தேநீர்க் கோப்பையை ஒருகையில் வைத்துக்கொண்டு இன்னொரு கையைச் செய்தித்தாளின் முதல்பக்கத்தில் அழுத்திப் படிக்க முயன்றுகொண்டிருந்தார் முருகேசு. ஜன்னல் வெளிச்சம் போதவில்லை. விளக்கைப் போட்டால் ‘பகல்ல எதுக்கு லைட்டு?’ என்று உள்ளிருந்து வசந்தியின் குரல் வரும். மின்சாரக் கட்டணம் கட்டுவது அவர்தான் என்றாலும் இப்போது வருவது சம்பளம் இல்லையே, ஓய்வூதியம்தானே. கண்ணாடியை ஏற்றிவிட்டுத் தலைப்புகளில் கண்ணோட்டினார். இந்தச் செய்தித்தாளில் எப்போதும் தலைப்புகள் கொட்டை எழுத்துகளில் இருக்கும். எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களுக்காக அப்படிப் போடுகிறார்கள் என்று நினைத்திருந்தார். தன்னைப் போன்ற ஓய்வூதியர்களையும் முதியவர்களையும் கூட மனதில் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது.

நாயுடன் அதிகாலையிலேயே நடைப்பயிற்சிக்குச் சென்று வந்து ஆசுவாசமானதும் தேநீரும் செய்தித்தாளும் அவருக்கு ஒருசேர வேண்டும். கண்ணை உறுத்துப் பார்த்தும் வாசிக்க முடியவில்லை. முற்றத்தில் போய் உட்கார்ந்துகொள்வதுதான் ஒரே வழி. செய்தித்தாளை ஒருகையிலும் தேநீரை இன்னொரு கையிலும் எடுத்துக்கொண்டார்.

‘ஒன்னு குடிக்கணும், இல்லைனா படிக்கணும். ரண்டையும் ஒன்னாத்தான் பண்ணோனுமா?’

வரவேற்பறைக்கு ஏதோ வேலையாக வந்த வசந்தியின் குரல் உயர்ந்தது. எதுவும் பேசாமல்  நடந்தவர் ‘காலையிலயே ஆரம்பிச்சுட்டா’ என்று வாய்க்குள் முனகிக்கொண்டார். இரண்டு கையிலும் வைத்துக்கொண்டு கதவைத் திறக்க முடியவில்லை. ‘இதுக்குத்தான் சொல்றது’ என்று தணியாத குரலோடு வசந்தி வந்து கதவைத் திறந்துவிட்டார். முற்றத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து வேலையைத் தொடர்ந்தார். அவர் வருகை தனக்குத் தெரிந்துவிட்டது என்பதை உணர்த்த லேசாக முருகி நாய் சத்தம் கொடுத்தது.

‘செரி செரி’ என்று நாய்க்குக் கேட்கும்படி சொன்னார். ‘நாய்க்குப் பதில் சொல்ற வாயி நம்மளுக்குனா மட்டும் அடச்சுக்கும்’ என்று சொல்லிக் கதவை ஓங்கிச் சாத்தினார் வசந்தி. அதற்கும் அவர் அசரவில்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த ஒருவருசமாக இப்படித்தான். அவர் எதையும் தப்பாகத்தான் செய்வார் என்பது வசந்தியின் முடிவு. கழிப்பறை விளக்கை நிறுத்தவில்லை, நாற்காலியைக் கோணலாகப் போட்டுவிடுகிறார், தேநீர் குடித்த டம்ளர் அதே இடத்தில் காய்ந்து கிடக்கிறது, ஈரத்துண்டைப் படுக்கையின் மேல் போடுகிறார் என்று எத்தனையோ புகார்கள்.

இவற்றை எல்லாம் பணியில் இருந்தபோதும் இப்படித்தான் செய்தார். அப்போதெல்லாம் புகார் வந்த மாதிரி தெரியவில்லை. வேலை முசுவில் கவனிக்காமல் இருந்துவிட்டோமோ என்றும் தோன்றும். இப்போது வீட்டிலேயே இருப்பதால், வசந்தியின் சொற்கள் ஒலித்துக்கொண்டேயிருப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்றும் நினைத்திருக்கிறார். மனம் நோகும்படி இந்தப் பேச்சு மிகும் நாளில் தூக்கம் வராது.  நடைவழியில் நாயைக் கொஞ்ச நேரம் ஏதாவது செடியில் கட்டிவிட்டு அதன் எதிரே உட்கார்ந்து தீவிரமாக யோசிப்பார். ஏதேதோ குழம்பி ஒரே முடிவை வந்தடைவார்.

