முதற்குறிப்புகள்
இலங்கை மக்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்துள்ளனர். புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கதான் புதிதேயன்றி சவால்கள் பழையனதான். ஆனால் இந்தப் புதிய ஜனாதிபதியின் தெரிவின் முக்கியத்துவம் ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க பொருளாதாரத்தை எவ்வாறு வழிநடத்துவார், குறிப்பாக அந்நியக் கடன்களையும் சர்வதேச நாணய நிதியத்தையும் (ஐ.எம்.எஃப்.) எவ்வாறு கையாளப் போகிறார் என்பதே அவரதும் இலங்கையர்களினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பல வகைகளில் முக்கியமானது. முதலாவது, இலங்கையர்கள் தாம் இதற்குமுன் தேர்தெடுத்த ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ஷவை வெகுஜன எதிர்ப்பின் மூலம் வெளியேற்றத்தின் பின்னர் தமது விருப்புக்குரியவரைத் தெரிவதற்கான வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் கழித்துப் பெற்றமை முக்கியமானது. இரண்டாவது, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக எந்தவொரு வேட்பாளரும் தேவையான 50%ஐப் பெறவில்லை. எனவே இரண்டாம் சுற்று எண்ணப்பட்டு வெற்றியாளர் தெரிவானார். மூன்றாவது, வெற்றியாளர் இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளைச் சேராதவர். குறிப்பாக இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய இரண்டு பெரிய கட்சிகளைச் சேராத ஒரு வேட்பாளரை இலங்கையர்கள் முதன்முறையாகத் தேர்ந்தெடுத்தனர். நான்காவது, ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர், திஸாநாயக்க மூன்று அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமித்தார். இதில் கல்வியாளரான கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை மக்கள் அனுரகுமார மீது பெருத்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். இதன் மையப்புள்ளி தங்கள் அன்றாட வாழ்வின் பொருளாதா நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என்பதே. சுருங்கச் சொல்லின் இலங்கையின் பொருளாதார மீட்சியைச் சாத்தியப்படுத்துவதனூடு மக்களின் பொருளாதார வாழ்வு மேம்பட வழிசெய்வார் என்ற எதிர்பார்ப்பு. இது இரண்டு அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. முதலாவது, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் ஐ.எம்.எஃப்.வுடன் எட்டப்பட்ட உடன்பாடு தொடர்பிலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? தேர்தலில் மேடையில் முழங்கிய கதையாடல்களை நடைமுறையில் சாத்தியப்படுத்த இயலுமா? இரண்டாவது, இலங்கையர்கள் எதிர்பார்க்கின்ற நிவாரணங்களை வழங்குவதற்கு நாட்டின் பொருளாதார நிலை இடமளிக்குமா? குறிப்பாக, மானியங்கள், நிவாரணங்கள், விலைக்குறைப்புகள், உள்ளுர் உற்பத்திகளுக்கான ஆதரவு, ஆகியவற்றை வழங்கக் கூடிய நிலையில் நாட்டின் திறைசேரி இருக்கிறதா? சுருக்கமாக இலங்கை நன்கறியப்பட்ட சமூகநல அரசு என்ற பாத்திரத்தை – இலங்கையர்கள் எதிர்பார்க்கிறபடி – மீண்டும் வகிக்கும் வகையிலான ஆட்சியை வழங்க முடியுமா?
இலங்கையின் பொருளாதாரம்தான் அனுரகுமாரவின் தலையின் மீது கத்தி போல் தொங்கிக்கொண்டிருக்கிறது. இன்று அனுரகுமாரவின் வருகையைக் கொண்டாடுபவர்கள் கவனிக்கத் தவறுகிற விடயம் இது. புரட்சிகர மாற்றங்களை அவர் மேற்கொண்டு எல்லாவற்றையும் வழிக்குக்கொண்டுவருவார் என்று அவரது ஆதரவாளர்களும் புதிதாய் முளைத்த அவரது பிரச்சாரர்களும் சொல்லிய வண்ணமுள்ளனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் அதனோடு பின்னிப் பிணைந்த நாட்டின் அபிவிருத்தியும் மிகுந்த சிக்கலான தன்மையுடையவை.
