1)

உச்சியிலிருக்கும்

சுண்ணாம்பாலான சிதில சிற்பத்திற்கு

வயது ஆயிரம்.

சிற்பத்தின் மார் துளைக்குள்

இரு முட்டைகளிட்டு குனுகுகிறது தாய் புறா.

தாய்க்கு ஒத்தாசையாக

ஜனித்தலை பதனமாய் உடைக்கிறது

சிற்பத்தின் காரையுதிரும் கை

2)

குறுக்கெலும்பு உடைந்து

படுத்தபடுக்கையான எனக்கு

ஓட்டுவீட்டு உத்திரமே வானம்.

உருண்டோடிய கறுநிற நூல்கண்டினைப் போலுள்ளது

மரச்சட்டத்தில் உறைந்திருந்த

பருத்த வண்டின் வழித்தடங்கள்.

தடங்களை பாதை பிறழாமல்

விரல்களால் காற்றில் வரைந்து

இன்றைய அன்றாடத்தைக் கடந்தேன்.

 

3)

நடுநிசியில்

ஆளற்ற திருகு கல்லிலிருந்து

எழும்புகிறது உளுந்து உடைபடும் சத்தம்.

நேற்று கம்பு

முந்தாநாள் சோளமென

தினமொரு தானியம்.

ரிப்பன்கள்

வளவிகள்

பனங்கட்டிகள்

கிளியாஞ்சட்டியில் நீர் படைக்க

கல்லின் கைப்பிடி

வயிறு நிரம்பி கண்ணசருகிறது.

4)

மூங்கிலாலான கொக்குக் கண்ணியின்

நரம்புச் சிடுக்குகளை

வேட்கை குன்றாமல்

ஆண்டுக்கணக்கில் அவிழ்த்தேன்.

சிடுக்குகள் கலைந்த காலத்தில்

கொக்கின் நெஞ்சுத்துடிப்புக்கு

கருணையுற்றேன்.

 

 

5)

மடுவின் பாற்சுனை செழிக்க

ரத்தஞ்சொட்டும்

இளங்கொடி பொட்டணத்தோடு

பால் மரம் தேடி அலைந்தவனுக்கு

குளவிகள் வழிகாட்ட

அந்தயிடத்தை அடைந்தேன்.

ஈக்களால் வானளவு வளர்க்கப்படும்

அரளிமரத்தின் தூரை வணங்கிவிட்டு

லட்சத்து ஒன்னாவதாக மலர்ந்த

பூ வாப்பிலேறி

பொட்டணத்தைக் கட்டினேன்.

6)

நீர் வற்றிய வைகையுடலின்

நாணல் மயிர்களில் சிக்கியுள்ளன

வண்ண வண்ணத் துணிப்பொதிகள்.

வகை பிரித்த துணிகளை

மனம் போன போக்கில் அணிவதால்

மத்தியானம் சிறுவன்

இரவு வயோதிகம்

மாலை சிறுமி

விடியலில் பசுஞ்சிசுவாகி

சாவற்று வாழ்கிறேன்.