முதல் பார்வை:
மாரி. செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படத்தின் முன்பார்வைக் காட்சிகளை ஒட்டிப் பலரும் அதீத உணர்வுகளைக் காட்டியதாகத் தோன்றியது. அதனால் படத்தை உடனடியாகத் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டியதில்லை என்றே முடிவு செய்திருந்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் வந்த நம்பகமான விமரிசனக் குறிப்புகளின் அடிப்படையில் எட்டாவது நாள் மதுரையின் புறநகர்ப்பகுதியான திருநகரில் உள்ள திரையரங்கில் வாழை படத்தைப் பார்த்தேன்.ஒரு சினிமாவின் முன்பார்வை (Preview Show)க் காட்சிக்கு அழைக்கப்படுபவர்களின் நெருக்கடி விளக்கமுடியாத ஒன்று. அப்படிப் பார்த்தவர்களால் கறாரான விமரிசனக் குறிப்புகளை எழுத இயலாது. படத்தோடு தொடர்புடையவர்களின் அழைப்பின் பேரில் சென்று படத்தைப் பார்த்துவிட்டுக் கறாரான விமரிசனங்களை – குறைகளையும் நிறைகளையும் சொல்ல முடியாமல் தவித்த நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்கள் எழுதும் விமரிசனக் குறிப்புகளை ஏற்றுப் படங்களைப் பார்க்கும் ஆர்வம் தோன்றுவதில்லை. அதுவும் சமூக ஊடகங்களின் பெருக்கத்திற்குப் பிறகுப் பலதடவை ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. நானே முன்பார்வைக் காட்சிகளுக்குப் பின் நேர்ப்பேச்சில் சொன்ன விமரிசனக் குறிப்புகளை எழுதாமல் தவிர்த்திருக்கிறேன். இந்த எச்சரிக்கையே வாழை படத்தை உடனடியாகப் பார்ப்பதைத் தள்ளிப் போட வைத்தது.
மாரி.செல்வராஜ் நானிருந்த திருநெல்வேலிக்காரர் என்பதும், சினிமாவுக்குள் இருப்பதற்கு முன்பே கவனிக்கத்தக்க புனைவல்லாத எழுத்துகளையும் புனைவுகளையும் எழுதியவர் என்பதும் அவரது படங்களைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒன்றாக இருந்துள்ளது. அதனால் அவரது பிற படங்களைப் பார்த்த தகவல்களை இங்கே சொல்லவும் தோன்றுகிறது. மாரி.செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாளை இரண்டாவது நாளும், கர்ணனை நான்காவது நாளும் திரையரங்கம் சென்று பார்த்துவிட்டு எழுதியிருக்கிறேன். மூன்றாவது படமான மாமன்னன் வெளியானபோது அமெரிக்கப் பயணத்தில் இருந்தேன். அதனால் உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனாலும் நான்காவது நாள் பார்த்து விடும்படி நேர்ந்தது. நான் இருந்த டெக்சாஸ் மாநிலத்து டாலஸ் நகரத்தில் தமிழ்ப் படங்கள் ஒருவாரத்துக்குக் காட்டப்படுவது அபூர்வம். அங்கு வலைச்செயலிகளில் வருவதற்குச் சில மாதங்கள் ஆகும் என்றனர். அதனால் உடனே பார்த்து விடலாம் என்று முடிவெடுத்துப் பார்த்துவிட்டோம்.
******
வாழை படத்தைத் திரையரங்கில் பார்த்த தேதி ஆகஸ்டு 29. அதற்குப் பிறகு நான் எழுதும் விமரிசனக்கட்டுரைகளை வெளியிடும் இடைநிலை இதழ்களில் அச்சாகப் போவதில்லை என்பதால் உடனடியாக விரிவான கட்டுரை எதுவும் எழுதவில்லை. படம் பார்க்கச் சென்ற அனுபவத்தோடு ஒரு பதிவொன்றை முகநூலில் எழுதினேன்:
நான் அதிகமும் பார்ப்பது இரண்டாம் ஆட்டம். நிதானமாக வீட்டிலிருந்து கிளம்பி இரவை எதிர்கொள்ளத் தயாராகும் வீதிகளையும் ஊரையும் வேடிக்கை பார்க்கலாம். உழைத்துக் களைத்துப் படம் பார்க்கக் காத்திருக்கும் மனிதர்களின் – பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதும், பல நேரங்களில் கூட்டம் அதிகம் இருக்காது என்பதும் காரணங்கள்.
