சிந்தனை என்பது எண்ணங்களின் தொகுப்பு. பல்வேறு இலக்கற்ற எண்ணங்கள் மனதில் அலைபாயும் தருணத்தில், அவை அனைத்தும் ஓர் இலக்கில் திரளும்போது நாம் அதைச் சிந்தனை எனச் சொல்கிறோம். அப்படி திரளாத சமயத்தில் அவற்றை நாம் வெறும் எண்ணங்கள் என்றே சொல்கிறோம்.

மனம் ஓய்வு நிலையில் இருக்கும்போது, அதில் பல்வேறு எண்ணங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். பொதுவாக அந்த எண்ணங்களை மனம் பொருட்படுத்தாது. தேவையான நேரத்தில் இந்த எண்ணங்களை ஓர் இலக்கை நோக்கிக் குவித்து மனம் நமது சிந்தனையை ஒருங்கிணைக்கிறது.

குதிரையின் இலக்கைத் தீர்மானிக்கும் கடிவாளம் போல, நமது மனம் எண்ணங்களுக்குக் கடிவாளமிட்டு இலக்குகளை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கும். எண்ணங்களைவிட மனமே வலிமையானது. மனம் சொன்னதிற்கு ஏற்றவாறு எண்ணங்கள் உருவாகும், அந்த எண்ணங்களை தொகுப்பதும் அல்லது கலைப்பதும், தேவையில்லை என்று முடிவு செய்வதும் மனமாகவே இருக்கிறது. ஒருவேளை மனம் தனது கடிவாளத்தை இழக்கும்போது கட்டுத்தறியாக ஓடும் எண்ணங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன, எண்ணம் நோய்மையடையும் புள்ளி இதுதான்.

எப்போதெல்லாம் எண்ணங்களின் மீதான இந்தக் கட்டுப்பாட்டை மனம் இழக்கிறதோ அப்போதெல்லாம் எண்ணங்கள் வலிமை மிகுந்தவையாக மாறிவிடுகின்றன. மனதைக் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன. எண்ணங்களுக்கு ஏற்றவகையில் மனம் செயல்பட தொடங்கும் இந்த நிலையில் எண்ணங்கள் முழுமையாக நோய்மையடைந்து விடுகின்றன.

நாம் நம்பும் ஒருவர் மீது, எந்த விதக் காரணமும் இல்லாமல் தன்னிச்சையாக ஓர் எதிர்மறை எண்ணம் மனதில் உருவானால், மனம் இயல்பு நிலையில் அந்த எண்ணத்தை நிராகரித்துவிடும். ஆனால் மனம் பலவீனமாகும்போது அந்த எண்ணம் மனதைக் கட்டுப்படுத்த தொடங்கிவிடும்.  “அவர் உனக்கு துரோகம் செய்கிறார்” என்ற எண்ணத்தை நிராகரிக்க முடியாமல் அந்த எண்ணத்திற்கு மனம் தன்னைப் பூரணமாக ஒப்புவிப்பதுதான் நோய். இந்த நோய்மை நிலைதான் “எண்ணச் சுழற்சி நோய்” என சொல்லக்கூடிய அப்சசிவ் கம்பல்சிவ் டிசார்டர்.

சமகாலத்தின் மிக முக்கியமான மனநலப் பிரச்சினையாக இந்த ஓ.சி.டி. உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லா வயதினருக்கும் இந்த நோய் வரலாம். அதுவும் குறிப்பாக கொரொனா காலகட்டத்திற்கு பிறகு இந்த நோய் இன்னும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

பவித்ராவிற்கு நாற்பதைத் தாண்டிய வயது. கணவர் தனியாகக் கடை வைத்திருக்கிறார். இரண்டு மகன்கள். குடும்பத்தை நிர்வாகம் செய்வது முழுக்கவே பவித்ராதான். குடும்பம் சார்ந்த அத்தனை முடிவையும் அவளே எடுக்கிறாள். கணவன் யோசனைகள் சொல்வதோடு சரி. அத்தனை சாமர்த்தியமாக்க் குடும்பத்தை நடத்தி வரும் பவித்ராவிற்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதுவும் திருமணத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. அடிக்கடிக் கை கழுவுவதும், வீட்டை எப்போதும் துடைத்துக்கொண்டிருப்பதுமே அது.

