1

அண்டத்தின்

எண்ணி முடியாத

பால் வீதிகளில்

எத்தனையோ

விண்மீன் குடும்பங்கள்

நீரும் காற்றும்

துணைக்கொரு

நிலவுமுள்ள கோளில்

மிதந்து அலைகிறது சிறு துரும்பு

துரும்புக்குத்

துணையொரு வெள்ளி

தலையெடுக்கும் குஞ்சுகளோடு

கிரணப் பொன் வளியில்

மிதக்கும் மீன் குடும்பம்

சுற்றித்திரியும் பால்வீதி

எல்லாம் அது போலவே

ஆனாலும்

அண்டத்தின் கோள்களில்

இல்லாத ஒன்று

துரும்பின் வசமுண்டு

அது தலையில் சுமந்து அலையும்

பேரண்டத்தின் பாரமுள்ள

அதன் துயரம்

2

விடுதியிலிருந்து

விடுதிக்கு மாறி

விடுதிகளிலேயே

வாழ்ந்து வந்த

விடுதி மனிதனின் பயணம்

உள்ளூர் விடுதியில்

துவங்கும்

வழியூர் விடுதியில்

தூங்கும்

விடுதிக்கும் விடுதிக்கும்

இடையில் கிடந்துருளும்

அவனது நாட்கள்

இப்படியே

சன்னலில் இருண்டு

கதவுகளில் விடிய

விடுதி மனிதன்

விடுதிகள் அலுத்துப்போய்

வீடு தேடிப்போனான்.

வீட்டை வைத்திருந்தோர்

சேர்ந்து வசிக்கப்

பெண் வேண்டும் என்றார்கள்.

பெண்ணை வளர்த்து வந்தோர்

சேர்ந்து வசிக்க

வீடு வேண்டும் என்றார்கள்.

விடுதியறைகளே

வாழ்வதற்கும்

தேவைப்பட்டால்

சாவதற்கும்கூட

அனுமதிக்கின்றன

என்கிறான் விடுதி மனிதன்.

மேலுமவன்

விடுதியில் பிறந்தவன்

விடுதியில்தானே

இறக்க வேண்டும்

என்று வினவுகிறான்

புகைப்படங்களில்

விடுதிப் பணியாளர்கள்

அவனது உறவின் முறையினராக

முறுவலிக்கின்றனர்.

3

தன்னைத்தானே

தட்டிக் கொண்டு உறங்கும்

சிறுமியைப் பார்த்து

உச்சுக் கொட்டுகிறார்கள்.

தலையில் இடி விழுந்த மறுநாளே

மயிரையள்ளிக் கொண்டையிட்டு

செங்கல் சுமக்கப் போனவளுக்கு

இது வியப்பில்லை

பெற்றதும் உடன்பிறந்த

மற்றதும் உதவுமென்று

தலையைச் சொறிந்து நிற்காமல்

தன்னைத்தானே

சவுக்கால் விளாசிக்கொண்டு

தட்டாமாலை சுற்றுகிற

மண்ணுருண்டையின் மகளல்லவா