சென்னை, மழை, துணை முதல்வர், தமிழ்நாட்டு ஊடகங்கள் பற்றியெல்லாம் பேசும் முன், நேற்று ‘ஆஜ்தக்’ என்ற இந்தி செய்தித் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி வீடியோவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். கல்லூரி வாட்சப் குழுவில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதில் ஒரு பக்கம் மோடி விமானத்தில் இருந்து இறங்கி வரும் காட்சி காட்டப்படுகிறது. அதற்குக் கீழே மோடி-வயது 74 என்கிற வாசகம். இன்னொரு பக்கம் ஜிங்பிங் விமானத்தில் இருந்து இறங்கி வரும் காட்சி காட்டப்படுகிறது. கீழே ஜிங்பிங்-வயது 71 என்று காட்டப்படுகிறது. விமானத்தில் இருந்து இறங்கி வருவதில் என்னடா செய்தி என்று பார்த்தால் எதையோ வட்டம் போட்டு காட்டிக் கொண்டிருந்தார்கள். அதாவது சார், படியில் இறங்கும்போது மோடி கைப்பிடியைப் பிடிக்கவில்லையாம். அவரை விட மூன்று வயது குறைவான ஜிங்பிங் கைப்பிடியை மூன்று நான்கு முறை பிடித்து இறங்குகிறாராம். இப்படி தானே நடந்த தானைத் தலைவனின் ஆட்சியில் இந்தியா பலமாக இருக்கிறதாம்.  “ஆஹா.. இதுவல்லவோ சாதனை,” என்று செய்தியாளர் மோடியைப் புகழ்ந்துகொண்டே போகிறார். இப்படிப்பட்ட பலமான பிரதமர் கிடைக்க நாம் தவம் செய்திருக்க வேண்டுமாம்.  ரொம்ப சீரியசாக அந்தச் செய்தி கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஓடுகிறது.  நன்றாகப் பார்த்துக்கொண்டீர்களா? குறிப்பாக அந்தக் கைப்பிடியின் மீதிருக்கும் கையின் மேல் போடப்பட்டுள்ள சிகப்பு வட்டத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.  இதுதான் சார் இந்தியாவின் நிலைமை. அப்படியே கொஞ்சம் தமிழ்நாட்டுப் பக்கம் வருவோமா?

ஒரு இரண்டு மூன்று வாரங்கள் பின்னோக்கிச் செல்வோம். சென்னையில் மிக அதிகமாக மழை பெய்யப்போகிறது என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாது, அரசுக்கும் மக்களுக்கும் பல்லாண்டுகளாக உதவும் வெதர்மேன் பிரதீப் ஜான் போன்றோரும் சொல்கிறார்கள். சென்னை முழுதும் வடிகால் பணிகள் செய்யப்பட்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மெட்ரோ பணிகள் நடக்கின்றன. எங்கு திரும்பினாலும் தோண்டிப் போட்டிருக்கிறார்கள். அதனால் தமிழ்நாடு அரசு பன்மடங்கு வேகத்துடன் களத்தில் இறங்கி வேலை பார்க்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகள் யாருமே வீட்டில் இல்லை, அனைவரும் தெருவில். முதல்வர், துணை முதல்வரில் இருந்து மேயர், எம்.எல்.ஏ, எம்.பி, கவுன்சிலர், தூய்மைப் பணியாளர்கள்வரை தெருவில் மழையில் நின்று வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொன்றையும் கவனித்து கவனித்துச் செய்கிறார்கள். கனமழையை எதிர்நோக்கத் தயாராகிறார்கள்.

கனமழை பெய்கிறது. பெய்யும்போது நீர் தேங்குகிறது, மழை கொஞ்சம் விட்டவுடன் நீர் வடிகிறது. பெய்யும்போதே சிலர் வீடியோ எடுத்துப் போடுகிறார்கள். “எங்க வீட்டு வாஷ்பேசின் மாதிரி உடனே தண்ணி வடியாம, ரோட்ல கொஞ்சநேரம் நிக்குது பாருங்க” என்று ஒப்பாரி வைக்கிறார்கள். யார் இந்த அறிவாளி என்று பார்த்தால் மிகப்பெரிய ஊடகவியலாளர்கள்!

