சமீபத்தில் புனேவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் அதீத பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது நாடு முழுக்க கவனம் பெற்றிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில், மனிதர்களுடைய வேலைப்பளு குறைவதுபோல தோற்றம் கொடுத்தாலும் உண்மையில் பணிச்சுமை என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், மனநல மற்றும் உடல்நல சீர்கேடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கடும் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதங்கள் உலகளாவிய அளவில் எழுந்திருக்கின்றன.
இதேபோல் சென்னையில் சாம்சங் நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் யூனியனை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மற்ற நாடுகளுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகின்றனர்.
நான்கு நாள் வேலைவாரம்: ஒரு உலகளாவிய பரிசீலனை
வேலைவாய்ப்பில் மனநலம் குறித்த சிந்தனைகள் பல நாடுகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்றவை, பணி நேரத்தை குறைப்பதன்மூலம் வேலைவாய்ப்பில் மனநலத்தை மேம்படுத்த ஆராய்ந்து வருகின்றன. வாரத்திற்கு நான்கு நாள் வேலை என்பதே இதற்கான முடிவாகத் திரும்புகின்றது. மிக நீண்ட வேலை நேரம் பணியாளர்களின் மனநலத்தை பாதிக்கிறது, மேலும் இதனால் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைகிறது.
ஆஸ்திரேலியாவின் தொழிலாளர்கள் அமைப்பு, இந்த முயற்சியைக் கையாளுவதில் முன்மாதிரியாக உள்ளது. மேலும், ஜப்பான் தனது பாரம்பரிய பணி நேரத்தில் புதிய மாற்றங்களை ஆராய்ந்து வருகிறது. வேலை நேரம் குறையும்போது பணியின் தரமும், லாபமும் அதிகரிப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. குறைவான பணிச்சுமையால் தொழிலாளர்களின் மனநலம் மேம்படுவது உற்பத்தியில் தரமும், லாபமும் அதிகரிப்பதற்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன.
சர்வதேச பாதிப்புகள்:
2019-ஆம் ஆண்டு கணக்குகளின்படி, தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 15% பேர் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் 12 பில்லியன் வேலைநாட்கள் மன அழுத்தம் மற்றும் மனநலச் சீர்கேடுகளின் காரணமாக இழக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இது சராசரியாக 1 டிரில்லியன் டாலர் மதிப்பிற்கு சமம்.
உற்பத்தித் துறையில் அதிகரித்து வரும் இந்த இழப்புகளுக்கு பணியாளர்களின் மனநலச் சீர்கேடுகளே முதன்மையான காரணமாக இருப்பதாக உணர்ந்து வளரும் நாடுகள் தங்களது தொழிலாளர்களின் மனநலத்தை மேம்படுத்துவதில் முனைப்பாக இருக்கின்றன, அதே நேரத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பணிசூழல் மற்றும் குறைவான ஊதியத்தைக் கணக்கில்கொண்டு தங்களது நிறுவனத்தின் பெரும்பாலான வேலைகளை இந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டு முடித்துக்கொள்கின்றன. இதன் விளைவாக வளரும் நாடுகளில் மனநலச் சீர்கேடுகளும், உடல்நலச் பிரச்சினைகளும் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.
உலக மனநலம் தினம்: பணியிடத்தில் மனநலத்தை முன்னுரிமைப்படுத்தும் தேவை
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநலம் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு “வேலைவாய்ப்பில் மனநலத்தை முன்னுரிமைப்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்ற கருப்பொருளுடன் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பில் மனநலம் பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், அதன்மீதான கவனத்தை அதிகரிக்க வேண்டிய தேவை அதிகம் உணரப்படுகிறது. பணியாளர்கள் மனநலனில் எதிர்நோக்கும் சிக்கல்கள் நிறுவனங்களில் பணிபுரியும் மேம்பாட்டை மட்டுமல்லாது, வேலைச்சூழலையும் நேர்மறையாக மாற்ற உதவுகின்றன.
நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்வதால் மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்றவை அதிகரிக்கின்றன. இந்த தொடர் மனச் சீர்கேடுகளினால் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அதீத பணிச்சுமை, வேலை நெருக்கடிகள், அழுத்தங்கள், பாகுபாடுகள், வேலை நேரத்திற்குப் பிறகும் வேலை செய்வதற்கான நிர்பந்தங்கள், வரையறையற்ற இலக்குகள், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகள் இந்த மன நல மற்றும் உடல் நல சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதால் இந்த “பணியிடத்தில் மன நல மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியிருக்கிறது” என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
பணியிடங்களில் மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை ஊழியர்களுக்கிடையே பரப்ப வேண்டும். “வீட்டிலிருந்தே பணி” என்ற நிலை வந்தபிறகு வேலையிலிருந்து தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த சமநிலை தவறும்போது, மனநலம் மோசமடைகிறது, அது பணியையும், உற்பத்தித் திறனையும், அந்த தனிநபரையும் பாதிக்கிறது, அவரது குடும்பத்தையும் பாதிக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு சமகாலப் பிரச்சினையையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
மனம் என்பது ஒரு தனிநபர் மட்டும் சார்ந்ததல்ல. சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரங்களின் கூட்டு விளைவே மனம். ஒரு தனிமனிதனின் மன ஆரோக்கியத்தில் நிகழும் சிக்கல்களைப் பேசவேண்டுமானால் நாம் முதலில், அந்த தனிநபர் சார்ந்த சமூக, அரசியல், பண்பாட்டு மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் இருந்துதான் தொடங்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியே, அத்தனைக்கும் தீர்வாக முன்னெடுக்கும் இந்த பந்தயத்தில் நாம் நம்மையே இழந்து கொண்டிருக்கிறோம். நமது கனவுகள், லட்சியங்கள், ஆசைகள், நுண்ணர்வுகள் என அத்தனையயும் நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நுகர்வு கலாச்சாரத்தில், நம் எல்லோருக்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்கிறது. அப்படி ஒருமதிப்பில்லாதவர்கள் இரக்கமில்லாமல் இந்தப் போட்டியிலிருந்து தூக்கி வீசப்படுகிறார்கள். நாளை, நாமும் அப்படி தூக்கிவீசப்படலாம் என்ற எந்த பிரக்ஞையும் இன்றி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நம் உலகம் நம் கையில் வந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும். அதேவேளையில், நாம் நமது உலகத்தில் இருந்து எங்கோ விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். சகமனித பிணைப்புகள் சுருங்கிப்போய்விட்ட காலக்கட்டத்தில் நம்மைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. நாமும் யாரைப் பற்றியும் கவலை கொள்வதில்லை.
ஒரு மனதின் ஆதார தன்மையே, சகமனிதரோடு இணங்கி வாழ்தல்தான். அதற்கான தேவைகள் குறைந்துபோன நிலையில் மனம் மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்கும்?
நம்மிடம் இதற்கு என்ன பதில் இருக்கிறது?
நான் பத்தாவது படிக்கும்போது, எனக்கு ஒரு வரலாற்று ஆசிரியர் இருந்தார். முகலாயர்களைப் பற்றி அவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்தால், பக்கத்து வகுப்பில் உள்ள மாணவர்களும் வந்து சேர்ந்து கொள்வார்கள். முகலாயர்களின் வரலாற்றை பற்றிய அவரின் விவரிப்பில், அக்பராகவே மாறிவிடும் அவரது தோரணையில் நேரம்போவதுகூட தெரியாமல் எங்களையும் மறந்துகேட்டுக் கொண்டிருப்போம். அந்த வகுப்பை விட்டு வெளியே வந்தால், அவர் அவ்வளவு எளிமையாக சாந்தமாக மாறிவிடுவார். அந்தப் பள்ளியில் மேலும் அந்த ஊரில் அவருக்கு ஒரே ஒரு அடையாளம்தான் இருந்தது. அது “ஹிஸ்டரி வாத்தியார்”. அந்த அடையாளத்தைத் தாண்டி, அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. அவர் என்ன சட்டை போடுவார், அவர் வீட்டில் என்ன டிவி இருக்கிறது அவர் என்ன செல்போன் வைத்திருந்தார் என்பதைப் பற்றியெல்லாம் யாரும் யோசித்ததில்லை. அவருக்கும் அது எதுவும் தேவையில்லை. அவர் வேலையை . அவர் அவ்வளவு நேசித்தார்; அந்த வேலைக்கு அவர் அவ்வளவு உண்மையாக இருந்தார்.
