மக்களாட்சியின் இன்றியமையாத தேவை அரசியல் கருத்துநிலை சார்ந்த கட்சிகள். அனைவருக்கும் வாக்குரிமை எனும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படை நோக்கம், மக்கள் அனைவரும் பங்கு பெறுவது என்பதே. எப்படி வாக்களிப்பது என்பதே ஒரு அரசியல் செயல்பாடோ அதையொத்ததே அனைவரும் அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படும் உரிமை. இந்தியா போன்ற பன்மைத்துவ மத, மொழி, இன, கலாச்சார வேறுபாடுகள் கொண்ட நாட்டில் மக்களாட்சி தழைத்தோங்க , அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும் வரையறைகுட்பட்டு செயல்படும் பலதரப்பட்ட கட்சிகள் உறுதியாகத் தேவை. இன, மத, மொழி, கலாச்சார, வட்டார நலன் கருதிய அமைப்புகள் அரசியல் கட்சிகளாக இயங்குவது உரிமையே. தேசம், தேசியம் பேசும் கட்சிகளே உன்னதமானவை, மாநில நலனை, உரிமையை முன்னெடுப்பவை பிற்போக்கானவை என்ற பார்வையே மக்களாட்சியின் மாண்பு குறித்த அறியாமைப் பிதற்றல். உன்னத தேசியம் குறித்த உச்சாடனம் எப்படி கடந்த பத்து ஆண்டுகால பாஜக வின் பாசிச ஆட்சியில் ‘ ஒற்றை கட்சி ‘ எனும் மக்களாட்சியை குழிதோண்டிப் புதைக்கும் போக்கிற்கு வேகமாக இட்டுச் சென்றது என்பதைக் கண்கூடாகக் காண நேர்ந்தது. செத்துப் போக மறுத்த மக்களாட்சி குறித்த அக்கறையே ” குஜராத் மூலதன நலன் ‘ எனும் ஒற்றை லட்சிய மோடி கட்சியை தடுத்து நிறுத்தியது என்பதே அதன் சிறப்பு. அரசின் அத்தனை ஆட்சி அமைப்புகளும் ‘ இருவரின் ‘ கண்ணசைவிற்குக் கட்டுப்பட்டு செயல்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி என்பதே கொடுங்கனவாக மாறிய போது, மக்களாட்சியின் ‘ அனைவருக்கும் வாக்கு’ எனும் உரிமையே நம்மைக் காத்தது. பலவிதமான கொள்கை அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து இயங்கியவர்கள் ‘ ஒற்றை கட்சி தேசியவாதம் ‘ குறித்த ஆபத்தை உணர்ந்து இணைந்ததன் விளைவே இன்று இந்தியா எனும் நாட்டினை அதன் அழிவிழிருந்து ஓரளவு காத்திருக்கிறது.
அரசியல் கட்சிகளும் பங்கேற்பும் , ஆர் எஸ் எஸ் ஆபத்தும்
அரசியல் கட்சிகளில் நேரடியாகப் பங்கேற்கும் உரிமை , ஒன்றிய, மாநில அரசு மற்றும் முழுமையான அரசு சார் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்வோருக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது இப்போது அதிலும் ஒரு சதி வேலை அரங்கேறியுள்ளது. இந்திய விடுதலைப் பின் மூன்று முறை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்ட இயக்கமான ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் இந்துத்துவப் பாசிசவாத துணை அமைப்புகளில் அரசு ஊழியர்கள் இணைந்து செயல்படலாம் என்ற உரிமையை மோடியின் அரசு வழங்கியிருக்கிறது. அந்த அமைப்பு முதன் முதலாகத் தடை செய்யப்பட்டது , இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே , அந்த நச்சு இயக்கத்தின் கொள்கைப் பிணியால் பீடிக்கப்பட்டே அந்த பயங்கரத்தை அரங்கேற்றினான் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேதான் 1948 ஆம் ஆண்டில் அன்றைய துணைத் தலையமைச்சர் சர்தார் பட்டேல் அவர்களால் இடப்பட்ட ஆணை அது. அதன் பின்னர் பல அரசியல் சூழல்களில் ஆர் எஸ் எஸ் மீதான தடை நீக்கப்பட்ட போதும், அரசு ஊழியர் நேரடியாகப் பங்கேற்கும் ரத்னக் கம்பளம் ஒருபோதும் விரிக்கப்படவில்லை.
