நகரின் மையத்தில் அமைந்திருந்த கட்டடத்தின் ஏழாவது தளத்தில் இருக்கும் பழச்சாறு அருந்தகத்திற்கு சனிக்கிழமை மாலைகளில் வருவது வழக்கம். இன்னும் மூன்று டாக்டர்கள் என்னுடன் இணைந்துகொள்வார்கள். நான்கு பேரும் உளவியல் மருத்துவர்கள் என்றாலும், வாரந்தோறும் நடைபெறும் இந்தச் சந்திப்பில் இலக்கியம் மட்டுமே பேசுவோம் என்பது உங்களுக்கு நம்ப முடியாத அதிசயமாக இருக்கலாம். உள பாதிப்பு நோயர்களுக்கு ஆலோசனை வழங்கி வழங்கி, குமைந்து போய் கிடக்கும் எங்களுடைய உள்ளங்களுக்கு ஓர் ஆசுவாசம் இந்தச் சந்திப்பு.

இரண்டு நாட்களுக்கு முன்பு, வேலைக்குக்கிளம்பும்போது மூளைக்குள் அமர்ந்து குடையத் தொடங்கிய குழப்பத்திற்கு இன்றைய கூடுகையில் தீர்வைக் கண்டடைய வேண்டும். சாக வேண்டிய வயதில் – ஆம், சாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வாழக்கூடாது – முதுமை கவ்விய கிழம் ஒன்று காணாமல் போன தகவல் என்னை சமநிலை குலைய வைத்தது. பெரிதும் ஆர்வமின்றி இந்தக் கூடுகைக்கு வந்து போய்க் கொண்டிருந்தாலும், வாரம் தவறாமல் வந்து விடுவேன். இன்று எல்லோருக்கும் முந்திக் கொண்டு காத்திருந்தேன்.

மற்ற டாக்டர்கள் வருவது வரை, ‘ட’ வடிவத்தில் அடைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி வழியாக, அவ்வளவு உயரத்திலிருந்து பார்த்து நகரின் ஓட்டத்தில் கரைந்தேன். அந்தக் காட்சி மூளைக்குள் இருந்த சுருக்கங்களை தளரச் செய்தது. டாக்டர் மிங் தாவோ ஜிங்கை அழைத்துக் கேட்டு விடலாமா? மருத்துவமனையில் இருந்து புறப்படும்போது, நோயாளியிடம் பேசிக் கொண்டிருந்த அவர், சீக்கிரம் வந்துவிடுவதாகச் சொன்னார். அவரை மீண்டும் அழைத்து தொந்தரவு செய்ய வேண்டுமா? இங்குதான் வந்து கொண்டிருப்பார், வந்ததும் கேட்டு விடலாம்.

காரில் வேலைக்குப் புறப்பட்டு பிரதான சாலையில் இணைய இடதுபுறம் திரும்பியதும் கண்ணில்பட்டது அந்தச் சுவரொட்டி. ‘காணவில்லை – காவல்துறை அறிவிப்பு’ என தலைப்பிட்டிருந்த அதில், காணாமல் போனவரின் வயது 96 என குறிப்பிட்டிருந்ததால் கழிவிரக்கத்தில் ஈர்க்கப்பட்டு, ஒட்டப்பட்டிருந்த சுவற்றின் அருகில் காரை செலுத்தினேன். இரண்டு அடிக்கு நான்கு அடி என பெரிய அளவில், வழக்கத்துக்கு மாறாக வழ வழ வண்ணத்தாளில் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டி அது. காணாமல் போனவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை சுவரொட்டி காட்டியது. பெயர் – ரொமுலஸ் பூபதிமாறன், வயது 96 என குறிப்பிட்டிருந்ததை மீண்டும் படித்தேன்.

96 வயதில் யாரும் காணாமல் போவார்களா? இவ்வளவு வயதுக்கு வாழ்க்கை இருப்பதுவே வரம்தானே என நினைத்துக் கொண்டேன். இவ்வளவு முதிர்ந்த வயதில் ஆரோக்கியம் குன்றிப்போய் படுத்த படுக்கையாக கிடைக்கவே வாய்ப்பு அதிகம். எப்படிக் காணாமல் போனார் இவர்?

அந்த வயதானவர் தெருவில் நடந்து செல்லும் ஒரு படமும், ஒரு கடை முன்பு தொங்கவிடப்பட்டிருக்கும் அன்றைய நாளிதழ்களின் முன்னோட்டங்களை அவர் பார்வையிடும் ஒரு படமும் அந்தச் சுவரொட்டியில் இருந்தது. இரண்டு படங்களும் அந்தத் தெருவிலிருந்த ஏதாவதொரு சிசிடிவி பதிவிலிருந்து எடுத்திருக்க வேண்டும். அவருடைய அடையாளம் தெளிவாகத் தெரிவதற்காக முகப்படம் ஒன்றும் அந்த சுவரொட்டியில் பெரிதாக இடம்பெற்றிருந்தது. மொட்டையடிக்கப்பட்ட சிறுவனின் சாயல் அந்த முகத்தில் சிணுங்கி வழிந்தது. அது வழுக்கை தலை. முகத்திற்கு பொருந்தாத கண்ணாடி அணிந்திருந்தார். பொக்கை வாயால் சிரிக்க முயன்று இளிப்பதற்காக உதடுகள் இழுத்திருந்தன.

அந்த சுவரொட்டியின் அருகிலேயே, வெள்ளைத் தாளில் பிரதி எடுத்து இன்னொரு காணவில்லை அறிவிப்பும் ஒட்டப்பட்டிருந்தது. அது 46 வயதான பெண் காணாமல் போன அறிவிப்பு. அந்தப் பெண் காணாமல் போனதில் எனக்கு அக்கறை இல்லை. குடும்பப் பிரச்சினை காரணமாக நாள்தோறும் எத்தனையோ கணவன், மனைவிகள் காணாமல் போகிறார்கள். இப்படி காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டு, என்னிடம் உளவியல் ஆலோசனை கேட்பவர்களைத் தினந்தோறும் சந்திக்கிறேன்.

