. அற்பன்கிறது அந்தாளுக்குப் பொருத்தமான பேர்தான்’ என்று அவன் சிரித்தான்.
‘அந்தம்மா கிட்ட எதுனா முண்டிப் பாத்திருப்பான். ஒன்னும் நடந்திருக்காது. அதான் இப்பிடிக் கத்தத் தொடங்கிட்டான்’ என்றும் சொன்னான்.
அதன் பிறகு அவரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ‘அற்பன்’ என்றே சொல்வார்கள். அவளது மாலை நடையைப் பற்றிய வழக்கமான விசாரிப்பு ஒன்றின் போது ‘என்ன அற்பனாரப் பத்தி ஒன்னுமே சொல்லுல?’ என்று கேலியாகக் கேட்டான். அதிலிருந்து ‘அற்பன்’ போய் ‘அற்பனார்’ ஆயிற்று.
அற்பனாருக்கு நாய்களைப் பிடிக்காது. தெருவில் ஏதேனும் நாயின் குரைப்பொலி கேட்டால் உடனே வெளியே வந்து அதை விரட்டுவது அவர் வேலைகளில் ஒன்று. சிங்காரியைத் தேடிக் கடுவன் நாய்கள் வரும் பருவத்தில் தெருவில் எந்நேரமும் சண்டையும் சத்தமும்தான். கற்களைச் சேர்த்து வைத்து வீசி விரட்டும் வேலையில் அற்பனார் ஈடுபடுவார். நீண்ட தடிகளைக் கொண்டும் விரட்டுவார். இந்தப் பகுதியில் இத்தனை கடுவன் நாய்கள் இருக்கின்றனவா என்று தோன்றும் அந்தச் சமயத்தில் ‘எல்லாம் உன்னாலதான்’ என்று கதிரவன் குற்றம் சாட்டுவான். ‘செம்மிதான் எம்பொறுப்பு. சிங்காரிக்குச் செம்மிதான் பொறுப்பு’ என்று சொல்லித் தப்பிப்பாள்.
இதுவரைக்கும் சிங்காரி மூன்று முறை குட்டி போட்டிருக்கிறாள். முதல்முறை இரண்டு குட்டி. இரண்டாம், மூன்றாம் முறைகளில் மும்மூன்று குட்டிகள். எட்டுக் குட்டிகளில் மூன்றுதான் எஞ்சியிருக்கின்றன. ஐந்து குட்டிகள் போன இடம் தெரியவில்லை. அற்பனார்தான் அடித்துக் கொன்றுவிட்டார் என்று தெருவில் பேச்சு உலவியது. இரவு பத்து மணிக்கு மேல் தெருவில் என்ன சத்தம் கேட்டாலும் யாரும் எழுந்து வெளியே வர மாட்டார்கள். மின்விசிறிச் சத்தம், குளிர்சாதனத்தைப் போட்டுக் கொண்டு கதவை அடைத்துத் தூங்குதல் காரணமாக எந்தச் சத்தமும் கேட்காது. அதனால் எதையும் உறுதிப்படுத்த இயலவில்லை.
தன்னை மஞ்சு திட்டமிட்டுத் தவிர்க்கிறாள் என்பது அற்பனாருக்குத் தெளிவாயிற்று போல. முகம் கடுகடுத்துத் தெரிந்தார். ஒருநாள் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. இனி அவ்வீட்டை நிதானமாகக் கடக்கலாம் என்னும் அவள் நினைப்பு நீடிக்கவில்லை. உன்னை விட மாட்டேன் என்று வீம்பு காட்டி அடுத்த நாள் முதல் அவளைச் சீண்ட ஆரம்பித்தார். ‘மஞ்சம்மாவுக்கு நாய்தான் புடிக்குமா?’ என்று இளித்தபடி கேட்டார். சட்டென்று அப்படிக் கேட்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் திட்டமிட்டுத்தான் கேட்டிருப்பார் என்று பின்னர் யோசிக்கும் போதுதான் புரிந்தது. அப்போது அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் கிட்டத்தட்ட ஓடினாள். செம்மி மட்டும் அவரைப் பார்த்து இரண்டு முறை குரைத்துவிட்டு வந்தான். அவரைப் பார்த்தாலே குரைக்க வேண்டும் என்று செம்மிக்குத் தோன்றுகிறது.
