2024 ஜூலை மாதம் 15 ஆம் நாள் மலையாள தேசத்திலிருந்து ஒரு ஒளித்துணுக்குக் காட்சி வெளிவந்து, உலக அளவில் வைரல் ஆனது. அந்தக் காட்சியானது, மலையாளத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரான ஆசிஃப் அலி ஒரு நினைவுப் பரிசை, இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனிடம் வழங்குகிறார். அவர் ஆசிஃப் அலியை அவமதித்து, அந்தப் பரிசை அவர் கையிலிருந்து வாங்காமல், மேடையின் கீழ் இருந்த இயக்குநர் ஜெயராஜை அழைத்து, அவர் கையால் அந்த விருதை வாங்கினார். அப்போதும் ஆசிஃப் அலி எந்த வருத்தத்தையும் காட்டாமல் அமைதியாக அந்த மேடையில் நின்றிருந்தார்!
இதையடுத்து இணையத்திலும், பத்திரிகைகளிலும் ரமேஷ் நாராயணன் பயங்கரமாகக் கண்டிக்கப்பட்டார். “உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?” என ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், “அடிப்படையில், ஆசிஃப் அலி அவமானப்படுத்தப்பட்டதற்குக் காரணம் அவருடைய மத அடையாளம்தான்!” எனப் பலரும் சொன்னார்கள். இந்தியாவில் ஒருவர் மத அடையாளங்களுக்காகப் புறக்கணிக்கப்படுவதோ; அவமானப்படுத்தப்படுவதோ; ஏன் கொல்லப்படுவதோகூட புதிய நிகழ்வு இல்லை! ஆனால், இந்த நிகழ்வு நடந்த இடம்தான் முரணானது!
மலையாள உலகின் மிக மூத்த எழுத்தாளர் எம். டி. வாசுதேவனுக்குக் கைம்மாறு செய்யும் விதமாக, அவருடைய ஒன்பது கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் மலையாளத் திரைவுலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பார்வதி திருவோத்து போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து, பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், ஷ்யாம்பிரகாஷ், ஜெயராஜ் போன்ற மிகச் சிறந்த இயக்குநர்களின் இயக்கத்தில் உருவான மனோரதங்கள் என்ற Anthology Series-க்கான Trailer Release நாள் அன்றுதான் இந்தச் சம்பவம் நடந்தது.
மனிதர்களின் மனத்திற்குள் இருக்கும் துவேஷ உணர்வுகளைக் கேள்வி கேட்ட ஒரு மூத்த எழுத்தாளரின் மரியாதைக்குரிய நிகழ்வில் வெறுப்பைக் கக்கும் நிகழ்வு நடந்ததை உலகம் அன்று பார்த்தது! நடந்த நிகழ்வு மோசமானது என்றாலும், என்னைப் போன்றவர்களுக்கு அதில் ஒரு நன்மையும் கிடைத்தது. மலையாள உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வி.யின் கதைகள் படமாகிறது என்ற விசயம் உடனே தெரியவந்தது.
எம்.டி.வி. தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவர் இல்லை. 25 வயதிலேயே சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். 62 வயதில் ஞானபீட விருது பெற்றவர். இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் திரைத்துறையிலும் காத்திரமாக இயங்கியவர். ஏழு படங்களை இயக்கியிருக்கிறார். 54 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். அதில் நான்கு படங்கள் சிறந்த திரைக்கதைக்கான மாநில அரசின் விருதுகள் பெற்றிருக்கின்றன.
எம்.டி.வி. சினிமாவுக்கும் இலக்கிய எழுத்துக்குமான வேறுபாடுகளை நன்கு அறிந்திருந்தவர். “சினிமா என்பது மிக உயர்ந்த காட்சி ஊடகக் கலை. அந்தக் கலை தனக்கே உரிய தனித்துவமான மொழிகளையும், இலக்கணத்தையும், அமைப்பையும் பெற்றிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்தப் புரிதல் இருந்ததால் அவரால் இரண்டு உலகத்திலும் சிறப்பாகப் பங்களிப்பு செய்யமுடிந்திருக்கிறது. இந்திய அளவில் எம்.டி.வி. போல இலக்கியத்திலும், சினிமாவிலும் சம அளவில் பங்களிப்பு செய்தவர்கள் என்று யாரையும் குறிப்பிடமுடியாது.
