இன்று உலகமெங்கும் வாழ்கின்ற தமிழரின் அடையாளமாகக் கருதப்படுகிற திருக்குறள் நூல், திருவள்ளுவரால் எழுதப்பட்டு ஏறக்குறைய 1700 ஆண்டுகள் கடந்துவிட்டன. சங்க காலத்திற்குப் பிந்தைய நூலான திருக்குறள், பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதாரச் சூழல்களைக் கடந்த நிலையில் தமிழர் வாழ்க்கையில் முதன்மை இடம் வகிப்பது கவனத்திற்குரியது. சமய அடையாளம் வெளிப்படையாக இல்லாத திருக்குறள் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்த நிலையில் தமிழ்நாட்டுச் சமூகச் சிந்தனையாளர்களிடம் காலந்தோறும் செல்வாக்குப் பெற்றுள்ளது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிற நவீன தமிழரின் வாழ்க்கைச் சூழலில் திருக்குறள் செம்மையான வாழ்க்கை வாழ்வதற்கு வாழ்ந்திட அடிப்படையாக விளங்குகிறது. திருவள்ளுவர், குறள்கள்மூலம் வலியுறுத்துகிற கருத்துகள், சராசரி மனிதனைச் செழுமைப்படுத்தும் ஆற்றல் மிக்கனவாகும். திருக்குறள், சமூகமாகக் கூடி வாழ்கின்ற மனிதர்களுக்கிடையில் தோன்றுகிற முரண்களைச் சீராக்கிடவும், நெறியான வாழ்க்கை வாழ்வதற்கான பின்புலத்தையும் முன்னிறுத்தியுள்ளது. திருவள்ளுவர் நீதி, சட்டம் என விதிகளைவிட, தனிமனித மனதில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்துகின்றார். திருக்குறள் என்ற இலக்கியப் பிரதியின் பின்னர் பொதிந்திருக்கிற அரசியல் காரணமாகவே திராவிட இயக்கத்தினர் கடந்த நூறாண்டுகளுக்கும் கூடுதலாகத் தமிழரின் மறையாகத் திருக்குறளை முன்வைத்துப் பேச்சுகளை உருவாக்கியுள்ளனர். அவை, திருக்குறளுக்குத் தனிச் சிறப்பினை அளிக்கின்றன.
இரண்டாயிரமாண்டுத் தொன்மையான தமிழ்க் கவிதை வரலாற்றில் தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை, திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலையாகத் திருவள்ளுவர் நிற்பதற்கு காரணம், திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான் முதன்மைக் காரணம். என்றாலும் பெரியார், கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தினரின் தொடர்ச்சியான திருக்குறளை முன்வைத்திடும் செயல்பாடுகளின் பின்னர் காத்திரமான திராவிட இயக்க அரசியல் பொதிந்துள்ளது.
திருக்குறள் ஏதோ ஒருவகையில் தமிழர் வாழ்க்கையில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதலாகக் கடவுளர்களின் கதைகளை உள்ளடக்கிய அதியற்புதப் புராணங்கள், சமயம் சார்ந்த பக்திப் படைப்புகளைப் போற்றிய தமிழரின் சமூக, அரசியல் வரலாற்றில், எந்தவொரு சமயமும் சார்ந்திடாமல் திருக்குறள் தனித்துப் பயணித்திருப்பது சிறப்பானதாகும்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சு வடிவம் பெற்ற திருக்குறள், கருத்தியல் வளம் காரணமாகக் கல்வியறிவு பெற்றிருந்த தமிழர்களின் கவனத்தைக் கவர்ந்தது; ஜி.யூ.போப். ஆல்பைர்ட் சுவைட்சர் போன்ற ஐரோப்பியர்களிடமும் செல்வாக்குடன் விளங்கியது. குறிப்பிட்ட கடவுள் அடையாளம் வெளிப்படையாக இல்லாத திருக்குறள், சமூகச் சிந்தனையாளர்களிடம் காலந்தோறும் செல்வாக்குடன் விளங்குகின்றது. மநு தருமம், வைதிக சநாதன சமயத்தின் அற நூலாகக் கருதப்பட்ட சமூகச் சூழலில், அதற்கு எதிராகத் தமிழர்களின் அறநூலாகத் திருக்குறள் நூலை உயர்த்திப் பிடித்திடத் தமிழறிஞர்கள் முயன்றனர். வைதிக சநாதனத்தின் ஆதிக்கம் காரணமாக வருணாசிரம மேலாதிக்கம் நிலவிய