2017ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவித்தபோது திரைப்படத்தின் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. முதல்பாகத்தின் இறுதிக்காட்சியில் “எங்கு தவறு நடந்தாலும் நான் மீண்டும் வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது” என ஹாங்காங்கில் ஒரு எஸ்.டி.டி. பூத்தில் பேசியபடி முடியும் இந்தியன் முதல் பாகம் ஒரு முக்கிய காராணம். இன்னோர்புறம் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத காலகட்டத்தில் எங்கும் நுழைந்த இந்தியன் தாத்தா, இப்போதிருக்கும் தொழில்நுட்பம் கலந்த தலைமுறையை எப்படி எதிர்நோக்கப்போகிறார் என்ற ஆர்வமும், எங்கும் சிசிடிவி கேமரா இருக்கும் காலகட்டத்தில் எப்படி தன் ஆக்ஷன் காட்சிகளை அரங்கேற்றுவார் என்ற விறுவிறுப்பும். இதனால் இந்தியன் 2 அறிவித்த சில காலம் டிரெண்டிங்கில் இருந்தது. அதே சமயம் சில சோதனைகளையும் சந்தித்தது.
படத்தை தயாரிப்பதாக இருந்த வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் (தில் ராஜூ) எனும் தெலுங்கு நிறுவனம் அறிவித்த ஒரு மாதத்தில் பின்வாங்கிக்கொண்டது. அதன் பின் கைகோர்த்த லைகாவின் மூலம் 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பைத் துவங்கியது. பிப்ரவரி 2020-ம் ஆண்டு படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்தில், கார்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகன் ‘சாய் கிருஷ்ணன்’ உட்பட மூன்று பேர் இறந்தனர். அதன் பிறகு கொரோனா, வெள்ளம், அரசியல் மாற்றங்கள், கமல்ஹாசனின் அரசியல் துவக்கம் என பல மாற்றங்களைப் பார்த்துவிட்டது இந்தியன் 2. ஆனால் நகர்ந்தபாடில்லை.
ஒரு கட்டத்தில் தேங்கிப்போன இந்தியனை விட்டுவிட்டு லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம் 2’ திரைப்படத்திற்கு நகர்ந்தார் கமல். இயக்குநர் ஷங்கரும் அந்நியன் திரைப்படத்தை ஹிந்தியில் எடுக்கப்போவதாகவும், ராம் சரணை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கப்போவதாக அறிவித்தார். இதனால், ஆண்டுகள் செல்லச்செல்ல “எப்பத்தான்பா அந்தப்படத்த முடிப்பீங்க!” என்று மக்களே சலித்துக்கொள்ளும் அளவுக்கு அத்திரைப்படம் எடுத்து முடிப்பதிலும், அதன் வெளியீட்டிலும் பெரும் தேக்கத்தை சந்தித்தது. நீண்ட நாள் காத்திருப்பிற்குப்பின் அரசியலில் தனது அடுத்தகட்டத்தை எதிர்நோக்கும் கமல்ஹாசனின் சிந்தனை மூலம் மீண்டும் உயிர்பெற்றது இந்தியன் 2. லைகாவுடன் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் கைகோர்த்தது. அப்போது திமுகவை விமர்சித்த கமல் இப்போது கூட்டணி வைத்திருக்கையில் முன்பிருந்த கதையுடன் தொடரமுடியுமா என்றால், சந்தேகமே. இதனால் வில்லன்களை வடநாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டது தயாரிப்பு நிறுவனம்.
மீண்டும் கோட்டை அழித்து முதலிலிருந்து போடும் வேளையில், ஏற்கனவே ஒப்பந்தமான ஒளிப்பதிவாளர் ரவிவர்மா (பொன்னியின் செல்வன்) விலகியதால் புதிதாக இணைந்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் (எந்திரன்) விலக மீண்டும் இணைந்தார் ரவிவர்மா. எப்படியோ ஒரு வழியாக 2024 மார்ச் மாதம் படப்பிடிப்பை முடித்துக்கொள்வதாக அறிவித்தது திரைப்படக்குழு.