‘இதில் என்ன பிரச்சினை, அடிக்கடிக் கை கழுவதும், வீட்டை எப்போதும் சுத்தமாகத் துடைத்து வைத்திருப்பதுவும் நல்லது தானே?” என நீங்கள் நினைக்கலாம்.

நல்லதுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், அது என்னவிதமான மனநிலையை கொடுக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பவித்ரா ஒரு நாளைக்கு ஐம்பதுக்கும் மேலான முறைகள் தனது கைகளைக் கழுவுகிறாள் . எந்த காரணமும் இல்லாமல், திடீரென எழுந்துபோய் கைகளைக் கழுவிக்கொண்டிருப்பாள்.  ஒவ்வொரு முறை கைகழுவுவதற்கும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது எடுத்துக் கொள்வாள். அப்படியென்றால் ஒரு நாளில் கிட்டதட்ட நாலரை மணி நேரத்தில் இருந்து ஐந்து மணி நேரம் கைகழுவுவதற்கே செலவிட்டுக்கொண்டிருக்கிறாள். அதே போல வீட்டை பத்து முறைகளுக்கும் மேலாக துடைக்கிறாள். ஒருமுறை துடைக்க அரை மணி நேரம் என்று எடுத்துக்கொண்டால்கூட ஐந்து மணி நேரம். விழித்திருக்கும் நேரத்தில், கிட்டதட்ட பத்து மணி நேரத்தை இதற்கே செலவிட்டால் அவளது மற்ற செயல்களையெல்லாம் செய்ய எப்படி நேரம் இருக்கும்? நேரம் மட்டுமல்ல இதற்காக ஒவ்வொரு நாளும் ஏராளமான தண்ணீரை வீண் செய்கிறாள். வாடகை வீடுகளில் இதனால் நிறைய பிரச்சினைகள். இதன் காரணமாகவே எந்த ஒரு வீட்டிலும் ஒரு வருடத்திற்கு மேலாக அவர்கள் இருப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மன உளைச்சல்.

“திடீர்னு ஒரு எண்ணம் வரும், போய்க் கையைக் கழுவு, உன் கைல கிருமி வந்துருச்சி, கழுவலனா அது எல்லாருக்கும் பரவிடும். வீட்ல உள்ளவங்க எல்லாருக்கும் நோய் வந்துடும்னு தோணும். இந்த எண்ணம் வந்தவுடனே எனக்குள்ள ஒரு பதற்றம் வந்துடும், நிற்க முடியாது, நெஞ்சு படபடப்பா அடிச்சிக்கும், அப்படிலாம் எந்தக் கிருமியும் இல்லனு  எனக்கு நல்லாவே தெரியும், ஆனாலும் கை கழுவற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது. போய்க் கைகழுவுன பின்னாடிதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அதுவும் கைகழுவுன உடனே திருப்தி வராது, இத்தனை முறை தண்ணி ஊத்தனும், இத்தன முறை சோப்பு போடணும்னு ஒரு கணக்கு இருக்கு, அந்தக் கணக்குப்படி கைகழுவுனாதான் திருப்தி வரும். நான் செய்றது முட்டாள்தனம்னு எனக்கு தெரியும், இப்படிலாம் எதுவும் நடக்காது அப்படினும் எனக்கு தெரியும், ஆனாலும் அந்த எண்ணம் வந்ததுக்கு பிறகு என்னால கைகழுவாமலோ அல்லது வீடு துடைக்காமலோ இருக்க முடியாது. நான் மட்டும் இப்படி இருந்தாகூட பரவாயில்ல, இப்பல்லாம் வீட்ல உள்ளவங்களையும் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டேன், அவங்களையும் அடிக்கடி கைகழுவ சொல்றேன், அவங்களும் திட்டிகிட்டே கழுவிட்டு இருக்காங்க, அதுவும் என் பசங்கள நான் ரொம்ப தொந்தரவு பண்றேன், இப்படி பண்ணக் கூடாதுனுதான் நான் நினைக்கிறேன், இப்படி பண்றதுனால என்னோட நிம்மதியும் கெட்டுப்போய் இப்ப வீட்ல உள்ளவங்களோட நிம்மதியும் கெடுத்துட்டு இருக்கேன், இதுல இருந்து நான் வெளிய போகணும், ஆனா எப்படினுதான் தெரியல, ஒரு =வேளை நான் செத்துட்டாதான் இதுக்கு ஒரு முடிவுனா செத்து போயிடலாம்னும் இருக்கேன்” எனச் சொல்லிவிட்டு பவித்ரா கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள்.