தமிழ்நாட்டில் அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தினர் திருக்குறளை முன்னிறுத்தி உருவாக்கிய சொல்லாடல்கள், அரசியல் பின்புலமுடையன. இன்னொருபுறம் தேவாரம், நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம், புராணங்கள் போன்ற படைப்புகளை மட்டும் இலக்கியமாகக் கருதிய பண்டித மனநிலைக்கு எதிராகத் திராவிட இயக்கத்தினர் திருக்குறளை முன்னிறுத்திப் புதிய பேச்சுகளை உருவாக்கினர், காலப்போக்கில் மத நம்பிக்கைக்கு எதிரான அரசியலில் திருக்குறளின் அறிவுப்பூர்வமான கருத்துகள், தமிழ்நாட்டில் முதன்மையிடம் பெற்றன. நாளடைவில் திருக்குறள் தமிழர் மறை அல்லது தமிழர் வேதம் எனப் போற்றப்பட்டது.
திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார், தொடக்கத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கடுமையாக விமர்சித்தார். பின்னர் அவர் பா.வே.மாணிக்க நாயக்கரின் தொடர்பினால் திருக்குறள் நூலைத் தன்னுடைய சுயமரியாதைக் கருத்துகளுக்குச் சார்பாகக் கருதினார். காங்கிரஸிலிருந்து விலகி, 1927 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பெரியார், திருக்குறளைப் பரப்பும் பணியைத் தொடங்கினார். திருக்குறள் மன்றங்கள் நடத்துகின்ற கூட்டங்களில் பங்கேற்றுத் திருக்குறள் பற்றிப் பேசிய பெரியார், குறள் மாநாடுகளையும் நடத்தினார்.
தந்தை பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு – ‘வள்ளுவர் குறள் மாநாடு (தமிழர் நெறி விளக்க மாநாடு)’ என்னும் பெயரில், 15.01.1949, 16.01.1949 ஆகிய இரு நாள்கள் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்:
“நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும் பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்த அறிவாளியாகக் குறிப்பிட முடியும்.”
”ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும், சிறப்பாக
இந்நாட்டுப் பழங்குடிப் பெருமக்களின் திராவிடர்கள்
அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய
செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும், நாகரிகத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிட அல்லாத மக்களுக்கும் உணரச் செய்ய முடிகிறது.”
பெரியாரின் திருக்குறள் குறித்த சிந்தனை ஆரியம்-திராவிடம் என்ற எதிரிணைப் பார்வையில் இருந்து உருவாகியுள்ளது. மேலும் அவர் ஆரிய தர்மமாகிய மனுதர்மத்தை ஒழித்துக் கட்டுவதற்காகவே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியதாகக் கருதினார்.
”திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக்கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவற்றை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்.”
பெரியாருக்குத் திருக்குறள் மிகவும் இணக்கமான பிரதியானதற்குக் காரணம் திருவள்ளுவர் மதம் கடந்தவராகவும் எந்தவொரு கடவுளையும் போற்றாதவராகவும் வைதிக சநாதனத்திற்கு எதிரானவராகவும் விளங்குகிறார் என்பதுதான். வைதிக சநாதன நெறிக்கு மாற்றாகத் தமிழர்களின் அறவியல் சிந்தனையின் வெளிப்பாடாகத் திருக்குறளைப் பெரியார் முன்னிறுத்தியதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. திராவிட இயக்கத்தினர், வைதிக சநாதனப் பின்புலத்திலான மநு தருமம் உள்ளிட்ட நூல்களுக்கு மாற்றாகத் திருக்குறள் நூலை முன்வைத்தனர். அந்த நிலை இன்றளவும் தொடர்கின்றது.