எட்டாம் நாளில் வாழை படத்தைப் பார்க்கக் கூட்டம் அதிகம் இல்லை. முன்பதிவு செய்தவர்கள் கடைசி நேரத்தில் வந்து இருக்கை தேடி அமர்ந்து விடுவார்கள். நான் முன்பதிவு செய்யவில்லை. அதனால் வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டும் என்று ஒருமணி நேரம் முன்பாகவே போய்விட்டேன். நான் போனபின் இரண்டு ‘தொட்டி’ ஆட்டோக்களில் பெண்கள் கூட்டமாக வந்து இறங்கினார்கள். அவர்களும் முன்பதிவு செய்யாதவர்கள். வந்தவுடன் என்னைப் போலவே ‘டிக்கெட் கிடைக்கும்ல்ல’ என்று கேட்டுக்கொண்டார்கள். அரங்க வாசலில் இருந்தவர் ‘பெரிய ஸ்கிரீன் தான் டிக்கெட் கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டார். திண்டில் அமர்ந்து கொண்டார்கள். நான் காலாற நடந்து கொண்டிருந்தேன்.
காத்திருந்தபோது முந்திய காட்சி முடிந்து வெளியேறுபவர்களின் முகங்களில் சோகத்தின் சாயல் அப்பியிருந்தது. இருசக்கர வாகனங்கள் வேகம் காட்டாமல் நிதானமாக வெளியேறிப் போய்க் கொண்டிருந்தன. கூட்டம் போனபின் டிக்கெட் வாங்கும் வரிசையில் நின்றிருந்தேன். 10 ரூபாய், 20 ரூபாய்த்தாள்களோடு டிக்கெட் தருமிடம் வந்தவரிடம், உள்ளே இருந்தவர் ‘என்ன படம்?’ என்று கேட்டார். இவர் ‘வாழப்பூ’ என்று சொன்னார். உள்ளே இருந்தவர், “வாழையா” என்று திரும்பவும் கேட்டார். இவர் திரும்பவும் ‘வாழப்பூ’ என்றே சொன்னார். அவருக்காக நான் ஆமாம் வாழைதான் என்று சொல்லிவிட்டு எனக்கும் இரண்டு வாழை கொடுங்க என்றேன். இடம் தேடி நானும் மனைவியும் அமர்ந்து படத்தைப் பார்க்கத் தொடங்கினோம்:
“வாழை என்ற சொல், எந்த நிமிடமும் மறந்துவிட முடியாத வகையில் வாழை இலையாக, பூவாக, காயாக, பழமாக விரிந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு சட்டகத்திலும் விரியும் காட்சிகளும் சொற்களும் உரையாடலும் இது வாழையல்ல; வாழ்க்கை என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது.
தங்கள் துயரவாழ்க்கைக்கும் ஒடுக்கப்படுதலுக்கும் என்ன காரணங்கள் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்காத மனிதர்களின் அன்றாடங்களில் இருக்கும் கையறுநிலையையும் துன்பியலையும் சொல்லும் கலை உருவாக்கும் மனநிலை அது. ஆனால் மாரி. செல்வராஜ் அதனை மட்டும் படமாக்கவில்லை. அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் துள்ளலையும் இன்பியலின் கணங்களையும் சேர்த்தே இணைநிலைப்படுத்திக் காட்சிகளாக்கியிருக்கிறார். இப்படியானதொரு சொல்முறை தமிழ்ச் சினிமாவுக்குப் புதியது.
துன்பியலையும் இன்பியலையும் இணைநிலைக் காட்சிகளாக அடுக்கிக் கொண்டே படத்தை நகர்த்திப் போய்க் கடைசியில் மொத்தத்துயரத்தையும் பார்வையாளர்களிடம் கடத்திவிட்டு, இப்படியிருப்பதற்கான காரணங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது வாழை ; அதுதான் ஒரு கலைப்படத்தின் வேலை என்று கருதுகிறேன். இன்னும் விரிவாக எழுதவேண்டும். இப்போது வாழையைத் தன்னளவில் வாழப்பூவாகப் பார்த்தவரோடு இணைந்து கொள்கிறேன்”.என்று எழுதியிருந்தேன்.
