திரையின் பின்னிருந்து ஒரு குரல்

இவள் பேசிக் கொண்டிருக்கிறாள். இவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்.

இவள் தன் தோழி .தன்னில் முழுமையாக நிரம்பியவள். இவள் தனக்குரியவள் என்றுதான் நாற்பது ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.இந்த உணர்வு பரஸ்பரமானது.

இவர்கள் திட்டமிட்டுதான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்து உரையாட அமர்ந்திருக்கிறார்கள்.

இது சென்னை ,கன்னிமரா வளாக  மியூசியம்.

இந்த வளாகத்தில் நூல் நிலையமும் அமைந்திருக்கிறது. இங்கு அதிகமாக வந்து செல்பவர்கள் உண்டு. மியூசியத்திற்கு வந்து செல்பவர்கள் அதை விடக் குறைவுதான்.. இது தவிர காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் இடமாகவும் இது இருக்கிறது. கர்ச்சீப் கைலி  விற்பனை செய்பவர்கள், மாங்காய்கள் அன்னாசி பழங்களைத் துண்டு துண்டாக்கி மிளகு காரப்பொடி உப்பு தடவி தள்ளு வண்டியில் விற்பவர்கள்.  பழைய நாளிதழ்கள் பாக்கட் நாவல்களை விற்பவர்களென அநேகர் நடமாடுகிறார்கள். ஒரு சிலர் தவிர யாரும் மற்றவர்களைக் கண்டுகொள்வதில்லை.

இவள் இவனோடு பேச ஆரம்பிக்கிறாள்.

நான் இவர்களின் உரையாடல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். நீங்கள் விரும்பும் போது என்னிடமிருந்து கேட்டுக் கொள்ள முடியும்.

( இப்போது ) காட்சி ஒன்று

இவள் : முதலில் எனக்கு மிகவும் துயரமாக இருந்தது, உனக்குப் பதிலாக என்னை அவன் தொட்டுக் கொண்டிருக்கிறானேயென்று.ஆனாலும் என்ன செய்ய ? சுழல் அப்படித்தான் என்னை இழுத்துக் கொண்டு போனது.

முதலில் அப்பாவுக்கு நம்மைப் பற்றித் தெரிய வந்தபோது அப்பா என்னிடம் சரியென்றும் சொல்லவில்லை; இதுவெல்லாம் நமக்குச் சரிப்படாது என்றும் சொல்லவில்லை. நீ அவரோட பள்ளிப் பிராயத்து நண்பனின் மகன் என்பதால் மனதளவில் அவருக்கு மறுத்துச் சொல்ல ஏதுவுமில்லை.எல்லாம் சரியாக வரும் நேரத்தில்தான் என்னுடைய அம்மா ஒரு நாள் ஆங்காரமாக அப்பாவிடம் கத்திக் கொண்டிருந்தாள். “நான் ஒரு போதும் இதற்கு  சம்மதிக்க முடியாது.இந்த வீட்டில் தூக்க மாத்திரைகள் எங்கே இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.அத்தனையும் ஒரே நேரத்தில் முழுங்கி விடுவேன்.”

இவன் : எப்போதோ நடந்ததை நினைத்து இப்போது பதட்டம் வேண்டாம்.

இவள் : அப்பாவோட அம்மாவின் சொந்த தம்பி மகள்தான் அம்மா.அப்பாவைப் படிக்க வைத்ததே அம்மாவின் அப்பாதான்.பாட்டியின் புருசன் சாதாரண பள்ளி  வாத்தியார். சொற்ப சம்பளம். பாட்டியின் நிலத்தையும் அம்மாவின் அப்பாவே கவனித்து வந்தார்.அப்பாவையும் அப்பாவின் தம்பிகளையும் அம்மாவின் அப்பாதான் படிக்க வைத்தார்.செஞ்சோற்றுக் கடன். அப்பாவால் அம்மாவை எதிர்த்துப் பேச வழியில்லை. நான் அம்மாவோடு பேச்சை நிறுத்தி விட்டேன்.என்னால் அந்த அளவுக்குத்தான் எதிர்ப்பைக் காட்ட முடிந்தது.

