இனி ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்கிற நடைமுறை கிடையாது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ளது !
சங்கி மாநிலங்களெங்கும் இதற்கு அமோக ஆதரவு எழ, வழக்கம் போல கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
சங்கிகளின் சகவாசத்தால் புதுவை மாநிலத்தில், இந்தக் கொள்கை இந்தக் கல்வி ஆண்டு முதலே அங்கு அமலாகவிருக்கிறது. நன்கு படிக்கவில்லை என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் மகனை / மகளை ஃபெய்ல் ஆக்கிவிட்டார்கள் என்கிற ஓலம் அடுத்தாண்டு உங்கள் செவிகளையும் எட்டலாம், அவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள். மாறாக, தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக உங்களுடையக் கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம், எங்கள் பள்ளிகளில் பழைய நடைமுறையே தொடரும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மூலமாக ஆவணப்பூர்வமாகச் சொல்லிவிட்டது !
ராஜகோபாலும் – காமராஜரும்
ராஜாஜி மோடித்தனமான முதலமைச்சர் என்றால் காமராஜர் கலைஞர்த்தனமானவர். பல்லாயிரம் தொடக்கப்பள்ளிகளை தொடர்ந்து நடத்த நிதி இல்லை என ராஜாஜி மூடியபோது, அவருக்குப் பின் பதவியேற்ற காமராஜரோ அத்தனைப் பள்ளிகளையும் மீண்டும் இயங்கச் செய்ததோடு மேலும் பல பள்ளிகளை உருவாக்கினார். அந்தப் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்க, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார் !
மோடித்தனமானவர் பள்ளிகளை நடத்தவே பணமில்லை என்ற பொழுதில்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியோடு இலவச உணவையும் தருகிறார் கலைஞர்த்தனமான காமராஜர்.
நிதிச்சுமையைக் குறைக்க அவர் நன்கொடைகளை கேட்கத் தயங்கவில்லை. மடிப்பிச்சை எடுத்தும் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுத்தே தீருவேன் எனச் சூளுரைத்தார் !
பெரியார், அண்ணா போன்றோரின் பேராதரவோடு காமராஜரின் மதிய உணவுத்திட்டம் பெரு வெற்றி பெற்றது. பின்னாளில் திமுகவின் வசம் ஆட்சி வந்த போதும் மதிய உணவுத்திட்டம் நின்று போய்விடவில்லை. அரசுப் பள்ளிகளோடு நில்லாமல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் அது விரிவுபடுத்தப்ப்பட்டது. இதையே சத்துணவுத்திட்டம் என்று தன் பெயரை எம் ஜி ஆர் எழுதிக் கொண்டாலும், இன்றுவரை அதற்காக அவர் புகழப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார், காரணம் அந்தத் திட்டத்தால் பலப்பல இலட்சம் மாணவர்களுக்கு கல்வி கிட்டியது. அந்தக் கல்வியால் அவர்களுக்கு யாவும் கிட்டியது !
ஜெயலலிதாவும் கலைஞரும் !
சத்துணவு என்று அதற்கு எம் ஜி ஆர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாலும் உண்மையானச் சத்துணவைத் தந்தவர் கலைஞர்தான். அவர்தான் குழந்தைகளுக்கு முட்டை தர வேண்டுமென ஆணையிட்டவர். உண்மையான புரதச் சத்து கிட்டி அது அசல் சத்துணவு ஆனது. ஜெயலலிதா அதை மேலும் மெருகேற்றினார். சுண்டல், சத்துருண்டை என அது பல வடிவங்களாக முன்னேறி, நல்லதையேச் செய்துக் கொண்டிருக்கிறது !
எட்டாம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத் தேர்ச்சி என்கிற கல்விமுறையைக் கொண்டு வந்தவர் கலைஞர். அதற்கு ஒரு பின்னணி உண்டு.
இந்தியாவெங்கும் இனி லாரி ஓட்டுநர்கள் உரிமம் பெற வேண்டுமானால் அவர்கள் எட்டாவதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிட்டும் என்கிற ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு !
