தமிழ்நாட்டுச் சூழல்:

அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சிகள் வீரியத்துடன் செயல்பட்டன.  மக்களுக்குமே அவர்களுடைய கலகக்குரல் மிகவும் பிடித்திருந்தது.  அவர்களும் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துப் போராட களத்திற்குள் வந்தனர்.  குறிப்பாக, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு படுகொலைகள், காவல் நிலையத்தில் வைத்து வியாபாரிகள் இருவரை அடித்தே கொன்ற விவகாரம், சேலம் எட்டுவழி விரைவுச்சாலை எதிர்ப்பு, நீட் திணிப்பு, CAA, NPR சட்டங்களுக்கெதிரான போராட்டங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலம் முழுக்க, தமிழ்நாடு எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அதனால்தான் அன்று மக்களுக்குப் பல நன்மைகளும் கிட்டின.  தூத்துக்குடி ஓர் அரசு படுகொலைதான் என அன்றைய முதலமைச்சரே கிட்டத்தட்ட ஏற்றார்.  ஆனால் அது தனக்குத் தெரியாமல் நிகழ்ந்தது, தாமே அதைச் செய்தி ஊடகங்களின் வழியாகப் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.  அவருடைய இயலாமையும், ஆட்டுவித்தவன் இயக்க, இந்த பொம்மையும் ஆடுகிறது என்று ஊரறிய வெளிப்பட்டார்.  அதுவரை, கலவரம் செய்தனர் அதனால் சுட்டோம் என்றவர்கள், அதன்பின் சொற்களைத் திருத்திக் கொண்டனர்.  பொதுமக்களைச் சுட்டோம், எனவே உரிய இழப்பீட்டைத் தருகிறோம் எனப் பணிந்தனர்.  விசாரணை ஆணையத்தை அமைத்தனர்.

வியாபாரிகள், காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தரையில் உருண்டு புரண்டு அழுததால் நெஞ்சில் அடிபட்டு அதனால் இறந்துவிட்டனர் என்று போலீஸ் எழுதிக் கொடுத்த பொய்களை அப்படியே வழிமொழிந்து அசிங்கப்பட்டனர்.  பின் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அந்த வழக்கைத் தாமே எடுத்துக் கொண்டு விசாரிக்க, அவர்கள் அடங்கி ஒடுங்கி உண்மைகளை ஒப்பித்தனர்.  நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பணிந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை அனுமதித்தனர்.  குடியுரிமைச் சட்டங்களை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டனர்.  எட்டுவழிச்சாலை அமைப்பதைக் கைவிட்டனர்.  இப்படியான பல நன்மைகள் பொதுமக்களுக்கு அன்று எதிர்க்கட்சிகளால் கிட்டின.  அன்று எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகித்தது யார் ?  எதிர்க்கட்சித் தலைவராக இருந்தது யார் ?  ஆனால் இன்று அவர்கள் ஆள வந்துவிட்டனர்.  அவர்களுக்கு எதிராக இருக்கும் எதிர்க்கட்சிகள் செய்துக் கொண்டிருப்பது என்ன ?  இன்றைய எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்களிடையே இருக்கும் மதிப்புதான் என்ன ??

சட்டம் – ஒழுங்கு:

இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருக்கும், ஆளுங்கட்சிக்கெதிரான எதிர்க்கட்சிகளுக்கும் நிறைய போதாமைகள் உள்ளன.  அறிவுப்பற்றாக்குறை அதிகம்.  அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்றால் என்னவென்றே தெரியவில்லை.  மாறாக, தனிமனித வக்கிரங்கள், குற்றங்களுக்கெல்லாம் ஆளுங்கட்சியின் ஆட்சிதான் காரணம் என்கின்றனர்.  அதையே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்றும் மக்களிடையே பரப்புகின்றனர்.  மக்களும் இதில் கொஞ்சம் குழம்பினாலும், ஆளுங்கட்சியின் பாரபட்சமற்ற அதிரடி நடவடிக்கைகளால் திருப்தியாகி உடனடியாகத் தெளிந்தும் விடுகின்றனர்.  ஆனால் தெளியாமல் நிரந்தர போதையிலிருக்கின்றன இன்றைய எதிர்க்கட்சிகள் !

அய்யய்யோ, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைஞ்சிப் போச்சே என்று மாரிலடித்துக் கொண்டு பேட்டிகளைத் தரும் பழனிச்சாமி, அண்ணாமலை, சீமான், அன்புமணி போன்றோர், எந்தெந்தச் சம்பவங்களுக்காக ஒப்பாரி வைத்தனர் எனப் பாருங்கள்

1.) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை

2.) கிண்டி அரசு மருத்துவர் மீதான கொலைமுயற்சி.

