Edward Munch (1863 – 1944) : Norwegian
“For as long as i can remember i have suffered from a deep feeling of anxiety, which i have tried to express in my art without anxiety and illness i should have been like a ship without a rudder”
என்னுடைய கலைப் படைப்பின் ஒவ்வொரு அசைவுகளும் ஆழ்ந்த உள்ளுணர்வுடன் கலந்த பதட்டத்தின் உந்துதலே. எப்படி நீரை கிழித்துக்கொண்டு செல்ல படகிற்கு ஓர் உந்து விசையினை ஏற்படுத்தும் துடுப்பு இல்லாமல் அதன் இயக்கம் சாத்தியமில்லையோ அதே போல அந்தப் பதட்டமும்,போதாமையும் இல்லாமல் என்னுடைய கலை வெளிபயணமும் சாத்தியம் இல்லை. –எட்வார்ட் மன்ச்
இருளின் பிடியில் சூழ்ந்திருக்கும் ஜன்னல்களின் சட்டங்கள் தரையில் வீழ்ந்து அந்த அறையினை நிரப்பிக் கிடக்கிறது.வான்கோவின் மஞ்சள் நிற அறை போல, பிக்காஸோவின் நிறங்கள் நிரம்பிய சதுர அறையைப்போல, இந்த அறையிலும் துயர் நிறைந்த நினைவுகள் ஆழ்ந்த இரங்கல்களுடன் உணர்ச்சி மேலீட்டாகத் தன்னை இயக்கிக் கொண்டிருந்தது.தனது தந்தை பிளேக் நோயால் பீடிக்கப்பட்டு இறந்து விட அந்த செய்தி கிட்டிய நிலையின் சூழலை தன் ஓவியத்தில் பரிணமிக்கிறார்.
அந்த ஜன்னலின் வலது பக்க மூலையில் நதியொன்றில் பயணிக்கும் படகினையும், சூரிய ஒளி மேலெழுந்து வருவதையும் காண முடிகிறது. இது மோனட் (Clout Monet) வரைந்த சூரிய உதயம் எனும் ஓவியம். ஒருவேளை மன்ச் துயரில் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஜன்னலின் ஒளி நிறைந்த அறையினை ஓர் வசந்த காலமாகவோ, வேனிற் காலமாகவோ தீட்டியிருக்கலாம். ஆனால் இதனை விமர்சனமாக கொள்ளாமல் படைப்பாளியின் சூழலின் தன்மை குறித்த புரிதலுடன் ஏற்றுக் கொள்ளலாம்.
கலைஞன் தனது வாழ்வியலைப் பதிவு செய்யும் பொருட்டு அதன் தீவிரத் தன்மையை அணுகும் முறை ஒவ்வொரு கால அளவீட்டிற்கும் இடையே மாறுபடுகிறது. மறுமலர்ச்சி காலத்திற்குப்பின் வந்த impressionist வரை பல இசங்களிற்குப் பின் மன்ச் பின்பற்றியது உணர்ச்சிகரமான செயற்கைத் தன்மையற்ற வெளிப்பாடு. அது symbolism என்றும் கருத்தியலாக இருக்கலாம்.
அவை தீவிர சிந்தனையுடன் கூடிய வெளிப்பாடு.மனதின் எண்ண அலைகளை வண்ணங்களாக மாற்றும் கலை அது.எஸ்பிரேஷனிஸம்(Expressionism) எனப்படும் உள்ளார்ந்த மனக்கிளர்ச்சியின் உந்துதல் வழி இயக்கப்படும் கலை.
பால் காகின் (gahin) தனது இறுதிக் காலத்தினை குடும்பம் எல்லாவற்றையும் தவிர்த்து ஒரு தனித்தீவில் கழித்தது போல… வான்கோ நியூனன் நகரத்தில் கழித்த கரி படிந்த துயர் நிறைந்த நாட்களைப் போல… பிக்காசோவின் நீலநிறக் காலம் போல… பிக்காசோ (piccaso) 1901-04 வரையிலான ஓவியங்களை நீல நிறத்தின் சாயல்களை மட்டுமே பயன்படுத்தி ஓவியங்களை வரைந்திருப்பார். அதனை ப்ளூ பீரியட் (Blue Period)என்று குறிப்பிடுகின்றனர்
அதேபோல மன்ச்சின் ஓவியங்களையும் வகைமைகளாகப் பிரித்து விடலாம். மரணப் படுக்கை (The Death Bed) காசநோயின் காரணமாக தாயையும், சகோதரியையும் இழந்த மன்ச் அதன் நினைவாக நோயுற்ற சிறுமி (The sick child) என்ற ஓவியத்தின் வாயிலாக இதனை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். ஒரு நோய்வாய்ப்பட்டிருக்கும் யுவதி ஒருத்தியை இன்னொரு பெண் கருணையுடன் பார்க்கிறாள். இதே கருத்தினைக் கொண்ட ஓவியத்தினை இரண்டு, மூன்று முறை பல்வேறு காலகட்டங்களில் வரைந்திருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் நோய்வாய்ப்பட்ட மனிதர்களையும், தனிமையில் ஆற்றுப் படுகையில் அமர்ந்து நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்த்தவாறு இருக்கும் மனிதன், போன்ற ஓவியங்களைத் தீட்டுகிறார்.