அன்று எட்டாவது வகுப்புக்கு பொதுத்தேர்வு இருந்தது. பொதுத்தேர்வு என்றாலே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் எட்டாவதிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்ல முடியும். அட, ஒன்பதாம் வகுப்புக்கு போகாமல் லாரி ஓட்டப் போகலாம் என்றாலும் நீங்கள் ஆல் பாஸ் ஆகியிருந்தால்தான் என்று புது அணுகுண்டு பாய, அன்று பல இலட்ச இளைஞர்கள் இதனால் திடுக்கிட்டுப் போனார்கள். அன்றையச் சூழலில் ஓரளவு எழுதப், படிக்க கையெழுத்து போட, அடிப்படைக் கல்வி தேவை. அது போதும் என்கிற நிலைதான் இருந்தது. அதன்பின்னர் அவர்கள் வேலைக்குச் செல்வதில்தான் குறியாக இருந்தனர், காரணம் குடும்பச் சூழல். பத்தில் ஐந்து பேருக்கு இந்த நிலை இருந்த வேளையில் எட்டாவதில் தேர்ச்சியுற எத்தனை வருடங்கள் பிடிக்குமோ என்கிற அவர்களுடைய கிலியைப் போக்கவே, எட்டாவது வரை அனைவரும் கட்டாயத் தேர்ச்சி என்கிறத் தேனை வார்த்தார் கலைஞர் !
அதே கலைஞர், பெண்கள் கல்விக்காக மூவலூர் இராமாமிர்தம்மாள் திருமண உதவித்திட்டத்தைக் கொண்டு வந்தார். வியப்பீர்கள்தானே ? திருமணத் திட்டம் எப்படி பெண் கல்விக்கு உதவும் ?
90 களில், பெண்கள் பருவ வயதுக்கு வந்தவுடன் அவர்களுடைய பெரும்பாலோரின் படிப்பு நிறுத்தப்பட்டு விடும். எனவே பெரும்பாலான பெண்கள் ஆறு அல்லது ஏழைத் தாண்டுவதே இல்லை. அடிப்படைக் கல்வியான எட்டாவது வரைக்கும் கூட படிக்க விட மாட்டேன் என்கிறார்களே என்கிறக் கவலை அனைத்துக் கல்வியாளரிடையேயும் அன்று மிகுந்திருந்தன.
போக, அந்தப் பெண்களுக்கு 15 – 16 வயதிலேயே திருமணமும் செய்து வைத்துவிடுவார்கள். நம் அம்மா, அம்மம்மாக்களிடம் இந்தக் கதைகளைக் கேட்டுப் பாருங்கள், திடுக்கிடுவீர்கள் !
பெண்ணின் திருமண வயது 18 என்று சட்டம் இருந்தாலும், தெருவுக்கு நாலு திருமணம் இப்படி நடந்தால் யார் புகாரளிப்பது ? யார் மீது நடவடிக்கை எடுப்பது ?
எட்டாவது படித்து தேர்ச்சியுற்று 18 வயது பூர்த்தியாகியிருந்தால் அந்தப் பெண்ணின் திருமணச் செலவுக்கு ரூ.5000 ரொக்கம் என்று திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். எப்படி என்று பாருங்கள்.
எட்டாவது வரை படித்து தேர்ச்சியுற்றிருந்தால் மட்டுமே உதவி கிட்டும். எனில் வயதுக்கு வந்தவுடன் பள்ளியிலிருந்து நிறுத்த முடியாது. எட்டாவது வரை ஆல் பாஸ் என்றாலும் முறையான பள்ளிக்கு வந்த நாட்கள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டே இறுதித்தேர்வின் தேர்ச்சிமுறையும் எளிதாக இருக்கும் என்பதால் 13 – 14 வயது வரை பெண்கள் பள்ளிகளுக்கு வந்தனர். 18 வயது நிறைந்திருந்தால் மட்டுமே ரொக்க உதவிக்குத் தகுதி எனும் போது அங்கு குழந்தைத் திருமணமும் தடைபட்டு, பல பெண்கள் படிக்கும் சூழல் பெருகியது !