நாம் இன்று நம் வேலையை நேசிக்கிறோமோ அல்லது நேசிக்கும் வேலையைத்தான் செய்கிறோமோ? முகம் தெரியாத யாரோ ஒருவரின் நிர்பந்தத்தில், நாம் ஒரு இயந்திரத்தன்மையுடன் நம் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். நம் சுற்றத்தை மறந்து, அதில் நிகழும் சில அழகான தருணங்களை மறந்து, நம் உணர்வுகளை மறந்து, சகமனிதன் மீதான கருணையை மறந்து ஒரு சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப்போல நம் வேலையை நாம் செய்துகொண்டிருக்கிறோம். நமக்கு முன்னால், நாம் முடிக்க வேண்டிய வேலைகளின் அட்டவணைகள்தான் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. இந்த வேலையில் இருந்து நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நம்மிடம் என்ன இருக்கிறது? ஒரு உயர் ரக செல்போன், அழகான கைக்கடிகாரம், சொகுசான கார், நகரத்தின் மத்தியில் ஒரு வீடு.
இப்படித்தான் நமது இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையை விரும்பாத ஒருவர் அல்லது இதிலிருந்து வெளியேறும் ஒருவர் தோல்வி அடைந்தவராக பரிகாசிக்கப்படுகிறார். இத்தனை இயந்திரத்தன்மையான சூழலில் நம் மனம் மட்டும் எப்படி சங்கடமில்லாமல் இருக்கும்? நமது லட்சியங்கள், கனவுகள், ஆசைகள் பறிக்கப்படுவது மட்டுமல்லாமல், போலி லட்சியங்களும், போலி கனவுகளும் நம்மையும் அறியாமலேயே நம் மீது திணிக்கப்படுவதை நாம் எப்படி எந்த உணர்வுகளும் அற்று அனுமதிக்க முடியும்?
“பணியிடத்தில் மனநலம்” (Mental Health at Workplace) என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததன் நோக்கம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே. ஏனென்றால் இந்தப் பொருளாதார வளர்ச்சிதான் அத்தனைக்கும் முதன்மையானது என இன்றைய சூழல் கருதுகிறது. ஆனால், வளர்ச்சியோடு சேர்ந்து மனநோய்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகம் முழுக்க கிட்டதட்ட 450 மில்லியன் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல உலகம் முழுக்க தற்கொலைகளின் சதவீதம் வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் அதிகம், ஸ்காண்டிநேவியா முதல் தமிழ்நாடு வரை எதுவும் இதற்கு விலக்கல்ல.
ஒரு புறம் மனதினைப் பற்றிய ஒரு திறந்த உரையாடலின் மீதான நமக்கிருக்கும் தயக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மனம் தொடர்பான அமைப்புசார் கட்டுமானங்கள் திட்டமிட்டு உடைக்கப்படுகின்றன்; மறுபுறம் மனநோய்களும் பெருகிக்கொண்டே செல்கிறது. மனம் மீதும் மனநோய்கள் மீதும் போலியான சித்தாந்தங்கள், கோட்பாடுகள், தீர்வுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. சமூகம் தனது பொறுப்பில் இருந்து கையை தட்டிவிட்டுக்கொண்டு மனநோய்களுக்குத் தனிநபர்களையே காரணாமாக்கத் தயாரகிவிட்டது.
இவை அத்தனையும் கணக்கில் கொள்ளும்போது, மனதினை ஒரு வணிக பண்டமாக்க நியோ லிபரலிஸ சித்தாந்தங்கள் முயல்கிறதோ என எழும் சந்தேகம் தவிர்க்க முடியாதது.
அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அறிவுசார் சமூகத்திற்கு நிச்சயம் உண்டு. பொது சமூகத்தில் இதற்கான ஒரு வெளிப்படையான உரையாடலை நாம் தொடங்க வேண்டும். மனதினைப் பற்றிய வெளிப்படைத்தன்மையை நாம் பொது சமூகத்தில் நிறுவ வேண்டும். இதை இப்போது செய்யாவிட்டால் நாம் இனி எப்போதுமே செய்ய முடியாது.
இனியும் நாம் இதற்கான முயற்சியை தாமதப்படுத்திக் கொண்டிருந்தால், “வறுமை, சாதிய கொடுமைகள், பாலின பாகுபாடுகள் தரும் மன உளைச்சல்களில் இருந்து மீள, யோகா செய்தால் போதுமானது” என்ற வரிகள் விரைவில் மருத்துவ புத்தகங்களில் அச்சிடப்படுவதை நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
தனிநபருக்கான தீர்வுகள்:
ஒரு தனிநபராக, நாம் மனம் குறித்தும் மனநல பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாக உரையாட வேண்டும். மனநல பாதிப்புகளை தனி நபருடைய பலவீனமாகக் கருதிய காலங்களெல்லாம் முடிந்துவிட்டன. மனநோய்களை விட, அன்றாட வாழ்க்கையின் நிர்பந்தங்களினால் ஏற்படக்கூடிய மனநலப் பிரச்சினைகளே இன்றைய காலத்தில் சவாலாக இருக்கின்றன என்பதை உணர்ந்து மனம் குறித்த தயக்கங்களை கடந்து நாம் அதன் பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக உதவியை கோர வேண்டும்.