ஏற்கனவே ஜாதியவாத, மதவாதப் பிணியுற்ற இந்திய சமூகத்தில் பிறந்து வளரும் மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த நோய்க்கூறிற்கு ஆளானவர்களே. அரசு ஊழியர்களும் அவர்களிலிருந்து வரும் தொகுதிதான். அவர்களில் 90 விழுக்காடு இந்தச் சார்பு மனம் கொண்டவர்களே. அந்த நோயுற்ற தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ள ‘ அனுமதி ‘ என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ரகசியம் இல்லை. இந்தத் தடையின் எல்லைக்கு அப்பால் இருக்கும் / இயங்கும் ‘ பிராமண சங்கங்கத்தில் ‘ சாஸ்திர சம்பிரதாய சனாதன வர்ண உன்னதம் பேசும் நீதியரசர்களால் நிறைந்துள்ளது இந்திய நீதித்துறை. இனி, நேரடியாக ஆர் எஸ் எஸ் மாநாட்டில் மகாகனம் பொருந்திய நீதிமான்களோடு, ஒன்றிய அரசின் கேபினட் செயலர்களும் ‘ பாரதம் ஹிந்து தர்மத்தினைக் காக்கும் புண்ய பூமி’ எனப் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு ஏராளம்.
எதிர்க்கட்சிகளும் எதிரிக்கட்சியும்
தேசியவாத உன்னதம் ஒன்றை முற்றாக மறுதழித்து விடுகிறது. மொழி, இனக் கலாச்சாரப் பன்மைத்துவத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்தியா எனும் நாடு அதன் பல்வேறு மொழிவழி மாநிலங்களிலேயே அசலாக உயிர்ப்புக் கொள்கிறது என்பதே அது. மாநிலங்கள் இன்றி இந்திய நாடு இருப்புக் கொள்ள முடியாது. மக்கள் தொகுப்பின் இறையாண்மை கொண்ட நாடு என்பதே ஆங்கிலத்தில் ‘ ஸ்டேட் ( STATE ) ‘ என்றே அழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், இந்தியா எனும் பாரதம் மாநிலங்களின் கூட்டமைப்பே ( UNION OF STATES ). அது அரைக் கூட்டாட்சியா( QUASI FEDERAL ) அல்லது முழுமையான கூட்டாசியா ( FEDERAL) என்பது அடுத்தது. இந்தியா ஒரு ‘ ஒற்றை மைய ஆட்சி ( UNITARY STATE )‘ கொண்ட தேசம் என்று அரசியலமைப்புச் சட்டம் எங்கேயும் சொல்லவில்லை. எனவே மாநிலங்கள் இன்றி இந்தியா என்ற நாடு இருக்க முடியாது.
இன்று ‘ ஒன்றியம் ‘ என்பதே தேச விரோதக் குரலாகக் கருதப்படும் காலம். ஒன்றியம், ‘ ஒற்றை’ தேசமாகி மாநிலங்களின் இறையாண்மையை / இருப்பை இல்லாமலாக்கி விடுவதன் மூலமே ‘ பாரதம்’ ( இந்தியா இல்லை ) தனது முழுமை பெறும் எனும் பாசிசம் அது. இதை ஏன் பாசிசம் என்கிறோம் என்பது ரகசியமில்லை. பன்மைத்துவத்தின் இருப்பை இல்லாமலாக்கி, இல்லாத ‘ ஒரு மொழி, ஒரு மதம் ஒரு தேசம்’ என்பதை மெய்யாக்கி விடத் துடிப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்ள முடியும். இந்த பன்மைத்துவ அழித்தொழிப்பின் வழியாகவே பாரதம் மாபெரும் பொருளாதார, படைபல போர் வலிமை கொண்ட வல்லரசு ஆக முடியுமென்ற கற்பனை வேகமாக பாசிச பாஜக அரசால் வலியுறுத்தப்பட்டது. அந்தப் போக்கு ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ‘ கட்சிகள்’ அவற்றின் கோட்பாட்டுத் தளங்கள் குறித்த ஒரு மாற்றுப் பார்வை உதவுமா எனப் பரிசிலிக்க எண்ணுகிறேன்.