“இவ்ளோ பெருசா மழை பேஞ்சா, பெய்யும்போதே தண்ணி காணாம போகாது, வளர்ந்த நாடுகள்ளகூட அது சாத்தியமில்ல” என்று வெதர்மேன் பிரதீப் ஒரு பேட்டியில் சொன்னார். அதுவும் அவராகச் சொல்லவில்லை. கேள்வி கேட்டவர், அந்தக் கேள்வியைக் கேட்டதால் சொன்னார். உடனே ஊடகவியலாளர்கள் பலருக்கும், சமூக ஆர்வலர்கள் பலருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. “அதை ஏன் நீ சொல்ற? நீ ஏன் உண்மைய சொல்ற? உன்கிட்ட கேட்டாங்களா? நீ என்ன தி.மு.க. வெதர் விங்கா?” என்று கரித்துக்கொட்டினார்கள். அதுவும் சுமந்த்.சி.ராமன் கொட்டிய வன்மம் இருக்கிறதே! மத, சாதி என அத்தனையும் கலந்துகட்டிய அவருக்கே உரிய வன்மம் அது!  ஒரு ஃப்ரீலான்சராக, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்களுக்கு வானிலைச் செய்திகளை இத்தனை ஆண்டுகளாகக் கொடுத்த பிரதீப் ஜான் மீது எவ்வளவு வன்மம்! ஒரு நாகரீகச் சமூகம், ஒரு சமூக சேகவனை இப்படி நடத்துமா? ஆனால் பிரதீப் ஜான் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இது ஒருபக்கம் என்றால் தொழில்முறை ஊடகவியலாளர்கள் அடித்தக் கூத்து அதைவிட டார்க் காமடி. மழை பெய்த நாளில் அரசு செய்த நல்ல விஷயங்களைச் சொல்ல மனமில்லை என்றால் மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்தி சொல்லலாம். அட, எச்சரிக்கையாக இருங்கள் என்றுகூட சொல்லலாம். ஆனால் பாரம்பரியமான பிரபலப் பத்திரிகை நிறுவனம்  போட்ட தலைப்பு என்ன தெரியுமா? “சென்னை அழியப் போகிறது. திராவிட மாடலின் லட்சணம் பாரீர்!” முதல்நாள் மழையை சென்னை தாங்கிவிட்டது. தானாகத் தாங்கியதா? இல்லை, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை தாங்கியது. ஆனால் மழை இல்லையே, எழவு விழுகலையே, குறை சொல்ல முடியலையே என காத்திருந்தவர்களால் தாங்க முடியுமா? அடுத்த நாள் செய்தி போடுகிறார்கள், “சென்னையைக் காப்பாற்றிய இயற்கை” என்று! ஆக, எளிமையாகச் சொன்னால், அழிவுவந்தால் திராவிட மாடல் சார். காப்பாற்றிவிட்டால் இயற்கை சார்! தமிழ்நாட்டில் ‘ஆஜ்தக்’ வகையறாக்கள் இல்லை என்று யார் சார் சொன்னர்கள்? இதுதான் சார் தமிழ்நாட்டு ஆஜ்தக்! பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாம் இல்லாததால் படிப்பறிவு இல்லாத வடநாட்டில் ஆஜ்தக் செய்வதைப்போல வெளிப்படையாக நம்மூர் ஆஜ்தக்குகள் கேவலம் செய்யமாட்டார்கள். கொஞ்சம் உற்றுப் பார்த்தீர்கள் என்றால், கொஞ்சம் அவர்களின் செய்திப்போடும் பேட்டர்னைக் கவனித்தீர்கள் என்றால் அசிங்கம் பல்லிளிக்கும்!

கொஞ்சம் 2015 வெள்ளத்தை நினைத்துப் பார்ப்பவர்களுக்கு, இந்த அரசின் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்குப் புரியும். மடுவுக்கும் இன்று ஆட்சியில் இருக்கும் மலைக்குமான வித்தியாசம். ஆனால் ஒரே ஒரு ஆறுதல் என்ன தெரியுமா? சமூகவலைதளங்களும், சில யூட்யூப் சேனல்களும். நேரடியாக மக்களிடம் சென்று பேட்டி எடுத்தார்கள். நேரடியாக தூய்மைப் பணியாளர்களிடம் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் சொல்வதெல்லாம், ‘செய்தி’ எனக்கு நமக்குத் தரப்பட்ட கருத்துக்கு நேர்மாறாக இருந்தது. அதை எல்லாம் பார்த்த சில நிறுவனங்களுக்கும், விலைபோன வன்மமிஸ்ட்டுகளுக்கும் வயிறெரிந்திருக்கும். மக்கள் அரசைப் பாராட்டி இருந்தால், முதல்வரைப் பாராட்டி இருந்தால்கூட எரிந்திருக்காது. ஆனால் அனைவரும் மறக்காமல் பாராட்டியது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை. அவர்களுக்கு என்ன பிரச்சினை? அவர்களுக்கு ஏன் வயிறு எரியப் போகிறது என்கிறீர்களா? உலக அரசியலில் பல இயக்கங்கள் காணாமல் போனது கொள்கை வறட்சியால் அல்ல, தலைவர்கள் வறட்சியால். தி.மு.க.வையும் திராவிட இயக்கத்தையும் பரம்பரைப் பகையாளிகளாகக் கருதும் ஆட்களுக்கு இன்னும் ஒரு 50 ஆண்டுகள் தி.மு.க. வலிமையாக இருக்கும் என்று தெரிந்தால் பயமும், வயிற்றெரிச்சலும் வராதா என்ன? நிற்க.

இவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் வாரிசு அரசியல் என்ற கேள்வி! நாம் ஒன்றை உடைத்துப் பேசவேண்டும். செல்வாக்கு மிக்கவர்களின் வாரிசுகள் இயல்பிலேயே பெறும் கவனமும், முக்கியத்துவம் அரசியலுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று அன்று. சினிமாவில் இருந்து, வணிகங்களில் இருந்து எல்லா துறைகளிலும் விரவிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அரசியலிலாவது வாரிசுகள் மக்களைச் சந்திக்கிறார்கள். மக்களின் ஆதரவைப் பெறுகிறார்கள். நம்பிக்கையைப் படிப்படியாக வளர்க்கிறார்கள். அதெல்லாவற்றையும் விட நாம் ஒன்றை ஏற்கத்தான் வேண்டும்.

செல்வாக்குமிக்க ஒரு தலைவரின் மகனோ மகளோ அரசியலுக்கு வருகிறார் என்றால், அதுவும் அந்தத் தலைவரின் கொள்கையும், உழைப்பும், மக்கள் நல எண்ணமும் ஒருசேர அந்த வாரிசிடம் இருக்கிறது என்றால், மக்கள் அதைப் பார்த்துவிட்டால், அதை உணர்ந்துவிட்டால், அந்தக் கட்சியில் இருக்கும் பிற யாரையும்விட (சீனியர்கள் உட்பட) அதிகமான மக்கள் செல்வாக்கு அந்த வாரிசுக்குக் கிடைக்கிறது. இது மனித சமூகத்தின் இயல்பு. சினிமாவில் இருந்து அரசியல் வரை தொண்டர்கள், ரசிகர்களின் ஆதரவை இது முடிவுசெய்கிறது. இது நியாயமா, சரியா என்று பேசுவது தனி தலைப்பு. ஆனால் நீங்கள் மாற்ற வேண்டும் என்றால் கீழில் இருந்து மாற்ற வேண்டும். அது எளிதல்ல. அதேநேரம், நேரடியாக மேலே இருந்து மாற்ற நினைப்பது தற்கொலைக்குச் சமம்.

மோடி போல, “நான் சுயம்பு” என்று சொல்லிக்கொண்டு, ‘தலைவர் யாரின் வாரிசும் அல்ல’ என்ற ஒரே ஒரு தேவையே இல்லாத தகுதியைத் தவிர வேறு எல்லா நாசகாரத் தகுதிகளும் இருக்கும் ஆட்களிடம் சிக்கிச் சின்னாபின்னம் ஆகும் நிலைதான் ஏற்படும். கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். வாரிசு என்பது மட்டும் ஒரு தகுதி இல்லை என்பதுபோல், வாரிசு அல்ல என்பது மட்டுமே ஒரு தகுதி ஆகிவிடாது.

மோடி, எடப்பாடி போன்ற ’வாரிசு அல்ல’ என்ற தகுதியை மட்டுமே வைத்திருக்கும், வேறு எந்த தகுதியும் இல்லாத ஆட்கள் ராகுலையும், முதல்வரையும், உதயநிதி போன்றோரையும் எளிதாகக் கட்டம் கட்ட முயற்சிப்பது இந்த லாஜிக்கை வைத்துதான்.  மோடியின் ஓட்டை லாஜிக்கை சுமந்தபடிதான் ராகுல்காந்தி போன்ற தலைவரை ‘பப்பு’ என பத்தாண்டுகளாகக் கட்டம் கட்டியது இந்தி மீடியா!

மேலே குறிப்பிட்டிருந்த கல்லூரி வாட்சப் குழுமத்தில் இன்னொரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது. என் நண்பன் ஒருவன். அவன் பா.ஜ.க. எதிர்ப்பே தவிர, தி.மு.க. ஆதரவா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. உதயநிதி துணை முதல்வர் ஆனவுடன், “எனக்கு பெருசா இதுல உடன்பாடில்ல. ஆ.ராசாவ ஆக்கிருக்கலாம்,” என்று பதிவிட்டான். (அவர் எம்.பி. அவரை துணை முதல்வராக ஆக்க முடியாது என்பது தனி விஷயம். ஆனால் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.) இது பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் ஒரு கருத்துதான். ஆ.ராசா நன்றாக கொள்கை பேசுகிறார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என்று பொளந்துகட்டுகிறார். பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டிருக்கிறார். அவரை ஆக்குவதுதானே? நியாயமான கேள்விதான். ஆனால் வெகுஜன வாக்கரசியலில் மக்கள் செல்வாக்கு என்பது இப்படியான தியரிகளை எல்லாம் தாண்டி இருக்கிறது.