1950களில் ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை’ எனத் தொடங்கும் திருக்குறள், தமிழர்களின் திருமண அழைப்பிதழ்களில் அச்சடிக்கப்பட்டது தற்செயலானது அல்ல. தமிழரின் அன்றாட வாழ்க்கையில் திருக்குறள் இடம் பெறத்தொடங்கிய நிகழ்வு, இன்றளவும் வெவ்வேறு வழிகளில் தொடர்கிறது. தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள், இன்று உலகத் தமிழரின் அடையாளமாக மாறியுள்ளது. திருவள்ளுவர், குறள்கள்மூலம் வலியுறுத்துகிற கருத்துகள், சராசரி மனிதனைச் செழுமைப்படுத்தும் ஆற்றல் மிக்கனவாகும்.
திருவள்ளுவருக்கென்று சிறப்பு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாடவேண்டும் என்பது பெரியாரின் விருப்பம். அதற்கான தீர்மானம் ஒன்றைத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புலவர் கோவிந்தன் சட்டப் பேரவையில் கொண்டுவந்தார். அதனை முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்து, பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றினார். . பின்னர் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவர் நாளைக் கொண்டாட ஆணையிட்டார்.
தமிழறிஞர் மறைமலை அடிகள் தலைமையிலான குழு வள்ளுவருக்கான காலத்தைக் கி.மு 31 என்று வரையறுத்து அறிவித்திருந்தது. அதனை ஏற்றுக்கொண்ட திமு.க. அரசு 1971 முதல் அரசு நாட்குறிப்புகளிலும் 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவராண்டு பயன்படுத்திட ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியது.
இன்று காட்சியளிக்கிற திருவள்ளுவரின் உருவப் படம் கற்பனையானது. திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கவேண்டும் என்று கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா உள்ளிட்ட பலரின் விருப்பத்தை நிறைவேற்றிட அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஏற்றுக்கொண்டார். அவருடைய உத்தரவின்படி ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் அதிகாரபூர்வமான திருவள்ளுவர் ஓவியமாக 1959-ஆம் ஆண்டு அரசினால் அறிவிக்கப்பட்டது.
திருவள்ளுவருக்குச் சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தி.மு.க. வின் சார்பில் கலைஞர் மு. கருணாநிதி முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட சென்னை மாநகராட்சி, திருவள்ளுவர் பிறந்த ஊராகக் கருதப்படும் மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒவ்வொரு நாள் தொடங்கும்போது ஒரு திருக்குறளை வாசித்துப் பேரவையைத் தொடங்கிவைக்கும் மரபை அப்போதைய பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார் தொடங்கிவைத்தார். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது நடிகர் சிவாஜி கணேசன் அன்பளிப்பு கொடுத்த வள்ளுவர் சிலை சென்னையில் திறக்கப்பட்டது.
திருக்குறள் விளிம்புநிலையினருக்கும் சென்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் பொறிக்கப்பட்டன. இதனால் திருக்குறள் நூல் பரவலாகக் கவனம் பெற்றது. பின்னர் அரசினர் தங்கும் விடுதிகளிலும் திருக்குறள் பொறிக்கப்பட்டது. கலைஞரின் ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றன. அவற்றில் சென்னையில் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டமும் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலையும் முக்கியமானவை.
1976 ஆம் ஆண்டு கழக ஆட்சியின்போது முதல்வர் கலைஞரின் முயற்சியினால் சென்னை, நுங்கம்பாக்கத்தில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோட்டம், திருவள்ளுவரின் புகழுக்குச் சான்றாக விளங்குகிறது. சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் தோரண வாயில், அரங்க மண்டபம், கருங்கல் தேர், குறள் மணி மாடம், மாடித்தோட்டம், ஆராய்ச்சி நிலையம். தேர்க்கோபுரம், தேர்க்கலசம் ஆகியவற்றைக்கொண்ட வள்ளுவர் கோட்டம் உருவானது. நெருக்கடி நிலைக்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது திறந்து வைக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சரானபோது பதவியேற்பு விழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தினார்.
