அழியாத கோலங்களின் 2024 வெர்ஷன்தான் வாழை.

இந்தியாவில் 80 களுக்கு முன்பு பிறந்த நடுத்தர வகுப்பு மக்கள், அவர்களுடையக் கனவுகளில் உற்சாக வாழ்வை வாழ்ந்தவர்கள்.  நனவிலோ அவர்களுடைய உழைப்பு அபரிமிதமாக இருக்கும்.  ஆனால் அந்த உழைப்புக்கேற்ற அரைக்கூலி கூட அவர்களுக்கு கிடைத்திருக்காது.  இருந்தாலும் அவர்கள் சலித்ததில்லை.  அந்த அரைக்கூலியை இழந்தால் கூட அடுத்தவேளைச் சாப்பாடு கேள்விக்குறியாகிவிடும். இருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டில் குறைந்தது ஏழெட்டு ஜீவன்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள் !

கனவுகளில் எப்படி அவர்கள் உற்சாகமாக இருப்பார்களென்றால், அவர்களுடைய அந்த கடும் உழைப்பு ஒரு நாள் உரிய கூலியைத் தந்து மாடி வீடு, விதவிதமாய் ஆடைகள், நகைகள், தினமும் சினிமா, நகர வாழ்க்கை, கார், பார்க், பீச், உணவகங்களில் மூச்சுமுட்ட அசைவ உணவு, ரயில், விமானப் பயணம், சிங்கப்பூர் சுற்றுலா … இவைகளெல்லாம் வாய்த்துவிடும் என்றுதான்.

கல்வியைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.  அரசுப்பள்ளிகள் இருந்தும் கல்வி எளிதில் அவர்களை கவரவுமில்லை.  தமிழைத் தவிர எதிலும் தேர்ச்சியுறுவது குதிரைக் கொம்பு.  ஆங்கிலம், கணக்கு பாடங்கள் எட்டிக்காய். முக்கி முக்கி எட்டாவது வரைக்கும் வந்தாலும் பொதுத்தேர்வில் புட்டுக்கும்.  அந்த வயதிலேயே உழைக்கப் போய்விடுவார்கள்.

நான் ஆண்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  அப்ப பெண்கள்.  அதுக்குத்தான் உங்களுக்கு கட்டு ஒட்டு கதையைச் சொல்லியாக வேண்டும்.

கட்டு ஒட்டுவாழை படத்திற்கு எங்கம்மாவை அழைத்துக் கொண்டு போயிருந்தால் அவர்களுக்கு இந்தப்படம் அவருடைய மழலை வாழ்க்கையை கிளறி படத்துடன் மிகவும் ஒன்ற வைத்திருக்கும்.

குடும்பத்திற்காக மழலைகளிலேயே கடுமையாக உழைத்த எவருக்கும் வாழை பிடிக்கும்.

நெல்லை, குமரி போன்ற வளமான மண் மக்களுக்கு வாழை என்றால், எங்கம்மா அப்பா பிறந்த சிவகாசி சுற்றுவட்டாரக் கிராம மக்கள் அனைவருக்கும் கட்டு ஒட்டுதல் என்கிற தீப்பெட்டியின், குச்சிகளைத் தாங்கி நிற்கும் அடி பெட்டியைச் செய்வதுதான் தலையாயத் தொழிலாக 2000 வரைக்கும் கூட இருந்திருக்கும்.  இப்பவும் நவீனமயமாக, இயந்திரமயமாக அவைகள் இருக்கும் என்றாலும் சீன லைட்டர்கள் அதைக் காலி செய்துவிட்டன.  போக, இப்பல்லாம் அப்படி ஒட்ட ஆட்கள் கிடைப்பதும் குதிரைக் கொம்பு !

1950 களுக்குப் பிறகு குட்டி ஜப்பான் என்றழைக்கப்பட்ட கந்தகபூமி சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வளர்ச்சி அமோகம்.  விருதுநகர் மாவட்டம் பின்னாட்களில் கல்வியில் உயர மிகவும் உதவிய தொழில் அது.  ஆனால் 90கள் வரை அந்தத் தொழில், எல்லோரையுமெல்லாம் படிக்க விடவில்லை.

சிவகாசிக்கு மிக அருகிலிருந்த ஒரு கிராமம்.  அது வானம் பார்த்த பூமி.  மழை பெய்து, கண்மாய் நிறைந்துக் கிடந்தால் உழவு நடக்கும்.  நெல் போன்ற பணப்பயிரை விளைவிக்குமளவுக்கு நீர் ஓடும் பூமியில்லை.  கம்பு, சோளம், கரிசல் மண் என்பதால் சமயங்களில் பருத்தி விளையும்.  ஆள் வைத்தெல்லாம் கட்டுப்படியாகாது என்பதால் குடும்ப ஆட்கள்தான் அத்தனை வயல் வேலைகளையும் பார்க்க வேண்டும்.  ஆனால் அதெல்லாம் மழைக்காலத்தின் அருகில் நடக்கும்.  அதிலும் பல மழைப்பருவங்கள் பொய்க்கும் பூமி அல்லவா அது ?  அதனால்தானே அங்கு பட்டாசு, தீப்பெட்டி தொழில்களே வளர்ந்தன ?  அந்தத் தொழிலுக்கு மழை எதிரி.  எனவே உழவை குறைவாக நம்பி, வேறு தொழில்களில் ஆர்வம் காட்டினார்கள்.  அவர்களுக்கு வரமாகவும் – சாபமாகவும் ஒருசேர வந்ததுதான் கட்டு ஒட்டுதல்.  குறிப்பாகப் பெண்களே, அதிலும் சிறுமிகளே இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்பட்டனர்.  படிப்பேறாமல் போன சிறுவர்களும் முழு நேரத் தொழிலாக இதைச் செய்தனர்.

