சங்கத்தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது தற்கால மரபாகிவிட்டது. ’சங்கப் புலவர்கள்’, ‘சங்க நூல்கள்’ என்று குறிப்பிடும் வழக்கம்’ இறையனார் களவியல் உரை எழுதப்பட்ட காலத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். அதாவது, பொது சகாப்தம் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து என்று வைத்துக் கொள்ளலாம்.
‘சங்கம்’ என்றாலேயே ‘தொகுப்பு’ என்றுதான் பொருள். ‘சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே’ என்கிறது திருப்பாவை.
களவியல் உரை எழுதியதாகக் கூறப்படும் நக்கீரர்தாம் முதல் முதலாகத் தொகுக்கப் பெற்ற நிலையில் இந்நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். வரலாற்றுக்குப் பதிலாக அதைத் தொன்மமாகக் காணும் நம் மரபுக்கேற்ப மூன்று சங்கங்கள் பற்றிய கதைகளையும் அவர் உருவாக்குகிறார். இக்கதைகளின் அடிப்படையில், இப்பொழுது நாம் சங்க நூல்களாக அறிபவை கடைச் சங்க கால நூல்கள் என்று வரலாற்றுப் பார்வையாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஆசாரக் கோவை போன்ற பல பிற்காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்பதால், ஒட்டு மொத்தமாக அவை அனைத்தையும் சங்க நூல்கள் என்று கூறுவது பொருந்தாது என்ற சர்ச்சையும் இருந்து வருகிறது.
பாண்டிய மன்னர்களின் தலைநகராயிருந்த மதுரை,. ‘சங்கம்’ பற்றி வழங்கும் கதைகளோடு மிகவும் சம்பந்தப் பட்டிருக்கிறது. ‘சங்கம் வளர்த்த மதுரை’ என்ற ஒரு கருத்தும் நம்மிடையே பரவலாக வேரூன்றியிருக்கிறது.
பொதுசகப்தம் 15ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் எழுதப்பட்ட ‘திருவிளையாடல்’ புராணம் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கக் கூடும். குறுந்தொகைப் பாடல் ஒன்றை வைத்துக்கொண்டு ஓர் அற்புதமான கதையைச் சிருஷ்டித்து அதை மதுரையில் நடந்தததாகச் சொல்லி, நக்கீரரோடும் சிவபெருமானோடும் இணைக்கிறார்.இக்கதையின் நாடகத் தன்மையினால், இக்கதை அவரவர் இயல்புக்கேற்ப அவர்களுடைய அடிமனத்தோடு கலை உறவோ அல்லது பக்தி உறவோ கொள்கிறது.
ஆனால், சங்க நூல்கள் என்று அறியப்படுகின்ற பத்துப்பாட்டு,எட்டுத்தொகை நூல்களில், நமக்குக் கிடைத்திருக்கும் 2386 பாக்களில் பெரும்பாலானவை அகப்பாடல்கள். அவை 1855.
புறப் பாடல்களில்தாம் மன்னர்களின் பெயர்களும் அவர் நாட்டின் பெயர்களும் குறிப்பிடப்படப்படுவது மரபு. புறப்பாடல்கள் 526. அவற்றில் குறுநில மன்னர்களைப்பற்றிய பாடல்கள்தாம் அதிகம். அவை 286. மூவேந்தர்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் பாடல்கள் 98. மூவேந்தர்களில் பாதிக்கு மேல் சேரர்களைப் பற்றியச் செய்யுட்கள்.. அடுத்த நிலையில் சோழர்கள். மூன்றாம் இடத்தில் பாண்டியர்கள்.இந்நிலையில் சங்கம் பாண்டியரோடு தொடர்புப்படுத்திப் பேசுவதுதான் முரணாகப் படுகிறது.
சங்க நூல்களில் நக்கீரரின் பாடல்கள் 37. அவற்றில் ஆறு இடங்களில்தாம் அவர் பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். சங்கப் பாடல்களில் அதிகமாகக் கிடைக்கும் பாடல்கள் கபிலருடையவை. அவை 235. அவற்றில் பாண்டிய மன்னன் யாருமே குறிப்பிடப்படவில்லை. அவர் பாடிய பெரும்பான்மையான பாக்கள் குறுநில மன்னர்களைப் பற்றியன. பறம்பு மலைத் தலைவன் வேள்பாரி அவருக்கு நெருங்கிய நண்பன்.
சங்கப் புலவர்களில் இன்னொரு முக்கியமான புலவர்.பரணர். அவர் 85 பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றில் அவர் குறிப்பிடும் பாண்டிய மன்னர்கள் இருவர் மட்டுந்தாம்.
சங்கப் பாடல்களை எழுதிய நக்கீரரும், இறையனார் களவியல் உரை எழுதிய நக்கீரரும் வெவ்வேறானவர்கள் என்பது தெளிவு. பண்டைத் தமிழிலக்கிய, நூல்களின் பெரும்பாலான ஆசிரியர்களின் இயற்பெயரே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. ஒரே பெயருடன் பல புலவர்கள் வெவ்வேறான காலங்களில் இருந்திருக்கிறார்கள். ஆகவே சங்கங்கள் பற்றித் தொன்மங்கள் உருவாக்கி அவற்றை மதுரையுடன் இணைத்த நக்கீரரும், சங்கப் பாடல்களைப் பாடிய நக்கீரரும் வெவ்வேறானவர்கள். இது போதாது என்று பொது சகாப்த பதினாறாம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் கைவண்ணத்தில் சிவபெருமானையே வாதத்தில் மறுத்துரைக்கும் புரட்சிகரமான ஒரு புதிய நக்கீரன் தோன்றுகிறார்.. நக்கீரரைப் பற்றிய இந்தப்பிம்பந்தான் பொதுமக்கள் மனத்தில் நிலைத்து நிற்கிறது. சிவபிரானையே எதிர்த்து வாதாடிய தமிழ்ப் புலவர் அல்லவா?