‘வசந்தியின் அதிகாரம் நிலவும் இடம் வீடு. அதைக் காட்டுவதற்காக ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். கண்டுகொள்ளாமல் புன்னகைத்தபடி கடந்துவிட வேண்டும்’ என்பதுதான் அந்த முடிவு. ஆனால் வீட்டுக்கு வந்து வசந்தியின் சொல் கேட்டதும் சுள்ளென்று கோபம் ஏறும். அலுவலகத்தில் எத்தனையோ அதிகாரிகளின் முன் கோபத்தை அடக்கியாளும் பயிற்சி இருந்ததால் அதை இப்போதும் கையாள ஆரம்பித்தார். ஓய்வுக்குப் பிறகு யாருடைய அதிகாரத்தின் முன்னும் அடிபணிந்துபோக வேண்டியதில்லை என்றுதான் எண்ணியிருந்தார். மனைவியின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. சிலசமயம் வீட்டிலிருக்கிறோமா அலுவலகத்தில் இருக்கிறோமா எனக் குழப்பம் வந்துவிடும்.

ஒற்றைச் சொல் கவனத்தைத் திருப்பி எதையெதையோ கிளப்பிவிடுகிறது. அப்படி ஆகக்கூடாது என்று சொல்லிக் கொண்டாலும் மனப்பேய் கேட்பதில்லை. தலையைச் சிலிர்த்துக்கொண்டு தேநீரை உறிஞ்சினார். மிதமான சூடும் ஏலக்காய் வாசனையும் நாவில் ஊற எல்லாம் மறந்தது போலிருந்தது. செய்தித்தாளை டீப்பாய்மீது வைத்துவிட்டுத் தேநீர்ச் சுவையில் மிதந்துகொண்டிருந்தபோது உள்ளிருந்து செல்பேசி ஒலித்தது. நாவிலிருந்து விடுபட்டுப் போய்ச் செல்பேசியை எடுக்கத் தோன்றவில்லை.

‘போனு அடிக்கறதுகூடத் தெரியாத ஓசன ஓடுதா?’ என்றபடி பேசியை எடுத்து வந்து அவர் முன்னால் வைத்துவிட்டுப் போனார் வசந்தி. வீட்டுக்குள் எங்கிருந்தாலும் மனைவியின் கவனம் முழுக்கத் தன்மீது தான் இருக்கிறது என்பது அவருக்கு உவப்பாக இல்லை. குனிந்தபடி யாருடைய அழைப்பு என்று பார்த்தார். ‘சாமிநாதன்’ என்று பெயர் காட்டியது. பக்கத்திலிருக்கும் முல்லை நகரில்தான் சாமிநாதன் வீடு. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தவர்கள். அடாபுடா போட்டுப் பேசிக் கொள்ளும் அளவு நெடுநாள் நண்பர்கள். இரண்டு மாத இடைவெளியில் இருவரும் ஓய்வு பெற்றார்கள். காலை நடையின் போது பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்தார். இப்போது எதற்கு அழைக்கிறான்? யோசனையோடு எடுத்து ‘சொல்லு சாமி’ என்றார்.

‘முருகு… நம்ம சி.இ. உன் வீட்டுக்கு வர்றாரு’ என்றார் சாமிநாதன்.

முருகேசுக்குப் புரியாமல் ‘நாம ரிட்டயர்டு ஆயிட்டம்டா. இப்ப எந்த சி.இ. வர்றாரு’ என்று கேலியாகச் சொன்னார்.

‘சிரிச்சுட்டன் சிரிச்சுட்டன். நம்ம மதியரசு சி.இ. இல்ல, அவருதான். கல்யாணப் பத்திரிக கொண்டுக்கிட்டு வர்றாரு. நாந்தான் வீட்டுக்கு வழி சொல்லி உட்ருக்கறன். பக்கத்துல இன்னொரு ஊட்டுக்குப் போயிட்டுக் கால்மணி நேரத்துல அங்க வருவாரு’ என்று விளக்கமாகச் சாமிநாதன் சொன்னார்.

முருகேசு பரபரப்பானார். ‘ஏ… பிள்ள’ என்று மனைவியை விளித்துக்கொண்டு உள்ளே ஓடினார்.  ‘சி.இ. பத்திரிக கொண்டுக்கிட்டு வர்றாராமா’ என்றார் சத்தமாக.

‘வரட்டுமே. ஆன மேல வர்றாரா, குதிர மேல வர்றாரா?’ என்று சாவகாசமாகக் கேட்டார் வசந்தி.

‘உனக்கென்ன தெரியும் அவரப் பத்தி’ என்றபடி அவர்கள் வந்ததும் என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். சமையலறைக்குள் ஓடித் தண்ணீர் கொடுக்கச் சொம்பைத் தேடி எடுத்தார். காலை நேரத்தில் ஏதேனும் நொறுக்குத்தீனி தின்பாரா? பிஸ்கட் தரலாம். அவருக்குக் காப்பித்தான் பிடிக்கும்.

‘காப்பித்தூள் இருக்குதா?’

‘அதெல்லாம் இருக்குது. எதுக்கு இப்பிடிப் பதர்றீங்க?  யாரு அவ்வளவு பெரிய சி இ?’

மனைவிக்கு எப்படிச் சொல்லி அவரை அடையாளப்படுத்துவது என்று யோசித்தார்.