இந்தக் குறிப்பை விரித்து எழுதியிருந்தால் இன்பியலையும் துன்பியலையும் இணைநிலைக் காட்சிகளாக்கிய மாரி. செல்வராஜின் திரைப்பட ஆக்கமுறையை விரித்து எழுதியிருக்கலாம். சிவனைந்தான் என்னும் இளம்பிராயத்துச் சிறுவனுக்கு விதிக்கப்பட்டதாக நம்பிய வாழ்க்கையில் எது விருப்பமானது? எது விருப்பமில்லாமல் சுமத்தப்பட்டது? என்பதை எப்படி இணைநிலையாக வைத்துள்ளார் என்பதைச் சொல்லியிருக்கலாம். சிவனைந்தானோடு இணையாகச் சுற்றித் திரிந்த சேகரின் துயரமுடிவோடு, சிவனைந்தான் சகோதரி, அவளது காதலன் கனி ஆகியோரை உள்ளடக்கிய கிராமத்து உழைக்கும் மக்கள் சந்தித்த பெரும் துயரத்தின் அழிவுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்காக அவர் உருவாக்கிய புனைவுக் காட்சிகளின் பொருத்தப்பாடுகளையும் பேசியிருக்கலாம். அதற்காக அவர் தெரிவு செய்த குறிப்பான வெளியையும், காலம் பற்றிய தரவுகளையும் படத்தில் பொருத்தமாக வைத்து அவர் உருவாக்கிய நம்பகத் தன்மையையும் விரித்துப் பேசியிருக்கலாம். அரசியல் தாக்கம் பெற்ற கிராமத்திற்குள் இருந்து உருவான சிறுவனின் அக உலகமும் புற உலகமும் ஒரு சினிமாவில் காட்சிகளாக விரிக்கப்பட்டதின் நுட்பங்களைச் சொல்லியிருக்கலாம்.
இப்போது அவற்றையெல்லாம் விரித்துச் சொல்லிக் கொண்டிருப்பது தேவையற்றது. ஏனென்றால் பலரும் பாராட்டுவதற்காக விவரித்துப் பேசியும், மறுத்துப் பேசுவதற்காக விளக்கிச் சொல்லியும் சலிப்பை உண்டாக்கி விட்டனர். அதனால் அப்படியே விட்டுவிடலாம் என்று தோன்றியபோதிலும், பெருந்திரளாகத் திரையரங்கம் சென்று பார்த்துக் கொண்டாடிய நல்ல சினிமாவைப் போலியான காரணங்களால் எதிர்நிலையில் நிறுத்தியதை மனம் ஏற்கவில்லை. அதனால் திரும்பவும் பார்க்கத்தோன்றியது; எழுதத் தோன்றியது.
****
ஏற்பும் மறுப்பும் -பின்னணிகளும்
வாழை படத்தைத் திரும்பவும் வலைச்செயலிகளில் பார்த்தே ஆகவேண்டிய நெருக்கடிகளை வலைக்காணொளிகளில் வந்த வாதங்கள் உருவாக்கின. குறிப்பாக எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது வலைப்பக்கத்தில் எழுதிய கட்டுரையில், “வணிக நோக்கத்தோடு, மாரி.செல்வராஜ், திட்டமிட்டுக் காட்சிகளை உருவாக்கிப் பார்வையாளர்களைக் கவர்ந்துவிட்டார்” என்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டில் விந்து, கண்ணீர் என்ற இரு திரவங்களின் வழியாகப் பார்வையாளர்களைக் கரைத்து விட்டார் என்பதாகச் சொல்லியிருந்தார். அந்தக் கட்டுரையின் வரிகளைப் பின்னர் காணொலிப் பேட்டியாக ஒரு வலைத்தள அலைவரிசை ஒளிபரப்பவும் செய்தது. அந்தக் கட்டுரையும் பேட்டியும் சமூக ஊடகங்களில் பிரதியெடுக்கப்பட்டுப் பலரது கருத்துகளாகவும் மடைமாற்றம் பெற்று வாழை படத்தின் மீதும், அதன் இயக்குநர் மாரி.செல்வராஜ் மீதும் எதிர்நிலைக் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. சத்தமாக ஒலிக்கும் குரலோடு இணைந்துகொள்ளும் சமூக ஊடக நோய்க்கூறு ஆற்றும் வினைப்பாடு இது.