‘குறுந்தொகை’யில் ‘கடவுள் வாழ்த்து’க்குப் பிறகு முதல் பாட்டாக வரும் ‘இறையனார்’ என்ற புலவர் எழுதியதாகச் சொல்லப்படும் செய்யுள்தான், இக்கதைக்கு மூலம். ’இறையனார்’ என்ற பெயரே, பரஞ்சோதி முனிவரின் கற்பனையைத் தூண்டியிருக்க வேண்டும். நம்மாழ்வார் எழுதிய ‘திருவிருத்ததிலும் இப்பாட்டின் கருத்து வேறு வடிவத்தில் வருகிறது. நம்மாழ்வார் காலம் பொதுசகாப்தம் ஒன்பதாம் நூற்றாண்டு.
கல்வி என்பது செவி வழி மரபாக இருந்த காலத்தில், கல்வி கற்க விரும்புகின்றவர்கள் அனைவரும், வழக்காற்றிலிருந்த அனைத்துப் பாடல்களையும் பாடம் கேட்டாக வேண்டும் என்ற ஒரு நியதி இருந்திருக்க வேண்டும்.. சங்க இலக்கியத்தின் அகத்திணை மரபு, ஆழ்வார்ப் பாடல்களில் ,நாயக-நாயகி பாவமாக உருப் பெறுவதற்கும் இதுதான் காரணம்.
பொதுசகாப்தம் 14ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க வேண்டுமென்று கருதப்படும் அடியார்க்குநல்லார், தம் ‘சிலப்பதிகார உரையில் களவியல் உரையில் காணும் மூன்று சங்கங்கள் பற்றிய செய்திகளை அப்படியே எடுத்துச் சொல்லுகிறார். மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் ஆய்ந்ததாகக் கூறும் செய்திகள் நிலை பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
மதுரையில், பொதுசகாப்தம் 5 ஆம் நூற்றாண்டில் பூச்சிபாதர் என்ற சமணத் துறவியின் மாணாக்கர் வச்சிரந்ந்தி ‘திராவிட சங்கம்’ என்ற பேரில் சமண மதக் கூடம் ஒன்று நிறுவி, சமய ஆய்வுகள் நிகழ்த்த வழி வகுத்தார். இதுவே ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கம் வைத்துப் புலவர்கள், அரசர்கள் முன்னிலையில் தமிழ் ஆராய்ந்தார்கள் என்ற கதைகள் உருப் பெறுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார்.
பற்பல நூற்றாண்டுகளாகச் செவி வழி மரபாக இருந்த பாடல்களை இக்கால கட்டத்தில்தான் திணை, துறை என்ற இலக்கணப் பாகுபாட்டு அடிப்படையில் தொகுத்திருக்கிறார்கள். பொது சகாப்தம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பூர்வகுடிமக்கள் சமூகத்தில் வாய்வழியாகத் தொடர்ந்து நிகழ்ந்திருக்கும் (Oral tradition). இலக்கிய வரலாற்று மரபில் விடுபட்டுப்போன பாடல்கள் ஏராளமாக இருந்திருக்கக்கூடும்.
பாடல்களின் நுட்பத்தையும், நளினப் பரிணாமத்தையும்( sophisticatication) பார்க்கும்போது, (குறிப்பாக,அகப்பாடல்கள்) இத்தகைய இலக்கிய உயர்தரத்தை அவை அடையவேண்டுமென்றால், எத்தனை எத்தனை நூற்றாண்டுகளாக அவை வாய்மொழி மரபில் வழங்கியிருக்க வேண்டும் என்பதை வரலாற்று நிர்ணயமாகச் சொல்லிவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.
குறுநிலத் தலைவர்களின் தோற்றத்துக்குப் பிறகுதான் பெரு நில வேந்தர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது சரித்திரப் பரிணாம நிர்ப்பந்தம். அதனால்தான், நமக்குக் கிடைத்திருக்கும் சங்கப் பாடல்களில் குறுநில ந்மன்னர்களைப் பற்றிய பாடல்கள் அதிகமாக இருக்கின்றன. இவை அனைத்தும் அவ்வப்பொழுது ஆண்ட சிற்றரசர்களைப் பற்றிய செவி வழிச் செய்திகள். சங்கப் புலவர்கள் என்று அறியப்படும் 472 புலவர்களிலே 102 புலவர்கள் பெயர்கள் தெரியவில்லை. ஒரு செய்யுள் மட்டும் இயற்றியதாக க் கருதப்படுபவர்கள் 293. அவர்கள் இன்னும் பல செய்யுட்கள் இயற்றியிருக்கக் கூடும். இப்பொழுது கிடைக்கவில்லை.
மேலும் வைதிக மதம் தாக்கமில்லாத பாடல்கள் இத் தொகுப்பில் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும்., அத் தாக்கத்துக்கு உட்பட்ட பல செய்யுட்கள் சங்க நூல்களாக அறியப்படுவனவற்றில் இருக்கின்றன என்பதும் உண்மை. புறநானூற்றில் வரும் இரண்டாவது பாடலே ‘பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி’ பற்றியது! இது போல் வைதிக மரபும் தமிழ் மரபும் இரண்டறக் கலந்து விட்டமைக்குப் பல சான்றுகள் காட்டலாம். வைதிக மரபும் தமிழ் மரபும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது ‘சங்க காலம்’ என்று கூறுவது ஒரு கற்பனை என்றுதான் தோன்றுகிறது.