‘எனக்கு மெமோ குடுக்கறமின்னு சொன்னாரே, அவருதான்?’

‘அவரா? அப்படிக் கஷ்டப்படுத்துன அந்த ஆளு வர்றதுக்கா இப்படிப் பறக்கறீங்க?’

‘அதெல்லாம் அப்ப. இப்பவும் அதயே நெனச்சுக்கிட்டே இருக்க முடியுமா?’

‘மறந்திருமா?’

‘மறக்காதுதான். ஆனால் மங்கிப் போயிரும்.’

‘காயம் ஆறுனாலும் வடுவு இருக்குமே.’

‘வடுவ எப்பவுமா பாத்துக்கிட்டு இருக்கறம். எப்பவாச்சும் கண்ணு அதுமேல பதிஞ்சா நெனப்பு வரும். அவ்வளவுதான?’

‘இப்ப எதுக்கு வர்றாராம்?’

‘ரிட்டயர்டு ஆகி நாலஞ்சு வருசமாயிருச்சு. இப்பத்தான் பிள்ளக்கிக் கலியாணம் பண்றாராட்டம் இருக்குது. நம்மள நெனப்பு வெச்சிக்கிட்டு நல்ல காரியமா வர்றாரு. நாமளும்  நல்லதத்தான் பேசோணும்.’

‘செரி. பேசுங்க பேசுங்க. என்ன, தண்ணி குடுத்து ஒருகாப்பி வெச்சாப் போதுமில்ல. நான் பாத்துக்கறன். நீங்க போங்க’ என்று வசந்தி சாதாரணமாகச் சொன்னார்.

என்றாலும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அறைக்குள் போய் லுங்கியை மாற்றிப் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டார். வரவேற்பறைப் பெரிய சோபா மேல் துவைத்த துணிகள் குவியலாகக் கிடந்தன. இப்படிப் போட்டு இரண்டு மூன்று நாட்கள் கிடக்கும். அப்புறம் நல்ல நாள், நேரம் பார்த்து மடிக்கிற வேலை நடக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ‘இந்தத் துணியெல்லாம் எங்க போடறது?’ என்று கேட்டார். குரலில் இருந்த சத்தம் எரிச்சலைக் காட்டிவிட்டது போல. வசந்தி உள்ளிருந்து வேகமாக வந்து துணிகளை அள்ளினார்.

‘ஏன் அந்த சி.இ. ஊட்டுல துணியே தொவைக்க மாட்டாங்களா?’ என்று அள்ளிக்கொண்டு படுக்கையில் போடுவதற்காக உள்ளே போனார்.

‘தொவைப்பாங்க. ஆனா இப்படிப் போட்டு வெக்க மாட்டாங்க’ என்று சொல்ல நினைத்து அடக்கிக்கொண்டார். யார் கண்டார்கள்? அவர்கள் வீட்டிலும் இதுதான் நடக்குமோ என்னவோ. அப்படி எதுவும் சொல்லிவிட்டால் ‘நீங்கதான் மடிச்சு வெக்கறது’ என்று பதில் வரும். ‘நேரம் இருக்கறப்பத்தான் மடிக்க முடியும். அதுவெரைக்கும் எங்க போட்டு வெக்கறது? எடம் சொல்லுங்க’ என்று கேள்வி எழும். ஒன்றைச் சொன்னால் அதற்கு எப்படியெல்லாம் மனைவியிடம் இருந்து எதிர்வினை வரும் என்பதை இந்த ஓராண்டில் நன்றாகக் கற்றுக்கொண்டார். அலுவலக நடைமுறை தெரிந்த அளவு வீட்டு நடைமுறை தெரியாமல் இத்தனை காலம் இருந்திருக்கிறோமே என்று தோன்றும். காலையில் புறப்பட்டால் வீடு வந்து சேர இரவு எட்டுமணி, ஒன்பது மணிகூட ஆகிவிடும். வீட்டு விஷயங்கள் அவ்வளவாக மனதில் பதியவில்லை.

துணிகள் போன பிறகு வரவேற்பறை முழுவதிலும் கண்ணோட்டினார்.  எல்லாம் அதனதன் இடத்தில் ஒழுங்காகத்தான் இருந்தன. பிள்ளைகள் இருவரும் வெளியூர் போய்விட்ட பிறகு வீடு வசந்தியின் ஒழுங்குக்குள் வந்துவிட்டது. எல்லாம் ஆடாமல் அசையாமல் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். என்றாலும் சிலவற்றைப் பேருக்கு அப்படியும் இப்படியும் நகர்த்தினார். வசந்தியின் குரல் எழும் முன் வெளியே வந்தார். முற்றத்தை ஒழுங்குபடுத்தினார். சுற்றுச்சுவர் கடந்து தெருவில் பார்வை அலைபாய்ந்தது. நாற்காலி நுனியில் உட்கார்ந்தார். ஒருநிமிடம்கூட உட்கார்ந்திருக்க முடியவில்லை. வீட்டுக்கு ஒருவர் வருகிறார் என்றால் ஏதேதோ செய்யவேண்டியிருக்கிறது. அவர்களுக்கு முன்னால் ஒழுங்கோடு இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளத்தான் இதையெல்லாம் செய்கிறோமோ? நிலைகொள்ள முடியவில்லை.

