விடுதலை படம் இடதுசாரிகள் மற்றும் தமிழ்தேசிய வாதிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத கம்யுனிஸ்டுகளின் போராட்டங்களும், தமிழ் தேசியத்துக்காக ஆயுதம் தாங்கிய போராளிகளின் வாழ்க்கையும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன என்பது இந்தத் தோழர்களின் ஆதரவுக்குக் காரணம். கம்யூனிஸ்ட் தோழர்களின் சமரசமற்ற போராட்டங்கள், அவர்கள் தமிழ் தேசியவாதிகளான பிறகு சந்தித்த இன்னல்கள், தியாகம் ஆகியவை திரையில் மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்டப்பட்டிருப்பதாக பலர் குறிப்பிட்டனர்.
அதேநேரம் நல்ல சினிமா ஆதரவாளர்கள் மற்றும் சமூக வரலாற்று ஆர்வலர்களிடையே இப்படம் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கீழ் தஞ்சை பகுதியில் CPI, CPIM நடத்திய போராட்டங்களையும், பெண்ணாடம் பகுதியில் மா லெ இயக்கத்தில் இருந்த போது கலிய பெருமாள் நடத்திய போராட்டங்களையும், தமிழரசன் தமிழ் நாடு விடுதலைக்காக ஒரு கட்சியையும், ஆயுதக் குழுவையும் உருவாக்கி நிகழ்த்திய சம்பவங்களையும், தர்மபுரி ஊத்தங்கரை பகுதியில் மாவோயிஸ்ட் கட்சியினர் சுற்றி வளைக்கப் பட்டதையும் குழப்பி அடிக்கிறது. இவையெல்லாம் சுமார் நாற்பது ஆண்டுகால இடைவெளியில் நடந்தவை. ஒரே தோழரே அதாவது பெருமாள் என்பவரே இவையனைத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் காட்டப்படுகிறது.
இந்த விமர்சனம் விடுதலை 1 வந்த போதே வைக்கப்பட்டது. அதில் அருமபுரி என்ற கற்பனையான ஊரில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், போலீஸ் தேடுதல் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காட்டப்பட்டிருக்கும். அதே நேரம் படம் தொடங்கும் போது அரியலூர் ரயில் பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு விபத்து நடந்திருப்பது காட்டப்பட்டிருக்கும். பின்பு ஒர்க்ஷாப் என்று அழைக்கப்படும் இடத்தில் மக்கள் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது காட்டப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆப்ரேஷன் அஜந்தா நடந்தது 1980 ஆம் ஆண்டு.
தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பால குண்டு வெடிப்பில் மலைக்கோட்டை ரயில் கவிழ்ந்து பலர் மரணமடைந்தது 87 இல் என்று நினைக்கிறேன். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.
93-96 காலகட்டத்தில் வீரப்பன் வேட்டையின் போது ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். இவையனைத்தும் ஒரே சம்பவத்தின் தொடர்ச்சி என்றும், ஒரே இடத்தில், ஒரே காலத்தில் நடப்பதாகவும் முதல் பாகத்தில் காட்டப்பட்டிருந்தது. அதிலும் வீரப்பன் வேட்ட்டையைப் பற்றி எழுதப்பட்ட நாவலிலிருந்தும், வரலாற்று நூலிலிருந்தும் காபிரைட் உரிமைகளைப் பற்றிக் கவலையே படாமல் தாராளமாகச் சுடப்பட்டிருந்தது.
இதைப் பற்றிய விமர்சனம் எழுந்த போது, ஜெயமோகன் எல்லாம் வந்து படம் வாச்சாத்தியை அடிப்படையாகக் கொண்டது என்று வாக்குமூலம் கொடுத்தார். வாச்சாத்தியில் ஏது ஒர்க்ஷாப்? அதோடு காலக் குழப்பம் பற்றி முதல் பாகத்திலேயே பேசப்பட்டிருந்தும் இரண்டாவது பாகத்திலும் அதே தவறுகள் செய்யப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
படம் முற்றிலும் கற்பனை என்று முதலிலேயே சொல்லப்படுகிறது. ஆனால் அண்மை வரலாற்று நிகழ்வுகள் படத்தில் உள்ளன. ஒர்க்ஷாப், மருதையாறு பாலத்தில் நடந்த குண்டு வெடிப்பு, புலவர் கலிய பெருமாள் வீட்டில் நடந்த குண்டு வெடிப்பு விபத்து என்று உண்மை சம்பவங்கள் தெளிவாகவே படத்தில் காட்டப்படுகின்றன. தருமபுரி அருமபுரி என்று அழைக்கப்படுகிறது. விடுதலை இரண்டில் கிஷோர் நடிக்கும் மூத்த தோழர் பாத்திரம் அப்படியே சீனிவாச ராவை நினைவுபடுத்துகிறது.
எனவே இயக்குநர், படத்தில் காட்டப்படும் காட்சிகள் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்த வேண்டுமென்று விரும்புகிறார். அதே நேரம் சித்தரிப்பதில் சிக்கல் வந்தால் புனைவு என்று சொல்லி விடவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். .அரசு இயந்திரத்தையும், சென்சாரையும் இப்படி ஏமாற்ற முடியாது. எனவே இயக்குநர் பார்வையாளர்களை அதீத உணர்ச்சிவசப்பட வைக்க இப்படி பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து நடந்ததாகக் காட்டி வரலாற்று சம்பவங்களைத் திரிக்கிறார்.