எல்லா ‘காணாமல்’ போவதன் பின்னணியிலும் எதிர் பாலினத்தவரின் அதீத அன்பும், தாறுமாறான எதிர்பார்ப்பும் சுமையாக அழுத்தி, அனைத்தையும் துறந்து மறைந்து போக அவர்களைத் தூண்டியிருக்கும். ஆனால், இந்த 96 வயது கிழவருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டிருக்கும்? மறதியில் வீட்டிற்குத் திரும்ப வழி தெரியாமல் தவறி விட்டாரா? சொத்துக்காக யாரும் கடத்தி விட்டார்களா? பிள்ளைகளே துரத்தி விட்டுவிட்டு நாடகமாடுவார்களோ? அப்படி இருக்க வாய்ப்பில்லை என சமாதானம் சொல்லிக் கொண்டே காரை மருத்துவமனைக்கு விட்டேன். எதற்கும் இருக்கட்டுமென அந்த போஸ்டரை போட்டோ எடுத்துக் கொண்டேன்.

டாக்டர் மிங் தாவோ ஜிங்கிடம் உடனே இதனைப் பகிர்ந்து கொள்ள மனம் பரபரத்தது. மருத்துவமனை சுற்றாடலில் எனக்கும் அவருக்கும் நேரம் வாய்க்கவில்லை. சீனத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் டாக்டர் மிங் தாவோ ஜிங்கின் தாயார், தமிழரைத் திருமணம் செய்துகொண்டு இங்கேயே நிலைத்து விட்டார். அவர்களுக்குப் பிறந்த மிங் தாவோ, ‘ஜிங்’ என்ற குடும்பப் பெயரைக் கொண்டிருந்தாலும் தமிழராகவே எங்கள் வட்டத்தில் அறியப்படுகிறார்.

தட்டை மூக்கும், புருவத்துக்கு கீழே தோண்டி புதைக்கப்பட்டதைப் போன்ற உள்ளொடுங்கிய கண்களும், கோதுமை மணிகளின் நிறத்தையொத்த தோலின் நிறமும் கொண்ட அவரைப் பார்த்த உடனேயே ஓர் அந்நிய தன்மையை உணர்வீர்கள். அவர் பேசத் தொடங்கினால் – சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், கொங்கு தமிழ் என வட்டார வழக்குகளில் தேவைக்கேற்ப மாற்றி மாற்றி அனாயாசமாகப் பேசுவார் – அதிர்ச்சி இன்னும் அதிகரிக்கும். அதுவும் தமிழ் இலக்கியம் குறித்து அவர் பேசுவதைக் கேட்கும் போது, இனம் குறித்த வரைவியலுக்கு புது இலக்கணம் எழுத நீங்கள் நிர்ப்பந்திக்கப்படலாம்.

அந்த சுவரொட்டியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு அழைத்தேன். அவருடைய பேரன் எடுத்தார். என்னுடைய அனைத்து சந்தேகங்களையும் கொட்டினேன். ஆனால், பேரனின் பதில்கள் அனைத்தும் என் குழப்பத்தை மேலும் அதிகரிக்கவே செய்தன. காணாமல் போன அந்த ரொமுலஸ் பூபதிமாறனுக்கு உடல் உபாதைகள் எதுவும் கிடையாது. கண் பார்வை, செவித் திறன்கூட இப்போதும் அபாரமாம். தன்னுடைய சுயதேவைகளை அவரே நிறைவேற்றிக் கொள்பவராக, கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு வரும் அளவுக்கு உடல்காத்திரமானவராகவும் இருந்திருக்கிறார். அந்த சிசிடிவி காட்சியில்கூட, பெட்டிக் கடை முன்பு நின்று அன்றைய நாளிதழ்களின் முன்னோட்ட செய்திகளை வாசித்து, நாளிதழ் ஒன்றையும் அந்தக் கடையில் வாங்கி இருக்கிறார்.

பிறகு எங்கு போனார்? அவர் கையில் ஒரு செல்ஃபோன் இருந்திருந்திருந்தால்…? அவருக்கு போன் இருந்திருக்கிறது. ஆனால், தன்னை யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்காகவே வேண்டுமென்றே போனை வீட்டில் வைத்து விட்டு சென்றிருப்பதாக அவர் பேரன் சொல்லவும், ஏதோ காரணத்தோடுதான் அவர் வீட்டை விட்டுக் கிளம்பி இருக்க வேண்டும் என யூகித்தேன். எதற்காக? பாட்டியைப் பற்றி விசாரித்தேன். 25 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதாகவும் பாட்டியின் பிரிவுத் துயரையெல்லாம் அவர் தாண்டி வந்து விட்டதாகவும் கூறினார்.

ஆன்மிக ஈடுபாடு? எல்லோரையும் போலத்தான் என்றான். எதையாவது பத்தி கவலைப்பட்டாரா? அப்படி எதுவுமில்லை என்றவர், ஒரு சிறிய மாற்றத்தை நினைவுக்குக் கொண்டு வர முடிவதாக கூறினார். சில நாட்களாக பள்ளி இறுதி நாட்களைப் பற்றி அவர் அதிகமும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறினார். பேரன் பேத்தி பாசம் அவருக்குக் கிடையாதா, காணாமல் போய் எத்தனை நாட்கள் இருக்கும்?

“பத்து நாட்களாகி விட்டது சார், எங்களோட நல்லா அன்பா பாசமா இருப்பாரு. எனக்கு பயமில்லை, பத்திரமா வந்திடணும் அப்படிங்கிறதுதான் ஒரே கவலை சார். கர்த்தர் பத்திரமா எங்க தாத்தாவ கொண்டு வந்து சேர்த்திடணும்…” பேரனுடைய பேச்சில் தைரியம் இருந்தது. அதுவே என சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

“உங்களுக்கு பயம் இல்லையா? ஏன்?”