இங்கு முதலில் எது எதிரிக்கட்சி எனவும் , அதனை ஏன் எதிரிக்கட்சி எனச் சொல்ல முயல்கிறேன் என்பதையும் பார்க்கலாம். மக்கள் தொகுப்பின் அடிப்படையே ‘ நாடு ‘ என்ற அரசியலமைப்பிற்கு இறையாண்மை எனும் உயிர்ப்பை வழங்குகிறது எனக் கண்டோம். ஒன்றியத்திற்கென்று தனித்த இறையாண்மைப் பண்பை வழங்கும் மக்கள் தொகுப்பொன்று எங்கும் இல்லை. ஒன்றியப் பகுதிகளின் ( UNION TERRITORIES ) மக்கள் கூட அந்தந்தப் பகுதிகளின் ஆட்சி அலகிற்கு ( ADMINISTRATIVE UNITS ) உட்பட்டவர்களே. பல ஒன்றியப் பகுதிகள் தனியான சட்டசபையுடன் கூடிய ஆட்சி வடிவம் கொண்டவைகளே. எனவே இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை மிக்க மக்கள் தொகுதி மாநிலங்களின் மக்களேதான். எனவே மாநிலங்கள் என்ற அமைப்பை அழித்தொழித்து விட முனைந்து நிற்கும் பாஜக வையே ‘ எதிரிக்கட்சி’ என்கிறேன்.
ஏன் பாஜக ‘ எதிரிக்கட்சி’ ? தேசம் என்ற கோட்பாட்டு மகிமையே அடிப்படையில் ‘ எதிரி ‘ , ‘ நண்பன் ‘ என்ற அடிப்படையில் கட்டமைகிறது. இந்தியா உருவாவதற்கு முன்பே ஹிந்து ராஷ்ட்ரம் பேசியவர்களான சாவர்க்கர், கோல்வாக்கர் போன்றோரின் ‘ ஹிந்து மேலாண்மைவாத’ கொள்கை வழிப்பட்டது பாஜக என்பது அறிந்ததே. அவர்களது ‘ ஹிந்து அகண்ட பாரதம் ‘ எனும் கற்பனையே இங்கு இப்போது இந்திய துணைக்கண்டம் ஆறேழு நாடுகளாகப் பிரிந்து போனதற்கு மூல காரணம் எனலாம். 1857 ஆம் ஆண்டில் உருவான பிரிட்டிஷ் இந்தியா எனும் நிலப்பரப்பு இன்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூடான் ஆகியுள்ளதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணம், சாவர்க்கர் உள்ளிட்ட ஹிந்து ராஷ்ட்ரக்காரர்களின் பெரும் நிலப்பரப்பை, ஒரு போதும் ஒற்றை நாடாக இருந்திராத நிலத்துண்டை ‘ ஹிந்து புண்ய பூமி ‘ ஆகக் கற்பிதம் செய்ய முனைந்ததுமே.