இங்கு அரசியலைப் பற்றி அலசி ஆராய்ந்து பிய்த்து உதறும்  ‘உலகநாயகன்கள்’ தேவைதான், ஆனால் ஜனநாயக பிளாக்பஸ்டர்களுக்கு அரசியலும் தெரிந்த, ஒரு கையசைவில் கரகோஷங்களைப் பெற்றுக்கொடுக்க முடிந்த சூப்பர் ஸ்டார்கள் தலைவர்களாக இருப்பது அவசியம்.  பேராசிரியர் என்ன கலைஞருக்கு குறைச்சலா? ஆனால் ஏன் அவர் கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்? ஏனென்றால் பேராசியர் அறிஞர்தான், ஆனால் கலைஞர் அறிஞர் மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாரும் கூட!   (அதே நண்பன், சென்னையில் பெருமழை முடிந்த நாள் அன்று துணை முதல்வரின் பணிகளை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டிருந்தான். ஒரு ஹார்ட் ரியாக்‌ஷன் போட்டேன்! ஒன்றுதான் போட முடிந்தது!)

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அடுத்த தலைவர்களைக் கட்சியும், மக்களும் மட்டுமே தீர்மானிப்பதில்லை. எதிரிகளும் பலநேரங்களில் தீர்மானிக்கிறார்கள். சற்று யோசித்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் சனாதனத்தை எதிர்த்து எத்தனை மாநாடுகள் நடந்துள்ளன. எத்தனை தலைவர்கள் பேசியுள்ளார்கள், பேசுகிறார்கள். ஆனால் உதயநிதி அவர்களின் ஒரே ஒரு பேச்சை இந்தியா முழுவதும் உள்ள இந்துத்துவவாதிகள் எப்படி தூக்கிக் கொண்டு திரிந்தார்கள்? எவ்வளவு பெரிய சிக்கல் ஆக்கினார்கள். மக்களிடம் “இவர் நல்ல தலைவர்” என்ற அடையாளத்தைப் பலர் பெற்றுவிடலாம், ஆனால் “இவர் நம்ம தலைவர்” என்ற அடையாளத்தை எதிரிகள், சமூகம், சவால்கள், களப்பணிகள், உழைப்பு, கொள்கைச் சார்பு என பலவும் சேர்ந்தே பெற்றுத் தருகிறது. துணை முதல்வர் உதயநிதிக்கு இந்த அடையாளம் தேடி வந்து கொண்டிருப்பதுதான் இன்று திமுக எதிரிகளுக்கு, அதாவது காலம்காலமாக திமுக மீது பொய்யையும் புரட்டையும் வாரி இறைக்கும் ஊடகங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் என திராவிட மாடல் புண்ணியத்தில் எல்லா துறையும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. எந்த வகையில் வடநாட்டுடன் ஒப்பிட்டாலும் நாம் முன்னேறி இருக்கிறோம். ஆனால் நம் ஊடகத்துறையின் நிலைமையைப் பாருங்களேன். இதென்ன கொடுமை என்று புலம்புபோது “அங்க ஏன் பாக்குற? அங்க பாத்தீனா நாசமாப் போவ. சமூகவலைதளங்களைப் பாரு. விலைபோன ஊடகவியலாளர்களை இளைஞர்கள் புரட்டி எடுப்பதைப் பாரு. தமிழ்நாட்டின் உண்மையான ஊடகம் சமூகவலைதளங்கள்தான்,” என்ற நம்பிக்கைக் குரல் கேட்கிறது.

நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார். “நான் லவ் பண்ணா என்ன நீ லவ் பண்ணா என்ன? அந்தக் குடும்பம் நாசமாப் போகணும்,” என்று. அப்படித்தான், “பா.ஜ.க. வந்தால் என்ன, அ.தி.மு.க. வந்தால் என்ன? தமிழ்நாடு நாசமாகப் போகணும்,” என்ற கொள்கையோடு இயங்குகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்.  அதனால்தான் இவ்வளவு வன்மம்.  குறித்து வைத்துக்கொள்ளுங்கள் 2026 தேர்தல் வரை தமிழக வெற்றிக் கழகத்தை சுமந்துகொண்டு குறுக்கமறுக்க ஓடிக்கொண்டே இருப்பார்கள். த.வெ.க தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறது என்ற ரேஞ்சில் அலப்பார்கள். இறுதியாக நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். சமூக வலைதளங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால், ‘விலைபோன’ ஊடகங்கள், மஞ்சுமெல் பாய்ஸ் பள்ளத்தாக்குதான் சமவெளி என்று உங்களை நம்ப வைப்பார்கள்!