பேருந்து நிலையம் செல்லும் வழியில் இடைப்பட்ட நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். தாமு அங்கேதான் இறங்கச் சொல்லியிருந்தான். மறுநாள் அவனுக்குத் திருமணம். என் வயதுக்காரன்தான். அதிகாரியான பிறகே திருமணம் என்று பிடிவாதமாய் இருந்ததால், கொஞ்சம் பிந்திவிட்டது. என் மகன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.

இரவு மெல்ல வலுக்கத் தொடங்கியிருந்தது. பரிச்சயமற்ற ஊரின் இரவு, வழக்கமான இரவைவிடவும் அடர்த்தியாய்த் தெரிந்தது. வயிற்றில் தாளமுடியாத   நமைச்சல். மனத்தின் ஆயாசமும் தாள முடியாததாய் இருந்தது. முதல் தடவையாக, இந்தத் திருமணத்துக்கு இவ்வளவு மெனக்கெட்டு வந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

வாழ்த்துத் தந்திகள் வழக்கொழிந்து போகாத நாட்கள்தாம். அனுப்பிவிட்டு, பேசாமல் சென்னை திரும்பியிருக்கலாம். உணர்ச்சி வேகத்தில் திட்டமிட்டுவிட்டு, வந்து இறங்கிய மாத்திரத்தில் கடும் சோர்வும், அதிருப்தியுமாய்  அல்லாடுகிற மாதிரி ஆகிவிட்டது. தனியாய்ச் செல்லும் பயணங்கள் எல்லாமே இப்படித்தான் முடிகின்றன, ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு. முப்பது வருடத்துக்கு முன்பே இதே மனநிலையோடு இருந்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்தால் ஆயாசமாய் இருக்கிறது…

அன்றைக்கிருந்த சோர்வுக்குக் காரணம், முன்பே சொன்ன மாதிரி,   கடுமையான பசி. அன்று அப்பாவின் வருடாந்தரத் திதி. மதுரையில் நிகழ்த்தும் அண்ணன்மாருடன் சேர்ந்துகொள்வதற்காக வந்திருந்தேன். பெரிய அண்ணா ரங்காராவின் தோற்றமும், நம்பியாரின் திரை சுபாவமும் கொண்டவர். சின்னவரை உபநடிகர் யாருடனும் பொருத்திப் பார்க்கலாம். இருவருமே தமிழ்சினிமா ஆராதகர்கள் என்பதால்தான் திதி நடக்கும்போதே இப்படியெல்லாம் எனக்கு உவமானங்கள் தோன்றியதோ என்னவோ.

நான், அன்றைக்கும் என்றைக்கும் ஹாஜா ஷெரீஃப் – அவர்கள் பார்வையில். அதாவது அவர்களுக்கு வயது ஏறிக்கொண்டே போகும். நான் மட்டும் டவுசர்ப் பிராயத்திலேயே தொடர்ந்தேன்… அண்ணன்கள் இருவரும் இறக்கும்வரை.

சடங்குகள் முடிந்து, சாப்பிட அமரும்போது உச்சிப் பொழுது தாண்டிவிட்டது. ஆக, பகல் முழுவதுக்கும் ஒரேயொரு வேளை சாப்பிட்டிருந்தேன்; சமையலுக்கு வந்த பெண்மணி வழக்கமாக வருகிறவர்; ஆனாலும், முதன்முறை சமைப்பவர்போல ஒவ்வொரு பதார்த்தத்தையும் மோசமாகச் செய்திருந்தார். ருசியும் அநியாய தாமதமும் படுத்திய பாட்டில், வழக்கத்தைவிடப் பாதியளவே சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது.

தூத்துக்குடியில், நான் முதன்முதலில் பணியமர்ந்த ராமநாதபுரம் போலவே, ஊரெங்கும்  மீன்மணம் நிரம்பியிருந்தது. அதே மாதிரி புழுதி அடர்ந்த வீதிகள்; இரு புறங்களிலும் கருநிறம்  ததும்பத் தெருவுக்கு ஏறிய கழிவுநீர் ஓடைகள். மாவட்டத் தலைநகர் என்ற தடயமேயற்ற, வீங்கிய, புராதனத் தோற்றம்.

இந்த அடையாளங்களெல்லாம்  முப்பது ஆண்டுகாலப் பழையவை. இப்போது வெகுவாக  மேம்பட்டு, பளிங்குபோல இருக்கிறதாக்கும் – என்று அங்கு வசிக்கும் யாராவது சொன்னால், நிபந்தனையின்றிக் கேட்டுக்கொள்வேன்; நான் போன நாளில்  இருந்த விதத்தை விவரிக்கிறேன் – அவ்வளவுதான். மற்றபடி, ஒவ்வொருமுறை அரசாங்கம் மாறும்போதும் உடனடியாகப் பொற்காலம் புலர்ந்து, பாலும் தேனும் ஓட ஆரம்பிப்பதில் நமக்கு என்ன புகார் இருக்க முடியும். அல்லது அதேவிதமாகத் தொடர்ந்திருந்தாலுமே என்ன செய்துவிட முடியும்…

கடிதத்தில் தாமு விளக்கியிருந்த அடையாளங்களின்படி, நான் தங்கவேண்டிய இடம்நோக்கி நடந்தேன். பசி என்னை மீறத் தொடங்கியது. சிரார்த்த தின இரவில், சாப்பாடு கூடாது என்பது நியதி. மதியச் சாப்பாட்டுக்கெனத் தயாராகி எஞ்சிய பட்சணங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று அம்மா சொல்லிவைத்திருந்தாள். தார்மிகமும், நடைமுறையும் எல்லா நேரத்திலும் ஒத்துப்போகுமா என்ன!

உரத்து ஓலமிடத் தொடங்கியது வயிறு. இப்படியே இன்னும் ஒரு மணிநேரம் கடந்தால் மயக்கம் போட்டுவிடுவேன். தலை கிறுகிறுத்தது. உடம்பு முழுவதும் வயிறாகிவிட்ட மாதிரி உணர்வு.