நாம் நம்முடைய வாழ்வியல் எங்கு தொடங்குகிறது.முதலில் வீடு, அதற்கப்பால் நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்தின் நிலைப்பாட்டினைப் பொறுத்துதான் அமைகிறது. ஆனால் மன்ச் ஐப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் உளவியல் சார்ந்த கருத்துக்களால் புனையப்பட்ட உள் வெளிப்பயணம்தான் அவரது வாழ்வின் துவக்கம். இங்குதான் மன்ச் சிம்பாலிசத்தின் சில முக்கிய கோட்பாடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட உளவியல் கருப்பொருள் சார்ந்த தீவிர ஓவியராக தன்னை வெளிப்படுத்துகிறார்.
Spiritual Anguish எனும் வார்த்தையில் ஒளிந்திருக்கும் அர்த்தம் மிகவும் ஆபத்தானது.தமிழில் ஆன்மீக மரணம் என்று பொருள். எதன்மீதும் பிடியில்லா, நம்பிக்கையற்றுத் தளர்ந்துபோன ஒருவனின் மனநிலையை ஆன்மீக மரணம் என்று கொள்ளலாம். மன்ச் இப்படி ஒரு மன நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கூற்று உண்டு.
தனது 14-ஆம் வயதில் இரண்டு சகோதரிகளும் காச நோய்க்குப் பலியாகின்றனர். இந்த நிகழ்வுகள் மன்ச்சின் வாழ்நாள் முழுவதுமாக துரத்திக் கொண்டு வந்திருக்கிறது. இதன் தாக்கத்தின் ஓர் வெளிப்பாடு தான் the sick child எனும் ஓவியம்.
தலையணையில் சாய்ந்த உடல்,அருகில் இருக்கும் மருந்துக்குப்பிகள், சிறுமியின் வெளிறிய முகம். Sophie அவளது அத்தையின் ஆறுதல் தரும் கைகளை இறுகப் பிடித்தவாறு காட்சியளிக்கும் ஓவியம். இதில் முக்கிய கருதுகோளாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று, அலங்காரப் பண்புகள் ஏதுமில்லாமல் மனதின் இயக்கமாக உள்ளுணர்வுகள் பரிணமிக்கிறது. அதன் கருப்பொருளான கவலை, உணர்ச்சி, மரணம் சார்ந்த பயம், நோயின் வீரியத் தன்மை, இப்படி மரணப் படுக்கையில் உள்ள ஒரு பெண்ணைத் தன்னுடைய கிளர்ச்சியடைந்த உள்ளத்தால் ஓவியமாகப் பிரதிபலிக்கிறார்.
மன்ச் எப்பொழுதும் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். மற்றும் நிறைய விவாதிப்பவர். எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் உள்ளடங்கிய வட்டத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர்.பின்னாட்களில் இவரது ஓவியக் கண்காட்சிக்கு இந்த இயக்கங்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தது.
மன்ச்சின் ஓவியங்களின் வெளிப்பாடு பெரும்பாலும் துயர் நிறைந்ததாகவும், பதட்டமாகவும் காணப்பட்டது.குறிப்பாக ஓவியத்தில் தனியாக இடம் பெறும் ஒருவரை வண்ணம் குழைத்து ஓவியமாகத் தீட்டும் போது அவரது தனிமையின் குரல் அந்த ஓவியங்களின் உள்ளேயும் ஊடுருவுகிறது. ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு ஆணின் உருவம்,பாலத்தின் மேலே வரிசையாக நவ நாகரீக உடையுடன் காட்சியளிக்கும் பெண்கள்.இதற்கு முரணாக அமைந்திருக்கும் மடோனா எனும் ஓவியம்.
பாலுணர்வு சார்ந்த ஓர் கருத்தினை வெளிப்படுத்துதல் அல்லது விதிகளை மீறுதல் என்று கூறலாம். இப்படி ஒரு எதிர்முரண் கொண்ட படைப்பு மடோனா(1894).