1933 ஜூலை மாதம் 15ஆம் நாள் பிறந்த எம்.டி.வி. தொண்ணூறு வயது கடந்து வாழ்ந்து வருகிறார். இப்போதும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருவதாக இணையத்தில் செய்திகள் வருகின்றன. அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, 2021-ஆம் ஆண்டளவில், அவர் மகள் அஷ்வதி வி நாயர், அவருடைய கதைகளைத் தேர்ந்தெடுத்து ஓர் Anthology Series எடுக்கலாம் என நினைக்கிறார்.
Anthology Series என்றாலே அது ஏதாவது ஒரு பொருண்மையில் இருப்பது வழக்கம். ”பெண்களை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்ட கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் படமாக்கலாம் என நினைத்தேன். ஆனால், காதல், ஆசை, பொறாமை, பழிவாங்கல் போன்ற எண்ணற்ற மனித உணர்வுகளைத் தாங்கி நிற்கும் கதைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை இழந்துவிடக் கூடாது என நினைத்து ஆண்கள், பெண்கள் எனப் பலரையும் முன்னிறுத்தும் கதைகளைத் தேர்ந்தெடுத்தோம்” என்கிறார் அஷ்வதி. இப்போது வெளிவந்திருக்கும் மனோரதங்களைப் பார்க்கும்போது, ஆண் நாயகர்கள் இருந்தாலும் பெண்களே மேலோங்கி நிற்கிறார்கள் என்பது தெரிகிறது. மனோரதங்களின் கதைகளைப் பார்த்துவிடலாம்.
- வில்பனா (விற்பனை): “விற்பனை என்ற செயல்பாட்டின் வழியாக, ஒரு பெண்ணின் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்க்க வழியை வகுத்துத் தந்திருக்கிறார் எம்.டி.வி. சார்” என இந்தக் கதைக்குக் கமலஹாசன் ஓர் அறிமுகத்தைத் தருகிறார். எம்.டி.வி.யின் மகள் அஷ்வதிதான் வில்பனாவின் இயக்குநர். இதுதான் அவருடைய முதல் படமாக இருக்க வேண்டும்.
கதை 1980களில் நடக்கிறது. ஹால்டன் என்ற பத்திரிகையில், வீட்டில் உபயோகித்த பழைய பொருட்களின் விற்பனை பற்றி ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறான் சுனில்தாஸ் (ஆசிஃப் அலி). அவன் ஒரு மலையாளி. சென்னையில் பத்திரிகையாளனாக வேலை பார்க்கிறான். அவனுக்கு ஒரு டைப் ரைட்டர் தேவைப்படுகிறது. அங்கு போனால் அதைக் குறைந்த விலைக்கு வாங்கலாம் என நினைத்துப் போகிறான்.
சென்னை பெசண்ட் நகரில் கோடீஸ்வரர்கள் வாழும் பகுதியில் அந்த வீடு இருக்கிறது. கீதா பரேக் (மதுபாலா) என்ற நடுத்தர வயது பெண்மணி சுனிலை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறாள். இருவரும் மலையாளிகள். சட்டென ஸ்நேகம் கொள்ள அது போனமானதாக இருக்கிறது. மாடியில்தான் விற்பனைக்கான பொருட்கள் இருக்கின்றன. சோஃபா ரூ.4500, கட்டில் ரூ.6500 என விலையிருப்பதைப் பார்த்து சுனில் மிரண்டு போகிறான். 6500 இருந்தால் அந்த நாளில் ஒரு கிரவுண்ட் இடத்தை வாங்கிவிடலாம்!
சுனிலுக்குத் தேவை ஒரு டைப் ரைட்டர், அதுவும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டது என்கிறாள் கீதா. அவன் தேடி வந்த பொருள் இல்லை என்பதால், அவனே அந்த இடத்தைவிட்டுச் சென்றிருக்கலாம்! அவளுடைய விலையுயர்ந்த பொருட்களில் எதையும் வாங்கக்கூடிய தகுதி அவனிடம் இல்லை என்பதைத் தெரிந்த பிறகு, அவளாவது அவனை வெளியே அனுப்பியிருக்கலாம்! ஆனால், ஏதோ ஓர் இனம்புரியாத ஈர்ப்பு இருவரையும் கட்டிப்போட்டு வைக்கிறது.
இதற்கிடையே வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் அழைப்பதும், வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் கீதாவும் சுனிலும் மனம்விட்டுப் பேசுவதற்கான சூழல் அமைகிறது. “இந்தப் பொருட்கள் எல்லாம், கல்கத்தாவில் இருந்தபோது சொல்லி செஞ்சதுதான். மிஸ்டர் பரேக்குக்கு எல்லாமே out of fashion ஆயிருச்சு… நானும் out dated ஆயிட்டேனோ என்னவோ. மெட்ராஸ் இது புரிஞ்சுக்க முடியாத ஒரு நகரம். எல்லா உணர்வுகளையும் உரிஞ்சி எடுத்துரும். எனக்குக் கல்கத்தாதான் பிடிக்கும். இந்தியாவிலேயே பெரிய அற்புதமான நகரம்” என மனத்தில் தோன்றிய எல்லாவற்றையும் பற்றி அவனோடு பேசுகிறாள்.
