சுராஜ் வெஞ்சரமூடு மலையாள தேசத்து நகைச்சுவை நடிகர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் தன் வாழ்வைத் தொடங்கிய இவர் இன்று 250 படங்களுக்குமேல் நடித்துப் புகழ்பெற்றிருக்கிறார். 2000 ஆண்டு முதல் 2010 வரை இவர் நடிப்பில் வந்த பல படங்கள் கவனிக்கப்பட்டிருக்கின்றன. 2009, 2010, 2013 ஆகிய வருடங்களில் கேரள அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 2013-ஆம் ஆண்டு வெளிவந்த பெயரறியாதவன் என்ற படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வாங்கி இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மலையாள வெப் சீரிஸான நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் இந்தியா முழுவதும் ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுராஜ் வெஞ்சரமூடுவின் பல படங்களைப் பார்த்திருக்கிறேனே தவிர, அவரைத் தனித்துத் தெரிந்துகொண்டதில்லை. நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் பார்த்த பிறகுதான், சுராஜ் நடித்த பல முக்கியமான படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்பதையே அறிந்தேன். நிவின்பாலி நடித்த ஆக்ஷன் ஹீரோ பைஜூ (2016), பகத் பாஸில் நடித்த தொண்டிமுதலும் திருக்ஷாக்ஷியமும் (2017), பிரிதிவிராஜ் நடித்த ஜன கன மன (2022) ஆகிய படங்களில் சுராஜும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை ரசிக்கவும் செய்திருக்கிறேன். பிறமொழிகளில் ஃபகத் ஃபாசில், பிரிதிவிராஜ் எனத் தெரிந்த நடிகர்களோடு நின்றுவிடுகிறோம். அவர்களுக்கு நிகராக நடித்த நடிகர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்துவிடுகிறோம். தமிழ்ப் படங்களில் வரும் எல்லா நடிகர்களையும் தெரிந்து கொள்வது போல மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய படங்களில் வரும் முக்கியமான நடிகர்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்!
நகைச்சுவை நடிகர்களைப் பொறுத்தவரை, மற்ற எந்த மாநிலத்தையும்விட நமக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது என்பேன். காளி என். ரத்னம், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். ராதா, தங்கவேலு, சுருளிராஜன், நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், சூரி என்பது போன்ற வரிசை பிற மொழிகளில் அமைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவுதான்.
சிலர் நகைச்சுவையோடு குணச்சித்திர வேடத்திலும் கலக்குவார்கள். வி.கே. ராமசாமி, சோ, தேங்காய் சீனிவாசன், மணிவண்ணன் இப்படியாகப் பெரிய வரிசை உண்டு. சிலர் நகைச்சுவையோடு நாயகர்களாகவும் ஜொலிப்பார்கள். டி.ஆர்.ராமச்சந்திரன், ரஜினி, கமல், சத்யராஜ் என ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் சுராஜ் வெஞ்சரமூடுவை யார் அருகில் வைப்பது என்று தெரியவில்லை.
ஏனெனில் சுராஜின் நகைச்சுவை என்பது முற்றிலும் தனிரகம். இந்த வெப் சீரிஸில்கூட சுராஜ் பெரும்பாலும் பேசுவதில்லை; யாரையும் முறைப்பதில்லை; நகைச்சுவைக்காக உடல்மொழியை மிகைப்படுத்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் அவர் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். எப்படியான திறமை? சுராஜ் நகைச்சுவையை நகைச்சுவையாகக் காட்டாமல், ஓர் வாழ்வியல் முறையாகக் காட்டியுள்ளார்.
Nagendrans Honeymoons- 1 live… 5 wives என்ற தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு பணக்காரன் ஐந்து மனைவிகள். அவர்களில் ஒருத்திக்குத் தெரியாமல் இன்னொருத்தியுடன் பஞ்சதந்திரமாக வாழ்வதுதான் கதை போலும் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். தலைப்பை வைத்து யாருமே யூகித்துவிடமுடியாத கதைக்களம்தான் இந்த வெப் சீரிஸின் கதை.