இந்த மதவாத மேலாண்மை வாதம் உடனடியான ‘ எதிரிகளாக’ இஸ்லாமியரைக் காட்டி கட்டியெழுப்பப்பட்டது. ஹிந்து ராஷ்ட்ரக் கனவு, இந்தியத் துணைக் கண்ட வரலாற்றினை எளிதாக இஸ்லாமியர் ஆக்கிரமிப்பு என்ற ஒரு புள்ளியில் உருவாக்கியது, ஒரு பரந்த நிலப்பரப்பில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த இனங்களின் வருகையையும் , மேலாதிக்கத்தையும், அதனைத் தொடர மக்களை பிளவு படுத்தி வர்ண/ ஜாதிய படிநிலைச் சமூகமாக மாற்றியதை மறைக்க ஒளிக்க, ஹிந்து எனும் ‘ஒருமைவாத’ மேலாண்மை , பொது எதிரியைக் கட்டமைக்க ‘ இஸ்லாமியர் வருகையை’ ஆக்கிரமிப்பாகக் காட்டியது. ஏற்கனவே இனக்குழுக்களாக வந்து குடியேறி ஆதிக்கம் செலுத்தி, பூர்வகுடிகளை விளிம்பிற்குத் தள்ளியவர்களான வேத ஆரியமத ஆதிக்கவாதிகள் , இறுதியாக வந்து இங்கு முடியாட்சி நடத்தி சமூக இருப்பில் கலந்து விட்டவர்களை ‘ எதிரிகளாகக்’ கட்டமைத்தனர். அதுவரை முடியாட்சி நடத்திய குப்தர்கள், மௌரியர்கள், ஹர்ஷர்கள் புனித ஆட்சி நடத்தியதாகப் புளுகினர் ஆரியர். ஏனெனில் பார்ப்பன சாணக்கியன் ராஜரீக ஆலோசனைகள் ‘ ஆட்சி’ நடத்தின என்பது கருதியே. அது மட்டுமில்லை, ஒருநிலையில் தங்களது நாகரீக சமூகத்திற்கு முந்தைய பழைமையின் முடை நாற்றம் வீசிய தங்களது வேதங்களின் போதாமையை உணர்ந்தனர் ஆரியர். விளைவாக ஆரிய வேத மதமும், அவர்களது மொழியும் இங்கு ஏற்கனவே இருப்புக் கொண்டிருந்த மக்கள் சமத்துவமும், மேல் கீழ் பிரிவினையையும் மறுத்த சமண , பௌத்த சிந்தனைகளின் சாரத்தை களவாடி தங்களது ஆக்கியதோடு, அதனையே வர்ண பேதம் கற்பித்த தங்களது ஆரிய சனாதன தர்மம் எனவும் பேசினர். உழைப்பை மறுத்து, விலக்கி வைத்த மேலாதிக்கவாதம், ஆங்கிலேயே அறைகுறைப் புரிதல் கட்டமைத்துக் கொடுத்த ‘ ஹிந்து ‘ எனும் அடையாள மதத்தை ஏந்திப் பிடித்தனர். இங்கே நிலவிய பல்லாயிரம் மத சிந்தனைகளின் தத்துவ/ கோட்பாட்டு முரண்களை மூடாக்குப் போட்டு மூடிய ’ ஹிந்து’ அவர்களது வேதமதத்தின் புதிய முகமூடி ஆனது. ஆனால் அதுவரையாக ஆரிய நலன் பேண உருவாக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையை தத்துவப் பிதற்றல்களால் நிரவி, ஹிந்துவின் ஆதாரமும் ஆக்கினர். அதனை சனாதன தர்மம் எனும் தங்கள் பூர்வ பழைமைவாத மதமே எனவும் நிறுவ முனைந்தனர். சமூகப் பொருளாதார சமத்துவமின்மை அவர்களது சதியை எளிதாக்கியது. ஆரியப் பார்ப்பன வேதமதம் ஹிந்து சனாதன தர்மமாகியதை எளிதாக்கி இன்னொரு மிக முக்கியமான கூறு, தொடர்ந்து முடியாட்சிகளிலும், கொடிய மக்கள் விரோத ஆட்சிகளிலிலும் ஆட்சியாளர்களின் அராஜகத்தை ‘ நீதியென’ புரட்டல் பேசும் நிலையை அவர்கள் தக்க வைத்துக் கொண்டதே.