வள்ளுவர் கோட்டம்போல, வள்ளுவருக்குக் குமரி முனையில் பிரம்மாண்டமான சிலை அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை முதலமைச்சர் கருணாநிதி அதிகாரப்பூர்வமாக 1975 ஆம் ஆண்டு அறிவித்தார். கலைஞரின் சீரிய முயற்சியினால் கன்னியாகுமரி கடலின் நடுவில் 2000 ஆம் ஆண்டில் பெரிய பாறையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலை, திராவிடக் கட்டடக் கலைக்குச் சான்றாக விளக்குகிறது; திருக்குறளின் பெருமையை உலகுக்கு அறிவிக்கின்றது.
ஜைன சமயச் சார்புடையவராகக் கருதப்படுகின்ற திருவள்ளுவர், மனிதர்கள் தங்களுக்குள் பின்பற்றவேண்டிய ஒழங்குகளை அறங்களாக 1330 குறள்களில் பதிவாக்கியுள்ளார். அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய செவிவழிக் கதைகள், அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றன. ஒப்பற்ற ஞானியாகவும், மாபெரும் தீர்க்கதரிசியாகவும், தெய்வப் புலவராகவும், அய்யனாகவும் திருவள்ளுவரைப் போற்றித் துதிபாடுதலும் வணங்குதலும் பிரபலமடைந்து வருகின்றன. இறைவனுக்கு நிகராகத் திருவள்ளுவருக்குத் தரப்படும் போற்றுதல்கள், ஒருவகையில் திருக்குறளுக்குப் பிரச்சினையைத் தரக்கூடியன. திருக்குறளை ‘வேத நூல்’ என்று வழிபட்டுப் பூசைப் பொருளாக்குவது, மக்கள் அந்நூலை வாசிப்பதைத் தடுத்துவிடும். ‘நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம்’ என்ற நோக்கில் அணுகிடும்போது, திருக்குறள் முன்னிறுத்தும் அறக்கருத்துகளைச் சராசரி மனிதரால் பின்பற்ற முடியுமா? என்பதுதான் முக்கியமான கேள்வி.
தகவல் தொடர்பு, போக்குவரத்து, வேலை வாய்ப்புக் காரணமாக இன்று உலகமெங்கும் வாழ்கிற தமிழர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகள் அளவற்றவை. தமிழ் அடையாளமும் கேள்விக்குள்ளாகிடும் நிலையில், தமிழால் இணைந்திட, திருக்குறள் முக்கியப் பங்காற்றுகிறது. திருக்குறள் நூலைப் புனிதப் பிரதியாக்கிடாமல் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய கருத்துகள் அடங்கிய வாழ்வியல் நூலாகக் கருத வேண்டும். திருக்குறளில் இடம் பெற்றுள்ள காமத்துப் பால், பூமியில் பெண்ணும் ஆணும் சேர்ந்து துய்த்திடும் பாலியலைக் கொண்டாட்டமாக்கியுள்ளது திருக்குறள் என்ற பிரதியானது, மறுவாசிப்பில் தோற்றுவிக்கும் புதிய வகைப்பட்ட சொல்லாடல்கள், நவீன தமிழர் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுகின்றன.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்
என்ற வள்ளுவரின் குரலில், வைதிக சமயம் புனைந்திட்ட பிறப்பு, பால் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கருத்து அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இந்துத்துவா வலியுறுத்துகின்ற மத அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்து, நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. இன்னொருபுறம் இன்றளவும் சாதியத்தின் விளைவான தீண்டாமையின் அழுத்தம் காரணமாக நடைபெறுகிற ஆணவக் கொலைகள் குறித்தும், பெண்ணுடல் காரணமாக அத்துமீறப்படும் பாலியல் வன்முறைகள் குறித்தும் உருவாகியுள்ள பொதுப்புத்திக்கு எதிரான மனோபாவத்தை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கிடப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் வரிகள், அடித்தளமாக விளங்குகின்றன.
