வருடா வருடம் மார்கழியில் குளிர் வருகிறதோ இல்லையோ, மக்களுக்கெல்லாம் வாசிப்பு ஆர்வம் டிசம்பர் வெள்ளம்போல பீறிட்டு புகுந்துவிடும். ஒருபக்கம் எங்கு பார்த்தாலும் புத்தக வெளியீடுகள், இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் புத்தகங்களை பற்றிய அறிமுகங்கள் என களைகட்டிவிடும். ஆகா மக்களுக்குதான் எவ்வளவு வாசிப்பு ஆர்வம் என நமக்கே வியப்பாக இருக்கும்.
முகநூலை திறந்தாலே எங்கு காணினும் முகப்புப்படங்கள்தான். கடை எண்கள். விளம்பரங்கள். “என்னுடைய அடுத்த நூல் வெளியாகிவிட்டது பிரண்ட்ஸ்” போஸ்டுகள்தான். எல்லாருமே புத்தகம் போடுகிறவர்களாக மாறிவிட்ட மாதிரியான பிரமை.
எல்லாமே சென்னை புத்தகத் திருவிழா தொடங்கி அது முடியும் வரைக்கும்தான். அதற்கு பிறகு, புத்தகக்கடைகளில் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார்கள். வாசகர்கள் எழுத்தாளர்கள் எல்லாரும் வெள்ளிகிழமை ராமசாமிகள் ஆகி சினிமா விமர்சனத்திற்கு திரும்பிவிடுவார்கள். பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் எல்லோருமே படம் பார்த்து அதைப்பற்றி இரண்டு வரியாவது எழுதினால்தான் பொழுது புலர்கிறது.
வெள்ளிக்கிழமை வெளியாகிற படத்திற்கு அடுத்த வியாழன் வரைக்குமோ அல்லது அடுத்த படம் வரும் வரையோ விவாதம் விவாதங்களில் இத்தனை ஆயிரம் பக்கங்களில் ஒரு நாவலுக்கோ சிறுகதை தொகுப்புக்கோ நான்குவரி கூட யாரும் எழுதுவதில்லை. சென்ற ஆண்டு எத்தனை சிறந்த கவிதைதொகுப்புகள் வெளியாகின, எத்தனை நல்ல நாவல்கள் வந்தன… யாருக்கும் தெரியாது. யாரும் அதைப்பற்றி எழுதவில்லை. யாரும் வாசிப்பதில்லை. யாரும் விவாதிப்பதில்லை.
புத்தகங்கள் பற்றி 2024 ஜனவரியில் எழுதப்பட்டதுதான் கடைசி. சென்ற ஆண்டின் இதே நாட்களில் எத்தனை நூறு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அதெல்லாம் என்னவானது? இந்நூல்களை எழுதிய ஒவ்வொரு எழுத்தாளரையும் பிடித்துவைத்து ‘’சார் உங்க புக் பத்தி எத்தனை ரிவ்யூ வந்திருக்கு’’ என கேட்டால் ஒன்று இரண்டு என்பதாகவே பதில் இருக்கும். அந்த அறிமுகமோ விமர்சனமோ கூட தெரிந்தவர் நண்பர் என்று முகநூலில் எழுதப்பட்டதாக இருக்கும். அல்லது தன்னுடைய பேக்ஐடியில் அவருக்கு அவரே எழுதியதாக இருக்கும்.
இந்த சினிமா விமர்சனம் எழுதுகிற ஆட்களில் முன்னணியில் இருப்பவர்கள் இலக்கியவாதிகள்தான். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நிறைய வாசிக்கிற ஒரு இளைஞனை சந்தித்தேன். சமகால வாசிப்பு சூழல் பற்றி நிறைய உரையாடிக்கொண்டிருந்தான்.
அவன் என்னிடம் ஒன்று கேட்டான். ‘ஏன் தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருமே வாராவாரம் சினிமா விமர்சனம் பண்ணுகிறார்கள், ஏன் யாருமே புத்தக விமர்சனம் பண்ணுவதில்லை. ஏன் ஒரு அறிமுகம் கூட பண்ணுவதில்லை, வெளிநாட்டு எழுத்தாளர்கள் யாருமே இத்தனை தீவிரமாக வாராவாரம் சினிமா விமர்சனம் எழுதி பார்த்ததே இல்லை’ என்றான். நியாயமான சலிப்புதான்!
சிறுவனுக்கு இன்னும் இலக்கிய சூழல் புரியவில்லை என நினைத்துக்கொண்டேன். தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு பிற படைப்புகளை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் ஆர்வம் இருப்பதில்லை. அதனால் ஒரு சுக்குக்கும் பிரயோஜனமில்லை எனக்கருதுகிறார்கள். மூத்த எழுத்தாளர்கள் தங்களுடைய அடிபொடிகளின் புத்தகங்களை மட்டும் முன்னிலைப்படுத்துவது உண்டு. அதை வாங்கிப்படித்தால் உண்மை தெரிந்துவிடும்!
இன்று இலக்கியவாதிகளின் இறுதி இலக்கு வாசகர்களுக்கு ஒரு மகத்தான படைப்பை நல்குவதில்லை. நவீன தமிழ் இலக்கிய சூழலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதில்லை. எப்படியாவது எந்த சினிமா இயக்குநர் பார்வையிலாவது பட்டு அடுத்த படத்திற்கு வாய்ப்புத்தேடுவது என சுருங்கிவிட்டது. வாசகன் கிடக்குறான்.