1978 காலகட்டத்துக் கேரளா. கதை கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே இருக்கும் வெள்ளயானியில் தொடங்குகிறது. வயதான அம்மா அதிகாலையில் எழுந்து, தன் மகனுக்காக ஒரு கட்டஞ்சாயாவையும், காலை உணவையும் தயாரித்து வைக்கிறார். மகன் எழுந்ததும் குளிப்பதற்கு வெந்நீரைக் காய வைக்கிறார். பின் தானும் கிளம்பிக் கூலிவேலைக்குப் போய்விடுகிறார். மகன் அப்படி என்ன வேலை செய்கிறான் என்றால்? எந்த வேலையும் செய்யாத அமைதியான வாழ்க்கை வாழ்கிறான். வயதோ நாற்பது!
நல்ல உறக்கமும் சுவையான சாப்பாடும் மட்டுமே அவனுடைய அமைதியான வாழ்க்கைக்குப் போதுமானது. மிகத் தாமதமாக எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்க்கிறான். கட்டஞ்சாயா ஆறிப்போய் இருக்கிறது. காலை உணவு கிழங்கும் கறியும்! வெந்நீரைத் தொட்டுப் பார்க்கிறான், வெதுவெதுப்பாகத்தான் இருக்கிறது. ”இத கொல்லையில எடுத்து வைக்கல கிழவி” என அம்மாவைத் திட்டுகிறான். அவன் பெயர் தான் நாகேந்திரன்.
நாகேந்திரன் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ரோஸி என்ற அந்த ஊரின் பேரழகி வருகிறாள். அவளைப் பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடித்து ஓடுகிறார்கள். ஆனால், அவள் எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும், நாகேந்திரன் சாப்பாட்டுக்கு முன் கால் தூசிக்குச் சமம். நாகேந்திரனுக்கு எந்த ஒரு பெண்ணின்மீதும் விருப்பமோ, ஈர்ப்போ, காதலோ, காமமோ ஏற்படாது. இதுபோன்ற கலியுக வினோத சோம்பேறிதான் ஆறு பெண்களைத் திருமணம் செய்கிறான்! தலைப்பில் 1 live… 5 wives என்று தானே இருக்கிறது என்று கேட்டால்? நாகேந்திரனின் ஆறாவது திருமணத்தில் அதற்கான விடையும் இருக்கிறது!
நாகேந்திரனுக்கு அந்த ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். அவன் பெயர் சோமு. பால் வியாபாரம் செய்கிறான்; நாடகக் குழுவில் ஒரு நடிகனாகவும் இருக்கிறான்; தவிர கல்யாணத் தரகராகவும் வேலை செய்கிறான். இவர்களுடைய நண்பன் பரலோஸ் என்பவன் வளைகுடா நாட்டில் இருந்து வந்திருக்கிறான். கொஞ்சம் பணமும் வைத்திருக்கிறான். அவனுக்கு மறுபடியும் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் எண்ணம் இல்லை. ஒரு திருமணம் முடித்து சொந்த ஊரிலேயே வாழ்க்கையைத் தொடரவேண்டும் என நினைக்கிறான்.
வெள்ளானியில் செட்டியார் ஒருவரின் வைப்பு ஒருத்தி இருக்கிறாள். பரலோஸ் திருமணத்திற்கு முன்பு அவளிடம் இன்பம் அனுபவிக்கப் போகிறான். வெளியில் காவலுக்கு நாகேந்திரன்! பரலோஸ் உள்ளே இருக்கும் நேரத்தில் செட்டியாரும் வந்துவிடுகிறார். வீட்டுக்கு வெளியே செருப்பு இருப்பதைப் பார்த்துக் காரில் இருக்கும் கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து கதவைத் தட்டுகிறார். அந்த இக்கட்டான சூழலில் பரலோஸைத் தந்திரமாகக் காப்பாற்றுகிறான் நாகேந்திரன்.