வரலாற்று நிகழ்வுகளையோ, நாவல்களையோ படமாக்கும் போது இவ்வாறு மனம் போனபடி நிகழ்வுகளை திரித்து, குழப்பி, கலைத்துப் போடுவது தமிழ் சினிமா இயக்குநர்களின் வழக்கமாக உள்ளது.
சமீபத்தில் வந்த படம் பொன்னியின் செல்வன் தமிழில் மிக மிக புகழ்பெற்ற நாவல். பல லட்சம் பேரால் படிக்கப்பட்டது. இப்படத்தில் சேந்தன் அமுதன் செம்பியன் மாதேவியின் மகன் அல்ல என்று முதலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். செம்பியன் மாதேவியின் குழந்தை தொடர்பாக நாவலில் இருக்கும் சுவாரஸ்யமான முடிச்சு அநியாயத்துக்கு படத்தில் தவிர்க்கப்பட்டிருக்கும். நாவலில் வராத போர்க்காட்சி படத்தில் இருக்கும். ஆதித்த கரிகாலன் கொலை பற்றி அரசியல் ரீதியாக தமிழ் நாட்டில் பெரிய அளவுக்கு விவாதம் நடந்துள்ளது. ஆனால் ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொள்வதாக படத்தில் வேடிக்கையாக முடிக்கப்பட்டிருக்கும்.
இன்னொரு மோசமான உதாரணம் பரதேசி படம். எரியும் பனிக்காடு நாவலில் கதை மாந்தர்கள் 1920 களில் கயத்தாறு நகரிலிருந்து ரயிலில் பொள்ளாச்சி வருவதாக எழுதப்பட்டிருக்கும். அது உண்மையில் நடந்தது. பரதேசி படத்தில் 1939 ஆம் ஆண்டு நெல்லையில் இருந்து வால்பாறைக்கு கதாநாயகன் குழு நடையாக நடந்து வருவதாகவும் வழியில் செத்து விழுவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கு தமிழ்நாடு சஹாரா பாலைவனத்தில் லிபியாவுக்கும் சாட் நாட்டுக்கும் இடையே இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படும். ஆனைமலைகளில் 1920 களில் இருந்த அடக்குமுறை 1939 ஆம் ஆண்டில் கிடையாது. அப்போது அங்கே காங்கிரஸ் தொழிற்சங்கம் போராடத் தொடங்கி விட்டது. பல ஆங்கிலேயர்கள் போருக்குச் சென்று விட்டனர். ஆனால் தமிழ் சினிமா தனக்கே உரிய விதத்தில் அபத்தமாகக் கண்ணீர் வெள்ளத்தைப் பெருக்கெடுத்து ஓட விடுகிறது.
வரலாற்றை விருப்பம் போல மாற்றிக் கொள்ளலாம் என்பது ஒரு முதிர்சியற்ற தன்மையாகும். சினிமா தொழிலில் தனக்கு உள்ள அதீத தன்னம்பிக்கை, தன்னுணர்வு காரணமாக கதைக்கு உணர்வுகளைச் சேர்க்க வரலாற்றை திரித்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது போலும். இவற்றின் மீதான விமர்சனமும் தீவிரமாக வருவதில்லை என்பதால் இயக்குநர்கள் இந்தத் தவற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர்.
வரலாற்றுத் துல்லியம் நேர்மை ஆகியவற்றை விட பார்வையாளர்களை மலிவான உணர்வுகளுக்கு ஆட்படுத்தி படத்தின் பால் ஈர்ப்பதை முக்கியமாகக் கருதுகின்றனர்.
ஆனால் பொன்னியின் செல்வனில் செய்யப்பட்ட திருத்தங்கள் பாரவையாளர்களால் ரசிக்கப்படவில்லை. பார்வையாளர்கள் தாங்கள் எதிர்பாத்து திரையில் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். பரதேசியில் வலிந்து வலிந்து திணிக்கப்பட்டிருந்த அதீத சோகம் அயர்ச்சியூட்டியது. கேன்ஸ் முதலான விழாக்களில் விருதுகளை அள்ளியிருக்க வேண்டிய பரதேசி கதைக் களம் தமிழ் நாட்டு எல்லையைத் தாண்ட முடியாமல் போனது.
விடுதலை படத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டிருக்கும் மேற்சொன்ன வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒரு தனி சினிமா எடுக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான நிகழ்வுகள். இவையனைத்தும் ஒரே படத்தில் அடைக்கப் பட்டதால் எதையும் முழுமையாக காட்ட நேரம் இல்லாமல் துண்டு துண்டாக அரசியல் நிற்கிறது.
உதாரணமாக தஞ்சையில் பெண்கள், விவசாய கூலிகள், குத்தகை விவசாயிகள் மேல் நடத்தப் பட்டு வந்த சுரண்டலும், அடக்குமுறையும் சரியாகக் காட்சிப் படுத்தப் படவே இல்லை. பத்து வயதில் குழந்தைகள் ஆண்டையின் பண்ணையில் வேலைக்கு அனுப்பப் படுவார்கள். பெரும்பாலும் கூலி தானியமாகவே தரப்படும். அதிலும் அளக்கும் படிகளில் மோசடி செய்வார்கள். சாணியைக் கரைத்து வாயில் ஊற்றுவது, சவுக்கால் அடிப்பது ஆகியவை வழக்கமாக இருந்த தண்டனைகள். பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு அளவே இல்லை.
