ஆரப்ப அப்பாருக்கு வயது எழுபதுக்கும் மேலிருக்கும். ஊருக்குள் இருந்த வீட்டையும், காட்டில் ஒரு ஏக்கராவையும் பெரியவன் பெரியசாமிக்கும், சின்னவனுக்கு காட்டில் இரண்டு ஏக்கரா நிலத்தையும் பாகம் பிரித்துக்கொடுத்து வருடம் பத்தாகிவிட்டது. பெரியவனுக்கு இரண்டும் பெண் பிள்ளைகள். இந்தக் கிராமத்தில் பெரிய மருமகள் குப்பை கொட்ட முடியாமல் திருப்பூர் மண்ணரைக்கு பெரியவனை இழுத்துப்போய் ஐந்து வருடமாகிவிட்டது.
ஊருக்குள் இருந்த வீட்டை உள்ளூர்க்காரன் ஒருவனுக்கு கிரகக்கோளாறு காரணமாக தனிக்குடித்தனத்துக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தான் பெரியவன். அவனோ தன் அம்மாவோடு அடுத்த வாரத்திலேயே வீட்டைக் காலிசெய்துவிட்டு அவனூட்டுக்கே போய்விட்டான். சின்னவன் குடிமீறிப்போய் குடல் வெந்து செத்து ஐந்துவருடங்களுக்கும் மேலாகிவிட்டது. சின்னவன் தனக்குப்பிரித்த காட்டுப்பங்கில் முதலாக கூரைச்சாலை வேய்ந்து மனைவியோடு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒன்னரை வருடம் ஓட்டினான்.
இரவு நேரத்தில் சீவன்களின் நடமாட்டம் கண்டு அவன் மனைவி பொறந்த ஊருக்கே பொட்டி தூக்கிப்போய்விட்டாள். ஒரு வருடம் பின்பாக ஹாலோப்ளாக் கல் வைத்து உயர்த்தி மேலே தென்னை ஓலையால் கூரை போட்டான். அப்படியே மின்சாரத்தையும் பெற்றுக்கொண்டு மனைவியைப் போய் அழைத்துவந்தான்.
தன் புருஷன் ராக்காலங்களில் குடிமீறிப்போய் காட்டினுள் ஆங்காங்கே விடியும் வரை புரண்டு கிடப்பதையெல்லாம் அவள் கண்டுகொள்ளவேயில்லை. அப்போது அவள் கையில் அஞ்சலி பாப்பா இருந்தாள் இரண்டு வயதில். ஆரப்ப அப்பாரு சோத்துப்போசி தூக்கி மாதம் ஒரு வீட்டுக்கு சோத்துக்காகப்போய் நின்று வாங்கிச்சாப்பிடச் சொன்னார்கள் பாகம் பிரித்தவர்கள்.
அப்பாரு அதற்கு ஒத்துக்கொள்ளாமல் காட்டில் அரை ஏக்கராவை எடுத்துக்கொண்டு அதன் நடுவாந்திரமாய் சாலை போட்டு கயிற்றுக்கட்டிலில் அட்டணங்கால் போட்டபடி படுத்துக்கொண்டார். இத்தனை வயதுக்கப்புறம் சீவன் புடுங்கி மேல் லோகம் போனாலென்ன? என்று சிம்னி விளக்கையே இரவு நேரத்தில் சாலைக்குள் பற்ற வைத்துக்கொண்டார்.
சாலையைச் சுற்றிலும் தக்காளி, கத்தரி, மிளகாய் என்று மிகப்பிரியமாய் வளர்த்தினார். எதையும் சமைத்து உண்ணும் வழக்கம் அவரிடம் இல்லை. வீட்டு வாசலில் மூன்று கருங்கல் கூட்டி வைத்து அதை அடுப்பு என்றார். காலையில் ரேசன் அரிசியைத் தண்ணீரில் ஊற வைத்து அடுப்பை பற்ற வைத்தாரென்றால் போசியை வைத்துக் கஞ்சி சாப்பாடு தயார் செய்துவிடுவார்.
தினமும் காலையில் ஒருவேளைதான் அடுப்பு பற்ற வைப்பார். மதியமும் இரவும் அதே சாப்பாடுதான். மதியமாகவும் இரவிலும் சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி உப்புப்போட்டு ஒரு குண்டான் கரைத்துக் குடித்துவிடுவார். கடித்துக்கொள்ள வெங்காயம், தக்காளி, மிளகாய் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்வார். இவரது அரை ஏக்கரா நிலத்திற்கு சுற்றிலும் பாதுகாப்பு வேலியாக கிலுவை மரங்களை நட்டிருந்தார்.
அதில் ஒரு சந்து தெரியக்கூடாது அவருக்கு. வரண்ட ஓலையையாவது சந்தில் திணித்து சந்தை அடைத்துவிடுவார். அவருக்குத் துணையாய் டைகர் இருந்தான். டைகருக்கு ஊருக்குள் ஒரு ரவுண்டு வந்தால் போதுமான உணவு எங்கேனும் கிட்டிவிடும். இல்லையென்றால் பக்கத்தில் ஒட்டியபடி இருக்கும் காட்டில் இவரது சின்ன மருமகள் வீட்டுக்குப் போய்விடும்.
வளர்த்தியது இவர்தான் என்று டைகருக்குத் தெரியுமாகையால் இரவு நேரத்தில் மட்டும் முன்புற மின்னமார் படலின் சந்திலேனும் தலையை நுழைத்து, படுத்து நெளிந்தேனும் இவரது ராஜாங்கத்துக்குள் வந்துவிடும். பின்பாக கொய்யாமரத்தடியில் தனக்கென இருக்கும் கரிச்சட்டியினுள் ஆகாரம் ஏதேனும் கிடக்கா? என ஒருபார்வை எட்டிப்பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என்றாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இவரது கட்டிலுக்கும் கீழாக வந்து படுத்துக்கொள்ளும்.
ஆரப்ப அப்பாருக்கு டைகர் வந்து கட்டிலின்கீழ் எத்தனை மணிக்கு படுத்தான்? என்றெல்லாம் தெரியாது. இரவு விழுந்ததுமே கரைத்துக் குடித்துவிட்டு கட்டிலில் சாய்ந்துவிடுவார். மூன்று மணி நேரம் புஸ் புஸ்சென தூங்கி விழித்ததும் தான் தூக்கம் வராமல் சும்மாவுக்கேனும் கட்டிலில் படுத்திருப்பார்.
சின்னச்சின்ன தூக்கமாய் விடியும் வரை நான்கைந்துமுறை தூங்கி விழிப்பார். ஒவ்வொருமுறையும் தொடர்ச்சியில்லாமல் சின்னச்சின்ன கனவுகளைக் காண்பார். எல்லா கனவுகளிலும் அவர் யாருக்கேனும் பயந்து ஒளிந்து ஒளிந்து போய்க்கொண்டேயிருப்பார். ஒருமுறை டாக்டராக இருக்கலாம். அவரது கையில் பெரிதாக ஊசிவேறு இருக்கும். ஒருமுறை பாம்பாய் இருக்கலாம். அது ‘புஸ் புஸ்’சென மூச்சு விட்டபடி ஊர்ந்துவரும். அதுவரும் வேகத்திற்கு இவரால் ஓடவும் முடியாது. ஆனாலும் ஓடிக்கொண்டேயிருப்பார் ஒரே இடத்திலேயே! ஒவ்வொருமுறையும் விறுக் விறுக்கென விழிப்பார்.