அதன் உடனடியான கோட்பாட்டு சட்டகமான ‘ எதிரி’ – ‘நண்பன்” எனும் சிடுக்கினில் சிக்காதவர்களை/ஏற்காதவர்களையும் எளிதாக ஏமாற்றியது. ’ராமராஜ்யம்’ எனும் மகா உன்னத ஆட்சி வடிவை கட்டமைக்க முனைந்த காந்தியார், இந்த இஸ்லாமிய ‘ எதிரி’ என்பதை ஏற்றவரில்லைதான், ஆனால் ராமராஜ்யத்தில் அதன் ஆட்சியில், சமூகத்தில் நிலவி வரும் அசமத்துவத்தை உறுதி செய்யும் வர்ணாஸ்ரமம் எனும் ஏற்பாடு பயனுள்ள கருவியாக இருக்கும் எனும் குழப்பத்திற்கு ஆட்பட்டார் என்பதை எப்படி மறுக்க முடியும். ஒருவகையில் அவரது ‘ ராமராஜ்யக் கற்பனையும்’ இந்தப் பிளவுவாத தேசம், தேசியம், தேசாபிமானம் எனும் நச்சுப் பொருண்மைக்கு துணை போனது . இந்த ஏமாற்றினைச் சாத்தியமாக்கியாக்கியது ‘ ஹிந்து தேசியம் ‘ என்ற உன்னத மயக்கமே. அந்த விபரீதக் கற்பனை ‘ பாகிஸ்தானை’ உருவாக்கி முடித்தது என்பதை தேசியவாதிகள் மறந்து போனார்கள்.
அவ்வளவு ஏன் ? 1946 ஆம் ஆண்டில் உருவான இந்திய விடுதலை ஒப்பந்தம், இந்தியா- பாகிஸ்தான் எனும் இருநாடுகள் கொள்கையைக் கொண்டதில்லை என்பதையே பலரும் மறந்து போய் விட்டார்கள். மொழி/ வட்டாரவழி வலுவான மாநில அரசுகளையும், ஐந்து ஒருங்கிணைக்கும் பிரதான பிரதேச அரசுகளையும், ஒன்றிய அளவில் பாதுகாப்பு, அயலுறவு , ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வெகுசில துறைகள் கொண்ட அரசே திட்டமிடப்பட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஜின்னா பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை தள்ளி வைத்தார். விடுதலையடையும் இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நடத்தப்பட்ட தேர்தலில் காங்கிரசும், முஸ்லீம் லீகும் பங்கேற்றன. காங்கிரஸ் பெரும்பான்மையான எண்ணிக்கையிலும், முஸ்லீம் லீக் கனிசமான எண்ணிக்கையுடனும் வென்றனர். இந்த ஒப்பந்தம் தடம் புரண்டதற்கான காரணம் மதசார்பின்மைக் கொள்கையிலும், மதவாத சிந்தனையிலும் சிக்குறாத ஜவஹர்லால் நேரு என்பதுதான் சோகம். அவருக்கு தேசம் என்ற கொள்கையில் மதவாதப் பிளவு முன்னுரிமை பெறவில்லை எனினும் ‘ வலுவான ஒன்றிய அரசு ‘ கொண்ட ‘ தேசம் ‘ என்பதில் பெருவிருப்பம் இருந்தது. அவர் ஹிந்து தேசத்தை உருவாக்க முனையவில்லை எனினும் ‘ வலுவான மத்திய அரசு ‘ கொண்ட ‘ தேசம்’ என்ற கற்பனை/ ஆவல் / விருப்பு நேரு அவர்களை உந்தியது , அதன் கொடும் விளைவாக இரண்டு தேசம் எனும் உருவாக்கத்திற்குத் தள்ளியது. இஸ்லாமிய பாகிஸ்தான் உருவாக்கம் நிகழ நேரு அவர்கள் காரணமானார் என்பதை எப்படி மறுக்க முடியும்.
