சருகுகளின்மீது ஆட்டுக்குட்டிகள் ஓடுவதைப்போல அலுவலகக் கணினிகளில் தட்டச்சு செய்யும் ஒலிக்கு இடையில் என் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். யாமினியிடமிருந்து அழைப்பு. அவளது எண்ணிலிருந்து கடைசியாக அழைப்பு வந்து கிட்டத்தட்ட நான்கு மாதம் ஆகிறது.
”சின்னா…அம்மாக்கு ரொம்ப உடம்பு சரியில்ல.. ரத்த ரத்தமா வாமிட் பண்ணிட்டாங்க.. ரொம்ப பயம்மா இருக்கு.. அம்மா உங்களுக்கு போன் பண்ண சொன்னாங்க.. கொஞ்சம் லீனா ஹாஸ்பிட்டலுக்கு வர்றீங்களா?”
“ஆ..ஆங்…..ம்ம்..தோ.. வர்றேன்..”
யாமினியின் மகன் விச்சுதான் போன் செய்திருந்தான். தீனமான குரலில் வார்த்தைகள் உடைந்து உடைந்து வந்தன. போனை வைத்ததும் குளிரூட்டப்பட்ட அறையில் நான் நிலையிழந்து உடல் படபடப்படைந்தேன், உதடுகள் துடித்தன. வார்த்தைகள் எதுவுமற்று அப்படியே உறைந்து அமர்ந்திருந்தேன்.
என் ஆன்மா எனக்கு முன் ஓட்டமெடுத்து மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பைக்கை ஸ்டார்ட் செய்து கிண்டியை நோக்கி வேகமெடுத்தது.
மேலாளரிடம் நண்பரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நான் செல்வதற்கு முன்பே யாமினிவும் விச்சுவும் கீழ்வீட்டுக்காரர்கள் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்கள்.
விச்சுவுக்கு போன் செய்துவிட்டு ஓடிப்போய் பார்க்கும் போது அவன் ஸ்கேன் அறை வாசலில் தனியே உட்கார்ந்திருந்தான். ஒன்பது வயது சிறுவனை யாருமற்ற அந்த மருத்துவமனை வராண்டாவில் ஒரு அனாதைத்தனத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபோது எனக்குப் பொங்கிக் கொண்டு வந்தது. அவனெதிரில் சென்று அவன் தோளைத் தொட்டபோது என்னை இறுக அணைத்துக் கொண்டான்.
“அம்மாவுக்கு என்ன ஆகுமோ பயம்மா இருக்கு சின்னா.. டாக்டர்ஸ் ஏதேதோ சொல்றாங்க.. அம்மா ரொம்ப அழுதுட்டாங்க.”
தேம்பிய அவன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப் படுத்தி அமர வைத்தேன். முகம் வதங்கிப் போயிருந்தது, கண்கள் சொறுக இருந்தவனைப் பார்த்தபோதே பசியோடு இருக்கிறான் என்பது தெரிந்தது. அருகிலிருந்த கேண்டீனில் டீயும், சமோசாவும் வாங்கிக் கொடுத்தேன் கடகடவென அவன் அவற்றை சாப்பிட்டு முடித்தபோது காலையிலிருந்தே வெறும் வயிறோடு இருந்திருக்கிறான் என்பதை உணர முடிந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் ஸ்கேன் முடிந்த மருத்துமனை உடையோடு வெளியே வந்தாள் யாமினி. உலர்ந்த உதடுகளில் வலிந்து சிரிப்பை வரவழைத்து, “தேங்க்ஸ்” என்றாள்.
”என்ன சொன்னாங்க டாக்டர்?”
“லங்க்ஸ்க்கு பக்கத்துல சின்னதா ஒரு லீஷன் இருக்குது.. லங்க் கேன்ஸரா இருக்கும்னு சொல்றாங்க.”