பக்கத்துக் காட்டில் மருமகள் ஈஸ்வரியும் அவள் பாப்பா அஞ்சலியும் மட்டும்தான். அஞ்சலி உள்ளூர் பள்ளிக்கூடத்தில் இப்போது இரண்டாம் வகுப்பு செல்கிறாள். ஈஸ்வரி புருசன் செத்தபிறகும் பொட்டுவைத்துக்கொள்ளும் வழக்கத்தை வைத்திருந்தாள். காலில் மட்டும் மெட்டி இருக்காது. பூ மட்டும்தான் வைத்துக்கொள்வதில்லை. அவள் காங்கயத்துக்காரி.
அவளுக்குத் தன் மாமனாரான ஆரப்பனை கட்டிவந்ததிலிருந்தே ஆகாது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்ற சொல்லை நம்பி ஆரப்பன் சின்னவனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லையெனச் சொல்லித் திருமணத்தை முடித்தார். திருமணமாகிவந்த நான்குமாதம் சின்னவன் குடிக்காமல்தான் இருந்தான். திருமணம் ஆனால் சரியாகிடுவான் என்கிற பெரியவர்களின் பேச்சை நம்பி அவனுக்குத் திருமணத்தை முடித்திருந்தார் ஆரப்பன்.
முருங்கைமரமானது வேதாளத்தை தன்மீது மீண்டும் ஏற்றிக்கொண்டது. அதிலிருந்து சின்னவன் குடும்பத்தில் புருசன் பொண்டாட்டி சண்டை ராக்காலங்களில் ஊரையே தூக்கிற்று. ஊரில் இருந்த நாய்களெல்லாம் இரவானதும் டிராமா போடுகிறார்களென இவர் வீட்டின்முன்பாக குவிந்து நின்றன.
ஆரப்பனையும் ஈஸ்வரி கோபத்தில் வார்த்தையை விட்டுப் பந்தாடினாள். ‘யோவ் பெருசு.. உம்பட பையனை என்னுமோ உலவத்துல இல்லாத கட்டித்தங்கம்னு சொல்லி காங்கயம் வந்து எனக்குக் கட்டிவெச்சே! இப்ப பாரு அவன் லட்சணத்தை! வேட்டி அவுந்ததுகூட தெரியாம வாசல்ல ரோல் போடறான் பாரு! என்னையும் எங்கப்பனையும் என்ன இளிச்சவாய்களா நெனச்சுட்டியா? இருக்குது இரு உனக்கு!’
ஈஸ்வரியின் ருத்ரதாண்டவம் கண்டு ஊரே மிரண்டு பின்வாங்கியது. பொட்டாட்ட இருந்த புள்ளையா இது? ஒவ்வொரு பேச்சுக்கும் அவ வாயில இருந்து தீப்பொறி பறக்குது பார்த்தியா!
ஆரப்ப அப்பாரு புதன் ஊத்துக்குளி சந்தையில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் வாங்கி வந்திருந்தார் போன வாரம். குட்டிகளாய் போனதால் அவை இரண்டும் அவரது கால்களுக்குள்ளேயே சுற்றின. அவர் தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு பக்கத்து தோட்ட மோட்டார் தொட்டிக்குச் சென்றால் பின்னாலேயே வால் பிடித்துச் சென்றன. இரண்டும் வெள்ளை நிறத்தில் மின்னின.
சந்தைக்கு வேறு காரியமாகச் சென்றவர் இவைகளின் அழகைக்கண்டு வாங்கிவந்துவிட்டார். ஆட்டுக்குட்டிகளுக்கென தனியே எந்த ஏற்பாட்டையும் அவர் செய்யவில்லை. சாலைக்கதவு திறந்திருந்தால் இரண்டும் நேரே வீட்டினுள் சென்று ஆராய்ச்சி செய்துவிட்டு அங்கேயே சிலநேரங்களில் படுத்துவிடுவதுமுண்டு.
அப்படித்தான் ஒருமுறை குட்டிகளைக்காணோமென காடு முழுக்க அலைந்தார். சாலையெங்கும் திரிந்தார். திரும்ப வந்தால் வீட்டினுள்ளிருந்து உடம்பை வில்லாய் வளைத்துக்கொண்டு வெளிவந்து வாசலில் புழுக்கையிட்டபடி வந்தன. ஆரம்பத்தில் வந்த புதிதில் டைகரைக்கண்டு இரண்டு குட்டிகளும் மிரண்டன. ஒரே வாரத்தில் டைகர் ஒரு பிள்ளைப்பூச்சி என்று தெரிந்தபின் அதன் வயிற்றிலேயே தலைவைத்துப் படுத்துக்கொள்ளவும் ஆரம்பித்தன. சிலசமயம் இரண்டு குட்டிகளும் சேர்ந்து டைகரை விரட்டும் சம்பவமும் அங்கு அரங்கேறும்.
மருமகள் ஈஸ்வரி பெருவெடை கோழிகளும் சேவல்களும் கணக்கில்லாமல் வளர்த்தி வந்தாள். ஞாயிற்றுக்கிழமை எல்லைக்காட்டிலிருந்து பொட்டிகட்டிய டிவிஎஸ்சில் வந்து கோழிகளை விலைபேசி வாங்கிப்போக ஒருவன் வந்து போய்க்கொண்டிருந்தான். மற்றபடி சின்னமருமகள் வீட்டுப்பக்கம் ஆள்வரத்தே இருக்காது.
அந்தக்கோழிகள் ஆரப்ப அப்பாருக்குப் பெரும் துன்பத்தையே கொடுத்துவந்தன. வேலிச்சந்தில் முட்டிக்கொண்டு இவர் வீட்டுப்பக்கம் கூட்டமாய் வந்து சேர்ந்துவிடுகின்றன. இவர் ஏதாவது செய்துவிடுவாரோ என்று ஈஸ்வரி சும்மாவுக்கேனும் அந்தப்புறத்திலிருந்து சப்தமிடுவாள்.
‘கோழியக்கீது கல்லெடுத்து வீசுனீன்னு வெச்சுக்கோ.. வீசுன கையை ஒடச்சிப்போடுவன் பாத்துக்க! கோழின்னா நாலுபக்கம் போயி மேஞ்சுட்டு வரத்தான் செய்யும்.. என்னை கோவக்காரி ஆக்கப்பாக்காதேயாமா! ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிப்போயிரும்!’
ஆரப்ப அப்பாரு வர ஓலையை வைத்துக்கொண்டு உஸ்சு உஸ்சு என்று மீண்டும் மீண்டும் துரத்திவிடுவார். மீண்டும் மீண்டும் அவை மிளகாய் செடிகளைக் கொத்தவே வந்து சேர்ந்தன. டைகருக்கு முன்பே தெரியுமோ என்னவோ.. தனக்கு ஆகாரமிட்டவளின் கோழிகள் என்பதால் அதுவும் அவைகளை விரட்டுவதில்லை. ’கொத்தித்தின்னுங்க.. எல்லாம் நம்முளுது தான்!’ என்றே பார்த்தபடி கிடக்கும்.
ஆட்டுக்குட்டிகள் வந்தபிறகு கோழிகள் பம்மிக்கொண்டன. குட்டிகள் விளையாட்டாய் ஓடி கோழிகளை விரட்டி விளையாடின. அதையும் ஈஸ்வரி ஒருநாள் பார்த்துவிட்டாள். ‘ஓஹோன்னானாம்! ஆட்டுக்குட்டியை எதுக்குடா கெழவன் வாங்கிட்டு வந்தான்னு பார்த்தா.. கோழிகளை முடுக்கவா.. எம்பட கோழிக வந்து மேய்ஞ்சதாலதான் உன்னோட சொத்து அழிஞ்சு போச்சா? இங்கெங்காச்சிம் ஆட்டுக்குட்டிக வரட்டும்.. வச்சிக்கறேன்!’ என்றாள்.