என் தாயாருடன் பிறந்த அக்கா தங்கைகள் ஐந்து பேர்.  போக ஓர் அண்ணன் ஒரு தம்பி என மொத்தம் ஏழு பேர் கொண்ட குடும்பம்.  அதே போல என் அப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள் மூன்று தங்கைகள்.  ஆக மொத்தம் அங்கும் ஏழு.

அன்று இவ்வாறு வீடு முழுக்க பிள்ளைகள் இருந்தால் பெற்றவர்களுக்கு இலாபம்.  அன்றைய காலகட்டங்களில் மிடில்கிளாஸ் என்றால் அது ஒரே வகுப்புதான்.  இன்றிருப்பது போல அதிலும் பல படி நிலைகள் கிடையாது.  உழைப்புக்கு அஞ்சாத, சிறுவர் சிறுமியாக இருந்தாலும் மழலைப் பருவத்திலேயே குடும்பத்திற்காக உழைப்பது, உழைக்க வைப்பது, அதில் வெற்றி பெற்ற குடும்பம் மிடில் கிளாஸ்.  தோல்வியுற்ற குடும்பம் ஏழைகள். அவ்வளவுதான் !

தோல்வியுற்றவர்களில் நூற்றுக்கு 99 பேர் எங்கு போய் வாழ்ந்தாலுமே லேசில் மேலே வர முடியாது.  கடைசிவரை போராட்ட வாழ்க்கைதான்.  மாறாக அன்று உழைப்புக்கஞ்சாமல் வென்ற குடும்பங்களின் வாழ்க்கை இன்று பெரிதும் மேம்பட்டுள்ளன.  அவர்களின் மழலைக்கால உழைப்பை முற்றிலும் மறக்கடிக்கவும் செய்துள்ளது.  அழியாத கோலங்கள், ஆட்டோகிராப், வாழை போன்ற படங்கள்தான் அவர்களுடைய பழைய காலங்களை மீட்டி எழுப்புகின்றன.  சிலருக்கு இனிமையாகவும், சிலருக்கு வெறுப்பாகவும், சிலருக்கு ஆனந்தக் கண்ணீரையும் இவைகள் தோற்றுவிக்கின்றன !

வாழை படத்தில் சனி, ஞாயிறு, பண்டிகை, பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போலக் காட்டியிருப்பார் மாரி செல்வராஜ்.  இங்கு அந்தக் கருணை கூட இல்லை.

அன்று படிப்பு நேரடியாக ஒன்றாம் வகுப்பிலிருந்து துவங்கியதால் ஆறாம் வயது முதல் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தனர்.  பள்ளிக்குப் போய் வந்ததும் ஆளுக்கு இத்தனை கட்டு ஒட்டியாக வேண்டும் என்கிற கட்டளை அனைத்து வீடுகளிலும் உண்டு.  தாய் முதலிரண்டு குழந்தைகளை அந்தச் சட்டத்திட்டங்களுக்கு பழக வைத்துவிட்டால் போதுமானது.  மூத்த பெண் திருமணமாகிப் போகும் வரை தாய் நிம்மதியாக அவருடைய வேலைகளைப் பார்க்கலாம்.  ஆனால் சட்டதிட்டங்களுக்கு குழந்தைகள் பழகவேண்டுமே ?

அதெல்லாம் மிக மிக எளிதாக பழக்கிவிடுவார்களாம்.  படியாதவர்களைத்  தடாலடியாக அடித்தல் முதல் படி.  வேப்பங்குச்சியை வைத்து விளாசுவார்கள்.  அடிதான் சீக்கிரம் மரத்து விடுமே ?  அடுத்த படி பட்டினி போடுதல்.  இது கொடூரமானது.  அன்று யாராக இருந்தாலும் இந்த ஆயுதத்திற்கு படிந்துவிடுவார்கள்.  மூன்று வேளை உணவைத் தாண்டி எதுவுமே தின்னக் கிட்டாத காலகட்டம், வாழ்க்கை முறை.  வீம்பு பிடித்து வேலை செய்யாமல் ஒரு வேளை உணவை, அதுவும் சுடு சோற்றை மறுத்தால், மறு நாள் அதுவேத்தான் பழைய சோறாகி காலை உணவுக்கு வரும்.  அவ்வளவு தாங்குசக்தி நிச்சயம் குழந்தைகளுக்கு இருக்காது.  சுடுசோற்று ருசி பழையச் சோற்றுக்கு இருக்காது.  இன்று நம்முடைய மேம்பட்ட வாழ்க்கையில் மண்சட்டியில் பழையசோறு, சின்ன வெங்காயம் என்று விளம்பரப்படுத்தினால் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு போவோம்.  ஆனால் 365 நாட்களும் பழைய சோற்றை மட்டுமே சாப்பிட்டவர்களுக்குத்தான் அந்த வாதை புரியும்.  பழக்கம் அந்த வாதையை சுவையென மயக்கியிருக்குமே ஒழிய அது பொய்.  எனவே இரண்டாம் படி தண்டனைக்கஞ்சி குழந்தைகள் படிந்துவிடுவார்கள்.