அந்நியக் கடனும் ஐ.எம்.எஃப்.வும்
2022இல் இலங்கையால் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. சுமார் 78 பில்லியன் டாலர் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்தியது, இது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது. இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாகக் கடன்கள், ஐ.எம்.எஃப்.வின் கடனுதவி ஆகியவற்றின் வழி நாடு மீண்டது. இப்போது நாட்டின் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் இல்லை என்றாலும், பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது. புதிய ஜனாதிபதி எதிர்கொள்ளும் ஒரு முக்கியச் சவால், ஐ.எம்.எஃப்.விடம் பெற்ற 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான பிணை எடுப்பு கடனுக்கான நிபந்தனைகளை நிர்வகிப்பது ஆகும். 2023 இல் – மக்களால் தெரியப்படாத – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது நிர்வாகத்தினால் கணிசமான சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த கடன் பேரம் பேசப்பட்டது. இது நாட்டுக்கு மிகவும் பாதகமான நிபந்தனைகளுடன் வந்தபோதும் அப்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடுமையான சிக்கன நடவடிக்கைகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அதிக விலைகள் மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு ஆகியவை இதில் அடங்கும். ஐ.எம்.எஃப். கடன் ஏற்படுத்தப் போகும் பாதிப்பை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளக்கிவிடலாம். அடுத்த 16 ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் ஓய்வூதிய நிதி தனது மதிப்பில் பாதியை இழக்கப் போகிறது.
ஐ.எம்.எஃப். உடன்படிக்கையானது இலங்கையின் கடனாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது, அவர்கள் நாட்டின் நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடனில் 37% ஐக் கொண்டுள்ளதோடு, அதற்குப் பதிலாகத் தொழிலாள வர்க்க இலங்கையர்கள்மீது சுமையை மாற்றியுள்ளது. செலவுக் குறைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள சிரமம் பொதுமக்களின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. உதாரணமாக, கடந்த மார்ச் மாதம், இலங்கை முழுவதும் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் புகையிரத் துறையில்; உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 12.5 பில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டிய சர்வதேசப் பத்திரதாரர்களுடன் நாட்டின் சில வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க ஒரு வரைவு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இறுதிச் செயல்களில் ஒன்றாகும். நாட்டின் பொருளாதார மீட்சியைக் கண்காணிக்கும் புதிய பத்திரங்களை வெளியிடுவது இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்தப் பத்திரங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பிணைக்கப்பட்டு, நாட்டின் கடன் வழங்குவோருக்கு இனிமையாக இருக்கும். உண்மை யாதெனில் இந்தப் பத்திரங்கள், தசாப்தத்தின் இறுதியில் இலங்கையை மீண்டும் கடன் பிரச்சனையில் தள்ளக்கூடும்.
புதிய ஜனாதிபதி முதலில் பத்திரப்பதிவுதாரர்களுடனான இந்த உடன்படிக்கைக்கு அவசரமாக உடன்படுவதைத் தவிர்க்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதவியேற்ற ஒரு வாரத்திலேயே ஏற்கெனவே ஐ.எம்.எஃப்.உடன் உடன்பட்ட விடயங்களைத் தனது அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இது பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் அவர் மீது அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் சர்வதேச நாணய நிதியம் வகிக்கும் முக்கிய பங்கை அனுரகுமார ஒப்புக்கொண்டார். மேலும் ஐ.எம்.எஃப். வழங்கும் நிதி உதவியின் அளவுருக்கள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஐ.எம்.எஃப். உடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் சொன்னார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி புதிய ஜனாதிபதியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவல்லது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மேயில் வன்முறையான முடிவை எட்டியது. மே 2009 க்குப் பிறகு தொடங்கிய இலங்கையின் போருக்குப் பிந்தைய நிதிமயமாக்கல் வளர்ச்சிக் கொள்கைகள் உலகளாவிய நிதி நெருக்கடியுடன் ஒத்துப்போனது. மேற்கத்திய நெருக்கடியின் விளைவால் பெரும் மூலதனம் உலகளாவிய தெற்கு என அறியப்படுகின்ற மூன்றாமுலக நாடுகளுக்கு வந்தது. ஜூலை 2009 மற்றும் ஜூன் 2016 ஆகிய காலப்பகுதிகளில் ஐ.எம்.எஃப்.உடன் இலங்கை இரண்டு உடன்படிக்கைகளை மேற்கொண்டது. அது வெளிநாட்டு கடன்களை குறிப்பாக சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களின் கொள்வனவை ஊக்குவித்தன. இலங்கை வங்குரோத்தானமைக்குப் பிரதான காரணம் இந்த சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைக் கொள்வனவு செய்தமையே.