அவள் சொன்னதுமே எனக்கு தலையில் கனமாக எதையோ கொண்டு அடித்ததைப் போலிருந்தது. வழக்கமான அவளது கேலிப்பேச்சாக இருக்க வேண்டுமென மனம் வேண்டிக்கொண்டது. ஆனால் மருத்துவமனையில் அடுத்தடுத்து நிகழ்ந்த டாக்டர்களின் சந்திப்புகள் முகத்தில் அச்சத்தைப் படரச் செய்தது. கேன்ஸராக இருக்குமென்றே எல்லா டாக்டர்களும் சந்தேகித்து அடுத்தடுத்த சோதனைகளுக்குப் பரிந்துரைத்தார்கள்.
’புகை பிடிக்கும் பழக்கமுண்டா? புகையிலை, மது அருந்தும் பழக்கம் உள்ளதா?’ என்ற மருத்துவர்களின் கேள்விக்கெல்லாம் அவள் ”அக்கேஷனலி” என்ற பதிலையே கூறினாள்.
மருத்துவமனையில் யாமினிக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் இருந்தமையால் சேர்க்கையில் எந்தச் சிக்கலுமின்றி ஒரு நல்ல அறை கிடைத்தது. நான் யாமினியின் வீட்டிற்குச் சென்றேன். நாற்காலி முழுவதும் குவிக்கப்பட்ட துவைத்த துணிகள், ஹாலில் புத்தகங்கள், டீ குடித்த கிளாஸ்கள், விச்சுவின் விளையாட்டுப் பொருட்கள் என வீடே சிதறிக்கிடந்தது
உடைகளும், பிளாஸ்க் உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, இரவு உணவு வாங்கித் திரும்பும்போது விச்சு நன்றாக உறங்கியிருந்தான். வெறுமனே இமைமூடிக்கிடந்த யாமினி என் அசைவு கேட்டதும் என்னை அருகில் அழைத்தாள். என் கையை எடுத்து அவள் கரத்தின் மீது வைத்துக் கொண்டாள். பின் என் காலரை இழுத்து நெற்றியில் முத்தமிட்டாள்
“ஸாரி சின்னா. ஐயம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி..”
நான் அவள் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டேன்.
“பொறக்கும்போதே போகறதுக்கு டிக்கெட்டோட தானே வந்திருக்கோம்..”
“எதுக்கு இந்த பேச்செல்லாம்?”
அவள் என் கையை இன்னும் அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.
”எனக்கு மண்டய போடுறதுக்கெல்லாம் பயமில்ல சின்னா.. விச்சுவ நினச்சாதான் கஷ்டமா இருக்கு.”
அவள் இப்படிச் சொன்னதும் உள்ளுக்குள் அவள் மீதிருந்த கோபங்கள் யாவும் நொறுங்கி உதிர்ந்தன. சாப்பாடு பொட்டலத்தைப் பிரித்து அவளுக்கு இட்லியை ஊட்டி விட்டேன்.. அவள் விழிகள் உடைந்து நீர் கொட்டியது.
யாமினி, எங்கள் அலுவலகத்திற்கு ஆங்கில மொழிப் பயிற்றுனராக வந்த பயிற்சி காலத்திலேயே அலுவலகத்தில் என்னோடு பணிக்குச் சேர்ந்த புதிய பணியாளர்கள் பலரையும் வசீகரித்திருந்தாள். நாங்கள் ஆங்கிலத்தில் எந்த வார்த்தையை உச்சரித்தாலும் அதை திருத்தம் செய்து அதன் சரியான உச்சரிப்பைச் கற்றுத்தருவாள். அலுவலகத்தில் உள்ள ஆண்கள் அவள் சிரிக்கும்போது கன்னக்குழியில் விழுந்துவிடுவார்கள். ”பழங்களால செய்த சிலை போல இருக்காய்யா” என்று நண்பர்கள் அவளைச் சொல்வார்கள். அவள் அணிந்திருக்கும் ஆடைகளின் மூலமாகவே அன்றைய ஃபேஷன் உலகின் ட்ரெண்ட் எதுவென்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அவள் அலுவலகத்தில் எங்கள் பணிப்பகுதிக்கு வரப்போவதை அவளது வாசனைத் திரவியம் முன்னறிவிப்புச் செய்யும்.