3.) தஞ்சை அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் படுகொலை

4.) ஓசூர் வழக்கறிஞர்மீதான கொலைவெறித் தாக்குதல்

5.) தெலுங்கர்களை இழிவுசெய்து பேசிய கஸ்தூரியும், அவருடையக் கைதும், பிணையும் …

ஆம்ஸ்ட்ராங் ஏன், யாரால் கொல்லப்பட்டார் ?

வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் 29 பேர் குற்றவாளிகள் எனக் கைது செய்துள்ள காவல்துறை அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகலை அளித்துள்ளது.

அதில் அந்தப் படுகொலை ஏன் நடந்தது, யாரார் அதற்குத் திட்டம் தீட்டினர், யாரார் அதற்கு நிதியுதவி அளித்தனர்  என விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவில் புகழ்பெற்ற கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தபோதிலும், ஆம்ஸ்ட்ராங் கட்டப்பஞ்சாயத்து, முறைகேடான ரியல் எஸ்டேட் பேரங்கள், ரவுடிகளுடன் முன்பகை, தொழில்போட்டி என்றே அவருடைய வாழ்க்கை முறை இருந்துள்ளது.

இதில்தான் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்த ஒரு பெரு நிறுவனத்திடம் அவர்களை வேறு எவரும் மிரட்டாதவண்ணம் பாதுகாப்பளிப்பதாகவும், அதற்கு ஈடாக தமக்கு அந்த நிலத்தில் பங்கு கொடுத்துவிட வேண்டுமெனவும் டீல் பேசியிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரதானக் குற்றவாளியாக கருதப்படும் நாகேந்திரன் தற்பொழுது சிறையில் இருந்தாலும் அவர்தான் படுகொலை திட்டத்தின் மூளை என காவல்துறை நம்புகிறது.  அதற்கேற்ப அவருடைய மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங் டீல் பேசியிருந்த அந்த தனியார் பெரு நிறுவன முதலாளியிடம் போய் தனக்கும் பங்காகப் பல கோடிகள் வேண்டுமென மிரட்டியிருந்திருக்கிறார்.  எனவே ஆம்ஸ்ட்ராங் அஸ்வத்தாமனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.  நாகேந்திரனிடமிருந்து போன் வந்ததாகவும், தன் மகனும் வளர வேண்டாமா என்று கேட்டதாகவும் அந்தக் குற்றப்பத்திரிகை நீள்கிறது.

காவல்துறை எழுதியதில் இது ஒரு கோணம்.

ஆற்காடு சுரேஷ் படுகொலையில், அதைச் செய்ததாக கைதாகியுள்ள பாம் சரவணனுக்கு உடந்தையாக ஆம்ஸ்ட்ராங் இருந்ததாகவும், ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்றோ அல்லது அவர் கொல்லப்பட்ட நாளுக்குள்ளோ அவருடைய கொலைக்கு காரணமான பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் உட்பட அனைவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் ஆற்காடு சுரேஷின் காதலி புளியந்தோப்பு அஞ்சலை போன்றோர் சபதமெடுத்ததாகவும், நாகேந்திரன், மலர்க்கொடி போன்றோரின் பண உதவியுடன் அதைச் சாதித்ததாகவும் இன்னொரு கோணம் விரிகிறது !

சரி.  இதில் சட்டம் ஒழுங்கு எங்கு சீர்குலைந்திருக்கிறது எனப் பார்ப்போம்.

இவ்வளவு பெரிய கும்பல் திட்டம் தீட்டினால், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் கொல்லப்படுவார் என்பதைக் காவல்துறையின் உளவுத்துறை மோப்பம் பிடித்திருக்காதா?  அப்படி மோப்பம் பிடித்திருந்தால் அவர்கள் உடனடியாக ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டாமா ?

உண்மையில் காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு இதையெல்லாம் ஆற்காடு சுரேஷ் கொலையின்போதே ஊகித்துவிட்டது.  ஆம்ஸ்ட்ராங் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்பதையும் அது ஆம்ஸ்ட்ராங் தரப்பிடம் தெரிவித்துமிட்டது.  ஆனால் தன் தொழிலுக்கு தனக்கருகிலிருக்கும் காவல்துறையால் ஊறு விளையலாம் என்பதை உணர்ந்த ஆம்ஸ்ட்ராங் தன் பாதுகாப்புக்கு பிஸ்டல் மற்றும் தன் மெய்காப்பாளர்களை மட்டுமே நம்பினார்.  ஆட்கள் சூழ அவரிருந்த வரை எதுவும் நிகழவில்லை !

