Raj & DK இயக்கத்தில் வெளிவந்த The family Man வெப் சீரிஸ் பற்றி ஏற்கனவே உயிர்மையில் எழுதியிருக்கிறேன். திரும்பிப் பார்ப்பதற்குள் Farzi, Guns and Gulaabs, Citadel Honey Bunny என ஏராளமான தொடர்களை எடுத்துவிட்டார்கள்.

இவற்றில் ஃபார்ஸி (Farzi) என்ற வெப் சீரிஸ் 2023 பிப்ரவரியிலேயே வந்துவிட்டது. அமேசான் பிரைமில் வந்த தொடர்களில் அதிகம் பார்வையாளர்களைக் கொண்ட தொடர் இதுதான். எனக்குத் தெரிந்து எல்லோருமே நல்ல ரேட்டிங்ஸைக் கொடுத்திருந்தார்கள். 2023க்கான Filmfare OTT award-ம் வாங்கியிருக்கிறது. ஆனாலும், மிக சமீபத்தில்தான் இந்த வெப் சீரிஸைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் இருக்கும் பல விசயங்கள் ஃபார்ஸி வெப் சீரிஸிலும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. Encounter, தேசபக்தி, பாகிஸ்தான் என எல்லாவற்றைப் பற்றியும் இரண்டு தொடர்களிலும் ஒரேமாதிரியான பார்வையைத்தான் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, தி ஃபேமிலி மேனில் வரும் மனோஜ் பாஜ்பாய் கதாபாத்திரத்திற்கும் ஃபார்ஸியில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கும் ஏகப் பொருத்தம். இரண்டு கதையிலும் வரும் முக்கிய கதாப்பாத்திரம் நாட்டுக்காக அல்லும்பகலும் உழைக்கும்போது, அவனுடைய மனைவியை இன்னொருவன் கவர்ந்துகொண்டு போய்விடுகிறான் என்பது உள்பட.

ஆனாலும், Raj & DK இன்றைய இந்தியாவின் costly-யான வெப் சீரிஸ் இயக்குநர்கள். மிக அதிகமான பொருள் செலவில் பிரமாண்டமான தொடர்களை எடுக்கிறார்கள். ஃபார்ஸி என்ற இந்தத் தொடருக்காக விஜய் சேதுபதிக்கு 7 கோடி சம்பளம் கொடுத்ததாகக் கூறுகிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தவிர, ஷாகித் கபூர், கே.கே.மேனன், ராசி கன்னா என காஸ்ட்லியான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஷாகித் கபூருக்குத் தமிழில் நடிகர் ஜீவா குரல் கொடுத்திருக்கிறார். அலோம் பாலேகர் என்ற நடிகருக்குத் தமிழில் நடிகர் நாசர் குரல் கொடுத்திருக்கிறார்.

எனக்கு, Raj & DK இயக்குநர்களின் திரைக்கதை உட்பொருளில் கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்குமே தவிர, அவர்களின் திரைக்கதை எழுத்து மிகவும் பிடிக்கும். கதைக்குத் தேவையான நடிகர்களைக் கொண்டுவந்துவிடுவார்கள். அவர்களிடமிருந்து stellar performance-ம் வாங்கிவிடுவார்கள். Elegant lifestyle & dialogue நிறைந்திருக்கும். செலவு! அதைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். இந்த வெப் சீரிஸில் ஒரு கப்பலையே கொண்டுவந்து கரையில் மோதி நிறுத்தியிருக்கிறார்கள் என்றால் பாருங்கள்! Quality-யில் எந்த compromise-ம் செய்துகொள்ளாத super material-தான் இந்த ஃபார்ஸி. முதலில் இந்த வெப் சீரிஸின் கதையைப் பார்த்துவிடலாம்.