கோவிட்-க்கு பிந்தைய காலத்தில் கடனை மறுசீரமைத்த முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அதன் சிக்கலான கடனாளர் சுயவிவரத்தைப் பொறுத்தவரை, இது சர்வதேச சமூகத்திற்கும் தற்போதைய உலகளாவிய கடன் மறுசீரமைப்பு ஆட்சிக்கும் ஒரு முன்னுதாரமாக உள்ளது. சர்வதேச அமைப்புகள, இருதரப்பு நன்கொடையாளர்கள் மற்றும் வணிகக் கடன் வழங்குபவர்களின் பல்வேறு நலன்களைக் கருத்தில் கொண்டு கடன் மறுசீரமைப்பு என்பது சிரமங்களால் நிறைந்துள்ளது.
இருதரப்பு நன்கொடையாளர்களின் இரு முக்கிய முகாம்களுக்கு இடையே ஒரு பக்கம் சீனாவும், மறுபுறம் இந்தியாவுடன் ஜப்பானும், குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் இலங்கையைக் கட்டுப்படுத்தும் புவிசார் அரசியல் போட்டியைக் கருத்தில்கொண்டு, சிறிய ஒருங்கிணைப்பு உள்ளது. இலங்கையின் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை வைத்திருக்கும் முக்கிய முதலீட்டு நிதிகள் உட்பட வணிக கடன் வழங்குபவர்கள் இலங்கை நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமானதாய் ஆக்கக் கடுமையாக பேரம் பேசுகிறார்கள்.
கடன் மறுசீரமைப்புகளில், ஐ.எம்.எவ் பாரம்பரியமாக ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிக்கிறது. ஆனால், ஒரு நடுநிலை நடுவராக இருப்பதற்குப் பதிலாக, இலங்கைக்கான ஐ.எம்.எவ் வேலைத்திட்டமானது, கடந்தகால கடன் வழங்குநர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது: குறைந்தபட்ச கடன் நிவாரணம் வழங்குவதன் மூலம், கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு அதிக அளவிலான கடன் சேவையை உறுதிசெய்து, இறுதியில் இலங்கையை மீண்டும் வணிகக் கடன் பெறும் பாதையில் தள்ளுவதையே நோக்காகக் கொண்டுள்ளது.
மார்ச் 2023 இல் ஐ.எம்.எவ் வேலைத்திட்டம் வந்தபோது, இலங்கை முதன்மையான வரவு செலவுத் திட்ட உபரியை அடைய வேண்டும் – அதாவது அதன் வருமானம் அதன் செலவினங்களைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்பது மத்திய நிபந்தனைகளில் ஒன்றாகும். ஏற்கனவே 2024 இல், ஐ.எம்.எஃப் அளவுகோலைப் பூர்த்தி செய்ய இலங்கைக்கு முதன்மை வரவு செலவுத் திட்ட உபரி தேவைப்படுகிறது. 2021 இல் 5.7% என்ற முதன்மை பட்ஜெட் பற்றாக்குறையிலிருந்து முதன்மை பட்ஜெட் உபரியை அடைவதற்கு அரசாங்கச்செலவினங்கள் குறைந்தபட்சமாக்க் குறைக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வருமான ஓட்டங்களுக்கான அடிப்படையை ஒரே நேரத்தில் இழந்தால், அதிக அளவு வருவாயை உருவாக்குவது சாத்தியமற்றது.
செலவினங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, முடிந்தவரை முற்போக்கான முறையில் வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். எவ்வாறாயினும், தற்போது, ஏற்கெனவே குறைந்த பொதுச் செலவினங்களை மேலும் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. வருவாய் சீர்திருத்தங்கள் செய்யப்படும் அளவிற்கு, இது மிகவும் பிற்போக்குத்தனமான முறையில் செய்யப்படுகிறது. இந்தப் பின்னணியிலேயே புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளார்.
அபிவிருத்தியின் சாத்தியங்கள்
இலங்கை மிக நீண்டகாலமாக ஒரு சமூகநல அரசாக நிலைபெற்று வந்துள்ளது. 1977இல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை இலங்கையின் சமூகநல வேர்களை அரித்தாலும் இன்றும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என அடிப்படையான சமூக நலன்களை இலங்கை தக்கவைத்துள்ளது. இவற்றை ஐ.எம்.எவ் கோரி நிற்கும் கட்டமைப்பு மாற்றங்கள் சவாலுக்குட்படுத்துகின்றன. புதிய ஜனாதிபதி மீதான “இடதுசாரி” பிம்பம், இவர் மக்களின் சமூக நலன்களைத் தக்கவைப்பார். நிவாரணங்கள், விலைக்குறைப்புகள், வரிச்சலுகைகள் என்பன கிடைக்கும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாகும். ஆனால் அதற்கான பொருளாதாரப் பலம் நாட்டில் இல்லை.