என் முதுகில் விழுந்தது ஒரே ஒரு கத்திக் குத்துதான். அது அம்மாவோடது. அதை நான் அவளுக்கு ஒவ்வொரு கணத்திலும் நினைவு படுத்தினேன்.

நான் இன்று வரை கடந்த காலத்தில்தான் இருக்கிறேன். அந்தக் கடற்கரை உப்புக்  காற்றில்தான் நான் உயிரோடு இருக்கிறேன். மற்ற நேரங்களில் நான் வெறும் வெற்றுச் சவமே. என்றேனும் ஒருநாள் நான் மாறிவிடுவேன் ,ஏளனப் புன்னகைகளை என்மீது வீசலாம் என்று பாட்டி ,அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை காத்திருந்தார்கள்.எதுவும் நடக்கவில்லை. கொஞ்ச நாட்களில் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்தார்கள். மனதளவில் விலக ஆரம்பித்தார்கள்.

காட்சி இரண்டு

இவள் : அவர் ஒரு நாள் என்னைத் தனது அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றார். எவ்வளவு அழகான பெண்ணை மணந்து வந்திருக்கிறேன் என்ற பெருமிதத்துடன் எல்லோரையும் பார்த்தார். அதை நான் கவனித்தேன்.என்னைக் குறித்து அவர் பெருமிதப்படுவதை  நான் விரும்பவில்லை.அதன் பிறகு அவரோடு நான் எங்கும் செல்வதில்லை.

எனது மனதில் நீயே எப்போதும் நிரம்பி இருந்தாலும் வினோதமாக என் இரு பையன்களில் ஒருவனுக்கும் உன் சாயல் இல்லை.அது இன்றளவும் எனக்கு ஏமாற்றமே.

எனது இரண்டாவது மகனின் நிறைய பழக்க வழக்கங்கள் உன்னை ஒத்திருக்கும். உன்னைப் போலவே நிறைய கதை சொல்லுவான். அவனுக்கு எதையும் கதையாகத்தான் சொல்லத் தெரியும். உன்னைப் போலவே என் புருவங்களை அடிக்கடி நீவி விடுவான். அவன் என்னிடம் பேசுவதை விட உன்னைப் போல என்னை பேச விட்டுக் கேட்பதே அதிகம். நான் நெகிழ்சியுற்று சமயாசமயங்களில் கண்கள் கலங்கும்போது அவனின் கைகள் இன்னும் விழக் காத்திருக்கும் என் கண்ணீர் துளிகளை துடைத்துவிடுவான் காரணமெல்லாம் கேட்டுக் கொள்ள  மாட்டான்.

காட்சி மூன்று

 

இவள்: பள்ளி கல்லூரி நாட்களில் நம் இருவருக்கும் எதிர்காலம் குறித்து அச்சம் இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ நானோ நீயோ படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

இவன்: நீ சொல்வது சரிதான். பள்ளி இறுதி ஆண்டை ஒட்டி எனக்கும் அப்பாவுக்கும் இடையில் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அதனால் வேறு வழி தெரியாமல் கடைசி மூன்று மாதங்கள் கடும் முயற்சி செய்து நானே படித்து பாஸ் செய்து விட்டேன். அதற்கு முன்னும் சரி கல்லூரி நாட்களிலும் சரி அப்பாதான் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து எனக்குத் தேர்வில் பாஸ் மார்க் போடச் செய்வார்.நானும் பாஸாகி விடுவேன்.

கல்லூரி நாட்களில் மதுரையிலிருந்த என் மாமா ஒருவர் மூலமாகப் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து பாஸ் மார்க் போடச் செய்வார்.