அவர் நீண்ட காலம் வசித்த, வாழ்ந்த மிகப் பரிச்சயமான இடத்தில் சொந்தவீடு கட்டுவதற்காகப் பாதுகாப்பில்லாது வந்து போவதை உளவறிந்த கொலைப்படை வாகாக்க் குறிவைத்து சில நொடிகளுக்குள் அவரை வெட்டிச் சாய்த்தது.  அன்றிரவே காவல் நிலையத்தில் சரணுமடைந்தது.

ஒருவேளை இவர்கள் இதற்கு முன்பு இதே கொலையை அரங்கேற்றப் பலமுறை முயற்சி செய்து, அதனால் சாலை, தெருவெங்கும் கலவரம் மூண்டு, அதனால் பொதுமக்கள் காயமடைந்து அல்லது பொருட்சேதமாகிப் பீதியாகியிருந்தால் அதைச் சொல்லலாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறதென்று.

மாறாக, ரகசியத் திட்டம் தீட்டி, தனியார் நிறுவன சீருடையைப் போட்டுக்கொண்டு நம்பிக்கைத் துரோகம் செய்து ஒருவரை வெட்டிச் சாய்ப்பதால் எப்படி சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகும் ?  அதிலும் கொல்லப்பட்டவர், ஒடுக்கப்பட்ட இனத்தின் பெருந்தலைவர் என்பதால் அவர் வெட்டப்பட்ட இரவு ஆளுங்கட்சியிலிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கூட எதிர்க்கட்சியினரின் புலம்பலை சில நிமிடங்கள் நம்பி, அப்படியே அவர்களும் வழிமொழிந்து கிடந்தது திகைப்பைத்தான் தந்தது.

ஆனால் அரசு என்ன செய்தது?  உடனடியாக சென்னை ஆணையரை மாற்றி, துடிப்பான இன்னொருவரை அந்தப் பதவியில் நியமித்தது.  அடுத்தடுத்த கைது படலங்கள் நிகழ்ந்தவண்ணமிருந்தன.  எளிதில் அவர்கள் தப்பவியலாதளவு அவர்கள்மீது குண்டாஸ் பாய்ச்சப்பட்டது.  மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.  சட்டம் – ஒழுங்கு குலைந்த மாநிலத்தில் இதெல்லாம் சாத்தியப்படுமா என்ன?  ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டவுடன் சாலை மறியல்கள் நிகழ்ந்தன.  உடலை வாங்க மாட்டோம் எனப் போராட்டம் வெடித்தன.  உடலை அவர் வாழ்ந்த தெருவில்தான் நல்லடக்கம் செய்வோம், அங்கேயே நினைவிடமும் எழுப்புவோம் என நீதிமன்றத்தை நாடினார்கள்.  அத்தனை கொதிப்புடன் இவை நடந்திருந்தாலும் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படாதவாறு அவர்களை அரசு பொத்திப் பாதுகாத்தது.  இதை யாராவது மறுக்க முடியுமா ?

இனி குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விசாரிக்கும்.  தர்க்கங்கள் நிகழும்.  தரவுகள் சரியாக இருந்து குற்றங்கள் நிரூபணமானால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.  அன்றுதான் உண்மை நிலை நமக்கு மேலும் தெரியவரும்.  இவ்வளவு தெளிவான நீரோடைபோல வெளிப்படையாக ஒரு கொலைவழக்கின் விசாரணைப் போக்கு நிகழும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல நாக்கில் இரட்டைப் பிளவு வேண்டும்.  அது நச்சரவங்களுக்கு மட்டுமே வாய்க்கும் !

கிண்டி அரசு மருத்துவர்மீதான கொலைமுயற்சி !

கிண்டியில் புதிதாகக் கட்டப்பட்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் கலைஞர் நூற்றாண்டு  நவீன மருத்துவமனையில்தான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது.  அந்த மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் தலைவராக இருந்து பணிபுரிகிறார் மூத்த  மருத்துவர் பாலாஜி.