பவித்ராவின் கணவன் ஆரம்பத்தில் நிறைய கோபப்பட்டிருந்தாலும் இப்போதெல்லாம் புரிந்துகொள்கிறார். அதை அவளது இயல்பாகவே அவர் ஏற்றுக்கொண்டு விட்டார். அவளது இந்தப் பழக்கம் மாறாது என்பதையும் அவரது அனுபவத்தில் தெரிந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரால் இதை ஓரளவிற்கு சகித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் மகன்கள் இருவரும் இதனால் நிறைய கோபப்படுகிறார்கள், அம்மாவுடன் சண்டை போடுகிறார்கள், வருத்தப்படுகிறார்கள். தனது பிள்ளைகள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணம்தான் பவித்ராவிற்கு அத்தனை கவலையானதாக இருக்கிறது. “செத்துப் போயிட்டாதான் என்ன” என்று அவள் நினைப்பதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது.

பவித்ரா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?

தனது எண்ணங்களை அபத்தமானது, தேவையில்லாதது என்று உணர்ந்திருந்தாலும்கூட மீண்டும் மீண்டும் கையைக் கழுவும் பழக்கத்தில் இருந்தோ, அடிக்கடி வீட்டைத் துடைக்கும் செயலில் இருந்தோ ஏன் அவளால் வெளியே வரமுடியவில்லை?

உண்மையில் பவித்ரா இந்தச் செயல்களையெல்லாம் விரும்பிச் செய்கிறாளா அல்லது ஏதோ கட்டாயத்தில் செய்கிறாளா?  கட்டாயம்  என்றால் அப்படி என்ன கட்டாயம் அவளுக்கு?

இதற்கான பதில்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் பவித்ராவிற்கு இருப்பது ஒரு வகையான மனரீதியான பிரச்சினை. OCD என ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய  “எண்ணச் சுழற்சி நோய்” (Obsessive Compulsive Disorder). பவித்ராவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள மக்களில் நூற்றில் ஒருவருக்கு இந்த வகையான மனநலப் பிரச்சினை இருக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள். பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்குமேகூட இந்தப் பிரச்சினை வரலாம். அதனால் இந்தப் பிரச்சினை ஒரு அரிதான பிரச்சினை கிடையாது கணிசமான மக்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் இந்தப் பிரச்சினை இன்னும் அதிகமாகியிருக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

சமீப காலங்களில் இந்தப் பிரச்சினையை நான் நிறைய இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் கவனித்து வருகிறேன். அது அவர்களின் அன்றாட வாழ்க்கையை, கற்றலை, அலுவலை, சகமனித உறவாடல்களை, தன்னம்பிக்கையை, மனநிலையை வெகுவாகப் பாதிக்கிறது.

ஏழு வயதுக் குழந்தை ஒன்று தனக்குள் நடப்பது என்னவென்றே விவரிக்க தெரியாமல் தேம்பித் தேம்பி அழுததையும், “இப்படிலாம் நான் யோசிக்கிறேனு என் மனைவிக்குத் தெரிஞ்சா அவ என்னவிட்டுப் போயிருப்பா சார், அவ்வளவு அசிங்க, அசிங்கமா எனக்குள்ள எண்ணங்கள் வருது, எனக்கே குற்றவுணர்ச்சியா இருக்கு சார், இந்த எண்ணத்த நிப்பாட்ட வழியா இல்லையா?” என்று கேட்ட கணவனையும் நான் சமீபத்தில் கடந்து வந்தேன்.