அவளுடைய தனிமையை, இயலாமையை, வெறுமையைச் சுனில் புரிந்துகொள்கிறான். இருவரும் மதிய உணவைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். பெசண்ட் நகர் கடற்கரைக் காற்றை வாங்குகிறார்கள். வாடிக்கையாளரிடம் பேரம்பேசிப் பொருட்களை விற்கிறார்கள். கீதா உற்சாகத்தில் கொஞ்சம் அதிகமான மதுவைக் குடிக்கிறாள். அன்றைய நாள் கடைசி வாடிக்கையாளர் ஒருவர் அழைப்புமணியை அழுத்துகிறார். கீதா போதையில் மயங்கி இருப்பதால். சுனில்தான் கதவைத் திறக்கிறான். சுனில் அவனிடம் விற்காமல் இருக்கும் ஒன்றிரண்டு பொருட்களைப் பற்றி எடுத்துச் சொல்கிறான்.
வந்த வாடிக்கையாளர் ஆஷ்ட்ரேவைப் பார்க்கிறான். அது சுனில் இழுத்துவிட்ட சிகரெட்களால் நிறைந்திருக்கிறது. “நீ யார்?” என்கிறான். கீதா பதில் சொல்கிறாள். “I’m Mrs. Parekh and he is Mr. Parekh! நாங்க பழைய பொருட்களை எல்லாம் வித்து புதுசாக்குறோம். எல்லாத்துக்கும் விலை சொல்லலாம். Including this!” என்று அவளையே சுட்டிக்காட்டிக்கொள்கிறாள். வந்த வாடிக்கையாளர் கீதாவை ஓங்கிக் கன்னத்தில் அடிக்கிறான். அவன் வாடிக்கையாளர் இல்லை. Mr. Parekh! கீதாவின் கணவன்!
- சிலா லிகிதங்கள் (கல்வெட்டுகள்): “இந்த உலகத்தில் முகமூடி இல்லாமல் வாழும் மனிதர்கள் குறைவாகவே இருப்பார்கள்” என கமலஹாசன் இந்தக் கதையை அறிமுகப்படுத்தும்போது சொல்கிறார்.
கோபாலகிருஷ்ணன் ஒரு தொல்லியல் பேராசிரியர். யாருக்கும் புரியாத கல்வெட்டு எழுத்துகளைக்கூட படித்துப் புரிந்துகொள்ளக்கூடியவர். நெடும்பறையூர் கல்வெட்டைப் படித்துவிட்டு, “நெடும்பறையூர் நாட்டுடைய கோதை இறைவி அஞ்சுவர்ண சாஸ்திரத்துக்கு ஒப்புதல் கொடுத்தது இங்க இருக்குற ராஜாதான். அப்படியென்றால் வரலாற்றாசிரியர் கனகசபாபதி பிள்ளையோட ஆய்வறிக்கை தப்பு. டாக்டர் பெர்மாலோட (Bermal) சித்தாந்தம்தான் சரி” என்கிறார்.
இவர் மறுக்கும் சபாபதி பிள்ளை என்பவர் கே.கே. பிள்ளை என அழைக்கப்படும் கோலப்ப கனகசபாபதி பிள்ளையாக இருக்கக்கூடும். வரலாற்றில் மறைந்து போயிருக்கும் உண்மைகளைத் தோண்டி துருவி எடுக்கும் கோபாலகிருஷ்ணன் சொந்த வாழ்வில் முகமூடி அணிந்துகொண்டு எவ்வளவு இரக்கமில்லாமல் வாழ்கிறார் என்பதுதான் கதை.
கோபாலகிருஷ்ணனின் மாமா ராகவ். அவருடைய மகள்தான் நாராயணி. “வீட்டில் பெண்களின் நடத்தை சரியில்லை என நினைத்து ராகவ் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்” எனச் சொல்கிறார்கள். அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் நாராயணியையும், அவள் மகளையும் பாலியல் தேவைக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் நாராயணி குடும்பத்தாரை கோபாலகிருஷ்ணனின் சமூகத்தார் ஒதுக்கி வைக்கிறார்கள்.