“பணம் நிறைய வச்சிருப்பார். அதனால பணம் தீர்ந்து போகுற நிலைமையில வீட்டுக்கு வந்திடுவார்னு நம்புறேன். பேங்க் கார்ட் எதுவும் கிடையாது. அது இருந்தா, அவர் யூஸ் பண்ணும்போது ஈசியா ட்ரேஸ் பண்ணிடலாம். நீங்களும் எங்கேயாவது பார்த்தா எனக்கு சொல்லுங்க சார். உங்க ஃப்ரெண்ட்ஸ்களிடமும் சொல்லி வைங்க. கால் பண்ணி கேட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்க பெரிய டாக்டர். உங்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருப்பாங்க. உங்க சோசியல் மீடியா பேஜ்லயும் தாத்தாவ பத்தின தகவல போடுங்க சார். எந்தப் பக்கதிலிருந்தாவது கர்த்தர் நமக்கு உதவுவார்…”

எல்லா பக்கமும் தாத்தாவைக் கண்டுபிடிக்க அவர் முயற்சி செய்வது தெரிந்தது. கர்த்தரிடம் மட்டும்தான் நேரடியாகச் சந்தித்துக் கேட்டிருக்க மாட்டார் என நினைக்கிறேன். அவருடைய வயதைக் கணக்கில் கொண்டுதான் நான் பதறுவதாக எனக்குத் தோன்றியது. பூரண நலத்துடன் இருக்கும் அவர் எங்கும் போய் விடமாட்டார் என்ற அவருடைய பேரனின் நம்பிக்கையில் அர்த்தமிருக்கிறது. இரண்டு நாட்களாக, எந்த நோயாளியிடம் உரையாடும் போதும், அந்த 96 வயது முதியவரின் முகமும் காவல்துறை அறிவிப்பு சுவரொட்டியுமே என் உள்ளத்தை சுரண்டிக் கொண்டிருந்தது.

டாக்டர் அமுதனும் டாக்டர் இளவழகியும் என் இருக்கையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மிங் தாவோ யாரிடமோ போனில் பேசிக் கொண்டு வரும் சத்தமும் கேட்டது. மிங் தாவோதான் எங்களுக்கெல்லாம் சீனியர். மூவரும் ஒரே மருத்துவமனையில்தான் பணி செய்தனர். அப்போதிருந்து இந்த இலக்கிய கூடுகை வாரந்தோறும் அரங்கேறும். மிங் தாவோ புதிதாக இணைந்த மருத்துவமனையில் அண்மையில்தான் நான் பணியில் சேர்ந்திருந்தேன். எப்போதும் கையில் புத்தகத்துடன் என்னைப் பார்த்த தாவோ, அவர்களுடைய கிளப்பில் என்னையும் சேர்த்துக் கொண்டார். அவர்களில் மிகவும் இளைவன் நான்தான்.

இலக்கியக் கூடுகையில் எனக்கு இது பத்தாவது வாரம். தொடக்கத்தில் பேச்சு குறைபாடு உடையவன் போல, அமைதியாக பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். ஆசான், வாத்தியார், படைப்பூக்கம், பொதுப்புத்தி, உள்ளொளி, தரிசனம் – இந்த வார்த்தைகளை அவர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினார்கள் என கொஞ்சம் குழம்பிப் போனேன். பெரும்பாலும் இலக்கிய விருதுகளை முன் வைத்து, அந்தந்த எழுத்தாளரின் எழுத்துக்களைப் பற்றியும் அவரின் சமகால அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருப்பார்கள். தங்களிடம் வந்த வித்தியாசமான உளவியல் நோயாளிகள் பற்றி எப்போதாவது விவாதிப்பார்கள். அப்போது மட்டும் தரையிலிருந்து தண்ணீரில் தாவிக் குதித்த மீனைப் போல மூச்சு விடுவேன்.

மூவரும் வந்து அமர்ந்ததும் நானே முதலில் பேசி, என்னுடைய குழப்பத்தை இன்றைய கூடுகையின் பேசு பொருளாக்க விரும்பினேன். சுவரொட்டியில் பார்த்து திகைத்த, 96 வயது முதியவர் காணாமல் போனதைப் பற்றியும் அவருடைய பேரனோடு பேசிய உரையாடலையும் அதனையொட்டி எனக்கு எழுந்த சந்தேகங்களையும் ஒரு மர்மக் கதையை சொல்வது போல ரசனையோடு குறிப்பிட்டேன். அவர்களில் யாருக்கும் இதில் வியப்போ ஆர்வமோ இல்லை. மலை, கடல், யானை, ரயில் – இவற்றை முதன் முறையாகப் பார்ப்பவர்கள் மெய் மறந்து போவார்கள். சாகப்போகும் வயதில் காணாமல் போனவரைப் பற்றிய என்னுடைய வியப்பும் இப்படித்தான் இருந்தது. ஆனால், மலை, கடல், யானை, ரயில் – இவற்றோடு அன்றாடத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் பரவசம் அடைவதே இல்லை. அப்படி பரவசமற்ற நிலையில் இருந்தனர் என் எதிரில் இருந்த மூவரும். எதற்காக நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதைப் போல அவர்கள் என்னைப் பார்த்தனர்.