சன்னி என்ற சந்தீப் ஓர் ஓவியன். சில ஓவியர்கள் landscape வரைவார்கள்; சிலர் portraits வரைவார்கள்; சிலர் still life வரைவார்கள்; சிலர் modern art வரைவார்கள்; சிலர் oil paint; சிலர் water colour; சிலர் sketch. ஆனால், சன்னி எல்லா ஓவியங்களையும் சிறப்பாக வரைவான்.

சன்னிக்கு அப்பா அம்மா இல்லை. தாத்தா மாதவ் என்பவரிடம் வளர்கிறான். அவரும் ஓர் ஓவியர். Kranti (Revolution) என்னும் பத்திரிகையை நடத்தி வருகிறார். பத்திரிகையின் விற்பனை குறைந்து நொடிந்து போயிருக்கிறார்கள். கொடுத்த கடனைக் திருப்பிக்கொடுக்கவில்லை என்பதால் க்ராந்தி பத்திரிகை அச்சுக்கூடத்தை எடுத்துக்கொள்ளப் போவதாகக் கடன்காரர்கள் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கஷ்டம் தாங்க முடியாமல், “Tax-ஐ ஓடிப்போய்க் கட்றோம். சீட்டுக் கட்டிக் காசு சேகரிக்கிறோம். கிரிடெட் கார்ட தேய்ச்சு தினந்தோறும் செலவை ஓட்டிர்றோம். பணத்துக்கு மறுபடியும் கடன் வாங்குறோம். அப்புறம் அந்தப் பணத்தைக் கட்டுறதுக்கு மீட்டர் வட்டி வாங்குறோம். இந்த சிஸ்டத்தை பணக்காரன் அவன் வசதிக்கு ஏத்தமாதிரி உருவாக்கிக்கிட்டான். கஷ்டப்படுறவங்கதான் மெஜாரிட்டியா இருக்கோம். இங்க நமக்காக யோசிக்கிறதுக்கு யாரும் இல்லை. நாம் எல்லாம் middle class இல்லை! Middle finger class!”  எனப் புலம்பிக்கொண்டிருக்கிறான் சன்னி.

என்ன புலம்பி என்ன ஆகப் போகிறது. க்ராந்தி பத்திரிகையை மூடுவதற்கு நாள் குறித்துவிடுகிறார்கள். தன்னுடைய தாத்தா இருக்கும் வரைக்கும் இந்த க்ராந்தி பத்திரிகை உயிரோடு இருக்க வேண்டும். எப்பாடு பட்டாவது அதைக் காப்பாற்ற வேண்டும் என சன்னியும் அவன் நண்பன் ஃபைஸலும் போராடுகிறார்கள். கடன்காரர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஒரு மாதம் கால அவகாசம் வாங்குகிறார்கள்.

ஒரே மாதத்தில் வானம் பிளந்து கொட்டப் போகிறதா என்ன? சன்னியின் நண்பன் ஃபைஸல் குறுக்கு வழியை யோசிக்கிறான். அவனுக்கு அனீஸ் என்று ஒரு நண்பன் இருக்கிறான். அவன் இரண்டாம் நம்பர் வேலை செய்வதில் கில்லாடி. அவன்மூலம் மாஞ்சா பாய் அறிமுகம் ஆகிறான். சந்தையில் எந்தப் பொருள் விற்பனைக்கு வந்தாலும், அதைப் போல ஒரு duplicate பொருள் தயாரித்து விற்பவன். அவனிடம் சன்னியை அறிமுகப்படுத்துகிறார்கள்.

சன்னி நல்ல ஆர்ட்டிஸ்ட். அவன், “Duplicate பொருளைத் தயாரித்து, அதன்மூலம் பணம் சம்பாதிப்பதைவிட, நேரடியாகப் பணத்தையே duplicate-ஆ தயாரிச்சிட்டா என்ன? இந்தப் பணத்தையும் மனுசன்தான design பண்ணிருக்கான். அதை நாம பண்ணக் கூடாதா?” என நண்பனிடம் கேட்கிறான்.