அந்த மாமா கூட அப்புறமா வீட்டுக்கு வந்து அம்மாவிடம், “அக்கா இவனுக்கு ஒவ்வொரு பாடத்திலும் முப்பத்தைந்து மார்க்குகள் போட வைப்பதே ரொம்ப கக்ஷ்டமாக இருந்தது” என்பார். அம்மாவும், “சரி விடு, இதையெல்லாம் அத்தானிடம் போய் சொல்லாதே. ஏற்கனவே அவங்க எப்போதும் அவனை கரிச்சுக் கொட்டிக் கொண்டே இருக்காங்க. நீ எதையாவது சொல்லப் போய் அவனை கரிச்சுக் கொட்ட அவங்களுக்கு இன்னும் பாயிண்ட் கிடைச்சுரும்.”

இவள்:  எனக்கு நிஜம் புரிந்திருந்தது.என்னிடம் இருந்தது ஆங்கில அறிவு மட்டும்தான். மகன்களை நல்ல பள்ளியில் நல்ல கல்லூரியில் படிக்க வைத்தேன். உள்ளபடியே நல்லா படிக்கும் குழந்தைகள் என்றாலும்அவர்கள் படிப்பை மிகவும் கண்காணித்தேன்.காட்சி நான்கு

இவள்: இரு மகன்களுமே நன்றாகப் படித்தார்கள். மூத்தவன் இஞ்சினியரிங் ஆட்டோமொபைல் படிக்க விரும்பினான் படிக்க வைத்தேன். மூத்தவனும் இளையவனைத் தன் வழியில் வர விரும்பினான். நான் குறுக்கே இல்லை.

பெரியவன் கல்லூரியில் மூன்றாவது வருகசம் படித்துக் கொண்டிருக்கும்போது அவனுடைய அப்பாவின் அலுவலகத்திலிருந்து எனக்கொரு போன். அவர் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகும் வழியிலேயே உயிர் பிரிந்திருக்கிறது.

பெரியவனுக்கும் சின்னவனுக்கும் உடனேயே போன் பண்ணித் தகவல்  சொன்னேன். முக்கால் மணி நேரத்தில்  மகன்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள் .கூடவே அவர்களது நண்பர்களும்  வந்திருந்தார்கள்.பெரியவன்தான் என் வீட்டுக்கும் மற்றவர்களுக்கும் போனில் தகவல் சொன்னான் .ஐஸ்பெட்டி வரவழைத்தான். ஆம்புலன்ஸிலிருந்து உடலை இறக்கி வைத்தான். உடலைக் குளிப்பாட்டி புது டிரஸ் அணிவித்து ஐஸ்பெட்டிக்குள் கவனமாக அவனும் அவன் நண்பர்களும் இறக்கி வைத்தார்கள். ஒரு பெரிய மாலையைத் தருவித்து பெட்டிக்கு மேல் வைத்தார்கள்.

சின்னவன் என் கையைப் பிடித்துக் கொண்டே நின்றிருந்தான் எப்போதும் போல. என்ன நினைத்தானோ ஒரு நாற்காலியை எடுத்து வந்து  ஐஸ் பெட்டிக்கு அருகில் என்னை உட்கார வைத்தான். பின்னாலிருந்து என் தோளைப் பிடித்தவாறு நின்றிருந்தான். அக்கம் பக்கத்திலிருந்து வந்து போனார்கள்.எல்லோருக்கும் பெரியவன்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். மூளையில் ரத்தக் கசிவு என்று சொல்லிக் கொண்டிருந்தான்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டது.

முன்னிரவுக்குள் என் வீட்டிலிருந்து எல்லோரும் வந்து விட்டார்கள்.வேனிலிருந்து கூட்டமாக வந்து இறங்கினார்கள். அம்மா அழுது கொண்டே வந்தவள் என் கைகளைப் பிடித்து தன் தலையில் அடித்து அடித்து அழுதாள் “என்னோட திமிரால் உன்னோட வாழ்க்கைய இப்படி ஆக்கிட்டேனே” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

பத்து நாள் முடிந்ததும் எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். புறப்படும் போது அம்மா அருகில் வந்து உனக்கு விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டலும் உன்னையும் குழந்தைகளையும் பார்க்க நாங்கள் வருவோம் என்றாள்.