நாராயணியின் மகள் விஷத்தைக் குடித்துச் சாகும் நிலையில் ஓடையில் கிடக்கிறாள். “யாராவது அவளைக் காப்பாற்றக் கூடாதா?” என எல்லோரும் சொல்கிறார்களே தவிர யாரும் முன்வரவில்லை. “இதுல ஈடுபட்டா போலிஸ், போஸ்ட் மார்ட்டம், விசாரணை என அலைய வேண்டும்!” என நினைத்து யாரும் அருகே போக மறுக்கிறார்கள்.
ஒரு நாள் முழுவதும் உயிருக்குப் போராடிய அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். “ஊரா இது… ச்சீ இறக்கத் துடிக்கிறவங்களுக்கு ஒரு துளி தண்ணி குடுக்காத ஜனங்க!” என கோபாலகிருஷ்ணன் புலம்பிக்கொள்கிறார். அவரிடம், “தண்ணிய அப்பா கொடுத்திருக்கலாம்’ல?” எனக் கேட்கிறாள் அவர் மகள். கோபாலகிருஷ்ணனின் கோழை நெஞ்சம் அந்தக் கேள்வியால் தடுமாறுகிறது.
“நான் அவுங்களுக்குக் கொஞ்சம் தண்ணி குடுத்தேன்!” என்கிறாள் மகள். “குறும்பா (வேலைசெய்யும் பெண்) எல்லாத்தையும் சொன்னாங்க!” என்று மேலும் சொல்கிறாள். அதன் அர்த்தம் என்னவென்றால், நாராயணியை முதன் முதலில் உறவுகொண்டவரே கோபாலகிருஷ்ணன்தான்!
கிராமம் என்றால் சொர்க்கம். அங்கு ஒருவர் மற்றொருவருக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்பதெல்லாம் கற்பனை. இந்தக் கதையின் மூலம், கிராமத்தில் மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா? என உறைய வைக்கிறார் எம்.டி.வி.
- ஷெர்லாக்: ஃபஹத் ஃபாசில் பாலு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாலுவின் அக்காளாக நதியா நடித்திருக்கிறார். கதையில் நதியா கதாப்பாத்திரத்தின் பெயரைக்கூட சொல்லவில்லை. வெளிநாட்டில் தன்னைக் கரைத்தவர்களின் குறியீடாக நதியா கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன். இவர்களைத் தவிர ஷெர்லாக் என்ற பூனையும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது.
ஷெர்லாக் என்ற பூனை தனித்துவமானது. வீட்டில் உணவு இருந்தால் திறந்துகூட பார்க்காது. கடையில் வாங்கி வரும் cat food-ஐ மட்டுமே உண்ணும். தள்ளுபடியில் வாங்கும் பொருட்களை எல்லாம் ஷெர்லாக் தொடாது. பழைய உணவுப் பொட்டலங்கள் என்றால் வாசலில் வரும்போதே கண்டுபிடித்துவிடும்.
கதையின்படி, நதியா ஏற்கனவே குமார் என்பவரைத் திருமணம் முடித்து, அதிலிருந்து விலகி தற்போது ஜெயந்த் ஷிண்டே என்பரோடு வாழ்கிறார். இப்போது நதியா அமெரிக்காவின் வடக்கிலும், ஜெயந்த் தெற்குப் பகுதியான Son Jose என்ற இடத்திலும் இருக்கின்றனர். நதியா ஜெயந்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஆனால், பாலுக்கு அக்காளின் இந்தப் புதிய உறவு பிடிக்கவில்லை. பாலுவிடம் நதியா ஜெயந்தைப் பற்றி அதிகம் சொல்கிறார். அவன் குமார் மாமாவை ஞாபகப்படுத்துகிறான். “குமார் மாமா ஒரு மாசம் இங்க இருந்தார். ஜெயில்ல இருக்குறமாதிரி இருக்கும்’பாரு. ரோட்ல மனுசங்க இல்லை, வண்டிங்க மட்டும்தான் இருக்குன்’றது அவரோட கம்ப்ளைண்ட்!” என்கிறார் நதியா. குமார் மாமா இப்போது கல்லூரியில் பேராசிரியராக இருப்பதை அக்காளுக்கு ஞாபகப்படுத்துகிறான் பாலு
ஷெர்லாக் பூனையை ஜெயந்தின் உளவாளியாகவே பார்க்கிறான் பாலு. அந்தப் பூனையை வீட்டைவிட்டுத் துரத்திவிட வேண்டும் என நினைக்கிறான். அது அவ்வளவு சுலபமானதில்லை. அமெரிக்காவில் அக்காள் வீட்டிற்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. வேலை கிடைக்காத விரக்தியும் கூடுகிறது. ஒரு நாள் ஒரு பாட்டில் மதுவை வாங்கி வருகிறான். ஷெர்லாக்குக்கும் ஊற்றிக் கொடுக்கிறான். அதுவும் குடிக்கிறது. இந்த உலகத்தில் விதியை மீறாதவர்கள் யாரும் இல்லை என்பதை ஷெர்லாக்குக்குச் சொல்கிறான்.