புதிய 500, 2000 ரூபாய்த் தாள்களில் (கதை 2017-2018 காலகட்டத்தில் நடப்பதாக கொள்ளவேண்டும்) இருக்கும் விசயங்களை ஆராய்கிறார்கள். நடுவில் காந்தியடிகளின் படம். ஓரத்தில் electrotype water mark, ஒரு colour shifting security thread. ரூபாய்த் தாளின் வலது பக்கத்தில் emboss செய்யப்பட்ட 500 denomination. கோடுகள் மற்றும் விபரங்களின் மேல் பக்கத்தில் Bharath India என்ற micro எழுத்துகள் இருக்கின்றன. கோடுகளுக்கு நடுவில் super impose ஆகியிருக்கும் moire effect-கள் இருக்கின்றன. ஒரு விலையுயர்ந்த high class scanner-ஆல் கூட ரூபாய்த் தாளை மிகச் சரியாகப் படியெடுக்க முடியாது. இதற்கு ஓர் ஆர்ட்டிஸ்ட்தான் தேவை என்பதை உணர்கிறான் சன்னி.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தாள் கிடைப்பது கடினம். அதனால் 45gsm அளவுள்ள இரண்டு தாள்களை எடுத்து, அச்சடித்து ஒட்டுகிறார்கள். இதற்கு sandwich note என்று பெயர். அசல் ரூபாய்த் தாளைப் போல இருக்கும் கள்ளப்பணம் கிடைத்துவிடுகிறது. (Farzi என்றால் fake என்று பொருள்).

சன்னிக்குத் திருட்டுத்தனம் என்பது ஆரம்பத்தில் தேவையாக இருக்கிறது. பிறகு அதுவே ஒரு போதையாக மாறுகிறது. ”இதை செய்யறதுக்கு எனக்குக் காரணமே வேணாம். எனக்குப் புடிச்சிருக்கு நான் செய்யறேன்” என்கிறான். பேப்பர் குடோனிலிருந்து ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்குத் தேவையான தாள்களைத் திருடுகிறான். முதல் கட்டமாக 20 கோடி ருபாய் அச்சடித்து குஜராத்தில் இருக்கும் ஒரு MLA-க்கு டெலிவரி செய்கிறான்.

“நான் யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தல. இந்த சமுதாயத்தோட சிஸ்டத்துக்கு அன்போட ஆப்படிச்சுட்டு இருக்கேன். அது லட்சாதிபதிய கோடீஸ்வரனாவும், ஏழைய இன்னும் பிச்சைக்காரனாவும் மாத்துது. சொல்லப்போனா மார்க்கெட்ல extra பணத்தை இறக்குறேன். பணவீக்கத்துக்கு மருந்து தடவுறேன். Actually நான் social service பண்ணிட்டிருக்கேன்” எனத் தன் வேலையைப் பற்றிக் கிண்டலாகச் சொல்லிக்கொள்கிறான் சன்னி.

RBI-யில் பணியாற்றும் மேகா என்பவர் CT 600 என்ற scanner கருவியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். இந்தக் கருவியை வைத்து கள்ளப்பணத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார். ஆனால் உள்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறது.

ஒரு நாள் சன்னி ஹோட்டலில் தான் வைத்திருக்கும் கள்ளப்பணத்தைச் செலவு செய்கிறான். அந்த நோட்டு மேகாவின் கைக்கு வருகிறது. அது கள்ளப்பணம் என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நல்ல பணம் இல்லை என்பதை உணர்கிறாள். தன்னுடைய CT 600 scanner கருவியில் சோதித்துப் பார்க்கிறாள். அந்த எந்திரத்தாலும் கள்ளப்பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தண்ணீரில் ஊற வைத்துப் பார்க்கிறார்கள். ஒட்ட வைத்த தாள் இரண்டாகப் பிரிகிறது.