அப்படி உதவிகள் கோரும் பட்சத்தில், அதை அலட்சியப்படுத்தாமல் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெற்று அறிவுரைகளைவிட, ஒருவரின் துயரங்களை, ஏமாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவருடன் இணக்கமாக நிற்பது அவசியமானது. நிறைய நேரங்களில், மனரீதியாக ஒருவர் பாதிப்படையும்போது அவருக்கு அறிவுரைகள் சொன்னால் போதும் என்று நினைக்கிறோம், அதற்காக பக்கம் பக்கமாக அறிவுரைகளை நாம் எப்போதும் தயாராக வைத்திருக்கிறோம். அப்படியல்லாமல் ஒருவரின் துயரத்தில் கூடநிற்பது, அந்த நேரத்தில் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது, அதற்கான தீர்வை நாடுவது அவசியம் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பணியிடங்களையும், பணியையும் உணர்ச்சிவசப்படாமல் அணுக வேண்டும். பெரும்பாலான நேரங்களில் நாம் செய்யக்கூடிய பணியையே நமது அடையாளமாக நினைத்துக்கொள்கிறோம், அதனால் தான் நம்மையும் அறியாமல் அந்தப் பணியுடன் உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். ஏதேனும் ஒரு சூழலில் இந்த சமநலை பாதிக்கப்படும்போது இந்த உணர்வு ரீதியிலான பிணைப்புதான் நமது மனநிலையைப் பாதிக்கிறது. அதனால் பணியை ஒரு பொருளீட்டும் வழியாக மட்டுமே நினைத்தால் போதுமானது. அதைத் தாண்டிய எந்த ஒரு அங்கீகாரத்தையும் வேண்டி நிற்பது ஒரு கட்டத்தில் உங்கள் மனநிலையை பாதிப்படைய செய்யும். ஒரு வேலையிலிருந்து எந்த நேரம் வேண்டுமானாலும் கிளம்பிவிட முடிகிற மன நிலையில் இருப்பது உங்களது மனநலத்திற்கு முக்கியம், நீங்கள் செய்யும் வேலையை சரியாக செய்வதற்கும்கூட இந்த மனநிலை அவசியமானது.
பணியையும், வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கும் மனநிலையோடு இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில், பணி நேரத்தில் குடும்பப் பிரச்சினைகளை பேசுகிறோம், வீட்டிலிருக்கும் நேரங்களில் பணியின் பிரச்சினைகளைப் பேசுகிறோம். பணியை அங்கே முடித்துவிட்டு வருவது எப்போதும் நல்லது, அது குறித்து உங்களுக்கே நீங்கள் கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டால் நலம்.
தேவையான ஓய்வு என்பது உங்களது நலத்திற்கு மட்டுமல்ல, உங்கள் பணியின் தரத்திற்கும் மிகவும் அவசியமானது, நீண்ட நேர வேலையை விட, சரியான ஓய்வு நேரத்தை கொடுக்கும்போது உற்பத்தித் திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதனால் சரியான ஓய்வு என்பது மிக முக்கியம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
உங்களது அடிப்படை உரிமைகள், வேலைக்கேற்ற ஊதியம், ஓய்வு, சக தொழிலாளர்களின் நலன் போன்ற விஷயங்களுக்காக ஒரு குழுவாக இணைந்து குரல் கொடுப்பது உங்களது தன்னம்பிக்கையையும், போராட்ட குணத்தையும் அதிகப்படுத்தும். அது தனிப்பட்ட உங்களின் பிரச்சினைகளின் மீதான பார்வைகளை மாற்றும். அதனால் சுயநலனோடு இருக்காமல் தொழிலாளர் நலனில் எப்போதும் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய தொழில்நுட்பக் காலத்தில், பொருளீட்டுவதைவிட, ஈட்டிய பொருளைச் செலவு செய்வது எளிதான ஒன்று. அதற்கான ஆசைகளும், நிர்ப்பந்தங்களும் தொடர்ச்சியாக உங்களைச் சுற்றி விரிக்கப்படுகின்றன. அதனால் தேவையற்ற செலவுகளை தவிர்த்து, மிக அத்தியாவசமான செலவுகளை மட்டுமே மேற்கொள்வது அவசியம். மேலும், நிதி மேலாண்மை குறித்தும், தேவையற்ற செலவுகள் குறித்தும் குழந்தைகளுடன் தொடர்ச்சியாக உரையாடி அவர்களின் பார்வையையும் மாற்ற வேண்டும். இது குறித்த உரையாடல்களை ஒவ்வொரு வீட்டிலும் தொடங்க வேண்டும்.