அதற்கும் படியாவிட்டால் முழு நரகம்.  பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்.  அந்தப் பள்ளிவேளைதான் அவர்களுக்கு கொஞ்சம் விடுதலை உணர்வைத் தரும்.  இன்று போல் அழுத்தங்கள் நிறைந்த கல்விமுறை கிடையாது.  பசங்க படிக்க வந்தாலே போதுமானதாக இருந்தது !

என் பெற்றோரின் ஊரில் அந்தமட்டில் குழந்தைகளின் படிப்பை இளக்காரமாக கருதவில்லை.  ஆனால் இந்த தென் மாவட்டங்களைத் தாண்டி பல வட மாவட்டங்களில் நிலைமை அப்படியே தலைகீழ்.

இவனுகள படிக்க அனுப்பிட்டு பிறகெப்படி இவன்களுக்கு கஞ்சியும் ஊத்தறது என்று பல பள்ளிகள் காற்றாடும்.  1950 களில் அப்படி படிக்க பிள்ளைகள் இல்லாமல் பல்லாயிரம் பள்ளிகள் மூடப்பட்டன.  காமராசர் வந்த பின்புதான், சரி என் பங்குக்கு அவர்களுக்கு ஒருவேளை உணவை நான் தருகிறேன் எனப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அங்கெல்லாம் படிக்க மாணவர்கள் வந்தனர்.  அப்படி பிள்ளைகள் வந்ததாலேயே மூடப்பட்ட பல்லாயிரம் பள்ளிகளை காமராசர் திறந்தார்.  பல பள்ளிகளை உருவாக்கவும் செய்தார்.

ஆனால் குட்டி ஜப்பானில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடந்ததால் வேலையாட்களுக்குத்தான் பஞ்சமே அன்றி சோற்றுக்கு பல கைத்தொழில்கள் இருந்தன. கல்வி வேளை போகத்தான் குடும்ப வேலை என குழந்தைகள் மீது கொஞ்சம் கருணை காட்டினார்கள் !

எனவே, பள்ளிக்கு போய்வந்த பின் எந்தச் சாக்குபோக்குகளையும் சொல்லியெல்லாம் கட்டு ஒட்டாமல் நழுவ முடியாது.  அதிசயமாய் அம்மா ஊரில் டூரிங் டாக்கிஸ் இருந்தது.  சிவகாசியில் நல்ல திரையரங்குகள் உண்டுதான்.  ஆனால் பள்ளி, கட்டு ஒட்டும் வேலைகளை விட்டு அவ்வளவு தூரம் போய் வர முடியாது.  நைட்ஷோ மட்டுமே போக முடியும்.  டூரிங் டாக்கிசில் நைட்ஷோ மட்டுமே உண்டு.  வெறும் மேற்கூரை வேய்ந்து, வெள்ளை துணி கட்டி, மண் தரையில் நாலாம்பக்கமும் திறந்து கிடக்கும் களம்தான் டூரிங் டாக்கீஸ்.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்து – பத்து வருடங்களுக்கு முந்தைய சிவாஜி, எம்ஜிஆர் படங்கள் ரிலீஸ் ஆகும்.  எந்தக் குடும்பமும் அந்தப் படம் ஓடும் ஏழு நாட்களில் தவறவிடாமல் அவைகளைப் பார்த்துவிடுவார்கள் !

கட்டாய வேலை செய்தே ஆக வேண்டும், செய்யாவிடில் மூன்று தண்டனை நிலைகள் என்று சொன்னேன் அல்லவா ?  அதெல்லாம் தேவை கூட இல்லை.  அஞ்சு கட்டு ஒட்டியவர்கள் ரிலீஸ் அன்றே நைட்ஷோ போய் பார்க்க அனுமதி உண்டு.  ஒட்டியவர்கள் போகலாம்.  ஒட்டாதவர்கள் தூங்கலாம்.  சினிமாவுக்கு மயங்காதோர் உண்டோ ?  அன்று முழு நேர வானொலி கூட கிடையாது.  பஞ்சாயத்து போர்டில் ஒலிபரப்பாகும் விவிதபாரதி அல்லது சென்னை வானொலி பாடல்கள் மட்டுமே பொழுதுபோக்கு.  அடுத்து, டூரிங் டாக்கீஸ் வாய்த்த ஊர் என்பதால் இது.  பிறகென்ன ?  எங்கம்மாவின் குடும்பத்தில் சோற்றுக்கும், சினிமாவுக்கும் பஞ்சமே இல்லை !