சட்டென்று ஒரு எண்ணம். அப்பா இருந்திருந்தாலும், நான் வயிறு நிறையச் சாப்பிட வேண்டும் என்றுதானே ஆசைப்பட்டிருப்பார்…

மறு கணமே, எதிர்ப்பட்ட அந்திக் கடையில் நுழைந்தேன். கரட்டுப்பட்டியில் அப்பா நடத்திய ஓராள் உணவகம்போலவே சிறிய கடை. ஒரே வித்தியாசம், இது அசைவ உணவகம். சும்மா சொல்லக்கூடாது, பரோட்டாவும் சால்னாவும் அப்பா கடைப் பதார்த்தங்கள் அளவுக்கே ருசியாக இருந்தன. இன்னொரு வித்தியாசமும் உண்டு; கல்லாவில் இருந்தவரின் முழுக்க மழித்த முகத்திலும் பாகவதர் க்ராப்பிலும் பாவனைகளிலும் இருந்த, சற்று அழுத்தமான, பெண் சாயல்!

வயிறு நிரம்ப நிரம்ப, மனம் கொஞ்சம்கொஞ்சமாக விடுபட்டு இயல்புநிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது.  எண்ணங்கள் தன்னியல்பாக ஓடத் தொடங்கின. சிந்தனையின் போக்கில் ஒரு சங்கிலித்தொடர்த் தன்மை இருப்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே… உண்மையில், எந்த நினைவு எந்த நினைவை இழுத்துவரும் என்பதற்கெல்லாம் ஏதாவது ரகசியக் கணக்கு இருக்கிறதா என்றுதான்  தெரிவதில்லை. தமது இஷ்டப்படி கோத்துக்கொள்ளும் நினைவுகள் மற்றும்  யோசனைகளில், தொடர்தன்மை இருப்பவற்றைக் கண்டறிந்து,  பொறுக்கியெடுத்துக்  கோக்க முற்படும் அமைப்பு எது என்பதும் புரிவதேயில்லை…

விடுங்கள், மீண்டெழும் ஞாபகங்களில் ஒன்று மிகத் துல்லியமாகவும் விஸ்தாரமாகவும் உச்சபட்ச நுணுக்கங்களுடனும் திகழ, மற்றொன்று மிகச் சுருக்கமாகவும் அவசரமாகவும் முடிந்துவிடுவதன் தர்க்கமும் புரிவதில்லைதான்…

ழைப்பிதழோடு இணைத்திருந்த கடிதத்தில் தாமு குறிப்பிட்டிருந்த விடுதிக்கு வழி விசாரித்து  நடக்க ஆரம்பித்தேன். அவன் தொடர்பான ஞாபகங்கள் பொங்கிக் கிளம்பின. ராமநாதபுரத்தில் வேலை பார்த்தபோது, என் சக ஊழியனாக இருந்தவன். பெரும்பாலான சாயங்காலங்கள், கேணிக்கரையில், அவன் வீட்டில் கழியும். பரம்பரையாகவே வசதியான குடும்பம். அவனுக்கென்று தனி அறையும், உட்சுவரில் பதிந்த மர அலமாரிகளில் ஏகப்பட்ட புத்தகங்களும் உண்டு.

அது பெரிய விஷயமில்லை. அவனளவுக்கு இல்லாவிட்டாலும், என்னிடமும் புத்தக சேகரம் உண்டு. ஆனால், வாசகனாக மட்டுமே நின்றுகொள்ளும் தீரம் தாமுவுக்கு இருந்தது. நிறைய வாசிப்பான்; வாசித்ததைப் பற்றி ஆழமாகவும் தீர்க்கமாகவும் உரையாடுவான்; ஒரு வரிகூட எழுதியதில்லை. நான் வந்து சேர்ந்திருக்கும் இடம்தான் உங்களுக்கே தெரியுமே.

இன்னொரு வித்தியாசமும் உண்டு. எனக்கு இசை கேட்கவும், அதற்காக செலவழிக்கவும் பிடிக்கும். தாமுவின் ஆர்வம் வேறு திசையில் இருந்தது. அலங்காரப் பிரியன். விதவிதமாக உடையணிவான். தவிர, நறுமணங்களின் காதலன்.  அறைச் சுவரில் பதித்த அரை ஆள் உயர நிலைக்கண்ணாடியின் முன்னால் உள்ள மர மேடையில், இருபதுக்கும் அதிகமான வாசனைத் திரவிய சீசாக்கள் இருக்கும். ஒவ்வொரு உடைக்கு என்றோ, ஒவ்வொரு நாளைக்கு என்றோ, ஒவ்வொரு வைபவத்துக்கு என்றோ  வாசனையைத் தேர்ந்தெடுத்துப் பீய்ச்சிக்கொள்வான்!  முகச் சவரத்துக்குப் பயன்படும் நுரைகளும், சவரத்துக்குப்  பிறகு முகத்தில் பூசிக்கொள்பவையும்கூட ஏழெட்டு தினுசு வைத்திருந்தான். நறுமணக் கலவையாக அவன் நெருங்கும்போது மணத்திலும் ஒருவித போதை இருப்பது புலப்படும் நமக்கு!