அந்த மருத்துவமனைக்கு பிரேமா என்பவர் புற்று நோய் சிகிச்சைக்காகத் தொடர்ந்து வந்திருக்கிறார்.  பலமுறை சிகிச்சைக்காக உள்நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அவருக்கிருந்த நோயின் தீவிரம் காரணமாக கீமோ சிகிச்சைமுறை வழங்கப்பட்டிருக்கிறது.  புற்றுநோய்க்கான செல்களை லேசர் கதிர்கள் மூலம் பொசுக்கும் அந்த சிகிச்சை புற்றுநோயாளிகளுக்கு முக்கியமானது.  அதேவேளையில் பல பக்கவிளைவுகளையும் கொண்டது.  பொதுவாக, தலை முடி உட்பட அனைத்து உடல் ரோமங்களும் சிலருக்கு உதிரும்.  ஆனால் சிகிச்சை வெற்றியடைந்து நோயாளி மீண்டால் நாளடைவில் பக்கவிளைவுகளும் குணமாகலாம்.  இவையெல்லாமே இத்தகைய சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பெரும்பாலும் தெரியும். சொல்லப்பட்டும் விடும்.

பிரேமாவுக்கு கீமோ தெரபியின் பக்க விளைவாக நுரையீரல் பாதித்திருக்கிறது.  அதனால் அவர் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.  லேசர் சிகிச்சைகளின்போது வலி தாங்கமாட்டாமல் கதறியிருக்கிறார்.  இது பெரும்பாலோருக்கும் நிகழ்வதுதான்.  அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் இளம் பிஞ்சுகளையும் பாதித்திருப்பதைக் காணும்போது நெஞ்சு வெடிக்கும்.  எதிரிகளுக்கும், நம் முதுகில் குத்திய துரோகிகளுக்கும் கூட இத்தகைய நோய்கள் வந்துவிடக்கூடாது என்றுதான் நாம் வேண்டுவோம்.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமா, போன சில நாட்களுக்குள் மூச்சுத்திணறலால் சிரமப்பட, அவருடைய வீட்டுக்கருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.  அங்கிருந்த மருத்துவர்தான் “அரசு மருத்துவமனையில் தவறாக கொடுக்கப்பட்டிருந்த சிகிச்சைகளால்தான் பிரேமாவுக்கு நுரையீரல் முழுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகச் சொன்னார்” என்று பிரேமாவின் உறவினர்கள் கத்திக்குத்துச் சம்பவத்திற்குப் பின் பேட்டியளித்திருக்கின்றனர்.

இதில் பெருமளவு பொய்யும், புரிதல் குறைபாடுகளுமே குற்றவாளிகளுக்கு இருந்ததாகப் புலப்படுகிறது.

யார் இதில் குற்றவாளிகள் ?

ஒட்டுமொத்தமாக பிரேமா உட்பட பிரேமாவின் குடும்பம்தான்.  அவருடைய இரண்டு மகன்களுமே, தங்களின் தாய்க்கு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையே வழங்கப்பட்டன எனத் தீவிரமாக நம்புகின்றனர்.  மொத்தக் குடும்பமுமே துளியும் மருத்துவ அறிவில்லாமல் இருந்தது அவர்களளித்த பேட்டிகளிலேயே தெளிவானது.

தனியார் மருத்துவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்கிற காரணத்தையே கேடயமாகப் பிடித்துக் கொண்டு ஆயுதசகிதம் மருத்துவர் பாலாஜியின் அறைக்குள் நுழைந்த பிரேமாவின் மகன் விக்னேஷ், கத்தியினால் பலமுறை மருத்துவர் பாலாஜியை ஆவேசத்துடன் குத்தியிருக்கிறார் !

இதய நோய்க்கு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவர் பாலாஜி, எதிர்பாராத இத்தகையக் கொடூரத் தாக்குதலால் முற்றிலும் நிலைகுலைந்துப் போனார்.  எளிதில் உறைய வாய்ப்பில்லாத அவருடைய குருதி பெருகி வழிந்து அவருடைய அறையைக் குருதிப்புனலாக்கியது !

குத்திய குற்றவாளிக்கோ கொஞ்சமும் நெருடல் இல்லை.  குற்றவுணர்ச்சியுமில்லை.  பதட்டமுமில்லை. ஓடவுமில்லை ஒளியவுமில்லை.  ஆமாம், சாவகாசமாக நடந்து சென்றார் விக்னேஷ்.

ஆனால் அவரைக் கையும் கத்தியுமாக சக மருத்துவர்கள், பொதுமக்களே பிடித்துவிட்டார்கள்.  தர்ம அடியும் கொடுத்திருக்கிறார்கள்.  குற்றவாளி சிக்கினா போலீசிலதான ஒப்படைக்கணும், சட்டத்தை அவர்களே கையிலெடுத்துக் கொண்டு தாக்குவதா என்று விக்னேஷின் வழக்கறிஞர் அவர் பங்குக்கு யூடியூப்களில் பேசியது மேலும் நகைப்பையே வரவைத்தது.  உங்க கட்சிக்காரருக்கு இந்த அறிவுரையெல்லாம் கிடையாதா வக்கீல் சார் என்றும் சிலர் அவரிடம் கேட்டனர் !