அதனாலேயே திரைப்படங்களில் இல்லாத குறியீடுகளை காணாத அதிசயங்களை இயக்குநரின் மேதைமைகளை பட்டியலிட்டு வாரந்தோறும் ஐஸ் வைப்பதும் அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் ஒன்றிரண்டு இலக்கிய மேடைகளில்தான் திரைப்படக்கலைஞர்கள் இருந்தார்கள், இப்போதெல்லாம் எல்லா மேடைகளிலும் புத்தக வெளியீடுகளிலும் அவர்களுடைய ஆதிக்கம்தான். மேடைகளில் ஒப்புக்குசப்பாணியாக ஒரு இலக்கியவாதியை செட்பீஸ் போல வைக்கிறார்கள். வாசகன் கொண்டாடுவதை விட சினிமா கலைஞர்கள் பாராட்டவேண்டும் என்பதுதான் அதிகபட்ச இலக்காக மாறிவிட்டது. அங்குதானே பணமும் புகழும் இருக்கிறது!
டிசம்பரும் ஜனவரியும் தாண்டிவிட்டால் புத்தகங்களை பற்றிய பேச்சு வாசகர்கள் எழுத்தாளர்கள் மத்தியில் முற்றிலுமாக குறைந்துவிடும். முகநூல் வாசிப்பு குழுக்கள், வாசகர் வட்டங்கள் தனிக்கதை. அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு. மற்றவர்கள் எப்போதெல்லாம் எழுத்து புத்தகம் பற்றி மற்ற மாதங்களில் பேசுகிறார்கள் என்று யோசித்துப்பார்த்தால், யாராவது எழுத்தாளர் இறந்துபோனால் அதைப்பற்றி பேசுவார்கள். அல்லது யாருக்காவது விருதுகொடுத்தால் கூச்சல் குழப்பம் இருக்கும். மற்றபடி எப்போதும் புத்தகம் என்றாலே மயான அமைதிதான்! இத்தனைக்கும் ஆண்டு முழுக்க ஆயிரத்தெட்டு புத்தகத்திருவிழாக்கள் தமிழ்நாடு முழுக்க நடக்கிறது. ஆனால் புத்தக வெளியீட்டை ஜனவரியில் மட்டும்தான் வைத்துக்கொள்வது ஏனோ புரியாத புதிர்.
சமீபத்தில் ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் தன்னுடைய புத்தகத்தின் முகப்பு படத்தை அனுப்பி இதை உங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட சொன்னார். அதுக்கென்னங் வெளியிட்ரலாம்… புக் அனுப்புங்க படிச்சிட்டு ரெண்டு வரி பாராட்டி எழுதறேன் என்றும் சொன்னேன். இன்னும் எழுதி முடிக்கலைங்க என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. ‘’இன்னும் பத்து நாளில் புத்தகத் திருவிழா இன்னும் எழுதி முடிக்கலைங்களா’’ என்று கேட்டால், ‘’ஆமாங்க இந்தவருஷம் பத்து புக்கு கொண்டுவரலாம்னு முடிவுபண்ணி எழுதிகிட்டிருந்தேன். இரண்டுதான் முடிச்சிருக்கேன் புக்ஃபேருக்குள்ள மீதி எட்டை முடிச்சிருவேன்’’ என்றார்.
பிரிண்ட் ஆன் டிமான்ட் வந்த பிறகுதான் இந்தமாதிரி அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கும் பெருமைக்கும் புத்தகம் போடுவது அதிகமாகிவிட்டது. ஒரு புத்தக வெளியீடு என்பது எழுதியதை அச்சிட்டு கொடுத்துவிடுவது என நினைக்கிறார்கள். ப்ரூஃப் பார்க்க வேண்டும், எழுதியதை எடிட் செய்ய வேண்டும், நல்ல அட்டைப்படம் வேண்டும், காசு கொடுத்து புத்தகம் வாங்குபவருக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் அழிந்துவரும் விஷயங்களாகிவிட்டன. அதிலும் எழுத்தாளர்களே பதிப்பாளர்களாக ஆகத்தொடங்கிய பிறகு எழுதியதையெல்லாம் அட்டையை வடிவமைத்து, அதை டிசைன் பண்ணி அச்சிட்டுவிடுகிறார்கள்.
புத்தகம் முழுக்க அத்தனை எழுத்துப்பிழைகள். வாக்கியப்பிழைகள். அவசரகதியில் எழுதப்பட்ட குப்பைகள்தான் பெரும்பகுதி. எழுதுகிற அனைத்தையும் புத்தகங்களாக்கி விடவேண்டும் என்கிற வேட்கைதான் இருக்கிறது. நான் பத்து புத்தகம் எழுதிவிட்டேன் நூறு புத்தகம் எழுதிவிட்டேன் என எண்களுக்கு பின்னால்தான் ஓடுகிறார்கள். ஆனால் இந்த நூல்களுக்கு பின்னால் அதை நேர்த்தியாக தயார் செய்ய தரப்படுகிற உழைப்பு பூஜ்யமாக இருக்கிறது.
புத்தகங்கள் வாங்குவதும் வாசிப்பதும் குறைந்துகொண்டிருக்கிற காலத்தில் புத்தகங்களை மென்மேலும் சிறப்பாக வடிவமைக்கவும் அதற்கு அதிக அக்கறையோடு உழைக்கவும் அதை சந்தைப்படுத்தவும் வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ரிவர்ஸ் கியரில் போய்க்கொண்டிருக்கிறோம். நாம் யாருக்காக புத்தகங்களை எழுதுகிறோம்?