இரண்டு நாடுகள் உருவாக்கம், இறுதியாக இஸ்லாமிய பாகிஸ்தானுக்கெதிராக ஒரு ‘ இந்தியா’ எனும் நாடு உருவான போது, அதனை ‘ ஹிந்து நாடு’ என அறிவிக்கவில்லை. ஆனாலும் ‘ தேசம்’ அதிலும் ‘ வலுவான தேசம் ‘ எனும் கற்பனை அதன் இன்றியமையாத கருத்தாக்கமான ‘ எதிரி ‘ என்ற தேவையை நிராகரிக்க முடியவில்லை . அதிலும் பாகிஸ்தான் தன்னை அதிகாரப்பூர்வமாக இஸ்லாமிய நாடாக அறிவித்த பின் அதனை ‘ எதிரியாகக்’ கொண்டு உருவான இந்தியா , அதன் இருப்பில் ‘ஹிந்து’ அடையாளத்தைக் காவியதைத் தவிர்க்க முடியவில்லை. தேசியத்திற்கான பெரும் பலி. அரசியலமைப்புச் சட்டம் அப்படி உச்சரிக்கவில்லை எனினும் ‘ இந்தியா எனும் பாரதம் ‘ அதன் உள்ளீடாக ஹிந்து எனும் பெரும்பான்மை மதத்தை ரகசியமாக உச்சரித்தது. அதுவரை ‘தேசம்’ எனும் சிந்தனையின் பகுதியாக ஒலித்திராத ‘ பாரதம்’ இந்திய அரசியலமைப்புச் சட்டகத்தில் இடம் பிடித்தது. ஹிந்துக்கள் எனும் மக்கள் தொகுப்பை அடையாளங்காண , ‘ யாரெல்லாம் இஸ்லாமியர், கிறித்தவர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள்’ இல்லையோ அவர்கள் எல்லாம் ‘ ஹிந்துக்கள்’ என்றதம் மூலம் அரசியலமைப்புச் சட்டம் பெரும் மக்கள் தொகுப்பை ‘ ஹிந்துக்கள்’ ஆக்கி முடித்தது. இந்திய மக்கள் தொகுப்பின் மதப் பன்மைத்துவம் ‘ தேசம் ‘ எனும் கற்பிதத்தின் பலியானது. ஹிந்து ராஷ்ட்ரக்காரர்களை விட எளிதாக அவர்கள் பணியைச் செய்து முடித்தது இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம். அதன் கெடுவிளைவே 2014- 2024 ஆட்சிக்காலத்தில் இந்தியாவை ‘ பாரத்’ என்று மட்டும் விளித்து , குஜராத பனியா நலன் பேணும் பார்பனிய ’பாரத்’ ஐ உருவாக்கும் முனைப்பின் தீவிரம் உச்சமடைந்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட ‘ தேசியக் கட்சிகளின் ‘ உருமாற்றம்
தற்போது இந்தியாவில் ஒரே ஒரு தேசியக் கட்சிதான் ‘ தேசியம்’ எனும் பிணியால் பீடிக்கப்பட்டுள்ளது. அது பாசிச பாஜக. பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவரே இல்லாமல் இருந்த நாடாளுமன்றத்தில் காங்கிரசே தேசிய அடையாளமிழந்தது. அது தவிர்த்த பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் இருப்பின் அடையாளத்தையே தொலைத்து விட்டனர். ஹிந்து பெருந்தேசியத்தின் முன்னால் பிற தேசியவாதங்கள் தங்கள் இருப்பிற்கான நியாயத்தை தொலைத்து விட்டன. இப்போதும் புதிதாக தேசிய அடையாளத்தை காவும் மம்தா அவர்களின் திரினமுல் காங்கிர்ஸ் , ஆம் ஆத்மி போன்றவை தெளிவாக தங்களது தேசியவாதத்தை அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பாஜக வின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கும் வரை பெரும்பாலும் பாஜக வின் காஷ்மீர்/ இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளில் பாஜக வுடன் துணை போனவர் அர்விந்த் கேஜ்ரிவால் என்பதை மறப்பதற்கில்லை. மம்தா பேனர்ஜி அவர்களின் மதவாத நிலைப்பாடு, இஸ்லாமிய ஆதரவு என்ற வரையில் சரியாகவும் , ஹிந்து/ சனாதனம்/ பார்ப்பனியம் எனும் நிலைப்பாடுகளில் ஹிந்துமத நம்பிக்கைவாதம் கொண்டவராகவே தெரிகிறார். இவர்கள் தவிர்த்த தேசியவாத ஆர்வம் கொண்டவர்கள் தேசியக் கட்சி அங்கீகாரத்தையே இழந்து போனார்கள்.