மீண்டும் உள்ளே போய் சமையலறைக்குள் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தார். பால் எடுத்துக் குண்டாவில் வைத்திருப்பது தெரிந்தது. காப்பி போட்டு வைத்துவிடச் சொல்லலாமா என்று நினைத்தார். சூடு ஆறிவிடும் என்பார் வசந்தி. சி.இ. எதுவும் வேண்டாம் என்றுகூடச் சொல்லலாம். அழைப்பிதழ் கொடுக்கச் செல்பவர் எத்தனை வீட்டில் குடிக்க முடியும்? மகள் திருமணத்திற்கு அழைப்புக் கொடுக்கப் போனபோது அவரும் வசந்தியும் ‘நாங்க டீ காப்பி குடிக்கறதில்ல’ என்றே எல்லோரிடமும் பொய் சொல்லும்படி ஆயிற்று. போகுமிடமெல்லாம் ஒரே மாதிரிதான். முதலில் சொம்புத் தண்ணீர் வரும். அதில் ஒருமிடறு குடித்துவிட்டுக் கொடுத்துவிடலாம். அடுத்துத் தேநீர் வரும். அதைக் குடிக்காமல் வைக்க முடியாது. பெரும்பாலான வீடுகளில் தேநீர் நன்றாகப் போடுவதில்லை.  ‘வேண்டாம்’ என்று சொன்னால் விடமாட்டார்கள். ‘குடிப்பதில்லை’ என்று முதலிலேயே சொல்லிவிட்டால் பிரச்சினையில்லை.

கொஞ்சம் நிதானத்திற்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். பார்வை தெருவுக்கும் உள்ளுக்கும் அலைந்தது. முருகேசு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். கடைசிப் பத்து வருசங்கள் கண்காணிப்பாளர் பதவி. தலைமைப் பொறியாளராக மதியரசு சார் ஐந்து வருசம் ஏழு மாதம் இருந்து ஓய்வு பெற்றார். ‘யாரோடும் பிணக்குக் கொள்ளக்கூடாது’ என்பதுதான் அரசுப்பணியில் சேர்ந்த இருபத்து நான்காம் வயதிலிருந்து  தவறாமல் முருகேசு பின்பற்றிய ஒரேவிதி. அது மதியரசு சாரிடம் பலிக்கவில்லை. கூடுதல் வருமானத்திற்குக் குறைவில்லாதது பொதுப்பணித்துறை. வருமானத்தை ஒவ்வொரு பதவித் தரநிலைக்கும் ஏற்பப் பிரித்துக் கொடுத்துவிடும் ஒழுங்கு இருந்தது. மதியரசு சார் அதைப் பின்பற்றாமல் முடிந்த போதெல்லாம் முழுவதையும் அவரே வைத்துக்கொள்வார். பணத்தாசை அதிகம். அலுவலகத்திற்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

‘எல்லாத்துலயும் பங்கு வேணுமா? நாங்க சைட்டுக்குப் போய் எல்லாத்தயும் பாக்குறோம். எத்தனயோ பேருக்குப் பதில் சொல்றம். ஆபீஸ்லயே உக்கோந்துக்கிட்டு வேல செய்றவங்களுக்கு என்ன?’ என்று அவர் தர்க்கம் பேசினார்.

ஏதாவது பிரச்சினை வந்தால் பொறியாளர்கள் தப்பித்துக்கொண்டு அலுவலகத்தை மாட்டிவிடுவார்கள். அப்படி நிறைய நடந்திருக்கிறது. மதியரசு சாருக்கும் அலுவலகத்திற்கும் இடையே நடைபெற்ற பிரச்சினையில் கண்காணிப்பாளர் என்ற முறையில் முருகேசுதான் இருபக்கமும் பேச வேண்டியிருந்தது. எதையும் கொஞ்சம் தள்ளிப் போட்டால் சரியாகிவிடும் என்னும் அவர் அனுபவம் இந்த விஷயத்தில் பலிக்கவில்லை. இரண்டுக்கும் நடுவில் ரொம்ப நாள் நிற்க முடியவில்லை. ஏதாவது ஒருபக்கம் என்று முடிவு எடுக்கும் நிர்ப்பந்தம் வந்தபோது வேறு வழியில்லாமல் முருகேசு அலுவலகத்தின் பக்கம் நின்றார்.

அது மதியரசு சாருக்குப் பிடிக்கவில்லை. கோப்புகளைக் கையெழுத்திடாமல் திருப்பித் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார். தேவையில்லாத குறிப்புகளை எழுதினார். ஒப்பந்ததாரர்களிடம் முருகேசுவைக் கைகாட்டினார். அவர்கள் வந்து மேஜைக்கு எதிரில் நின்றுகொண்டு கெட்ட வார்த்தையில் ஏசினார்கள்.  ஏதோ ஒரு கோப்பில் வலிந்து தவறு கண்டுபிடித்து முருகேசுக்குக் குறிப்பாணை கொடுக்கப் போவதாகவும்  மிரட்டினார்.