ஒரு கட்டு அளவு

முதலில் கட்டு ஒட்டுதல் என்றால் என்ன, அதற்கு என்னென்ன தேவை, அதற்கு எவ்வளவு கூலி, அதை யார் தருவார் என்று விலாவாரியாகப் பார்த்து விடுவோம்.

தீப்பெட்டி ஒன்றை உருவாக்க இருபுறங்களிலும் மருந்து பூசிக்கொண்ட  மேல் பெட்டி, அதற்குள் பொதிந்திருப்பது போல அடிப்பெட்டி, அதற்குள் மருந்துகளை மகுடங்களாகக் கொண்ட குச்சிகள் அடுக்கப்பட்டிருக்கும்.  பிறகு தீப்பெட்டியின் பிராண்ட் லேபிள் பெட்டியின் மேல் ஒட்டப்பட்டு விற்பனைக்கு வந்துவிடும் !

அது இந்தியா முழுக்க, இந்தியாவைத் தாண்டியும் விற்பனைக்குப் பயணிக்கும். இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் தீப்பெட்டிகளை கொள்முதல் செய்ய இடைத்தரகர்களும், வணிகர்களும் வந்தவண்ணமிருப்பார்கள்.

மேல் பெட்டியைச் செய்வது,  குச்சிகளில் மருந்தை முக்கி எடுப்பது போன்றவைகள் கொஞ்சம் பாதுகாப்பாகச் செய்ய வேண்டிய வேலைகள் என்பதால் அவைகளை பொதுவாக ஆண்கள் எடுத்துக் கொள்வார்கள்.  மேல் பெட்டியை ஒட்டுவது, அடிபெட்டியைத் தயாரிப்பதைக் காட்டிலும் கொஞ்சம் எளிதானவை என்பதால் சிறுவர்களும் அதில் ஈடுபடுவார்கள்.  மருந்தில் குச்சிகளை முக்குவது, அதைக் காயவைத்து அடிபெட்டிகளில் அடுக்குவது போன்ற பணிகள் பெரும்பாலும் தீப்பெட்டி ஆபிஸ் என்றழைக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்குள் நடப்பவை.

இப்ப பெண்கள் பேரளவில் ஈடுபட்ட அடிபெட்டித் தயாரிக்க என்னென்ன தேவை ?  ஊதா நிறத்திலிருந்த தாள்.  அவை ஒரு Gross என்கிற 144 எண்ணிக்கையில் கட்டாக இருக்கும்.  அதுதான் கட்டு.  செவ்வகமாகப் பெட்டியாய்ச் செய்ய ஏற்ற ஐஸ் குச்சி போன்ற அதே எண்ணிக்கையில் குச்சிகள் ஒரு கட்டு.  அந்தக் குச்சியை செவ்வக வடிவில் மடிப்பதற்கேற்ற மெஷின் வெட்டுக்கள் இருக்கும்.  தீக்குச்சிகளைத் தாங்கி நிற்பது சில்லு எனப்படும் மர இழைத்துண்டு.  இவைகளை ஒட்ட பசை.  ஒரு மனைக் கட்டை, ஓர் அச்சு.  ஒட்டிய தீப்பெட்டிகளைப் போட வாகாக சில சொளவுப்பெட்டி என்றழைக்கப்படும் கூடைகள்.  ஒட்டிய பெட்டிகளை காயவைக்க தோதான மொட்டை மாடி, அல்லது தாழ்வாரங்கள். இவைகள் போதுமானது !

தீப்பெட்டி ஆபிசிலிருந்தே தீப்பெட்டிச் செய்யும் வீட்டுக்கு இந்த நீலத்தாள்கட்டு, குச்சிகள், சில்லுகள், பசை செய்ய மாவு, அதற்குள் கலக்க மயில்துத்தம், அச்சுக்கட்டை போன்றவைகளை கொடுத்துவிடுவார்கள்.  மனைக்கட்டை, சொளவு பெட்டிகள் மட்டும் நம்முடையவை.

சமதளத் தரையில் உட்கார்ந்து மட்டுமே இவைகளைச் செய்ய முடியும்.  மனைக்கட்டை என்பது சென்னைத் தமிழ்.  எங்கம்மா அதை முக்காலி என்பார்.  இரண்டுகால்தானே இருக்கு, ஏன் முக்காலி என்கிறீர்கள் என்றால் அது அப்படித்தான், நீ பொத்து என்பார்.  சப்பளங்கால் போட்டு அமர்ந்து மனைக்கட்டையை முன்னால் வைத்து அச்சுக்கட்டையை மனைக்கட்டையின் வலது மூலையில் பொருத்தி, நீலத்தாள் கட்டை அப்படியே வைத்து, செய்த பசையை மனை மீதே பரப்பி, குச்சிகளை எடுக்க வாகாக வைத்துக் கொண்டு, இரு கைகளையும் சம வேகத்தில் இயக்குவார்கள்.  அதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  அந்த வேகம் அசரடிக்கும்.