ஒரு படம் தயாரிக்கப்படும் வேளையில் பல்வேறு சோதனைகளை சந்திப்பது ஒன்றும் தமிழ்திரையுலகில் புதிதல்ல. எம்.ஜி.ஆர். காலம் தொட்டு பல ஆண்டுகளாக பல்வேறு இயக்குநர்களால் முயற்சி செய்து பின்பு கைவிடப்பட்டு அந்த நாவலை மட்டும் திரைப்படமாக்கவே முடியாது என்று எல்லோராலும் நம்பப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ கூட வெளியாகி அந்த மூடநம்பிக்கையைப் பொய்யாக்கியது. ஆனால் இந்தியனில் நிகழ்ந்தது வேறு.
படம் வெளியான பிறகு அத்திரைப்படத்தின் வெற்றி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கையில், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற முடியாமல் போனது. வெளியான திரைப்படங்களின் மீது வைக்கப்படும் விமர்சனங்களைத்தாண்டி, திரைப்படத்தின் மீதே பெரும் விமர்சனம் பல்வேறு வடிவங்களில் சூழ்ந்து கொண்டது மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் உருவாகத்துவங்கியது. அதில் குறிப்பாக இடம் பெற்றவை வர்மக்கலை, சித்தார்த் சொல்லும் ‘சோஷியல் மீடியா’ மற்றும் ப்ரியா பவானி சங்கர்மீது விழுந்த வீண் பழி.
ஒவ்வொரு விதமான வர்மத்திற்கும் ஒரு விளைவு என குதிரை போல ஓடுவது, பெண்ணைப்போல நளினமாக நடந்துகொள்வது என்பதையெல்லாம் பார்க்கையில், ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் தேவாலய காட்சியை ‘பிகில்’ படத்தில் அட்லி ஸ்பூஃப் செய்தது போல ‘இந்தியன்’ முதல் பாகத்தை ஷங்கரே ஸ்பூஃப் செய்து, வர்மக்கலைக்கே வர்மம் வைத்தது விட்டாரோ என்று தோன்றியது.
காரணம், முதல் பாகத்தில் வர்மக்கலை அந்தளவு தீவிரமாக காட்சிப்படுத்தப்பட்ட விதம். வயதான ஒரு முதியவர் லஞ்சம் வாங்குபவர்களைக் கொலை செய்கிறார். இதுதான் இந்தியன் திரைப்படத்தின் அடிநாதம். அதை எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்று அப்படத்தின் கதை விவாதத்தில் பல்வேறு கோணங்களில், பல நாட்கள் சிந்திக்கிறார்கள். பல்வேறு விவாதங்களுக்குப்பிறகு இறுதியாக அவர்களிடம் சிக்கிய ஐடியா ‘வர்மக்கலை’. அதன் மூலம் யாரையும் நின்ற இடத்தில் நிர்மூலமாக்க முடியும். இதனால் ஓட முடியாமலும், கைகால்களை அசைக்க முடியாமலும் இருப்பவர்களை எளிமையாகக் கொன்றுவிட முடியும். அதற்குத் தகுந்தவாறு அவர் பெல்ட்டில் சொருகியிருக்கும் கத்தியால் கொன்றுவிடலாம். வயதானவர் என்பதால் பார்க்கும் யாருக்கும் சந்தேகமும் வராது. இதுதான் இந்தியன் கதாபாத்திரத்தின் வெற்றியின் சூத்திரம். இத்திரைப்படத்தின் பாதிப்பில், பல திரைப்படங்களின் நகைச்சுவைக்காட்சிகளில் இந்த வர்மக்கலையைப் பயன்படுத்தியிருப்பார்கள். கில்லி படத்தில் கூட பிரகாஷ் ராஜ் விஜய்யைத் தாக்குவதற்கு வர்மக்கலையை பயன்படுத்துவார். அந்தளவுக்கு எழுத்தில் எடுத்துக்கொண்ட உழைப்பிற்குப் பின்னால், 28 ஆண்டுகளுப்பிறகு மாறியிருக்கும் காலகட்டத்தில் அதற்கு ஈடான திரைக்கான எழுத்து இல்லாமல் போனது யானையை வாங்கி வந்து அதற்குப் பிடிசாதம் ஊட்டிவிட்ட கதையாகிவிட்டது.