“திருவாழி நாவல் படிச்சிருக்கீங்களா சார்?” தாவோவைப் பார்த்து கேட்டாள் இளவழகி. என்னுடைய குழப்பம் பற்றி விவாதிக்காமல், வேறு எதைப் பற்றியோ இன்று விவாதிக்கப் போகிறார்கள் போல. அண்மையில் வெளியான நாவல் முதற்கொண்டு கிளாசிக்குகள் வரை டாக்டர் தாவோ மிங்குக்கு அத்துப்படி. படிப்பது மட்டுமல்ல, நினைவிலிருக்கும் அதன் முக்கியமான பகுதிகளை அவ்வப்போது இந்தக் கூடுகையில் மேற்கோள் காட்டுவதும், உரையாடப்பட்டுக் கொண்டிருக்கும் தலைப்போடு அதைப் பொருத்திப் பேசுவதும் அவரது இயல்பு.

“மீரான் மைதீன் எழுதியதுதானே… காணாமல் போனவர்கள் ரகசியமாக மறைந்து வாழ்வார்கள், அவங்க பகல் முழுக்க தூங்கி ராத்திரிலதான் புழங்குவாங்கன்னு அந்த நாவல்ல வர்ர அன்சாரி கேரக்டர் சொல்வது போல ஒரு காட்சி இருக்குமே, அதைச் சொல்றியா அழகி?”

ஐம்பதுகளின் மத்தியில் இருந்த டாக்டர் தாவோ மிங்குக்கு அபார ஞாபக சக்தி. கண்களில் மின்னும் பாலியல் தேடல் ஓர் இளைஞனின் தோற்றத்தை அவருக்குத் தந்து விடுகிறது முதுமையின் சாயலையும் மீறி. காணாமல் போனவர்கள் பற்றிய இலக்கிய குறிப்பை அவர் நினைவுபடுத்தியதும், இன்றைய கூடுகையில் நான் உயிர்ப்புடன் இருப்பதாக உணர்ந்தேன்.

“ஆமா சார்… கரெக்ட்டா சொல்லிட்டீங்க. அப்படி எங்கேயாவது அந்தப் பெரிசு ரகசியமா சுத்திக்கிட்டிருப்பார்” என்னைப் பார்த்து எகத்தாள தொனியில் இளவழகி சொன்னதும், நான் பரக்கப் பரக்க விழித்தேன்.

“பெரியவரோட பேரன்ட்ட பேசினதுல இருந்து, அவர் சொன்ன டீட்டெய்லை வச்சு பார்க்கும் போது என்ன காரணத்துக்காக வீட்டை விட்டு போனார்னு தெரிஞ்சுக்கணும்ல அழகி… இதை சீரியஸான கேஸாத்தான் நான் பார்க்குறேன். தாவோ சார், உங்க அபிப்ராயம் என்ன?” அமுதன் என்னுடைய நிலைப்பாட்டிற்கு வந்து சேர்ந்தார். இளவழகியைப் போலல்லாமல் ஓய்வு நேரத்திலும் அவரிடம் மருத்துவப் பண்பு மிளிர்ந்தது. அமுதனின் உளவியல் மருத்துவ சிந்தனைப் போக்கை ஆமோதித்து, டாக்டர் மிங் தாவோ தலையசைத்தார். காணாமல் போனவர்கள் பற்றிய வேறு இலக்கியங்களை நினைவுக்கு கொண்டு வர மெனக்கெடுவதை அவரின் முகக் குறிப்பு உணர்த்தியது.

“Suicides சிறுகதை படிச்சிருக்கியா அழகி? மாப்பசானின் அருமையான சிறுகதை. காணாமல் போவதைப் போல தற்கொலை செய்து கொள்வதும் புரியாத புதிர்தான். ஐம்பத்திஏழு வயதான முதியவர், அனைத்து வசதி வாய்ப்புகளோடும் வாழ்ந்தவர், கடிதம் எழுதி வச்சிட்டு திடீர்னு துப்பாக்கியால் சுட்டு செத்துப் போய் விடுவார். அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கும் காரணங்கள், தற்கொலை செய்து கொள்ள, நாம் நினைப்பது போல வலுவான காரணங்களாக இருக்காது. ஏதோ ஒரு விரக்தி அவரை அந்தத் துயரத்திற்குத் தள்ளி விட்டிருப்பதாக மாப்பசான் எழுதி இருப்பாரு. இந்த தொண்ணூத்தி ஆறு வயசு கிழவருக்கும் அந்த மாதிரி ஏதாவது ஒரு விரக்தி, ஆற்றாமை, நிறைவேறாத ஆசை இருந்திருக்கும்…”

“ரொம்ப சரியா சொன்னீங்க அமுதன். என்னிடம் ஒரு உண்மைத் தகவல் இருக்கு. அதைச் சொல்றேன், அப்ப இந்தப் பெரியவரின் உளவியலைப் புரிந்து கொள்ள முடியும்.” அமுதனின் பேச்சு தாவோ சாரின் சிந்தனையை சரியான புள்ளியில் தொட்டிருக்க வேண்டும். “அதை கதையாவே சொல்றேன். இப்ப நான் சொல்றத, நல்ல சிறுகதையா நீங்க எழுதலாம் அழகி…” சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு பேசுவதற்கான கரு கிடைத்த உற்சாகத்தில் பேசத் தொடங்கினார்.

அந்த மளிகைக்கடை ஊருக்கு வெளியே பிரதான சாலையில் இருந்தது. டீ வியாபாரமும் உண்டு என்பதால் காலை ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் கூடி விடும்.

கதை வடிவிலேயே, ஒரு சிறுகதையை பூடகமான அறிமுகத்தோடு தொடங்குவது போல சொல்லத் தொடங்கினார் டாக்டர் தாவோ.

சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு கடைக்கு வந்தான் குட்டி. மனவளர்ச்சி குன்றிய குட்டிக்கு பதின்ம வயது. பக்கவாத நோயால் கை, கால்கள் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கிய சீனு தாத்தாவின் தாதி அவன்தான். அவரைக் கவனித்துக் கொள்வதைத் தவிர வேறு பிரக்ஞை அவனுக்குக் கிடையாது. ஊரே அவனின் மந்த புத்தியை பரிகசித்தாலும் சீனு தாத்தாவின் பார்வையில் அவன் ஒரு மருத்துவர் போல. டாக்டரிடம் சீனு தாத்தாவை அழைத்துச் செல்லும் போது குட்டி உடன் இருக்க வேண்டும், அதை சீனுவும் விரும்புவார். டாக்டரும் எதிர்பார்பார்ப்பார். சீணு தாத்தாவுக்கும் குட்டிக்கும் ஒரு பொதுவான நல்ல நண்பர் இருந்தார். அவருக்குக் குட்டி வைத்த பெயர் டைகர்.

தேநீர் தயாரிப்பில் தீவிரமாக இருந்த சரவணன், “என்னப்பா இந்த நேரத்துல கடைக்கு வந்திட்டீங்க…” என்றான். அதற்கு பதில் சொல்ல விரும்பாதவர் போல சீனு அமைதியாக இருந்தார். தூக்கம் வராமல் அப்பா கடைக்கு வந்திருக்க வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டான். முதுகலை முடித்திருந்த சரவணன், ஊரில் இருந்த சொந்தத் தொழிலைச் செய்வதில் திருப்திப்பட்டுக் கொண்டவன்.

கடையில் இருந்த பேப்பர் கட்டை எடுத்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவின் மடியில் வைத்தான் குட்டி. தினத்தந்தி நாளிதழ் சிலவும், ஆங்கில நாளிதழ் ஒன்று சிலவும் அந்தக் கட்டில் இருந்தது. பேப்பர் கட்டை எடுத்து தன்னுடைய மடியில் வைக்க வேண்டும் என சொல்லிக் கூட்டி வந்திருப்பார்போல. கவனமாக செய்து முடித்து, சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு ஊருக்குள் போனான் குட்டி.

கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் இதைக் கவனப்படுத்தவும் சரவணன் அலறிக் கொண்டே ஓடினான். கூட்டம் அப்பாவையும் மகனையும் சூழ்ந்தது. வீடு வீடாக பேப்பர் போடுவதற்கு வரும் பையன் கூடுதலாக சம்பளம் கேட்டதால், அவன் நின்று விட்டதாகவும் அதனால் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பேப்பர் போடுவது நிறுத்தப்பட்டு விட்டதாக கேள்விப்பட்டு சீனு தாத்தாவே நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார்.

“பேப்பர் டோர் டெலிவரி பண்ண கூடுதலா பணம் கேட்டா, கஸ்டமர்ஸ் தர மாட்டேங்கிறாங்க. அதனாலதான் நிறுத்திட்டேன்…”

“அதனால என்ன? பேப்பர் டெலிவரி பாய்க்கு பதிலா நான் வேலை செய்யுறதா நினைச்சுக்க. எனக்கு சம்பளம் வேணாம்.”

“நம்ம ஊர்க்காரங்க பேப்பர கொடுக்க குட்டிய வீட்டுக்குள்ள விடுவாங்களா? நீங்க இருக்குற நிலைமைல இதுலாம் தேவையாப்பா?”

“அது எனக்குக் தெரியாதா? டைகரைப் பழக்கி விட்டிருக்கேண்டா. குட்டி ஒரு பேப்பர எடுத்து டைகர்ட்ட கொடு…” அவர் சொன்னதும் பேப்பரைச் சுருட்டி, நாயின் வலது முன்னாங்காலில் குட்டி வைத்தான். காலை மடக்கி பேப்பரை கவ்விப் பிடித்துக் கொண்டு மூன்று கால் பாய்ச்சலில் தாவிக் காட்டியது டைகர். சிலர் டைகரை ஆச்சரியமாகப் பார்த்தனர். சிலர் சீனு தாத்தாவிடம், இதெல்லாம் தேவையா என, சுற்றி நின்றவர்கள் சரவணனுக்கு ஆதரவாக நியாயம் பேசினர்.

கதையை நிறுத்தி விட்டு, பழச்சாறை உறிஞ்சினார் தாவோ. எனக்கு வெறுப்பாக இருந்தது. நான் என்ன பிரச்சினையை முன்வைத்திருக்கிறேன், இவர் சம்பந்தமில்லாத கதையை வளர்த்துக் கொண்டு போகிறார். ஆனால், இளவழகியும் அமுதனும் வாரம் முழுவதும் வேலை செய்த அலுப்பு கொஞ்சமுமில்லாமல் டாக்டர் தாவோ சொல்லி வந்த கதையை ஆர்வமாகக் கேட்டனர். ஒரு ஊர்ல ஒரு ராஜா என வயதான பாட்டி கதை சொல்லி, அதை சிறுவர்கள் கேட்கும் ஆர்வம் அவர்களின் கண்களில் தெரிந்தது. சரி, சொல்லி தொலைக்கட்டும் என நானும் அமைதியாகக் கேட்டேன்.

சிடுசிடுப்பாகப் பேசிய சீனு தாத்தா, சக்கர நாற்காலியில் இருந்து ஆங்காரத்தோடு உயர்ந்தார். அங்கிருந்த அவர் வயதையொத்த சிலரின் பெயர்களை அழைத்து, நீங்களுமா இப்படி பேசுறீங்க, ஏன் நான் பேப்பர போட தெருவுல இறங்கி இருக்கிறேன்னு உங்களுக்குமா புரியல? எனக் கேட்டுவிட்டுக் கண் கலங்கினார்.

“சரிப்பா நீ போ. போயி பேப்பர் போடு. தாத்தாவ கவனமா பார்த்துக்கடா குட்டி…” அங்கு நின்றிருந்தவர்களிலேயே மிகவும் முதியவர் ஒருவர் சீனுவைப் போக அனுமதித்தார். அனைவரையும் மீண்டும் கடைக்கு அழைத்து வந்த அந்த முதியவர், சீனு தாத்தாவின் பேப்பர் போடும் ஆர்வத்துக்குப் பின்னால் இருந்த கதையைச் சொன்னார்.