“இது sandwich note-ஆதான் இருக்கும்”னு நினைச்சேன். இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? இந்தக் கள்ள நோட்டை அச்சடிச்சவங்க பெரிய organization இல்லை. இந்தக் கும்பலுக்கு resource-ஓ infrastrucre-ஓ இல்லை. Just ஒரு offset printer-உம், அசைக்கமுடியாத talent-உம் தான் இருக்கு” எனத் தன் சக பணியாளர் பெண்ணிடம் சொல்கிறாள் மேகா.

மன்சூர் தலால் என்பவன் இந்தியாவிலிருந்து தப்பி தலைமறைவாக வாழும் குற்றவாளி. வெளிநாட்டில் கள்ளப் பணத்தை அச்சிடுவதும் அதை இந்தியாவிற்குள் கொண்டுவந்து சந்தையில் புழக்கத்தில் விடுவதும் அவன் தொழில். அவனே மிகப் பெரிய கொள்ளைக்கூட்டத்தின் தலைவன்தான் என்றாலும். அவனையும் சாய்ரா என்ற  பெண் அடிக்கடி வந்து, “உன்னோட நடவடிக்கைகள High Command கண்காணிக்கிறாங்க” என்று மிரட்டுகிறாள். யார் அந்த High Command? Raj & DK formula-வின்படி அவர்கள் நிச்சயம் பாகிஸ்தான் தீவிரவாதியாகவோ அல்லது ISI தலைவராகவோ இருக்கலாம். அடுத்த பாகம் வரும்போது தெரிந்துவிடும்!

மன்சூர் தலாலின் கையில் சன்னியும் ஃபைசலும் சிக்குகிறார்கள். அவன் சன்னிக்கு ஒரு வாய்ப்பைத் தரத் தயாராகிறான். “கேடித்தனத்துக்கு expiry date-உம் இல்லை. பேராசையைத் தடுக்க எந்த gate-உம் இல்லை.  Extra பணத்தை சம்பாதிக்கிறதும், extra பணத்தை சேர்க்குறதும் யாருக்குத்தான் பிடிக்காது. “என்னோட சேர்ந்திரு… உன்னோட talent என்னோட infrastructure…! ஒண்ணு சேந்தா பணத்தை அள்ளிரலாம்” என்கிறான் மன்சூர். “கள்ளப்பணம் perfect-ஆ இருக்கணும்’ன்னு அவசியம் இல்லை. ஆனா perfect’ன்னு machine-ஐ நம்ப வச்சா போதும்” அந்த ஆர்ட்டில் சன்னி கில்லாடி. அதனால் மன்சூர் அவனை அன்போடு ஆர்ட்டிஸ்ட் என அழைக்கிறான்.

நாட்டில் புழங்கும் கள்ளப்பணத்தைக் கட்டுப்படுத்த மைக்கேல் வேதநாயகம் IPS (விஜய் சேதுபதி) தலைமையில் Counterfeiting and Currency Fraud Analysis & Research Team (CCFART) என்ற படையை உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒவ்வொரு திறமையாளர்களை இந்தப் படையில் சேர்க்கிறார்கள். RBIயில் பணிபுரியும் மேகாவும் இந்தப் படையில் தன்னை இணைத்துக்கொள்கிறாள். இவர்கள் Dhanrakshak (பணத்தின் காவலன்) என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். CT 600 என்ற எந்திரத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள், கடைகளுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதன்மூலம் ஆங்காங்கே புழங்கும் கள்ளப்பணத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்.

மன்சூர் தலாலும் சன்னியும் இணைகிறார்கள். பன்னிரண்டாயிரம் கோடி ருபாய் கள்ளப்பணத்தை அச்சிடுகிறார்கள். அதைக் கள்ளப்பணம் என்றுகூட சொல்லமுடியாது. ஏனென்றால் அசல் பணத்திற்கும் இந்தக் கள்ளப்பணத்திற்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது. எந்த எந்திரத்தாலும் கண்டுபிடிக்கமுடியாது. அதனால் இதனை Super note என்கிறார்கள்.