ஒருநாள் கோழிச்சண்டை மாற்று ரூபமெடுத்துவிட்டது. ஆட்டுக்குட்டிகள் இரண்டும் ஒரு பெட்டைக்கோழியை மையம்பறக்க காட்டினுள் துரத்த ஆரம்பித்துவிட்டன. கோழி தலைதப்பினால் போதுமடா சாமி என்று வளைந்து நெளிந்து குண்டான் குண்டானென ஓடி எப்போதும் நுழையும் வேலிக்கடவுச்சந்தில் நுழையாமல் புதிய சந்தில் நுழையப்போக மாட்டிக்கொண்டது!
அது கருங்கோழி. இரண்டு வாரம் முன்புதான் தன் ஆறு குஞ்சுகளையும் தன்னிடமிருந்து விரட்டியிருந்தது. உயிரே போனதுபோல் கத்துப்பிடித்ததும் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் அப்பாருவின் சாலைக்குள் ஓடிவந்து ‘எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்ல!’ என்பதுபோல படுத்துக்கொண்டன.
ஈஸ்வரி பதைபதைத்துப்போய் கோழி கத்தும் கடவுச்சந்து நோக்கி ஓடிவந்தாள். அப்பாரு நடந்த சம்பவங்களை பார்த்தபடிதான் கட்டிலில் படுத்திருந்தார். கோழியின் அருகில் வந்து குந்த வைத்து அமர்ந்த ஈஸ்வரி கையை நுழைத்து அதன் றெப்பட்டையைப்பிடித்து தன்புறமாக இழுத்தாள்.
கோழி ’முடிஞ்சுது எம்பட உசுரு!’ என்பது போல வேறு விதமாய் சப்தமெழுப்பியது அப்போது. ‘இருளே.. தொண்டு முண்டெ! அங்க என்ன மயிருக்கு ஏறீட்டுப்போனியாமா? தொறக்கறா தொண்டைய இப்பத்தான் ஏழூருக்கு கேக்குறமாதிரி! ஞாயித்துக்கிழமெ பொட்டி வண்டிக்காரன் வரட்டும்.. இந்தவாரம் கொடாப்புல கமுத்திவெச்சு உன்னைய மொத வித்துப்போடறேன்!’ என்றவள் எப்படியோ தன் பக்கமாக மூன்றுகிலோ தேறும் கருங்கோழியை இழுத்து தூக்கிப்போனாள்.
வீட்டின் பொடக்காளிக்குப்போய் அதன் வாயில் தண்ணீர் காட்டி கீழே இறக்கிவிட்டாள். அது நொண்டி நொண்டி இரண்டு எட்டு நடந்து பார்த்துவிட்டு அங்கே படுத்துக்கொண்டது. மீண்டும் அதைத்தூக்கி வலது காலை வைத்தியம் கற்றவள் போல விரல்களால் அழுத்திவிட்டாள். பின்பாக பழைய துணியைக்கிழித்து தண்ணீரில் நனைத்து முட்டிங்காலில் சுற்றிக் கட்டுப்போட்டாள்.
கீழே இறக்கிவிட.. பழைய நினைப்பில் வேகமாய் அங்கிருந்து ஓடப்பார்த்த கோழி முடியாமல் மீண்டும் படுத்துக்கொண்டது அங்கேயே! பார்த்துக்கொண்டிருந்த சேவல்கள் எல்லாம் தனியாக நின்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன. என்னமோ நடந்துட்டு போச்சாது.. நமக்கு ஆகாரம் தான் முக்கியமென சில பெட்டைகள் தங்கள் பாட்டுக்குக் குப்பையை கிளறிக்கொண்டு சென்றன. ஆனாலும் அவ்வப்போது திரும்பி, எஜமானி நம்மகிட்டகீது வந்துடப்போறா.. என்று கவனமாய் பார்த்துக்கொண்டன.
ஈஸ்வரி கருங்கோழியைத் தூக்கிக்கொண்டு வெக்குடு வெக்குடுவென தன் காட்டின் முகப்பு படலுக்கு வந்தாள். அதை நீக்கி சாலைக்கு வந்தவள் ஆரப்ப அப்பாருவின் மின்னமார் படலை நீக்கி அவர் காட்டினுள் நுழைந்தாள். ஆரப்ப அப்பாருவின் குடிசைக்கு வந்தவள் கோழியை அவர் வாசலில் தொப்பெனப்போட்டாள்.
“யோவ்! வாயில்லா ஜீவனோட காலை எதுக்கு நீயி கல்லு வீசி ஒடச்சு உட்டே? இந்தப்பாவமெல்லாம் உன்னை சும்மாவிடாது பாத்துக்க! போயி ரெண்டாயிரம் எடுத்தா போ! ரெண்டாயிரம் குடுத்தீன்னா மருவாதியா நான் வாங்கீட்டுப் போயிருவேன். மொண்டிக்கோழியை வச்சுட்டு நானென்ன பண்டுவேன்?”
“நானே வெறும் பொச்சாக்கிடக்கேன்.. எங்கிட்ட ஏதுலே காசு? இவ கோழியோட காலை ஒடச்சனாமா.. நாந்தான் குடுகுடுன்னு ஓடி கல்லெடுத்து வீசி உம்பட கோழி காலை ஒடச்சவன் பாரு.. நாயம்பேசுறா எம்பட வாசல்ல வந்து நின்னுட்டு!” என்றவர் கட்டிலிலிருந்து எழுந்தார்.
“அப்ப நீயி காலை ஒடைக்கல? மாகாளியாத்தா கோயிலுக்கு நடடா! வந்து சூடம் பத்தவெச்சு சத்தியம் பண்றா பார்ப்போம்! மருகாதியா கோவணத்துல முடிஞ்சு வச்சிருக்குற பணத்தை எண்ணிக்குடுத்துடு. இந்தக்கோழிய வறுத்துத்திம்பியோ.. வித்துத்தொலைப்பியோ.. அது உம்பாடு!”
“காசுமில்ல மயிருமில்ல போலே இங்கிருந்து”
“அப்படின்னா உம்பட ஆட்டுக்குட்டியில ஒன்னைப் புடிச்சுக்குடு!”
“உங்கோத்தா பாரு அப்பிடி வெவரமா பெத்திருக்கா உன்னைய..” என்று ஆரப்ப அப்பாரு பேசவும்.. ‘எங்காயாளப்பத்தி பேசாதடா நீயி!’ என்று கோபம் மிகுதியில் வலது காலைத்தூக்கி அப்பாருவின் இடுப்பில் ஒரு மிதி வைத்துவிட்டாள் ஈஸ்வரி. ‘ஐயோ!’ என்று அப்பாரு அப்படியே பின்னால் சாய்ந்துவிட்டார். நல்லவேளை, கட்டிலில்தான் தொப்பென விழுந்தார்.
விழுந்தவரிடம் பேச்சுமூச்சு எதுவுமில்லாததால் திருதிருவென சுற்றிலும் பார்த்தவள் வாசலில் கிடந்த தன் கோழியைத் தூக்கிக்கொண்டு அவசர அவசரமாய் இடத்தைக்காலி செய்து தன் வீட்டுக்கே வந்துசேர்ந்ததும் கோழியோடு வீட்டினுள் போய் கதவை உள்புறமாய் தாழ்ப்பாளிட்டு மூலையில் போய் அமர்ந்து கொண்டாள். கோழியிடமிருந்து முனகல் சப்தம்கூட இல்லை. சம்பவம் பண்டீட்டா எஜமானி, என்று அதுவும் தெரிந்துகொண்டதுபோல அமைதி காத்தது.