இவை படத்தில் சித்தரிக்கப்படவே இல்லை.
இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் எழுபதுகள் வரை நீண்டன. பரந்து விரிந்த பிரதேசத்தில் பலநூறு கிராமங்களில் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் இவற்றில் பங்கு கொண்டனர். இந்தப் போராட்டங்களின் வெற்றி, மகத்தான சாதனைகள் படத்தில் காட்டப்படவே இல்லை. உண்மையில் போராட்டம் பெரும் வெற்றி பெற்று, இனிமேல் சவுக்கடி சாணிப்பால் தண்டனைகள் கொடுக்கப்பட மாட்டாது. ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நில உரிமையாளர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். உண்மை இப்படி இருக்க படத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்திய சீனிவாச ராவை ஒத்திருக்கும் தலைவர் சம்பந்தமே இல்லாத ஆலை முதலாளியால் கொல்லப் படுகிறார். அந்தப் போராட்டம் என்னவாக்கிறது என்பது பற்றிக் குறிப்பே இல்லை. .
அதே போலத்தான் ஒரு சர்க்கரை ஆலையில் சங்கம் கட்ட போராட்டம் நடக்கிறது. சங்கம் உருவாகிறது. அது எப்படி நடந்தது, என்னென்ன மாற்றங்கள் வந்தன என்பது எல்லாம் படத்தில் இல்லை. கோவை போன்ற பகுதிகளில் ஆலைகளில் உருவான சங்கங்கள் வென்றெடுத்த உரிமைகள் பற்றி ஏராளமான ஆவணங்கள் உள்ளன.
இதுதவிர விடுதலை 1 மற்றும் 2 தமிழில் வழக்கமாக வரும் கேங்க்ஸ்டர் படங்கள் போலவே எடுக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமான சண்டை படங்களில் வருவது போக கத்தி கடப்பாரை குத்து, மழையில் சண்டை, இரத்தம் சொட்டச் சொட்ட அடிப்பது என்று ஸ்டீரியோ டைப் காட்சிகள் படம் முழுக்க வருகின்றன. தான் எடுப்பது என்ன மாதிரி படம் என்று வெற்றி மாறன் புரிந்து கொள்ளவே இல்லை.
புரட்சிகர இயக்கங்கள் நடத்திய தனிநபர் அழித்தொழிப்பு, மக்கள் நீதிமன்றம், பண்ணைகளின் வீடுகளின் மீதான தாக்குதல் ஆகிய புரட்சிகர நடவடிக்கைகள் எப்படி நடக்கும் என்பது பற்றிய குறைந்த பட்ச ஆய்வுகூட இல்லாமல் படம் இருக்கிறது.
காட்சிகளில் உள்ள பலவீனம், துண்டு துண்டான தன்மை ஆகியவற்றை மார்க்சியம் பேசுவதைக் கொண்டும், செங்கொடியைக் காட்டுவதைக் கொண்டும் கடக்க இயக்குனர் முயல்கிறார். என்ன செய்தாலும் இது வழக்கமான மசாலா கொஞ்சம் சிவப்பு அரசியல் சாயம் பூசப்பட்டிருக்கிறது என்ற எண்ணமே வருகிறது.
மலைப் பகுதிகளில் சண்டை நடக்கும் போது போலீஸ் மெகா போன் வைத்து பேசுவதை பார்க்கும் போது இதை நேரில் அறிந்த யாரோ உதவி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை நுட்பமாக எடுக்கப்படவில்லை.
அரசு இயந்திரம் ஒரு தேடுதல் வேட்டை, தாக்குதல் நடவடிக்கை எடுக்கும் என்றால் தனியான உளவு அமைப்புகள், போலீஸ் நண்பர்கள் குழுக்கள், உள்ளூர் உளவாளிகள், கபடி. கிரிக்கெட் குழுக்கள் என்று பலவற்றை உருவாக்கும். இவற்றின் மூலம் வலை பரந்த அளவில் வீசப்படும்.படத்தில் அதில் ஒரு துளிதான் உள்ளது.
அதிலும் கடைசி சண்டை நடக்கும் போது ஹீரோ ஆயுத போராட்டத்தை விடுவதை பற்றி வளவளவென்று பேசுவது, ஆட்டுக்குட்டி போல சரணடைவது எல்லாம் பயங்கர அபத்தம். உண்மையில் இது ஒரு ஜெயமோகன் கதை. அந்த வட்டத்துக்குள் இயக்குனர் நின்று இருக்கிறார். ஜெயமோகனின் பார்வையை கடந்து வெற்றி மாறன் நகரவே இல்லை.
புரட்சிகர இயக்கமும் முழுமையாக இல்லாமல், அரசு நடவடிக்கையும் முழுமையாக இல்லாமல் வெறும் உணர்ச்சிப் பரபரப்பின் மேல் நிற்கிறது படம்.