எண்ணங்கள்:

மனம் பற்றியும் அதில் தோன்றும் எண்ணங்கள் பற்றியும் நமக்கு எப்போதும் பல சந்தேகங்கள் இருக்கின்றன.

“ஒருவருடைய மனதில் தோன்றும் எண்ணங்களைப் பிறரால் கேட்க முடிந்தால் யாரும் யார் கூடவும் இங்கே வாழ முடியாது” என்பார் எனது பேராசிரியர்.

ஆம். உண்மைதான். நமது எண்ணங்கள் விசித்திரமானவை. இப்படியெல்லாம் யோசிக்கக்        கூடாது என்று நினைப்பவை பற்றியே நாம் பெரும்பாலான நேரங்களில் யோசித்துக் கொண்டிருப்போம். அதுதான் நமது எண்ணங்களின் தனித்துவப் பண்பு.

அப்சஷன் என்பது எல்லா நேரத்திலும் பிரச்சினை அல்ல. அன்றாட வாழ்க்கையிலேகூட நாம் பல அப்சஷன்களை கொண்டிருப்போம். “அந்த கசங்கிய காலர் மடிந்த ஊதா கலர் சட்டையைப் போட்டுக்கொண்டு போனால் தான் தேர்வு நன்றாக எழுத முடியும்” என நாம் நினைப்பதும் ஒருவகையான அப்சசனே! எந்த நேரமும், எந்தக் காரணமுமின்றி செல்போன் திரைகளை திரும்பத் திரும்ப ஸ்கிரோல் செய்து கொண்டிருப்பதுமே அப்சசனே! “ஆன்லைனில் யார்கூட பேசிக்கொண்டிருக்கிறாள் என நமது தோழியின் ஆன்லைன் ஸ்டேட்டஸை இரவு முழுக்கப் பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு அப்சசனே!

அன்றாட வாழ்க்கையின் இந்த அப்சசன்கள் எப்போது நோய்மையாக மாற்றமடைகின்றன என்பது ரகசியமானது. அந்தக் கணம் யாருக்குமே தெரியாது. அந்தக் கணம் வராமல்கூட போகலாம் அல்லது நமது கால்களை சுற்றிக்கொண்டு நமக்கே தெரியாமல் நம்மீது ஊர்ந்து வந்து கொண்டிருக்கலாம்.

எண்ணங்கள் எப்படி ஒரு பிரச்சினையாக, நோயாக உருவாகிறது? 

ஒரு எண்ணம், திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றி, உங்கள் மனதை முழுவதுமாக ஆக்ரமித்துக்கொண்டு வேறு எதிலும் உங்களை ஈடுபட விடாமல், எதன் மீதும் கவனம்கொள்ள முடியாமல் செய்யுமானால் அந்த எண்ணம் நோய்மையடைகிறது என்று பொருள்.

“பீரோ பூட்டுனமா இல்லையானு தோணிட்டே இருக்குங்க, நிம்மதியாவே இருக்க முடியல, இவ்ளோ தூரம் கோயிலுக்கு வந்துட்டு சாமி கும்பிடக்கூட மனசு வரல, போய் ஒரு டைம் செக் பண்ணிட்டு வந்தாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்”

பீரோவைப் பூட்டிவிட்டோமா இல்லையா என்ற அந்தச் சந்தேகம்தான் அப்சசன். அந்தச் சந்தேகம் ஒருவரின் மனதின் முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது. அது உங்களின் அத்தனை செயல்களையும் கட்டுப்படுத்துகிறது. அந்த எண்ணத்தைத் தாண்டி உங்களால் வேறு எதுவும் சிந்திக்க முடியவில்லை என்றால் அந்த எண்ணம்தான் நோய்மையாகிவிட்ட அப்சசன்.

