திருப்பதி லட்டு மீது படிந்துள்ள கொழுப்பு தீட்டு அகல விடிய விடிய நடத்தப்பட்ட ’சாந்தி ‘யாகத்தில் மாட்டு ஹோமியத்தை திருப்பதி கோவில் முழுக்க தெளித்து,குங்கிலிய புகை மூலம் கெட்ட ஆவிகளைத் துரத்தி திருப்பதி தேவஸ்தானம் தன் புனித மரபை மீட்டுக் கொண்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொன்ன களங்கமற்ற லட்டு மீட்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
இந்த சாந்தி யாகத்தோடு இந்த நாடகம் முடிந்து விடுமா என்றால் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிமீதான தாக்குதல் இன்னும் ஓய்வில்லை. “ ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி லட்டுவில் மாடு, மீன், பன்றி போன்ற விலங்குகளின் கொழுப்பு கலந்திருக்கிறது”என்ற சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு அமராவதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட போது அது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன் அரசியல் எதிரிகளை வீழ்த்த பாஜக ,ஆர்.எஸ்.எஸ். எடுக்கும் அதே மதவாத ஆயுதத்தை நாயுடு ஏன் கையில் எடுக்கிறார் என அதிர்ந்தேதான் போனார்கள். இந்தக் குற்றச்சாட்டை பாஜக சொல்லியிருந்தால் இத்தனை தூரம் பரபரப்பாகியிருக்காது. அதை மதச்சார்பற்றவராக கருதப்படும் சந்திரபாபு நாயுடு கிறிஸ்தவரான ஜெகன் மோகன் ரெட்டிமீது சொன்னதும் அது பற்றிக் கொண்டது.தன் அரசியல் எதிரிகளை வீழ்த்த என்ன கேவலமான ஆயுதத்தையும் சந்திரபாபு நாயுடு கையில் எடுப்பார் என்பது அதிர்ச்சி மட்டுமல்ல, தென்னிந்தியாவில் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவரே இப்படி சமூக விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் ஒரு மதவாதியாக மாறி நிற்பது ஆந்திர சிறுபான்மை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் அதிக வருமானம் ஈட்டும் திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவில் லட்டு விவகாரத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மதம் வழியே அரசியலில் வெற்றிகரமாகப் பிணைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கொழுப்பு விவகாரத்தின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்தால் வேடிக்கையாகவும் வழக்கமான மத கோமாளித்தனங்களாலும் நிரம்பியுள்ளது.
திருப்பதி லட்டுவின் விலங்குகளின் கொழுப்பு என்று இந்தியா முழுக்க ஒரு மணி நேரத்துக்குள் பரப்பப்பட்டது. பாஜகவின் ஐ.டி விங் படு ஆக்டிவாக தெலுங்கு தேசத்தோடு இணைக்கப்பட்டது.
லட்டு வதந்திகள்
இந்துத்துவ சக்திகள் உள்ளூர் இந்து கோவில்களை மையப்படுத்தி அரசியல் செய்வது போல ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தானம் கோவிலை மையமிட்டும் ஆர்.எஸ்.எஸ். அவ்வப்போது அரசியல் செய்வார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆந்திர வாட்சப்புகளில் பரப்பட்ட வதந்தி பெருந்தீயாய் பரவியது. திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணியை தாமஸ் என்ற கிறிஸ்தவருக்குக் கொடுத்து விட்டார்கள். இந்துக்கள் உண்ணும் லட்டுகளை கிறிஸ்தவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரவியது.
உடனே திருப்பதி தேவஸ்தானம் வைஷ்ணவ பிராமணர்கள்தான் திருப்பதி லட்டுவைத் தயாரிக்கிறார்கள்.அவர்களே தயாரிக்கும் பொருட்களின் தரத்தையும் சோதிக்கிறார்கள் என்று நீண்ட விளக்கங்களைக் கொடுத்தது.இது போல எண்ணற்ற வதந்திகள வெங்கடாசலப் பெருமாளை முன் வைத்துப் பரப்பப்பட்டு வரும். ஆனால் அத்தனையும் சிறுபான்மை மக்களைக் குறிவைக்கும் வதந்திகளே.
இந்தியாவில் தற்காலத்தில் தொல்லியல் துறையும், பரிசோதனைக் கூடங்களும் இந்து தேசியவாதத்தின் அலகுகளாக மாற்றப்பட்டு விட்டது. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, ஞானவாபி மசூதி, வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் மசூதிகளை இந்துத்துவ சக்திகள் குறிவைக்கும் போது சட்ட ரீதியாக அதை க்ளியர் செய்து கொடுக்கும் அமைப்புகளாகத் தொல்லியல் துறை இருப்பதை நாம் பார்க்கிறோம். அதே போன்றுதான் அறிவியல் பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன.