வலது ஆட்காட்டி விரலை பசைக்குள் விட்டு அள்ளி, அதை அப்படியே நீலத்தாள் கட்டின் மேல் தாள் மீது முழுக்க பரவுமாறுத் தடவி, பின் அதே கைகளில் அந்தக் குச்சியைத் தூக்கி அந்தத் தாளின் மையத்தில் வைத்துத் தூக்கினால், அந்தத் தாள் மட்டும் தனியாக குச்சியுடன் ஒட்டிக் கொண்டு வரும்.  வந்த அதை அடுத்த நொடியில் நான்காக படக் படக் என்று மடித்து செவ்வகப் பெட்டியாக்கி, அதை அச்சுக்கட்டையில் வைத்து அழுத்தும் வேளையில் இடது கை ஒரு சில்லைத் தூக்கி அந்த அச்சுக்கட்டையில் அல்ரெடி வைத்திருக்கும்.  அச்சுக்கட்டையில் பொருத்தப்பட்ட அந்தப் பெட்டியை சில்லுடன் சேர்த்து பசையுடன் மினுமினுப்பாக இருக்கும் எஞ்சிய தாளைக் கொண்டு ஒட்டிவிடுவார்கள்.  இப்ப அதைத் தூக்கினால் மேல் பக்கம் மிஞ்சியிருக்கும் தாளையும் உள்ளுக்குள் மடித்து ஒட்டி அந்தச் சொளவுப்பெட்டிக்குள் விசிறுவார்கள்.  பசை ஈரத்துடன் அது சத்தமின்றி அதுள் போய் விழும். இந்த பிராசஸ் ஒரு சில நொடிகளுக்குள் நிகழ்பவை.  ஆனால் பழக்கமற்றவர்கள் அந்த ஒரு பெட்டியை அது போல் உருவாக்க சில நிமிடங்கள் ஆகும்.  அப்போதும் அது சரியாக ஒட்டாமல் தாள் தனியாக, குச்சி தனியாக, சில்லு தனியாக வந்துவிடும்.

இந்த 144 தாள்களையும் இதுபோல் 144 பெட்டிகளாக தயார் செய்தால்தான் ஒரு கட்டு ஒட்டியதாக அர்த்தம்.  தொழில் சுத்தமாக இருக்க வேண்டும்.  ஏனோதானோவென ஒட்டியெல்லாம் ஏமாற்ற முடியாது.  நன்கு ஒட்டினால் மட்டுமே சில்லு வழுவாமல், குச்சி உடையாமல் கிண்ணென்று அந்த அடிப்பெட்டி நிற்கும்.  சொளவுப் பெட்டி நிறைந்து வழியும் போது அதை யாராவது ஒருவர் எடுத்துக் கொண்டு போய் உலர்த்த வேண்டும்.  ஒரு சில காரை வீடுகளின் மொட்டை மாடி முழுக்க தீப்பெட்டிகளாக நீல நிறமாக காட்சியளிக்கும்.  அன்று ட்ரோன் காமிரா இல்லை.  இருந்திருந்தால் அந்தக் காட்சியே அழகாகத்தான் இருந்திருக்கும்.  திடீர் மழை பெய்தால் அது எந்த நேரமாக இருந்தாலும் ஓடிப்போய் அவைகளை அள்ளிவிட வேண்டும்.  சேதமான பெட்டிகளை ஆபிஸ் ஏற்காது.  யானையையே அந்தச் சாக்குக்குள் போட்டு மூடி எடுத்துப் போகலாம் என்பதைப் போன்ற ராட்சத கோணி மூட்டை கொண்டு இந்தக் கட்டுக்களை ஆபிஸ் மென் அளந்து எடுத்துப் போவார்.  அவர்தான் கணக்குப் பார்த்து சுடச்சுட கூலியும் கொடுப்பார்.

இப்படி ஒரு கட்டு ஒட்டினால் எங்கம்மாவில் மழலைப் பொழுதில் பத்து பைசாவோ, நாலணாவோ கூலி.  பின்னாட்களில் அது எட்டணா, ஒரு ரூபாய், இரண்டு  ரூபாய்களானது.  அதன்பின் வேலை செய்ய ஆட்கள் கிட்டாமல் இயந்திரமயமானது.  இப்படி ஐந்து கட்டுகளை பள்ளி விட்டு வந்ததும் ஒட்டியே ஆக வேண்டும்.  எப்படியும் இரண்டு, மூன்று மணி நேரம் ஓடிவிடும்.  அதன்பின் படிப்பு, வீட்டுப்பாடம், சினிமா, மறுநாள் பள்ளி, விடுமுறை நாட்களில் எக்ஸ்ட்ரா கட்டு ஒட்டுவது என்றே வாழ்க்கை போயிருக்கிறது !

அந்தக் கட்டு ஒட்டும் இலாவகம் அவர்களுடைய விரல்களில் நீண்ட நாட்களுக்குப் பதிந்திருந்தது.  ஒரு ரூபாயைச் சம்பாதிக்க ஒட்டுமொத்த குடும்பமே உழைத்ததினால், அந்தக் காசின் மீது அவர்களுக்குப் பற்றும், பயமும் அதிகமிருந்தது.  கொஞ்சம் அகலக்கால் வைத்தாலும் இதனால்தான் அவர்கள் அதீதப் பதட்டமானார்கள் !