”செட்டியாரிடம் இருந்து உயிரைக் காப்பாற்றியதைவிட திருமணத்திற்குமுன் போகவிருந்த என் மானத்தைக் காப்பாற்றி விட்டாய்! நீ ஏதாவது கேள்! நான் தருகிறேன்” எனப் பரலோஸ் நாகேந்திரனிடம் சொல்கிறான். “வளைகுடா நாடுகளில் நீ வேலை பார்த்த நிறுவனத்தில் எனக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடு” என்று கேட்கிறான் நாகேந்திரன். “நீ பாஸ்போர்ட் விசாவை எடு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறான் பரலோஸ். பாஸ்போர்ட் விசாவுக்குத் தோராயமாக 16000 -17000 ஆகும்! அவ்வளவு பெரிய தொகை நாகேந்திரனிடம் ஏது?
நாகேந்திரனின் மாமா பெண் ஜானகி. அவளைத் திருமணம் முடித்துக் கொண்டால் வரதட்சணையாக வரும் பணத்தை வைத்து 16,000 ரூபாய் திரட்டி விடலாம் என வழிகாட்டுகிறான் சோமன். நாகேந்திரனுக்கும் அதைத் தவிர வேறு வழி இல்லை. முதல் திருமணம் ஜானகியோடு நடக்கிறது. அன்று இரவு வரதட்சணை பணம் எங்கே என்று கேட்கிறான் நாகேந்திரன். ஜானகியின் குடும்பமோ வறுமையிலும் வறுமையான குடும்பம். அவளிடம் எந்த வரதட்சணையும் இல்லை என்பது தெரிந்ததும் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறான் நாகேந்திரன். மீண்டும் இரவில் வரும்போது ஜானகியிடம் நாகேந்திரனின் அம்மா, “நீ அவனிடம் வேலைக்குப் போகச் சொல்ல வேண்டும்” என்று எடுத்துக் கூறுகிறார். அதை மறைந்து இருந்து கேட்கிறான் நாகேந்திரன். அவனைப் பொறுத்தவரை அதைவிட ஆபத்தானது எதுவும் இருக்க முடியாது. அதனால் இரவோடு இரவாகப் பெட்டிப் படுக்கையோடு வீட்டை விட்டு ஓடி விடுகிறான் நாகேந்திரன்.
பத்தனம்பிட்டா என்ற பகுதியில் இருக்கும் ரன்னி என்ற ஊருக்கு நாகேந்திரனும் சோமுவும் வருகிறார்கள். அங்கு வருவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அந்த ஊரில் 38 வயதாகியும் கல்யாணமாகாமல் ஒருத்தி இருக்கிறாள். அவள் பெயர் லில்லிகுட்டி. வசதி வாய்ப்புக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் பெண் கேட்டு வந்தவர்கள் எல்லாம் லில்லிகுட்டியைப் பார்த்ததும் ஓடி விடுகிறார்கள். அவள் நல்லவள்தான். ஆனால், கொஞ்சம் மனநலம் பிறழ்ந்தவள்! கையில் கிடைப்பதை எடுத்து அடித்து விடுவாள், அவ்வளவுதான்!
நாகேந்திரனை ஜோசப் எனப் பெயர் மாற்றி, சோமன் லில்லிகுட்டிக் குடும்பத்தாரிடம் அழைத்துச் செல்கிறான். லில்லிகுட்டி நாகேந்திரனிடம் தனியே பேசவேண்டும் என்கிறாள். நாகேந்திரனிடம் தன் நிபந்தனைகளைக் கூறுகிறாள். “என்னை கோட்டயத்திற்கு அழைத்துச் சென்று திரைப்படம் காட்ட வேண்டும். மஞ்சள் பூ போட்ட வெள்ளை நிறச் சேலை வாங்கிக் கொடுக்க வேண்டும். தாஜ்மஹாலுக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும். இது எல்லாம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றினால் எலியை அடித்துக் கொல்வது போலக் கொன்று விடுவேன்” என்கிறாள். திருமணம் நடக்கிறது!