கல்வி என்பது இரு பிறப்பாளராகக் கருதப்படுகின்ற பிறப்பினால் உயர் சாதியில் பிறந்த பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உரித்தானது என்று மநு தருமம் நுட்பமாக வலியுறுத்துகின்றது. வருணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் போன்றோரின் கல்வி குறித்து, மநுவிற்கு அக்கறை இல்லை. பார்ப்பனர் வருணத்தைச் சார்ந்த இளைஞர்களின் குருகுலக் கல்வி குறித்து மநு விரிவாக விளக்கியுள்ளார். கல்வியைப் பிறப்பு, பால் அடிப்படையில் அளித்திடுவதற்கு விதிகள் செய்த மநுவிற்கு முற்றிலும் எதிரான நிலையினைத் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார். பால், பிறப்பின் அடிப்படையை மறுத்து எல்லோருக்கும் கல்வியை வழங்கிட விழைகின்றார் திருவள்ளுவர்,
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு(குறள்:409)
கல்லாதார் உயர்சாதியில் பிறந்திருந்தாலும், கீழான சாதியில் பிறந்தவர் கற்றவர் எனில் அவருடன் ஒப்பிடுமளவு பெருமை இல்லாதவர் என்று வள்ளுவர் பிறப்பினால் உருவாக்கப்படும் உயர் சாதி- கீழ்ச் சாதி பற்றிய புனைவைக் கல்வியை முன்வைத்துக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். மனிதன் கல்வியினால் மட்டும் முழுமை அடைவான் என்ற நோக்கத்துடன் கல்வியின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ள வள்ளுவர், சநாதன தருமத்திற்கு எதிரானவராக விளங்குகிறார். யார் சொன்னாலும் அவருடைய பேச்சில் உண்மையான பொருளைக் கண்டறிதல்தான் அறிவு என இலக்கணம் வகுக்கின்ற திருவள்ளுவர், பிறப்பு அடிப்படையிலான பேதங்களை மறுக்கின்றார். தெய்வத்தால் ஆகாத செயல் என்றாலும், முயற்சியினால் அடைய முடியுமென்ற குறளின் கருத்து, மனிதமையத் தன்மையுடையது. கல்வி, கல்லாமை பற்றிய இரு அதிகாரங்களிலும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ள கருத்துகள், இன்றைய சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானவை.
சமூகமாக வாழும் மக்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வள்ளுவர் குறிப்பிடும் அறங்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் வள்ளுவரின் இன்னொரு முகம் எளிமையானது; சராசரி மனிதனாகக் காட்சியளிக்கின்றார். கல்வியின் சிறப்பைக் குறிப்பிடும்போது, அதன் தேவையை எதிர்மறையாக்குகின்றார். கல்லாதவனின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, புண்கள் எனத் திட்டுகிறவர், மேலும் கல்லாதவனை ‘விலங்கு’ எனப் பழிக்கின்றார். கற்றோர் முன்னால் கல்லாதவன் பேச முயலுவது, ‘முலை வளராத இளம் சிறுமி காம வயப்பட்டதுபோல’ எனக் கண்டிக்கிறார். ‘பிறரிடம் அரிய விஷயங்களைக் கேட்டு ஆராய்ந்திடும் மனநிலை இல்லாதவன் செத்தாலும், வாழ்ந்தாலும் என்ன’ என்று கோபத்துடன் கேள்வி கேட்கிறார். பல்லாண்டுகளாகக் கல்வி கற்பது உயர் சாதியினருக்கு மட்டும் உரித்தானது என்ற சநாதன தர்மம் நிலவிய தமிழகத்தில் வள்ளுவர் தனது எதிர்மறைக் கருத்துகள் மூலம் கெட்டி தட்டிப்போன சராசரி மனிதனின் பிரக்ஞையில் பாதிப்பை ஏற்படுத்திட முயன்ற செயல், இன்றைக்கும் பொருந்துகிறது.