பதிலுக்கு வார்த்தைகளை செருப்பாய் மாற்றி அடிக்க விரும்பினேன். வானத்தைப் பார்த்து சொன்னேன் “என் விருப்பத்தில் எதைத்தான் நடக்க விடப் போகிறீர்கள்?”

பையன்களைப் பார்த்து லீவு நாட்களில் வீட்டுக்கு வாருங்கள் என்றதற்கு “அம்மா சொன்னால் வருவோம “ என்றான் என் கையை பிடித்துக் கொண்டிருந்த சின்னவன்.

புறப்பட்டுப் போனார்கள். அப்பா வழக்கம் போல் அம்மாவின் பின்னாடியே தலை குனிந்தபடியே நடந்து போனார்.

காட்சி ஐந்து

இவள்: அப்புறம் நானும் குழந்தைகளும் ஒரே ஹாலில் படுத்து உறங்கினோம். குழந்தைகள் படிப்பதற்கான நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன்.சமையல் வேலை செய்பவரையும் சுற்று வேலை பார்ப்பவரையும் நிறுத்தி விட்டேன். எல்லா வேலைகளையும்   நானே செய்தேன்.குழந்தைகளுக்குத் தேவையான ஜெராக்ஸ் மற்றும் பிரிண்ட்களையும் தேவையான புத்தகங்களையும் நானே வெளியில் சென்று வாங்கி வந்தேன். பையன்களுடைய புத்தக அலமாரிகளை, என்னுடைய புத்தகஅலமாரியை அடுக்கி வைத்தேன்.வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டேன். வீட்டை சுற்றின தோட்டத்தை அக்கறையுடன் கவனித்துக் கொண்டேன். ஒரு நீளமான மீன் தொட்டியை வாங்கி வைத்தேன். கலர்கலராக மீன்கள் சுற்றிச்சுற்றி வருவதை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் படிக்காத நேரங்களில் கவனித்துக் கொண்டிருந்தேன், எல்லாவற்றையும் உன் நினைவுகளில் மிதந்து கொண்டே.

சீக்கிரத்தில் பையன்களின் அப்பாவின் மொத்த பணமும் வந்து சேர்ந்தது. இரண்டு பையன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தேன். உனக்கும் சேர்த்து மூணாகப் பிரிக்கலாமே என்றார்கள் பையன்கள். எனக்கு அதெல்லாம்வேண்டாம் என்றேன்.

இவன்: நீ பையன்கள் சொல்வதை கேட்டிருக்கலாமே

இவள்: இல்லை. எனக்கு அந்தப் பணம் வேண்டாம். கல்யாணம் ஆகி வந்த போதே பாட்டியின் முடிவால் அந்த வீட்டிலிருந்து என்னை சமாதானப்படுத்துவதாக நினைத்து எனக்கு சேர வேண்டிய மொத்த பணமும் நகைகளும் வந்து சேர்ந்து விட்டது. இப்போது அவர்கள் இருக்கும் வீடுகூட பாட்டியின் வீடுதான். பிற்காலத்தில் அதைக்கூட விற்கும் போது எனக்குரியது என்னை வந்து சேரும். அதுவும் கூடப்  பையன்களுக்குதான்.  என் தேவைகள் மிகக் குறைவு.

காட்சி ஆறு

இவள்: பெரியவன் படித்து முடித்தான்.சிறப்பான தேர்வு. மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் படிக்கச் சொன்னேன். கரஸ்பாண்டன்ஸில் வேண்டுமானால் படித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு வேலை தேடப் போகிறேன்.

இருங்காட்டுக் கோட்டையில் ஒரு கார் தயாரிக்கும் கம்பெனியில் வேலை கிடைத்தது

இரண்டாவது பையனுக்கும் இவன் படித்த கல்லூரியிலேயே இவன் படித்த அதே ஆட்டோ மொபைல் பிரிவிலேயே ஸீட் கிடைத்தது.