படத்தின் துன்பியல் முடிவுக்காக உருவாக்கப்பட்ட விபத்துக் காட்சியின் அடுக்குகளும், பின்னணியில் ஒலித்த ஒப்பாரி இசையின் இழைகளோடு கூடிய பாடலின் கணமும் சேர்ந்து பார்வையாளர்களிடம் போலியான சோகத்தையும் கண்ணீரையும் வரவழைத்து விட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு. இன்னொரு குற்றச்சாட்டு அந்த ஊரின் பள்ளிக்கூட ஆசிரியை மீது சிறுவன் சிவனைந்தானுக்கு ஏற்படும் ஈர்ப்பு, வயதுக்கு மீறிய ஒன்று; நடப்பில் சாத்தியமில்லாதது என்பது.
துன்பியல்: முடிவுக்கு முன் ஒரு விலகல்
19 பேரின் மரணம் என்பது கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த பெரும் விபத்து. அந்த விபத்திலிருந்து தான் தப்பிப்பிழைத்தது ஒரு தற்செயல் நிகழ்வு எனக்காட்டும் இயக்குநர் மாரி செல்வராஜ், தனது பதிலீடாகக் கதைக்குள் உருவாக்கப்பட்ட சிவனைந்தானின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சித் துண்டுகளையே தொகுத்துத் தந்துள்ளார். அந்தத் துண்டுகளில் இழையோடும் சோகத்தையும் வறுமைநிலையையும் மட்டும் காட்டாமல், துள்ளலான சில கணங்களும், மகிழ்ச்சியான பள்ளிப்பருவ நிகழ்ச்சிகளும் இருந்தன எனக்காட்டுகின்றார். அப்படிக் காட்டுவதும் புனைவுக்காட்சிகளை அடுக்குவதும் கலையின் இயல்பு என்பதைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளவே செய்வர். இந்தப்படத்திற்கு முன்னாலும் சில படங்களில் அத்தகைய காட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். நல்ல உதாரணமாகப் பாலாவின் பிதாமகனைச் சொல்ல நினைக்கிறேன்.
பிதாமகனின் மையப்பாத்திரத்தின் துன்ப முடிவுக்கு முன்னால் கொண்டாட்டமான நிகழ்வொன்றை அதன் இயக்குநர் பாலா உருவாக்கியிருப்பார். ஒரு படப்பிடிப்புக்கு வந்த நடிகை சிம்ரனையே கடத்திவந்து பல்வேறு படங்களின் பாடல்காட்சிகளின் தொகுப்புக்குக் குத்தாட்டம் போடுவார்கள் சூர்யாவும் சிம்ரனும். பெருந்துயரக்காட்சிக்கு முன்பு சில மகிழ்ச்சியான காட்சித் துண்டுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவது ஒரு உத்தி. படத்தோடு ஒன்றிப்போயிருக்கும் பார்வையாளர்களுக்கு இயக்குநர்கள் விரும்பியே உண்டாக்கும் விடுவிப்பு அது. வாழையில் அப்படியானதொரு விடுவிப்பை – விலகலை உருவாக்கும் பாத்திரமாக ஆசிரியர் பாத்திரத்தையும், அவர் கற்றுத்தரும் நடனக்காட்சியில் போடும் குத்தாட்டையும் வைத்துள்ளார். இதனை வணிக உத்தி என்பதாகப் புரிந்துகொள்ளாமல், துன்பியல் முடிவுக்கு முன் உண்டாக்கப்படும் விடுவிப்பாகப் புரிந்துகொள்ளவேண்டும். அத்தகைய விலகலைக் கலையியல் அனுமதிக்கவே செய்கிறது.
இது நடந்த கதை அல்ல. அந்தப் பெரும் விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களி ல்னும் ஒருவன் என்று விவரிக்கும் விதமாக இயக்குநர் தரவுகளைச் சுவரொட்டிகள் மூலமும், தினசரிப் பத்திரிகைகள் மூலமும் காட்சிப்படுத்தி நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறார். இப்படி ஏற்படுத்தும் நம்பகத்தன்மை அந்த ஒரு விபத்துக்கானது மட்டுமல்ல. அதைப் போலப் பல விபத்துகள் கண்டுகொள்ளப்படாமல் கடந்து போயிருக்கின்றன என்பது தமிழ்நாட்டின் வரலாறு . அதிலும் திருநெல்வேலிச் சீமையின் தனித்த வரலாறும் கூட.