ஆரப்ப அப்பாருக்கு மனசே ஒருநிலையில் இல்லை. மருமகள் எட்டி உதைத்துவிட்டாளே! இனி இந்த உசுரை இந்த ஊரில் வைத்திருக்கலாமா? என்றெல்லாம் யோசித்தவர் நேரே ஊர் கோயில் மணியக்காரனை போய் சந்தித்தார். கோயில் மணியகாரனின் அப்பாவுக்கு இவர் வயதுதான். இரண்டு வாரத்திற்கும் முன்பாகத்தான் கிடையில் ஒருவருஷம் படுத்திருந்து போய்ச்சேர்ந்தார். நாலு மாசம் அந்த வீட்டில் அடப்பு என்றார்கள்.
கோயல்மணியக்காரனின் சம்சாரம் சுப்பாயாள் இவர் போன சமயம் பெரியவர் இறந்த வீட்டினுள் விளக்கு பற்ற வைத்துவிட்டு வெளியில் வந்தார். ஆரப்ப அப்பாரைக்கண்டதும் ‘வாங்கய்யா!’ என்று கும்பிட்டார். இவர் ’வேலுச்சாமி இருக்கானா?’ என்றார். ‘அவிய இதென்ன பொடக்காளியில தண்ணி ஒருசொப்பு ஊத்தீட்டு வாரனுட்டு துண்டெடுத்துட்டு போனாப்லைங்கய்யா.. சித்தெ அந்த கட்டல்ல க்கோருங்கய்யா.. நானு உங்களுக்கு காபித்தண்ணி வச்சு எடுத்தாறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றார்.
சித்தங்கூரியத்தில் கோயல் மணியம் வேலுச்சாமியே தலையைத் துவட்டிக்கொண்டு ’வாங்கய்யா!’ என்று சொல்லிக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்தார்.
“வேகாத இந்த வெய்யில்ல வெளிய சுத்தீட்டு அலைஞ்சுட்டு வந்தனுங்களா.. அதான் ஒருசொப்பு தண்ணி ஊத்துனம்னா வெடுக்குனு இருக்கும்னு ஒரு காக்கா குளியல் போட்டனுங்கய்யா! என்ன சோலியா இருட்டு கட்டுற நேரத்துல வந்திருக்கீங்க?”
“அதை ஏங்கேக்குறே அப்புனு. இனி நானு உசுரெ வெச்சுட்டு இருந்து என்ன பிரயோசனம்? ஊரே கேளு நாடே கேளுன்னு எம்பட கதை வெளிய வந்துட்டா என்னாவுறது அப்புனு?”
“அப்பிடி உங்களுக்கென்ன ஆயிப்போச்சுங்கய்யா?”
“உங்கப்பனாட்ட நான் கெடையில இன்னிக்கி உழுந்துருக்க வேண்டியவன் அப்புனு.. மாவாளியாத்தா புண்ணியத்துல கட்டல் குறுக்க கெடக்கங்காட்டி என்னோட இடுப்பு எலும்பு தப்பிச்சுது! எம்பட மருமவ.. அதான் சின்னவன் பொண்டாட்டி ஈஸ்வரி இருக்காள்லோ.. அவ என்னை ஒதைச்சு தள்ளிப் போட்டாப்பா!”
“இதென்ன கெரகமா இருக்குது.. அவளுக்கு உங்கமேல என்ன அம்முட்டு கோவம்? காங்கயத்துக்காரிக்கி காலு நீட்டமாட்டத்தானிருக்குதா! அப்பிடியே அந்தக்காலைப்புடிச்சு திருவி உட்டிருக்கலாமல்லங்கய்யா!” என்று காபி கொண்டு வந்த வேலுச்சாமியின் சம்சாரம் சொல்லிற்று.
“அவ கோழிகள் வளத்துறான்னுதான் தெரியுமே.. அதெங்கியோ ஒன்னு வேலிக்கால்ல சிக்கிடுச்சாட்ட இருக்குது. இவபோயி அதை இழுத்து எடுத்தாந்து எம்பட வாசல்ல போட்டுட்டுப் பணம் ரெண்டாயிரம் கொண்டான்னு சத்தமா போடுறா.. எங்கிட்ட ஏதுளே பணம்னேன்.. ஒதச்சிப்போட்டா அம்மிணி! அதான் மாப்ளெ ஒரு எட்டு வந்து அவளைக் கண்டிச்சு பேசுனாத்தான் ஆவும்னு நெனச்சுட்டு வந்தேன். இவ எல்லாம் தூங்குறப்ப தலையில நாளைக்கி கல்லைச்சுமந்து கொண்டாந்து போட்டுக் கொல்லமாட்டாள்னு என்ன நிச்சயமிருக்குது அப்புனு? அதான் ரெண்டு பேருத்துக்கும் சரியா பிரிச்சிக்குடுத்து ஆயிப்போச்சுல்ல பத்து வருசம்! இனியும் எங்கிட்ட என்ன இருக்குது? நானே ஆக்கித்தின்னுட்டு சிவனேன்னு கிடக்குறேன் காட்டுக்குள்ள.. எங்கூட என்ன எசிலி இவளுக்கு? அட, பேரப்புள்ளைய கண்ணுல காட்டுறாளா அவ! எங்காச்சிம் வேலிக்காலுக்கு பக்கம் பார்த்தாக்கூட நாலு பேச்சு பேச உடறாளா? ‘அந்தக்கெழவங்கூட என்னடி பேச்சு உனக்கு’ன்னு ஒரு சத்தம் போட்டா, பாப்பா பாவம் உட்டேஞ்சவாரின்னு ஓடீருது! எம்பட கதைய கேட்டா ஊரே காறித்துப்பிப்போடும் அப்புனு!”
“செரி உடுங்கய்யா.. நான் பொறவுக்கே வந்து அவகிட்ட சொல்லிப்போடுறேன். ஒதைக்கிற அளவுக்கு ஆயிட்டாளா அவ! இது சுத்தப்படாதே! நீங்க பார்த்துப்போங்க! நானு அவளைப்பார்த்து பேசீட்டு காட்டுக்கு வர்றேனுங்கய்யா!” என்றார் வேலுச்சாமி. ஆரப்ப அப்பாரு காபியைக் குடித்து முடித்துவிட்டு டம்ளரைக் கட்டிலின் கீழே வைத்துவிட்டு எழுந்தார்.
ஆரப்ப அப்பாரு ஊர்த்தெருவுக்குள் நுழையும் போது தெருவிளக்குகள் பளீரிடத்துவங்கின. ஆரப்பன் இப்படி வெளியில் எங்காவது போகையில் மட்டும் வேட்டியும் மேலுக்கு ஒரு துண்டையும் போட்டுக்கொண்டு வருவார். மற்றபடி காட்டில் கிடக்கையில் வெறும் கோவணம் மட்டும்தான்.
ராசன் சலூன் கடை வைத்து நான்கு மாதமாகிவிட்டது. அவன் கடையை நேரமே சாத்திவிட்டு போய்விட்டான் போலிருக்கிறது. ரோட்டோர டிச்சுக்குழியில் ரெண்டு டேக்டர் மண் போட்டு நிரவி மேடாக்கி ஓலைக்கீத்து போட்டு மேய்ந்திருந்தான் ராசன். உள்ளே பழைய இரும்புக்கடையில் வாங்கிவந்த ரோலிங் சேருக்கு ஆங்காங்கு வைத்தியம் பார்த்ததால் ஓரளவு சிறப்பாகவே அது கடைக்குள் நிற்கும்.