பணத்தை அச்சடித்தாயிற்று, இப்போது அவற்றை இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டுமே? அதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய கஷ்டம். முதல் முறை அதற்காக முயற்சி செய்யும்போது மன்சூரின் கூட்டாளி, பிலால் என்பவன் மாட்டிக்கொள்கிறான். அவனைக் கைது செய்த மைக்கேல், அவன்மூலமாக மன்சூரின் நெர்வொர்க்கை எல்லாம் தெரிந்துகொள்கிறார்.

சன்னி ஒரு coffee shop-இல் வைத்து மேகாவைச் சந்திக்கிறான். இந்தச் சந்திப்பு மெல்ல வளர்ந்து காதலாகிறது.  அவளுடைய மொபைலில் ஒரு tracker-ஐ install செய்கிறான். அதன்மூலம் CCFART படையினர் என்ன என்ன செய்கிறார்கள் என்பது சன்னிக்குத் தெரிந்துவிடும். மன்சூர் கூட்டத்திலிருந்து ஒருவன் கொடுக்கும் தகவல் CCFART படையினருக்கு உதவியாக இருக்கிறது. ஒருவர் பணத்தை எடுத்துவர முயற்சி செய்வதும், இன்னொருவர் அவர்களைப் பிடிக்க முயற்சி செய்வதுமான cat and mouse விளையாட்டு மிகச் சுவையான காட்சிகள்.

இறுதியாக Trojan Horse என்ற முறைப்படி 12000 கோடி பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவந்துவிடுவார்கள். இப்போது இறங்கியிருப்பது கள்ளப்பணம் இல்லை, Super note. எந்திரத்தால்கூட இந்தப் பணத்தைக் கண்டுபிடிக்கமுடியாது. நல்ல பணத்தையும் இந்தக் கள்ளப்பணத்தையும் எரித்தால் நல்ல பணம் கொஞ்சம் மஞ்சலாக எரியும். கள்ளப்பணம் சிவப்பாக எரியும். இப்படித்தான் கண்டுபிடிக்க முடியும்!

மன்சூரிடம் இருப்பது ஒரு புத்திசாலியான ஆர்ட்டிஸ்ட் என்பது  CCFART படையினருக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால், சன்னிதான் அந்தக் கள்ளப்பணத்தை உருவாக்கிய ஆர்ட்டிஸ்ட் என்பது மேகாவுக்குத் தெரியாது. இருவரும் ஒருநாள் நெருக்கமாகிறார்கள். அப்போது மேகா சன்னியிடம் “ஒரு counterfeiter தன்னைத்தானே ஆர்ட்டிஸ்ட்’ன்னு நினைக்க ஆரம்பிச்சா, அவன் rules-ஐ break பண்ணுவான். அவன் art-ல ஒரு impression-ஐ உருவாக்கப் பார்ப்பான். அதாவது ஒரு signature மாதிரி, அப்புறம் அந்த obsession-ல என்னைக்காச்சும் ஒரு நாள் மாட்டிக்குவான்” என்று சொல்கிறாள்.

இருவருக்குள்ளும் கலவி முடிந்த அடுத்த நாள், முன்பு தான் ஒரு ஹோட்டலில் கைப்பற்றிய sandwich note-ஐயும் , தற்போது பிடிப்பட்ட supernote-ஐயும் நன்கு கவனித்துப் பார்க்கிறாள். அதில் ஓரிடத்தில் S என்ற குறியீடு இருக்கிறது. சந்தீப் (சன்னி) வேண்டுமென்றே அதை விட்டு வைத்திருக்கிறான். இரண்டு நோட்டுகளையும் டிசைன் செய்தவன் ஒரே ஆள்தான் என்பது தெரியவருகிறது. ஆர்டிஸ்ட்டைச் சுற்றி வளைத்துத் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் மன்சூருக்கும் சன்னிக்கும் பகையாகிவிடுகிறது. ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் மன்சூர் எனத் தப்பிக்க முடியாத அளவிற்கு மாட்டிக்கொள்கிறான். அதுவரை கட்டிக் காப்பாற்றிய க்ராந்தி பத்திரிகை அச்சுக்கூடத்தை மன்சூரின் ஆள்கள் தீ வைத்து எரித்து விடுகிறார்கள்.  அந்தத் தீயில் அவனுடைய தாத்தாவும் எரிந்து சாம்பலாகிவிடுகிறார். சன்னிக்கு இந்த விசயம் தெரியவரும்போது கடுங்கோபம் அடைகிறான். அதனால், உயிரைப் பணயம் வைத்து எடுத்துவந்த 12000 கோடி ரூபாய் கள்ளப்பணத்தை தீ வைத்து எரித்துவிடுகிறான் என்பதோடு   முதல் பாகம் முடிந்திருக்கிறது. இரண்டாம் பாகம் 2025-இல் வரப் போவதாகத் தகவல்.