லில்லிகுட்டி குடும்பம் வசதியானது என்றாலும், லில்லிகுட்டியோடு வாழ முடியாது என்பதால் நாகேந்திரன் அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். லில்லிகுட்டி குடும்பத்தார் வங்கியில் போட்டு வைத்திருந்த ரூபாய் 3000 கிடைக்கிறது. அதுதான் நாகேந்திரனுக்குக் கிடைத்த லாபம்.
அடுத்ததாக நாகேந்திரனும் சோமனும் காசர்கோட் பகுதியில் உள்ள பேக்கால் என்ற ஊருக்குச் செல்கிறார்கள். அங்கு ஓர் இஸ்லாமிய சமூக அமைப்பு, வசதியற்ற இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் ஆகியோரைக் கண்டறிந்து, இலவசத் திருமணம் நடத்தி வைக்கிறது. அதற்கு ஆள் பிடிக்கும் ஒருவனைப் பழகி வைத்திருக்கிறான் சோமன்
இந்த முறை நாகேந்திரன் அலி உசைன் ஆகிறான். மணப்பெண் லைலா. அவள் யார் என்றால், தன் முன்னாள் கணவனைக் குத்திக் கொலைசெய்து ஏழு வருடம் சிறையில் தண்டனை பெற்றுவிட்டு, அமைதியான ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று அங்கு வந்திருக்கிறாள். அவளைப் பொறுத்தவரை ஏமாற்றுபவர்களைப் பிடிக்காது. கொன்றுவிடுவாள்! நாகேந்திரன் அவளைப் பார்த்த கணத்திலிருந்து நடுங்குகிறான். சமூகத்தார் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என்று பார்த்தால், பணத்தையும் தங்கக் காசுகளையும் லைலா வாங்கி வைத்துக் கொள்கிறாள்.
முதல் இரவு! கரணம் தப்பினால் மரணம்! லைலா நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது, இஸ்லாமிய சமூகத்தார் கொடுத்த தங்கக் காசையும் பணத்தையும் தேடிப்பார்க்கிறான். எதுவும் இல்லை! உயிர் பிழைத்தால் போதும் என நினைத்துத் தப்பித்துப் போகும்போது, லைலாவின் ரவிக்கையிலிருந்து ஒரு தங்கக் காசு விழுகிறது. இஸ்லாமிய சமூகத்தார் கொடுத்த பணத்தையும் தங்கக்காசையும் எடுத்து ரவிக்கைக்குள் வைத்திருக்கிறாள் லைலா. இன்னொரு தங்கக்காசு ரவிக்கையிலிருந்து பாதி வெளியே வந்து நிற்கிறது. அதையும் எடுக்கலாமா என யோசிக்கிறான். நாகேந்திரனுக்கு உயிர் மிக முக்கியம். ரிஸ்க் எடுக்க விரும்பாமல் கிடைத்த வரை போதும் என நினைத்து ஓடிப் போகிறான்.
அடுத்த திருமணம் பாலக்காட்டில் உள்ள ஒட்டப்பாலம் என்ற இடத்தில்! வாழ்ந்து கெட்ட வசதியான நம்பூதிரி குடும்பத்துப் பெண் சாவித்திரி. அவளுக்கு வயது 21. மிக அழகான பெண். நாகேந்திரனுக்கோ வயது நாற்பது. பார்ப்பதற்கு உகந்தவனாக இருக்க மாட்டான். இருவருக்கும் அவசர அவசரமாகக் கல்யாணம் பண்ணிவைக்க நினைக்கிறார்கள். நிச்சயதார்த்தத்து அன்று, நாகேந்திரனையும் சாவித்திரியையும் ஒருவரை ஒருவர் தனியே சந்தித்துப் பேசச் சொல்கிறார்கள். நிச்சயதார்த்தம் நடந்த இடத்தில்தான் பலகாரம் இருக்கிறது. அதனால் சாவித்திரியிடம், “உள்ள போகலாமா?” என்கிறான் நாகேந்திரன். சாவித்திரிக்கு குமட்டல் அதிகமாகி அடக்கமுடியாமல் வாந்தி எடுக்கிறாள். சாவித்திரி வயிற்றில் குழந்தை வளர்கிறது! அதனால் என்ன? அவளையும் திருமணம் செய்கிறான் நாகேந்திரன்!