அதே போல தமிழ் சினிமாக்களில் கண்கள் சிவக்க கம்யூனிச்ட் வசனங்கள் பேசுவது ஒன்றும் புதிதில்லை. நக்சல் எழுச்சியின் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை உருக்கொண்டிருந்த 1981 வாக்கில் எர்ர மல்லேலு என்ற தெலுங்கு படம் வந்தது. அதை சிவப்பு மல்லி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். தமிழ் தெலுங்கு இரண்டிலுமே இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இதே போல பல படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் வந்தன. எல்லவற்றிலும் செங்கொடி, ஆவேசமான பாடல்கள் என்று அடக்குமுறைக்கு எதிரான உணர்ச்சி கரை புரண்டு ஓடியது.
இதெல்லாம் ஒரு சிறு மாற்றத்துக்காகத்தான். பின்பு தமிழ் சினிமா பாக்கியராஜ், டி.ராஜேந்தர், பாரதிராஜா, பாலச்சந்தர் என்று வழக்கத்துக்குத் திரும்பியது.
அதற்கு ஒரு ஆண்டு முன்னால் வந்த முதல்தரமான மசாலாவான முரட்டுக்காளை டிரெண்ட் செட்டராக மாறியது. ஒரு வேடிக்கை என்னவெனில் சிவப்புமல்லி, முரட்டுக் காளை இரண்டையும் ஏவிஎம் தான் தயாரித்திருந்தது.
பின்பு ஆந்திராவில் மக்கள் யுத்தக் கட்சியின் செல்வாக்கு தீவிரமாக இருந்த காலத்தில் அடவிலோ அண்ணலு ( காட்டில் அண்ணன்கள் தமிழில் சிவப்பு புலிகள்) எர்ர சைன்னியம் – செம்படை ஆகிய படங்கள் வந்து சக்கை போடு போட்டன.
1990களில் சமூக சூழல் இல்லாவிட்டாலும் இயக்குநர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் காரணமாக வாட்டாக்குடி இரணியன், அரவிந்தன் ஆகிய படங்கள் வந்தன. இவை பெரிய வெற்றி பெறவில்லை. விடுதலைக்கு சொன்ன அத்தனை குறைகளும் அதற்கு மேலும் இந்தப் படங்களில் இருந்தன. இருந்த போதும் மறக்கப்பட்ட தோழர்களின் கதை என்ற அளவில் இவற்றை வரவேற்பது நமது கடமை என்று பல தோழர்கள் கருதினர். பார்வையாளர்களுக்கு இதில் கொஞ்சம் உண்மைச் சம்பவங்கள் உள்ளன என்று காட்டிவிட்டு வழக்கமான மசாலாவாக படத்தைத் தள்ளிவிட்டுவிடலாம் என்றே கோடம்பாக்கம் கருதியது புரிந்தது.
வாட்டாக்குடி இரணியன், அரவிந்தன் படங்களில் அநியாயத்துக்கு செய்யபட்டிருந்த வரலாற்றுக் குழப்பங்கள், பாத்திர குழப்பங்கள், பிரேவ் ஹார்ட் போன்ற படங்களிலிருந்து பச்சையாகச் சுடப்பட்ட காட்சிகள், (அரவிந்தன் படத்தில் விசித்ராவின் கவர்ச்சி நடனம் கூட இருந்தது. அதுவும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில்) இவையெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படாமல் விடப்பட்டதால் முப்பது ஆண்டுகள் கழித்தும் அதே போல, அதே மசாலா பாணியில்தான் பொதுவுடமை அரசியலைச் சொல்வோம் என்று தமிழ் இயக்குநர்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
இப்போது தமிழ் நாட்டில் முற்போக்கு அரசியல் கொண்ட நகர்ப்புற அறிவாளி வர்க்கம் செல்வாக்கு செலுத்துகிறது. இந்த வர்க்கம் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளது. இதனுடன் தலித் எழுச்சியின் காரணமாக தலித் அரசியல், வாழ்வியல் பேசும் படங்கள் வெளியாகின்றன. இந்தச் சூழலே வெற்றிமாறன் தமிழரசன், புலவர் கலிய பெருமாள் இருவரின் பாத்திரத்தையும் ஒன்றாக்கி விடுதலை படத்தை எடுத்து இருக்கும் பின்னணி. இது போன்ற முற்போக்கு படங்களுக்கு ஒரு மார்க்கெட் உள்ளது. இந்த அறிவுஜீவிகள் இலவச விளம்பரம் கொடுத்து விடுவார்கள். நம்பத் தகுந்த பார்வையாளர்களாகவும் இருப்பார்கள்.
இது போன்ற படங்கள் எடுக்கப்படுவதற்கான சூழல் தமிழ் நாட்டில் நிலவுகிறது. ஆனால் கப்பலோட்டிய த்மிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களில் வருதைப் போன்ற துல்லியம் கூட இப்படங்களில் இல்லாமலிருக்கின்றது.
இது உண்மை என்று ஒன்று இல்லை, புனைவு வெளியில் எதுவும் சாத்தியம் என்பது போன்ற சிந்தனைகளின் விரிவாக்கம்.
இதைத் தவிர தமிழ்நாட்டில் இப்படி மனம் போனபடி வரலாற்றைத் திரித்து படம் எடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் நேர்மை, துல்லியம், யதார்த்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய புதிய அலை மாற்று சினிமா வேர் பிடிக்கவே இல்லை.