ஆந்திராவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு வேண்டியவர்களே திருப்பதி தேவசம் போர்ட் தலைவர்கள் ஆவார்கள். ஓய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த போது ஓய்.வி. சுப்பாரெட்டி திருப்பதி தேவசம் போர்ட் தலைவராக இருந்தார்.அப்போதே சந்திரபாபு நாயுடு இதே குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். ஆனால் அப்போது அது எடுபடவில்லை.காரணம், அப்போது சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகியிருந்தார்.ஜெகன் மோகன் ரெட்டி பாஜக கூட்டணியில் இணையாவிட்டாலும் மோடியோடு நெருக்கமாக இருந்தார். பாஜக கொண்டு வந்த மசோதாக்களைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தும் வந்தார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறிய அந்தக் குற்றச்சாட்டை இதே திருப்பதி தேவசம் போர்டு கடுமையாக மறுத்தது. “கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும், திருமலாவின் புனிதத்தையும் சேதப்படுத்தும் வகையில் பேசி சந்திரபாபு மிகப்பெரிய பாவத்தைச் செய்துவிட்டார்” என்று சுப்பாரெட்டி கடுமையாக நாயுடுவைத் தாக்கினார். அன்றைய சூழலில் அது எடுபடாமல் போக, நாயுடுவும் ரெட்டியும் தேசிய அளவில் கொண்டிருந்த உறவு முக்கியமாக இருந்தது.
பின்னர் பாஜகவோடு நேரடி கூட்டணியில் இணைந்த தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது. முன்னதாக சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் கைது செய்த ஜெகன் மோகன் ரெட்டியால் அவரை நீண்ட காலம் சிறையில் வைக்க முடியவில்லை. பாஜகவோடு மென்போக்கு கொண்டிருந்த ஜெகனை விட கூட்டணி வைக்க முன்வந்த சந்திரபாபு நாயுடுவே பெட்டர் என ஜெகனை வெளியேற்றி விட்டு நாயுடுவை அணைத்துக் கொண்டது பாஜக. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும் திருப்பதி லட்டுகளின் சாம்பிள்களை குஜராத்தில் உள்ள ஆய்வகம் ஒன்றுக்குப் பரிசோதனைக்காக அனுப்பினார்.
அந்த ஆய்வக முடிவுகள் என்ன சொல்கிறது என்பதுதான் வேடிக்கை. லட்டுவில் உள்ள கொழுப்பு வகைகளை S-VALUE என்கிறது அந்த ஆய்வு முடிவுகள். அதில் ஒன்றாவது முடிவில் மீன் எண்ணெய் கொழுப்பு இருக்கலாம் என்றும், மூன்றாவது முடிவில் மாட்டுக் கொழுப்பு இருக்கலாம் என்றும், நான்காவது முடிவில் பன்றிக் கொழுப்பு இருக்கலாம் என்றும் சொல்கிறது. அந்த ஆய்வு முடிவுகள் இருக்கிறது எனச் சொல்லவில்லை. இருக்கலாம் என்கிறது. அதன் பொருள் இல்லாமலும் இருக்கலாம் என்பதுதானே?
ஆனால் இருக்கலாம் என்று தாவரங்களோடு சேர்ந்து இறைச்சிகளையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்ட சந்திரபாபு நாயுடுவோ இதோ ஆய்வே சொல்லி விட்டது. மாட்டிறைச்சி கொழுப்பைக் கலந்து விட்டார்கள் என பரப்பி ஜெகன் மோகன் ரெட்டியை பலிபீடத்தில் வைத்தார்.
புனிதம் ஏற்றப்பட்ட லட்டு
பொதுவாக கொழுப்பு சத்துள்ள தாவரங்களான சோயா, சன்பிளவர், ராப் சீட்,அவரை, கோதுமை,மக்காசோளம் என பல வகையான தாவர விதைகளில் இருந்து கொழுப்பு எடுக்கப்படுகிறது. இதன் செலவும் செய்வேலைகளும் அதிகம். பன்றி, சில மீன்கள், பெருமளவு மாடு இவைகளில் இருந்துதான் அதிக கொழுப்பு கிடைக்கிறது. RED MEAT எனப்படும் சிகப்பு இறைச்சிகளான மாட்டுக்கறி, பன்றி இறைச்சியில்தான் அதிக அளவு கொழுப்பு கிடைக்கிறது.