வேலையில் சேர்ந்த நாளிலிருந்து முருகேசு மீது யாரும் எந்தக் குறையும் சொன்னதில்லை. தொடக்கத்தில் கூடுதல் வருமானப் பங்கில்கூட வற்புறுத்தி எதையும் கேட்க மாட்டார். இவருக்கு அடுத்த நிலையில் இருந்த சாமிநாதனிடம் பங்கிடும் பொறுப்பு இருந்தது. எந்தக் கணக்கும் கேட்காமல் அவர் கொடுப்பதை வாங்கிக்கொள்வார். வேறு யாராவது சாமிநாதன் மீது குறை சொல்வார்கள். ‘பாவப்பணத்தப் பங்குப் போடறம். அதுல என்ன கேக்கறது?’ என்று மென்மையாகச் சொல்வார். அப்படியெல்லாம் இருந்தும் மதியரசு சார் விஷயத்தில் எதுவும் பலிக்கவில்லை.

மதியரசு சார் உள்ளூரில் பெரிய சாதியைச் சேர்ந்தவர். ஒப்பந்ததாரார்களில் பெரும்பாலோர் அவருக்குச் சொந்தமாகத்தான் இருக்கும். நேரடிச் சொந்தம் இல்லை என்றாலும் ஒரே கூட்டம் என்று கண்டுபிடித்துப் பங்காளி முறை சொல்லிக்கொள்வார்கள். வேறு கூட்டம் என்றால் மாமன் மச்சான் முறை என்பார்கள். எப்படியாவது உறவுமுறை வந்துவிடும். அரசியல் செல்வாக்கும் அவருக்கிருந்தது. அதனால்தான் அதிகம் இடமாறுதல் இல்லாமல் பக்கத்து பக்கத்து மாவட்டங்களுக்குள் பணிக்காலத்தை ஓட்ட முடிந்தது. அவர் நினைத்தால் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று முருகேசு பயந்தார். எதிலாவது மாட்டிவிட்டு வெகுதூரத்திற்கு இடமாறுதல் செய்துவிடலாம். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த சமயம். இந்த அலுவலகம் அவருக்குப் பழகிய இடம். அடுத்தடுத்தப் பதவி உயர்வுகளின்போது பக்கத்து மாவட்டங்களுக்கெல்லாம் போய் வந்தாலும் பெரும்பாலான காலம் இங்கேயே ஓடிவிட்டது.

குறிப்பாணை கொடுத்தால் விசாரணைக் குழு போடும்படி செய்யலாம். அறிக்கையை மதியரசு சார் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுத வைக்கலாம். அதன் பேரில் அவருக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தலாம். தற்காலிகப் பணிநீக்கம் வரைக்கும் போகலாம். அந்தக் காலகட்டத்தில் நெருப்பின் மேல் நிற்பது போல இருந்தது. அன்றாடம் அலுவலகம் போகவே கால் வரவில்லை. ஒவ்வொரு நாளும் என்ன பிரச்சினை வருமோ அவர் என்ன சொல்வாரோ என்று மனம் நடுங்கியது. அவர் சார்ந்திருந்த தொழிற்சங்கத் தலைவர் ‘எதுக்கய்யா இப்பிடி நடுங்கற? அவன் என்ன புடுங்கீருவானா? பாத்திருவம்’ என்று சவடால் விட்டார். தொழிற்சங்கம் காப்பாற்றிவிட்ட பலர் இருந்தாலும் பாதிக்கப்பட்ட ஆட்களே அவர் நினைவுக்கு வந்தார்கள்.

வீட்டில் ஒருமாதிரியே நடமாடினார். இரவில் தூக்கம் வராது. எழுந்து மாடிக்குப் போய் வெறுமனே வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார். சுற்றிச் சுற்றி நடப்பார். அவரைக் காணாமல் வசந்தி தேடி வந்து ஏதாவது சொல்லி அழைத்துப் போவார். மதியரசு சாரின் முறைக்கும் முகமும் வெறியேறிய கண்களும் அவரைத் துரத்திக்கொண்டேயிருந்தன. அவர் அறைக்குள் இருக்கும்போது ஒருமையிலும் பேசுவார். கத்திச் சத்தமிட்டுக் கோப்பை முகத்தில் அடிப்பார். பதில் சொல்லாமல் அப்படியே நின்றாலும் ‘மசுரு புடுங்கறதுக்கா இங்க நிக்கற? போ’ என்பார்.  ‘மசுராண்டி மாதிரி வந்துட்டான்’ என்று முருகேசுவின் காதுபடவே ஒருமுறை முணுமுணுப்பது போலச் சொன்னார். அன்றைக்கெல்லாம் அழுகையே வந்துவிட்டது. ஒருவாரம் மருத்துவ விடுப்பு கொடுத்துவிட்டு வீட்டிலிருந்தார்.