இரண்டு பெரிய கண்ணாடிகளை ஸ்பான்சராக பெரிய மனிதர்களைப்பிடித்து வாங்கி மாட்டியிருந்தான். ஊரின் கிழக்கே குப்பன் கசாப்புக்கடை போட்டிருந்தான். வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை கசாப்புக்கடை முன்பாக சனம் விடிகாலையிலேயே வந்து நின்று கொள்ளும் கையில் பையுடன்.
குப்பனின் சம்சாரமும் அவனுக்கு உதவியாய் நின்றிருப்பாள். பணம் வாங்குவது, கடனை ஞாபகத்தில் வைத்திருப்பதெல்லாம் அவள்தான். ஊர்நாய்கள் பூராவும் அங்கேதான் மதியம் வரை சுற்றிக்கொண்டே இருக்கும்கள். கோவில் கல்லுக்கட்டு யாருமில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது. பிள்ளையார் கிழக்கு முகனாக இருளில் அமர்ந்திருந்தார்.
மாகாளியாத்தா கோவிலினுள் மஞ்சள்நிற விளக்கு எரிந்தபடியிருந்தது. சின்னாயா கடையில் சட்னி சாம்பார் வாசம் இவர் மூக்குக்கு வீசியது. ஆசையாய்த்தான் இருந்தது இட்லி சாப்பிட. ஆனால் ஆயாவுக்கு எந்த நேரமும் மூக்கில் நீர் வடிந்தபடியே இருக்கும். அதை அடிக்கடி சிந்தி பின்புறத்தில் தடவிக்கொண்டே சாம்பார் சட்னி தயாரிப்பாள். இதனாலேயே சந்தைக்கு என்று பேருந்து ஏறிப்போனால் அங்கே ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்வார்.
சின்னாயாவின் தடவலை நினைத்ததுமே இவருக்கு ஒமட்டிக்கொண்டு வரவே கடையைத்தாண்டினார். குடித்த காபியே வெளியே வந்துவிடும் போலிருந்தது. கடை பெஞ்சில் நான்கைந்துபேர் அமர்ந்திருந்தார்கள். யாரும் இவரைக் கூப்பிடவுமில்லை. ஆள் போனால் எடுத்துவீச மட்டும் கூட்டமாய் வந்துவிடுவார்கள். ஆள் இருக்கையில் நல்லதாய் நாலு பழமை பேச எவனுக்கும் நேரமில்லை.
பிணமாய்க் கிடக்கையில் ‘நல்லமனுசனப்பா ஆரப்பன்!’ என்பார்கள். ‘வயசுல அப்பாரு ஒரே ராஞ்ஜுல சில்லாங்காட்டு கெணத்தையே தாண்டிருவாரு! அம்மாயிய தெனத்திக்கிம் உடமாட்டாராமா.. ராஞ்ஜீட்டே இருப்பாராமா.. ஆனா தொடுப்பெல்லாம் கிடையாது அவருக்கு! நல்ல மனுசன்!’ என்பார்கள்.
இரவு நேரம் என்பதால் ஊன்றுகோலை எடுத்து வந்திருந்தார் அப்பாரு. பூச்சிபொட்டு தென்பட்டால் ஒரு போடு போடலாம். அதன் கீழ்பகுதியில் இரும்பால் ஆன கொப்பி இருந்தது. கொப்பியைப்பிடித்து இழுத்தால் குத்தீட்டி அதனுள் இருக்கும், அதை ஊன்றிக்கொண்டே நடப்பதும் சுலபமாகவே இருந்தது அவருக்கு. ஆனால் அப்பாரு குச்சி போட்டுட்டுது.. இனி அவ்வளவுதான் என்று ஊரார் பேசிவிடுவார்களே!
இவர் தன் காட்டின் மின்னமார் படலை உள்ளே தள்ளுகையில் குபீரென எங்கிருந்தோ டைகர் ஓடி வந்து பொதுக்கென இவர் கால்களுக்குள் முட்டி காட்டினுள் ஓடினான். ‘நீயொருத்தன் இருக்கே பாரு சாவமாட்டாமே.. இப்பிடியாடா மனுசனை பெறட்டித்தள்ளுறாப்ல ஓடுவே! ஈஸ்வரி போட்டுட்டாளா சோறு உனக்கு?” என்றவர் ஈஸ்வரி வீட்டைப் பார்த்தார். வெளிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. படலை சாத்திவிட்டுத் தன் குடிசை நோக்கிச் சென்றார். சென்றதுமே கட்டிலில் வேட்டியோடே சாய்ந்தார். கிழக்கே எங்கோ வானம் டொமீர் என்றது.
—
கோவில் மணியம் வேலுச்சாமி தன் புல்லட்டில் தடதடத்தபடி ஈஸ்வரியின் வீட்டு வாசலில் வந்து நிப்பாட்டினார். புல்லட் சத்தம் காட்டுப்பாதையில் கேட்டபோதே ஈஸ்வரிக்குத் தன்னைத்தான் பார்க்க வண்டி வருகிறது என்பதை தெரிந்திருந்தாள். வாசலில் இறங்கி நின்றவருக்கு.. ப்ளாஸ்டிக் சேரை வீட்டினுள்ளிருந்து எடுத்தபடி வந்த ஈஸ்வரி ‘வாங்க மாமா!’ என்று சொல்லி சேரை வாசலில் போட்டாள். அஞ்சலி பாப்பா வீட்டின் கதவுக்கருகாமையில் நின்றபடி, வந்தது யார்? என்று பார்த்தாள்.
“புள்ளை எத்தனாவது படிக்கிறா மருமகளே?” என்று கேட்டபடி சேரில் அமர்ந்தார் மணியம்.
“மாமா, அவ ரெண்டாங்கிளாஸ் போறாளுங்க!”
“எல்லாரும் அவிங்கவங்க பிள்ளைங்களை கான்வென்ட் ஸ்கூல் வேனுக்கு அனுப்புறாங்க.. நீயென்னமோ உள்ளூரு பள்ளிக்கோடத்துக்கு தாட்டி உடறியா!”
“அங்க தொட்டதுக்கெல்லாம் பணம் கேட்டு நச்சுவாங்க மாமா. ஊட்டுல எடுத்து நீட்டறதுக்கு எந்த நேரமும் நோட்டு வேணும்ல. ஏன் இங்க படிச்சா பிள்ளைக்கி அறிவு வராமப்போயிருமா? பிள்ளைய வேலைக்கின்னு வெளியவா நானு தாட்டியுடப்போறேன்? வெச்சிருக்குறதே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு! காபி வெக்கட்டுங்களா..”
“அதெல்லாம் ராத்திரியில குடிக்கிறதில்லெ மருமகளே! ஐய்யன் சித்த முந்தி தோட்டத்துக்கு வந்துச்சு. வயசான காலத்துல அவருகூட உனக்கென்ன மருமகளே? இல்ல, அவரு வயசென்ன உம்பட வயசென்ன? நீபோயி அவரை ஒதைச்சிருக்கியே.. ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிருந்தா யாரு பாங்கு பாப்பாங்க சொல்லு?”
“எம்பட கோழிக்காலை ஒடச்சிப்போடாப்லைங்க மாமா!”
”அட, ஒரு கோழிதான! அதுக்காகப்போயி நீயி இப்பிடி பண்ணீருவியா? அந்தமனுசனே வயசான காலத்துல இன்னமும் புடிவாதமா ஆக்கித்தின்னுட்டு இருக்குது. அதையிம் போயி நீ.. இதெல்லாம் நல்லாயில்ல பார்த்துக்க மருமகளே!”