ஒருவர் மாட்டிறைச்சியை உண்ணும்போது அதிக அளவு கொழுப்பு அவருக்கு கிடைத்து விடுகிறது. மாட்டிறைச்சி உண்ணாத ஒருவர் வெறும், பாலும், நெய்யும், தயிறும், வெண்ணெயும் உண்கிறார் என்றால் அவரும் மாட்டுக்கொழுப்பை எடுத்துக் கொள்கிறார். காரணம், மாட்டுக் கொழுப்பு என்பது மாட்டிறைச்சியில் மட்டுமில்லை அது பாலாக, வெண்ணைய் கட்டிகளாக, நெய்யாக வயிற்றுக்குள் சென்று கொண்டுதான் இருக்கிறது. இப்போது இதை நாம் லட்டு தயாரிப்போடு பொருத்திப் பார்ப்போம்.
திருப்பதியில் லட்டு தயாரிக்க கடலை மாவு,சர்க்கரை, கற்கண்டு,முந்திரி,அரிசி மாவு,எண்ணெய்,தண்ணீர், ஏலக்காய், உலர் திராட்சை, போன்றவை பயன்படுகிறது.
ஆனால், இந்த லட்டின் சுவையை தீர்மானிப்பதில் பிரதானமாக இருப்பது இரண்டு வஸ்துகள். ஒன்று பால், இன்னொன்று நெய். இரண்டுமே மாட்டினங்களில் இருந்து கிடைக்கும்போது,அதை வைத்து தயாரிக்கும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு எப்படி இல்லாமல் இருக்கும். . பசும்பால் அருந்தும் போது அதன் ஊட்டச்சத்து என்பது மாட்டுக் கொழுப்புதான். நெய் உண்ணும்போது அதன் ஊட்டச்சத்து என்பது சந்தேகமில்லாமல் மாட்டுக்கொழுப்புதான்.
சைவ உண்ணிகள் என சலம்பும் இவர்கள் மாட்டிறைச்சி உண்போர்மீது வெறுப்பை உமிழ்ந்து விட்டு இவர்கள் மட்டும் மாட்டின் கொழுப்பை மறைமுகமாக உண்கிறார்கள். பசுவின் பால் மனிதனுக்கானது அல்ல, அது கன்றுக்கானது என்பதுதான் இயற்கை நீதி. பசுவின் பாலைக் கறந்து அதை மனிதன் பயன்படுத்த துவங்கியது மனிதனின் புத்திசாலித்தனம். அதே மனிதன் மாட்டுக்கறி உண்பதற்காகக் கொல்லப்படும் போது அது கொடூர மனம் இல்லையா? உண்மையில் இயற்கை ஆர்வர்லர்கள், சுத்த சைவர்கள் பாலோ, நெய்யோ தொடவே கூடாது. அதை செய்வார்களா?
உலகம் முழுக்க வெவ்வேறு உணவுப்பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள் நூற்றுக்கணக்கான வகைமாதிரியினராக இருந்தாலும் பிரதானமாக VEGETARIAN, non vegetarian,Vegan,Halal,Pescatarian,Eggetarian என இருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு விதமான உணவு பழக்கவழக்கங்கள். இதில் வீகன் உணவைப் பின் பற்றுவோர் பால், நெய்,வெண்ணெய் என விலங்குகளில் இருந்து கிடைக்கும் எதையுமே தொட மாட்டார்கள்.காரணம், அவை விலங்குகளை துன்புறுத்தி உண்பதாகவே கருதுகிறார்கள்.ஆனால் இந்திய பிரமாணர்களோ மேலும் சில உயர்சாதியினரோ மாட்டுக்கறியை இழிவாகப் பேசிக் கொண்டே கன்றுக்குடிக்கு உரிய பாலை எடுத்து பால், தயிர், நெய், வெண்ணெய் என வித விதமாக அசைவ கொழுப்புச் சத்து மிக்க இந்த உணவுகளை உண்கிறார்கள்.
திருப்பதி வணிகம் – நந்தினி VS அமுல்
உலகின் கோடீஸ்வர இந்து ஆலயமான திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அன்றாடம் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. பண்டிகைக்காலங்களில் அல்லது முக்கிய நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒரு லட்டு தயாரிக்க 40 ரூபாய் வரை செலவாவதாக தோராய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்களுடன் பிரதானமாக பயன்படுத்தப்படும் நெய்யை கொள்முதல் செய்ய ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 1,400 டன் நெய்க்கான இ- டெண்டர் விடப்படுகிறது.மூலப்பொருட்களில் ஏற்படும் விலை ஏற்றத் தாழ்வுகள் ஜி.எஸ்.டி எல்லாம் போக அரசும் இந்த லட்டு தயாரிப்புக்கு மானியங்களைக் கொட்டிக்கொடுக்கிறது.