இவன்: நான் மனதளவில் என்னை ஒரு அறைக்குள் அமர்த்திக் கொண்டேன்.நானாக வெளியே வந்தால்தான் உண்டு.  எல்லோரிடமும் பேசுவேன். எப்போது யாரோடு கோபப்படுவேன் என்று சொல்லத் தெரியாது. உன்னைக் கூட அடிக்கடி திட்டியிருக்கிறேன். உன்னைத்தவிர ஒருவரையும் மன அறைக்குள் விடுவதில்லை. அப்பா அம்மா குடும்பம் குழந்தைகள் எல்லோருக்கும் செய்ய வேண்டியதை செய்வேன். யாரோடும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.

உனக்கு நீ தவறி விழுந்த நதியென்றாலும் நதியை உன் போக்கில் கொண்டுபோகத் தெரிந்திருக்கிறது.

இவள்: உன்னோடு இருந்த நாட்கள் ஒரு நேர்க்கோடு போல பொலிவோடும் பிச்சிப் பூ வாசத்தோடும் இன்னும் என்னோடு இருக்கிறது. நீ இல்லாத அப்புறமான நாட்கள் தொடர்பில்லாத புள்ளிகள் போல அமைந்து விட்டது. எந்தப் புள்ளிகளும் என்னை விழுங்கிடவில்லை.குழந்தைகள் சம்பந்தப்பட்ட புள்ளிகள் தவிரவும் எல்லாம் மெல்ல அழிந்தே விட்டது.

இவன்: உன்னைப் பேச விட்டுப் பேசுவதும் உன் புருவங்களை அவ்வப்போது நீவி விடுவதும் இயல்பு. நெருங்கி அமர்ந்திருக்கும்போதும் மற்றும் நெருக்கமான சமயங்களிலும் உன் தொடைகளில் அமீபாப் பூக்களை வரைந்திருக்கிறேன. இப்பவும் கூட.

எனக்கு இப்போதும் எப்போதும் உன்னிடம் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்வி  உண்டு

இவள்: என்ன அது?

இவன்: நான் ஏன் உன்னைப் போல் இல்லை?

காட்சி ஏழு

இவள்: பெரியவன் ஒரு நாள் தயங்கித் தயங்கிஎன்னிடம் சொல்ல ஆரம்பித்தான். சின்னவனும் அருகில்தான் இருந்தான். அம்மா உன்னிடம் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

அவன் சொல்லத் தயங்கியதை என் உள் உணர்வில் உணர்ந்தே இருந்தேன். கொஞ்ச நாளாகவே அவன் முகம் அதீத மகிழ்ச்சியோடு இருந்தது.

அம்மா நான் சொல்லி விடுகிறேன். நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். கல்லூரியில் கூடப் படித்தவள். இன்னும் வேலை கிடைக்கவில்லை. தேடிக் கொண்டிருக்கிறாள். சின்னவன் சிரித்தான்.

நீ சம்மதம் சொன்னால் அவளைத் திருமணம் செய்து கொள்வேன்.அப்புறம் இதில் வேறு ஒன்றும் இருக்கிறது. அவள் வேறு மதம், வேறு மொழி, வேறு மாநிலம்.  மலையாளி, திருச்சூர் கிறிஸ்டியன். தமிழ் அறைகுறையாகத் தெரியும். கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை.

சரி, என்னிடம் சொல்லிவிட்டாயல்லவா, நல்லபடியாகத் தூங்கு. நாளை காலை நாம் பேசுவோம். நான் உனக்கு எதிரானவளில்லை. ஆனாலும் யோசிக்க எனக்குக் கொஞ்சம் நேரம் கொடு.

அம்மா, நீங்கள் பேசும்போது நானும் இருப்பேன் என்றான் சின்னவன். சரிடா, நீ இல்லாமலா.

காட்சி எட்டு

இவள்: காலையில் எல்லோருக்கும் காபி கொடுத்தேன். பையன்கள் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று ஆவலும் கவலையுமாக இருந்தார்கள்.