“இல்லீங் மாமா, சட்டுனு கோவம் வந்துருச்சு.. இனிமே அவரு வாசலுக்கு நான் போவலீங்க! எம்பட கோழிகளும் அங்க போகாத மாதிரி பாத்துக்கறேன்”
“மனுசன் தடுமாறிப்போயி எங்கிட்ட வந்து சொல்றாப்ல.. அவரு வாழ்ந்த வாழ்வென்ன இருப்பென்னன்னு உனக்கெல்லாம் தெரியாது மருமகளே! இனி இந்தமாதிரி சமாச்சாரமெல்லாம் எம்பட காதுக்கு வரப்புடாது பாத்துக்க! செரி, இதச் சொல்லீட்டு போலாம்னு தான் வந்தேன். புடிக்கலையா ஒரு மனுசனெ.. ஒதுங்கிக்க! அதைய யாரும் குத்தம் சொல்லப்போறதில்லியே! அதை உட்டுட்டு பல்லைக்கிஞ்சீட்டே இருந்தா என்ன வந்து கொட்டிடப்போவுது? சரி நான் கிளம்புறேன் மருமகளே!” என்றவர் சேரிலிருந்து எழுந்தார்.
வேட்டியை அவிழ்த்து மீண்டும் ஒருமுறை கட்டிக்கொண்டு புல்லட்டை கிளப்பிக்கொண்டு சென்றார். ஆரப்ப அப்பாருவின் காட்டுக்குப்போய் ஒரு வார்த்தை சொல்லிப்போகலாமா.. என்று நினைத்தவர் சரி நாளைப்பின்ன பார்த்துப்போமென ஊருக்குள் செல்லும் பாதையில் திருப்பினார்.
—
ஆரப்ப அப்பாருக்கு அடுத்த நாளிலிருந்தே ஆச்சரியம் தான். ஈஸ்வரியின் கோழிகள் சொல்லி வைத்ததுமாதிரி இவர் காட்டுக்குள் ஒன்றுகூட வரவில்லை. ஈஸ்வரி வளத்துற கோழிகள் எல்லாம் சொல்பேச்சு கேக்குற கோழிகளாய் இருக்கலாமெனவும் நினைத்தார். ஆட்டுக்குட்டிகளைக் காட்டினுள் மேயவிட்டுவிட்டு கிழக்கே இருந்த வேப்பைமர நிழலில் துண்டை விரித்து படுத்திருந்தார் ஆரப்பன்.
அவர் பார்வை வேலிக்கு அந்தப்புறமாய் ரப்பர் பந்தை உயரத்தூக்கி வீசி எறிந்து விளையாடும் பேத்தியைப் பார்த்தபடி இருந்தது. நேர் எதிர்க்கே வேலிக்கு அந்தப்புறமாயும் ஒரு வேப்பை மரம் உசந்து நின்றிருந்தது. அஞ்சலி பாப்பா அந்த மரத்தடி நிழலுக்கு வந்து சேர்ந்தாள்.
ஆரப்பன் தூங்குவது போல பாசாங்கு செய்தபடி அரைக்கண்ணால் பேத்தியைப் பார்த்தார். சிவப்பு நிற கவுன் அணிந்திருந்தாள் பாப்பா. அப்படியே சின்னவன் சின்னச்சாமியின் ஜாடை முகத்தில் இருந்தது. பாப்பாவும் படுத்திருக்கும் இவரை உற்றுப்பார்த்தாள். தூங்குவதாய் நினைத்தவள் ‘தூய்!’ என்று சப்தமிட்டபடி பந்தை உயர வீசினாள். பந்து இந்தப்பக்கம் விழுந்து நாலு குதி குதித்து காட்டுக்குள் அமைதியானது.
அப்படியே சின்னச்சாமியின் குசும்புத்தனம் பேத்தியிடம் இருப்பதாய் நினைத்தார். சின்னவன் சின்னச்சாமி சிறுவயதில் பெரியவன் தூங்கினால் ஓடிச்சென்று அவன் காதில் ‘குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்’ என்று சப்தமிட்டுவிட்டு ஓடிவிடுவான். நினைக்கையில் ஆரப்பனுக்கு சிரிப்பு வந்தது. பாப்பா தன் வீட்டை அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்டாள். அம்மா பார்த்தால் திட்டுவாளே!
“எனக்குப் பந்து வேணும்!” பாப்பா சப்தமில்லாமல் கேட்டது. ஆரப்பன் காதில் கேட்டுக்கொண்டுதான் படுத்திருந்தார். அப்பாரு எம்பட பந்தை எடுத்துக்குடு! அப்படின்னு பேத்தி கேட்டால் காதுக்கு இனிமையாக இருக்குமென நினைத்தார். ஆனால் பாப்பா தன் வீட்டைத் திரும்பித்திரும்பி பார்த்துவிட்டு ‘எனக்குப் பந்து வேணும்!’ என்றே சொல்லிற்று. ‘அப்பாரு என்னோட பந்தை எடுத்துக்குடுன்னு, சொன்னால்தான் எடுத்துக்குடுப்பேன் பாப்பா!’ படுத்திருந்தபடியே இவரும் மெதுவாய் சொன்னார். பாப்பா கொஞ்சம் நேரம் அமைதியாய் நின்றது.
“உங்கோயா பாத்தாள்னா அந்தக்கெழவாடி கூட என்னாடி பேச்சு? அப்படின்னு உன்னைய சத்தம் போடுவா.. அவ பாக்குறதுக்குள்ள கேளு.. சீக்கிரம்!” என்றார்.
“அப்பாரு.. என்னோட பந்தை எடுத்துக்குடு சீக்கிரமா!” பாப்பா சொன்னதும் மளாரென எழுந்தார் ஆரப்பன். சற்றுத்தள்ளி ஆட்டுக்குட்டிகள் இரண்டும் பந்துவிளையாட்டில் ஈடுபட்டிருந்தன. பந்தை எச்சிப்படுத்தி மூக்கால் நகர்த்தின. ‘வாரனிரு..” என்று இவர் சப்தமிடவும் அவை பந்தை விட்டுவிட்டு அவரைப்பார்த்தன.
ஆரப்பன் தலைக்குத் துண்டை உருமால் கட்டிக்கொண்டு போய் பந்தை எடுத்து ஆட்டு எச்சிலைக் கோவணத்தில் துடைத்து விட்டு வேலிக்கருகில் வந்தார். ’எங்கிட்ட வீசு அப்பாரு பந்தை!’ என்றாள் அஞ்சலி பாப்பா. கிலுவைக்குள் கையை நுழைத்து பாப்பாவின் காலடியில் பந்தைப்போட்டார் ஆரப்பன்.
பாப்பா அதை எடுத்துக்கொண்டு ’தக்கதை தக்கதை’ என வீடு நோக்கி ஓடினாள். ஆரப்பன் பார்த்துக்கொண்டே மீண்டும் வந்து நிழலில் சாய்ந்தார். அப்பாரு அப்பாரு என ரெண்டு விசுக்கா பேத்தி கூப்பிட்டது காதில் இனித்துக்கிடந்தது. இன்னும் சித்தங்கூரியம் நின்றிருந்தாள் என்றால் ‘பள்ளிக்கூடம் இன்னிக்கி லீவா? மத்தியானச்சாப்பாடு என்ன போடறாங்க?’ இப்படியெல்லாம் பேத்தியிடம் கேட்டறிந்திருக்கலாமென நினைத்துக்கொண்டு கிடந்தார்.