இந்த நிலையில் ராகுல் அவர்கள் செயல்பாடுகளில் ,தலைமையேற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேசியவாதக் கோட்பாடுகளில் உருவாகியிருக்கும் உருமாற்றம் மிகுந்த ஆர்வமூட்டுவதாய் உள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு தேசியக் கட்சியின் கூட்டாட்சி சிந்தனை எனும் புதிய திறப்பை உருவாக்கியுள்ளது. இது பொதுவுடைமைக் கட்சிகள் கூடச் செய்யத் தவறியது எனவே கருதுகிறேன். இதுவரை மாநிலங்களின் உரிமைக் குரல் வேறு, ஒன்றியத்தின் உன்னத லட்சியம் வேறு என்ற நிலையைத் தகர்த்து விட்டது இந்தத் தேர்தல் அறிக்கை. பார்ப்பனர் அதிகார மேலாதிக்கம், பனியா மூலதன நலன், சாதிவாரிக் கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு கொள்கை என ‘ தேசியவாதம் ‘ புறந்தள்ள தயங்காத கொள்கை நிலைப்பாடுகளைப் பேசுகிறார் ராகுல். இதெல்லாம் இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியும் பேசத் தவிர்த்தவை என்பது கவனத்திற்குரியது. மாநிலங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி ஒன்றிய அரசினை ஒற்றை ஆதிக்க அரசாக மாற்றும் முயற்சியில் காங்கிரஸ்தான் முன்னோடி என்பதை யாரால் மறுக்க முடியும். தேசியவாதம் என்பதே கூட்டாட்சி எனும் கோட்பாட்டைத் தகர்ப்பது என்பதை அவர்களே முதலில் செய்தனர். ஆனால் அதன் பாசிச பயங்கரத்தை, அரசு சார் அமைப்புகளின் தன்னாட்சி நிலையை வேறோடு சாய்த்து ஒழித்து விட முடியுமென்று மோடி , அமீத் ஷா எனும் குஜராத் குற்றக் குழுமக் கையாட்கள் கண்முன் செயல்படுத்திய போதுதான் ‘ தேசியவாதத்தின் ‘ கோர முகம் அம்பலமானது. அவர்கள் ‘ எதிரிகளை’ உள்ளூரிலும், இஸ்லாமியரையும், அவர்களை எதிர்க்கத் துணியும் எவரையும் அழித்தொழிக்கும் வேலை செய்த போதுதான் அச்சம் தோன்றியது. அச்சம் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கும் கட்சிகளுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் , தாழ்பணிந்த கட்சிகளுக்கும் தோன்றியது. இவர்களின் ‘ ஒற்றை தேசம்- ஒற்றை அரசு – ஒற்றை கட்சி “ எனும் ‘ஒற்றையே’ கட்சிகளின் தேசியவாதக் கனவிலிருந்து முரட்டுத் தனமாகத் தட்டி எழுப்பியது.
ஆம், ராகுல் அவர்கள் முன் வைக்கும் நிலைப்பாடுகள் தேசியவாதத்தை அதன் புனித நிலையிலிருந்து தடம் புரளச் செய்து விட்டிருக்கிறது. மாநிலங்களின் மக்கள் நலத் திட்டங்களன்றி ஒன்றிய அரசின் முலதன முதலைகளின் வளம் பேணும் கொள்ளைகள் ஒழிய வேண்டுமென்ற நிலைப்பாடும், மதசார்பின்மை என்பது மத நம்பிக்கைகளின் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பது என்ற நிலைப்பாடு வரவேற்பிற்குரியது. மக்கள் இறையாண்மை மிக்க மாநிலங்களின் உரிமை முன்னுரிமை பெறுவதே மக்கள் மைய அரசியலின் அக்கறையாக இருக்க முடியும் எனும் புதிய தேசியவாதப் பார்வை இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தேசியம் பாசிசமாகும் பயங்கரத்தை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும்.