ஒரு எண்ணம் திரும்ப, திரும்ப உங்களுக்குள் தோன்றுகிறது என்றால் செய்ய வேண்டிய ஒரு செயலை இன்னும் கச்சிதமாக, திருத்தமாக செய்ய அது நிர்பந்திக்கிறது என்று பொருள். அதன் காரணமாக நீங்கள் இன்னும் அதை நன்றாக, திருப்தியாகச் செய்ய முடிந்தால் அந்த அப்சசன் ஆக்கப்பூர்வமானதே!

இன்று மாலைக்குள் ஒரு ரிப்போர்ட்டைச் சரி பார்த்து மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும். ஒரு முறை சரி பார்த்த பிறகும் திருப்தி இல்லாமல் இன்னும் சிலமுறை சரிபார்த்து அனுப்புவது இயல்பானது, ஆக்கப்பூர்வமானது. அதுவே எத்தனைமுறை சரிபார்த்தப் பிறகும் திருப்தி வராமல் திரும்பி திரும்பி அதை சரிபார்த்துக்கொண்டே இருந்து, கடைசியில் அந்த ரிப்போர்ட்டை மேலதிகாரிக்கு அனுப்ப முடியாமலேயே போனால் அது நோய். எண்ணச் சுழற்சி நோய்.

இருபது வயது இளைஞன். சமீபகாலமாக ஒரு பெண்ணுடன் பழகி வருகிறான். இரவில் நீண்ட நேரம் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பான். ஒரு நாள் அவனுக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. “ஒருவேளை நான் ஃபோனை வைத்தவுடன் அவள் வேறு யாருடனோ பேசுவாளோ?” என்று தோன்றிவிடுகிறது. அந்த சந்தேகம் வந்தவுடன் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உடனடியாக அந்தப் பெண்ணிற்கு அழைத்து பேசுகிறான். அவள் எண் பிசியாக இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறான். ஓரளவிற்கு நிம்மதியாக இருக்கிறது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திரும்பவும் அந்தச் சந்தேகம் வருகிறது. திரும்பவும் அழைத்து பேசுகிறான். அடுத்த சில நாட்களில் அவனது இந்த நடவடிக்கை இன்னும் அதிகமாகிறது. அடிக்கடி அவளுக்குக் கால் செய்து அவள் யாரிடமும் பேசவில்லை என உறுதி செய்துகொள்கிறான். இரவு முழுக்க அழைத்துக்கொண்டேயிருக்கிறான். ஒரு கட்டத்தில் அவள் வெறுத்து போய் “எதுக்கு இப்படி நைட் முழுக்க மிஸ்டு காலா கொடுத்துட்டு இருக்க” எனக் கோபித்து கொள்ளும்போது உண்மையை சொல்லியிருக்கிறான். அவள் ஓரளவு இதைப் புரிந்து கொண்டு என்னிடம் அழைத்து வந்தாள்.

“எனக்கு நல்லாவே தெரியும் சார், அவ யார்கிட்டயும் பேச மாட்டானு. ஆனால் என்னால அந்தச் சந்தேகம் வரும்போது என்ன பண்றதுனு தெரியல, அப்படிலாம் இருக்காதுனு எவ்வளவோ சமாதானம் எனக்கே சொல்லிக்கிட்டாலும் என்னால நிம்மதியா இருக்க முடியல, அவளுக்கு போன் பண்ணி ஒரு ரிங்காவது கேட்டாதான் என்னால நிம்மதியா இருக்க முடியுது, அந்த நிம்மதியும்கூடக் கொஞ்ச நேரம்தான், திரும்பவும் அந்தச் சந்தேகம், திரும்பவும் கால் பண்றேன். ஒரு நாள் நைட் மட்டும் ஐநூத்தி முப்பது மிஸ்டு கால் பண்ணியிருக்கேன்” என்று அழுதான்.

இதுதான் நோய்மை. ஒரு எண்ணம் திரும்ப, திரும்ப வருவதின் விளைவாக மனதை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டு, மனதை முழுவதும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதால் வேறு எதன் மீதும் கவனம் இல்லாமல், வேறு எதையும் செய்ய முடியாமல் எந்த நேரமும் இதன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அந்த எண்ணங்கள் சொல்கிறபடியே நடந்துகொண்டிருந்தால் அந்த எண்ணம் அதாவது அந்த அப்சசன் நோய்மையாக மாறிவிட்டது என்று அர்த்தம். இப்படித்தான் இயல்பான சில அப்சசன்கள் நோய்மையாக மாறுகின்றன.

