வீட்டைப் பெருக்கி

பழைய சாமான்களின் மீது

துணி போர்த்திய பின்

நல்ல உடையணிந்து

மிடுக்காக வாசலில் நின்றோம்

 

விருந்தாளி

எங்களைப் பார்த்ததும்

கண்களில் விளக்கெரிய வந்தார்

வீட்டுக்குள் நுழைந்ததும்

என்னே சுத்தம் என்னே ஒழுங்கு

ஆஹா ஓஹோ என்றார்

 

குதூகலத்தில்

நான் அவருக்காக

கலர் வாங்க கடைக்குப் போனேன்

அவள்

தண்ணீர் கொண்டு வர உள்ளே போனாள்

 

அவர் மெல்ல எழுந்து

மூடு துணியைத் தொட முயற்சிக்கையில்

நீரோடு அவளும்

கலரோடு நானும் வந்தோம்

 

அவரோ

செய்வதறியாது முழித்தார்.

 

இதுவே கடைசியாக இருக்கட்டும் என

அவரைக் கண்டித்து அனுப்பிவிட்டு

நாங்கள்

புதிய வீட்டுக்குள் ஒளித்து வைத்த

எங்கள் பழைய வீட்டை உருவி எடுத்தோம்.

0

உடல்நலங் குன்றியவனின்

அரைத் தூக்கக் கொடுங் கனவுகள்

விரைவில் நின்றுவிடும்

அவன் எழுந்து வருவான்

பழையபடியே

ஒரே பந்தில் சிக்ஸ் அடிப்பான்

எல்லோரையும் அண்ணாந்து வெறிப்பதில்

ஆழ்த்திவிட்டு

ஆண்களின் விதைகளையும்

பெண்களின் முலைகளையும்

கீழிருந்து மேலாகத் தட்டிவிட்டு

துள்ளிக் குதித்து ஓடுவான்

நான் சொன்ன

அந்த நல்ல சுறுசுறுப்பும் மனமும் கொண்டவன்

அதோ வந்துகொண்டிருக்கிறான்

ஆண்களே ஆண்களே

பெண்களே பெண்களே

பார்த்து.

 

0

சிறுமியைப் புதைக்கையில்

பொம்மைகளையும் புத்தகப் பையையும்

அவள் மீது வைத்து

நீயே வைத்துக்கொள் தங்கமே என்ற தகப்பன்

திரும்பி நின்றுகொண்டு குழியை மூடச்சொன்னார்

 

உள்ளிருக்கும் சிறுமி

மண்ணுக்கடியில்

எவ்வளவு மூச்சுத் திணறலை அனுபவிப்பாளோ

அவ்வளவு மூச்சுத் திணறலோடு

வேட்டி அவிழ புதைமேட்டின் மீது

நின்றநிலையிலேயே விழுந்தார்

 

சிறுமி மண்ணுக்கடியில்

எப்படி மூர்ச்சையுற்றிருக்கிறாளோ

அப்படியே வீட்டு வாசலில்

சேலை ஒருபக்கமாக உடல் ஒருபக்கமாக

மூர்ச்சையுற்றுக் கிடந்தாள் அம்மா

 

இருவர் முகத்திலும் நீர் தெளித்தார்கள்

ஒரு பலனுமில்லை

மூர்ச்சையுற்ற உடல்களில்

கைகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன.

மகள் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கிறாள் போல.

 

0

கண்ணீர் கழிக்குமிடம்

 

பத்துக்கும் மேற்பட்டவர்கள்

கையில் பிடித்துக்கொண்டு பெய்கிறார்கள்.

ஒருவர் தனக்குப் பக்கத்திலிருந்த நபரின்

குறியையே வெறிக்கிறார்.

அவருக்கோ

எப்போதும் சலசலவென கொட்டித் தீர்க்கும் ஒன்றுக்கு

இன்று வருவேனாவென ஆட்டம் காட்டுகிறது.

அடித்தும் அடிக்காத குஞ்சை எடுத்து

அழகாக உள்ளே வைத்துக் கிளம்புகிறார்

வழியை அடைத்துக்கொண்டு நின்ற ஒருவர்

விசும்பி விசும்பி அழுவதைக் கவனித்தவர்

எதுவும் பேசாமல்

இன்னொரு பாதைவழியே வெளியேறுகிறார்.

 

0

மழைநீர் வீட்டை ஆக்கிரமித்த பின்

மேசையின் மீது நின்றுகொண்டோம்.

மெல்ல அமர்ந்த மகள்
தனது குட்டிக் கால்களைத் தொங்கவிட்டு

குளிர்ந்த நீரில் நனைத்துக்கொண்டாள்

சற்று நேரத்தில்

நானும் அவளும் நீரில் இறங்கி

பிள்ளைகளைக் கைகளில் படுக்க வைத்து

நீச்சல் கற்றுக்கொடுத்தோம்

மிக விரைவாகக் கற்றுக்கொண்டவர்கள்

அங்கிருந்து

நீந்திக்கொண்டே வெளியே சென்றார்கள்

பக்கத்து வீதி, அடுத்த சாலை

இந்த ஊர், பக்கத்து ஊர்

என தாண்டித் தாண்டி

கண்பார்வைக்கு அப்பால்

சென்றுவிட்டார்கள்

அப்படித்தான்… அப்படித்தான்…

அப்படியே போய்விடுங்கள்… செல்லங்களே.

 

0

செய்வதெல்லாம் செய்துவிட்டு

ஒன்றும் தெரியாத

ஊமைக் கொட்டானைப் போல்

எப்படி உட்கார்ந்திருக்கிறான் பார்

என்றவர்கள்

காரி  முகத்தில் உமிழ்ந்தார்கள்

 

வந்த கோபத்திற்கு

பாக்கெட்டில் கைவிட்டு

கைக்குட்டையை எடுத்து

நன்றாக ஒத்தி ஒத்தித் துடைத்துவிட்டு

வேறு திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்

 

சிலபோது நண்பர்கள் கேட்பதுண்டு

நம் கூட்டத்தில்

நீ மட்டும் ஏன் இப்படிச் சுரணையில்லாதிருக்கிறாய்

 

அப்போதெல்லாம் தோன்றுவது இதுதான்

 

ஏனெனில்,

ஏனெனில்,

அதுதானே ஈஸி.

 

– நெகிழன்