வீட்டிலும் இருப்புக்கொள்ள முடியவில்லை. யாராவது செல்பேசியில் அழைத்து அலுவலக விவரங்களைச் சொல்லிப் பதற்றத்தைக் கூட்டினார்கள். வேறு வழியே இல்லாமல் தொழிற்சங்கத்தைத் துணைக்கு அழைக்க வேண்டியானது. அவர்கள் வந்து மதியரசு சாரிடம் பேசிய பிறகுதான் அவர் கொட்டம் கொஞ்சம் குறைந்தது. அப்படியும் வாய்க்குள் முனகுவதை அவர் நிறுத்தவில்லை. காதுகளைச் செவிடாக்கிக்கொண்டார் முருகேசு. தொந்தரவு குறைந்தாலும் உள்ளடி வேலை ஏதாவது செய்வாரோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டிருந்தார். மதியரசு சார் அலுவலகம் வராமல் களத்திற்குப் போய்விடும் நாளில் மனம் குதூகலமாக இருக்கும். ஏதாவது விபத்து நடந்து அப்படியே போய்விட மாட்டாரா என்றிருக்கும். விதவிதமான விபத்து வகைகளை மனம் கற்பனை செய்யும். தன் விரல்களால் பெருநகம் வளர்த்து மதியரசு சாரின் வயிற்றைக் கிழித்து எறிவது போலக் கனவு வரும்.

அந்தக் காலத்தை எப்படிக் கடந்து வந்தோம் என்று நினைத்தால் பெருந்துயரில் மனம் ஆழ்ந்துவிடும். எதைஎதையோ செய்துதான் மீண்டு வர வேண்டியிருந்தது. மதியரசு சார் ஓய்வு பெற்றபோது கண்காணிப்பாளர் என்ற முறையில் மேடையேறிப் பேச வேண்டியிருந்தது. தனக்குத் தெரிந்த மொழியில் தேடித் தேடிப் பார்த்தும் நான்கு நல்ல வார்த்தைகள்  கிடைக்கவில்லை. பொம்மை போல மேடையேறி ‘ஓய்வுக்காலத்தில் அமைதியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று மட்டும் சொல்லி இறங்கி வந்துவிட்டார்.

அதற்குப் பின் மதியரசு சாரை அங்கங்கே சந்தித்தாலும் ஓரிரு வார்த்தைகள் நலம் விசாரிப்போடு சரி. ஒரே ஊரில் வசிப்பவர்கள் எதிர்ப்படச் சந்தர்ப்பம் அமையாமலா போகும்?  அவருடைய கடுகடு முகம் மாறி மெல்லிய புன்னகை வீசும்.  இப்போது நேராக வீடு தேடி வருகிறார். பழையவற்றை நினைத்துக்கொண்டு கவனிக்காமல் இருக்க முடியுமா? எண்ணிப் பார்த்தால் எல்லாக் கஷ்டங்களும் இப்போது கதை போலத் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் காலம் சருகாக்கிவிடுகிறது.

மனதில் ஓடியவற்றை நினைத்துப் பெருமூச்சுவிட்டார். அவர் யார், என்ன செய்தார் என்றெல்லாம் யோசிக்காமல் வீட்டுக்கு முதன்முதலாக வரும் விருந்தாளியை எப்படி வரவேற்போமோ அப்படி வரவேற்கலாம் என்று முடிவு செய்து நிதானமானார். எழுந்து போய் இரும்புக்கதவைத் திறந்து தெருவில் நின்று பார்த்தார். கடைக்கோடியில் அவர் வீடு. மூலைக்குத்து, தெற்குத் தலைவாசல் என்றெல்லாம் சொல்லிப் பலரும் ஒதுக்கிப் போன மனைதான் அவருக்குக் கிடைத்தது. அத்தனை விருப்பம் இல்லாமல்தான் வாங்கி வீடு கட்டினார். இப்போது அதன் மதிப்பே தனி. வாசலில் நின்று பார்த்தால் தெருவின் முனை வரை தெரியும். மதியரசு சார் காரில்தான் வருவார். தெருவுக்குள் எந்தக் காரும் வரவில்லை. மனித நடமாட்டம்கூட இல்லை. எல்லோரும் காலை நேரப் பரபரப்பில் வீட்டுக்குள் இருப்பார்கள்.