அன்று இரவு, கிடைத்த வரதட்சணை நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று பார்த்தால் அவ்வளவு பெரிய வீட்டில் சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறானே தவிர, வெளியேறுவதற்கான வாசல் தெரியாமல் திண்டாடுகிறான். கடைசியாக ஒரு கதவைத் திறந்து வெளியேறினால், அதுவும் இன்னோர் அறை. அங்கு சாவித்திரி தூக்கில் தொங்குவதற்குத் தயாராக இருக்கிறாள். நாகேந்திரனால்தான் அவள் தூக்குப் போடவே நினைக்கிறாள். கடைசியில் அவளுடைய உதவியோடு அந்த வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
ஆலப்புழாவில் கைனகரி என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து தங்கம் என்ற பெண்ணுக்குத் திருமணம் நடத்திவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் “தங்கம் திருமணம் செய்து இந்த ஊரில் வாழ வேண்டும் அல்லது தங்கம் இந்த ஊரை விட்டுப் போய்விட வேண்டும்” என்பது கைனகரி பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் ஊர் பெரியவர்கள் எல்லாம் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள்.
தங்கம் இந்த ஊரை விட்டுப் போவதா? அவளுக்கு ஒரு நல்ல கணவனைப் பார்த்துக் கட்டி வைத்து அதே ஊரில் தங்கத்தை நிறுத்தி, பஞ்சாயத்தார் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என இளைஞர்கள் பணத்தைச் சேகரிக்கிறார்கள். 1810 ரூபாய் வரை சேர்த்து விடுகிறார்கள். அப்போதுதான் நாகேந்திரன் வருகிறான். அவனுக்குத்தான் தங்கத்தைக் கட்டிவைக்க இருக்கிறார்கள். “மாப்பிள்ளைக்கு ரூபாய் 2500 தர வேண்டும். அதற்கு ஒரு ரூபாய் குறைந்தாலும், திருமணம் நடக்காது” என சோமு சொல்லி விடுகிறான். சோமுவை இளைஞர்கள் சமாதானப்படுத்துகிறார்கள்.
பணம் கொஞ்சம் குறைவாக இருப்பதால், சோமுவுக்கும் இளைஞர்களுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. அப்போது நாகேந்திரன் அந்த வாக்குவாதத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஒரு வீட்டருகே ஒதுங்கி நிற்கிறான். அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண் நாகேந்திரனை அந்த விஷயத்திற்கு அழைக்கிறாள். சாப்பாட்டைத் தவிர வேறு எந்த விஷயமும் நாகேந்திரனை கிளர்ச்சி அடைய வைக்காது. அதனால் அந்தப் பெண்ணை விநோதமாகப் பார்க்கிறான். பதற்றமடைந்த இளைஞர்களில் ஒருவன் ஓடிவந்து, ”தங்கம்! அவர்தான் மாப்பிள்ளை, அவரப் போய் கூப்பிடுற?” என்று சொன்னதும் தங்கம் வெட்கப்படுகிறார்.
எதைக் கண்டும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்த நாகேந்திரன் தங்கத்தையும் திருமணம் செய்கிறான்! கல்யாணம் நடந்த முதல் இரவு, “பம்பாய் போகிறேன்! அதற்கு முன்னால் உன்னைப் பார்க்க வந்தேன்!” எனத் தங்கத்திடம் கெஞ்சுகிறான் ஒருவன். அவனிடமும், திருமணத்தை முன்னின்று நடத்திவைத்த இளைஞர்களிடமும், வசதியான வியாபாரியிடமும் என வரிசையாகத் தங்கம் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதால், நாகேந்திரன் தங்கத்தின் வீட்டுக் காவல் நாய் ஆகிறான். சரியான நேரம் கிடைக்கும்போது 2500 பணத்தை எடுத்துக் கொண்டு, தன் பெட்டியையும் தூக்கிக் கொண்டு தப்பிக்கிறான் நாகேந்திரன்.