“ஷெர்லாக்! நுனி மூக்குல இங்கிலீஷ் பேசுற இந்த அக்காதான் என்னைய எடுத்து வளர்த்தாள். ஒண்ணு தெரியுமா? முன்னாடி நாங்க இருந்த வீட்ல கக்கூஸ் எல்லாம் இல்லை. பரம்பங்கா குன்னுக்குக் கீழ வெளிக்கி இருக்கும்போது, இந்த அக்காவுக்கு நான் தான் காவலா இருப்பேன். உனக்கு உளவு பாக்கச் சொல்லிக் குடுத்த பாம்பேகாரன் ஜெயந்த் ஷிண்டே இருக்கான்’ல்ல அவன்கிட்ட சொல்லு! இந்த அக்காளோட கல்யாணத்துக்கு, வெள்ளை முழுக்கைச் சட்டையும், வேட்டியும் கட்டிட்டு மாப்பிள்ளையா வந்தப்போ, குமார் மாமா பாதத்த கழுவுனது நான். ஜெயந்த் எங்க குமார் மாமாவிட பெரிய ஆளாடா?’ என ஷெர்லாக்கிடம் கேட்கிறான் பாலு!
- கடல்காற்று: எம்.டி.வி.யின் கதைகளில் பிரிவும் விலகலும் முக்கியமான உட்கூறுகளாக இருக்கின்றன. கணவன் மனைவியைப் பிரிந்து வேறொரு உறவில் இருக்கும்போது, மனைவி எதிர்கொள்ளும் மனவேதனையை இவருடைய கதைகள் மிகச் சிறப்பாகக் காட்டுகின்றன. அதிலும் அப்பாவைப் பிரிந்த குழந்தைகளின் ஏக்கம் ஆண்கள் நிகழ்த்தும் மிகப் பெரிய வன்முறையாக நமக்குள் பதிவாகிறது. கடல்காற்று, கடுகன்னாவ ஒரு யாத்ர குறிப்பு என்ற இந்த வெப் சீரிஸின் இரண்டு கதைகளில் இவற்றை நன்கு உணரமுடியும்.
விலகல் என்பதைப் பெண்ணுக்கான விடுதலையாகத் தருகிறார். காழ்ச்ச, வில்பனா, ஷெர்லாக் ஆகிய கதைகளின் வழியாக இதை உணரமுடிகிறது.
கடல்காற்று என்ற கதை மனைவியைப் பிரிந்து இன்னொரு பெண்ணோடு வாழும் ஆண், மீண்டும் குடும்பத்தை அடையும் கதை. அப்பாவைக் குறித்த குழந்தையின் ஏக்கமும், குழந்தையின் கள்ளங் கபடமற்ற மனத்தைப் புரிந்துகொள்ளாத அப்பாவின் வன்முறையும் இந்தக் கதையில் சிறப்பாகக் காட்டப்படுகின்றன.
- கடுகன்னாவ ஒரு யாத்ர குறிப்பு: இந்தக் கதை ஒரு விதத்தில் எம்.டி.வி.யின் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கலாம். எம்.டி.வி. அவர் குடும்பத்தில் நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர். அவருடைய அப்பாவும் சிலோனில் வேலை செய்தவர். இந்தக் கதையில் வரும் அப்பாவும் இலங்கையில் வேலை பார்க்கிறார். நான்காவது மகன் அப்பாவின் பிரிவில் ஏங்கி நிற்கிறான்.
அவன் வளர்ந்த பிறகு பிரபல பத்திரிகையாளனாகிறான். ஒரு முறை அவன் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இலங்கையில் கிடைத்த குறைவான நேரத்தில் தன் அப்பாவிற்கும் சிங்களப் பெண்ணிற்கும் பிறந்த சகோதரியைத் தேடிப் போகிறான். அவளைப் பார்த்தானா இல்லையா என்பது கதை. இந்தக் கதையில் மம்முட்டி நடித்திருக்கிறார்.
