சின்னமலையின் அசாத்திய திறமையின் மீது ஹைவேவிஸ் ஆட்களுக்குப் பிரமிப்பு இருந்த அதேவேளையில், அவனது விநோதமான செய்கை ஒன்றின் காரணமாக ஆழமான வருத்தமும் இருந்தது. குறிப்பாக அவனுடைய அம்மா செல்லத்தாய் அச்செயலை அடியாழத்தில் இருந்து வெறுக்கவும் செய்தாள். செல்லத்தாய் ஹைவேவிஸிற்கு கீழே இருக்கிற சமவெளிப் பகுதியில் இருந்து, மேலே மலையில் இருக்கிற தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த, சின்னமலையின் அப்பாவான செங்குட்டுவனைக் கல்யாணம் செய்துகொண்டு வந்தாள்.
எடுத்த எடுப்பில் மலைவாசம் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எந்த நேரமும் பனிமூட்டம் மலையைப் புதுப் புருஷன் கணக்காய்த் தழுவிக் கொண்டே இருப்பதைப் பார்த்தும் அவளுக்கு எரிச்சல். காலையொன்று மாலை மற்றொன்று என இரண்டு பேருந்து சேவைகள் மட்டுமே இருந்தன மலைக்கு அப்போதெல்லாம். அதிகாலையில் கல்யாணம் முடித்த புதுப் பெண்ணாய் செல்லத்தாய் வந்திறங்கியவுடனேயே தரையில் குத்தவைத்து அமர்ந்து வாந்தி எடுத்தாள். வயிற்றில் இருக்கிற குடல் குந்தாணி எல்லாம் வெளியே வந்துவிடுகிற அளவிற்கு உக்கிரமான வாந்தி. அந்த மண் முதலில் அவளிடமிருந்து அதைத்தான் வாங்கியது.
உடன்வந்த சொந்தங்கள் விக்கித்துப் போய் நின்று விட்டனர். அச்சமயம் புதுக் கல்யாண ஜோடிகளைப் பார்ப்பதற்காக வந்து நின்ற ஊர்க்காரர்களுக்குமே அக்காட்சி பலவித எண்ணங்களை உண்டு பண்ணியது. “இவம் எந்த நேரமும் இந்த தேயிலைத் தூரைத்தானே கட்டிப்பிடிச்சுக்கிட்டு படுத்துக் கிடந்தான். பெறகு எப்படி கீழே போயி ஒரு புள்ளையை மசக்கையாக்குனான்? இல்ல ஏற்கனவே மசக்கையா இருந்த பிள்ளையை நகை நட்டுக்கு ஆசைப்பட்டு கட்டிக் கூப்டுட்டு வந்துட்டானா?” எனக் குசுகுசுவெனப் பேசிக் கொண்டனர். செங்குட்டுவனின் சொந்தங்களுமே அதுசம்பந்தமாய் அவனைப் பார்வையாலே பிடிபிடியெனப் பிடித்துக் கொண்டார்கள்.
எல்லோரது தலையிலும் அடித்துச் சத்தியம் பண்ணாத குறையாகத் தன்னுடைய நல்லொழுக்கம் குறித்து நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. பிறகு செங்குட்டுவன் சத்தியம் பண்ணினாலும் ஊர் அரைகுறையாகத்தான் அவனது வார்த்தைகளை எடுத்துக் கொண்டது. சந்தேகத்தின் பலன் என்பது அந்த மலைமேகத்தைப் போல எல்லோருக்குள்ளும் படர்ந்தபடிதான் இருந்தது. முதலிரவு என நடக்கவேண்டிய அந்த ஒன்று அதற்கடுத்து பலநாட்கள் நடக்கவேயில்லை. ஏனெனில் செல்லத்தாய் அந்த மலைக் காற்று ஒத்துக் கொள்ளாமல் வாந்தியும் கையுமாகவே அலைந்தாள். ஒருகட்டத்தில் அவளைக் கீழே போய் விட்டுவிட்டு வந்துவிடலாமா எனக்கூட செங்குட்டுவனுக்குத் தோன்றியது.
குளிருக்கு இதமாகப் புதுப் பொண்டாட்டியைக் கட்டிப் பிடித்துக் கொள்ள இயலாத நிலையில் தவித்துக் கொண்டிருந்த செங்குட்டுவனை, ஊரின் மிக மூத்த மருத்துவரான மாதேஸ்வரன்தான் வந்து காப்பாற்றினார். விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்த அவர், வீட்டில் இருந்த கௌமாரியம்மன் படத்தைத் தொட்டு வணங்கி விட்டு செல்லத்தாயை அருகில் அழைத்துக் கிழக்குப் பார்த்துத் திரும்பி நின்று, கையில் இருந்த இலைகளைக் கொடுத்து மெல்லச் சொன்னார். அவளுமே தயங்காமல் வாங்கி மென்றாள். அப்போது, “அவ்வளவுதான் போ. இனிமே நீ இந்த மலையோட மகளாயிட்ட. இனி ஒரு காத்து கருப்பும் உன்னை அண்டாது. இந்த மலையே இனிமே உனக்குத்தான் சொந்தம். இனிமே நீதான் இந்த மலை” எனச் சொல்லிவிட்டு வந்த வேகத்தில் வெளியேறவும் செய்தார்.
அவரைப் பின்தொடர்ந்து ஓடினான் செங்குட்டுவன். அவனுக்கு அது என்ன இலை எனத் தெரிந்து கொள்ளக் குறுகுறுப்பு. ஓட்டமும் நடையுமாய்ப் போன அவரை மறித்து, “மாமா அது என்ன இலை? தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு” என்றான். அவனை ஏறிட்டுப் பார்த்த மாதேஸ்வரன், “உனக்கு எதுக்கு அது? பொதுவா மருத்துவம்ங்கறது உடம்புக்கு ரெண்டாவதுதான். மனசுக்குத்தான் முதல்ல. மருத்துவத்தையும் மந்திரத்தையும் ஆராயக்கூடாது. அதான் இந்த மலையையே உம்பொண்டாட்டிகிட்ட ஒப்படைச்சாச்சு இல்ல. இனிமே அவளுக்கு ஒண்ணும் நடக்காது போ. வழியை மறைச்சு நின்னு என் உசுரை எடுக்காத. போயி உண்மையாவே அவளை மசக்கை ஆக்குறதுக்கான வேலையப் பாரு” என்றார்.