கடைசியாகப் பழனி ஆயக்குடிக்கு வருகிறார்கள். அங்கு மொழி என்ற தமிழ்ப் பெண்ணை நாகேந்திரனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்கிறான் சோமன். மொழியின் அப்பா கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டவர். சாவதற்கு முன்பு ஒரு நல்லவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். ஒரு பெண்ணும் பலகாரமும் இருந்தால் பலகாரத்தைப் பார்ப்பானே தவிர பெண்ணை ஒருபோதும் ஏறெடுத்துப் பார்க்காத நாகேந்திரனே முதல்தடவை பலகாரத்தை மறந்து மொழியைப் பார்க்கிறான். மொழி அவ்வளவு பாந்தமான பெண்!
நாகேந்திரன் மனது குற்ற உணர்வில் தள்ளாடுகிறது. “இவ்வளவு நாள் நான் பண்ற தப்புக்கு நானே ஒரு நியாயத்தைச் சொல்லிட்டு இருந்தேன்! ஒருத்தி பைத்தியம்! ஒருத்தி கர்ப்பம்! ஒருத்தி கொலை பண்ணவ! ஆனால் இது அந்த மாதிரி இல்ல! இவ கள்ளங் கபடமில்லாத பொண்ணுடா! இவளை எப்படி என்னால ஏமாத்த முடியும்? நான் அவளிடம் எல்லா உண்மையும் சொல்லப்போகிறேன்!” எனச் சோமுவிடம் சொல்லிவிட்டு அறைக்குள் செல்கிறான் நாகேந்திரன்.
மொழியிடம் உண்மையை எல்லாம் சொல்லிவிடுகிறான். மொழி கலங்கி விடுகிறாள். ”இப்படி ஒரு விஷயம் நடந்தது தெரிந்தால் என் அப்பா இப்போதே உயிரை விட்டுவிடுவார்” எனக் கலங்குகிறாள். ஆனாலும் நாகேந்திரன் தன்மீது வைத்திருக்கக் கூடிய அன்பின் காரணமாக அவனிடம் ஓர் உறுதிமொழியைக் கேட்கிறார், “நீங்கள் இனிமேல் யாரையும் ஏமாற்ற மாட்டீர்கள்தானே!”. நாகேந்திரன் ஒப்புக்கொள்கிறான். நீண்டநாள் கழித்துத் தன் மனத்தில் இருந்த சுமையை எல்லாம் இறக்கி வைத்த சந்தோஷத்தில் உறங்குகிறான். அடுத்த நாள் என்ன நடந்தது என்று நீங்கள் நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் நகைச்சுவை என்பது கதையும் நடிப்பும் கலந்த ஒரு வடிவம். மிகச் சின்ன சின்ன இடங்களில்கூட நகைச்சுவையைக் கொண்டுவந்திருப்பார்கள். அது நகைச்சுவை என்பதைவிட வாழ்வியல் எதார்த்தம் என்பதுதான் சரியாகும். உதாரணத்திற்கு 16000 ரூபாய் பணம் வேண்டும் என்று நாகேந்திரன் தன் அம்மாவிடம் கேட்கும்போது அவர், “தூ….உ” எனத் துப்புவதில் அவ்வளவு அற்புதமான சிரிப்பு வெடிக்கும். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் இருப்பது எல்லாம் எதார்த்தம்தான்.