சினிமா தோன்றிய காலகட்டமான 1930கள், 40களில் வந்த இந்தி படங்களும், தமிழ், தெலுங்கு, வங்காளி மொழிப் படங்களும் ஹாலிவுட் மற்றும் புராண இதிகாச தாக்கத்தால் உருவாக்கப்பட்டன. ஹாலிவுட் தவிர்த்து பிற நாட்டுப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அப்போது இந்தியாவில் இல்லை. இதே காலகட்டத்தில் நல்ல படங்களை அறிவு சமூகத்துக்கு அறிமுகம் செய்ய மும்பையில் அமச்சூர் பிலிம் சொஸைட்டி உருவாக்கப்பட்டது. ஆனால் அது பெரிய வெற்றி பெறவில்லை.
கல்கத்தா பிலிம் சொசைட்டி 1947லில் உருவானது. சிதானந்த ஜித் தாஸ் குப்தா, சத்ய ஜித் ரே ஆகியோர் இணைந்து இதை உருவாக்கினர். அப்போது மிகவும் இளைஞராக இருந்த ரே தனது சேகரிப்பிலிருந்த நூல்களையும் இதழ்களையும் இந்த சொஸைட்டிக்கு வழங்கினார். தாஸ் தனது அறையை வழங்கினார். இதற்கும் வரிகள் விதிக்கப்பட்டதால் செயல்படுவது சிரமாகியது. கல்கத்தா பிலிம் சொசைட்டி வெளிநாட்டு தூதரகங்களையும், மத்திய கல்வித்துறையின் மத்திய பில்ம் சொசைட்டியையும் தொடர்பு கொண்டு ஒருவாறு தாக்குப்பிடித்து நின்றது. பெரும்பாலும் ரஷ்யா, மேற்கு ஐரோப்பிய படங்கள் இதில் திரையிடப்பட்டன. இந்த சொசைட்டி இதழில் ரே எழுதிய கட்டுரைகள் பின்பு Our films and their films என்ற நூலாக வந்தன.
1950களில் ஹாலிவுட் செல்வாக்கு சற்றே குறைந்தது. இதனால் மற்ற நாட்டு படங்களுக்கு உலக அளவில் திரையிட வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடுகளிலிருந்து புகழ்பெற்ற இயக்குநர்கள் தங்கள் படங்களுக்குப் பார்வையாளர்களைத் தேடி உலகம் முழுவதும் சென்றனர். ழீன் ரெனெ, புடோவ்கின், ஜான் ஹட்சன் ஆகிய புகழ்பெற்ற இயக்குநர்கள் கல்கத்தாவுக்கும் விஜயம் செய்தனர். கல்கத்தா பிலிம் சொசைட்டி இயக்கம் வளர்ந்தது.
1952 இல் இந்தியவில் முதல் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டது. இந்திய மசாலா சினிமா மன்னர்களுக்கு உலகத் திரைப்பட அறிவு இல்லாததால் இந்த சொசைட்டியுடன் அரசு அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். இந்த விழாவில்தான் இத்தாலிய புது அலை சினிமா இந்தியர்களுக்கு அறிமுகமானது.
1959 ஆம் ஆண்ட இந்தியா முழுவதும் இயங்கிய திரைப்பட சங்கங்கள் இணைந்து federation of film societies of india அரசு ஆதரவில் உருவானது. இதெல்லாம் மேற்கு வங்காளத்தில் மாற்று சினிமா வேர்பிடிக்கக் காரணமாக அமைந்தது. தவிர மிகவும் முற்போக்கான வங்கள அறிவுஜீவி வர்க்கம் அடிப்படை பலமாக அமைந்தது. இந்த படித்த வர்க்கத்தினர் ஏற்கெனவே தாகூர், சரத் சந்திரர், விபூதி பூஷன் பந்தோபாத்தியாயா ஆகியோரைப் படித்த அனுபவம் கொண்டிருந்தனர். மாற்று திரைப்பட இயக்கம் வங்க இலக்கியத்துடன் பிரிக்கமுடியாமல் இணைந்து கலந்தே பிறந்தது.
வங்கத்தை இரண்டாகப் பிரித்த தேசப் பிரிவினை, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் தாக்குதல், நேசப்படைகளின் கிழக்கு மையமாக கல்கத்தா இருந்தது, வங்க பஞ்சம், அடுத்தடுத்து நடந்த விவசாயிகளின் எழுச்சிகள் என்று அனைத்தையும் பார்த்த, கல்கத்தாவை மையமாகக் கொண்டிருந்த அறிவாளி வர்க்கம் பெரிய அளவுக்கு முதிர்ச்சி கொண்டிருந்தது. புது அலை சினிமாவை இருகரம் நீட்டி வரவேற்றது.
குறைந்த காலத்திலேயே ரே, சென் போன்றோரின் படங்கள் உலக அள்வில் புகழ்பெற்று விட்டன. எனவே இந்தி, தமிழ், தெலுங்கு அளவுக்கு புகழும், பணமும் இல்லாவிட்டாலும் நல்ல சினிமா இயக்குநர்கள் தொடர்ந்து இயங்க வாய்ப்பு கிடைத்தது.
பின்பு ஷியாம் பெனகல் போன்றவர்கள் மூலம் மாற்று சினிமா இந்திக்கும் அறிமுகமானது. இந்திப்படங்களுக்கான் பரந்து விரிந்த சந்தை இந்த மாற்று சினிமாவுக்கும் இடமளித்தது. பின்பு இது மலையளத்துக்கும் கன்னடத்துக்கு விரிவாக்கம் பெற்றது.
தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் சினிமா முழுவதும் மிகவும் பிரபலமான எம் ஜி ஆர், சிவாஜி, என் டி ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்றோரின் இரும்புப் பிடியிலிருந்தது. இந்த நடிகர்களும் இவர்களுக்குப் பின்னலிருந்த தயாரிப்பாளர்களும் மிகுந்த பணமும், செல்வாக்கும் படைத்தவர்களாவிருந்தனர். தமிழ்நாட்டின் முற்போக்காளர்கள் திமுகவை ஆதரிப்பவர்களாக இருந்தனர். திமுக தனது அரசியல் நோக்கங்களுக்காக வெகுஜன மக்களைச் சென்றடையக் கூடிய மசாலா படங்களையே தயாரித்தது. திமுக அல்லாத பிராமணர்களை பிரதானமாகக் கொண்டிருந்த, சமூக எதார்த்தங்களுடன் தொடர்பற்றுப் போன எலைட் பிரிவு பாலச் சந்தருடன் திருப்திப் பட்டுக் கொண்டது. பாலச்சந்தர் சகட்டு மேனிக்கு ரே, ரித்விக் கட்டக் ஆகியோரத் தழுவி படங்கள் எடுத்தார். ரேவின் பிரதிவந்தியைப் போல வறுமையின் நிறம் சிகப்பு, ரித்வி கட்டாக்கின் மேக தாக தாராவைத் தழுவி அவள் ஒரு தொடர்கதை என்று படங்கள் எடுத்தார். இயக்குனர் சிகரம் என்று புகழவும் பட்டார். இந்தப் படங்கள் புது அலை படங்களின் காப்பியாக இருந்தாலும் பாடல்கள், அதீக உணர்ச்சி மோதல்கள், செயற்கையான திருப்பங்கள் என்று மசாலா தன்மையையும் கொண்டிருந்தன.
ஜெயகாந்தனின் சில படங்கள், அவள் அப்படித்தான் போன்ற சில காத்திரமான முயற்சிகள் நிச்சயம் புது அலை சினிமாதான் என்றாலும் அவை பிடிப்பில்லாமல் தனித்து நின்றன. ஜெயகாந்தன் தனது படங்களில் உறவுச் சிக்கல்கள் அன்ன்னியமாதலை அதிகம் பயன்படுத்தினார். மிகவும் வணிகமயமான சூழலில் இவர்களால் ஒரு சில படங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மாற்று சினிமாவுடனான தமிழகத்தின் உறவு துயரமானது.
எனவே இங்கே சினிமா என்னும் கலைக்கு உயர்ந்த தரம் நிர்ணயிக்கப்படவே இல்லை. எந்த அறிவுச் செயல்பாடும் இல்லாமல் துயரத்தைப் பார்த்து விஜய் சேதுபதி இங்கே கம்யுனிஸ்ட் ஆகிவிட முடியும். ஈழப் போராளிகளின் தாக்கம், இந்தியா முழுவதும் பொங்கி வந்த தேசிய இன விடுதலை இயக்கங்களின் தாக்கம் இல்லாமல் சுத்த சுயம்புவாக ஒரு தமிழ் தேசிய கட்சி தொடங்கிவிட முடியும்.
விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் தாற்காப்பு போர்முறையில் (Low intensity , defensive warfare ) இருந்து தேசிய இன விடுதலை இயக்கத்தின் உக்கிரமான தாக்குதல் போர்முறைக்கு எந்த வாழ்வியல் மாற்றமும் இல்லாமல் மாறிவிட முடியும். ஆயுதங்களுடன் ஊருக்குள் நாள்கணக்காக குடியிருக்க முடியும். தான் சரணடைந்து விட்டால் மற்றவர்களை போலீஸ் விட்டுவிடும் என்று அபத்தமாக முடிவு செய்ய முடியும். தமிழ் சினிமா எண்ணற்ற அற்புதங்களை உருவாக்குகிறது. மாவோவும் ஹோசிமின்னும், ஜியாப்பும் உருவாக்கிய போர்முறையையும் வளர்த்தெடுக்கிறது.
கீழ் தஞ்சைப் போராட்டத்தின் போது மக்கள் எண்ணற்ற புதுப் புது போராட்ட வடிவங்களை உருவாக்கினர். அவற்றில் ஒன்றுதான் கொடும்பாவி கொளுத்துவது. ஒரு கொடுமைக்கார நிலப்பிரபுவை போலீஸ் அடக்குமுறையை ஈர்க்காமல் கடுமையாக தண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. மக்கள் அந்த நிலப்பிரபுவைப் போலவே ஒரு உருவம் செய்து அவர் வீட்டின் முன் கிடத்தினர். பெண்கள் தலைவிரி கோலமாக அழுது புலம்பினார். மரணத்துக்குச் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டன. இந்தியாவில் கொடும்பாவி கொளுத்துவது அதுவே முதல் முறை. (ஏ. ஜி. கஸ்தூரி ரங்கன் நினைவுக் குறிப்புகள் ) மூட நம்பிக்கையில் ஊறிப்போன நிலப்பிரபு ஈரக்குலை நடுங்கி, மனம் பேதலித்துப் போனார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் சாகும் வரை மீளவில்லை என்கிறார் கஸ்தூரி ரங்கன்.