அவர்கள் வீட்டுக்கு இது தெரியுமா என்றதற்கு தெரியும், சொல்லிவிட்டேன் என்றுதான் சொன்னாள். இன்று வெள்ளிக்கிழமை. வரும் ஞாயிற்றுக்கிழமை அவள் காலை நம்மோடு இருக்கட்டும். மறு ஞாயிறு நாம் அவர்கள் வீட்டுக்குச் செல்வோம். நன்றாக யோசித்துக் கொள்.பரஸ்பரம் நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைத்தான் நாம் திருமணம் என்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை அவள் எங்களோடு இருந்தாள். ஸ்கூட்டியில் வந்திருந்தாள்.  கண் கொள்ளாமல் கை கொள்ளாமல் இருந்தாள். பையன் அவளை விரும்பியதில் ஆச்சர்யம் இல்லை.

தனியறைக்கு அவளைக் கூட்டிப் போய் என் குடும்பம் பற்றி, என்னைப் பற்றி சொன்னேன். எனக்கு சம்மதம் என்று சொன்னேன். வரும் ஞாயிறு நாங்கள் மூணு பேரும் உங்கள் வீட்டில் இருப்போம். அதற்கு முன்பு உன் பெற்றோர்களிடம் எல்லாம் சொல்லி விடு. வேறு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தாலும் கேட்டு வைத்துக் கொள்.

இப்போதும் நாம் நல்ல நிலைமையில்தான் இருக்கிறோம். இதை விட நீங்கள் நல்ல நிலைமைக்கு வர விரும்புகிறேன். என் சின்னப் பையனுக்கு என்னைத் தவிர வேறு உலகம் இல்லை. அவனுக்கு நீயும் பெரியவனும் நல்ல நண்பர்களாக வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

அவர்கள் வீட்டுக்குச் சென்று வந்த வாரத்திலிருந்து சீக்கிரம் எல்லாம் முடிந்தது. காலையில் பதிவு அலுவலகத்தில் வைத்து மாலை மாற்றிக் கொண்டார்கள்.மாலையில் ஹோட்டலில் வைத்து வரவேற்பு. இரண்டு பையன் அவளின் நண்பர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் என் பக்கத்திலிருந்து எல்லோரும் வந்திருந்தார்கள். அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை குடும்பமாக வந்திருந்தார்கள்.இரவு உணவு முடிந்தவுடன் பெரியவனை அவன் மனைவியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். எல்லோரையும் வழி அனுப்பி விட்டு நானும் சின்னவனும் வீட்டுக்குத் திரும்பி விட்டோம். மூன்றாம் நாளில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் முறையாக வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள். மதியம் வரை இருந்து சாப்பிட்டு விட்டு போனார்கள். பையனுக்கு மனம் விரும்பிய வாழ்க்கையை  ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது பெருமிதமாக இருந்தது. அதைப் பகிர்ந்து கொள்ள நீதான் என் பக்கத்தில் இல்லை.ஆறு மாதத்தில் அவள் அவளின் உறவினர் மூலமாக அவனுக்கும் அவளுக்கும் ஒரு பன்னாட்டு கார் உற்பத்தி செய்யும்  கம்பெனியில் வேலை கிடைத்து ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார்கள். புறப்படும்போது சின்னவன் மிகவும் அழுதான்.

காட்சி ஒன்பது

இவள்: ஒரு நிமிஷம் நில்லு. இங்கே வாயேன்.

இவன் : ஒரு நிமிக்ஷம் என்ன. என்னுடைய  எல்லா நிமிஷமும் உன்னுடயது .சொல்ல வந்ததைச்  சொல்லு

இவள் : தயவுசெய்து இனி நீ யாரோடும் கோபப்படாதே. உன் எல்லா முகமும் எனக்கு அத்துப்படி. உனக்கு கோபமான முகமும் இருக்கிறது என்று நீ இப்போது சொல்லித்தான் எனக்குத் தெரியும். உன் கோபமான முகத்தை என்னால் கற்பனை செய்து  பார்க்கக் கூட நான் விரும்பவில்லை.