லட்டு தயாரிப்பதற்கான நெய்யை சப்ளை செய்வதற்கான ஆர்டரை கைப்பற்றுவதுதான் போட்டி.இந்த நெய்யை சப்ளை செய்வதில் ஐந்து நிறுவனங்கள் தொழில் முறை நிறுவனங்களாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன.
இதற்கு முன்னர் தென்னிந்திய பால் சந்தையைக் கைப்பற்ற முயன்ற குஜராத் அமுல் நிறுவனம் தொடர்பான சர்ச்சையைத் தெரிந்து கொள்வது அவசியம். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்த போதும் கர்நாடக பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நந்தினி பாலை விட குஜராத்தின் அமுல் பால் தரமானது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது பாஜக. விழித்துக் கொண்ட காங்கிரஸ் நந்தினியைக் காப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்தது. அது ஒரு அலையாக மாறியது. நந்தினி பாலை அமுல் அமுக்கப்பார்க்கிறது என்று விவசாயிகளும் பொதுமக்களும் அமுலுக்கு எதிராகத் திரும்பியதோடு பாஜக தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் ஆனது. இது கர்நாடக மாநிலத்துக்குள் நடந்த விஷயம். அப்படியே ஆந்திராவுக்கு வந்தால் சூழல் வேறு.
அங்கு ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர் பாஜகவுக்கு நெருக்கமாக இருந்தார். அவருக்குப் பிடிக்காத காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில் வந்து விட்டது. கடந்த இருபது ஆண்டுகளாக கர்நாடக மாநில அரசுக்குச் சொந்தமான நந்தினி நிறுவனம்தான் திருப்பதி லட்டு தயாரிக்க பிரதானமாக நெய் சப்ளை செய்து வந்தது. ஜெகன் மோகன் ரெட்டி உருவாக்கிய நெருக்கடியால் 2023 டெண்டரில் இருந்து நந்தினி ஒதுங்கியது. கிலோ நெய் 475 ரூபாய்க்கு நந்தினி கொடுக்க அதை விட குறைவாக அமுல் கொடுக்கிறது என்று பிரச்சனை செய்ய, நந்தினி திருப்பதி லட்டுவுக்கு நெய் சப்ளை செய்வதை நிறுத்திக் கொண்டது. இப்போது அதன் தரம் பற்றி கேள்வி எழ நந்தினி பால், நெய் இல்லாமல் தயாரிக்கப்படும் லட்டுவின் சுவை எவ்விதத்தில் மாறவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்யும் அளவுக்குச் சென்றது.
அமுல் நந்தினியை அழித்து விட்டு கர்நாடகத்தில் நுழைய முயன்றது. அதை காங்கிரஸ் முறியடித்தது. தமிழ்நாட்டில் ஆவினை அழித்து நுழைய முயன்றது அமுல். கடும் எதிர்ப்பால் பின் வாங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு அமுலை அனுமதிக்க முடியாது என கடிதம் எழுதினார்.
கர்நாடகாவும், தமிழ்நாடும் எதிர்த்த அமுல் நிறுவனத்தை ஆந்திராவுக்குள் அனுமதித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர பால் உற்பத்தி சந்தையை அமுலுக்குத் திறந்து விட்டதோடு, திருப்பதி கோவில் லட்டு தயாரிப்புக்கான நெய் சப்ளைக்கும் அமுலை அனுமதித்தார் ஜெகன். நந்தினியை வெளியேற்றி விட்டு அமுல் திருப்பதிக்குள் நுழைந்தது இப்படித்தான்.அமுல் ஆந்திராவுக்குள் நுழைந்த முப்பது மாதங்களுக்குப் பின்னர் பால் உற்பத்தியாளர் சங்கங்களின் சொத்துக்கள் அனைத்தும் அமுல் கைகளுக்குச் சென்றது. பாலுக்குப் போதுமான விலையும் பால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இது பற்றிய கடுமையான முறையீடுகள் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து உருவான போதும் ஜெகன் மோகன் ரெட்டி அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆந்திர பால் உற்பத்தி இப்படித்தான் அமுல் கைகளில் சிக்கியது.
திருப்பதி லட்டு தயாரிப்பில் பிரதான சப்ளையரான நந்தினி வெளியேற்றப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஜெகன் தோல்வியடைந்து சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தார்.
சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்து சிறையில் அடைத்த ஜெகன்மோகன் ரெட்டியைப் பழிவாங்கக் காத்திருந்த தெலுங்கு தேசம் தொடர்ச்சியான தாக்குதலை ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மீது நடத்தி ஆந்திராவை பெரும் கலவரக்காடாக்கியது. இன்னொரு பக்கம் ஜெகனை அரசியல் ரீதியாக வீழ்த்த திருப்பதி லட்டுவையும் இந்து பக்தர்களையும் மூலதனமாக்கினார் சந்திரபாபு நாயுடு.
ஆட்சிக்கு வந்த நாயுடு முதலாவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரியாக சியாமள ராவை நியமித்தார்.காரணம், ஏற்கனவே இதே போன்ற குற்றச்சாட்டை நாயுடு சொன்ன போது திருப்பதி தேவஸ்தான அதிகாரியாக இருந்த ஓய்.வி.சுப்பாரெட்டி அதைக் கடுமையாக மறுத்திருந்தார். தனது விசுவாசியான சியாமள ராவை அந்தப் பதவிக்குக் கொண்டு வந்த பின்னர் இந்த குற்றச்சாட்டை சொல்வது நாயுடுவுக்கு எளிதானது. சியாமள ராவ் லட்டுவை அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி நாயுடுவுக்குத் துணை போனார்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெயைக் கலந்து இந்துக்களை அவமதித்து விட்டார் என்ற நாயுடுவின் கோரிக்கை ஒற்றை நோக்கத்தைக் கொண்டதாக மட்டும் இல்லை என்கிறார்கள். நாயுடு குடும்பத்துக்குச் சொந்தமான ஹெரிட்டேஜ் தயாரிக்கும் நெய்யும் திருப்பதி லட்டுவில் கலந்தால் நன்றாக இருக்கும் என நாயுடுவின் குடும்பம் விரும்புவதாக அரசியல் விமர்சகர்களிடம் ஒரு பார்வையுள்ளது.மொத்தத்தில் சந்திரபாபு நாயுடுவின் இந்த லட்டு அஸ்திரம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானது. பாஜக உள்ளிட்ட இந்துத்துவ பரிவாரங்களைத் தன் உறுதி மிக்க படையாட்களாக இணைப்பது. தனது குடும்ப பால் வணிகத்தை விஸ்தரிப்பது எனப் பல நோக்கங்களைக் கொண்டதாக உள்ளது.
8.50 லட்சம் கிலோ வீதம் 5 நிறுவனங்களுக்கு டெண்டர்கள் கொடுக்கப் பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு நிறுவனமான ஏ.ஆர். டயரி புட்ஸ் நிறுவனம் 68,ஆயிரம் கிலோ நெய்யை அனுப்பியுள்ளது. இதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாகவும் அதில் வனஸ்பதி கலந்திருப்பதாகவும் தேவஸ்தானம் ஆரம்பத்தில் கூறியது. பின்னர்தான் வனஸ்பதிக்குப் பதில் மாட்டுக் கொழுப்பு வந்தது.
இதை வைத்துதான் ஆந்திர அரசியலில் தாண்டவம் ஆடுகிறார் நாயுடு. இது ஆந்திராவோடு முடிந்து போகும் விஷயமல்ல. இந்துத்துவ அரசியலில் வதந்திகளும் பொய்களும் மிகப்பெரிய மூலதனம். ஒரு வதந்தியும் கலவரமும் கொடுக்கும் வெற்றி வேறு எதுவும் கொடுக்காது. அதைத்தான் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செய்கிறார். இதே முயற்சி தமிழ்நாட்டிலும் நடக்கிறது.பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையைக் கலக்கிறார்கள் எனச் சொல்வதும், யாரோ நான்கு பேர் என் பூணுலை அறுத்து விட்டார்கள் என இளம் அய்யர் ஒருவர் சொல்வதும் வெறும் அவதூறு அல்ல. அது ஆழமான கலவர நோக்கங்களைக் கொண்டது.
அரசியலுக்காக மதத்தையும் நம்பிக்கைகளையும் பயன்படுத்துவது, பல்லாயிரம் உயிர்களோடு விளையாடுவது என தெரிந்திருந்தும் இக்காலத்திலும் மதத்தையும் நம்பிக்கைகளையும் அரசியல் கருவிகளாக அரசியல் தலைவர்கள் பயன்படுத்துவதன் ஆபத்தை ஆந்திரம் அனுபவிக்கிறது.