நிற்க.  இதெப்படிம் சட்ட ஒழுங்கு  சீர்குலைவில் வரும் ?  விக்னேஷ் இதற்கு முன் எத்தனை அரசு மருத்துவர்களைத் தாக்கியிருக்கிறார் ?  எத்தனை மருத்துவமனைகளை அவர்களுடைய குடும்பம் நொறுக்கியிருக்கிறது ?  இவர்களைப் பற்றி முன்பே தெரிந்தா காவல்துறை அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகளைப் பெற விட்டது ?

அறியாமையால் உணர்ச்சிவயப்பட்டு எந்த திட்டமும் தீட்டாமல் செய்த ஒரு தனிநபருடைய முட்டாள்தனம் எப்படி சட்டம் – ஒழுங்கு சீர்குலைவால் உண்டாகும் ?

ஒருசிலர் விக்னேஷைப் போலவே உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற இளைஞர்களை நடுரோட்டில் வைத்துச் சுட்டால்தான் அடுத்து இப்படி கத்தியைத் தூக்கப் பயப்படுவார்கள் என்றனர்.  எத்தனையோ ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கின்றனர்.  சமீபத்தில்கூட பிரபல ரவுடிகளான திருவேங்கடம் காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா போன்றோரை என்கவுண்டரில் சுட்டது காவல்துறை.  இனி ரவுடியிசமே தமிழ்நாட்டில் இருக்காதா ?  கூலிப்படை கொலையாளிகள் அனைவரும் இந்தத் தொழிலை விட்டுவிட்டு திருந்திவிடுவார்களா ?

எப்படி சட்டத்தை, தீர்ப்பை நாமே நம் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாதோ, அதுவேதான் காவல்துறைக்கும் பொருந்தும்.  விக்னேஷுக்கும் நீதிமன்றமே உரிய தண்டனையை வழங்கும்.

சினிமாக்களில் அரசு மருத்துவரின் கையை முதுகுப்புறமாக இழுத்து முறுக்கி, மிரட்டிச் சாதிக்கும் ஹீரோக்களைப் பார்த்து ரசிக்கும் பக்குவமற்ற மூடர்கள்தான், தாமும் அதேபோல் செய்யவேண்டுமென்கிற உந்துதலுக்கு ஆட்பட்டு இப்படித் தன் வாழ்க்கையைத் தொலைப்பார்கள்.  பட்டுத் திருந்தட்டும் !

நல்வாய்ப்பாக, ஸ்டாலின் அரசு இதை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை.  சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதியும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களும் வந்துவிட்டனர்.  காயப்பட்ட மருத்துவருக்கான உயரிய சிகிச்சைகளுக்கு உத்தரவிட்டனர்.  மாலைக்குள்ளாக இயல்பு நிலைக்குத் திரும்பி உரையாட ஆரம்பித்துவிட்டார் மருத்துவர்.  அரசு மருத்துவர்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்கிற அரசின் உத்தரவாதத்தால் மருத்துவர்களின் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது.  அதுமட்டும் தீவிரமாக நிகழ்ந்ததைப் போல கற்பனை செய்தால்கூட குலை நடுங்குகிறது.  பல அப்பாவி நோயாளிகளின் உயிர்கள் பலியாகி பெரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டிருக்கும்.  ஆனால் அப்படி எதுவும் நிகழாது அரசு பார்த்துக் கொண்டது.  பெருங்கோபத்திலிருந்த அரசு மருத்துவர்களும் சமாதானமாகி அரசுக்கும், பொதுமக்களுக்காகவும் பொறுத்து, வேலை நிறுத்த முடிவைக் கைவிட்டது  அவர்களுடைய பெருந்தன்மையைக் காட்டியது.  இவர்களையா குறை கூறினோமென சில யூடியூப் வாயன்களே வெட்கித் தலை குனிந்தனர்.  இதைச் சாக்கிட்டு பேரளவில் திமுகவின் ஆட்சி நிர்வாகத்தைக் கேலி பேசலாமெனக் காத்திருந்த ராமதாஸ்களுக்கும், அண்ணாமலைகளுக்கும் அல்வாவை அள்ளி வாய்க்குள் திணித்திருந்தது தமிழ்நாடு அரசு !

தஞ்சை அரசு ஆசிரியர் படுகொலை !