பின்னாட்களில் இந்த உதவித்தொகையை 25000 வரை அதிகரித்தார் கலைஞர். இந்தத் திட்டத்தை ஆரம்ப காலங்களில் அலட்சியமாக அணுகிய ஜெயலலிதா, 2011 – 2016 ல் கொஞ்சம் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டார்.
அதேப்பெண் பத்தாவது படித்துத் தேறினால் 25000 ரொக்கத்துடன் நான்கு கிராம் தங்கமும் தருகிறேன் என்றார். அதே பெண் பட்டதாரி ஆகியிருந்தால் 50000 மற்றும் ஒரு சவரன் தங்கம் என்றார். இது பெண்கள் இடையே பெரும் பேசுபொருள் ஆனது. இதற்காகவேனும் தம் பெண்கள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டுமென பெற்றோர் பாடுபட்டனர். கல்வியும் பெருகியது, குழந்தைத் திருமண முறையும் அருகியது !
எடப்பாடியும் – ஸ்டாலினும் !
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் நீட் நுழைந்தது, பல குழந்தைகள் தற்கொலை செய்துக் கொண்டன, தாலிக்குத் தங்கம் திட்டத்தில் ஊழல் மலிந்து அது அறவே நிறுத்தப்பட்டது என்கிற பின்னடைவுகள் நிகழ்ந்தாலும் ;
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட்டில் கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடு பெரும் ஆறுதல்.
எவராலோ ஆட்டுவிக்கப்படும் ஆட்களாக ஆண்டாலும் கல்வி விஷயத்தில் இவர்கள் இங்கு இப்படித்தான் இருந்தனர் என்பதற்காகச் சொல்கிறேன்.
ஆனால் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதும் குழந்தைகளின் கல்விக்காக அவர் பாடுபடுவதை வர்ணிக்கச் சொற்கள் போதாது. அவ்வளவு பாராட்டுகளை தீராமல் பெற்றுக் கொண்டே இருக்கிறார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இந்தியாவுக்கே இன்று முன் மாதிரித் திட்டமாக பெயர் பெற்றிருக்கிறது. வயிராற உண்டபின் கற்கும் கல்வி மேலும் அவர்களை அறிவாளிகளாக்குகிறது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சைக்கிள், மடிக்கணினி என்று கல்வியின் சொர்க்கபுரியாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டார் ஸ்டாலின் !
பெண்கள், இன்று எட்டாவது, பத்தாவது, பனிரெண்டாவது வகுப்பு வரை படித்துவிட்டு, திருமணம் அது இதுவெல்லாம் வேலைக்காகாது. பட்டம் பெற வேண்டும். படித்த படிப்புக்கேற்ப வேலைக்குப் போக வேண்டும். கை நிறைய பொருளீட்ட வேண்டும். படிக்க வைத்து ஆளாக்கியப் பெற்றோரை, தன் கல்வி தந்த வளங்களைக் கொண்டு சீராட்ட வேண்டும் …
இதற்கு நிதிச் சிக்கலில்லாத, தடையில்லாத பட்டப்படிப்பு வேண்டும். இம்முறை கலைஞர் கொண்டு வந்த அதே மூவலூர் இராமாமிர்தம்மாள் திருமண உதவித் திட்டத்தின் பெயரிலிருந்த திருமணத் தடையைத் தூக்கி விட்டார். மூவலூர் இராமாமிர்தம்மாள் பெண்கள் உயர்கல்வி உதவித்திட்டம் என்று பெயரிட்டு, மாதா மாதம் ஆயிரம் ரூபாயை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறார். அந்தப் பெண் பட்டம் பெறும் வரை அந்தப் பணம் அவருக்குக் கிட்டும்.
இதனால் சமூகத்தில் என்ன மாற்றம் வந்துவிடும் ?