‘அன்பில்லாதவர் உடம்பானது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்டது, ‘கண்ணோட்டம் இல்லாத கண்கள் வெறும் புண்கள்; ‘கண்ணோட்டமில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர்’ எனக் கண்டனங்களை வீசும் வள்ளுவர், ‘மானம் இழந்தவர் மயிரனையர்’ எனக் குறிப்பிடுவது தற்செயலானது அல்ல. மானம் என்பதற்குப் பொதுவாக வரையறை இல்லாத நிலையில், ஓர் அரசியல் கட்சியிலிருந்து சில மூத்த தலைவர்கள் பிரிந்தபோது, அக்கட்சியின் செயலாளர் அவர்களை ‘உதிர்ந்த மயிர்கள்’ என வருணித்தது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
திருக்குறள் முன்னிறுத்தும் சமூக அறங்களில் தேவையானவற்றை நவீன வாழ்க்கையில் பயன்படுத்தலாம். மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், இன்னும் ஏற முயன்றால், அச்செயல் உயிரைப் பறித்துவிடும் என்ற எளிய உவமைமூலம் ஒரு கருத்தைப் பதிவாக்கிட முயலும் வள்ளுவரின் முயற்சியானது மக்களிடையே கவனம் பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து திருக்குறள் நூலை வாசிக்கிறவர்களுக்கு திடீரெனப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபடும் மனத்தெளிவைத் திருக்குறள் ஏற்படுத்தக்கூடியது. திருக்குறளை வெறுமனே அறங்களைப் போதிக்கிற நூல் எனக் கருதாமல், வாழ்வியல் சிக்கல்களுக்கு வழிகாட்டி என வாசிக்க வேண்டியது அவசியம். திருக்குறள் கருத்துகளைச் சரியாக உள்வாங்கியவர், திடீரெனப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபட திருக்குறளின் கருத்துகள் உதவுகின்றன. ‘நீரின்றி அமையாது உலகு’, கற்க கசடறக் கற்பவை’, உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’, ’அடக்கம் அமரருள் உய்க்கும்’, ’அகலாது அணுகாது தீக்காய்வார்போல’, ’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ போன்ற குறள் வரிகள், குழம்பிய மனதில் தெளிவை ஏற்படுத்தக்கூடியன. இத்ததைய வரிகளினாலேயே திருக்குறள் தொடர்ந்து தமிழர் மனங்களில் ஆளுகை செலுத்துகிறது.
உழுவுத் தொழில் சமூகத்திற்கு அடிப்படையானது என்ற புரிதல் காரணமாகத்தான் வள்ளுவர், உழவு எனத் தனியாக அதிகாரம் இயற்றியுள்ளார். மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவைப்படும் உணவை உற்பத்தி செய்கின்ற உழவு, உழவர்கள் பற்றிய குறளின் விவரணைகள், இன்றைக்கும் பொருந்தும்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்(குறள்:1033)
குறள் வரிகள், வயலில் இறங்கிச் சேற்றிலும் சேற்று நீரிலும் உழைக்கின்ற மக்களின் சிறப்பினையும் சமூக மதிப்பீட்டினையும் பதிவாக்கியுள்ளது. வைதிக சநாதனம், வயலில் உழுது விளைவிப்பதைக் கேவலமாகக் கருதிய சூழலில் ’உழுவார் உலகத்திற்கு அச்சாணி’ என்று அழுத்தமாகச் சொன்ன திருவள்ளுவர் ஒருவகையில் சநாதன எதிர்ப்புப் போராளி ஆவார்.
சமூக அமைப்பின் அடிப்படை அலகாக விளங்குகின்ற குடும்பம் பற்றிய வள்ளுவரின் கருத்துகளில் அறம் பொதிந்துள்ளது. காமத்துப் பால் மூலம் வள்ளுவர் சித்தரித்துள்ள ஆண்- பெண் பாலியல் உறவு, மனநிலை, அன்பு பற்றிய பேச்சுகள், மனித இருப்பினை மையமாக்கியுள்ளன. ஆணும் பெண்ணும் சேர்ந்து துய்த்திட்ட பாலியல் உறவின் விளைவான குழந்தை பற்றிய வள்ளுவரின் விவரிப்பு, அழகியல் சார்ந்தது.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்
குழந்தையைக் கொஞ்சிடுகின்ற ஒவ்வொருவரின் மனதிலும் துளிர்க்கின்ற கவிதை வரிகளை வள்ளுவர் அற்புதமான குறளாக்கியுள்ளார்.