மக்கள் போராட்டங்களின் போது எண்ணற்ற அற்புதமான பாடல்களை உருவாக்கினர்.
புலவர் கலிய பெருமாள் தென்னார்காட்டில் கரும்பு விவசாயிகளின் உக்கிரமான போராட்டங்களை முன்னெடுத்த போது
கரும்புத் தோட்டத்திலே ஏழை மக்கள் களை எடுக்கையிலே
கருக்கருவா போல சோகை கையைக் கிழிக்கும்
கசியும் வேர்வை காயத்தில் பட்டு கனலாய் எரியும்
உடம்பு தணலாய் தகிக்கும்
போன்ற மக்கள் பாடல்கள் தானாகவே போரட்டகளங்களில் இருந்து உருவாகி வந்தன. நாட்டுப் பாடல்களை செந்தாரகை போன்ற தோழர்கள்
கழனியாழச் சேற்றினிலே கால்கடுக்க நடவு நட்டோம்
கருக்கருவா கையில் கொண்டு கால்கடுக்க கதிரருத்தோம்
என்பது போன்ற புரட்சிப் பாடல்களாக வளர்த்தெடுத்தனர்.
படத்தில் எல்லாமே தட்டையாக உள்ளன. மக்கள் பங்களிப்பு, அவர்களின் படைப்பாக்கம், அறிவுகூர்மை அந்தக் கால சமூக சூழல் எதுவுமே உருப்படியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. எனவே விடுதலை வழக்கமான மசாலா அதன் மீது கொஞ்சம் சிவப்பு தடவப்பட்டுள்ளது என்பதைக் கடந்து செல்ல முடியாமல் நிற்கிறது.
——————————————-
1988 இல் ஐ வி சசி இயக்கி மலையாளத்தில் வெளிவந்த 1921 என்ற படம் மலபார் மாப்ளா எழுச்சியை அடிப்படையாகக் கொண்டது. உமர் முக்தார் காட்சிகளின் சாயல் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் நிலப்பிரபுக்கள், கோவில்கள் ஆகியவற்றால் விவசாயிகள் ஒட்டச் சுரண்டப்படுவதையும், காங்கிரஸ், கிலாபத் இயக்கங்கள் அங்கே செயல்படுவதையும், முதல் உலகப் போரில் கலந்து கொண்டு திரும்பி விவசாயம் பார்க்கும் பலர் இருப்பதையும் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கும்.
நம்பூதிரி நிலப்பிரபுக்கள் ஆங்கில அரசுடன் இணைந்து நிற்பதையும், தலித் பண்ணையடிமைகள் மாப்ளா புரட்சிக்காரர்களுடன் இணைந்து கொள்வதையும் படம் மிகச் சிறப்பாக விவரித்து இருக்கும். மாப்ளா பாடல்கள் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். பெரும் வெற்றி பெற்ற படம் இது.
தெலங்கானா போராட்டத்தை மையமாகக் கொண்டு கௌதம் கோஷ் இயக்கிய மாபூமி படத்தில் முக்கால் பாகத்தை ஏழை விவசாயிகள், பண்ணையடிமைகளின் வாழ்க்கை எப்படி சகிக்க முடியாததாகவிருந்தது, தவிர்க்க முடியாமல் காலம் புரட்சியை நோக்கி இழுத்துச் செல்கிறது என்பதை உணர்த்தப் பய்ன்படுத்தியிருப்பார். இப்படத்தில் முதல் முதலாக தெலங்கானாவில் பேசப்படும் தெலுங்கு மொழி பயன்படுத்தப்பட்டிருக்கும். பழமொழிகளும், கதைகளும் பாடல்களும் இழைந்து வரும். இதெல்லாம் அன்றைய தெலுங்குப் படங்களில் நினைத்தே பார்க்க முடியாததாகும். தெலுங்கே தெரியாத கௌதம் கோஷ் இதைச் செய்ததுதான் தனிச்சிறப்பானது. இதற்காகவே தெலங்கானா மாநிலம் உருவான பிறகு மாபூமி அங்கே கொண்டாடப்படுகிறது. ஒரு படம் காலத்தைத் தாண்டி நிற்க வேண்டும், மக்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்த வேண்டும். மாபூமி போல.
அதே கௌதம் கோஷ் இயக்கிய கால்பேலா என்ற படம் சிபிஐ எம் கட்சிக்கும் எம் எல் கட்சிக்குமான வேறுபாடு, உடைவதற்கான சூழல், புரட்சிகர மனநிலை ஆகியவற்றை கலைத் தன்மை மாறாமல் ஆனால் ஒரு ஆவணமாக நம்முன் வைக்கும்.
வரலாற்றிலிருந்து விலகாமல், மக்களையும் காலத்தையும் சரியாகக் காட்டி வெற்றியும் பெறுவது சாத்தியம்தான். அபத்தமான மசாலா பட பின்னணி வரலாற்றின் மீதும் சினிமா என்னும் கலையின் மீதும் இயக்குநர்கள் நம்பிக்கை கொள்வதைச் சிதைக்கிறது. .