பெண்கள் கற்று கை நிறையச் சம்பாதிக்க ஆரம்பித்த பின், தீராமல் இருந்த எத்தனை ஆணாதிக்க ஆணவங்கள் ஒழிந்து போயின தெரியுமா ? பெண்களைப் பெற்றவர்களுக்குத் தெரியும். இன்று பெண்ணை கட்டிக் கொடுத்துவிட்டு தினமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழும் சூழல் இல்லை. பெண்ணைக் கரைசேர்க்க முடியுமா என்கிற தினக்கவலைகள் இல்லவே இல்லை. இன்னும் பத்தாண்டுகளில் மேலை நாடுகளுக்கு நிகராக பெண் விடுதலையில் நாம் உச்சம் போயிருப்போம். பெண்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நீட்டில் மருத்துவ படிப்புக்காக மட்டுமின்றி உள் ஒதுக்கீடு பொறியியலுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மோடியும் – மன்மோகன் சிங்கும்
முடிவுக்கு வந்துவிட்டோம். இராஜகோபாலும் காமராஜரும் என்று ஆரம்பித்தோமா ? மோடியும் – மன்மோகனும் என்று வரும்போது, மேலே உச்சிக்குப் போன இராட்டினத் தொட்டி, இதோ கீழே வந்து தரை தட்டி விட்டது !
எட்டாவது வரை ஆல் பாஸ் என்று தமிழ்நாட்டில் கலைஞர் கொண்டு வந்திருந்தாலும், அதை இந்தியளவில் சட்டமாக்கியவர் மறைந்த மேதை மன்மோகன் சிங் அவர்கள்தான். அதைத்தான் இப்போது நீக்கியிருக்கிறார்கள் இராஜகோபாலின் எச்சங்கள்.
கேட்டால் தகுதியற்றவர்களால் இந்தியா நிரம்பி வழிகிறதாம்.
குஜராத்தில் மட்டும் இந்தச் சட்டம் இருந்திருந்தால் மோடி போலியாக கூட பட்டச் சான்றிதழைத் தந்திருக்க முடியாது.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கதையாக, மருத்துவப் படிப்பில் தகுதி இல்லை என நீட்டை வம்படியாகத் திணித்தனர். அந்த வெறி ஏறி இன்று ஐந்தாவது படிக்கும் குழந்தைக்கு கூட போதியக் கல்வித் தகுதி இல்லை, ஃபெயிலாக்கினாத்தான் தகுதி கூடும் என அந்தத் தற்குறிகள் நம்ப ஆரம்பித்துவிட்டனர் !
குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகி விடக்கூடாதென மடிப்பிச்சை கேட்டு படிக்க வைத்த மண்ணில், ஐந்தாவது படிக்கும் குழந்தையை நீ தேர்ச்சி பெறவில்லை என குலத்தொழிலுக்கு திரும்ப அனுப்பப் போகிறார்களா ?
Yes, you catched my point. விஸ்வகர்மா யோச்சனா மூலம் பல கோடி குலத்தொழில்களை மீட்டெடுத்தால் வழக்கம் போல எல்லாவிடங்களையும் நோகாமல் அவா அவா பிடித்துக் கொள்ள ஏதுவாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் துளியும் தயங்காமல் செய்வார் மோடி !
தாத்தா தொழில், அப்பா தொழிலை மகனும் செய்தால் அவனுக்கு பல இலட்சம் கடனுதவி அல்வாவைத் திணிக்க, பெருக்க இந்த ஃபெய்ல்கள் உதவுமாம். சிறிதும் கூச்சமின்றி இதை அப்படியேச் சொல்லி வழிமொழிகிறார் ஜக்கி வாசுதேவ்.
கண்ணீர் விட்டு வளர்த்த நற்பயிரை கொதி நீர் ஊற்றி அழிக்கும் சங்கிகள் எந்தப் பிறவிக்கும் மீள முடியாதளவுக்கு நாசமாக வேண்டும். அது நிகழ்ந்தாலொழிய இதெதுவும் இங்கு அடங்காது. இயற்கையிடம் நல்லது விரைந்து நடக்க வேண்டுவோம். அவ்வளவுதான் !!!
மின்னஞ்சல் : rashraja1969@gmail.com