மற்றொரு காட்சியில் காவல்துறை அதிகாரி கேட்கும் போது, சித்தார்த் தன்னை ‘சித்ரா அரவிந்தன் – சோசியல் மீடியா’ என அறிவிப்பதைப் பலரும் தலையில் அடித்துக்கொண்டு “இதுல என்ன பெருமை!” என்று பகிரப்பட்ட பதிவுகளும் மீம்களும் பார்க்க முடிந்தது. இதில் என்னதான் பிரச்சனை என்றால் சொன்ன இடமும், சொன்ன வார்த்தையும், சொன்ன நபரும்.
ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னும், கொரோனாவிற்குப் பிறகும் பெரும்பாலான சமூகம் இணையத்திற்கு மாறியதில் முன்பிருந்த திரைப்பட நாயகர்களுக்கு இணையாக யூடியூப்களிலும், இன்ஸ்டாகிராம்களிலும் உருவான நட்சத்திரங்களும் அவர்களுக்குப்பின்னால் இருக்கும் லட்சக்கணக்கான பின்தொடரும் ரசிகர்களையும் கொண்டு புது இணைய உலகம் உருவாகத்துவங்கியது. அமலா ஷாஜி போன்ற வளரும் குழந்தைகள், ஒரு பக்கம் நாயகிகளைக் காப்பியடித்து அவர்களைப்போல நடித்து ரீல்ஸ்களில் வாசகர்களைக் குவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இன்னோர் பக்கம் தீவிர அரசியல் பேசும் யூடூ ப்ரூடஸ், ரெட்பிக்ஸ், நீர்த்திரை போன்ற சானல்களும் பெருகிவிட்டன.
அந்தவகை அரசியல் சானல்களில் 24.6 மில்லியன் வாசகர்களைக்கொண்ட ‘த்ரூவ் ராதே’ என்பவர் வைத்திருக்கும் @dhruvrathee என்ற ஹிந்தி யூடியூப் சானலில், பிரதமர் மோடிக்கு எதிராக அவர் வெளியிட்ட காணொளி 37 மில்லியன் பார்வையாளர்களால் யூடியூப்பில் மட்டும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், தரவிறக்கப்பட்ட வீடியோக்கள் என கணக்கில் வராத பெரும் எண்ணிக்கையும் உண்டு. சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் சரிவுக்கு இது போன்ற இணைய சானல்களின் பங்கும் உண்டு. த்ரூவ் ராதே இப்போது தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு பிராந்திய மொழிகளில் சானலைத் தொடங்கி டப்பிங் செய்யப்பட்ட தனது வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இதன் மூலம் ஹிந்தி தெரியாத பிராந்திய மக்களையும் அவர் விரைவில் சென்றடைந்துவிடுவார்.
அந்த வகையில் ஒரு பத்திரிகை வெளியிடும் செய்தியை வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு இணையாகவும் அதற்கு மேலும் த்ரூவ் ராதே தனது வாசகர்களைக் கைவசம் வைத்திருக்கையில், ஒரு பத்திரிகைக்காரன் என்றால் பின்வாங்கும் அதே காவல்துறை, பத்திரிகைக்கு இணையான ஒரு வளர்ந்த யூடியூபரையும் கண்டு பின்வாங்குமா என்றால் ஆம்.