பரவச நிலையில் இருக்கும் நிர்வாணக் கோலத்தில் இருக்கும் ஒரு பெண். ஒருவேளை அந்தப் பெண் கருவுற்று இருக்கலாம். கண்களை மூடியவாறு அலைபாயும் கூந்தலின் பின்னால் இருக்கும் சிவப்பு நிற ஒளிவட்டம். இது ஓர் சர்ச்சையான ஓவியமும் கூட. மடோனா என்பது மேரி மாதாவைக் குறிக்கும் ஓர் பெயர்.
மண்சின் ஓவியங்களில் ஆட்படும் பெண்கள் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்.
மன்ச் பெர்லினில் சில வருடங்கள் தங்கியிருந்தார். பெர்லின் பிரிவினையின் முன்பு உள்ள காலகட்டம்.johan street எனும் தெருவில் நிகழும் வாத்தியக் குழு,ராணுவ அணிவகுப்பு, மலை நாளில் ஜோகன் தெரு என்று பல கோணங்களில் அந்தத் தெருமுனையில் குவிந்த மக்களையும் சேர்த்து தூரிகையில் வசப்படுத்தியிருப்பார். ஜெர்மன் மொழியிலும் அவர் திறம்பட புலமை பெற்றவர். ஆனாலும் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாஜிப்படை நார்வேவை ஆக்கிரமித்தபோது எண்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் கையகப்படுத்தப்பட்டன. இறுதியில் அதிலிருந்து 70 ஓவியங்கள் மட்டுமே மீட்கப்பட்டது. இதனிடையே, expressionism எனப்படும் வெளிப்பாட்டு வாதத்தையும் அழுத்தமாக ஓவியத்தில் காண்பித்தவர் மன்ச்.
மன்ச் ஒரு சில ஓவியங்களைத் தொடர்ந்து வரைந்திருக்கிறார். ஆனால்,வெவ்வேறு வகையான கால கட்டங்களில் பென்சில், நீர் வண்ணம், ஆயில் வண்ணம் என்று ஒரே ஓவியத்தினை வரைந்திருக்கிறார். The Scream, Vampire இது போன்ற இன்னும் சில ஓவியங்கள். இப்படி இவரால் திரும்பத் திரும்ப வரையப்பட்ட ஓவியங்கள் மனதிற்கு ஒரு விதமான அழுத்தத்தினை உண்டாக்கக் கூடியது.
இந்த பாத்திரங்கள் அனைத்துமே ஓர் எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். அல்லது அவரது மனப்போக்கு இவ்வாறு அவரை மாற்றியமைத்திருக்கிறது எனலாம்.குறிப்பாக, கலை என்பது ஒரு நாடகமாகவோ, அழகானதாகவோ, ஒழுக்க நெறியுடையதாகவோ இருக்க வேண்டியதில்லை.
இந்த மனப்போக்கின் உச்சம்தான் The Scream எனும் ஓவியமாகக் கருதப்படுகிறது. இந்தக் கட்டுரையின் முக்கியமான ஓவியமும் இதுதான். இந்த ஓவியத்தினை நாம் எல்லோரும் ஏதோ ஓர் உட்கருப்படுத்துதல் மூலமாக அறிந்திருப்போம். பின்னால் இருக்கும் செக்கச் சிவந்த வானத்தின் நடுவே பாலத்தின் மேலே நின்று இரண்டு கைகளையும் அகல விரித்து அலறும் இந்த உருவம் நம்மை ஒரு நிமிடம் அச்சுறுத்தும். இது உருவம் சார்ந்த காரணியாக இல்லாமல் Metopher எனும் உருவகம் சார்ந்த வெளிப்பாடாக இருக்கிறது.
சிறுவயதில் Home Alone என்ற ஆங்கிலப் படம் பார்த்திருப்போம். மூன்று நபர்களுக்கெதிரான ஒரு சிறுவனின் சாகசங்கள். இந்தப் படத்தின் ஒரு போஸ்டர் இந்த ஓவியத்தின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.சிறுவன் ஒருவனின் அலறல் சத்தம்.
சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் படம் முழுக்க ஆங்காங்கே ஓவியங்கள் சார்ந்த காட்சியினை வைத்திருப்பார். படத்தில் நாயகன் ஒரு அறையில் திகைத்து நிற்கும் ஓர் காட்சியில் வாயைத் திறந்து சத்தமாக ஒலியெழுப்பி, அலறுவது போலிருக்கும். அதே நேரத்தில் கதாநாயகனின் பின்னால் இந்த ஓவியம் (the scream) பின்னால் உள்ள சுவரில் மாட்டப்பட்டிருக்கும். இயக்குனர் இதனை ஓர் குறியீடாகக்கூட வைத்திருக்கலாம். ஐரோப்பியக் கம்பெனிகளில் இந்த முகத்தினை வைத்து முகமூடிகளும் தயாரிக்கப்பட்டன.
