ஜஸ்லீன் கௌரின் வாதம் சரியென்றே பட்டது. ஒரு குழுவாக இல்லாமல் அவர்கள் தனிப்பட்ட முறையில் பல கண்காட்சியகங்களைப் பார்த்திருந்தனர். சந்தனா கொல்கத்தாக்காரி. அதனால் அங்குள்ள பழங் கண்காட்சியகத்துக்குப் போவது பள்ளி நாட்களிலிருந்தே அவளுக்கு வழக்கமாயிருந்தது. டெல்லியிலிருந்த தேசியக் கண்காட்சியகத்தை அவர்கள் எல்லோருமே பார்த்திருந்தனர். ராமகுமாரி ஹைதராபாத்காரி. அதனால் ஸ்லார்ஜங் கண்காட்சியகம் பற்றி நன்றாகத் தெரியும். தவிர வெளிநாட்டில் உள்ள பலதரப்பட்ட கண்காட்சியகங்களையும் பார்த்த அனுபவம் மூவருக்குமே உண்டு. கலை, வரலாற்று அனுபவங்கள், தனி நபர் வரலாறு, சமூக வரலாறு, அறிவியல் என்று பலவகைப்பட்ட வரலாறுகளையும் நிகழ்வுகளையும் ஆதாரமாகக்கொண்ட கண்காட்சியகங்கள். மும்பாயிலேயே தற்போது சத்ரபதி சிவாஜி மஹராஜ் வாஸ்து ஸங்ரஹாலயா என்று பெயரிடப்பட்டிருக்கும் பிரின்ஸ் ஆஃப் வேல் ம்யூசியம் மும்பாய்க்காரர்கள் எப்போது புதிய கண்காட்சியோ, படம் திரையிடப்படுவதோ நடந்தாலும் சென்று குவியும் இடம். அன்றும் அங்குச் சுதந்திரப் போரட்டத்தில் பங்கு பெற்ற மும்பாய்ப் பெண்கள் பற்றிய கண்காட்சி ஒன்றைப் பார்க்கச் சென்றபோதுதான் அந்தப் பேச்சு எழுந்தது.
ஒரு குழுவாக அவர்கள் சில வேலைகளை மற்ற வேலைகளுக்கிடையே செய்திருந்தனர். பெண்கள் திரைப்பட விழா, இலக்கியக் கூட்டங்கள், நாடக விழா என்று சில விழாக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து அதில் வெற்றியும் தோல்வியும் அடைந்திருந்தனர். வடகிழக்கு மாநிலப் படங்களின் திரைப்பட விழா எங்கெங்கிருந்தோ நிதி சேர்த்துச் செய்தபோது வந்த கூட்டம் ஐம்பதுக்குமேல் தேறாது போயிற்று. ஒருவர் அவளிடம் வந்து அறிவுரை கூறும் தொனியில், கனிவுடன், “இது எல்லாம் இந்தியப் படங்கள் மாதிரியே இல்லையே?” என்றார். விழாவைத் தொடங்கிவைக்க சமூக விஷயங்களில் ஆர்வம் உள்ள நடிகை ஒருவரைக் கூப்பிட்டிருந்தார்கள். அவர் நுழைந்தவுடனேயே ஆயிரம் காமராக்கள் பளிச்சிடும் என்று அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை. அவள் திரைப்பட விழாவை அறிமுகப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே இடைமறித்து, வேறு இடத்துக்குப் போகவேண்டும் என்று கூறி, இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அவர்கள் குழுவுக்குப் பெண்கள் வரலாற்றுக் கண்காட்சியகம் அமைக்கவேண்டும் என்ற பிரம்மாண்டக் கனவு இருந்தது. அன்று மும்பாய்க் கண்காட்சியகம் போய் வந்ததும், ஜஸ்லீன் கௌர், அம்ருத்ஸரில் சமீபத்தில் நிறுவியிருந்த நாட்டின் பிரிவினை பற்றிய கண்காட்சியகம் அவர்கள் கனவு காணும் கண்காட்சியகத்துக்கு நல்ல மாதிரியாக இருக்கும் என்றாள். அது மிகப் பிரம்மாண்டமானது இல்லை. ஆனால் புகைப்படங்கள், பேட்டிகள், தினசரிச் செய்திகள், படங்கள் இவற்றை நன்றாக இணைத்துச் செய்த ஒன்று என்றாள்.