ஆனால், சித்தார்த் ‘த்ரூவ் ராதே’வைப்போல காட்சிபடுத்தப்பட்டிருக்கிறாரா? அதான் இல்லை. அவர் ஒரு யூடியூப் சானல் வைத்திருப்பது அவருக்கு வேண்டுமானால் கெத்தாக இருக்கலாம். பார்க்கும் நமக்கு அப்படித்தொன்றவில்லை. அவர்கள் வைத்திருக்கும் ‘பார்க்கிங் டாக்ஸ்’ (குரைக்கும் நாய்கள்) ஒரு வளரும் சானல். ஒரு காட்சியில் ஒரு லட்சத்தி எழுபதாயிரம் சொச்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே வைத்திருப்பதாக காண்பிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் யாரென்றே தெரியாத ஒரு மாடலைக்கூட ஒரு லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். யூடியூப்பில் மீம் வீடியோக்கள் பகிரும் சானல்கள் கூட லட்சக்கணக்கில் பார்வையாளர்களைக் கைவசம் வைத்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அட்லீஸ்ட் தனது சானல் பெயரையாவது சொல்லியிருக்கலாம். நானும் ரவுடி தான் என்பது போல நானும் மீடியா என்று சொல்லிக்கொண்டு வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திரியும் இளைஞர்களை பார்ப்பது போல சித்தார்த்தை பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். மேலும், இந்தியன் 2 வின் விளம்பரங்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்வுகளில் சித்தார்த் பேசிய விதம் நிறைய பேரிடம் அதிருப்தியைப் பெற்றிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.
பரிதாபங்கள் கோபி, சுதாகரை நேரில் பார்க்கும் காவல்துறையினருக்கு நிச்சயம் அவர்களைத் தெரியும். இத்தனைக்கும் அவர்கள் அரசியல் நையாண்டிகளை முழு நேரமாகச் செய்வதில்லை. ஆனால் நேரடி அரசியல் பேசும், ‘பார்கிங் டாக்ஸ்’ வெளியிடும் காணொளிகள் மில்லியன் கணக்கான வாசகர்களை கடந்திருப்பதாக காண்பிக்கப்படும்போது அந்த மில்லியனில் காவல்துறை அதிகாரிகள் மட்டும் ஏனில்லை? என்று உங்களுக்கே கூட தோன்றலாம். மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்ட அவர்களின் காணொளிகள் மூலமாகவும், அவர்களின் முகங்கள் மூலமாகவும் எந்த வித அங்கீகாரமும் அவர்கள் பொதுமக்களிடம் பெறவில்லை என்பதே உண்மை.
‘கோ’ திரைப்படத்தில் ஜீவா ஓர் திறமையான புகைப்படக்கலைஞர் என்பதை, கதையின் பல்வேறு சூழல்களில் சாதுர்யமாகப் புகைப்படம் எடுப்பவராக காட்சிகள் வடிவமைத்து மக்கள் மனதில் ஆழமாக பதியவைத்துவிடுவார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அதனால் அடுத்தடுத்த காட்சிகளில் ஜீவா சமயோஜிதமாக செயல்படுவதை நம்மால் நம்ப முடிகிறது. குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்வதைப் புகைப்படம் எடுக்கும் காட்சியில் வேறு எங்கோ பார்ப்பது போல கேமராவை வேறு பக்கம் திருப்பி பக்கவாட்டில் இருப்பதையும் பார்க்கும் லென்ஸ் ஒன்றைப் பொருத்தி புகைப்படம் எடுப்பார் ஜீவா. நிஜத்தில் அப்படி ஒரு கேமரா லென்ஸ் இருக்கிறதா என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் மக்கள் நம்பினார்கள். அதுதான் ஒரு கதாபாத்திரம் மக்களிடையே பெருகிற நம்பிக்கை.
ஒரு ’ ஈ’யால் ஒருவனைக் கொல்ல முடியுமா? அதையும் முடியும் என அதற்கான காட்சிகள் மூலம் சாத்தியமாக்கிக் காட்டுகையில் மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். நிஜமாக இது சாத்தியமில்லை என்றாலும் அந்த மாய யதார்த்தத்தை ‘நான் ஈ’ என்ற படத்தில் மக்கள் விரும்பினார்கள்.