சற்றே நின்றுவிட்டுச் ‘சரி, வரட்டும்’ என்று கதவைச் சாத்தினார். வலப்பக்கம் நாயின் குரைப்பொலி கேட்டது. அடடா, நாயை மறந்துவிட்டோமே என்று நாக்கைக் கடித்துக்கொண்டு பதற்றத்தோடு அருகே போனார். நாய் வாங்கியபோது அதற்கெனச் சுற்றுச்சுவரை ஒட்டிய மூலையில் அட்டை வேய்ந்து உருவாக்கிய இடம். ‘நாய் வீடு’ என்று அதற்குப் பெயருமாயிற்று. அதற்குள் போய்ச் சங்கிலியை அவிழ்த்தார். இன்னொரு முறை வெளியில் அழைத்துப் போகப் போகிறார் என்று நினைத்துக் கதவை நோக்கி இழுத்தது. அதன் தூவெள்ளை நிறம் சற்று மங்கிப் போனதாகத் தோன்றியது. இன்றைக்கு மதியம் குளிக்க வைத்துவிட வேண்டும். இப்போதுதான் வரைந்து முடித்தது போல இளஞ்சிவப்பில் ஒளிரும் மூக்குநுனி லேசாகக் கருமைப்பட்டிருந்தது. வாகைக் காய்கள் போன்ற தொங்குகாதுகளோடு அது இழுத்துக் கொண்டு முன்னோடியது.

இரண்டு நாளுக்கு ஒருமுறை குளிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதுதான். சோம்பலால் நாளை நாளை என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வாரமாகி விடுகிறது.  ‘டேய்’ என்று அதட்டி அவன் வேகத்தைக் குறைத்தார். எங்கே கட்டுவது என்று யோசித்தார். கடைசி மனை என்பதால் செவ்வகமாக இல்லாமல் ஒருபுறம் வால் போல இழுத்துக்கொண்டு ஓடிற்று. வீட்டைச் செவ்வக அமைப்புக்குள் கட்டியதும் தோட்டம் போட வால் பயன்பட்டது. வசந்திக்கு விருப்பமான மல்லிகைச் செடிகளும் கொடிகளும் இருந்தன. ஒரே ஒரு தென்னை. மொந்தன் வாழை ஒருகுத்து. சில மூலிகைச் செடிகள். ஒருநாளுக்கு அரைமணி நேரம் அதில் வேலை செய்யலாம்.

பக்கச் சந்தில் நாயை இழுத்துக் கொண்டுபோய் வீட்டுக்குப் பின்னால் ஆளுயரம் நின்றிருந்த சீதாப்பழச் செடியில் சங்கிலியைப் பிணைத்தார். அது அவரை நேராக நோக்கி ‘லொள்’ என்று ஒற்றை ஒலியில் குரைத்தது. ‘ஏன்?’ என்று கேட்கிறது.  ‘ என்னடா? என்ன? பெரிய இவனா நீ? நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லோணுமா? சத்தம் போடாத கொஞ்ச நேரம் இங்கயே இருடா’ என்று திட்டி அமைதிப்படுத்தினார். கண்களைச் சுருக்கிக்கொண்டு அவ்விடத்திலேயே  அமர்ந்து அமைதியானது. திறந்த வாயும் தொங்கிய நாக்கும் கண்டு ஓர் அடி வைத்துவிட்டு முன்பக்கம் போனார். இந்த இடைவெளியில் மதியரசு சார் வந்திருப்பாரோ?

அவர் போனபோது வசந்தி வெளியே வந்து நின்றிருந்தார். ‘என்னாச்சு?’ என்றார். ‘ஒன்னுமில்ல, இந்த நாயி கத்திக்கிட்டே இருந்தான். அதான் பொறத்தாண்ட கொண்டோயிக் கட்டிட்டு வந்தன்’ என்று சொல்லவும் தெருவில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வேகமாக ஓடிப் போய் இரும்புக்கதவைத் திறந்தார். காரின் ஒருபக்கக் கதவில் அவரும் இன்னொரு பக்கக் கதவில் அவர் மனைவியும் இறங்கினர். மனைவியும் வருவார் என்று முருகேசு எதிர்பார்க்கவில்லை.

‘சார் வாங்க’ என்று கும்பிட்டுக்கொண்டு தெருவுக்கே போனார். அவர் உடல் சற்றே கூனியது போலத் தெரிந்தது.

‘எப்படிய்யா இருக்கற?’ என்று விசாரித்துக்கொண்டே முருகேசுவைப் பின் தொடர்ந்து மதியரசு சார் உள்ளே நுழைந்தார்.

சற்றே ஒதுங்கி அவர் மனைவியைப் பார்த்து ‘உள்ள வாங்கம்மா’ என்று சொல்லி இரும்புக்கதவைச் சாத்தினார். மதியரசு சார் முடிக்குச் சாயம் பூசித் தினச்சவரம் செய்து இன்னும் இளமையாகத் தெரிந்தார். பணியில் இருந்த போதான பழக்கம் அப்படியே தொடர்கிறது போல. அவரை விடவும் வயது கூடியவராய் மனைவியின் தோற்றம் இருந்தது.

அதற்குள் வசந்தி வரவேற்று வீட்டுக்குள்ளேயே அழைத்துப் போய்விட்டார். சொம்புத் தண்ணீர் வந்தது. வாங்கி ஒவ்வொரு மிடறு பருகிவிட்டு ‘வேற எதும் வேண்டாம்’ என்று கையை ஆட்டியபடி மதியரசு சார் சொன்னார்.