இவனுக்கு நேரெதிரானவன் ராமு. குடும்பத் தொழிலான மளிகைக்கடையை நிர்வகித்தவன். தனியா சீரகம் சாக்கு மூட்டை எண்ணெய் அப்போது புழக்கத்திலிருந்த சணல் என்று கலவையான மணத்தோடு தாண்டிப் போவான். ஷாம்ப்பூ போட்டுக் குளித்த தாமுவின் சிகைக்கு நேரெதிராக, எண்ணெய் வழியும் ராமுவின் தலையைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு உறுத்தும். இத்தனைக்கும் அவன்  தாமுவின் இரட்டைச் சகோதரன்! இந்த வித்தியாசங்கள்  இல்லையென்றால், யார் எவர் என்ற அடையாளமே புரியாது. அறிமுகமான புதிதில் தாமு சொன்னான்:

“சின்ன வயசுல ரெண்டுபேத்துக்கும் பசி காச்சல் தூக்கம் எல்லாமே ஒண்ணாத்தாம்ப்பா இருந்துச்சாம். அப்பறமேட்டு எல்லாமே மாறிப்போச்சு. அந்தப் பய ஒளுங்காப் படிக்க மாட்டேண்டுட்டான். சரீண்டு கடைக்குள்ளற இளுத்துக்கிட்டாக. அவனெ மாதிரி லுங்கி கட்டிக்கிட்டு நான் வெளியிலெ போவனா சொல்லு. என்னா, என்னோடெ சம்பாத்தியம் என் கைச்செலவுக்கு மட்டும்தான் பத்தும். அவெஞ் சம்பாரிக்கிறது எங்க குடும்ப சாம்ராச்சியத்தெயே தாங்கும்!”                                                                                                                                                                       கூப்பிடும் பெயர்கள்தாம் எதுகையாய் அமைந்திருந்தன;  ஜாதகப் பெயர்களில் வெவ்வேறு துருவங்கள். இவன் சிவப்பிரகாசம், அவன் பெருமாள்பிச்சை. தாய்வழி, தந்தைவழிப் பாட்டனார்களின் பெயர்கள். இவன் அசைவப் பிரியன். அவன் சுத்த சைவம்! சிகரெட் பழக்கம் மட்டும் இருவருக்கும் பொது! பின்னாட்களில் சென்னையில், ரயில் சிநேகிதராக  அறிமுகமான ஜோசியர் ஒருத்தருடன் பேசிக்கொண்டிருந்தபோது, இவர்கள் சம்பந்தமான புதிர் ஒன்று கிட்டத்தட்ட விடுபட்டது:

ஒரே நாள் நட்சத்திரத்திலே பிறக்குறவுங்களுக்குள்ளே ஏகப்பட்ட வித்தியாசம் வந்து சேர்ந்துருதேன்னு கேப்பாங்க. அவ்வளவு ஏன், ரெட்டையாப் பெறந்தவுங்கள்லேயே ரெண்டுபேரும் ஆளுக்கொரு மாதிரி ஆகுறதில்லையா.  ஹோரைன்னு ஒண்ணு இருக்கு சார். அதெப் பொறுத்த சமாசாரம்     இதெல்லாம்…

தாமு நிறையக் கதைகள் சொல்வான். பெரும்பாலான கதைகள் எங்கோ வாசித்தவை; “கதை நினைவிருக்குமளவு,  பிற தகவல்கள் நினைவில்லை” என்பான்.

பின்னாட்களில், அபூர்வமாகக் கட்டுரைகள் எழுதும்போது, சிடுக்கான, சர்ச்சை எழ வாய்ப்புள்ள இடங்களை மேவுவதற்கு ‘ஒரு நண்பர் சொன்னது’ என்று குறிப்பிட்டு சமாளிப்பேன் – இப்போது யோசித்தால், தாமுவுமே, எழுதவில்லையே தவிர, தனக்கே ஊறும் கற்பனைகளை வேறு யார்மீதோ சுமத்திச் சொல்லியிருப்பானோ என்று படுகிறது.

இப்படித்தான், ஒரு தடவை அவன் சொன்ன ராமாயணக் கதை.  வங்காளி எழுத்தாளர் யாரோ எழுதியதாம். ஏதோவொரு கங்கூலியோ சென்குப்தாவோ. எந்த நூலகத்தில் எடுத்துப் படித்தான், நூலின் தலைப்பு என்ன, தமிழில் மொழி பெயர்த்தவர், பதிப்பகத்தின் பெயர் என எதுவுமே நினைவில்லை என்றான். ரொம்ப யோசிக்கிற மாதிரி பாவனை வேறு. ‘வங்காளி’ என்று ஒரு சொல்லை உதிர்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக, அவன்  அவ்வளவு மெனக்கெட்டிருக்கவே வேண்டாம். ஒரே மாதிரி தப்பிப்பதில் சலிப்பு ஏற்பட்டதால், தன்னையுமறியாமல் அந்த வார்த்தை வந்து விழுந்திருக்கலாம், ஒருவேளை!…

‘ஒரு பொய்யை மறைக்கணும்னா ஒம்பது பொய் சொல்லவேண்டி வரும் பாத்துக்கோ!’ என்பாள் என் அம்மா. தாமு அதைத்தான் செய்தான் போல. மேற்படி எழுத்தாளரின் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பு; தொன்மங்களிலும் சரித்திரத்திலும் இடம்பெற்ற பாத்திரங்கள், சம்பவங்கள்மீது சமகாலப் பார்வையைச் செலுத்தும்  கதைகளின் தொகுப்பு; புத்தர்-சுஜாதை, சல்லியன்-மாத்ரி, புருஷோத்தமன்- அலெக்ஸாண்டர், பிருதிவிராஜன் – ஜெயச்சந்திரன் என்று விதவிதமான இணைகளும் எதிர்வுகளும்… கிறிஸ்துவும் மகதலேனாவும், ஒரு கலீஃபாவும் அவரது தளபதியும் இடம்பெறும்  கதைகள்கூட உண்டாம். இவ்வளவு ஞாபகம் இருக்கும் புத்தகத்தைப் பற்றித்தான் விவரங்கள் எதுவுமே ஞாபகமில்லை என்றான் களவாணிப்பயல்!

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு தமிழ்த் தொகுப்பும் இருக்கிறதே; கு.ப.ரா.வின் ‘காணாமலே காதல்’…  என்று நினைவூட்டினேன்.