வக்கிரமான ஆண் மிருகம் ஒன்று, தன்னை நம்பாமல், தனக்குக் கிட்டாத எதுவும் வேறார்க்கும் கிட்டக் கூடாது என்கிற தீய எண்ணத்தில் செய்த படுகொலை ஒன்றையும் சட்டச் சீர்குலைவு என்றே அணுகியது தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ரமணி.  தமிழ் ஆசிரியரான இவர் மதன்குமார் என்பவரை விரும்பியிருந்திருக்கிறார்.  இருவரும் காதலித்து வந்தாலும் மதன்குமாரின் நிலையற்ற வேலை காரணமாக, ரமணி தயங்கி கொஞ்சம் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார்.  ஒரே சமூகமாக இருந்தாலும் மதன்குமாரின் குடும்பப் பின்னணியைப் பிடிக்காத ரமணியின் குடும்பத்தாரும் இந்தக் காதலை அங்கீகரிக்கவில்லை !

ஆனால் மதன்குமார் வழக்கம்போல சமூகவலைத்தளங்களின் பூமர்களைப் போல கமெண்ட்களைப் போடும் மூடர்களுள் ஒருவராகி, பணம்தான் காதலா, வேலை இல்லாட்டி என்னை விட்டுட்டு வேற பசையுள்ள எவனையாவது கட்டிப்பியா என்றெல்லாம் ரமணியுடன் விதண்டாவாதம் புரிந்திருக்கிறார்.  எனவே இந்த மூர்க்கனை முழுக்கவே தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார் ரமணி.  அது மதன்குமாரை மேலும் சீண்டிவிட, சம்பவ நாளன்று மீன்களை வெட்டப் பயன்படும் கத்தியுடன் ரமணி பணிபுரியும் பள்ளிக்குச் சென்று அவரை சராமாரியாக வெட்டியுள்ளார்.  சம்பவ இடத்திலேயே ஆசிரியர் பலியானார்.  தப்பி ஓட முயன்ற கொடூரக் கொலையாளியும் உடனடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

நீங்களே சொல்லுங்க.  இதில் நாட்டின் சட்டம் – ஒழுங்கு எப்படி குலைந்துவிட்டது ?  மதன்குமாரைப் போலவா கத்தியை எடுத்துக் கொண்டு காதலிகளை அனைவரும் குத்தப் போய் கொண்டிருக்கிறோம் ?  நூற்றுக்கு தொண்ணூறு காதல்கள் தோற்றுத்தானே போகின்றன ?  வெல்லும் அந்த மீதி பத்து காதல்களிலும் ஐந்துதானே திருமணங்களில் முடிகின்றன ?  அந்த ஐந்திலும் ஒன்றிரண்டுதானே சாகும் வரை காதல் குறையாமல் நீடித்து வாழ்கின்றன ?

ஒவ்வொரு தோல்விக்கும் கொலை என்றால் நாட்டில் தினமும் பல்லாயிரம் கொலைகள் நிகழுமே ?

காதலிக்குத் தன் இணையின் வருவாய் போதாதெனப் பட்டால், ஆண்தான் தன் வருவாய் உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்  அல்லது காதலியை கன்வின்ஸ் செய்து எதிர்காலத்தில் சாதிப்பதாக உறுதியளிக்க வேண்டும்.  எதுவுமே முடியாத தன் கையாலாகாத்தனத்தை சினந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.  வைராக்கியத்துடன் உழைத்து அந்தப் பெண் முன்னால் உயர்ந்து நின்று காட்ட வேண்டும்.  அதைவிட்டு, காதலியை எவனாவது குத்திக் கொல்வானா ?

இந்த ஒரு கொலையாளியைக் கொண்டு நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குலைவு என்றுதான் சொல்லலாமா ?

கிட்டத்தட்ட இதே நாளில்தான் ஓசூரில் கண்ணன் என்கிற வழக்கறிஞர் ஒருவர் அவருக்குப் பரிச்சயமான ஒரு நபராலேயே அரிவாளால் தாக்கப்பட்டார்.  அது ஓசூர் நீதிமன்ற வாசலருகேயே நிகழ்ந்தது.  சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உடனுக்குடன் ஊரெங்கும் வைரலுமானது.  அவ்வளவுதான், திமுக ஆட்சியில் நாடே நாசாமாப் போச்சு என்று பழனிச்சாமிகள் வாயிலெடுக்க ஆரம்பித்தார்கள்.

உண்மை என்ன தெரியுமா ?