இந்த நிகழ்வு நடந்த காலகட்டத்தில் தான் மாஞ்சோலையில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய போராட்டக்காரர்கள் பலரும் ஆற்றில் குதித்துத் தற்கொலைக்குள்ளானார்கள்; தூக்கிவீசிக் கொல்லப்பட்டார்கள் என்பதும் அங்கே நினைவுபடுத்துகிறது. கூட்டமாகக் கொல்லப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குப் பின்னே அவர்களின் வறுமையும், சாதியடுக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதும் காரணங்களாக இருக்கின்றன. பெருந்துயரங்களை நினைவுபடுத்தி வெகுமக்களின் பிரக்ஞையோடு வினைபுரிவதுதானே கலையில் வேலை. அதைத்தான் வாழையில் மாரி செல்வராஜ் செய்துள்ளார்.
பாலியலும் பரிவும்
வாழையில் இடம்பெற்றுள்ள ஆசிரியை பாத்திரத்தை ஏற்காமல் – அந்த ஊரில் அப்படியொரு நிறத்தோடும் துருதுருப்போடும் ஆசிரியை ஒருத்தி இருப்பதே சாத்தியமில்லை என்று வாதிடுபவர்களை விதண்டாவாதிகள் என ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், ஆசிரியையின் கர்சீப்பை முகர்ந்து பார்த்தல், அழகா இருக்கீங்க என்று சொல்லுதல், அவளது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைதல் போன்ற காட்சிகளைக் காமத்தோடு இணைத்துப் பேசும் வாதங்களும் விதண்டாவாதங்கள் என ஒதுக்கவேண்டியவை என்று சொல்ல முடியாது.
ஆசிரியையும் சிவனைந்தானும் இடம்பெறும் காட்சிகள், அவனது புழங்குவெளிகளின் இயல்பையும் அவற்றின் மீது அவனுக்குள்ள ஈர்ப்பையும் விருப்பமின்மையையும் காட்டுவன. படம் முழுக்க அவன் புழங்கும் இடங்களாக இருப்பன வீடும் வாழைத்தார் சுமக்கும் தோட்டமும் பள்ளிக்கூடமும், மேய்ச்சல் நிலமும் கால்வாயுமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் வீடுXபள்ளிக்கூடம் என இரட்டை எதிர்வாகக் கொள்ளமுடியும் அவனது வீடும் வீட்டின் உறுப்பினர்களும் கட்டுப்பாடுகளை உண்டாக்குபவை . அந்த வெளியில் அன்புக்குரிய அம்மாவும் அக்காவும் இருக்கிறார்கள் என்றாலும், வறுமை இருக்கிறது; படிப்புக்குத் தடைபோடும் கட்டுப்பாடு இருக்கிறது. அதற்கு மாறான் வெளியாக் இருப்பதுபள்ளிக்கூடம். அது அவனுக்கு வழங்குவது சுதந்திரம். அங்கே கமல் -ரஜினி எனச் சினிமாவைப் பற்றிப் பேச, பிடித்த சினிமாப்பாடல்களை விவாதிக்க நண்பன் சேகர் இருக்கிறான். அவன் நன்றாகப் படிப்பவன் என்பதற்காகப் பாராட்டும் ஆசிரியைகள் இருக்கிறார்கள் . தான் சொல்வதைச் சிரித்துக் கொண்டே ஏற்றுத் தலையைக் கோதிவிடும் பிரியமான ஒரு ஆசிரியை பூங்கொடி இருக்கிறாள். சிவனைந்தானுக்கும் அவனது நண்பன் சேகருக்கும் ஆசிரியை மீதிருக்கும் உறவைப் புரிந்துகொள்ள, இவையெல்லாமும் பயன்படக்கூடியன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ‘கர்சீப்பை’ முகர்ந்து காமத்தை வெளிப்படுத்தினான் என விவாதிப்பது சரியானதல்ல.