இதேவேளை நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பான்மை இலங்கையரிடம் உண்டு. இவ்விடத்தில் இலங்கையில் வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம் குறித்துக் கவனம் செலுத்துவது தவிர்க்கவியலாதது. ஆசியா முழுவதும், ‘வளர்ச்சி’ என்பது விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்ததாக மாறியுள்ளது, இது முக்கியமாக பெரிய அளவிலான, தனியார் முதலீடுகள், இயற்கை வளங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் புதிய எல்லைகளில் சந்தைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் அடையப்பட வேண்டும். அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்பட்ட வளர்ச்சி மாதிரியானது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தாராளமயமாக்கல், நிதியாக்கம், பெருநிறுவன நண்பர்கள் ஒழுங்குமுறை மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது. மூன்றாமுலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் பெருகிய முறையில் கார்ப்பரேட் முதலீட்டு-நட்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன, மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஊக்குவிப்புகளை வழங்குகின்றன. இந்தத் தாராளமய வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழல் முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும் அதே வேளையில், இது மக்களுக்குப் பல பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள உள்ளூர் மக்கள் நிலம், நீர், காடுகள் மற்றும் பிற இயற்கை வளங்களின் அரிப்பு மற்றும் கைப்பற்றுதல் ஆகிய இரண்டையும் அனுபவித்து வருகின்றனர். இது தொழில்துறை விவசாயம், பிரித்தெடுக்கும் தொழில், பெரிய உள்கட்டமைப்பு, சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் ஏற்றம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் தூண்டப்படுகிறது. இதனால் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை, முறைசாராமயமாக்கல், அபாயகரமான வேலை நிலைமைகள், வறுமை ஊதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு இல்லாமை ஆகியவற்றைக் கடந்த இருபதாண்டுகளில் இலங்கை கண்டுள்ளது. இதற்கு எதிரான பிரச்சாரத்தின் மூலமே அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியுள்ளார். எனவே இவற்றை அவர் சரிசெய்தாக வேண்டும். ஆனால் இலங்கையின் பொருளாதாரக் குறிகாட்டிகள் அதற்கு வாய்ப்பானவையாக இல்லை.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் ஆண்டு 94 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து 2022இல் 76 பில்லியனாகக் குறைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு நிலைக்கு மீள்வதற்கு குறைந்தது இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்பதே கணிப்பாகும். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையிலேயே இருக்கும் என்பது உறுதி. எனவே புதிய ஜனாதிபதி எந்த மாயஜாலத்தைச் செய்ய நினைத்தாலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பொருளாதார மேம்பாடு என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை.
இலங்கையின் நெருக்கடியின் மையப்புள்ளி அந்நியச் செலாவணி பற்றியதாகும். நாட்டின் பிரதான கடனாளர் குழுக்களுக்கான கடன் சேவையை இடைநிறுத்துவதன் மூலம், வருடாந்திர வட்டி மற்றும் முதிர்வுக் கடன் கொடுப்பனவுகள் அதே வட்டி விகிதத்தில் பிரதான கடன் பங்குடன் சேர்க்கப்படும் என்று இலங்கை உறுதியளித்துள்ளது. அதன்படி, இலங்கை அந்நியக் கடன் எதையும் வாங்காமல் இருந்தாலும், அதன் அந்நியக் கடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 பில்லியன் டாலர்கள் உயர்கிறது. 2023 இறுதி வரை நிலுவைத் தொகையாகக் குவிக்கப்பட்ட அத்தகைய கடனின் மதிப்பு 6.6 பில்லியன் டாலர்கள்.
2022இல் பல இறக்குமதி பொருட்களின் மீதான கட்டுப்பாடு பல கட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 2023இல் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டவற்றின் பெருமதி 17 பில்லியன் டாலர்களாகும். ஆனால் இக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் குறைந்தபட்சம் நாட்டிற்கான சாதாரண இறக்குமதி அளவு சுமார் 22 பில்லியன் டாலர்களாகும். இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது மேலதிகமாக 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு ஆண்டொன்றுக்குத் தேவைப்படும். ஆபத்து யாதெனில், இலங்கை கடன்களை மீளச் செலுத்தவும், இறக்குமதித் தடையை நீக்கவும் தொடங்கும் பட்சத்தில் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்த நிலைக்கு இலங்கை மீண்டும் திரும்பும்.