செங்குட்டுவனுக்குக் கடைசியாய் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வெட்கமாகப் போய்விட்டது. உடனடியாகவே வீட்டிற்கு வந்து நோட்டம் பார்த்தான் மனைவியை. சொல்லிவைத்த மாதிரி அவளைப் பின்தொடர்ந்த அந்த வாந்தியும் மயக்கமும் நின்று விட்டது. அன்றைக்கு இரவு அவளாகவே தூங்கிக் கொண்டிருந்த அவன்மீது காலைத் தூக்கிப் போட்டாள். இருவரும் குளிருக்கு இதமாக நெருக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
செல்லத்தாய் அதற்கடுத்து அந்த மலைக்குத் தோதாக எல்லா விஷயங்களிலும் தன்னைத் தகவமைத்துக் கொண்டாள். அவள் மசக்கையான போதுகூட அவளுக்கு வாந்தியும் மயக்கமும் வரவில்லை. அவள் சொல்லித்தான் எல்லோருக்கும் அவள் கர்ப்பமாக இருக்கிற விஷயமே தெரியவந்தது. அவளுக்குப் பாம்பு வயிறு என்பதால் ஐந்தாம் மாதம்கூட மிகச் சாதாரணமாகத்தான் தோற்றத்தில் தென்பட்டாள். “இதென்ன கூத்தா இருக்குடா. மசக்கைன்னா ஒரு சொட்டாவது வாந்தி வரணும் இல்லையா? இவ என்ன புதுக் கதை சொல்றா. இல்லாட்டி இவ ஏற்கனவே கர்ப்பமாகி இருந்ததால அதுவந்துட்டு போயிருச்சா? பிள்ளை எத்தனையாவது மாசத்துல பொறக்குதுங்கறதை வச்சு கண்டுபிடிச்சிடலாம்” என்றெல்லாம் ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
கொஞ்சம் நகைநட்டுகளோடு மலைக்கு வந்த அவளை, கழுத்தில் சாயம் வெளுத்துப் போன வெறும் மஞ்சள் கயிற்றோடு அலையும் பெண்கள் அன்னியமாகத்தான் நடத்தினார்கள். அவர்கள் மெல்வதற்கு ராகி அவலைப் போலக் கருதி அவள் குறித்த புரணிகளை ஊர்முழுக்கப் பேசித் திரிந்தார்கள். செல்லத்தாயே அறிந்திராத அவள் குறித்த அநேக ரகசியங்கள் அந்தத் தேயிலைக் காட்டிற்குத் தெரியும் என்பதைப் போல. தேயிலைத் தூர்களினடியில் பதுங்கித் திரியும் ராஜநாகத்தைப் போல விஷம் தோய்ந்த கதைகளாகவும் அவை காலத்தால் மாறின.
அதனாலேயே வந்த கொஞ்சக் காலம் தன்னைச் சுற்றி இருப்பவர்களுடன் ஒட்டும் உறவுமில்லை என்பதைப் போலத் தன்னைச் சுருக்கிக் கொண்டாள் செல்லத்தாய். செங்குட்டுவனும் ஊரோடு அனுசரித்துப் போவது குறித்து அவளிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான். அந்த மாதிரியான பேச்சுக்களின் போதெல்லாம், “அவளுக எல்லாம் என் கெண்டைக்கால் மயித்துக்கு ஆவாள்களா? அவளுக எல்லாம் வெறும் வட்டில்ல மொகம் பார்க்குறவள்க. நான் இருந்த இடத்திலயும் சீரும் சிறப்புமாத்தான் இருந்தேன். இங்க வந்த எடத்திலயும் இந்த மலையே எனக்கு சொந்தம். வேறென்ன வேணும் எனக்கு?” எனச் சொல்லி செங்குட்டுவனின் வாயை அடைத்துவிடுவாள்.
வெறும்பேச்சுக்கெல்லாம் இந்த மலையே எனக்குச் சொந்தமென அவள் சொல்லவில்லை என்பதை செங்குட்டுவன் நன்றாக உணர்ந்து கொண்டான். ஏனெனில் அதைச் சொல்லும் போதெல்லாம், இரவில் மிளிரும் செந்நாயின் கண்களைப் போல அவளுடையது ஆகிவிடும். அந்நேரத்தில் மலைப் பேச்சியைப் போல உக்கிரமான தோற்றத்தில் தென்படுவாள். பதிலுக்கு வேறொன்றும் பேசாமல் செங்குட்டுவன் தப்பித்து ஓடிவிடுவான்.
மற்றவர்களிடம் இருந்து தனித்தலைந்த செல்லத்தாய், பிறகு அம்மலையே கதியெனக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். செங்குட்டுவனுக்கு முதலில் அவளது செய்கை ஆச்சரியத்தைத்தான் கிளப்பியது. அவள் அவ்வாறு தன்னை ஏமாற்றிக் கொண்டு அலைகிறாளோ என்றுமே தோன்றியது. பிறகு ஒரு சந்தர்ப்பத்தை நேரில் கண்டபிறகுதான் மலைக்கும் அவளுக்குமான பிடிப்பை உணர்ந்தான். ஒருவகையில் ஹைவேவிஸூமே அதற்குப் பிறகுதான் உணர்ந்தது.