எங்கம்மா கட்டு ஒட்டியதை நான் எப்படி பார்த்திருக்க முடியும் ?  சொல்லிக் கேட்டதுதானே என்பீர்கள்.  இல்லை.

அன்று பெண்கள் ஏழு அல்லது எட்டாம் வகுப்புக்கு மேல் போகாததற்கு காரணம் அவர்களுக்கு படிக்க பிடிக்கவில்லை அல்லது பாடங்கள் கடினமாக இருந்தன, தேர்வுமுறைகள் கடுமையாக இருந்தன, அனைத்து வகுப்பிலும் ஃபெயிலாக்கினார்கள் என்பதையெல்லாம் தாண்டி, நன்கு படிப்பு வந்தாலுமே, பருவமெய்திவிட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதை பெரும்பாலும் தடை செய்திருக்கிறார்கள்.  அப்போது பெரும்பாலும் பதிமூன்று, பதினான்கு வயதுக்குப் பின்னரே பருவமெய்யும் வயது இருந்ததால் அதிசயமாக ஒரு சில பெண்கள் எட்டாவது வரை தாண்டியிருக்கின்றனர்.  அதன் பின் ஓரிரு வருடங்கள் முழு நேர கட்டு ஒட்டும் வேலை மட்டுமே பொழுதுபோக்கு.  பதினாறில் பெரும்பாலோர்க்கு திருமணம் முடிந்துவிடும்.  பெண்களின் திருமண வயது 18 என்று சட்டங்கள் கடுமையாகும் வரை இது தொடர்ந்தது.  நிறைய பெண்கள் இருந்த வீட்டில் மட்டும் இது 17 அல்லது 18 வரை நீண்டது.  18 வயதுக்கு மேல் பெண்கள் திருமணமாகாமல் வீட்டிலிருந்துவிட்டால் ஊர் முழுக்க அவதூறுகள் கிளம்பிவிடும்.  அதன்பின் எங்கிட்டாவது கிராம மாப்பிள்ளையாகத் தேடி, அதிக சீர் செய்து அந்தப் பெண்ணைத் தள்ளிவிட வேண்டும்.  இதற்குப் பயந்தே 16 அல்லது 17 க்குள் பெண்களின் திருமணங்களை முடித்துவிட்டனர்.  அப்படியாக எங்கம்மாவுக்கு 17 வயதில் திருமணம் நடந்து, அவருடைய 18 வது வயதில் நான் பிறந்துவிட்டேன்.  என்னுடைய ஏழு, எட்டு வயதில் கோடை விடுமுறைக்கு நீண்டு தங்க அம்மாவின் பிறந்த வீட்டுக்கு போகும் போது எஞ்சிய சித்திகள் கட்டு ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.  அப்பா வீட்டில் அத்தைகள் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.  அத்தனை சொந்தங்களும் அந்தச் சின்ன வீட்டில்தான் குவிந்திருக்கும்.  அந்த ஒரு மாதமும் கொண்டாட்டமாகப் போகும்.  அப்போது நாங்கள் கெஞ்சினால் பாதி ஒட்டிய பெட்டிகள் எங்கள் பக்கம் வீசுவார்கள்.  மீதியை ஒட்டி நாங்களும் அவர்களுக்கு கொஞ்சம் உபத்திரவம் செய்வோம்.

என்ன வியப்பு என்றால் இது 90 களுக்கு மேல் தொடரவில்லை.  ஏன் ?

படிப்பு

இரண்டு காரணங்கள் இந்தத் தொழிலை முடக்கின.  திருமணமான பெண்களில் நகர வாழ்க்கைக்குப் போனவர்களுக்கு நகரம் தேவையான வருவாயைத் தந்தது.  குழந்தைகளை தங்கள் தொழிலில் ஈடுபடுத்தத் தேவையின்றி போனது.  படிப்பும் வேறு வண்ணத்திற்கு மாற ஆரம்பித்தது.  ஆங்கிலம் மீடிய வகுப்புகளில் பாடம் படிக்காமலோ,  வீட்டுப்பாடம் செய்யாமல் போவதோ ஒழுங்கீனமானது.  கட்டாயத் தேர்ச்சி எட்டு வரை ஆனதும், குழந்தை தொழிலாளர் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதும் கல்வி வளர பெருங்காரணங்கள் ஆனது !

சுயநலமிக்க சில பெற்றோர்கள் பசங்களை பள்ளிக்கு அனுப்பி வெட்டியாக அவர்கள் பொழுது போக்குவதைக் காட்டிலும் முழு நேரமாக அவர்களை இத்தகையத் தொழிலுக்கு அனுப்பும் போது அதிக வருவாய் கிட்டியது.  சல்லிசான கூலியை குழந்தைத் தொழிலாளர்களுக்கு கொடுத்தால் போதுமானது என்பதால் முதலாளிகளுமே அவர்களை ஊக்குவித்தனர்.  அவர்கள் போய் வர இலவச பேருந்து, சீருடை, விழாக்கால போனஸ் என்று ஒருகட்டத்தில் படிக்க வேண்டிய பருவத்தில் சிறுவர்களும், சிறுமிகளும் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தனர் !