திருக்குறள் என்ற அற நூல் எழுதப்பட்டு 1700 ஆண்டுகள் கடந்த சூழலில், இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமான கருத்துகள் பொதிந்திருப்பது, பெருமைக்குரியது. அதேவேளையில் திருக்குறள் முன்வைக்கின்ற அனைத்துக் கருத்துகளும் சமகாலத்திற்கு ஏற்புடையனவா என்று கட்டுடைத்திட வேண்டியுள்ளது. திருக்குறள் என்ற பிரதி முன்வைக்கின்ற குரல்கள், இன்றைய பயன்பாட்டிற்கு உரியனவா என்று கண்டறிந்திட வேண்டியது அவசியம். புலால் உண்ணுதல், கள்ளுண்ணுதல், பெண் பற்றிய திருவள்ளுவரின் மதிப்பீடுகளை விசாரணைக்குட்படுத்திட வேண்டியுள்ளது. அந்தவகையில் திருக்குறள் பற்றி மறுதலையாகத் திராவிட இயக்கத் தலைவரான பெரியார் முன்வைத்திட்ட கருத்துகள் கவனத்திற்குரியன.
காட்டுமிராண்டித் தமிழ் என்று தமிழிலக்கியப் படைப்புகளைக் கடுமையாக விமர்சித்த பெரியார், ”உங்கள் தமிழ் சாதியைக் கற்பிக்கும் தமிழ், உங்கள் தமிழ் ஆரியத்தைச் சுமக்கும் தமிழ்; உங்கள் தமிழ் கடவுளையே பாடும் தமிழ்; உங்கள் தமிழ் புராணக் குப்பைகள் நிறைந்த தமிழ்; மூடநம்பிக்கைகளைக் கொண்டாடும் தமிழ்” என்றார். வெறுமனே உணர்ச்சி வயப்படாமல் அறிவியல் அடிப்படையில் மொழியை அணுகிடும் பெரியார் திருக்குறளைப் போற்றினாலும் சமகால அரசியல், சமூக இயக்கக் கருத்துகளுடன் மாறுபடும் திருக்குறள் சிந்தனைகளை அழுத்தமாகச் விமர்சித்துள்ளார். அவர், திருவள்ளுவரை எல்லாம் அறிந்த தெய்வப் புலவராகக் கொண்டாடும் மூடத்தனங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. “இன்றுள்ள மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தெய்வத்தன்மை என்பதாக ஒரு தன்மை மக்களுக்கு இருந்திருக்கிறதென்பதையே என்னால் ஒப்புக்கொள்ள முடியாததால் நான் திருக்குறள் ஆசிரியர்க்கு அத்தகைய தெய்வத்தன்மையைக் கொடுக்க முடியவில்லை”. மேலும் அவர் தனது பகுத்தறிவுப் பார்வையைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்:
”மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியுள்ளார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டு உள்ளதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்க முடியுமா? நான் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை. குறளில் இருந்து மக்களுக்கு வேண்டியதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவையில்லாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் சொல்கிறேன். குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம்; இருக்க முடியும். ஏனென்றால் அது 1950 மாடல் அல்ல. திருவள்ளுவர் திரிகாலம் உணர்ந்த ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடத்திற்கு முன்பு ஒருவர் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், ஒலிபெருக்கி, மோட்டார் முதலியவற்றைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால், ‘எல்லாக் காலத்தையும் முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்’ என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாது. திருவள்ளுவர் மகான் என்றோ அவதார புருஷன் என்றோ ஒத்துக்கொள்ள மாட்டேன். திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் வள்ளுவரை ஏற்றுக்கொள்ள முடியும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கு ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கை சரி; என் திட்டங்கள் சரி. எனக்குப் பிறகும் இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள்-நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சம்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்?” திருவள்ளுவரின் கருத்துகளை எப்படி அணுகிச் சமகாலத்திற்குப் பொருத்திட வேண்டுமென்ற பெரியார் தக்க வழி காட்டியுள்ளார். அந்த வழிகாட்டல் திருக்குறள் பிரதியைச் சமகாலத்தியதாக்குகிறது.