செங்குட்டுவனும் செல்லத்தாயும் சமவெளிக்கு ஒரு துட்டிகாரியமாகப் போய்விட்டு கடைசிப் பேருந்தில் ஹைவேவிஸ் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். பேருந்தில் அவர்களைச் சேர்த்து இன்னும் இருபது பேர் வரைக்குமாக இருந்தார்கள். சிலுவை கோயில் முக்கு தாண்டியதும் வளைவில் அந்தப் பேருந்தை ஒரு ஓங்கலும் அதன் குட்டியும் மறித்துக் கொண்டு நின்றன.
மலை போல ஓங்கியுயர்ந்து வளர்ந்திருக்கிற யானையை ஓங்கல் என்றழைப்பார்கள். பேருந்தை ஒரு அடிகூட முன்னே நகரவிடாமல் நின்று கொண்டன இரண்டும். ஓங்கலின் கால் முட்டி அளவிற்கு வளர்ந்த அதன் குட்டி துறுதுறுவென தலையை ஆட்டிக் கொண்டே இருந்தது. பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியைத் தனது துதிக்கையால் ஓங்கல் வேகமாகத் தட்டியது. கண்ணாடியை உடைத்து விடுமோவென உள்ளே இருக்கிற ஜனங்கள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தபோது, சற்றும் யோசிக்காமல் செல்லத்தாய், யார் தடுத்தும் கேட்காமல் அந்தக் காரியத்தைச் செய்தாள். செங்குட்டுவனே அப்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு பேருந்தில் ஒடுங்கி அமர்ந்திருந்தான்.
காலடியில் இருந்த பூவன் வாழைத் தாரைக் கையில் தூக்கிய செல்லத்தாய் பேருந்தில் இருந்து விடுவிடுவென இறங்கினாள். அப்போது அவர்களது சொந்தக்கார முதியவள் ஒருத்தி, “அட என்ன அக்குருவமா இருக்கு. வயித்துப் புள்ளைத்தாச்சி செய்ற காரியமா இது? இவளுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சா. காட்டு யானைக நம்மளை வழி மறிக்கலாம். நாம போயி அதுக வழியை மறைக்கலாமா? ஆத்தா கௌமாரி வயித்துப் புள்ளைக்காரியைக் காப்பாத்துப்பா?” என எல்லோருக்கும் கேட்கும் விதமாக அரற்றினாள்.
இறங்கிப் போய் ஓங்கலின் முன்னே நின்ற செல்லத்தாய், “சாமி. உள்ள இருக்கறது எல்லாம் வகுத்துப்பாட்டுக்கு மலையேறின ஏழை ஜனங்க. உன்னை கெடுக்கிற நோக்கமே இல்லாதவங்க. நீதான் சாமின்னு நெனைக்கிற ஜனங்க. நீயே வழி மறிச்சா எப்படி? எங்களை முன்னேற விடணும்” எனச் சொல்லிவிட்டு அமர்ந்து தரையில் நெற்றியை வைத்து வணங்கினாள். எல்லோரும் ஈயத்தட்டு அளவிற்கு இருந்த அதன் பெரிய பாதத்தைத் தூக்கி அவளது தலையில் வைத்து நசுக்கி விடுமெனத்தான் எதிர்பார்த்தார்கள்.
மாறாக அவளது குரலைச் செவிமடுத்த ஓங்கல், தன் துதிக்கையால் செல்லத்தாயின் தலையை வருடியது. நிமிர்ந்து பார்த்த அவள் வாழைத் தாரை எடுத்து அதனிடம் கொடுத்தாள். ஓங்கல் அதை வாங்கி பழங்களை ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்த போது, அதன் குட்டி ஓடி வந்து செல்லத்தாயின் இடுப்பைக் கட்டிக் கொண்டது. அவளது புடவைத் தலைப்பை எடுத்து தனது தும்பிக்கையில் சுருட்டிக் கொண்டு விளையாடியது. அவளுமே அதன் துதிக்கையை, தலையை வருடிக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்த காட்சியைப் பேருந்தினுள் இருந்தவர்கள் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
“என்ன அதிசயமா இருக்கு? அவ குரலுக்கு ஓங்கலே கட்டுப்பட்டிருச்சு. அதோட குட்டி ஏதோ அவ பிள்ளை கணக்கால விளையாடிக்கிட்டு இருக்கு” என்றார் வயது முதிர்ந்தவர். நிதானமாக வாழைப் பழங்களைத் தின்று முடித்தபிறகு இரண்டும் காட்டிற்குள் இறங்கி ஓடின. அந்தக் குட்டி என்ன நினைத்ததோ, திரும்பவும் செல்லத்தாயை நோக்கி ஓடிவந்து அவளது கழுத்தைத் துதிக்கையால் கட்டிக் கொண்டபிறகு அவளது நிறைமாத வயிற்றைத் தடவியது. பின்னர் தன் தாயோடு மீண்டும் காடு புகுந்தது. அதற்குப் பிறகுதான், “இல்லப்பா அவ சொல்றது உண்மைதான். இந்தக் காட்டுக்குச் சொந்தக்காரி அவதான்” என ஜனங்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். புரணிகள் மட்டுப்பட்டு அவள் குறித்த பெருமைகளைத் தேயிலைக் காடுகள் பரப்ப ஆரம்பித்தன.
அந்தச் சம்பவம் நடந்து பத்துநாட்களுக்குப் பிறகு அவளுக்கு மகன் பிறந்தான். ஓங்கலைப் பெரிய மலையாகக் கருதிய அவள் தனது பிள்ளைக்குச் சின்னமலை என்று காரண காரியத்தோடு பெயரிட்டாள். அவனுக்கு ஐந்து வயது இருக்கையில், செங்குட்டுவன் மலேரியா கண்டு படுத்தபடுக்கையாய்க் கிடந்து செத்துப் போனான். தன்னுடைய இறுதியை உணர்ந்த போதுகூட, “வேண்டாம் செல்லத்தாயீ. கீழே இறங்கி போயி உன் வீட்டோட இரு. இந்தக் காடு வெலங்குகளுக்கான இடம். மனுஷங்களுக்கான எடமா ஒருபோதும் ஆக முடியாது. வீம்பு பண்ணாத” என்றான். ஒருவார்த்தைகூடப் பதில் பேசாமல் முடியாதெனத் தலையை ஆட்டினாள் செல்லத்தாய்.