“எனக்கு எதையும் ரெண்டு மூணு முறை செக் செய்து பார்ப்பதுதான் வழக்கம், இதனால் எனது செயல்கள் எதுவும் பாதிக்கப்படுவதில்லை, எனது நிம்மதி ஒன்றும் கெட்டுப்போவதில்லை, இந்த இயல்பான அப்சசன்கூட பின்னாளில் நோய்மையாக மாறுமா?” என நண்பர் ஒருவர் கேட்டார்

நிச்சயம் மாறாது. காலம் காலமாக நமது ஆளுமைகளில் இருக்கும் சில அப்சசிவ் பண்புகள் எப்போதும் அதே மாதிரியாகவே தொடரும். இவை எதுவும் நோய்மையாக மாறாது. நோய்மை என்பது திடீரென ஒரு அப்சசன் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமாகி நோய்மை அளவுக்கு செல்லுமே தவிர, நமது ஆளுமையில் எப்போதும் இருக்கும் அப்சசன்கள் எப்போதும் நோய்மையை அடைவதில்லை.

எண்ணச் சுழற்சி நோயைப் பொறுத்தவரையில் அப்சசன் என்பது வெறும் எண்ணம் மட்டுமல்ல. எளிய புரிதலுக்காகவே நான் எண்ணங்களை மட்டும் உதாரணமாகச் சொல்லியிருக்கிறேன் ஆனால் அப்சசன் என்பது எண்ணமோ, பயமோ, சந்தேகமோ அல்லது காட்சியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அமெரிக்காவின் நோய்களை வகைப்படுத்தும் அமைப்பான DIAGNOSIS AND STATISTICAL MANUAL OF DISEASES 5 வரையறையின்படி எண்ணச் சுழற்சி நோய் என்பது “ஏதாவது ஒரு எண்ணமோ, பயமோ, சந்தேகமோ அல்லது காட்சியோ திரும்ப திரும்ப மனதில் தோன்றிக்கொண்டிருக்கும். இவை தேவையற்றவை எனத் தெரிந்தாலும் கூட திரும்ப திரும்ப தோன்றும் இந்த எண்ணங்களையும், பயங்களையும், சந்தேகங்களையும், காட்சிகளையும் தடுக்க முடியாது. கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் இவை திரும்ப திரும்ப மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும் இதனால் வேறு எதிலும் கவனம் கொள்ளமுடியாது, அதன் விளைவாக ஏராளமான பதற்றமும், குற்றவுணர்ச்சியும், கவலையும் மனம் முழுதும் நிரம்பியிருக்கும். சில நேரங்களில் இந்த மனவுளைச்சலைத் தடுக்க சில செயல்களையும் திருப்பி திருப்பிச் செய்யும் நிலைக்கு ஆளாவர்கள் அது இன்னும் அதிகப்படியான மனவுளைச்சலை கொடுக்கும்”. சர்வதேச மனநல அமைப்புகளும் கிட்டதட்ட இதே வரையறையை ஏற்றுக்கொண்டுள்ளன.

ஒரு எண்ணமோ அல்லது பயமோ அல்லது காட்சியோ….. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அவை மனதில் முழுமையாக ஊடுறுவி அதன் வழியாக மனதின் வழக்கமான செயல்களைத் தடுத்து மனதை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலைதான் இந்த எண்ணச் சுழற்சி நோய். எண்ணங்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் அது ஏதாவது ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய தூண்டும் நிலையும் உருவாகலாம்.