“அட, நாம் படிச்சதில்லையேப்பா. ஒங்கிட்டெ இருந்தாக் குடுவேன். ஒரே வாரத்திலெ படிச்சிட்டுத் தாரேன்..” ஆசையாய்க் கேட்டான். அப்புறம் இரண்டுபேருமே மறந்துவிட்டோம் என்பது, தூத்துக்குடியில் அவன் கல்யாணத்துக்குப் போனபோது நினைவு வந்தது. திருட்டுப் பயல், கு.ப.ரா. புத்தகத்தை அவன் வாசித்திருக்கக் கூடும்; அதையொட்டியே இந்தக் குறிப்பிட்ட கதையை அவிழ்த்துவிட்டிருக்கவும் கூடும் என்று இப்போது தோன்றுகிறது. அன்றைக்குத் தோன்றவில்லை பாருங்கள்!… கிடக்கட்டும், அவன் சொன்ன கதை இதுதான்:

‘வனவாசம் முடிந்து அயோத்தி மீண்டபிறகு ராமருக்குப் பட்டாபிஷேகம் நடந்தது அல்லவா. பிரிந்திருந்த தம்பதிக்குள் நிலவிய அன்னியோன்யத்தின்மீது யார் கண் பட்டதோ, பட்டமகிஷியைத் தம்பியிடம் ஒப்படைத்து வனத்தில் விட்டு வரச் சொல்கிறார் சக்கரவர்த்தி. புருஷனாக இருப்பதைவிட அரசனாக இருப்பதை முக்கியமாகக் கருதினாரோ என்னவோ,  பாவம். பின்னே, நிறைகர்ப்பிணியாக இருக்கும் மனைவியைக் காட்டுக்கு அனுப்ப எவ்வளவு கல் நெஞ்சம் வேண்டும். இத்தனைக்கும் அவரே, எதிர்பாராத ஒரு நாளில் துரத்தியடிக்கப்பட்டவர்தானே…’ இவ்வளவும் அந்த வங்காளி எழுத்தாளரின் வார்த்தைகள், வாக்கியங்கள் என்றான் தாமு.

‘அப்பஞ் சொன்னாண்டு காட்டுக்குப் போனதெத் தவுத்தி, அந்தாளெக் கடவுள் அவதாரம்னு சொல்றதுக்கு, மொத்த ராமாயணத்திலெயும் ஒரு  தடயமும் இல்லே’ண்டு எளுதியிருந்தாரப்பா. அதெ வுடு,  நல்ல மனசுக்காரன்னு நெனைக்கிறதுக்குக்கூட  ஒரு காரணமும் இல்லேண்டு எனக்குத்  தோணுச்சு’… என்று சிரித்தான். அவன் சொல்வதிலும் கொஞ்சம் உண்மையின் சாயல் இருக்கத்தான் செய்தது; வெறும் க்ஷத்ரிய வார்ப்புபோலவே நடந்துகொண்டிருக்கிறார் ராமச்சந்திரப் ப்ரபு – மந்தரையின் கூன்முதுகில் மண்ணுருண்டையால் அடித்தது, உப்பரிகையில் இருக்கும் அந்நியப் பெண்ணை ஸைட் அடித்தது,  தாடகை வதம், வாலி வதம், சூர்ப்பனகை மூக்கறுப்பு, தோற்றுக்கொண்டிருக்கும் எதிரியை ‘இன்று போய் நாளை வா’ என்று கேலியாய்ச் சொன்ன மமதை என்று விதவிதமான சந்தர்ப்பங்கள் என் நினைவில் எழுந்தன….  அன்றைக்கு எழுந்த அதே வரிசையில் அதே வேகத்தில் இன்றைக்கும் எழுவதுதான் விசித்திரம்…

‘யாராவது பட்டிமன்றப் பேச்சாளர் காதுலெ இதெல்லாம் விளுந்துச்சுன்னா,  மல்லாத்திக் கூறு போட்டுருவாங்க ஒன்னெ!’ என்று சிரித்தேன். அவன் சாதாரணமாய் பதில் சொன்னான்: ‘அட! இது என்னா எஞ் சொந்தச் சரக்கா? அந்த வங்காளி எளுதுனதெத்தானப்பா நாந் திருப்பிச் சொல்லுறன்!’ இருவருமே சிரித்தோம்.

பின்னாளில் நிஜமாகவே ஒரு பட்டிமன்றப் பேச்சாளருடன் ஒரே மேடையில் இருக்கும் சந்தர்ப்பம் வந்தது. தாமுவின் மேற்படி அபிப்பிராயத்தை, அந்தமுறை நிஜமாகவே, ‘ஒரு நண்பன்’ என்று குறிப்பிட்டு அவரிடம் சொன்னேன். முன் நெற்றிக்குச் சரிந்த கூந்தலை ஒரு விரலால் நளினமாக விலக்கியபடி, உறுதியான குரலில் பதில் தந்தார் – அவருடைய சிறுமைகள் அத்தனையுமே, முழுமையான மனிதச் சாயலைக் காட்டுவதற்காகத்தானாம்…

‘அவதார புருஷனாய் இருந்தாலும், மனித உருவெடுத்தால் இப்படியெல்லாம் செய்யத்தானே வேண்டும். இல்லாவிட்டால், அவரை மனிதர் என்று யாராவது  நம்புவார்களா! ஏன், நீங்களும் உங்கள் நண்பருமேகூட நம்புவீர்களா!’  சகஜமான பேச்சுத் தமிழில்தான் சொன்னார். இன்றைய ஞாபகத்தில், ஒலிவாங்கியின் முன்னால், தமக்கேயுரிய ஏற்ற இறக்கத்துடன், இந்தக் கருத்தை அடித்துப் பேசுவதுபோலவே ஒலிக்கிறது எனக்குள்!

போகட்டும். கதைக்குத் திரும்புவோம்… லட்சுமணன் வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கருகில் அண்ணியை விட்டுவிட்டுத் திரும்புகிறான். அண்டை அயலில் ஏகப்பட்ட ரிஷிகளும் ரிஷிகுமாரர்களும் வசிக்கிறார்கள். ’இந்தக் கால அடுக்ககக் குடியிருப்புபோலக் கற்பனை செய்துவிடவேண்டாம்! அடுத்த ஆசிரமமே ஓரிரு காதத்  தொலைவில் இருக்கும்!’ என்று கிண்டலாய் விவரிக்கிறதாம் கதை.