செங்குட்டுவனுக்கு இறுதிக் காலத்திலுமே மூச்சு முட்டிவிட்டது. மலைமுகட்டில் தவழும் மேகங்களைப் போல நெஞ்சில் துக்கம் அடைத்துத்தான் செத்துப் போனான் செங்குட்டுவன். கீழே இருந்து வந்த செல்லத்தாயின் உறவினர்களுமே அவளை அழைத்துப் பார்த்தனர். அவள் முடிவில் உறுதியாக நின்று விட்டாள். போகும்போது அவளுடைய சித்தி, “பூர்வீகமா இருக்கற ஆளுகளே பிடிப்பில்லாம இருக்காங்க. இவ ஒண்டிக்க வந்தவ. என்னம்மோ அதுதான் கெதின்னு எந்த நம்பிக்கையில கட்டிப் பிடிச்சுக் கெடக்காளோ?” எனச் சொன்னாள்.
தன்முடிவில் தீர்மானமாய் இருந்த செல்லத்தாய்க்குக் கணவனுக்குப் பதிலாய் காடமன் தேயிலைத் தோட்டத்தில் வேலை போட்டுக் கொடுத்தார்கள். பெரும்பாலும் தோட்டத்தினுள் வழிதவறி நுழையும் விலங்குகளை அச்சமின்றி விரட்டுவதுதான் அவளுடைய வேலை. அவளுமே அவைகளோடு பேச்சுக்கொடுத்து அந்தப் பக்கமாய்த் தள்ளி விட்டுவிட்டு வருவாள். தேயிலைத் தூர்களினூடே ஒரு காட்டு மாட்டைப் போல சகஜமாக அலைந்து கொண்டிருந்தாள் செல்லத்தாய்.
சிலநேரங்களில் ஜனங்கள் அவள் தனித்து இருக்கையில் செந்நாய்கள்கூட அவள் அருகில் வந்து விளையாடுவதைக் கண்டார்கள். நான்கு செந்நாய்கள் சேர்ந்தால் ஒரு யானையையே மறித்துத் தாக்கி விடுகிற நிலையில், ஒடிசலான ஒரு உருவத்தோடு சிநேகம் கொள்வது அவர்களை எல்லாம் பொறுத்தவரை ஆச்சரியமான விஷயம்தான். மலையில் அவளொரு தெய்வப் பிறவி என்கிற மாதிரியான கருத்து உறுதிப்பட்டு விட்டது.
அவளுக்கு முதன்முதலாக இலையை மென்னக் கொடுத்த மாதேஸ்வரனிடம் கேட்ட போது, “நான் அன்னைக்கு சும்மாத்தான் உன் காடு அதுன்னு சொன்னேம்பா. அது வெறும் சவுரி இலை. பித்தம் நீங்கட்டும்னு கொடுத்தேன். மனசுக்கு எதமா இருக்கட்டும்னு கூடுதலா அந்த வார்த்தையை சொன்னேன். ஆனா பாரு பிடிச்சுக்கிட்டாளே அதை. சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க. ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை வெல்லும்ணு” என தூரத்து மலை முகட்டைப் பார்த்தபடியே சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டார்.
செல்லத்தாயின் மகன் சின்னமலைக்குச் சின்ன வயதில் இருந்தே அந்த அசாத்திய திறமை கிட்டி விட்டது. அவனால் எந்த மரத்திலும் விறுவிறுவென ஏறிவிட முடியும், அது வழுக்கு மரமாக இருந்தாலும்கூட. காட்டில் இருக்கிற உயரமான மரங்களின் உச்சி வரை ஏறுகிற அவனைப் பார்த்து, ஹைவேவிஸ் ஆட்களுக்கு ஆச்சரியம். “இவம் என்ன கருமந்தி கணக்கா ஒரு நிமிஷத்தில உச்சிக்கு ஏறிப் போயிடறானே? தாய் எட்டடி குட்டி பதினாறு அடின்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க. ரெண்டுமே காட்டுக்கு நேந்துவிட்டதுக” என்பார்கள். சிலர் அவ்வாறு அவனை மரமேற அனுமதிக்காதே, ஆபத்தானது அதுவெனச் செல்லத்தாயியிடம் சொல்லும் போது, “அதெல்லாம் இந்த மலை அவனை ஒண்ணும் பண்ணாது. அவம் வயித்துல இருக்கையில ஓங்கலையே நேருக்கு நேரா பார்த்தவன்” என்பாள் சிரித்தபடி. தலையில் அடித்துக் கொண்டு சொல்பவர்கள் கடந்து போய்விடுவார்கள்.
ஆனால் சின்னமலையின் இன்னொரு செய்கை ஹைவேவிஸ் ஆட்களுக்கு விநோதமாக இருந்தது. மரங்களின் உச்சிக்கு ஏறுகிற அவன் அங்கே பறவைகள் அடைகாத்து வைத்திருக்கிற முட்டைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்து கல்லில் வைத்து உடைப்பான். அதைக் குடித்துத் தொலைந்தாலாவது பரவாயில்லை. கற்களில் அதைத் தட்டி உடைப்பது அவனுக்கு ஒரு விளையாட்டைப் போலவே இருந்ததை ஹைவேவிஸ் ஆட்கள் பார்த்தார்கள்.