வினித் அப்பாவாக வரும் தோற்றமும், ஒரு எரி விசிறியைச் சுழலச் செய்யும் அந்தக் காட்சியும் மிகச் சிறப்பாக இருக்கும். கடுகன்னாவ என்ற கதையோடு ‘நிண்ட ஓர்ம்மய்க்கு’ என்ற சிறுகதையை இணைத்து இந்த எபிசோட் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
- ஓலவும் தீரவும் (நீரலையும் கடற்கரையும்): “1970-இல் இது திரைப்படமானபோது மதுசார் நடித்துச் சிறப்பித்த பாபுடி (Baputi) கதாப்பாத்திரம் ஒரு தலைமுறையின் ஹீரோவாக ஆனது” என்று கமலஹாசன் இந்தக் கதையைப் பற்றிய சுவாரஸ்மான வரலாற்றைத் தருகிறார்.
1970-இல் ஓலவும் தீரவும் வெளியானபோது, அந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியான படங்களில் மிக அதிகமான வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர் விருதுகளைப் பெற்றிருக்கிறது.
கேரளாவில் வள்ளுவநாடு என்பது பாண்டிய நாட்டின் வாசல் எனப் கூறப்படுகிறது. பொன்னணி கடற்கரை, பந்தலூர் மலை, அட்டப்பாடி மலை ஆகிய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதியை வள்ளுவ நாடு என்கின்றனர். இந்த நாட்டின் குறுக்கே ஓடும் ஆற்றிற்குப் பாரதபுழா என்று பெயர். ஓலவும் தீரவும் கதையில் பாபுட்டி, நபீஷா குஞ்ஞாலி போல பாரதபுழா ஆறும் ஒரு கதாப்பாத்திரம் போல வருகிறது. அதனால்தான், “வள்ளுவ நாட்டின் பின்னணியில் எழுதப்பட்டது இந்தக் கதை. வள்ளுவ நாட்டின் இதயத் துடிப்புதான் பாரதபுழா” என கமலஹாசன் அறிமுகம் செய்கிறார்.
1970-களில் ஒரு தலைமுறையினர் கொண்டாடிய கதையை மீண்டும் படமாக்கியுள்ளனர். இந்த முறை மோகன்லால் பாபுடியாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பைக் குறைசொல்ல முடியாது. ஆனால், காதலின் அற்புதமான பகுதி இளமையும் நிலப் பின்னணியும்தான். என்னதான் சிறப்பாக நடித்திருந்தாலும், இளமை இல்லாத காதலையும், துள்ளல் இல்லாத பாரதபுழாவையும் எப்படி ரசிக்க முடியும்!
- அபயம் தேடி வீண்டும் (அடைக்கலம் தேடி மீண்டும்): உறவு என்று யாரும் இல்லாத ஒருவர் ஒரு கிராமத்தில் அடைக்கலம் தேடுவதுதான் கதை. அவர் இளமையில் தன் மனைவியை இழந்திருக்க வேண்டும். ஈ எறுப்புக்குக் கூட துரோகம் செய்யாத அவருக்கு இந்த இழப்பு ஏன் ஏற்பட்டது என்றோ, அடைக்கலமாவதற்கு அந்த ஊரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றோ விளக்கமாகச் சொல்லவில்லை.
சந்தோஷ் சிவன் இந்தக் கதையை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மிக அற்புதமாக இருக்கிறது. படம் புரியவில்லை என்றாலும் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன.
- காழ்ச்ச (vision): மனோரதங்கள் சீரியலில் கட்டாயம் பார்க்க வேண்டிய எபிசோட் இது. சாதாரண கதையைக்கூட அசாதாரணக் கதையாக்கும் பார்வதி திருவோத்து முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சுதா (பார்வதி) என்ற பெண்ணின் கணவன் பிரபாகரன் ஒரு குடிகாரன். மனைவியின் திறமைகளைப் புரிந்து வாழத் தெரியாதவன். சுதாவின் வாழ்க்கையில் விஸ்வநாதன் என்ற ஒருவன் வருகிறான். ஐந்து வருடம் வாழ்ந்துவிட்ட பிரபாகரனோடு மீதம் உள்ள வாழ்க்கையை வாழ்வதா? விஸ்வநாதனைத் தேர்ந்தெடுப்பதா? என்ற குழப்பம் சுதாவுக்கு வருகிறது.
சுதா சென்னையில்தான் வேலை பார்த்து வாழ்கிறாள். அவளுடைய மனக் குழப்பத்திற்குத் தீர்வு காணமுடியாமல் திணறுகிறாள். ஒரு ஆசுவாசத்திற்காகக் கேரளாவில் உள்ள தன் சொந்த ஊருக்குச் செல்கிறாள். அங்கு கண்ணில்படுபவர்கள் எல்லாம் “பிரபாகரனோடு வரவில்லையா?” என்றே கேட்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லிச் சமாளிக்கிறாள்.