உதாரணத்திற்கு வீட்டின் கேஸ் ஸ்டவ்வை அணைத்துவிட்டு வந்தபிறகு “அதைச் சரியாக அணைக்கவில்லை திரும்பப்போய் ஒருமுறை பார்த்துவிட்டு வா” என ஒரு எண்ணம் உருவாகும். அதன் விளைவாக திரும்பச் சென்று அணைத்துவிட்டதை உறுதி செய்துவந்தால் திரும்பவும் அந்த எண்ணம் உருவாகும். அணைத்துவிட்டதை நன்றாகவே அறிந்தாலும் திரும்ப ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வருவோம். அதன் பிறகும் மறுபடியும் அதே எண்ணம் வரும், திரும்பச் செல்ல தூண்டும், திரும்ப எண்ணம்… திரும்ப ஒருமுறை சோதனை..திரும்ப எண்ணம்… என இரவு முழுவதும் தொடர்ந்து கொண்டேகூட இருக்கும். இதுவும் எண்ணச் சுழற்சி நோயே!. இந்தச் செயலை பொருத்தமற்ற கட்டாயச் செயல் (Compulsion) எனச் சொல்கிறோம்.

எண்ணச் சுழற்சி நோயைப் பொறுத்த வரையில், சில நேரங்களில் எண்ணங்கள் (Obsession) மட்டும் இருக்கலாம், சில நேரங்களில் எண்ணங்களும், திரும்ப திரும்ப செய்யும் பொருத்தமற்ற செயல்களும் (Obsession and Compulsion) சேர்ந்தும் இருக்கலாம்.

பிரெஞ்ச் அறிவியலில் முதலில் இதனை ‘சந்தேக நோய்’ என அழைத்தார்கள்.ஆம் கிட்டத்தட்ட சரியான புரிதல்தான். ஒருவர் ஏன் தன் கைகளை ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை கழுவுகிறார்? சரியாக்க் கழுவினோமா என்ற சந்தேகம்தான்!

ஒருவர் ஏன் இரவு முழுவதும் கேஸ் அணைத்திருக்கிறதா என போய்போய் பார்க்க வேண்டும்? அணைக்கவில்லையோ என்ற சந்தேகம்தான். கிட்டதட்ட எல்லா எண்ணங்களும், பயமும், காட்சியும் இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில்தான் வருகிறது என்று நம்பப்பட்டது. ஆனால் சந்தேகம் ஏன் வருகிறது? பயத்தின் விளைவாக. ஒருவேளை கேஸ் அணைக்கவில்லையென்றால் என்னவாகும் என்ற அச்சம்தான் அவர்களைத் திரும்பத் திரும்ப சோதனை செய்ய வைக்கிறது. அதனால் அச்சமும், பயமும், பதற்றமும்தான் பிரதானம் என்ற வகையிலும் நம்பப்பட்டது.

நோய்களை வகைப்படுத்தும் அமைப்புகள் இந்த எண்ணச் சுழற்சி நோயை தொடக்கத்தில் பதற்ற நோய்களில் ஒன்றாகவே கருதின. சமீபத்தில்தான் பதற்ற நோயில் இருந்து இது தனியாகப் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள அட்டவணைப்படி எண்ணச் சுழற்சி நோய் என்பது ஒரு தனித்துவமான மனநோய். பிரதானமாக எண்ணங்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஓ.சி.டி. நோயைப் பொறுத்தவரையில், சாதாரணமாக மனதில் தோன்றும் எண்ணம் அதீத முக்கியத்துவம் பெறுவதும், அதனால் உருவான பதற்றத்தை குறைக்கப் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடும் ஆரோக்கியமற்ற நடவடிக்கைககளே பிரதானப் பிரச்சினை.

ஒரு சாதாரண எண்ணம், அதீத முக்கியத்துவம் பெறுவதற்கும், பொருத்தமற்ற செயல்களில் திரும்ப, திரும்ப ஈடுபடுவதற்கும் அடிப்படையாக இருப்பது மனப்பதற்றமே!. இந்த மனப்பதட்டமே ஓ.சி.டி.யின் அத்தனை நடவடிக்கை கோளாறுகளுக்கும் காரணம். இந்தப் பதற்ரத்தை சிகிச்சையளித்துச் சரிசெய்தால் மட்டுமே ஓ.சி.டி.யின் அத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் வெளிவர முடியும்.

sivabalanela@gmail.com