“அவம் அம்மாவுக்கு இது தெரிஞ்சா கொன்னே போடுவா. எப்படிப்பட்ட தாய்க்கு எப்பிடி பிள்ளை வந்து பொறந்திருக்கு பாரு” எனச் சொல்லி அவனது தலையில் கொட்டிவிட்டுச் செல்வார்கள். ஆனால் அதைத் தவறெனச் சின்னமலை உணரவே இல்லை. அவனுடைய செய்கை செல்லத்தாய்க்குமே தெரிய வந்தது. முதலில் அன்பாய்க் கூப்பிட்டுச் சொல்லிப் பார்த்தாள். பிறகு தேயிலை விளாறால் முதுகில் ரத்தக்கோடு வருகிற வரை அடித்துக் கோபத்தைக் காட்டினாள்.
சின்னமலை கதறுகிற சத்தம் கேட்டு வந்து நின்ற பக்கத்து லைன் ஆறுமுகம், “ஏய் தாயி. சின்ன வயசில எல்லா குழந்தைகளுக்குள்ளாறவுமே இப்படி முட்டையை உடைக்கிற பழக்கம் இருக்கும். சின்னச் சின்ன வண்டுகளை கொண்டு வந்துகூட கல்லில தட்டி நசுக்குவாங்க. மனுசங்க எல்லாருக்குமே அடியாழத்தில மத்ததை நசுக்கிற ஒரு வன்முறை உறைஞ்சு கெடக்கும். அப்புறம் வளர வளர அந்த பழக்கம் தானா போயிடும் தாயி. அதான் இயற்கை” என்றார். தீர்மானமாய் அவரது முகத்தை ஏறிட்ட செல்லத்தாய், அவன் பழக்கம் மாறுவதற்காகக் காத்திருந்தாள்.
எட்டு போகிற வரைக்கும்கூட அந்தப் பழக்கம் அரசல் புரசலாகத் தொடர்ந்தது அவனை. பிறகு அவனே அதை உணர்ந்து நிறுத்திக் கொள்ளவும் செய்தான். நிறுத்தின அன்றைக்கு, “ஏம்மா என் கையால இனி எந்த உயிரையும் இந்த மலையில கொல்ல மாட்டேன்மா. இது சத்தியம். நீ சொல்றதுதான் சரி” என்றான். அதுவரை மனதளவில் விலக்கத்தைக் காட்டிவந்த செல்லத்தாய், நீண்ட காலத்திற்குப் பிறகு நெருங்கி வந்து அவனது தலைமுடியைக் கோதிச் சிரித்தாள்.
ஒன்பதும் பத்தும் படிப்பதற்காகக் கீழே சமவெளிக்குப் போனான் சின்னமலை. செல்லத்தாயின் சகோதரி வீட்டில் தங்கிக் கொண்டு படித்தான். விடுமுறையில் மலைக்கு ஏறுகையில் அவனுடைய நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தாள் செல்லத்தாய். முற்றிலும் அவனுக்குள் இருந்த பழக்க வழக்கங்கள் மாறிவிட்டதாய்த் தோன்றியது அவளுக்கு. நல்லமாதிரியான மனிதனாய் இந்த மலையில் நிலைகொண்டு விடுவான் என்கிற நம்பிக்கையுமே பிறந்தது அவளுக்கு. பத்து முடித்துவிட்டால் ஏதாவது அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்துவிடலாமென காடமனில் மேலாளராக இருக்கும் சக்திவேல் சொன்னதை மகனிடம் சொல்லவும் செய்தாள்.
அவன் பத்து முடித்து மலைக்கு மறுபடி ஏறிய போது, செல்லத்தாய் முற்றிலுமே உடலளவில் நிலைகுலைந்து போயிருந்தாள். காசநோயும் அதன் காரணமாக வந்த தொடர்ச்சியான காய்ச்சலும் அவளை உருக்கியிருந்ததைக் கண்டான் சின்னமலை. ஒருகாலத்தில் ஏழெட்டு மைலைக்கூட அசால்ட்டாக நடந்து கடக்கும் அம்மாவால், அப்போது அரை பர்லாங் தூரத்தைக்கூட மூச்சுவாங்காமல் நடக்க முடியாத நிலையை எண்ணிக் கவலையும் பட்டான். சீக்கிரமே ஏதாவது வேலைவெட்டிக்குப் போய் அம்மாவை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிற வெறி அவனுக்குள் தேயிலைத் தூர் மண்ணைப் பற்றிக் கொள்வதைப் போல உருவானது.
சின்னமலையின் அசாத்திய திறமையே அவனுக்கு மின்வாரியத்தில் வேலை கிடைப்பதற்கும் காரணமாக அமைந்தது. அப்போது ஹைவேவிஸில் நிறையக் கட்டுமானப் பணிகள் நடந்ததால், அதற்கான மின்சாரத் தேவைகளும் மிகுதியாகின. ஓங்கி வளர்ந்த பெரிய மரங்களுக்கூடாக மின்வயர்கள் போக வேண்டி இருந்ததால், மரத்தின் உச்சி வரை ஏறுகிற திறமைகொண்ட சின்னமலையை மின் வாரியத்தில் வேலைக்கு எடுத்தார்கள். எந்தவித வசதி வாய்ப்புகளுமே இல்லாத தேயிலைக் காட்டில் பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு அப்படி அரசாங்க வேலை எளிமையாகக் கிடைப்பது என்பது அதிசயம்தான் என ஊரே பேசியது.
அவன் வேலைக்குச் சென்ற முதல்நாள், வீட்டில் இருந்து வெளியே வந்த செல்லத்தாய் தூரத்தில் தெரிந்த மலைமுகட்டைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். “எனக்கு எல்லாம் தந்த சாமியே” என அப்போது அவள் முணுமுணுத்தாள். வேலைக்குப் போன மூன்று நான்கு வருடங்களுக்குள் நல்லமாதிரியாக அலுவலகத்தில் பெயர் எடுத்த சின்னமலைக்கு, உத்தியோகமுமே நிரந்தரமாகி விட்டது. தொடர்ச்சியான இருமலும் அடிக்கடி வருகிற காய்ச்சலுமாகக் கிடந்த அம்மாவைக் கீழே சமவெளிக்கு அழைத்துப் போய்விடலாம் எனத் திட்டமிட்டான் சின்னமலை.