ஆசிரமம் சேர்ந்த சில நாட்களில் சீதைக்குப் பிரசவம் ஆகிறது. ஆச்சரியமான செய்தி, தொன்மக் கதையில் சொல்லப்படுவதுபோல, பிறந்தது லவ-குசன் என்ற இரட்டையர் அல்ல; ஒரேயொரு ஆண் குழந்தைதான்.

தலைச்சன் பேரன் பிறந்ததைப் பார்க்க, பாட்டன் தசரதன் இல்லாமல் போனாரே…   என்று விசனப்படுகிறார் வால்மீகி. ஆமாம், முனிவர் என்றால் உணர்ச்சிகள் இருக்காதா என்ன.  சீதையின் தகப்பன் ஜனகரும், மாமனார் தசரதனும், கணவன் ராமனும் என எல்லாருமே வால்மீகியின் சிநேகிதர்கள் என்று அந்த எழுத்தாளர் குறிப்பிடுகிறார் என்றான் தாமு…

சம்பவ தினத்தன்று, குழந்தையை ஒக்கலில் இடுக்கிக்கொண்டு, சும்மாடு கட்டிய தலையில் மண்பானையுடன், அல்லிக்குளத்தில் நீராடி  நீர் மொண்டுவரப் போகிறாள் சீதை. இனியும் அவள் அரச வம்சத்தவள் அல்ல என்பதற்கு இந்தக் காட்சி ஒரு குறியீடு; ‘கரையில் விரித்த துணியில் கைகால்கள் அசைத்தபடி கிடக்கும் சிசுவுக்கு நிர்மலமான வெற்று ஆகாயமே மிகப்பெரிய வேடிக்கையாய் இருந்தது’ என்ற ஒரு வாக்கியமே அந்த மனிதர் மிகப் பெரிய எழுத்தாளர்  என்பதற்குச் சான்று – என்றெல்லாம் புல்லரித்தான்.

அடுத்த காட்சியில், குடிலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. குளிக்கப் போகும்போது குழந்தையைத் தூக்கிப்போகும் வழக்கம் கிடையாது சீதைக்கு. வால்மீகியிடம் பாடம் கேட்க வரும் ரிஷிகுமாரன் யாரையாவது பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போவாள்.

தர்மசூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு சமாசாரத்தைப் பாடம் கேட்டு தலை கிறுகிறுத்துக் குடிலுக்கு வரும் இளைஞன், குழந்தையைக் காணோமே என்று பதறுகிறான். இன்றைக்குத் தன்னிடம் ஒப்படைத்துப் போனாளா இல்லையா என்றே உறுதியாக நினைவில்லை. கேட்ட பாடத்தின் வலு அப்பேர்ப்பட்டது!

பதற்றம் அடங்காமலே குருவிடம் சென்று முறையிடுகிறான். அவர் கண்ணைமூடிச் சிந்திக்கிறார். மன்னர்குல விரோதம் கிடக்கட்டும், ஒரு தாயின் பொருமல் லேசுப்பட்டதாகவா இருக்கும்? பதிவிரதை வேறு. சாபம் கீபம் கொடுத்துவிட்டால்? சீடனுக்கு மட்டும் தனியாகவா கொடுப்பாள்?

சட்டென முடிவெடுக்கிறார். தபோபலம் முழுவதையும் பிரயோகித்து, ஒரு தர்ப்பையின் அடிப்பகுதியைக் கிள்ளித் தொட்டிலில் கிடத்தி, காணாமல் போன குழந்தையின் அப்பட்டமான நகல் ஒன்றை உருவாக்குகிறார். வடமொழியில் ‘குசம்’ என்றால் தர்ப்பைப் புல்…

நிம்மதிப் பெருமூச்சுடன் இருவரும் வாசலுக்கு வருகிறார்கள் – தலையில் பானையும் இடுப்பில் குழந்தையுமாக அந்த மாதரசியும் வாசலில் வந்து நிற்கிறாள்!

உள்ளே இருக்கும் குழந்தையை மறைக்க அவகாசமில்லை – ஒன்று கிடக்க ஒன்று நடந்து சிசுஹத்தி பீடித்துவிட்டால் என்ன செய்வது… இந்தக் குழந்தைக்கு ‘குசன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள்!…  என்று கதை முடிகிறது.

‘இவ்வளவு கஷ்டப்பட்டு, தபோபலத்தை இவ்வளவு வீணடிச்சு அதே சாயல்லெ ஒரு குழந்தையை உருவாக்குறதுக்கு முன்னாடி, ஞானதிருஷ்டியிலெ  நல்லாத் தேடிப் பாத்துருக்கலாமேப்பா!’  என்று சிரித்தேன். தாமுவுக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும், ‘குதர்க்கமாப் பேசாதப்பா. வேதகாலத்தோடெ தர்க்கமே வேறெ. அதெல்லாம் நமக்குப்         புரியாது.  நாம என்னா முனிவர்களா!’  என்று சமாளிக்க முயன்றான். என் முகத்தில் அதிருப்தியைவிடக் கேலி அதிகமாய்த் தெரிந்ததோ என்னவோ, ‘சரி விடு, அன்னைக்கி பைனாகுலர்ஸ் சரியா வேலை செய்யலெ போல! ‘ என்றான். இருவரும் சந்தோஷமாகச் சிரித்தோம்!

விடுதி வாசலில் தாமுவே நின்றிருந்தான். ஆச்சரியமாய் இருந்தது. கல்யாண மாப்பிள்ளை, இந்த நேரத்தில் இங்கே நிற்கிறானே… தங்குமிடத்திலிருந்து மண்டபம் அரை கிலோமீட்டர் தூரம்தான் என்று அவன் எழுதிய வரி எனக்குள் மிணுங்கியது.