இயக்குநர்கள் Raj &  DK,  சீதா ஆர் மேனன், சுமன் குமார் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இத்தனை பேர் சேர்ந்து உழைத்தது வீண் போகவில்லை. வசனம் ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கின்றது.

எல்லாருக்குள்ளயும் ஒரு திருடன் இருக்கான். Just ஒரு chance-க்குத்தான் wait பண்றான்!

கலகத்துக்கும் புரட்சிக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். யார் தோக்குறானோ அவன் கலகக்காரன் ஆயிர்றான். யார் தோக்குறானோ அவன் புரட்சிக்காரன் ஆயிர்றான். கசப்பான உண்மை என்னன்னா ஜெயிக்கிறவன மட்டும்தான் வரலாறு ஞாபகத்தில வச்சுக்கும்!

கலையையும் குப்பையையும் ஒரு தப்புதான் வித்தியாசப்படுத்தும்!

திருட்டுக்கான காரணம் திருட்டாத்தான் இருக்கணும்!

நல்ல shirt போட்டாலே போதும் purse நிறையும்!

ஒரு விசயத்துக்கு சாவே கிடையாது. அதுதான் பேராசை. Greed define your character. You can’t change it!

நம்ம குண்டியில நெருப்பு வைக்கிற மாதிரி சம்பவம் வராத வரைக்கும், யாரும் ராக்கெட் மாதிரி மேல போக முடியாது!

Prostitution-தான் உலகத்திலேயே முதல் தொழில்ன்னு சொல்லுவாங்க. ரெண்டாவது counterfeiting. அப்போ! எவ்ளோ பழைய தொழில் பண்ணிட்டிருக்கோம். நமக்கு எதுக்கு மானம், வெட்கம், சூடு, சுரணை எல்லாம்?

பணமே கடவுள் இல்லைதான். ஆனா பணம் கடவுள் செய்யிற எல்லாத்தையும் செய்யுது!

இப்பிடி நிறைய வசனங்களைச் சொல்லலாம். விஜய் சேதுபதி உள்துறை அமைச்சருக்கு இடையே நடக்கும் காட்சிகளின் வசனங்கள் எல்லாம் கிண்டலும் கேலியுமாக இருக்கும். ஓரிடத்தில்,” Counterfeiting and Currency Fraud Analysis & Research Team – CCFART” என்பதைப் பற்றி ஒரு போலீஸ் விளக்கிக்கொண்டிருப்பார். அப்போது சேதுபதி, “டேய் என்னடா இப்பிடி பேரு குடுத்திருக்க…?” என்பார். “சார் இந்த பேரு Ministry-தான் குடுத்தாங்க!” என்பார் அவர். “அப்போ இது Ministry’s fart-ஆ!” என்பார் சேதுபதி. (fart – அபான வாயு!) இதுபோல, சேதுபதியின் அக்மார்க் முத்திரை உள்ள இடங்கள் நிறைய.

