திணை: பனி

—————-

பனி எட்டு : தோழி கூற்று

———————-

மென்பனி விரிப்பில்

தன் பின்னங்கால்களில் நின்றபடி

சாம்பல் அணில்

வயிற்றில் அடித்துக்கொண்டு

அவளைப் பார்க்கிறது

சூரியகாந்தி விதைகளை அளிப்பாளா?

வயிற்றில் அடித்துக்கொள்ள

அணிலுக்கு யார் கற்றுக்கொடுத்தது?

அவனது குறுஞ்செய்தியில்

சில வார்த்தைகள்

வயிற்றில் அடித்துக்கொள்கின்றன

அவள் முகத்தைத் திருப்பிக்கொள்கிறாள்

தனக்கு வாராத கனவில்

அரும்பாத செர்ரிப்பூக்கள்

உடனே உடனே

பூத்துச் சொரிவதை மட்டுமே

விழைகிறாள்

———————-

பனி ஒன்பது : தோழன் கூற்று

———————-

இலை உதிர்த்துவிட்ட

அழுகின்ற பூச்ச மரத்தைப்

பார்த்தபடி

அன்றும்

பேருந்துக்காகக் காத்திருந்தான்

நடைபாதையில்

ஒற்றைக் கையுறை

விட்டுச் சென்ற அவளது

சிவப்புக் கையுறை

இன்னொன்று?

யோசிக்கும்போதே

சிவப்புக் கையுறையுடன்

கையொன்று விரைந்து வந்தது

அவன் தலையைப் பறித்து

பனி கனத்த மேகத்தில் பொதித்ததா

குச்சிக் கிளையில் நட்டதா

அவன் தலையின்றி அலைகிறான்