“சீனுவின் அப்பா, அதாண்டா சரவணா உங்க தாத்தா, ஒரு நாள் திடீர்னு காணாமப் போயிட்டாரு. எங்க தேடியும் கெடக்கல. அப்ப கடையை சீனுதான் பார்த்துப்பான். அவன் டீ போட்டால் அமிர்தம் மாதிரி இருக்கும். அக்கம் பக்கத்து ஊர்ல இருந்துலாம் உங்க கடைக்கு டீ குடிக்க வருவாங்க. அதுலயும் கடுங்காப்பி தேன் கணக்கா இருக்கும். நாலஞ்சி மாசம் ஆச்சு. எங்க தேடியும் உங்க தாத்தன கண்டுபிடிக்க முடியல. பக்கத்து ஊர்கள்ல நடக்குற சந்தைக்குலாம் உங்க அப்பன், கடையைப்பூட்டிட்டு போய் தேடுவான். கெடக்கல. அவனும் என்ன பண்ணுவான். அப்புறம் தேடுறதயே விட்டுட்டான்.”

வழக்கமாகப் பேசுவது மாதிரி இல்லாமல், ஏதோ ஓர், ஊரின் பேச்சு சாயலில், பொக்கை வாய் மொழியில் கதையைச் சொன்னார் தாவோ. இப்போதுதான், தாவோ சொல்லி வந்த கதை என்னுடைய குழப்பத்தோடு இணைவதைப் புரிந்தேன். எனக்கும் ஆர்வம் மெல்ல வந்தது.

“வீடு வீடா பேப்பர் பேப்பர் போடுற பழக்கம் அப்பவே உங்க கடைல இருந்தது. அப்பத்தான் பேப்பர் ஏஜெண்ட் உங்க தாத்தா காணாமப் போன தகவல் கேள்விப்பட்டு, தினத்தந்தி பேப்பர்ல வெளம்பரம் கொடுக்கலாம்னு சொன்னான். உங்க அப்பனுக்கு நம்பிக்கை இல்ல. நாங்கெல்லாம் சொல்லித்தான் தினத்தந்தில வெளம்பரம் போட்டோம். அப்பவும் எந்த நல்ல சேதியும் கெடக்கல.”

“சரவணனோட தாத்தா காணாமல் போகும் போது அவருக்கு என்ன வயதிருக்கும்?” கதையின் இடையில் குறுக்கிட்டேன். குறுக்கீடைத் தொந்தரவாக எடுத்துக் கொள்ளாத தாவோ, என்னை உதாசீனம் செய்வது போல, சாகப் போற வயசுதான்னு பொதுவாகச் சொல்லிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார்.

“வெளம்பரம் வெளியான ஒரு வாரம் கழிச்சி தினத்தந்தி மெட்ராஸ் ஆபீஸ்க்கு காணாமப் போன உங்க தாத்தா பத்தி யாரோ தகவல் கொடுத்திருக்காங்கன்னு ஏஜெண்ட் வந்து சொன்னான். மெட்ராசுக்குப் போய் அந்தத் தகவலை வாங்கி, செங்கல்பட்டு பக்கதுல ஒரு கிராமத்துல இருந்த உங்க தாத்தாவ வீட்டுக்குக் கூட்டி வந்தாங்க. பேப்பர் வெளம்பரத்துனாலதான் அப்பா திரும்ப கெடச்சார்னு, நன்றிக்கடனுக்கு விசுவாசத்துக்கு இப்ப பேப்பர் போடுறேன்னு சீனு சொல்லுறாம்ப்பா. விடு சரவணா…” என அந்தப் பெரியவர் சொல்லியதாக பொக்கை வாயை மூடினார் டாக்டர் தாவோ.

“காணவில்லை விளம்பரம் பார்த்து அப்பா கண்டுபிடிக்கப்பட்டதுக்காக சீனு தாத்தா, உடல் முடியாத நிலையிலும் பேப்பர் போட்டிருக்கிறார். சரி, நான் சொன்ன முதியவர் காணாமல் போன விவகாரத்திற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு டாக்டர்?”

“ஆமாம் டாக்டர். இது ஒரு சாதாரண நிகழ்வுதானே. அப்பா கஷ்டப்படுறத பார்த்திட்டு, சரவணனே பேப்பர் போட வேறொரு ஆள வச்சிடுவான். இந்தக் கதைக்கும் தொண்ணூற்றி சொச்சம் வயசு பெரிசு காணாம போனதற்கும் உளவியல் தொடர்பு இருக்கா சார்?” என்னுடைய கேள்வியை அழகி அழகாக எடுத்து வைத்தார்.

“இனிதான் கதையே இருக்கு அழகி. சீனுவின் அப்பா காணாமல் போக என்ன காரணங்கிறத நான் சொல்லவே இல்லையே… இனிதான் கதையே தொடங்குது…” பிரெஞ்சு தாடியை அரை வட்டத்தில் தடவினார் தாவோ. நாங்கள் மூவரும் இளித்தோம். கதையைத் தொடருமாறு சைகை செய்து விட்டுப் பழச்சாறை உறிஞ்சினோம்.

ஒரு நாள், வீட்டுல ஏற்பட்ட தீவிபத்துல சிக்கி சீனுவின் அம்மா இறந்து போய்ட்டாங்க. காயம்பட்டு ஒரு மாதம் ஹாஸ்பிடலில் கிடந்து அவதிப்பட்டு மனைவி இறந்ததைப் பார்த்த சீனுவின் அப்பாவுக்கு ஊரில் இருந்த ஒரு பழக்கம் கடுமையான மன உளைச்சலைக் கொடுத்தி்ருக்கிறது. அமுதா… நீங்க சொன்ன அந்த மாப்பசானின் கதையில் வருபவரின் தற்கொலைக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் காரணம் நமக்கு அதிர்ச்சி தராமல் போகலாம். ஆனால், இந்தக் கதை வேறொரு பார்வையை உங்களுக்குக் கொடுக்கலாம்.