அடுத்த நாள் எச்சரிக்கையோடு நடந்தாள். அற்பனார் வீட்டுக்கு அருகில் வரும்போது ஆள் இருக்கிறாரா என்று கவனித்தாள். இல்லை என்பது போலத்தான் தெரிந்தது. ஆனால் தெருவில் புதர் போல அடர்ந்திருந்த மல்லிகைச் செடிக்குள் இருந்து சட்டென்று வெளியே வந்து ‘மஞ்சம்மா… தெனமும் நடந்து நடந்து ஒடம்ப சிக்குன்னு வெச்சிருக்கற’ என்றார். மஞ்சுவால் இந்தப் பேச்சைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்குப் பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது. ‘உங்க பொண்டாட்டியம்மா பலாப்பழமாட்டம் இருக்கறாங்களா?’ என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். அந்தம்மா சுவருக்கு அந்தப் பக்கம் இருந்திருக்கலாம். கேட்கட்டும். நன்றாகக் கேட்கட்டும். நிதானமாக நின்று செம்மி குரைத்துவிட்டு வந்தான்.
இப்படியே சிலநாள் அற்பனார் ஏதாவது சொல்வதும் அவள் பதிலடி கொடுப்பதும் செம்மி குரைப்பதும் நடந்தன. கதிரவனிடம் சொன்னபோது அதில் அவனுக்குச் சுவாரசியம் கூடியது. வீட்டுக்குள் நுழைந்ததும் ‘இன்னைக்கி என்ன சொன்னான்?’ என்றுதான் கேட்பான். அவள் விலாவாரியாகச் சொல்வாள். அவள் சொன்ன பதிலைக் கேட்டதும் ‘செரியான சவுக்கடி’ என்று சொல்லிவிட்டுச் சிரித்து மாய்வான். ‘நீயும் சாதாரணமில்ல, கள்ளி’ என்று ஒருநாள் சொன்னான். அவன் இப்படி ரசித்துக் கேட்பதைத் தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘என்ன இவன்’ என்று தோன்றியது. அதற்குப் பின் ‘இன்னக்கி ஏதும் பேசல’ என்று சொல்ல ஆரம்பித்தாள். அவன் துருவித் துருவிக் கேட்டும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. ‘இப்பல்லாம் அவன் ஏதும் பேசறதில்ல. இனி எதுனாப் பேசுனான்னா போலீசுக்குப் போயிரலாம்’ என்று சொல்லிவிட்டாள். அப்படி அவள் சொல்வாள் என்று கதிரவன் எதிர்பார்க்கவில்லை. காவல்நிலையம் வரைக்கும் இழுத்துவிடுவாள் என்று பயந்தான் போல. அதன்பின் அற்பனார் பேச்சை எடுப்பதையே விட்டுவிட்டான்.
இப்போது அற்பனார் ‘மஞ்சம்மா’ என்று விளிப்பதில்லை. பேச்சு முழுக்கச் சாடையாய் மாறிற்று. அவள் நடக்கும்போது குண்டுமல்லிச் செடிப்பக்கம் நின்றிருந்தவர் ‘உம்பூவ வெச்சிருக்கற கொண்ட கொடுத்து வெச்சது’ என்றார். ‘நடையா இது நடையா’ என்று வாய்க்குள் முனகுவது போலப் பாடினார். இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் எதிர்வினை செய்யக் கூடாது என்று தலைகுனிந்தபடி கடந்து போனாள். சாடைப் பேச்சு அவளைச் சீண்டவில்லை என்பதைவிட அதனைப் பொருட்படுத்தாமல் இருக்க முடிந்தது. இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்றிருந்தாள். ஆனால் அற்பனார் விடவில்லை.
அன்றைக்கு மாலை கிளம்பி நடந்தாள். செம்மி முன்னால் போனான். தெருவின் அரைவட்டத் திருப்பத்தின் போது நடை வேகத்தை மட்டுப்படுத்தி அற்பனார் வீட்டுப் பக்கம் கண்ணோட்டினாள். வழக்கம் போல லுங்கியை ஏற்றிக் கட்டி அவளுக்கு எதிர்ப்பக்கம் திரும்பி நின்றபடி மல்லிகையில் பூப் பறித்துக் கொண்டிருந்தார். அவ்விடத்தை வேகமாகக் கடந்துவிடலாம் என்று எட்டிப் போட்டாள். வட்டத்தைக் கடந்த சமயத்தில் செடியின் கீழ்க்கொடியை நோக்கிக் குனிந்தார் அற்பனார். உள்ளாடை அணியாததால் தொங்கிய குறியை அவளுக்கு நேராகக் காட்டியபடி பூப் பறிப்பது போலப் பாவனை செய்தார். ஒருகணம் அதிர்ந்து நின்ற மஞ்சு ‘அடேய் செம்மி’ என்று கத்தினாள்.
—–