மன்ச் பின்னாளில் இந்த ஓவியத்தினைக் குறித்து ஒரு கவிதை ஒன்றை எழுதினார்,
‘நான் இரண்டு நண்பர்களுடன்
சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
சூரியன் மறைந்தது
வானம் கரு நீல சிவப்பாக மாறி
அதன் இரத்த நாக்குகளை வெளியே நீட்டியது
நான் ஏதோ ஒன்றினால் தடுத்து நிறுத்தப்பட்டேன்
என் நண்பர்கள் நடந்து சென்றார்கள்
நான் பதட்டத்துடன் அங்கேயே நின்றேன்
இயற்கையின் எல்லையற்ற அலறல்
என்னைக் கடந்து செல்வதை உணர்ந்தேன்‘
இந்த உள்ளார்ந்த சிந்தனையுடன் கூடிய கலை மிகவும் ஆபத்தானதாக உருமாறுகிறது.ஒரே விதமான ஓவியங்களைப் பலமுறை வெவ்வேறு கால கட்டங்களில் வரைதல். இந்த மாயாஜாலத்தினை The Scream எனும் ஓவியத்தில் செய்துள்ளார் மன்ச். பென்சில், பேஸ்டல், ஆயில் வண்ணம், லித்தோக்ராபியிலும் பதிவு செய்துள்ளார்.
மன்ச்க்கு நெருக்கமான இந்த ஓவியம் திருட்டுப் போன ஒரு நிகழ்வும் உண்டு. 2004 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முகமூடி அணிந்த இரு நபர்களால் துப்பாக்கி முனையில் இரு ஓவியங்கள் திருடப்பட்டது. அந்த ஓவியங்கள் The Scream, Madona. அருங்காட்சியகத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒருவர் எடுத்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்து விசாரணை செய்யப்பட்டது. இறுதியாக 2006 ஆம் ஆண்டில் இரு ஓவியங்களும் சிறிய சேதங்களுடன் மீட்கப்பட்டது. தொலைந்த ஓவியங்கள் எப்படி கிடைத்தது, எங்கிருந்து மீட்கப்பட்டது என்ற தகவல்கள் அரசால் வெளியிடப்படவில்லை.
Speration ஓர் உறவின் பிரிவில் உள்ள ஆழமான தாக்கம்.
இதேபோல் vampire என்ற ஓவியமும் ஒருவித தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியது.காதலியின் நினைவாக வரைகிறார்.
Self Portrait வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக காணப்பட்டார். அதிகளவான சுயபடங்களை வாழ்நாள் முழுமையும் வரைந்துள்ளார். உயர்தரமான வாழ்வினை வாழ்ந்தாலும் ஏதோ ஒரு துயர் தன்னைப் பின்தொடர்வதாக வாழ்வு முழுமையும் நம்பினார்.
காதலியின் பிரிவின் போது Melonchaly உருவாகிறது. காதலியின் கூடுகையின்போது Vampire உருவாகிறது. இப்படி எதோ ஒன்றின் பெயரில் கலைஞன் தனது படைப்புகளை காலத்தின் அளவுகோலாகப் பதிவு செய்கிறான். இதே போல் The Death Bed தனது தாய் மரணப்படுக்கையில் இருக்கும்போது தலைமேல் கைவைத்து சோகமனைத்தையும் முகத்தில் புதைத்து வைத்திருக்கும் அந்தச் சிறுவன் மன்ச் தான். இயல்பாகவே குடிப்பழக்கம் உள்ள மன்ச் 1908 ஆம் ஆண்டு நரம்புத்தளர்ச்சியால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். எட்டுமாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவரின் அறிவுறுத்தலால் நார்வேயில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். அதன் பின்னர் அங்கு உள்ள சூழல், வயது மூப்பு ஆகிய காரணத்தால் அழுத்தமான உருக்களை விடுத்து வயல்வெளி, உளவு வேலை பார்க்கும் மனிதர்கள், நிலக் காட்சிகள் என ஓவியங்களைத் தீட்டுகிறார். லித்தோக்ராபியிலும் மன்ச் ஒரு பெரிய இடத்தினை அடைந்திருந்தார். சுமார் எண்பது வருட கலைப்பயணம். வாழ்வு முழுமையும் பலகைகளையும், கேன்வாஸ் போர்டுகளையும் கையில் சுமந்து திரிந்த மனிதர் எட்வர்ட் மன்ச்.
‘were the black angels that kept watch over my cradle and accompanied me all my life’
“எனது வாழ்வு முழுமையும் கருப்பு நிற தேவதைகள் எனது தொட்டிலைச் சூழ்ந்தவாறே இருந்தனர் என்கிறார்” மன்ச்.