ஒரு வேளை, நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டு படத்தின் நீளத்தை குறைக்கும் பணியில் அவர்களுக்கான காட்சிகள் நீக்கப்பட்டிருந்தால், அது எடையேறிய லாரியில் சரக்குகளைக் குறைப்பதற்குப் பதிலாக வண்டியின் உதிரிபாகங்களைக் கழற்றியதற்குச் சமம். அந்த வகையில் படம் ஆரம்பித்து 10 நிமிடங்களில் வெறும் நான்கே காணொளிகளின் மூலம் அவர்களை பெரிய யூடியூபர்களாக காண்பிக்க நினைத்து அந்த நம்பிக்கையைப் பெற முடியாமல் தோற்றிருக்கிறது திரைக்கதை.
ஆனால், இந்தியன் முதல் பாகம் (1996) வெளியான காலகட்டத்தில் இருந்த அதே அரசியல் பிரச்சனைகள் இன்னும் மாறாமல் இருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். லஞ்சம் ஒரு பெரிய பிரச்சனையா என்றால், ஆம், பெரிய பிரச்சனை தான். ஆனால் லஞ்சம் மட்டுமே பெரிய பிரச்சனையா என்றால்? அது தான் இல்லை. அதையும் தாண்டி இனவாதம், இட ஒதுக்கீடு, சமூக நீதி, மொழித்திணிப்பு என நாம் போராட வேண்டிய களங்கள் நிறைய உள்ளன. அதற்கான முன்னெடுப்புகளாக வணிக சினிமாவுக்குள் வலுவான அரசியல் பேச முடியும் என்பதையும், அதை வெற்றிப்படமாக மாற்ற முடியும் என்பதையும் ‘பரியேறும் பெருமாள்’ போன்ற திரைப்படங்களின் வெற்றி நிரூபித்துக் காட்டியது. எனவே முதல்வன், எந்திரன் போன்ற திரைப்படங்களில் குற்றவாளிகளைக் குப்பத்தில் தேடும் மனநிலையிலிருந்து இயக்குநர் ஷங்கர் வெளியே வர வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்.
Butterfly Effect என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு (பட்டாம்பூச்சி விளைவு). எங்கேயோ நடக்கும் ஏதோ ஒன்று, இங்கே நடக்கும் ஒரு நிகழ்வை மாற்றக்கூடியது. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறுவர்கள் எங்கோ வீசும் உடைந்த டிவி, பெர்லின் (பக்ஸ்) தலையில் விழுவதைப்போல, ஒரு படத்தின் வெற்றியோ தோல்வியோ எங்கோ இருக்கும் ஒருவரைப் பாதிக்கவே செய்கிறது. அந்த வகையில் ‘ராசியில்லாத நடிகர்’ என முத்திரை குத்தப்பட்ட நடிகை ப்ரியா பவானி சங்கர்தான் இத்திரைப்படத்தின் தோல்விக்குக் காரணம் என தொடர்பே இல்லாமல் கேலியும் கிண்டலுமாக அவர்மீது மீம்களும் பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.
இது போல ‘ராசியற்றவர்’ என்று திரைக்கலைஞர் ஒருவர் குறிப்பிடப்படுவது தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. ப்ரியா பவானி சங்கருடன் ஏற்கனவே ‘யானை’ படத்தில் நடித்த அருண் விஜய்யும் முன்பு ராசியில்லாத நடிகர் என அறியப்பட்டவர் தான். நடிகர் விஜய் ஒரு பக்கம் ஷாஜகான் போன்ற படங்களில் நடிக்கும்போது அதற்கு இணையாக அவரும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனாலும், சரியான படங்கள் அமையாததால் பல ஆண்டுகளாக ராசியற்ற நாயகனாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு அஜீத்குமார் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மட்டுமே, அந்தப் பெயரை அகற்றினார். அப்படத்தின் ரசிகர்களுக்கான அதிகாலை காட்சியில், அவரது நடிப்பையும் கதாப்பாத்திரத்தையும் பாராட்டிய ரசிகர்களின் ஆராவரத்தைப் பார்த்த அருண் விஜய் ஆனந்தக்கண்ணீருடன் கிளம்பிய காட்சிகள் அப்போது பெரும் வைரலானது. சொல்லப்போனால், அத்திரைப்படத்தின் மூலமே தனது மறுபிரவேசத்தைக் கண்டார் அருண் விஜய். அத்துடன் சாந்தனு, கீர்த்தி சுரேஷ், இயக்குநர் நடிகர் ரமேஷ் கண்ணா, பூஜா ஹெக்டே என இப்பட்டியல் இன்னும் நீளும்.
இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்தின் நாயகன் விக்ரமும் ஒரு காலத்தில் ராசியற்ற நாயகனாக முத்திரை குத்தப்பட்டவர்தான். இதனால் சில காலம் டப்பிங் பேசும் கலைஞராகக்கூட பணியாற்றியிருக்கிறார். இவ்வளவு ஏன்! உச்சத்திலிருக்கும் நடிகர் விஜய்யின் துவக்க காலத்தில் அவரை விமர்சித்து “இந்த மூஞ்சியெல்லாம் காசு கொடுத்துப் பார்க்கணுமா” என அவதூறாகப் பேசிய அதே ஊடகம் தான், அவரின் வெற்றிப்படங்களுக்கு பிறகு அவரை அடுத்த சூப்பர்ஸ்டார் என துதி பாடியது.
வரும் காலங்களில் ப்ரியா பவானி சங்கரின் படங்கள் வெற்றி பெறும் வேளையில் அவரது அடுத்தடுத்த திரைப்படங்களைத் தயாரிக்கும், விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ‘ராசியில்லாத நடிகை’ என்று முன்பு அவர்களே சொன்னது கூட நினைவில் இருக்காது. அவர்களைப் பொறுத்தவரை திரைக்கலைஞர்கள் ஒரு பந்தயக்குதிரை. அவர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுக்கும் வேளையில் “அண்ணே… நாகராஜ் அண்ணே” என்று கட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதியைப்போல பழசையெல்லாம் மறந்துவிட்டு அவர்களைப் பெருமை பேசத்துவங்கிவிடும். இவ்வளவு தான் இந்த உலகம்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் திரைத்துறையில் பெண்களுக்கான ‘நேர்மையான’ முன்னேற்றம் என்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. பேட்டிகளில் சொல்லாத பல இன்னல்களை, பாலியல் சீண்டல்களை நடிகைகள் ஒவ்வொரு அடுக்குகளிலும் இன்னமும் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, இது போன்ற மலினமான பேச்சுக்கள் மேலும் கலைஞர்களை எந்தளவு காயப்படுத்தும் என்பதையும் பார்வையாளர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். “நாங்களும் மனுஷங்கதானே. எங்களுக்கும் கஷ்டமா இருக்கும்னு உங்களுக்கு ஏன் தோன மாட்டேங்குது” என்று சொல்லுகையில், எத்தனை மனவேதனையுடன் ப்ரியா பவானி சங்கர் சொல்லியிருப்பார் என்பதை உணர முடிகிறது.
பேனர் வைத்துப் பாலூற்றிக் கொண்டாடுவதில் எல்லை மீறும் இதே ரசிகர் பட்டாளம், அவர்களை மலினப்படுத்துவதிலும் எல்லை மீறுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. “ஏண்டா! உள்ளுக்குள்ள 750 உதிரி பாகங்கள் இருக்கு. அதில் ஓடாத வண்டியா இந்த ஒரு எலும்பிச்சம்பழத்தில் ஓடிறப்போகுது?” என்று விவேக் சொல்வது போல, பல்வேறு காரணங்களுக்காக விமர்சங்களுக்கு உள்ளாகும் ஒரு திரைப்படத்தின் தோல்விக்கு தனி ஒருவர் மீது ராசியில்லை என்று பழிபோடுவது அபத்தத்தின் உச்சம். அந்த வகையில் நம் சமுதாயம் இன்னும் மேம்படைய செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று இதன்மூலம் தெளிவாகத்தெரிகிறது.
கல்லெறிய விரும்புகிறவர்களுக்கு: goodbadeditor@gmail.com