‘என்னடா, கல்யாணக்காரன் இங்கே வந்து நின்னுட்டிருக்கே!?’ ஆச்சரியமாகக் கேட்டபடி நெருங்கினேன். அவன் புன்னகைத்தான்.

‘ஏ, நான் ராமுப்பா!  வெள்ளையுஞ் சொள்ளையுமா நிக்கிறதெப் பாத்து
ஏமாந்துட்டியாக்கும்!’  என்றவாறே எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு இட்டுப்போனான்.

இரண்டிரண்டு பேருக்கு ஒரு அறை என்றாலும், எல்லாரும் பொதுவில் கூட ஒரு பேரறையும் ஏற்பாடாகியிருந்தது. உடை மாற்றிக்கொண்டு அங்கே போனேன். மண்டிய தாடி மீசை, பரட்டைத் தலை என பார்க்கப் பார்க்க வேதகால ரிஷிபோலவே தெரிந்த மூத்த கவிஞருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். முன்னரே எனக்கு அறிமுகமானவர்தான். கிசுகிசுத்த குரலில் அவருடன் பேசிக்கொண்டிருந்த இளைஞன் புதியவன். சற்று நேரத்தில்  குடி கோலாகலம் தொடங்கியது.

தம்ளர்களை  அவ்வப்போது  நிரப்பிக்கொண்டே                  அரட்டை தொடர்ந்தது. கவிஞருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த புதியவன் எழுந்து என்னருகில் வந்து அமர்ந்தான். ‘நீங்க கிருஷ்ணன்தானே?’ என்று விசாரித்தான். ‘இவ்வளவு முரட்டு தோரணையில் ஏன் கேட்க வேண்டும்?’ என்று வியந்தபடி ஆமோதித்தேன்.

அண்மையில் ஒரு நடுவாந்தரப் பத்திரிகையில் வந்திருந்த மதிப்புரை பற்றிப் பேசத் தொடங்கினான். எனக்கு இடது பக்கம் இருந்த கவிஞரின் ஒரு கட்டுரைத்தொகுதி பற்றிய  மதிப்புரை. குறிப்பிட்ட ஒரு கட்டுரையைக் கடுமையாகத் தாக்கி ஓரிரு பத்திகள் அதில் இருந்தன. இதில் விநோதம் என்னவென்றால், மேற்படிக் கட்டுரையே ஒரு கட்டுரை பற்றிய மதிப்புரைதான். குழப்பமாக இருக்கிறதல்லவா? சொல்லும்போதுதான் சிடுக்காகிறது. எனக்குள் மிகக் கோவையாகவே பதிந்திருக்கிறது. மேலும் குழம்ப வேண்டாம் –  சாரத்தை மட்டும் சொல்கிறேன்.

மெல்லிய வேதாந்த விசாரம் தொனிக்கும் ஒரு கட்டுரை கவிஞரின் தொகுப்பில் இருந்தது. மதிப்புரை, மேற்படிக் கட்டுரையை சாத்து சாத்தென்று சாத்தியது. ‘விசாரக் கட்டுரையின் பேசுபொருள் ஒருவித ‘விவேகத்தை’ விசாரிக்க முயல்கிறது. நடைமுறைக்காலத்தில், அந்த மாதிரியான விவேகங்கள் செல்லுபடியாகாது’ என்பது கவிஞரின் வாதம் (அல்லது, ‘ஞானம்’ என்று குறிப்பிட்டிருந்தாரோ?) மேற்படி வாதத்தைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, சில விஷயங்களை முன்வைத்தது மதிப்புரை,

1 விவேகம் என்று கவிஞர் குறிப்பிடும் பார்வை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பொதுவானதல்ல.

2 நடப்புக்கால சமூகத்தையும் அதன் நம்பிக்கைகளையும் அறுதியானவை என்று கொள்ள வேண்டியதில்லை. ஒரு காலகட்டத்தின் ‘விவேகத்தை’ அடுத்தடுத்த தலைமுறைகள் பரிசீலிக்கவும், மறுபடி முன்வைக்கவும் அவசியம் உண்டு. இதன் வழியாகவே, அது நிஜமான ‘விவேகம்’தானா என்பது உறுதிப்படும்.

3 மரபின் தொடர்ச்சியை முற்றாக அறுத்துக்கொண்டு ஒரு பார்வைக்கோணம் ஸ்தாபிதமாகிவிட முடியாது; எதை மறுக்கிறோம் என்பதையாவது திரும்பச் சொன்னால்தானே அடுத்த காலகட்ட வாசகருக்குப் புரியும்!

4 விவேகம் மட்டுமல்ல, முட்டாள்தனமுமே தலைமுறைகள் தாண்டித் தொடர்வதுதான். சமத்காரமான,  ‘அறிவுஜீவி’ச் சாயலுள்ள,   வாக்கியங்களை எழுதிய மாத்திரத்திலேயே ஒரு முட்டாள் உருமாற்றம் அடைந்துவிடுவதில்லை; அறிவுஜீவியின் சாயல் மட்டும் வேண்டுமானால் கிடைக்கலாம்!

5 ‘விவேக’த்தின் சாயல் தென்படும் சந்தர்ப்பங்கள் அத்தனையுமே விவேகமானவை என்று கொள்ள வேண்டியதில்லை!

எனக்கு அந்த மதிப்புரையின்மீது நல்ல அபிப்பிராயம்தான். யாரோ ‘ராட்சசன்’ என்ற புனைபெயரில் ஒளிந்துகொண்டு எழுதியது. மொழிநடையையும் வசவின் கூர்மையையும் வைத்து, எழுதியவர் இன்னாரென்று  கிட்டத்தட்ட யூகித்துக்கூட  வைத்திருந்தேன். கவிஞரைக் கொந்தளிக்கவைத்தது மதிப்புரையின் கடைசி வாக்கியம்தான் என்று படுகிறது:

இப்படியெல்லாம் அபத்தக் கட்டுரைகள் எழுதுகிறவர், கவிஞரே அல்ல! கவிஞரின் சாயல் கொண்டவர்கூட அல்ல!!