அதேபோல லில்லிகுட்டி நாகேந்திரனுக்கு டீ கொடுத்துவிட்டுத் தலையை வருடும் இடமாகட்டும், தங்கம் வீட்டிற்கு முன்னால் போர்வை போர்த்திப் படுத்திருக்கும் நாகேந்திரனை, தங்கம் வீட்டிற்குள் இருந்து வரும் ஒருவன் தெரியாமல் மிதித்த பிறகு நாகேந்திரன் அலறும் காட்சியாகட்டும், ரவுடிகளை அடித்து துவம்சம் செய்யும் லைலாவைத் திருமணம் முடித்த பிறகு, சமூகத்தார் கொடுக்கும் பணத்தை அவள் வாங்கி வைத்தபிறகு, நாகேந்திரன் ஏக்கத்தோடு பார்ப்பதாகட்டும் எல்லாமே சிரிப்பு மழைத் தோரணங்களாக இருக்கும்.
நாகேந்திரனின் பாத்திரப்படைப்பு மிக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவன் ஒரு பந்தைப் போல உதைத்த திசையில் செல்லும் மனிதன்; எதிர்ப்பே காட்டாத மனிதன்; மகிழ்ச்சியற்ற மனிதன்; உணவைத் தவிர எந்தப் பெண்ணையும் விரும்பாத மனிதன். அவன் திருமணம் செய்யும் எந்தப் பெண்ணிடமும் துளிகூட ஆசை கொள்வதில்லை. இப்படி ஒரு பாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்ததும், சுராஜ் வெஞ்சரமூடு அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததும் ரசிக்க வைக்கின்றன.
சுராஜ் வெஞ்சரமூடுக்கு நிகராக வடிவமைக்கப்பட்ட இன்னும் இரண்டு கதாபாத்திரங்களைச் சொல்ல வேண்டும். ஒருவர் லில்லிகுட்டி! கிரேஸ் ஆண்டனி என்பவர் இந்த வேடத்தில் நடித்திருக்கிறார். அவரைக் காட்டும்போதெல்லாம் குதிரையின் கனைப்பொலியைக் கொடுப்பது, ஒரு துள்ளலோடு நாகேந்திரனிடம் வருவது, நாகேந்திரனைச் செல்லமாக மிரட்டுவது என ஒரு வெப் சீரிஸிற்குள் வெறும் பதினைந்து நிமிடமே வந்தாலும் அதகளம் பண்ணியிருக்கிறார்.
இன்னொருவர் கனி குஸ்ருதி. தமிழில் சமீபத்தில் வந்த தலைமைச் செயலகம் என்ற வெப் சீரிஸிலும் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார். தங்கம் என்ற கதாபாத்திரத்தை எல்லோரும் ரசிக்கும்படியாக ஜனரஞ்சகமாக மாற்றியிருக்கிறார். வெப் சீரிஸில் வரும் எல்லாப் பெண்களுக்கும் மிக குறைந்த நேரமே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை எல்லோருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இயக்குநரின் பங்களிப்பு எல்லாக் கதாபாத்திரங்களிலும் தெரிகிறது.
இந்தப் படத்தை நிதின் ரெஜி பணிக்கர் என்பவர் தயாரித்து இயக்கியிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு கசாபா என்ற படத்தின்மூலம் வெளி உலகிற்குத் தெரிந்தவர். அந்தப் படத்தில் பெண்களுக்கு எதிரான வசனத்தை வைத்ததாக இவர்மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தார்கள். இந்த நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் வெளிவந்தபோதுகூட இவரைப் பிரபல பத்திரிகைகள் மனம் திறந்து பாராட்டவில்லை. மாறாக, ஒரு பர்த்டே கேக்கைப் பட்டாக்கத்தியை வைத்து வெட்டுவதுபோல காரசாரமாகப் பகுத்து ஆராய்ந்து விமர்சித்திருந்தார்கள்.
வெப் சீரிஸின் வேகம் குறைவு என்றார்கள். ஒவ்வொரு எபிசோடிலும் வந்த கதையே திரும்பத் திரும்ப வருகிறது, அதனால் முடிவுகளை முன்கூட்டியே கண்டறியமுடிகிறது என்றார்கள். பல திருமணங்கள் செய்யும் ஒருவன் கடைசியாக ‘நான் இதுவரை திருமணம் செய்த பெண்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் குறையுடையவர்கள். ஒருத்தி கொலைகாரி, ஒருத்தி கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானவள், ஒருத்தி மனநிலை பிறழ்ந்தவள்’ எனச் சொல்வது எப்படிச் சரியாகும். அப்படியென்றால் குறையுடையவர்களை ஏமாற்றினால் அது தப்பில்லையா?’ என்று இயக்குநரை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள்.