திருவள்ளுவர், ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானவை. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்து உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டுக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர் ஆன், ஹலால் ஓதிக் கொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக்கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்கள் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது போன்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் ‘புலையர்’ என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் ‘புண் என்றும் இழிவுபடுத்துகின்றார்.
மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குச் சங்க காலம் முதலாகத் தமிழர்கள் பழகியுள்ளனர். மேலும் தனிமனிதச் சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலைநாடுகளில் ‘மது கூடாது’ என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து, நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.
தமிழ்ப் பெண் குறளின் வழி நடந்தால், வாழ்வில் சிறக்கலாம்’ என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ‘பெண்வழிச் சேரல்’ அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் ஆண்களைத் திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார். ’பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலாது. அவனுடைய பிறவிக்கு நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும்.’ பெண்ணின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. ‘பெண் சொல் கேளேல்’ என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.
சமூக மாற்றத்தில் திருக்குறளின் கருத்துகள் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவது இயல்புதான். திருக்குறளில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு முரண்பாடான கருத்துகள் உள்ளன என்ற புரிதலுடன் அணுகிட வேண்டியுள்ளது. எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வருகின்ற கருத்துகள் அடங்கிய நூல் என்று எதுவும் இருக்க வாய்ப்பில்லை. எனவே திருக்குறள் நூலில் எந்தக் கருத்துகள் சம கால வாழ்க்கையை மேம்படுத்திடப் பயன்படுகின்றன என்று கண்டறிந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.
அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வலியுறுத்துகிற சில திருக்குறள்கள் சான்றாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவை இடம், மொழி, இனம், சமயம், பால் கடந்த நிலையில் உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த அட்டவணை இன்னும் நீளும். திருக்குறள் நூலை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய மனநிலைக்கு ஏற்புடைய குறள்களைக் கண்டறிந்து தொகுத்திட வேண்டும். அந்தக் குறள்களைத் தேவையான நேரத்தில் வாசிக்கும்போது, மனதில் தெளிவும் உறுதியும் பெருகும்.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியரா தலும் வேறு
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
திருக்குறள் வலியுறுத்துகிற வாழ்வியல் நெறிகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத் தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும் திருக்குறளுக்குமான உறவு, என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது. திராவிட இயக்கத்தினரால் கடந்த நூறாண்டுகளுக்கும் கூடுதலாக முன்னிலைப்படுத்தப்படும் திருக்குறள் பிரதியானது, சமகாலத் தமிழர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. வெறுமனே அறம் அல்லது நீதி என்று திருக்குறளைக் கடந்திடாமல், வாசிப்பில் ஏற்படுகின்ற அனுபவங்கள் முக்கியமானவை. திருக்குறள், சமூகமாகக் கூடி வாழ்கின்ற மனிதர்களுக்கிடையில் தோன்றுகிற முரண்களைச் சீராக்கிடவும், செம்மையான வாழ்க்கை வாழ்வதற்கான பின்புலத்தையும் முன்னிறுத்தியுள்ளது. திருவள்ளுவர் நீதி, சட்டம் என விதிகளைவிட, தனிமனித மனதில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்துகின்றார். பண்டைக் காலத் தமிழர் சமூக வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று கண்டறிந்து, ஆழமாகச் சிந்தித்து, திருவள்ளுவர் எழுதியுள்ள குறள் வரிகள், பல நூற்றாண்டுகள் கடந்த பின்னர் இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்புடையதாக இருக்கின்றன. அதுதான் திருக்குறள் பிரதியின் ஆகப் பெரிய பலம்.
சான்றாதாரம்
ஆனைமுத்து.வே, ஈ.வே.ரா.சிந்தனைகள், திருச்சி: சிந்தனையாளர் கழகம் வெளியீடு, 1974.
திருக்குறளும் பெரியாரும் (தொ). சென்னை: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, 1983.