நான்தான் எழுதியிருக்கிறேன் என்று நினைத்து இந்தப் பயல் முறுமுறுத்தான்! இன்னொரு தடவை இந்த மாதிரி எழுதினால், அடுத்த மதிப்புரை எழுதக் கை இருக்காது என்று மிரட்டினான்!! மிகுந்த விநயத்துடன் சொன்னேன்:

“அது நான் எளுதுனதில்லைங்க. யாரோ ‘ராட்சசன்’னு பேர் போட்டுருந்ததே.
நான் என்னோட பேரைத் தவுர வேறெ பேர்லெ எளுதுறதில்லே.  சாரோடெ கவிதைகளைத்தான்  படிச்சிருக்கேன். கட்டுரைப் புஸ்தகம் வந்துருக்கூங்குறதே அந்த மதிப்புரையைப் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.” ஒங்க எளுத்து மாதிரியே இருந்துச்சு நடை. அதுனாலெதான் கேட்டேன்”  என்று சொல்லிக்கொண்டே கவிஞரின் முகத்தைப் பார்த்தான்.  ஏதோ சங்கேதம் கிடைத்த மாதிரி ஒரு நிறைவு இவன் முகத்தில் படிந்தது. சம்பந்தமேயில்லாமல் நாலைந்து வாக்கியங்கள் பேசிவிட்டு விலகிப் போனான். அந்தக் காலகட்டத்தில் நான் எழுதிய ஓரிரண்டு மதிப்புரைகளும், கட்டுரைகளும் என்னுடைய தொகுப்புகள் எதிலுமே இடம்பெறாமல் போனதற்கு அந்த இரவும் ஒரு காரணம்.

இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

1 என்னுடைய எழுத்தில் இன்னொருவரின் சாயல் இருப்பதை நான் அறிய நேர்ந்த சந்தர்ப்பம் அது. எனது பார்வையும் நடையும் சொற்பிரயோகங்களும் வேறு கதிக்கு மாறுவதற்கும் காரணமான இரவு. என்ன, இந்த மாற்றங்கள் வசப்படுவதற்காக, எழுதுவதையே சில ஆண்டுகள் நிறுத்தியிருந்தேன்.

2 பின்னாட்களில் வேகவேகமாகக் கதைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கியபிறகு, அபூர்வமாக ஓரிரு கட்டுரைகள், நாலைந்து அஞ்சலிக் கட்டுரைகள், சில மதிப்புரைகள், பின்னட்டைக் குறிப்புகள் எழுத நேர்ந்தபோதும், கவனமாக வேறு பெயரிலோ, பெயரே இல்லாமலோ எழுதப் பழகிவிட்டேன். இரண்டாம் பருவ எழுத்தின் மொழிநடையும், உள்ளடக்கமும் என்னவாகயிருக்கிறது என்பது உங்களுக்கே  தெரியும்.

முத்தாய்ப்பான சங்கதி, அந்த விடுதியில் தங்கிய அநேக நண்பர்கள் அளவுக்கதிகமாகக் குடித்து மட்டையாகிவிட்டபடியால், மறுநாள் அதிகாலை முகூர்த்தம் நடந்து முடிந்த திருமண மண்டபத்துக்கே போகாமல் ஊர் திரும்பினோம். அந்த அளவு போதை மிச்சமிருந்தது.

‘தாமு சார் ஒய்ஃப் எப்பிடி இருக்கா!’ என்று பத்மினி விசாரித்தபோதுதான் எனக்கே உறைத்தது என்றால் பாருங்களேன்!

இன்னமும் அந்த இரவு மறக்காமல் இருப்பதற்கு, விநோதமான காரணங்கள் இருக்கின்றன. அந்தப் பயல் பேசிக்கொண்டிருந்தபோது கவிஞரின் முகம் அவருடைய எழுத்தைப்போலவே கடுமையாய் இறுகி இருந்தது; அடியாளின் முகத்தில் அதே கடுமை அழுத்தமாகப் படியத் தொடங்கியிருந்தது: பின்னாட்களில் அவனே கவிஞன் ஆகி, குருநாதரின் நகல்போல வண்டிவண்டியாய் எழுதி, தமிழ்ச்சூழலில் கவிதைக்கென நிறுவப்பட்ட பரிசுகள், விருதுகள் ஒன்று பாக்கியில்லாமல் வாங்கிக் குவித்தபோது, முழுக்கவே குருவின் ஜாடைக்கு மாறிவிட்டது அவனுடைய  முகச் சாயல்! நீண்ட காலம் ஆஞ்சநேயர் கோவில் பட்டராக இருந்த  ஒருவருக்கு ஆஞ்சநேயரின் முக அமைப்பு வந்து சேர்ந்திருந்தது என்று ஒரு கதையில் நான் எழுதியபோது, இந்த இரண்டுபேரின் நினைவும் எழுந்தது. கவனமாக, அதைக் குறிப்பிடாமல் தவிர்த்தேன்…

ப்புறம் நெடுங்காலம் தாமுவைப் பார்க்க வாய்க்கவில்லை; படிகளில் தாவித் தாவி, எனக்கு மூன்று நான்கு கட்டங்கள் மேலே போயிருந்தான். நானோ, இருக்குமிடமே சொர்க்கம் என்று குமாஸ்தாவாகவே தொடர்ந்திருந்தேன்.
வெவ்வேறு ஊர்களில், மாநிலங்களில், பொறுப்புகளில் பணிபுரிந்துவிட்டு, அண்மையில்தான் கல்கத்தாவிலிருந்து சென்னை திரும்பியிருந்தான். ஆர்வமாய் விசாரித்துத் தேடிவந்து, விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினான். ஆனால், நிம்மதியாய்ப் பேச முடியாதபடி, தொடர்ச்சியாக அவனுக்கு செல்ஃபோனில் அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன.