சிறுவர்களின் மன இயல்புகளையும் புழங்கு வெளிசார்ந்து அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள வேறுபாடுகளையும் ஏற்காமல் தான் ஆசிரியை சார்ந்த காட்சிகள் இங்கு எதிர்மறை விமரிசனங்களைச் சந்திக்கிறது. விமரிசித்தவர்கள், சிறுவனின் பாலியல் ஈர்ப்புக்காட்சிகள், பார்வையாளர்களின் ஆழ்மனப் பாலியல் விருப்பங்களை ஈடுசெய்கின்றன என்பதாக விளக்கம் கூறினார்கள். ஆசிரியையாக நடித்தவரின் முகமும் உடலும் பார்வையாளர்களின் பாலியல் விருப்பங்களின் தீனிக்குரியதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது சிவனைந்தானின் இடம் இல்லாமல் ஆகிறது; பார்வையாள ஆண்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்கிறார்கள் என்பது சொல்லப்பட்ட உளவியல் பார்வைகள். இவையெல்லாம் வணிகப்படங்களில் திணிக்கப்படும் கனவுப்பாடல்களை, மதுக் கோப்பைகளோடு ஆடும் ஆட்டக்காரிகளின் தனி நடனத்தைப் போன்றன என்ற நிலைக்கு விவரிக்கப்பட்டது.
இத்தகைய பார்வைகள் பாலியல் ஈர்ப்புகள் உருவாவதற்கான காரணங்களை அறியாதவர்களின் எண்ணங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. குழந்தமைப் பருவத்தைக் கடந்து பதின்வயதில் நுழையும்போது உண்டாகும் ஈர்ப்பு – காமம் சார்ந்த ஈர்ப்பின் தொடக்கம். அது ஒன்றின் இடத்தில் இன்னொன்றை இட்டு நிரப்பிக் கொள்ளும் எத்தணிப்பு கொண்டது. அம்மாவின் முந்தானைக்குள் முடங்கிப்படுத்த குழந்தைமை முடியும்போது இன்னொரு பெண்ணின் மீது அதே ஈர்ப்பு உண்டாகும் சாத்தியங்கள் கொண்டது.
கூட்டுக்குடும்பங்களில் பதின் வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பலவிதமான வாய்ப்புகள் உண்டு. அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவுகளாகவும் இருக்கலாம்; மீறிய உறவுகளாகவும் இருக்கலாம். வயது தாண்டிய அந்த ஈர்ப்பு, அந்த இடத்தைச் சகோதரிக்குக் கூடத் தந்துவிடும். நவீனத் தமிழில் அப்படியான உறவுகளைக் குறித்து எழுதப்பட்ட புனைகதைகள் கிடைக்கவே செய்கின்றன. அவ்வகைப் புனைகதைகள் கொண்டாட்டத்திற்குரியதாகவும் இருந்துள்ளன. ஆனால் திரைப்படத்தில் இடம்பெறும்போது முகம் சுழிக்கிறோம். சிவனைந்தான் ஆசிரியையிடம் காட்டும் ஈர்ப்பு அப்படியான ஒன்றுதான். அவளது அழகைச் சிலாகிக்கும்போதெல்லாம் அவனது மனதிற்குள் அவனது அம்மாவும் அக்காவும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவும் செய்கிறான். அதை ஒதுக்கிவிட்டுத் தவிப்புடன் விவாதிக்கும் நமது பண்பாட்டுச் சிக்கல்கள் எங்கே உள்ளது?.
1979 இல் பாலுமகேந்திரா தான் இயக்கிய அழியாத கோலங்களில் சிறார்களின் பாலியல் தேடலையும் விருப்பங்களையும் காட்சிப்படுத்திய விதம் இப்போது நினைவுக்கு வருகிறது. சிறார்களின் பாலியல் இயல்புகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம் விவாதப்படுத்திய படம் அது. அப்படத்தின் விவாதங்களும் காட்சிகளும் முகம் சுளிக்காமல் ஏற்கப்பட்டன. கவித்துவத்தன்மை கொண்ட காட்சிகள் நிரம்பிய படமாகவும், ஒவ்வொருவரின் இளமைக்கால நினைவுகளைத் திரும்பக்கொண்டுவந்த சினிமாவாகவும் கருதப்பட்டது அந்தப்படம். நாம் 40 ஆண்டுகளைக் கடந்து வராமல் அதற்கும் முன்பிருந்த பழைய மதிப்பீடுகளோடு சினிமாவை அணுகிப் பார்க்க நினைக்கிறோம் என்பதோடு, படத்தின் இயக்குநரின் பின்னணியும் விமரிசிப்பவர்களின் பார்வைக் கோளாறுக்குக் காரணங்களாகின்றன என்று தோன்றுகிறது.