—
அன்றைய இரவில் ஆரப்பன் கட்டிலில் சாயப்போகும் சமயம் கிழக்கே ஈஸ்வரியின் கர்ண கடூரமான சப்தம் ‘வீல்’ எனக்கேட்டது! அதைத்தொடர்ந்து ‘உடறா நாயே!’ என்ற குரல் இரவு நேரத்தில் ஆரப்பனுக்குக் கேட்கவே என்னவோ ஏதோவென பதறிக்கையானார். சாலையில் சொருவி வைத்திருந்த ஊன்றுகோலை அவசரமாய் உறுவிக்கொண்டு நேர் கிழக்கே முடிந்த மட்டிலும் விரைவாக சென்றார்.
டைகர் ‘ங்கூ ங்கூ’ வென ஒலியெழுப்பிக்கொண்டு இவருக்கும் பின்னால் வந்தது. வேலிக்கருகில் வந்தவர் கையிலிருந்த கோலால் நாலு தட்டு தட்டி வேலியில் ஆள்நுழையும் துவாரம் செய்தார். உடம்பை ஓரமாய் நகர்த்தி காலைத்தூக்கி அந்தப்புறமாய் வைத்து சந்தில் முட்டி ஈஸ்வரியின் காட்டுக்குள் வந்தார்.
ஈஸ்வரியின் வீட்டின்முன்பாக பொட்டி வைத்த டிவிஎஸ் நின்றிருப்பது வெளிவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. டைகர் இவருக்கும் முன்னால் ஈஸ்வரியின் வீடு நோக்கி ஓடினான். இப்போது வீட்டிலிருந்து எந்த சப்தமும் வரவில்லை. பாப்பா அழுதபடி வாசலுக்கு ஓடி வந்து நின்று வீட்டின் கதவைப்பார்த்து நின்றது.
மூச்சிறைக்க வந்தவர் பாப்பாவைத்தாண்டி திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி! கோழி வாங்கிப்போக வந்தவன் ஈஸ்வரியைக் கீழே தள்ளி அவள் மேல் மசத்தனமாய் விழுந்து நசுக்கிக்கொண்டிருந்தான். ஈஸ்வரியின் ஜாக்கெட் கிழிந்து தொங்கியது. முலைகளில் பற்களைப்பதித்துக்கொண்டிருந்தவன் பின்னந்தொடையில் ஈட்டியைச் சொருவி ஒரு நெம்பு நெம்பினார் ஆரப்பன்.
‘ஐயோ!’ என்று அவன் உருளும் சமயத்தில் ஈட்டியை உறுவியவர் மீண்டும் ஒரு குத்து குருட்டாம்போக்கில் ஏற்றினார். அதே காலின் முன்பக்கத்தில் குத்து விழுந்தது. ஈஸ்வரி திடுகுப்பென எழுந்து வாசலுக்கு ஓடினாள். பின்னாலேயே கோழிக்காரன் காலை இழுத்துக்கொண்டு ஓடினான். தன்னுடைய டிவிஎஸ் அருகே ஓடியவன் அதை ஸ்டார்ட் கூட செய்யாமல் உருட்டியபடி தள்ளிக்கொண்டே வாசலைக்கடந்தான். டைகர் குரைத்துக்கொண்டே அவனை விரட்டியது.
‘எங்கிருந்து எங்கடா வந்து வேலைத்தனத்தைக் காட்டுறே? யாரு ஊடுன்னு தெரியுமாடா இது? ஆரப்பன் மருமக ஊடுடா எருமெமேய்க்கி! கொரவளியில குத்தாம உட்டேன் பாரு.. பொழைச்சிப்போடா! இனிமே கோழிவேணும் மயிரு வேணும்னு ஊருக்குள்ள உன்னைப்பார்த்தேன்.. வடுவா!’ ஆரப்ப அப்பாரு மூச்சு வாங்கிக்கொண்டே வார்த்தையை விட்டு விட்டுக் கத்தினார். அப்படியே கெஸ் எடுத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார்.
“பாப்பா நீ அழாதே சாமி! அம்மாளுக்கு ஒன்னுமில்ல! அழுவாதே! வா சாமி.. வந்து திண்ணையில அப்பாருகிட்ட உக்கோந்துக்குவியாமா வா” என்றார் அஞ்சலி பாப்பாவிடம். பாப்பா இருளைத் திரும்பிப்பார்த்துவிட்டு ஆரப்பன் அருகில் வந்து நின்றது.
‘’அம்மாளெ அந்தாளு ஓங்கி ஓங்கி அடிச்சுது! சத்தம் போட்டா கொன்னு போடுவேன்னு அடிச்சுது!” சொல்லிக்கொண்டே தேம்பினாள் பாப்பா.
“அழுவாதே சாமி.. அவனை இதா இதைப்பாரு.. இந்த ஈட்டியால ரெண்டு குத்து குத்திட்டேன்! புண்ணாயி சீப்புடிச்சு நாறப்போறான் அவன்!” என்றார். பாப்பா அழுகையை நிப்பாட்டியிருந்தது. ஈஸ்வரி பாத்ரூமிலிருந்து வேறு துணி உடுத்தி வந்து வாசலில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
“மருமவளே! இப்ப எதுக்கு நீயி மறுக்காவும் அழுவுறே? அதான் சத்தங்கேட்டதீம் வேலியப்பிச்சுட்டு நான் வந்துட்டன்ல! பாப்பா பயந்துக்குவா! எப்பயும் பகல்லதானே கோழிக்கி வருவானவன்? இன்னிக்கென்ன சாமத்துல கோழி அவனுக்கு? அப்பவே காத்தால வாடான்னு நீயி முடுக்கியுட்டுருக்கோணும்ல! செரி வெட்டியா எதுக்கு கண்ணீரு உட்டுட்டிருக்கே.. சோறு உங்கலீன்னா பாப்பாவும் நீயும் சாப்டுட்டு படுங்க! அதையவே நெனச்சுட்டு இருக்காதே!” டைகர் அங்கங்கே இருளிலும் மோந்து மோந்து பார்த்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்த ஈஸ்வரி அருகில் போய் நின்றது.
“பாப்பா.. ஊட்டுக்குள்ளார போயி அப்பாருக்கு சொம்புல தண்ணி கொண்டாறியா?” என்றார். அவருக்கு நாவு வறண்டுபோயிருந்தது இப்போதுதான் தெரிந்தது. பாப்பா அம்மாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டினுள் போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஆரப்பன் வாங்கி அன்னாந்து மொடக் மொடக்கென குடித்து வெறும் சொம்பைத் திண்ணையில் வைத்தார்.
“இந்த ஈட்டிக்கி கொப்பியாட்டம் வட்டமா மூடி ஒன்னு ஊட்டுக்குள்ள கெடக்கும் சாமி அதை எடுத்தா ஓடி!” என்றார். பாப்பா மீண்டும் வீட்டினுள் சென்று ஈட்டிக்கொப்பியை தூக்கிவந்து குடுத்தாள். ஆரப்பன் வாங்கி ரத்தக்கறையுடன் இருந்த ஈட்டியை மூடினது போல கப்பென வைத்து ஒரு அழுத்து அழுத்தவும் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டது.
“சேரியாயா.. நான் போயிட்டு வர்றேன். நேரங்காலமா சோறு உண்டுட்டு படுங்க ரெண்டுபேரும்!” என்றவர் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க்கிடந்த தன் செருப்பை தொட்டுக்கொண்டு மேற்கே நடையிட்டார். ‘டைகரே.. வர்றியாடா?’ என்று குரல்கொடுத்தார். டைகரோ ஈஸ்வரியின் அருகில் படுத்துக்கிடந்தது.