ஒரு நாள் அவளுடைய பெரியம்மா வீட்டிற்குச் செல்கிறாள். அவர் பார்வையற்ற வயதானவர். அவர் சுதாவிடம், “கல்யாணம்’னு சொல்றது அவங்க தனிப்பட்ட விசயம். மத்தவங்கள திருப்திப்படுத்துவதற்கு ஒரு போராட்ட நாடகம் நடத்துறதுக்கு எந்த அர்த்தமும் இல்லை! நான் முதல்ல ஒரு பாகவதர கல்யாணம் பண்ணுனேன். தோற்றம் கம்பீரமா இருக்கும். சந்தனப் பொட்டும், சிவப்புக் கல்லு வச்ச கடுக்கணும் அவ்வளவு அழகு. திடீர்னு போயிட்டாரு. ஒரு வருசத்துக்குள்ள! அந்த ஆளு அவரே விருப்பப்பட்டுப் போகல! நான் தான் சொல்லி அனுப்பி விட்டேன்! ஆம்பிளைன்னா ஒரு சுறுசுறுப்பு வீரம் இருக்க வேணாம்? அப்புறம்தான் உன் பெரியப்பா வந்தாரு! அமைதியா போயிட்டிருந்தப்போ ஒரு குழப்பம். அன்னைக்கி உன்னோட வயசுதான் எனக்கும்! எனக்குள்ளயே சொல்லிட்டேன் ‘அடங்கி இரு ஒரு ஓரமா’ன்னு. அதனாலதான் எதுவும் ஆகல. நீ ஒரு ஆளப் பாத்துட்ட! அவரோட சேர்ந்து வாழணும்’னு முடிவு பண்ணியிருக்க! அதுதான நடந்தது? நீயும் பிரபாகரும் தனித்தனியா பிரிஞ்சுருங்க. அவனுக்கு வேற ஒருத்தி கிடைப்பா(ள்). இதுவாவது நல்லா அமையட்டும்!” என்கிறாள்.
இரண்டு வழிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது எனத் தெரியாமல் நின்றவளுக்குப் பார்வையற்றவள் நல்வழியைக் காட்டுகிறாள். அதன்பின் சுதா விஸ்வநாதனிடம் தொலைபேசியில் சந்தோஷமாகப் பேசுகிறாள்!
- சுவர்க்கம் துறக்குன்ன சமயம் (சொர்க்கம் திறக்கும் நேரம்): “எம்.டி.வி.யின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை” என்று கமலஹாசன் இதனைக் குறிப்பிடுகிறார். ஆற்றுமணலில் தங்க மோதிரத்தைத் தொலைத்துவிட்டு, காலைமுதல் மாலைவரை தேடு தேடென்று தேடிய பிறகு, அந்தி மயங்கும் வேளையில், காணாமல் போன தங்க மோதிரம் மீண்டும் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது, எட்டு எபிசோட்களில் நேரத்தைச் செலவு செய்த பிறகு ஒன்பதாவதாக சுவர்க்கம் துறக்குன்ன சமயம் பார்க்கும் போது!
மரணப்படுக்கையில் மாதவன் (நெடுமுடி வேணு) கிடக்கிறார். அவர் எப்போதுதடா சாவார் என இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும், பேரனும் எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான் கதை. மரணம் மனிதனை உறைய வைக்கும் என்றால், இந்தக் கதை, மனிதர்களை உறைய வைக்கும் அளவிற்கு மரணத்தை விலாவாரியாக விளக்குகிறது.
இந்தக் கதையில் குட்டி நாராயணன் கதாப்பாத்திரத்தில் நடித்த இந்திரன்ஸ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒருவர் குட்டி நாராயணனிடம், “இப்படி இழுத்துக்கொண்டு இருப்பதைவிட தூக்கத்தில் உயிர் பிரிவது நல்லது” என்பார். அவரிடம், “நான் அத ஒத்துக்க மாட்டேன். மரணம்’ன்றது பிறப்பு போலத் தானே! வாழ்க்கையில முக்கியமான சடங்கு! அற்புதமானது! அதுல ஒரு கட்டமைப்பு இருக்கு! அது ஒண்ணுமே இல்லாம உறக்கத்திலேயே முடிச்சுக்க நினைக்கிறது ஒரு ஏமாத்துத்தனம்’தான். புண்ணியம் செஞ்சவங்க அந்தக் கட்டங்கள கடந்து போகலாம்! போவாங்க!” என்று குட்டி நாராயணன் விளக்குமிடம் கவித்துவத் தத்துவம்.