இவன் :  முயற்சிக்கிறேன். நீ இப்போது எப்படி வீடு திரும்பப் போகிறாயோ ?

இவள் : நான் போன் செய்தால் என் இரண்டாவது மகன் வந்து ஸ்கூட்டரில் என்னை அழைத்துப்  போய்விடுவான். நீ எப்படி?

இவன் : நான் இங்கிருந்து ஆட்டோவில் எக்மோர் போய் விடுவேன். மின் ரயிலில் தாம்பரம் போய்விடுவேன்.

இவள்: உன்னைக் கெஞ்சுகிறேன். தாம்பரம் என்ற வார்த்தையை என் காது பட இனி ஒரு தடவைகூட சொல்லாதே. தாம்பரபரணிக் கரையில் எனக்கு நல்லது நடக்கவில்லை. கண்ணீரோடு நெல்லையப்பனின் காந்திமதியிடம் ஒன்றுக்கு இரண்டு தடவை வாய் விட்டு அழுதிருக்கிறேன்.அந்த ராங்கிக்காரி என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. என்னைப் போல எத்தனை பெண்கள் தினந்தோறும் வந்து அவளிடம் அழுதுவிட்டுப் போகிறார்களோ. அவளுக்கென்ன, அவளுக்குப் பிடித்தவன் எப்போதுமாக மனதாலும் உடலாலும்அவளோடு இருக்கிறான். இனி மற்றவர்களைப் பற்றி அவளுக்கென்ன கவலை.

காட்சி பத்து

பெரியவர்: இங்கே இரண்டு தம்பதியினர் இருந்தார்களே, பார்த்தீர்களா? கேள்வி கேட்டவர் கையில் இரண்டு இளநீர்கள், அருந்தத் தயார் நிலையில்

தள்ளு வண்டிக்காரர்: இது அவர்களுக்காகவா?

பெரியவர்: ஆமாம். ரொம்ப நேரமாக அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் அந்நியோன்யம் என்னை மயக்கி விட்டது. அவர்களுக்கு ஏதாவது வாங்கி என் கையால் கொடுக்க வேண்டுமென்றுதான் இந்த இளநீர்களை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்.எங்கே அவர்கள் ?

மாங்காய்களை அன்னாசி பழங்களை துண்டங்களாக்கி உப்பு மிளகு தடவி தள்ளு வண்டியில் வைத்து விற்கும் அவர் சில நிமிஷங்கள் ஆழ்ந்த துயரத்துடன் இளநீரோடு நிற்பவரைப் பார்த்தார்.

தள்ளு வண்டிக் காரர்: பெரியவரே, கொஞ்சம் என் பக்கத்தில் வந்து அமருங்கள். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்களா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லும் அந்தத் தம்பதியினரை சிலர் அவ்வப் போது உண்மையாகவே இங்கே பார்த்திருக்கிறார்கள். நானும் ஓரிரு தடவை ஓரக்கண்ணால் பார்த்துக் கடந்திருக்கிறேன். அவர்கள் தம்பதியினரா காதலர்களா நண்பர்களா என்று யாருக்கும் தெரியாது.அவர்களின் புற உலகு மறந்த இணக்கமான உணர்வுகளைக் கண்டு எல்லோரும் வியந்திருக்கிறார்கள்.அவர்களின் அந்நியோந்யம் யாரையும் மயக்கி விடுகிறது.

ஆனால் அவர்கள் இப்போது இங்கே இல்லை. எங்கேயும் இல்லை. உண்மையில் அவர்கள் இந்த மியூசியத்துக்குள்தான் அதுவும் பாடம் பண்ணப்பட்டு கண்ணாடிப் பேழைக்குள் இருக்கிறார்கள்.

சந்தேகமிருந்தால் இப்போதே உள்ளே போய் பாருங்கள். நீங்கள் தேடுபவர்கள் இருப்பார்கள்.

BoomaEswaramoorthy@gmail.com