—
அடுத்தநாள் ஆரப்பன் எழுந்தபோது விடிந்தேவிட்டது. இரவில் அவருக்கு நிம்மதியான தூக்கமில்லை. கண்டதையும் நினைத்துக்கொண்டு கட்டிலில் சும்மாவே படுத்திருந்தார். விடிகாலையில் தான் தூங்கியிருப்பாற்போல அவரையும் அறியாமல். சடவாயிருந்தது அவருக்கு. இருந்தும் கஞ்சி காய்ச்ச வேண்டுமே! கட்டிலிலிருந்து எழுந்து போய் பானைத்தண்ணீரில் கைவிட்டு தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டார்.
ஆட்டுக்குட்டிகள் இரண்டும் தெற்கு வேலி அருகே குனிந்த வாக்கில் மேய்ந்து கொண்டிருந்தன. டைகரைக் காட்டுப்புறமெங்கிலும் காணோம். ஈஸ்வரி வீட்டிலேயே படுத்துக்கொண்டான் போலிருக்கிறதென நினைத்தார். அருகிலிருந்த வேப்பைமரத்திலிருந்து குச்சியை ஒடித்து வாயில் தலவை மென்றார். பிரஸ் மாதிரி ஆனதும் பற்களின்மேல் இழுஇழுவென இழுத்தார். பின்பு இரண்டாய்ப்பிளந்து ஒன்றை வைத்து நாக்கு வழித்தார். போசியில் தண்ணீர் மோந்து வாயைக்கொப்பளித்து புரிச்சென துப்பினார்.
திரும்ப சாலைக்கு வந்தவர் மூன்று டம்ளர் அரிசியை போசியில் கொட்டி விட்டு தண்ணீர் கொடத்தில் சொம்பை நுழைத்தபோது டைகர் வாசலில் நின்றபடி குரைத்தான். போசியை அப்படியே சாலையில் வைத்துவிட்டு என்னவென பார்க்க குடிசையிலிருந்து வெளியே வந்தார் ஆரப்பன். பாப்பா கொண்டுவந்த பெரிய போசியை திண்ணையில் வைத்துவிட்டு இவர் முகத்தைப்பார்த்தாள்.
“இதென்ன சாமி போசியை நீயி தூக்கீட்டு வந்திருக்கே?”
“அம்மா உனக்கு இட்லின்னா ரொம்ப புடிக்கும்னு சொல்லிக் குடுத்து உட்டுச்சு!”
இட்லி என்றதுமே ஆரப்பனுக்கு வாயில் எச்சில் சுரக்க ஆரம்பித்துவிட்டது.
“தேங்காய் சட்னி செஞ்சாளா உங்காயா?”
“இல்ல அப்பாரு.. இன்னிக்கி சீச்சிக்கொழம்பு செஞ்சிருக்குது எங்கம்மா!” சீச்சி என்றதும் சலவாயே துளி ஊத்திவிட்டது திண்ணையில் அவருக்கு. சீச்சி சாப்பிட்டு நான்கைந்து மாதத்திற்கும் மேலாகிவிட்டது. உள்ளூர் மாணிக்கன் குன்னத்தூரில் பொண்ணு கட்டியதால் சம்பந்தி விருந்து நடந்தது. அப்போது சாப்பிட்டதுதான்.
“நீ சாப்புட்டியா சாமி?”
“இன்னும் நானு குளிக்கவே இல்ல! குளிச்சுட்டுதான் சாப்பிடுவேன். அப்புறம் ஸ்கூலுக்குப் போவேன்!”
“எத்தனாப்பு சாமி நீயி படிக்கிறே?”
“ரெண்டாப்பு. அப்பாரு ஸ்கூல்ல ஊத்துக்குளியில இருந்து ஸ்கூட்டர்ல ஒரு குண்டு டீச்சரு வருது அப்பாரு. அது என்னையை மண்டையில கொட்டுக்கா வச்சுடுச்சு ரெண்டு நாளைக்கிம் மிந்தி!”
“அவ எவடா எம் பேத்தியை மண்டையில கொட்டுனவ? இன்னிக்கி நானும் உங்க ஸ்கூலுக்கு நேத்துக்கொண்டாந்த தடியை எடுத்துட்டு வர்றேன். அவளை யாருன்னு மட்டும் நீயி அடையாளம் காட்டிடு! அப்புறம் பாரு.. அவ மண்டையில ’டொம்மு டொம்முனு’ தடியில ரெண்டு வெக்கிறேன் பாரு.. நாளையிம் பின்னியும் பாப்பாவை நொட்டிவச்சேன்னா மண்டையே இருக்காது உனக்குன்னு சொல்லிப்போடுறேன். சரியா!” என்றபோது பாப்பா தன்னப்போல சிரித்தாள்.
“அப்பாரு. நீயி டீச்சரையே அடிச்சுப்போடுவியா?”
“பாப்பாவ அடிச்சா எட்மாஸ்டரையே அடிச்சுப்போடுவனாக்கும் நானு!”
“அப்பாரு, இட்லின்னா உனக்கு எப்பயும் புடிக்குமா? எனக்கும் இட்லின்னாத்தான் புடிக்கும் தெரியுமா!”
“அட உங்கொப்பனும் இட்லின்னாத்தான் நாலு சேர்த்தி முழுங்குவான் பாப்பா! நம்ம பரம்பரையே இட்லிப்பரம்பரை பார்த்துக்கோ! ஆமா, பள்ளிக்கோடத்துல தெனமும் மத்தியானச்சாப்பாடு நல்லா ஆக்கிப்போடுறாளா சரஸா?”
“ஓ! தெனமும் ஆளுக்கொரு முட்டை. ஒரு நாளு பருப்புக்கொழம்பும் ரசமும். அப்புறம் அடுத்த நாளு கூட்டாஞ்சோறும் பொரியலும் மாத்தி மாத்தி போடுவாங்க! எல்லா டீச்சரும் வாத்தியாரும் போசீல சோறே கொண்டாற மாட்டாங்க! ஸ்கூல்லயே தின்னுக்குவாங்க!”
“நான் வந்தா எனக்கும் சோறு போடுவாங்களா?”
“தெரியிலியே அப்பாரு..”
“செரி எங்கூட நாயம் பேசீட்டு இருந்தீன்னா உங்கோயா சத்தங்கித்தம் போடுவா.. பள்ளிக்கோடத்துக்கு போறதுக்கு அப்புறம் உனக்கு லேட்டாவி போயிரும். நீயி சாயந்திரமா உங்கொம்மாட்ட சொல்லிட்டு வா! நான் இங்கதான் ஆட்டுக்குட்டிக கூட இருப்பேன்!”
“அப்பாரு.. ஆட்டுக்குட்டிக்கி பேரு வச்சிருக்கியா?”
“இல்லியே சாமி! நீதான் பேரு வையேன்!”
“நானு யோசனை பண்ணீட்டு நல்லபேரா பொழுதோட வந்து வெக்கிறேன். நானு போயிட்டு வர்றேனப்பாரு!” என்று அஞ்சலி பாப்பா சொல்லிவிட்டு நடையைக்கட்டவும் ஆரப்பன் திண்ணையிலிருந்த போசி எங்காவது கால்முளைத்து ஓடிவிடுமோ? என்ற பயத்தில் எடுத்துக்கொண்டு போய் சாலைக்குள் வைத்து விட்டு அருகிலேயே அமர்ந்தார். போசியை நீக்கி உள்ளே பார்த்தார். கோழிக்குழம்பு வாசம் குப்பென அவருக்கு அடித்தது. ஆஹா! என கண்களை மூடி வாசத்தை இழுத்தார்.
+++
(வெளிவரவிருக்கும் ‘ஆகாவழி’ நாவலிலிருந்து)