நாட்டின் பிரிவினை குறித்த கண்காட்சியகம் அவள் மனத்தில் தோன்ற அவர்கள் சில நாட்களின் முன் படித்திருந்த ஒரு கட்டுரையாக இருக்கலாம். மண்டோவின் ‘டோபா டேக் சிங்’, ‘கோல் தோ” (திறந்துவிடு) கதைகளுக்குப் பிறகு அவர்களை வெகுவாகப் பாதித்த கட்டுரை. நாட்டின் பிரிவினை பற்றிய குல்ஸாரின் கவிதைகள், குஷ்வந்த் சிங்கின் ‘ட்ரைன் டு பாகிஸ்தான்’ (பாகிஸ்தானுக்கு ரயில்), யஷ்பாலின் ‘ஜூடா ஸச்’ (பொய்யான உண்மை) குவாரதுலேன் ஹைதரின் ‘ஆக் கா தரியா’ (அக்னி ஆறு) போன்ற இலக்கிய நூல்களும், ஊர்வசி புடாலியாவின் ‘த அதர் ஸைட் ஆஃப் சைலன்ஸ்’ (மௌனத்தின் இன்னொரு பக்கம்) போன்ற அனுபவங்களைப் பேசும் நூல்களும் பல ஆராய்ச்சி நூல்களும் படித்திருந்தாலும் அந்தக் கட்டுரையின் தாக்கம் போக வெகு நாட்களாயிற்று. கட்டுரையிலும் அம்ருத்ஸர் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் மனத்தில் இந்தத் தொடர்பு ஏற்பட.
நாட்டின் வரலாறு அமைந்துகொண்டிருந்த நடுராத்திரி நேரத்தில், தங்கள் விதியைத் தாங்களே தீர்மானிக்க அதிகாரம் இல்லாத சிலரின் விதி நிர்ணயிக்கப்பட்டதைப் பற்றிய கட்டுரை அது. ரான்ச்சியின் காங்கே என்ற இடத்தில் இருந்த மனநல ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு மருத்துவர் குழுவும், ஆஸ்பத்திரியில் வேலை செய்த மற்றவர்களின் குழுவும் அம்ருத்ஸர் அருகிலிருந்த வாகா எல்லை என்று பிறகு பெயரிடப்பட்ட எல்லைக்குப் பயணப்பட்டனர். அங்கு நோயாளிகளின் பரிமாற்றம் நடந்தது. முஸ்லிம் நோயாளிகள் பாகிஸ்தானில் பொறுப்புள்ளவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்து, சீக்கிய நோயாளிகள் அங்கிருந்து காங்கே மன நல ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். கட்டுரையாளரின் பாட்டி, ஆஸ்பத்திரியின் பெண் நோயாளிகள் பகுதிக்கு 1927இல் பொறுப்பேற்ற டாக்டர். இந்து டாக்டர் ஒருவரை விரும்பி மணந்த கிறித்துவர்.
பிற்காலத்தில் காங்கேயில் ஒரு பெரிய வீட்டில் கூட்டுக்குடும்பமாய் இருந்தபோது பெண் மன நோயாளிகளை அறையில் அடைத்து வைக்காமல் வீட்டுக்கு அழைத்துவந்து அவர்களுடன் உரையாடுவார். வீட்டில் அவர்களுடன் உணவு சமைத்து எல்லோரும் சேர்ந்து உண்பார்கள். அவரை அவர்கள் டாக்டர் என்று கூப்பிடவில்லை. மாஷிமா என்று அழைத்தார்கள். மாஷிமா என்றால் சின்னம்மா. சிலர் அவரை மா என்றே அழைத்தார்கள்.
பீஹாரிலிருந்தும் ஒரிஸ்ஸாவிலிருந்தும் அழைத்துவரப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த முஸ்லிம் பெண் மனநோயாளிகளை அம்ருத்ஸர்வரை சென்று ஒப்படைக்கும் பொறுப்பு அவருடையதாகியது. மனநோய் ஆஸ்பத்திரிக்கு வரும்வரை வீட்டைவிட்டு வெளியே வராதவர்கள். ஆஸ்பத்திரிக்கு வந்தபின் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். ஒரு வார்த்தை உருது தெரியாது. அவர் அவர்களுடைய தாயாக இருந்தவர். இப்போது அந்த மன நோயாளிகள் மத அடையாளப் பட்டிகள் உள்ள வெறும் எண்கள் மட்டுமே. வேறொரு மத அடையாளப் பட்டிகளுடன் வரும் எண்களுடன் பரிமாற்றம் செய்துகொள்ளவேண்டியவர்கள். மாஷிமாவை நம்பிக் குதூகலத்துடன் பயணித்தவர்கள். எல்லையில் பிரியும்போது என்ன நடக்கிறதென்றே தெரியாமல் தங்கள் மாஷிமாவை நோக்கிக் கை நீட்டினார்கள்.