அதேபோல ஷாகித் கபூருக்கும் ராசி கன்னாவுக்கும் இடையே நடக்கும் காதலில் அவ்வளவு இன்பம் கலந்திருக்கும். ஒரு காபி ஷாப்பில் ஷாகித் கபூரும் (சன்னி) ராக்ஷி கன்னாவும் (மேகாவும்) பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஷாகித்தின் பழைய தோழி அவர்களுக்கு இடையில் நுழைவாள். அந்த உரையாடல் இப்பிடி இருக்கும்

பழைய தோழி: “Sunny and I often used to hang here. Infact இப்போ நீ சாப்பிட்டுக்கிட்டு இருக்குறதுகூட நான் எப்பவுமே recommend பண்றதுதான். By the way, you must try the Tiramisu here, It is heavenly here.”

ராக்ஷி:  “Sadly, I’ll have to settle for hell”

பழைய தோழி: “என்ன?”

ராக்ஷி: “இல்ல. எனக்கு dessert பிடிக்காது. (Tiramisu – Italian dessert)”

பழைய தோழி:“take my number down, நான் இவனப்பத்தி எல்லாத்தையும் சொல்றேன். Even his dirty secret!”

ராக்ஷி: “I’ll get it from him.”

இந்தக் காட்சியில் ஒரு காதல், ஒரு முதிர்ச்சி, ஓர் இளமை, ஓர் அழகு, ஒரு கிண்டல் எல்லாம் கலந்திருக்கும். Cool scene!

தமிழ் dubbing மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிலும் ஷாகித் கபூருக்கு நடிகர் ஜீவா குரல் கொடுத்திருக்கிறார். நான் இந்தியிலும் தமிழிலும் பார்த்துவிட்டேன். ஷாகித்துக்கு அவருடைய குரலைவிட நடிகர் ஜீவாவின் குரல் கனக் கச்சிதமாக இருக்கிறது. ராசி கன்னாவுக்கு ஐஸ்வர்யா பாஸ்கர் குரல் இனிமையாகப் பொருந்துகிறது. இவருடைய குரலைப் பல தமிழ் வெப் சீரிஸில் கேட்டுவிட்டேன். இவர் நடிகர் எம். எஸ். பாஸ்கரின் மகள் என்பது கூடுதல் தகவல். இந்த சீரிஸின் டப்பிங் பார்த்து நான் மிரண்டுபோன விசயம். தமிழ் டப்பிங்கில் விஜய் சேதுபதிக்காக TSK என்னும் திருச்சி சரவணக் குமார் குரல் கொடுத்திருக்கிறார். அச்சு அசல் விஜய் சேதுபதியின் குரல். இவர் சமீபத்தில் வந்த லப்பர் பந்து படத்தில் வெங்கடேஷ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படியாக, நல்ல விசயங்கள் இருந்தாலும், குறைகளும், நம்ப முடியாத காட்சிகளும், தேவையில்லாத காட்சிகளும் நிறையவே இருக்கும். உதாரணத்திற்கு, மைக்கேலுக்கும் அவர் மனைவிக்கும் இடையே நடக்கும் பிரச்சனை கதைக்குத் தேவையே இல்லாத ஆணி. இந்தப் பகுதிகள் இல்லாமல்கூட இந்த வெப் சீரிஸை சிறப்பாக எடுத்திருக்கமுடியும்.

அதேபோல,  ஏமன் நாட்டில் ஒளிந்திருக்கும் மன்சூர்கூட ஆர்டிஸ்டை ஒரே நாளில் கண்டுபிடித்துவிடுகிறான். ஆனால், இவ்வளவு பெரிய இராணுவ, போலிஸ் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்தியாவில் ஓர் ஆர்ட்டிஸ்டை கண்டுபிடிக்க அவ்வளவு பிரயத்தனப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்தக் கதைக்கு மன்சூர் ஆர்ட்டிஸ்டைக் கொல்ல முயற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. கதைப்படி கடைசியில் 12000 கோடி கள்ளப்பணத்தை எரிக்க வேண்டும். அதற்காக, வேண்டுமென்றே காட்சிகளை வளைத்திருக்கிறார்கள்.