ஏனைய எட்டு எபிசோட்களைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஸ்வர்க்கம் துறக்குன்ன சமயத்தைக் கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டும் என்பேன். இந்தக் கதை 1984-இல் ஆள் கூட்டத்தில் தனியே என்ற பெயரில் ஐ வி சசி இயக்கத்தில், மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் திரைப்படமாகவும் வந்திருக்கிறது.
மனோரதங்கள் என்பதற்கு ஒருவரது சிந்தனையும் கற்பனையும் என்று பொருள். இந்த வெப் சீரிஸில் நிறை குறைகள் இருந்தாலும் மலையாளத் திரையுலகம் ஓர் எழுத்தாளனுக்கு மகத்தான நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறது. என்ன! டப்பிங்க் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பாலு மகேந்திராவின் கதை நேரம் போல ஒரே இயக்குநர் இயக்கியிருக்கலாம். குறிப்பாக ஸ்வர்க்கம் துறக்குன்ன சமயம் என்ற எபிசோட்டை எடுத்த ஜெயராஜ் போன்றவர்கள் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மலையாளத்தில் எம்.டி.வி.க்கு இப்படிச் சிறப்பு செய்யப்பட்டதும் சிலர் தமிழில் ஜெயகாந்தன் சிறுகதைகளையும் வெப் சீரிஸாக எடுக்கலாம் எனப் பேசிக்கொண்டார்கள். சொன்னவர்கள் எத்தனைபேர் அவருடைய கதைகளைப் படித்தவர்கள் என்று தெரியவில்லை. நம்மூரில் ஒரு வியாதி இருக்கிறது. பொன்னியின் செல்வனை மட்டும் படித்துவிட்டு, “ஆஹா அதுபோன்ற நாவல் உண்டா?” என்பதும், ஜெயகாந்தனின் பெயரை மட்டும் தெரிந்துகொண்டு, “ஆஹா அவரைப் போல எழுத்தாளர் உண்டா?” என்பதும்தான் அந்த வியாதி.
அடிப்படையில் எம்.டி.வி.க்கும் ஜெயகாந்தனுக்கும் கருத்தியல் ரீதியாக நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கேரளாவில் சுதந்திரத்திற்கு முன்பு வாழ்ந்த கேசவதேவ், வள்ளத்தோல், தகாழி சிவசங்கரன் பிள்ளை போன்றவர்கள் இடதுசாரி சிந்தாந்தத்தை முன்னெடுத்தவர்கள். அவர்களுக்குப் பின்வந்த எம்.டி.வி.யின் கதாநாயகர்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளைவிட வாழ்வியல் சுதந்திரத்தைப் பேசுபவர்கள்.
நீங்கள் எம்.டி.வி.யின் காழ்ச்ச என்ற சிறுகதையையும், ஜெயகாந்தனின் அக்னிபிரவேசத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! ஜெயகாந்தன் இடதுசாரி பக்கம் நின்று சநாதனக் குரலில் அழுதிருப்பார். எம்.டி.வி. சநாதனத்துக்கு எதிர்பக்கம் நின்று மானுட விடுதலையைப் பேசியிருப்பார். ஜெயகாந்தன் மதிப்புக் கூட்டிக் காட்டப்பட்ட ஓர் எழுத்தாளர். திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக அவர் இயங்கியதால் அன்றைய பத்திரிகைகள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடிவிட்டன அவ்வளவுதான்! காலம் கடந்து நிற்கும் ஆற்றல் ஜெயகாந்தன் கதைகளுக்கு இல்லை!
தி. ஜானகிராமனின் சிறுகதைகள் காலத்தைக் கடந்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. ஜெயகாந்தனின் சிறுகதைகளைவிட தி.ஜா.வின் சிறுகதைகளை வெப் சீரிஸ்களாக எடுக்கலாம். ஆனால், அதற்குரிய இயக்குநர்களை நம்மால் பரிந்துரைக்க முடியுமா? என்று தெரியவில்லை. நவரசா ஞாபகத்திற்கு வந்து போகிறது! வேறு என்ன செய்யலாம்! தி. ஜானகிராமனின் சிறுகதைகளைப் படமாக்காமல் இருப்பதே நாம் அவருக்குச் செய்யும் மிக உயர்ந்த மரியாதையாகக் கொள்ளலாம்!