அது கல்வி பயிலுவதைக் கூட கெடுக்கும் என்கிற நிலைக்குப் பின்னர்தான் அரசு விழித்துக் கொண்டது.  பல சமூக நல இயக்கங்கள்தான் அந்த விழிப்புணர்வைக் கொண்டு வந்தன.  குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டமும், 18 வயதுக்கு முன்னான குழந்தை திருமணத் தடை சட்டங்களும்தான் ஓரளவு அவர்களுடைய வாழ்வை மேம்படுத்தியது !

அதன் பின்னான தலைமுறைக்கு கல்வி அவசியம் பற்றித் தெரிந்தபோது, அங்கு ஏற்கனவே இருந்த நல்ல கல்வி அடித்தளத்தால் விருதுநகர் மாவட்டம் கல்வியில் வேகமாக வளர்ந்தது !

சென்னை வாழ்க்கை

வீடு முழுக்க பெண்களே மிக வேகமாக கட்டு ஒட்டுவதில் திறமைசாலிகளாக இருந்ததால், ஆண்களில் துணிந்தவர்கள் தீப்பெட்டி ஆபிஸ், பட்டாசுத் தொழிற்சாலை வேலைகளுக்குச் சென்றனர்.  ஆனால் அதில் உயிர்ப்பயம் அதிகம்.  ஆபத்தானத் தொழில்.  கூலி அதிகம் என்றாலும் கெமிக்கல் பலருடைய உடல் நலங்களைக் கெடுத்தன.  சென்னை அன்று வெகு வேகமாக வளர்ந்துக் கொண்டிருந்தது.  ஒருபக்கம் எங்கம்மா கட்டு ஒட்டிக் கொண்டிருக்க, எங்கப்பாவும் எட்டாவது வகுப்பைத் தாண்டாமல் சென்னையில் மளிகைக் கடை வேலைக்கு வந்துவிட்டார்.  அது இன்னொரு வகை நரகம்.

அப்பாவின் ஊரிலிருந்த சில ஆட்களுக்கும், அவருடைய உறவினர்கள் சிலருக்கும் மளிகை வணிகத்தில் அனுபவமிருந்ததால், மளிகைக் கடை வேலைகளுக்கு பரிச்சயமான சிறுவர்கள் பலருக்கும் சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் அதிக வேலைவாய்ப்பு காத்திருந்தன.  இங்குமே உழைப்புகஞ்சாதவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.  இராணுவத்தில் கூட இத்தனைப் பிழிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.  சென்னைக் கதையைப் பார்ப்போம்.

மளிகைக் கடை வேலைக்கு வந்த சிறுவர்கள் அதிகாலை நான்கு மணிக்கு முழித்துக் கொள்ள வேண்டும்.  ஏனெனில் கடையை ஐந்து மணிக்குள் திறந்துவிட வேண்டும்.  இரவு கடையை மூட குறைந்தது பதினொன்று ஆகும்.  சாப்பிட்டுத் தூங்க பனிரெண்டு ஆகிவிடும்.  காலை உணவு பழையசோறு.  அப்படியே ஊர்ப்பழக்கம்தான்.  இதில் அரிசி எடுக்க ரெட்ஹில்ஸ் போக முதலாளி ஒரு நாள் பழக்கி விடுவார்.  அவர் முதலாளிக்கு மிக நெருக்கமான உறவினராக இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பும் கிட்டும்.  செங்குன்றம் என்பது பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து 20 கிமீக்கும் அதிகமான தூரத்திலிருந்த பகுதி.  இன்று போல் பாலங்கள், சாலைகள் இல்லை.  சைக்கிள் மட்டுமே ஒரே போக்குவரத்து வாகனம்.  பின் ஸ்டேண்டில் ஒரு சைக்கிள் ட்யூப் கட்டப்பட்டிருக்கும்.  இரண்டு சைக்கிளில் முதலாளியும், வேலைக்காரச் சிறுவனும் கிளம்புவார்கள்.  அரிசிச்சந்தை முன்னதிகாலை நான்குக்கு தொடங்கும்.  ஆறுக்குள் முடிந்துவிடும்.  எங்கெங்கிருந்தோ ஆலைகளிலிருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் அரிசி, கமிஷன் மண்டி கடைகளில் வைத்து விற்கப்படும்.  ஒவ்வோர் ஏரியாவுக்கேற்ப அரிசித் தரம் பார்த்து வாங்க வேண்டும்.  மயிலாப்பூருக்கு ஒரு ரகம்.  திருவல்லிக்கேணிக்கு ஒரு ரகம்.  சவுகார்பேட்டைக்கு ஒரு ரகம், வண்ணாரப்பேட்டைக்கு ஒரு ரகம், பெரம்பூருக்கு ஒரு ரகம்.