கண்ணனை வெட்டிய ஆனந்தகுமாரின் மனைவியும் ஒரு வழக்கறிஞர்.  ஆனந்தகுமாருமே ஓசூரில் ஒரு வழக்கறிஞரிடமே பணிபுரிகிறார்.  இவருடைய மனைவியிடம் தகாத முறையில் பேசுவதும், அவருடைய அலைபேசிக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்புவதுமாக கண்ணன் இருந்திருக்கிறார்.  இதையறிந்த ஆனந்தகுமார் முதலில் இருவர்மீதும் சந்தேகப்பட்டாலும் கண்ணன் மீதே முழுத்தவறு என்று உணர்ந்து, அவரைக் கொல்லத் திட்டமிடுகிறார்.  மனைவியும் உடந்தை.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுதானே ?  இன்று இருவரும் சிறையில்.  காயப்பட்ட கண்ணன் மருத்துவமனை ஐ.சி.யு.வில்.

ஒட்டுமொத்த மாநில வழக்கறிஞர்களும் எங்களுக்குப் பாதுகாப்பில்லை எனக் கொதித்தெழுந்து விட்டனர்.  பின், கண்ணனின் கதை கேட்டு தலை தாழ்த்திக் கொண்டனர்.  ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதானவர்களில் பாதிக்கும் மேல் வழக்கறிஞர்கள் என்பதுதான் கசக்கும் உண்மை.  சட்டத்தை வாழவைக்க வேண்டியவர்களில் பலரும் இப்படி ஒழுங்கீனமாக இருந்துகொண்டு நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என வியாக்கியானம் பேசலாமா ?

நஞ்சு அல்வா கஸ்தூரி

தெலுங்கு இன மக்களை மிகக் கீழ்த்தரமாகப் பேசி, அதனால் பல வழக்குகள் போடப்பட்டு, அதற்காக அவர் செய்த  முன்பிணையும் நிராகரிக்கப்பட்டு, பின் கைதானார் கஸ்தூரி.  தற்பொழுது திரையில் ஆபாச நடனம் ஆடிவரும் முன்னாள் கதாநாயகி இவர்.

சமூகவலைத்தளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், பார்ப்பன மேடைகளிலும் மிகவும் கீழ்த்தரமான பேச்சுக்களையும், உடல்மொழிகளையும் கொட்டுபவர் இவர்.  இதனால் பலருடைய சாபங்களுக்கும், கோபங்களுக்கும் ஆளாகினார்.

கலைஞர் குடும்பம் ஆந்திராவிலிருந்து வந்தது என்கிற பெரும்பொய்யை நிறுவ படாதபாடு படும் சிறுகூட்டத்தில் இவரும் ஓர் ஆள் என்பதால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாக வகைதொகையில்லாமல் வசமாய்ச் சிக்கினார்.

மாநிலத்தில் ஆங்காங்கே தெலுங்கு இன மக்களால் இவருடைய இந்த அவதூறுகளுக்கெதிராகப் புகார்கள் பதியப்பட்டன.  தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் கஸ்தூரியை உடனடியாக இந்த வழக்குகளுக்காக்க் கைது செய்திருக்க முடியும்.  ஆனால் அரசு இவர் ஒரு பெண் என்பதால் கொஞ்சம் பொறுமை காத்தது.  அவரை மேலும் பேசவிட்டது.

எப்படியும் தாம் கைது செய்யப்படுவோம் என நம்பி எங்கோ சென்று பதுங்கியவர் அங்கிருந்தபடியே தனக்கு முன்பிணை வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு செய்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரியின் அந்த அவதூறு பேச்சை மிகக் கடுமையாக கண்டித்ததுடன் அவருடைய முன்பிணை மனுவை நிராகரித்தார் !

ஆனந்த வெங்கடேஷ் நீதிமன்றம் என்பதால் சங்கிகளுக்கு எளிதாக முன்பிணை கிட்டிவிடுமென அவதானித்த பலரும், அதற்கு முன்பே கஸ்தூரியைக் கைது செய்திருக்க வேண்டாமா ?  ஸ்டாலின் நிர்வாகத்திலிருக்கும் உள்துறை திறனற்றது, கையாலாகாதது, அதனால்தான் இப்படியான சட்டம் ஒழுங்கு குறைபாடுகள் நிகழ்கின்றன என்று வசைபாடினர்.

முன்பிணை நிராகரிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த கஸ்தூரி, கைது செய்யப்பட்டு சென்னை புழலுக்குக் கொண்டுவரப்பட்டார்.