அந்த ஊரில், இறந்தவர்களை எரிக்கும் பழக்கமே இருந்தது. நெருப்பில் பொசுங்கி மனைவி பட்ட வேதனையை நேரில் பார்த்த அவர், மனைவி இறந்த பின் அவரை சுடுகாட்டில் எரிக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரு. சொந்த பந்தமெல்லாம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கலை. தீயுல எரிஞ்சி செத்த உடலை மறுபடியும் ஏம்ப்பா எரிக்குறீங்கன்னு சீனுவின் அப்பா கதறியிருக்கிறார். புதைப்பது அவர்கள் வழக்கத்தில் கிடையாது என ஊராரும் உறுதியா சொல்லிட்டாங்க. சிதையில் விழுந்து நானும் செத்துடுவேன்னு மிரட்டி இருக்கிறார். அவரை சில இளைஞர்கள் பிடித்துக் கொள்ள அவர் கண் முன்னாலேயே சீனு கொள்ளி வைக்க, நெருப்பு தீண்டிய உடலை மீண்டும் நெருப்புக்கே இரையாக்கிவிட்டு இறுதிச் சடங்கை முடிச்சிட்டாங்க.

அப்போது உடைந்து போனவர்தான். மிகவும் நேசித்த ஒருவர், யோசித்துப் பார்க்காத விதத்தில் திடீரென கொடூரமாக இறந்தால், எந்த ஜீவராசியாலும் தாங்கிக் கொள்ள முடியாதுதானே. அவர் மீளவே இல்லை. தருணம் பார்த்துக் காத்திருந்து வீட்டை விட்டுப் போய் விட்டார். ஒரு செருப்பு அறுந்து போனாலோ, தொலைஞ்சி போனாலோ அது புதுசா இருந்தாக்கூட, இன்னொரு செருப்பை தூக்கிப் போடுறதில்லையா… அந்த மாதிரி மனைவி செத்ததும் வீடு, குடும்பம், குழந்தைங்கள ஒதுக்கித் தள்ளிட்டு அவர் கிளம்பிட்டாரு.

மிகவும் நேசித்த, அன்பு மிகுத்த ஒன்றை அடைய, மனிதன் மட்டுமல்ல எந்த ஜீவராசியுமே உச்சக்கட்ட போராட்டத்தை நடத்தும். அதே மாதிரி வெறுத்த, விருப்பமற்ற ஒன்றை விட்டு, ஒட்டுறவின்றி விலகவும் எந்த ஜீவராசியும் அதன் உச்சபட்ச எல்லைக்குச் செல்லும்.

கடைசியில் பேப்பரில் விளம்பரம் கொடுத்துக் கண்டுபிடிச்சப்ப அவர் எங்க இருந்தார் தெரியுமா? என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? கேட்டு விட்டு நிறுத்திய டாக்டர் தாவோ, மீதிக் கதையை அடுத்த கூடுகையில் கூறுவதாக சொல்லி புதிர் போட்டு எழுந்தார். இன்றே சொல்லி முடிக்க அழகி அரற்றவும், அந்தச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தொடர்ந்தார்.

காணாமல் போன சீனுவின் அப்பா வேலை செய்தது ஒரு மயானத்தில்.

சொல்லிவிட்டு நிறுத்திய தாவோ, எங்களின் எதிர்வினை இதற்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அமைதியானார். நாங்களும் வியப்பால் கண்களை விரித்தோம்.

ஆமாம்… சுடுகாட்டுலதான். சொந்த ஊர்லதானே மானம், மரியாதை, கவுரவம், அந்தஸ்துலாம். நாம யாருன்னே தெரியாத இடத்துல என்ன சாதி, என்ன மதம்னு யாருக்குத் தெரியப் போகுது, புடிச்ச வேலைய செய்ய வேண்டியதுதானே. அது வெட்டியான் வேலையா இருந்தா என்ன? விறகு வெட்டுற வேலையா இருந்தா என்ன? அந்தச் சுடுகாட்டுல இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் கிடையாது, புதைப்பார்கள். எங்கேயாவது வேலை செய்து செத்துப் போய், தன்னை எரித்து விட்டால்…? அந்த நினைப்பே சீனுவின் அப்பாவை மயானத்தில் வேலை செய்யத் தூண்டி இருக்கிறது. செத்துப் போனால் எரிக்காமல், அவர் வேலை செய்த அந்த இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விடுவார்கள் அல்லவா…

கதையை முடிக்கவும் கைக்கடிகாரத்தைப் பார்த்த அழகி, வழக்கத்தை விட நேரமாகி விட்டதால் கிளம்பலாம் என எழுந்தார். “லூசு… இனிதான் கதையே இருக்கு. அவரைத்தான் கண்டுபிடிச்சிக் கூட்டி வந்திட்டாங்கல்ல. அவர் செத்த பின்னாடி அவர் சொந்த ஊர்ல அவரை எரிச்சாங்களா, புதைச்சாங்களான்னு தெரியணும்ல…” அமுதன் கோவத்தோடு அழகியின் கையைப் பிடித்து இழுத்து இருக்கையில் அமர வைத்தார். தாவோவும் நானும் சிரிக்க, மன்னிப்பு கேட்டுக் கொண்டே அழகி நகைத்தார்.