இந்த வெப் சீரிஸில், தி ஃபேமிலி மேன் காட்சியைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இணைத்திருக்கிறார்கள்; Breaking bad வெப் சீரிஸின் கதைப் போக்கை உள்வாங்கிக் கள்ளப்பணம் அச்சடிக்கும் காட்சிகளாக உருமாற்றியிருக்கிறார்கள். “Night Manager, Criminal Justice, Hostage போன்ற பல தொடர்களின் சாயல்களைக் கலந்திருக்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டும் உண்டு. 2014-இல் சினிமாவாக எடுக்க முயற்சி செய்து, பிறகு வெப் சீரிஸாக மாற்றவேண்டிய தேவை வந்ததால் கிடைத்த இடத்திலிருந்தெல்லாம் உருவியிருக்கிறார்கள் போல!

இப்படி தேவையில்லாத கதைகளும், காட்சிகளும் இருந்தாலும்கூட; எத்தனையோ படங்களிலிருந்து கதைக்களத்தையும், காட்சிகளையும் சுட்டாலும்கூட, இந்த வெப் சீரிஸ் ஒரு superb entertainer crime drama thriller என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சமீபத்தில் மிகப் பெரிய நடிகர் நடித்து தமிழில் வந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாவற்றையும்விட ஃபார்ஸி மிகச் சிறப்பாக இருக்கிறது.

சென்ற மாதம் லக்கி பாஸ்கர் என்ற படம் வந்தது. எந்த ஆரவாரமும் இல்லாமல் Pan India படமாக மாறி, பல கோடிகளைச் சம்பாதித்துள்ளது. இதற்கும் அந்தப் படம் புதிய கதை எல்லாம் இல்லை. Scam 1992 என்ற வெப் சீரிஸை தோசையைத் திருப்பிப் போடுவதுபோல போட்டு, அத்தனை கோடிகளைச் சம்பாதித்துவிட்டார்கள். இதைப் போல, பணத்தைக் கொள்ளையடிப்பது அல்லது குறுக்கு வழிகளில் சம்பாதிக்கும் கதைக்களங்களைக் கொண்ட Money Heist, Breaking bad, Lupin, Narcos போன்ற வெப் சீரிஸ்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. காரணம் இளைஞர்கள்தான்.

வாழ்க்கையில் பணமே பிரதானம் என்பதை இளைஞர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள். வாழ்வியல் ஒழுங்கு பற்றிய போதனைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சிறுக சிறுகச் சேர்த்து வைத்துப் பணக்காரன் ஆவது எல்லாம் பழங்கதையாகிப் போனது. ஏதாவது பெரிய சம்பவம் பண்ணாமல் பணக்காரனாவது கடினம் என்பதை அறிந்துகொண்டார்கள். திரையில் ஒருவன் மிகப் பெரிய scam செய்து சம்பாதிப்பதைப் பார்க்கும்போது, தாங்களே அந்த வெற்றியை அடைந்துவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு நேர்மை பற்றி எந்த விருப்பமும் இல்லை. அவர்கள் கவலை எல்லாம் புத்திசாலித்தனமாகத் தப்பு செய்வது எப்படி என்பது மட்டும்தான். அந்த வித்தை மட்டும் தெரிந்துவிட்டால், பிரதமரே இறங்கி வந்து வணக்கம் வைப்பார். ஒரு நல்ல டீல் பேசி நாட்டையே கொள்ளையடிக்க வழி செய்துகொடுப்பார். வங்கிகளில் இருக்கும் பணம், LIC-யில் இருக்கும் பணம் எல்லாவற்றையும் எடுத்து நம் காலடியில் கொட்டுவார். அமெரிக்கா என்ன? ஆண்டவனே பிடி வாரண்ட் அனுப்பினாலும் கவலைப்படத் தேவையில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்!