அவ்வளவுதான்.  அதுவரை ஸ்டாலின் நிர்வாகம் கோழைத்தனமானது என்று புலம்பிய வாய்களுள் சில, ஆங், ஒரு பொண்ணை, அதுவும் கணவர் துணையின்றி வாழும் ஒரு பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைப்பதில் என்ன வீரம் ?  இதை வேங்கைவயல் சம்பவத்தில் காட்டலையே ?  தூத்துக்குடியில் சுட்டவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி விசாரணை ஆணையம் பரிந்துரைத்த பின்னரும் அங்க அப்படி எதையும் இந்த அரசு செய்யலையே ? என்று ப்ளேட்டையே திருப்பிப் போட்டனர் !

ஆனந்த் வெங்கடேஷ் அவர்களே கண்டித்து முன்பிணையை நிராகரிக்கிறார் எனில், நிச்சயம் கஸ்தூரியின் அடுத்தடுத்த பிணை மனுக்களும் நிராகரிக்கப்படும் என்றெண்ணிய சிலருக்கு நீதியரசர் சுவாமிநாதன் அவர்களுடைய மனைவி திருமதி.காமாட்சி வழியாக ட்விஸ்ட் வந்தது !

ஆதரவற்ற பெண் என்பதோடு மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயும்கூட, அவரில்லாமல் அந்தக் குழந்தை பெரிதும் சிரமத்திற்குள்ளாகும், எனவே அவருக்கு உடனடியாகப் பிணை வழங்கவேண்டும் என்று மனு செய்தார்.

அந்தம்மா நாலஞ்சு நாள் அந்தக் குழந்தை இல்லாமத்தானே பதுங்கியிருந்தாங்க ?  இந்தக் கருணையெல்லாம் பிற பெண்களுக்கும் கிடைக்குமா?  காமாட்சிகள் வேற்று இனப் பெண்களுக்கும் இப்படி இரங்கிப் பரிந்துரைப்பார்களா?  இதற்கு முன் அப்படி யாருக்கேனும் … என்றெல்லாம் கஸ்தூரிக்கெதிராகவே ஆண்கள் பொங்கினர்.  அரசு வழக்கறிஞர்கள் இதை ஏற்கக்கூடாது, முன்பிணையின்போது காட்டிய அதே எதிர்ப்பைக் காவல்துறையும் கொடுக்க வேண்டுமென்றும் பேசினர்.

ஆனால் பெண்கள் கசிந்துவிட்டார்கள்.  குழந்தை வளர்ப்பு பற்றி அவர்கள்தானே அதிகம் அறிவர் ?  அதிலும் சிங்கிள் பேரண்டாக ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையைக் கையாளும் கடினச்சூழல் பலருக்கும் கசப்பு அனுபவமாகவேகூட இருந்திருக்கிறது !

ஜெயலலிதா போன்ற மூட & முரட்டுச் சர்வாதிகாரியாக இருந்தால் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் பிணைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அதிரடி புரிந்திருப்பார்.  ஆனால் ஸ்டாலின் பெண்களின் மனத்தை ஆழமாகப் புரிந்து கொண்டவர்.  அவருக்கு பெண்களிடையே இருக்கும் அமோக ஆதரவை எவராலும் கணிக்கவே இயலாது.  ஆமாம், காவல்துறை அந்தப் பிணைக்கெதிராக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  விளைவு, மாலை கஸ்தூரிக்குப் பிணை கிட்டி, மறுநாள் விடுதலையுமானார் !

கஸ்தூரியின் பிணை மட்டும் மறுக்கப்பட்டிருந்தால் சிறையில் அவரும் உண்ணவில்லை, வெளியே தாயில்லாமல் அந்தக் குழந்தையும் உண்ணவில்லை, கொடுங்கோல் ஆட்சி புரியும் ஸ்டாலின் என்றெழுதி ட்ராப்டில் வைத்திருந்த பலருடைய பதிவுகளுக்கும் வேலையின்றிப் போனது !

அதேவேளையில் இதையும் திராவிடத்தின் தோல்வியாகவும், ஆரியத்தின் ஆளுமையாகவும் சிலர் பார்த்து வழக்கம் போல் குறைகூறினர் !

எனக்கென்னவோ கஸ்தூரி விஷயத்தில் ஸ்டாலின் அரசு நோ பந்தில் சிக்ஸர் அடித்ததாகவே பட்டது.  சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பொய்க்கூச்சல் போடும் மிலேச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை.  ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளது.  உங்கள் கனவுகளில்கூட சட்டம்-ஒழுங்கிற்கு அங்கு குறைவு வராது !!!

rashraja1969@gmail.com