நான் ஊருக்குத் திரும்ப வரணும்னா, இறந்தவர்களை எரிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டுமென ஒரேயொரு கண்டிஷன் போட்டிருக்கிறார் சீனு அப்பா. மனிதனைத் தவிர எந்த உயிரினமாவது இறந்த சக உயிரியை எரித்து சாம்பலாக்குதா என ஒரு கேள்வியை அவர் கேட்டிருக்கிறார். ஊரில் இருந்த பெரியவர்கள் சீனுவோட அப்பாவின் கோரிக்கையை எதிர்க்க, அப்போதிருந்த இளைஞர்கள் அந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகக் கூற ஊரே இரண்டாகி விட்டது. ஒரு சமாதானத்திற்கு ஊர் வந்தது. எரிப்பவர்கள் விரும்பினால் எரிக்கலாம், புதைக்க விரும்பினால் புதைக்கலாமுன்னு. இப்ப அந்த ஊர்ல எரிக்குற பழக்கமே இல்லை. மறைஞ்சி போச்சி. இந்த மாதிரி ஏதாவது காரணம் அந்த தொண்ணூத்திஆறு வயசு பெரியவர் காணாமல் போனதுக்குப் பின்னாடியும் இருக்கலாம்.

டாக்டர் தாவோ மிங் ஜிங் சொன்ன கதை என்னை வேறொரு கோணத்தில் சிந்திக்கத் தூண்டியது. எந்தெந்த சாதியில் இறந்த பின் எரிக்கும் பழக்கம் இருக்கிறது? இதை சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, டாக்டர் தாவோ என்ன சாதி? என குதர்க்கமாக யோசித்தேன். அவரிடமே கேட்டுவிடக் கிளம்புவதற்குள் அவரைப் பிடித்து விட்டேன். வாசலில் மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“சார், ஒரு விஷயம் கேட்கணும். ஆனா கேட்க சங்கடமா இருக்கு?”

“என்ன தம்பி, சார் என்ன ரெலிஜியன், கேஸ்ட்டுன்னு தெரிஞ்சிக்கணுமா?” இளவழகி என்னைப் பார்த்து கண்ணடித்தார். இது வழக்கமாக கேட்கப்படும் கேள்வி, நான்தான் ரொம்ப தாமதமாக கேட்டிருக்கேன் போல. அப்படி இருந்தது இளவழகியும் தொனியும் தோரணையும்.

“இதுல என்ன சங்கடம்… சைவம் சாப்பிடுபவர்கள் மத்தியில் இருந்தால் நான் அசைவம் சாப்பிடுவேன். அசைவம் சாப்பிடுபவர்களிடம் பியூர் வெஜ்னு சொல்லிடுவேன். சொல்லு நான் என்ன கேஸ்ட்டா இருக்கும்? ஹாஸ்பிடலுக்குள்ள நுழையும் போது செக்யூரிட்டி என் நெத்தில விபூதி பூசி விடுவார். என்னோட ரூம்ல இருக்கும் போது விபூதி இருக்காது. வெள்ளிக்கிழமையானா அஜ்மல் சாரோட சேர்ந்து பள்ளிவாசலுக்குத் தொழுகப் போயிடுவேன். இப்ப குர்ஆன் படிக்க அரபிக் லாங்குவேஜ் கத்துக்கிட்டிருக்கேன். நான் என்ன மதத்த ஃபாலோ பண்றேன்னு கண்டுபிடி தம்பி…” அவரது இடதுகையால் என் இடது தோளை அழுத்திவிட்டு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

நான் காரில் ஏறியதும், தோல்வி மனப்பான்மையில், டாக்டர் தாவோ யாராக இருந்தால் எனக்கு என்ன என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். காணாமல் போன 96 வயது பெரியவரின் பேரனை அழைத்தேன்.

“சார்… ரெண்டு நாளைக்கு முன்னாடி கால் பண்ணி இருந்தேனே… காணவில்லை போஸ்டர் பார்த்திட்டு உங்க அப்பாவை பத்தி விசாரிச்சேனே… டாக்டர்…”

நிறைய பேர் அப்பாவைப் பற்றி அவரிடம் விசாரித்திருக்கலாம். நான் யார் என்பதை உடனடியாக நினைவுக்கு கொண்டு வர இயலாத நிலையில் டாக்டர் என்றதும் புரிந்து கொண்டு, “சொல்லுங்க சார், அப்பா அவராகவே வீட்டுக்கு வந்திட்டாரு…” என்றார். நிம்மதியாக இளைப்பாறியது அந்தக் குரல். அவருடைய அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் அக்கறையாக விசாரித்திருந்தால் உண்டான ஆசுவாசத்தை என்னிடம் காட்டினார். “எங்க போனாராம்? எதுக்காகத் திடீர்னு போனார்? இப்ப எப்படி இருக்காரு? மெண்டலி ஹெல்தியா இருக்காருல்ல?”

காணாமல் போன 96 வயதுக்காரர் மீண்டும் திரும்பி வந்துவிட்டார் என்ற தகவலால் ஆர்வ மிகுதியில் அடுத்தடுத்து கேள்வி கேட்டதும், “எங்க சொந்தக்காரங்கள்ட்டகூட நான் சொல்லல சார். அப்பாட்டயும் சொல்லி வச்சிட்டேன். யார் கேட்டாலும் நீங்க வீட்ட விட்டுப் போன காரணத்தை சொல்லக்கூடாதுன்னு… நீங்க சைக்கியாட்ரிஸ்ட் அப்டிங்கிறதால முதன் முறையா உங்கள்ட்ட அந்த உண்மையை சொல்றேன்…” என அயர்ச்சியோடு தொடங்கினார்.

அவர் சொல்லச் சொல்ல உச்சக்கட்ட குழப்பத்தில் உறைந்து போனேன். மரண வாசலில் நிற்கும் அந்திமக் காலத்தில்கூட, இந்தக் காரணத்துக்காக்க் காணாமல் போவார்களா? எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

“இதுல என்னப்பா இருக்கு? அவரும் மனுஷன்தானே…”

என் பதிலை  மட்டரகமாக எடைபோட்டது போல, “என்ன சார் நீங்களும் இப்படிச் சொல்றீங்க…” என்றார். 96 வயது முதியவர் என்ன காரணத்துக்காகக் காணாமல் போனார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

  • ••••