ஆனால் அலுவலத்தில் தெளிவாக, “இங்க பாருப்பா. நீ நல்லா மரமேறுவங்கறதுக்காக மட்டும்தான் இந்த வேலையையே உனக்கு தந்தாங்க. அதனால கீழ போறதை மறந்திடு. இல்லை வேலையை எழுதிக் குடுத்திட்டு கீழ போயி என்னன்னாலும் பண்ணிக்க” எனச் சொல்லி விட்டார்கள். கையறுநிலை என்றால் என்ன என்பதை அப்போதுதான் நெருக்கத்தில் உணர்ந்தான் சின்னமலை.
சின்னமலைக்குச் சீக்கிரமாகக் கல்யாணத்தைப் பண்ணிவைத்துவிட வேண்டுமெனத் தவியாய்த் தவித்தாள் செல்லத்தாய். அம்மாவைக் கவனித்துக் கொள்ளவாவது ஒரு ஆள் வேண்டும் என்கிற எண்ணத்திற்குமே வந்து சேர்ந்தான் சின்னமலை. நல்ல பெண்ணாகப் பார்த்துச் சொல்லும்படி வீட்டிற்கு வந்த சொந்தங்களின் வழி சொல்லி அனுப்பினாள் செல்லத்தாய்.
அவர்கள் அப்போது இருந்த இடத்தில் குளிர் அதிகமாக இறங்குகிறது என்பதால், “ஆபிஸ்ல கண்டிஷனா கோட்டர்ஸிலதான் தங்கணும்னு சொல்லிட்டாங்க. இல்லாட்டி வேலை போயிடும்” எனப் பொய்யுரைத்து அம்மாவைச் சமாதானப்படுத்தி இன்னும் கீழே இருக்கிற மின்வாரியக் குடியிருப்பிற்கு அழைத்து வந்தான் சின்னமலை. ஆனாலும், “பிள்ளைக எல்லாம் இந்நேரம் என்னைத் தேடுமே” என இரவுகளில் தனக்குத்தானே முணுமுணுத்தபடி படுத்துக் கிடப்பாள் செல்லத்தாய்.
சின்னமலை திருமணம் குறித்த கனவில் இருந்த போதுதான், ஹைவேவிஸில் புதிய சிக்கல் ஒன்று முளைத்தது. லைன் வீடுகளிலும் ஆங்காங்கே முளைத்த புதிய வீடுகளிலும் அடிக்கடி துணிகள் காணாமல் போகத் துவங்கின. கொடியில் காயப் போட்டுவிட்டு காலையில் போய் பார்த்தால் காணவில்லை. “இதென்னப்பா அக்குருவமா இருக்கு. ஏதோ கோட்டு சூட்டுன்னா கூட சரிங்கலாம். எல்லாமே ஒண்ணுக்கும் ஆகாத கிழிஞ்ச குண்டித் துணிங்க. அதை போயி எடுத்துட்டு போயி என்ன பண்ண போறாங்க” எனப் பேசிக் கொண்டார்கள்.
இறுதியில் அதை யார் எடுக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது என முடிவும் எடுத்தார்கள். ஊர் முனையில் வேண்டுமென்றே நிறையத் துணிகளைக் கொடியில் கட்டித் தொங்க விட்டிருந்தனர். இரவு கொட்டக் கொட்ட விழித்துக் காத்திருந்த போது, கொம்பன் யானையொன்று மெல்ல வந்து அந்தத் துணிகளைக் கொடியில் இருந்து உருவுகிற காட்சியைக் கண்டார்கள். உடனடியாக எல்லோருக்குமே சிரிப்புத்தான் வந்தது. ஆட்களின் அருகாமையைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் காட்டிற்குள் இறங்கி ஓடியது கொம்பன்.
“கலிகாலம்ங்கறது நெஜம்தானா? நம்ம துணியை தூக்கிட்டு போயி என்ன பண்ணப் போகுது அது? ஆளை பார்த்தீல்ல. எவனாவது நேர்ல கிடைச்சா சட்னியை அரைக்கிற மாதிரி வச்சு நசுக்கிரும். என்னா கொம்பு அது. குத்துச்சுன்னா நெஞ்சுல பாய்ஞ்சு முதுகுக்கு வந்திடும் கொம்பு” எனப் பேசிக் கொண்டார்கள். கூடவே அது எதற்காக அப்படித் துணிகளை எடுத்துப் போகிறது என்பதை அறிய வேண்டுமெனவும் துடித்தார்கள். ஹைவேவிஸ் முழுக்க இதுதான் பேச்சாகவும் இருந்தது.
”ஒரு ஊர்ல ஒருத்தன் யானைக்கு தேங்காய்ச் சிரட்டையில சுண்ணாம்பை தடவி கொடுத்துட்டான். அந்த யானை அவனை மறக்கவே இல்லை. ஏழு வருஷம் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான். தேடிப் போய் அவனைப் பிடிச்சுக் கீழே போட்டு நசுக்கியே கொன்னிடுச்சு. யானை மட்டும் லேசுப்பட்ட சனியன் இல்லைப்பா. கூடுன ஞாபகம் அதுக்கு. மனுசப் பயல்களைவிட அதிகமா மனசுல வஞ்சத்தை தேக்கி வச்சிக்கிடும்” என்று ஒருத்தர் சொன்னதை எல்லோரும் ஆமோதித்தார்கள். அந்தப் பேச்சு பாம்பு வளைந்து ஓடுவதைப் போல ஓடிக் கொண்டிருக்கும் மலைநதியின் வழியாகக் கீழே இருக்கிற சின்னமலையின் காதுகளையுமே எட்டியது.