“இப்பிடித்தாம்ப்பா, இருபத்துநாலு மணிநேரமும் பேங்க் வேலைதான் பாக்க வேண்டியிருக்கு. அப்பிடிப் பாத்தும் நல்லபேர் வரமாட்டேங்குது!”
நகைப்புடன் சிரித்தான்.

அந்த வருடம் சென்னை புத்தகச் சந்தைக்குச் சேர்ந்து போனோம். எழுத்தாள நண்பர்களும், வாசக நண்பர்களும் என எனக்கொரு வட்டம் உருவாகியிருந்ததைப் பெருமிதம் மிளிரும் முகத்துடன் பார்த்துக்கொண்டு உடன் வந்தான். யாராவது என்னுடன் படமெடுத்துக்கொள்ள அணுகினால், உடனடியாகத் தள்ளி நிற்பான். ஓரிரு தடவை அவனே எதிரில் நின்று எடுத்துக்கொடுக்கவும் செய்தான்.

சாகித்திய அகாடமி ஸ்டாலைத் தாண்டும்போது, மேற்படி வங்காள எழுத்தாளர் பற்றி எப்போதாவது நினைவுவந்ததா என்று கேட்டேன்; அதிர்ந்து சிரித்தான்!…

ஒரு வியாழக்கிழமை, ரத்த அழுத்தம் சடாரென்று பலமடங்கு அதிகரித்து, நாளம் வெடித்து இறந்துபோனான் தாமு. அந்தச் செய்தி அவனுடைய எண்ணிலிருந்தே எனக்கு வந்துசேர்ந்தது. என்னவொரு  அபத்தம்…

ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இத்தனை விஷயங்களையும் ஒரே சரத்தில் கோக்கும் சரடு எது என்று ஆச்சரியமாய் இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள், அதிலும் குறிப்பாக, வாலிபப் பிராயத்து நினைவுகள் அழுத்தமாகப் பதிந்திருக்க, சமீபத்தைய சம்பவங்கள் நிகழ்ந்த தடயமே இல்லாமல் மறைந்துபோவதைவிடப் பெரிய ஆச்சரியம் இது. அறுபதைத் தாண்டிய பிராயத்தில், என் நாட்கள் வேகவேகமாகத் தீர்கிற மாதிரி உணர்கிறேனே, இதுகூட என்னுடைய பிரமையாகவே இருக்கலாம். ஆனால், லேசில் சமாதானமடைய முடியாத பிரமைகளும் இருக்கத்தான் செய்கின்றன…

காலையில் சற்றுத் தாமதமாக எழுந்து வந்தேன். எதிர்வீட்டு வாசலையும் எங்கள் வாசலையும் இணைப்பதுபோல, தெருவை அடைத்து ஷாமியானா போட்டிருந்தது. அவர்கள் வாசலையொட்டி பத்திருபது  ப்ளாஸ்ட்டிக் நாற்காலிகள். ஷாமியானாத் துணிமீது என் கவனம் குவிந்தது –  வழக்கமாக இருக்கும் கருநீலம், இளஞ்சிவப்புப் பட்டைகள் போல இன்றி, கறுப்பு வெள்ளைப் பட்டைகள் கொண்டது. இதே நிற ஷாமியானாவை எங்கோ பார்த்திருக்கிறேன்… காபித் தம்ளருடன் எதிர்ப்பட்ட பத்மினி தகவல் சொன்னாள்:

‘ரங்கநாதன் போய்ட்டார்ப்பா. ராத்திரி பன்னண்டு மணிக்கி எழுப்பி, வெந்நீர் கேட்ருக்கார். ப்ரேமா கொண்டு போம்போது ஆள் இல்லே. நல்ல மனுஷன்.    நல்ல சாவு’…. வழக்கத்தைவிடவும் காபியில் சூடு அதிகம் இருந்தமாதிரி உணர்ந்தேன். ரங்கநாதனுடன் நேற்றுச் சாயங்காலம்கூடப் பேசிக்கொண்டிருந்தேன். என்னைவிட ஆறேழு வயது பெரியவர்… ஆ, நினைவு வந்துவிட்டது. தாமுவின் வீட்டு வாசலில் இதே நிற ஷாமியானாதான் போட்டிருந்தது.

வில்லிவாக்கத் தெரு ஒன்றில், ஒரே அமைப்பில் கட்டப்பட்ட இரண்டு வீடுகளில், ஒரு வீட்டின்முன் போட்டிருந்த ஷாமியானாவை வைத்துத்தான் தாமுவின் வீடு என்று அடையாளம் கண்டேன். மற்றது ராமுவுடையதாம்…

தரையில் மல்லாந்து கிடந்த தாமுவுக்கும், துயரம் அப்பிய முகத்துடன் சாவுவீட்டில் பரபரப்பாக இயங்கிய ராமுவுக்கும் ஒரே சாயல் உருவாகியிருந்தது. முழு வழுக்கை, பெருந்தொந்தி, கறுத்த முகத்தில் இன்னும் கறுப்பாய்ப் புடைத்த கீழுதடுகள். இவற்றோடு, வீடு முழுவதும் நிரம்பியிருந்த மட்டரக ஊதுபத்தி மணமும், அஞ்சலிக்காக வந்து மூலையில் குவிந்திருந்த மாலைகளின் துர்மணமும் தாமு அளவுக்கே ராமுவின்மீதும் படிந்திருப்பதாக எனக்குப் பட்டது, அவன் என்னைத் தாண்டிப் போகும்போதெல்லாம்.

அது என் பிரமையாகவேகூட இருக்கலாம். ஆனால், இப்போது, இடையீடற்ற காட்சித்தொகுப்பு புகைபோலப் போர்த்திவிட்டு அகலும்போது,  என்மீதும் அதே மணம் வீசுவதாக உணர்கிறேனே, இது வெறும் பிரமைதானே?…

*