அவர்கள் வரலாற்றில் எழுதப்படாத, பேரில்லாதவர்கள். நாட்டின் பிரிவினைக் கண்காட்சியகத்தில் அப்படிப் பலரின் கதைகள் இருக்கலாம். இவர்கள் நிறுவவேண்டும் என்று நினைக்கும் கண்காட்சியகத்திலும் அப்படிப் பல பெண்களின் கதைகள் இருக்கும். பெண்ணின் வரலாற்றுப் பகுதிகள். அப்படித்தான் அம்ருத்ஸர் பயணம் அமைந்தது.
அங்கிருந்த இளம் பொறுப்பாளரிடம் பேசியபோது அவர் வாழ்க்கையே ஒரு நாட்டின் பிரிவினைக் கதைபோல் தோன்றியது. குர்லீன் கௌரின் தாத்தா அனாதையானபோது ஒரு முஸ்லிம் குடும்பத்தினரால் லாகூரில் வளர்க்கப்பட்டார். பிரிவினையானதும் அந்தக் குடும்பம் அனாதையாக அவரை அம்ருத்ஸருக்கு அனுப்பிவைத்தது.
“இந்தக் கண்காட்சி ஒரு பக்கக் கதையை மட்டுமே கூறுகிறது என்கிறார்களே?’ என்று கேட்டபோது குலீன் கௌர், “இதில் இந்து-முஸ்லிம் என்ற இரு பக்கங்கள் மட்டுமே இல்லை. இது சிக்கலான பல கோணங்கள் கொண்டது. இரு பக்கங்களை மட்டுமே பார்த்து அதை எளிமைப்படுத்தக் கூடாது” என்றார்.
அவர்கள் அனைவரும் சுதந்திர இந்தியாவிலோ அதற்கு இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்போ பிறந்தவர்கள். ஜஸ்லீன் கௌரைத் தவிர வேறு யாருக்கும் குடும்ப ரீதியாகப் பிரிவினையுடன் தொடர்பு இருக்கவில்லை. ரயிலின் கூரை மேலும் உள்ளேயும் வெளியே தொங்கியும் வந்த அகதிகள் வண்டியின் புகைப்படங்கள், செய்திப்படங்கள், காட்சிப்படுத்தப்பட்ட உரையாடல்கள், காணொளிகள், மானத்தைக் காத்துக்கொள்ளப் பெண்கள் குதித்த கிணறு என்று உருவாக்கப்படிருந்த கிணறு, இவற்றையெல்லாம் பார்த்தபடி வந்தபோதுதான் லாகூர் கண்காட்சியகத்திலிருந்த காட்சிப்பொருட்கள் எப்படிப் பிரிக்கப்பட்டன என்று பஞ்சாபில் பண்பாட்டுத் துறை முன்னாள் செயலாளராக இருந்த ஒரு பெண்மணியின் பேட்டியின் காணொளி ஒன்றைப் பார்க்க முடிந்தது. குஷானர் காலத்துக் காந்தாரக் கலையின் சிற்பங்கள் பிரிக்கப்பட்டபோது புத்தரின் இரு பாதங்களாக வடிவமைக்கப்பட்டிருந்த சிற்பத்திலிருந்து ஒரு பாதம் பாகிஸ்தானுக்கும் ஒரு பாதம் இந்தியாவுக்கும் பிரிக்கப்பட்டது என்றார் அந்தப் பெண்மணி.
இந்தியாவுக்கு வந்தது எந்தப் பாதம்? வலது பாதமா, இடது பாதமா, அது எங்கே இருக்கிறது என்ற கேள்வி மனத்தைக் குடைந்தது. அந்த ஒற்றைப் பாதம் எதைக் கூறுகிறது?
டபிள்யூ. எச். ஆடன் தனது 1966 ’பிரிவினை’ கவிதையில் கூறியதுபோல் மிகக் குறுகிய காலத்தில், முன்பின் அறியாத நாட்டில், பழைய வரைபடங்கள், மக்கட்தொகை கணக்கெடுப்புகள் இவற்றுடன் தாங்க முடியாத வெய்யில் கால வெப்பத்தில், போலீஸ் பாதுகாப்புடன் தனியாக ஒரு பங்களாவில், வயிற்றுக்கடுப்புடன் கழிவறைக்கு ஓடியபடி இருந்த ஒருவர் போட்ட எல்லைக்கோடு அது. அந்த எல்லைக்கோட்டைப் போட்டதால் பிரிக்கப்பட்ட அந்த இரு பாதங்களும் வெறும் பாதங்கள் இல்லை, இரு நாடுகளின் பிரிவினை வரலாற்றின் குறியீடுகள் என்று அவளுக்குத் தோன்றியது.
*