‘சாரு காப்பிதான் குடிப்பாரு. கொஞ்சம் போட்டெடுத்தா’ என்றார் முருகேசு.

‘இன்னம் நெனப்பிருக்குது’ என்று சத்தமாகச் சிரித்தார் மதியரசு சார்.

முருகேசு அடக்கப் புன்னகையோடு நின்றார்.

‘இல்ல இல்ல, அதெல்லாம் எதும் வேண்டாம். ஒருநாளைக்கி எத்தன காப்பி குடிக்கறது? வயசாகுதில்ல’ என்று சொன்ன அவர் மனைவி எழுந்து நின்றார். உடனே மதியரசு சாரும் எழுந்து பையிலிருந்து பத்திரிகையை எடுத்து நீட்டினார். இருவரும் எதிரில் வந்து நின்று வாங்கிக் கொண்டனர்.

‘பிள்ளைக்குக் கல்யாணம். கார்த்திகை மாசம் இருபதாந் தேதி. டிசம்பர் அஞ்சு. குடும்பத்தோட வந்திரணும்’ என்று மதியரசு சாரின் மனைவி சொன்னார்.

‘சார் வீட்டுக் கல்யாணத்துக்கு வராத இருப்பமா? வந்திர்றம்’ என்று முகமெல்லாம் சிரிக்க முருகேசு சொன்னார்.

‘காப்பி குடிக்காட்டிப் போவுது. டிபன் சாப்படற நேரமாச்சுல்ல. ரண்டு தோசை சாப்பிட்டுட்டுப் போங்க. சட்னி எல்லாம் ரெடியாத்தான் இருக்குது. தோச ஊத்துனாப் போதும்’ என்று வசந்தி மிகுந்த உபசரிப்போடு சொன்னார். மனைவி அப்படிச் சொன்னதில் முருகேசுக்கு மகிழ்ச்சி.

‘பத்திரிக குடுக்கப் போற எடத்துல எங்கனாச்சும் சாப்பிடுவீங்கல்ல. எவ்வளவு நேரமாகுது? ரண்டு தோச சாப்பிடலாமே’ என்று முருகேசும் உபசாரத்தைத் தொடர்ந்தார்.

சாப்பிட இன்னும் நேரமாகும் என்று சொல்லி விடைபெற்று வெளியே வந்தார்கள். பின்னால் நடந்த முருகேசு சட்டென்று பக்கவாட்டில் ஓடிக் கதவைத் திறக்கப் போனார். அப்போது வீட்டுக்குப் பின்னாலிருந்து சங்கிலி இழுபடக் குரைத்துக்கொண்டே நாய் ஓடி வந்தது. புதியவர்களைப் பார்த்ததும் வேகமாகக் குரைத்தது. எங்கே பாய்ந்துவிடுமோ என்று பயந்து இருவரும் பார்த்தார்கள். அவர்கள் பயத்தை உணர்ந்து ‘சும்மா ஒலைக்கறதுதான்’ என்று சொல்லியபடி அதன் குரைப்பினூடே ‘டேய் சும்மா இருடா’ என்று அதட்டினார் வசந்தி.

‘வெள்ள நாயி… அம்சமா இருக்குது. பிள்ள கல்யாணம் முடிஞ்சப்பறம் இதுமாதிரிதான் ஒன்னு வாங்கோணும்’ என்று சொன்ன மதியரசு சாரின் மனைவி நாயை ஆசையோடு பார்த்தார்.

சங்கிலியைக் கையில் பற்றியதும் குரைப்பொலி அடங்கிற்று.  ‘சமத்துப் பையன்’ என்று கையைத் தூரத்திலிருந்தே நெட்டி முறித்துக் கொஞ்சினார் மதியரசு சாரின் மனைவி.

‘எங்க பையந்தான் வாங்கியாந்தான். அப்பவே 1500’ என்று பெருமையோடு வசந்தி சொன்னார்.

‘இப்பெல்லாம் மூவாயிரம் இருக்குமா?’

‘இருக்கும். இங்கயே கெடைக்குது. சொல்லி வெக்கோணும்.’

அருகில் வந்த மதியரசு சாரின் மனைவி ‘டேய்… உம் பேரு என்ன?’ என்று நாயைப் பார்த்துக் கேட்டார். அது ‘லொள்’ என்று ஒற்றைக் குரைப்பொலியைப் பதிலாகக் கொடுத்தது.

‘அவன் பேரு மதி. அதத்தான் அப்பிடிச் சொல்றான்’ என்றார் வசந்தி.

‘என்ன பேரு?’

‘மதி.’

‘ஏங்க… இந்த நாய் பேரு மதியாமாங்க’ என்று சொல்லிக்கொண்டே கதவை நோக்கிப் போனார் மதியரசு சாரின் மனைவி.

இரும்புக் கதவை நன்றாகத் திறந்தார் முருகேசு.

—–