அதுவரை மறந்திருந்த அல்லது வலுக்கட்டாயமாக நினைவில் இருத்த விரும்பாத அந்தச் சம்பவம் குறித்து மறுபடி சிந்தித்தான் சின்னமலை. அவன் மின் வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் வருட இறுதியில் நடந்தது அது. உச்சியில் இருக்கிற அப்பர் வேவிஸில் பணியை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது, திடீரென புதர்களுக்கு இடையில் இருந்து வெளியே வந்த முதிய பெண் யானையொன்று அவனை நோக்கி நடந்து வருவதைக் கண்டான்.
அவன் மெல்லமாக நடையின் வேகத்தை அதிகரித்த போது அதுவும் வேகமாக அவனை நோக்கி நடந்தது. அவன் விலகி நடந்த போது யானை பக்கவாட்டுத் திசையில் அவனைத் தொடர்ந்தது. அப்போதுதான் அந்த விசித்திரமான எண்ணம் அவனுக்குள் உதித்தது. முட்டையைக் கல்லில் மோதி உடைக்கிற பழைய குறுகுறுப்பு மீண்டும் முளைத்தது அவனுக்குள். யானையை வேண்டுமென்றே தன்பக்கமாக இழுத்த அவன், தான் ஓடுகிற திசைக்கு அதை இழுத்தான். விளையாட்டாய்த்தான் அக்காரியத்தை அப்போது செய்தான். அதுவும் அவனைப் பின்தொடர்ந்து ஓடியது.
ஆனால் ஒரு கட்டத்தில் எதிரே திடீரெனத் தோன்றிய பள்ளத்தைக் கண்டு அதிர்ச்சியான சின்னமலை சடாலென இடப்பக்கமாக ஒதுங்கி அருகில் இருந்த புதரொன்றினுள் குதித்து விழுந்தான். அது வழுக்குப் பாறை என்பதாலும், மழை ஈரத்தில் பாசி படர்ந்திருந்தாலும், கால்வைத்த யானை சறுக்கிப் புட்டத்தை அதில் கிடத்தி வழுக்கிக் கொண்டு பெரும்பிளிரல் சத்தத்துடன் கீழே இருந்த பாதாளத்தை நோக்கிப் போனது. கீழே அது பொத்தென விழும் சத்தமும் கேட்டது சின்னமலைக்கு. உடனடியாகவே அவனது அடிவயிற்றினுள் அச்சம் பந்தைப் போல உருண்டது.
குழியில் இருந்து எழுந்த அவன் யாராவது அந்தக் காட்சியைப் பார்க்கிறார்களா எனச் சுற்றும் முற்றும் தேடினான். மனித வாடையே அற்றுப் போயிருந்தது அங்கே. கூர்மையாக எல்லாப் பக்கமும் கவனித்த போதுதான் அந்தக் காட்சி தட்டுப்பட்டது சின்னமலைக்கு. மரக் கிளைகளின் அசைவுகளின் இடையே கொம்பன் யானையொன்று அக்காட்சியைப் பார்த்தபடி நின்றிருந்தது. தனது கம்பளி சொட்டரைக்கூட எடுக்காமல் அங்கிருந்து விரைந்து ஓடினான் சின்னமலை. இரவு முழுக்க அந்தப் பழைய காட்சி அவனுக்குள் மாறி மாறி ஓடிக் கொண்டு இருந்தது. செந்நாய் உற்றுப் பார்ப்பதைப் போல அச்சம் அவனைக் குடைந்து கொண்டே இருந்தது.
விடிகாலையில் எழுந்ததும் அம்மாவிடம், “ஏம்மா இந்த யானைங்களுக்கு ஞாபக சக்தி இருக்குமா என்ன?” என போகிற போக்கில் கேட்பதைப் போலக் கேட்டான். “யானைதான் இந்த மலை. மலை எல்லாத்தையும் ஞாபகத்தில வச்சிருக்கும்” என்றாள் செல்லத்தாய். அவள் சொல்லிமுடித்ததுமே குளிரிலும் குப்பென வியர்த்தது சின்னமலைக்கு. அவளிடம் தன் படபடப்பைக் காட்டி விடக்கூடாது என்கிற கவனத்தோடு விரைந்து வீட்டில் இருந்து வெளியேறினான் சின்னமலை.
அலுவலக வேலையின்போதுகூட அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தான் அவன். அங்கே விட்டுவிட்டு வந்த கம்பளி சொட்டரை எடுத்துக் கொண்ட அது தன்னைத்தான் பலிவாங்கத் தேடிவருகிறது என்கிற உறுதியான முடிவிற்கு வந்து சேர்ந்தான் சின்னமலை. அதனிடம் இருந்து தப்பவே முடியாது என்கிற எண்ணமும் ஆழமாக அவனுள் உதித்தது. தெரிந்தவர்களிடம் எல்லாம் சும்மா பேசுவதைப் போல அதுகுறித்து உரையாடினான்.
எல்லோருமே சொல்லிவைத்த மாதிரி யானைக்குப் பழிவாங்கும் உணர்வு அதிகம் என்றே சொன்னார்கள். அங்கே இருந்து தப்பவும் முடியாது. போக வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் வேலையை எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் போக முடியும். மலைக்கு மேலேயும் கீழேயும் தனியாகப் பணிபுரியப் போக முடியாது என அலுவலகத்தில் மறுக்கவும் முடியாது. தெரியாமல் விளையாட்டிற்குத்தான் செய்தான் அச்செயலை. அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? என்றெல்லாம் தனக்குள் மௌனமாக அரற்றிக் கொண்டிருந்தான் சின்னமலை.