விமர்சர்களுக்குக் குறையாகத் தெரிந்த எதுவும் ரசிகர்களுக்குத் தெரியவில்லை. இன்று இந்த வெப் சீரிஸ் இந்தியா முழுவதும் ஏராளமானோரால் பார்க்கப்படுவதோடு, குடும்பத்தோடு பார்த்து மகிழக்கூடிய அருமையான வெப் சீரிஸ் என்ற பாராட்டையும் வாங்கியிருக்கிறது.
நகைச்சுவைப் படங்களுக்குச் சில சுதந்திரம் இருக்கிறது. இது சார்லி சாப்ளின் காலத்திலிருந்தே இருக்கும் வழக்கம்தான். சில காட்சிகள் மிகையாக இருக்கலாம். நடிப்பு மிகையாக இருக்கலாம். வசனம் மிகையாக இருக்கலாம். ஒரு நகைச்சுவைப் படத்தை விமர்சனம் செய்யும்போது எதார்த்தவாதமோ, அடிப்படையான அறக் கொள்கைகளோ ஒரு அளவுகோலாக இருக்கக் கூடாது. ஜனரஞ்சகமாகச் சிரிப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு படம் என்பதை மனதில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டும்.
எனக்குத் தெரிந்து காலந்தோறும் விமர்சகர்கள் தோல்வியைத்தான் சந்திக்கிறார்கள். அவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்வதால் எந்தப் படமும் ஓடுவதுமில்லை. அவர்கள் மோசம் என மட்டம் தட்டுவதாலேயே எல்லாப் படமும் வீழ்ந்துவிடுவதுமில்லை. மக்களின் விருப்பமே வெல்லும்.
தவிர, ஒரு நகைச்சுவை வெப் சீரிஸை எப்படி எடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார் இயக்குநர் நிதின் ரென்ஜி பணிக்கர். கடந்த இரண்டு வருடங்களில் தமிழில் ஏராளமான நகைச்சுவை வெப் சீரிஸ் வந்துள்ளன. அவற்றில், ஒன்றுகூட கவனிக்கும்படியாக அமையவில்லை. நிதின் ரெஞ்சி பணிக்கர் கேரளா வாழ்வியலோடுகூடிய கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்தக் கதைக்குத் தேவையான நடிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த வெப் சீரிஸில் சில உண்மைகளையும் போட்டுடைக்கிறார் இயக்குநர். இஸ்லாம் சமூக அமைப்பின் மூலம் இலவசத் திருமணம் நடக்கும் காட்சியில், “இதுல சில கதைய தோண்டுனா.. அது பம்பாய் ரெட் லைட் ஏரியா வரைக்கும் போகும்” என்று வசனம் வைக்கிறார். இதன்மூலம் ஒரு காலத்தில் சிலர், சமூதாயத்தார்மூலம் திருமணம் செய்துகொண்டு மனைவிகளை மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் விற்றுள்ளனர் என்பது தெரியவருகிறது. நகைச்சுவை படம் என்றாலும் அதிலும் உறைய வைக்கும் உண்மையைச் சொல்கிறார்!
தமிழ் வெப் சீரிஸில் இதுபோன்ற அம்சங்களைப் பார்க்க முடிவதில்லை. தனிமனிதனின் அங்கஹீனங்களைக் கேலி செய்வது, சில ஒன்லைனர்களை வைத்து ஓட்டுவது, மேட்டுக்குடித்தனமான பேச்சுகளை நகைச்சுவை எனப் படமாக்குவது என இருந்தால், இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய, தமிழின் நீண்ட நெடிய நகைச்சுவை பாரம்பரியத்தின் கண்ணி வெகுவிரைவில் நின்றுபோகும்!