முதலாளி வழக்கமாக ஒரு மூட்டையை எடுப்பவர் பையனை அழைத்துப் போயிருப்பதால் இரண்டு மூட்டையாக எடுப்பார்.  75 கிலோ கொண்ட மூட்டை.  அவர்களே சுமந்து சைக்களின் பின் ஸ்டேண்டில் வைத்து, அந்த ரப்பர் ட்யூப் மூலம் கீழே விடாமல் பூட்டிக்கொள்ள வேண்டும்.  டபுள்ஸ் அடித்துப் பழகியிருந்தால் மட்டுமே அந்தச் சைக்கிளை ஓட்டவே முடியும்.  என்னதான் டபுள்ஸ் அடித்திருந்தாலும் 75 கிலோவை வைத்து சிறுவர்கள் எப்படி ஓட்டியிருக்க முடியும் ?  அதுவும் ஏடாகூடச் சாலையில் இருபது கிலோ மீட்டருக்கு ?  தடுமாறினால் வண்டை வண்டையாகத் திட்டும்,  தலையில் கொட்டும் சகஜமாக விழும்.  தத்தி என்று பெயர் வாங்கிவிட்டால் அடுத்து ரெட்ஹில்ஸ் போக வேறு சிறுவன் வந்துவிடுவான்.  கடைசிவரை பொட்டலம் மடிக்கும் வேலைதான்.  அது முன்னேற்றத்திற்கு உதவாது. தொழில் கற்றுக் கொள்ள முடியாது.  மளிகைக் கடையில் விற்பனை ஒரு திறமை என்றால் கொள்முதல் இன்னொரு திறமை.  இரண்டிலும் சமத்திறமை இருந்தால் முன்னேறலாம்.   எனவே தம் கட்டி சைக்கிளைத் திறமையாக ஓட்டி, மூட்டையை கடைக்குச் சிந்தாமல் சிதறாமல் எடுத்து வந்துவிட்டால் வேலைக்காரன்டா பட்டத்தைப் பெறலாம்.  அடுத்து தனியாக அரிசி எடுக்கப் போகலாம்.  அதெல்லாமே எதிர்காலத்திற்கு மிகவும் உதவக்கூடிய அனுபவங்கள்.

சம்பளத்தையெல்லாம் நம் கையில் கொடுக்க மாட்டார்கள்.  யார் மூலம் வேலைக்குச் சேர்ந்தார்களோ அவர்களிடம் கொடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாகவே இவர்களுடையப் பெற்றோருக்கு மணி ஆர்டர் அனுப்பி வைக்கப்படும்.

பதினெட்டு வயதை நெருங்கி வாலிப முறுக்கு வந்தவுடன் சிறந்த உழைப்பாளி என்றால் அவன் தனிக்கடை வைத்துவிடுவான்.  அதற்கு அவருடைய முதலாளியும் கொஞ்சம் உதவுவார்.  மீதியை வீடு பார்த்துக் கொள்ளும்.  கடை கொஞ்சம் ஓடினால் கூட ஊருக்குள் சேதி பரவிவிடும்.  அன்று மளிகைக் கடைக்காரன் என்றால் பெண் உடனடியாக கிட்டிவிடும்.  இந்த நிலை அப்படியே இன்று தலைகீழாகி விட்டது.  மளிகைக்கடைக்காரனுக்கு யாருமே பெண் கொடுப்பதில்லை !

உழைப்பே உயர்வு தரும்

அரசின் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களினாலும், அதிகரித்துப் போன செலவினங்களினாலும் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அருகிப் போனது.  குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்த பின் குழந்தை தொழிலாளர் முறை தாமாகவே ஒடுங்கிப் போனது.  மீறியவர்களை சட்டம் பார்த்துக் கொண்டது.  18 வயதுக்கு முன்னர் திருமணம் குற்றம் என்றான பின் பல விழிப்புணர்வுகள் வந்தன.  கல்விக்கு முதலிடம் தந்தவர்களுடைய குடும்பம் செழிப்பானது.  இன்று குழந்தைகளை அப்படி வேலை வாங்க முடியாது என்பதை விட அப்படி நினைத்துக் கூட பார்க்க முடியாது.  இப்படி கடுமையாக உழைத்தவர்கள் இல்லாத வீடுகளிருக்காது.  அன்று பெரும்பணக்காரர்கள், பெரு நிலக்கிழார்களைத் தவிர்த்து அனைத்து சாதி மத வீடுகளிலும் உழைப்புதான் பிரதானமாக இருந்திருக்கும்.  இன்றுமே கூட சிலர் மெய்ன் வேலை போக மீதமிருக்கும் வேளைகளில் சைட் பிசினஸ்களில் ஈடுபட்டு தன் வாழ்க்கைப் பாதுகாப்புக்காகவும், குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காகவும் உழைப்புக்கஞ்சாமல் பாடுபடவேச் செய்கின்றனர் !

வாழை படத்திற்கு அம்மாவை அழைத்துப் போக முடியவில்லை.  அம்மா இதே வருடம் தை பிறக்கும் முன் இயற்கையுடன் கலந்துவிட்டிருந்தார் !!!

மின்னஞ்சல் : rashraja1969@gmail.com