வாழையின் கலையியல்
வாழை படத்தின் உருவாக்கம் நடந்ததை அப்படியே காட்டுகிறேன் எனச் சொல்லும் இயற்பண்புவாதத்தன்மையுடையதல்ல.இந்தப் பின்னணியில் இப்படி நடக்கும் வாய்ப்புகள் உண்டு எனச் சொல்லும் நடப்பியல்வாதத் தன்மையோடு கூட அந்தப் படம் உருவாக்கப்படவில்லை.இயக்குநர் மாரி.செல்வராஜ், படத்தின் தொடக்கத்திலும் இடைவேளையிலும் தேடி அலையும் காட்சித் துணுக்குகளையும்,பிளிறலான ஒலியும், உடுக்கடி ஓசையும் கொண்டு தனது படத்தின் ஆக்கத்தன்மையை உணர்த்தும் குறியீடுகளை வைத்துள்ளார். அவனின் தேடுதல் மாடா? வீட்டில் கிடைக்காத விடுதலையா? அந்த தேடலின் காட்சிகளுக்குப் பின்னால் இருந்த அந்த துயரமான நினைவா? சிவனைந்தானின் மனதில் புதைந்து கிடக்கும் அந்தத் துயரநாளின் நினைவுகள்தான் உண்மை.
சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 20 பேராக இறந்த போகவிருந்த கூட்டத்தில் தப்பித்த ஒருவனின் வாழ்க்கையில் நடந்த குறிப்பிட்ட கால நிகழ்வுகளே இந்தப் படம் எனச் சொல்லும் சொல்முறை அது.
அந்தத் துயர நிகழ்வுக்கு முன்னால் அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் ஈரமும் கோரைகளும் அப்பிய வரப்புகளில் வாழைத்தார்களைச் சுமந்த வாழ்க்கை அவனுடைய இளமைப்பருவமாக இருந்தது என்கிறது படம். பெருஞ்சுமையைச் சுமந்த நாட்களோடு, சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன எனக் காட்டுகிறது. அந்த மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கிய இடத்தில் முக்கியமாக இருந்தவர் ஆசிரியை பூங்கொடி எனக்காட்சிப்படுத்துகிறது. பூங்கொடி, அவனது குடும்ப உறவுக்கு வெளியே இருப்பவள். மற்றவர்கள் எல்லாம் அவனது குடும்ப உறுப்பினர்களாக, சொந்தங்களாக, நட்புக்களாக இருந்தவர்கள். ஆனால் பூங்கொடி வெளியில் இருந்து வரும் வெளிச்சம். அந்த வெளிச்சம் அவனுக்குக் கல்வியைத் தருகிறது; ஆடலைச் சொல்லித்தருகிறது; பயணிக்க உதவுகிறது. அது வீட்டுக்குள் கிடைக்காத விடுதலையின் அடையாளம்.
பூங்கொடி போன்று மாணவர்களிடம் பிரியம் காட்டும் ஆசிரியைகளும் உண்டு; ஆசிரியர்களும் உண்டு. சிறப்பாகப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மீது காதல் வயப்படும் பதின்வயது மாணவிகளும் பள்ளியில் இருக்கவே செய்கிறார்கள்.பள்ளிப்படிப்புக் காலத்தில் மட்டுமல்லாமல் உயர்கல்வி கற்கும் காலங்களிலும் உண்டு. அந்த உறவுகளில் காதலும் மோகமும் இருக்கும். தனது பதவி காரணமாக உருவான அதிகாரத்தைப் பயன்படுத்திச் சுரண்டும் குற்ற நடவடிக்கைகளும் நடப்பது உண்டு. எனது ஆசிரியப்பணிக் காலத்திய அனுபவங்களோடு இதனைச் சொல்கிறேன்.
எல்லாவற்றையும் ஒழுக்கவாதத்தோடு பார்ப்பது அறவியல் பார்வை. மனித உடலின் இயல்புகளையும் மன உணர்வுகளையும் ஏற்று வெளிப்படுத்த நினைப்பது கலையியல் நோக்கு. வாழையில் வெளிப்பட்டது கலையியல் நோக்கு என்பதில் எனக்கு மறுப்பு இல்லை.