தலையின் மேல் தொங்கும் கத்தி
நாட்டின் பொருளாதாரச் சவால்கள் ஜனாதிபதியின் தலைமேல் கத்தியாகத் தொங்கியவண்ணமுள்ளன. இதை ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்கலாம். உலக வங்கியின் அறிக்கையின்படி இலங்கையில் 26%க்கும் ஆனவர்கள் வறுமைக் கோட்டுக்குள் இருக்கிறார்கள். நாளொன்றுக்கான வாங்கும் திறனை 3.65 டொலர்கள் என்ற குறிகாட்டியையே இது பயன்படுத்துகிறது. ஆனால் சர்வதேச வறுமைக் குறிகாட்டியான 6.85 டொலர்கள் என்ற குறிகாட்டியைப் பயன்படுத்தினால் இலங்கையில் வறுமைக் கோட்டிற்குள் இருப்போர் 67%மாக உயர்கிறது. ஆகப் பொருளாதாரம் மேம்படத் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மேலதிகமான இலங்கையர்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களாக மாறியபடியே இருப்பார்கள்.
இதை ஜனாதிபதி உடனடியாகக் கையாள வேண்டும். ஏனெனில் ஏழைகளின், எளியவர்களின் பிரதிநிதி என்ற பிம்பமே அவரை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது. ஆனால் அதற்கான வழிவகைகள் அவரிடம் இப்போது இல்லை. இதற்கு ஐ.எம்.எவ்வுடன் உடன்பட வேண்டும். அப்போது மேலும் கடன்கள் கிடைக்கும். ஆனால் உடன்பட்டால் சிக்கன நடவடிக்கைகளையும் கட்டமைப்பு மாற்றங்களையும் மேற்கொள்ளவேண்டும். அவை மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தும். இது எதிர்வரும் தேர்தல்களில் நெருக்கடியை உண்டாக்கும்.
அரசியல் ரீதியாகப் புதிய ஜனாதிபதியின் எதிர்காலம் என்பது ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவில் தங்கியுள்ளது. புதிய ஜனாதிபதியின் ஆதரவு சக்திகள் பாராளுமன்றில் பெரும்பான்மை பெறாதுவிடின் நிர்வாகரீதியான சவால்களைத் தொடர்ச்சியாக ஜனாதிபதி எதிர்நோக்குவார்.
இலங்கை விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதை புதிய ஜனாதிபதியின் இயலாமை வெளிப்படுத்தியுள்ளது. பதவிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவேன் என்பது அனுரகுமார நாணயக்காரவின் தேர்தல் உறுதிமொழிகளில் ஒன்று. ஆனால் யதார்த்தம் முகத்தில் அறைந்தபோது நிகழ்ந்ததென்னவோ வேறொன்றுதான். அவரை இன்னும் புதிய இடதுசாரி பிம்பமாகக் கட்டமைப்போர் கவனிக்க வேண்டிய விடயமிது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கடந்த அரசாங்கத்தின் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனக்கான முதலாவது குழியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோண்டியுள்ளார். 2027 இல் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை முடிவடையும் போது, அத்திட்டத்தின் முக்கியமான மூன்று இறுதி இலக்குகள் பின்வருமாறு:
அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5%த்தை வெளிநாட்டுக் கடன்; திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்துவதாகும். இதற்கு வரிவிதிப்பு மூலம் உருவாக்கப்படும் அரசாங்க வருவாயில் 30% தேவைப்படுகிறது. எனவே அரசாங்க வருவாய் கடன் மீளளிப்புக்கே பயன்படப் போகிறது.
ஏற்றுமதி வருவாயில் பெறப்படும் 30% அந்நியச் செலாவணியில் இது திருப்பிச் செலுத்தப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின்படி இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையானது, 2027 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% இறையாண்மைப் பத்திரங்களில் இலங்கை கடனாகப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2027 இல் தொடங்கி, இலங்கை மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கும் அதிகமான உயர் வட்டி இறையாண்மைப் பத்திரங்களைப் பத்திரதாரர்களிடமிருந்து வாங்குவதன் மூலமே செயற்பட முடியும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிப் போகவும், அவர்களது விதிமுறைகளின்படி செயற்படவும் புதிய ஜனாதிபதி உடன்பட்டமையானது, இலங்கை வழமைக்குத் திரும்பியதைக் கோடுகாட்டுகிறது. பலரும் அவரை “மாற்று” என்றும் “மார்க்சியர்” என்றும் புகழ்ந்து பாராட்டினார்கள். பழமொழியைக் கொஞ்சம் மாற்றி எழுதலாம்: “கெட்டிக்காரன் புழுகு இரண்டு வாரத்துக்கு”.