அம்மாவிடம் போய்ச் சரணடைந்து விடலாமா என்றுகூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால் அவள் இந்த விஷயத்தில் தான் சொல்வதை நம்பவே மாட்டாள் என்பதும் உறைத்தது. அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை மட்டுமே சுற்றிச் சுற்றி யோசித்தான். அவனது கல்யாணக் கனவுகள்கூட அச்சமயத்தில் மட்டுப்பட்டு இருந்தன. உடல்நிலை சரியில்லை என்று அலுவலகத்தில் சொல்லி ஒருவாரம் வரைக்கும் எங்கேயும் போகாமல் இருக்கும்படியாகத் தள்ளிப் போட்டான். ஆனால் அதற்கு மேல் அலுவலக வேலையில் அப்படிச் செய்ய முடியாது என்பதையுமே உணர்ந்திருந்தான் சின்னமலை.
வனத்துறைக்குத் தொலைபேசி செய்து, “யானை ஒண்ணு பொதுமக்களோட துணியை எல்லாம் எடுக்குது. ரெம்ப தொந்தரவு கொடுக்குது. அதனால அதை சுட்டுப் பிடிச்சு வேற காட்டில கொண்டு போயி விடணும். இல்லாட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினையாயிடும்” எனப் புகாரளித்தான். “நீங்க யாரு பேசறதுன்னு எங்களுக்குத் தெரியலை. ஆனா முட்டாப்பய மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க. மனுசங்களை கொன்னாலே அதை சுடறதுக்கு நாங்க ஆயிரம் இடத்தில அனுமதி வாங்கணும். துணியை எடுத்துச்சாம். நாங்க வந்து சுட்டுப் பிடிக்கணுமாம். யார்னு தெரிஞ்சா நாங்க முதல்ல இப்படி பேசற ஆளைத்தான் குண்டியில சுட்டுப் பிடிப்போம்” என அங்கேயிருந்து பதில் வந்தது அவனுக்கு.
அதற்குமேல் பேசினால் தோலை உரித்து விடுவார்கள் என்பதை ஒரு அரசாங்க உத்தியோகனாய் அறிந்தே இருந்தான் சின்னமலை. அலுவலத்தில் போய் நீண்ட நாள் விடுப்பு கேட்ட போது முடியாதென உதட்டைப் பிதுக்கினார்கள். மயிராய்ப் போயிற்று, மருத்துவ விடுப்பு போட்டு விடலாம் என முடிவெடுத்து அன்றைக்குப் பயந்து நடுங்கியபடி வீட்டிற்குப் போனான் சின்னமலை. அம்மாவிடம் சொல்லலாமா? அவளே முற்றிலும் உருக்குலைந்து கிடக்கிறாளே? அவளை ஏன் துயரப்படுத்த வேண்டும்? என்றெல்லாம் தோன்றியது.
அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் படுத்தான் சின்னமலை. அதிகாலையிலேயே அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வந்துவிட்டது. மேல் அப்பரில் தொழிற்சாலை ஒன்றிற்கு உடனடியாக மின் பிரச்சினையைச் சரிசெய்யக் கிளம்ப வேண்டும். வேறு வழியே இல்லை, போய்த்தான் ஆகவேண்டும் என்கிற மாதிரியான நிலை. வந்தது வரட்டும் என்கிற எண்ணத்தோடு, தூங்கிக் கொண்டிருந்த அம்மாவைத் தட்டி எழுப்பினான். செல்லத்தாய் என்னமோ ஏதோவென எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கிய போது, “ஏம்மா எனக்கு துண்ணூறு பூசி விடு” என்றான் மொட்டையாய். எழமாட்டாமல் கிடந்த அவள் விபூதியை எடுத்துக் கொண்டு வரவைத்து, “என்ன திடீர்னு. எதுக்காச்சும் பயந்திட்டீயா. மனசார மலையை நினைச்சுக்கோ. அது கூட நிக்கும் உனக்கு. அம்மா சொல்றேன்ல” என்று சொல்லிப் பூசி விட்டாள்.
வண்டியை எடுத்துக் கொண்டு இருள் இன்னும் விலகாத மலைப்பாதையில் வளைந்து நெழிந்து ஓட்டிக் கொண்டு போனான் சின்னமலை. அதற்கு மேல் வண்டி போக முடியாத யானைப் பாதையில் ஏறி நடந்து கொண்டிருந்த போது, மெல்லமாக வெளிச்சம் பரவத் துவங்கியது காட்டில். பச்சையிலைகளில் ஒட்டியிருக்கிற பனித்துளிகளை கையில் வைத்திருக்கிற டார்ச் விளக்கால் தட்டி விளையாடியபடி போன சின்னமலையை, ஒரு திருப்பத்தில் எதிர்த்து நின்றது அந்தக் கொம்பன். மலையைப் போல ஓங்கி உயர்ந்து நின்றது அந்த ஓங்கல்.
திரும்பியும் ஓட முடியாது என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்தான் சின்னமலை. படபடவென நெஞ்சு அடித்துக் கொண்டது. அவன் தன்னையறியாத மயக்க நிலைக்கு உடனடியாகச் சென்றான். கால்கள் நிலத்தில் இருந்து விடுபட்டு அந்தரத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். திடீரென கவனவுணர்வை எட்டி அவனையுமறியாமல் மண்ணில் முழங்கால் போட்டு அமர்ந்து, கைகளைக் கூப்பிக் கண்ணீர் மல்க, “நான் தெரிஞ்சே செய்யலை அதை. எங்கம்மா மேல சத்தியம். என்னை மன்னிச்சிரு” என்றான்.
சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கொம்பன், ஒரு பிளிரல் சத்தத்தை எழுப்பி விட்டு காட்டின் ஆழத்தை நோக்கி நடந்து போனது. அது கடந்து போகையில், ஏதோவொன்றைத் தும்பிக்கையில் சுருட்டி வைத்திருக்கும் காட்சி சின்னமலைக்குத் தெரிந்தது. சூரிய ஒளி செங்குத்தாக அத்தும்பிக்கையில் விழுந்த போது நன்றாக உற்றுக் கவனித்தான் அதை.
அவனுடைய அம்மாவின் சேலையது!