படத்தில் கம்யுனிசம் செங்கொடி வருகிறதே அதை ஆதரிக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டிய கடமை, அடையாளம் காட்ட வேண்டிய கடமை இடது சாரிகளுக்கு உள்ளது. அதே நேரம் மிகச் சாதாரணமாக உள்ள மசாலா படங்களை அற்புதம் என்று அறிமுகப் படுத்தினால் தோழர்களின் ரசனை பின்னடைவுக்கு உள்ளாகும். பின்பு நல்ல படங்களை அவர்களை பார்க்க வைக்கவே முடியாது.
சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி, அனுராதா ஆகியோர் கவர்ச்சி நடனம் ஆடினால்தான் படம் ஓடுகிறது. மக்கள் விரும்புகிறார்கள் என்று 80 களின் தமிழ் இயக்குனர்கள் சொன்ன போது
தியாக ராஜ பாகவதர், பீம்சிங் காலங்களில் எந்தப் பெண் இப்படி ஆட வேண்டி வந்தது? நீங்களே மக்களை மலிவான ரசனைக்குப் பழக்கப்படுத்திக் விட்டு அவர்களையே குறை சொல்கிறீர்கள் என்று பிரபஞ்சன் கூறினார்.
துல்லியமான வரலாறு, நேர்மையான கதை சொல்லல், மலிவான உணர்ச்சிகள் இல்லாமல் படம் எடுத்தல் ஆகியவற்றை மக்கள் விரும்பவில்லை என்று யார் சொன்னது?
ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் மாபெரும் இயக்குனர்களை உருவாக்கிய போது அவற்றின் கல்வியறிவு இப்போதுள்ள தமிழ் நாட்டை விடக் குறைவு அல்லது இதே அளவுதான்.
ஏன் நமது மேற்கு வங்காளம் எல்லா விதத்திலும் தமிழ் நாட்டுக்கு பின்னால் இருக்கும் மாநிலம். அந்த மக்கள் மிகச் சிறந்த நல்ல படங்களை ரசிக்க வில்லையா என்ன?
உதிரிப் பூக்கள், மௌனராகம் ஆகிய படங்கள் வந்த போது தமிழ் அறிவாளி வர்க்கம் மகேந்திரனையும் மணிரத்னத்தையும் தலையில் வைத்து கொண்டாடியது. மகேந்திரன் தமிழ்நாட்டு சத்யஜித் ரே என்று புகழப்பட்டார். அசோகமித்திரன் மட்டுமே இந்தப் படங்களில் உள்ள பெரும் அபத்தங்களை சுட்டி காட்டினார்.
ஊர் திரண்டு கொல்லும்
அளவுக்கு உதிரி பூக்கள் விஜயன் மீது மக்கள் கோபம் கொண்டதாக திரைக்கதை அமைக்கப்படவில்லை. மனைவியின் தங்கையை தொல்லை செய்வது, இரண்டாம் தாரமாக மணந்து கொள்ள முயல்வது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆணாதிக்கத்தில் ஊறிய குடும்பத்தலைவர்களின் வழக்கம். பெண்களின் தகப்பன்களும் அப்படித்தான் இருந்தனர். விஜயன் பெண் கேட்டிருந்தால் கூட பணக்கார மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்து இருப்பார்கள். திரும்பி வர மாட்டாள் என்று தெரிந்தே பல்லாயிரம் பெண்களை மலைகளுக்கு திருமணம் செய்து கொடுத்த நாடு இது. இதே போல ஒரு போலி என்கவுண்டர் நடந்த அடையாளமே இல்லாமல் ஒரு குடும்பம் மௌனராகத்தில் வாழ்வது சாத்தியமா என்றார் அசோகமித்திரன். போலீஸ் ரேவதி குடும்பத்தை துவம்சம் செய்து இருக்காது?
ஆனால் இவர்கள் மாஸ்டர்ஸ் என்று கொண்டாடப் பட்டதால் தமிழ் சினிமா இவர்களை கடந்து முன்னேற வில்லை. அதே இடத்தில் இன்றுவரை நின்று கிடக்கிறது. அசோகமித்திரன் விமர்சனம் தான் மறக்கப் பட்டது.
முழுமை இல்லாத ஒரு படத்தில் செங்கொடிகள், மார்க்ஸ் வாசகங்கள், தேசிய இனப்பிரச்சினை குறித்து மேலோட்டமாக ஒரு சில பார்வைகள் இருப்பதை மட்டும் பார்த்து உள்ளம் நெகிழ்வது, கண்ணீர் விடுவது, கனத்துப் போவது, கிடைத்ததை கொண்டு திருப்தி அடைவது எல்லாம் அதீத உணர்ச்சி வயப்பட்ட மனநிலை. கலைகளை அறிவால் அணுகுவதே
சரியானது.
மிகச் சிறந்த சினிமாக்களையும், இலக்கியங்களையும் எதிர்பார்க்க நமக்கு உரிமை உள்ளது. இதில் நாம் தவறிழைத்தால் முப்பது ஆண்டுகளுக்குப் பின்பும் வாட்டாக்குடி இரணியனையும், அரவிந்தனையும் தாண்ட முடியாமல் தவிக்கும் விடுதலை போன்ற படங்கள் தான் நமக்குக் கிடைக்கும்.
தமிழில் இவ்வளவுதான் சாத்தியம் என்பது தோல்வி மனப்பான்மை. Low self esteem பிரச்சினை.