சேமிப்பு, எதிர்கால பாதுகாப்பு, காப்பீடு போன்ற அடிப்படையான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் எதிர்காலப் பொருளாதார நிச்சயமின்மையே பெரும்பாலான மனநலச் சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதை உணர்ந்துகொண்டு அடிப்படையான இந்தத் தேவைகளையெல்லாம் மிக விரைவாகப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும்.
அதிக நேரம் திரைகளில் செலவிடுவது, சமநிலையற்ற உணவு, போதை பொருட்கள் பயன்பாடு போன்றவற்றையெல்லாம் தவிர்த்து ஆரோக்கியமான அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
மனநலச் சீர்கேடுகள் என்பவை தனிப்பட்ட நபரின் சிக்கல்கள், அதற்கு அந்த தனிநபருக்கு மட்டும் ஆலோசனைகள் கொடுத்தால் மட்டுமே போதும் என்ற காலாவதியான கருத்துகளை உதறிவிட்டு மனநலப் பிரச்சினைகளை சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினையாக பார்க்கக்கூடிய மனப்பாங்கு அரசிற்கு வரவேண்டும். அப்போதுதான் அதிகரித்துவரும் இந்த மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முழுமையாக பார்க்க முடியும்.
பணியிடங்களில் மனநிலை என்பது அந்தப் பணிச் சூழலோடும், ஊதியத்தோடும் நேரடி தொடர்புடையது. அதில் ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தாமல் இந்த மனநலத்தை மேம்படுத்த முடியாது. அதனால் வேலைக்கேற்ற ஊதியத்தையும், பணி நேரத்தையும் வரையறை செய்ய வேண்டும்.
புதிய பொருளாதார கொள்கைகளின் காரணமாக பெரும்பாலான வேலைகள் ஒப்பந்த அடிப்படையிலான மிகவும் குறைவான ஊதியத்தில் நிரப்பப்படுகின்றன, மேலும் எதிர்காலம் குறித்த எந்த உத்திரவாதமுமற்ற வேலைகள் ஊழியர்களின் மனநிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே ஒப்பந்தம் அடிப்படையிலான பணி நியமனங்களை அரசு கைவிட வேண்டும்.
வளர்ந்த நாடுகளைப்போல பணிச்சுமைகளை குறைப்பதற்கான செயல்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். நான்கு நாள் வேலை, மூன்று நாள் ஓய்வு போன்ற தொழிலாளர்களின் மன நலத்திற்கு இணக்கமான செயல்திட்டங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் நலன், எதிர்கால பாதுகாப்பு, குடும்ப நலன், மருத்துவக்காப்பீடு போன்றவற்றை அனைத்து தனியார் நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கான குறைந்தபட்ச செயல்திட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட மாநிலத்தில், ஒவ்வொரு வருடமும் ஏராளமானவர்கள் உயர்கல்வியிலிருந்து இருந்து வெளி வருகிறார்கள், அவர்களுக்கு சாதகமான, இணக்கமான வேலைவாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். பணிச்சுமை, பணியிட நெருக்கடிகள் போன்றவற்றை கலைவதற்கான வெளிப்படையான அமைப்பை நிறுவனங்களிலும் கொண்டு வரவேண்டும்.
பணியிடத்தில் மனநலம் என்பதை வெற்று பிரச்சாரமாக இல்லாமல், அதற்கான எதார்த்தமான தீர்வுகளை வெளிப்படையாகவும், திறந்த மனதோடும் அணுகும்போது நிச்சயமாக அதற்கான தீர்வுகளை சுலபமாக எட்ட முடியும். அந்த வகையில்தான் நாம் பணியிடத்தில் ஆரோக்கியமான மனநிலையை உறுதி செய்திட முடியும்.