ஒருமுறை அலுவலகத்தில் நடந்த பண்டிகை நாள் கொண்டாட்டமொன்றில் ’உள்ளம் இறங்கி வந்தருள் புரிவாயே’ என்ற கீர்த்தனையை மிகுந்த உணர்வுபூர்வமாகவும், நேர்த்தியாகவும் பாடினாள். அடுத்த ஒருவாரத்திற்கு அந்தப் பாடலை அலுவலகத்தில் பலரும் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். பணிக்குச் சேர்ந்திருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் அவரவர் மொழியில் திருத்தமாகப் பேசுவாள். அது அவர்களுக்கு அவள் மீது கூடுதல் நெருக்கத்தை அளித்து அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைக்கூட அவளிடம் பகிர்ந்துகொள்வார்கள்.
மேலாளர் உள்ளிட்ட எங்கள் அணியிலிருந்த அத்தனை ஆண்களும் அவளோடு பேச சந்தர்ப்பங்களை உருவாக்குவதும், கிடைத்த உரையாடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் முயற்சித்தார்கள். இன்ஸ்டாகிராமிலும், ஃபேஸ்புக்கிலும் அவளுடன் தனிப்பட்டுப் பேச அவளை விடாது ’பின் தொடர்ந்தார்கள்’. நான் ஒருவன் மட்டும் அவளோடு எதற்காகவும் சென்று பேசுவதில்லை. எந்த சமூக வலைதளங்களிலும் அவளைப் பின் தொடராமல் இருந்தேன். அவள் பார்க்கும்போது பார்க்காமல் இருப்பது என்றிருந்தேன். அவளுக்கு என்மீது தானே ஒரு கவனம் உருவாகி வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் திண்ணமாக இருந்தது. ஆனால் அவளோ எனக்குள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவனிடம் தொற்றிக்கொள்ளும் நுண்கிருமியைப் போல பரவிக் கொண்டே இருந்தாள்.
ஒருநாள் அலுவலகத்தில் ”சின்னா” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். யாமினி என் இருக்கைக்கு முன் நின்றிருந்தாள். வழக்கமாக அலுவலகத்தில் என்னை எல்லோரும் சின்னராஜா என்று முழுப்பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். அந்த நொடியிலிருந்து அவளிடம் பேசுவதற்கு இருந்த தடைகளெல்லாம் உடைந்து பேசத் தொடங்கினேன். நாளடைவில் ஒத்த ரசனை, பரஸ்பர அக்கறை என அது துளிர்த்துக் கிளை விட்டது. சமூக வலைதளங்களில் இருந்த அவளது அத்தனை புகைப்படங்களுக்கும் இதயக்குறிகளை அள்ளி இறைத்தேன்.
அணுக்கம் கூடிய பின் சின்னராஜா என்ற எனது பெயர் எனக்கே மறக்கும்படி சின்னா என்று அழைக்கத் தொடங்கினாள். அதற்குப்பிறகு யார் என்னுடைய முழுப்பெயரில் அழைத்தாலும் அவர்கள் என்மீது கோபத்திலோ, விலக்கத்திலோ இருப்பார்களாக்கும் என்று எண்ணத் தொடங்கிவிட்டேன்.
நம் பெயரைச் சுருக்கி செல்லமாக அழைப்பவர்கள் நமக்கும் செல்லமாகிவிடுகிறார்கள் என்று நான் நினைத்து மகிழ்ந்திருந்த ஒரு கணத்தில் எல்லோரும் தன் பெயரைச் சுருக்கி அழைப்பதால் நான் அவளை யாமினி தேவி என்ற அவளின் முழுப்பெயரோடு அழைக்க வேண்டுமெனச் சொன்னது எனக்கு ஏமாற்றமாக இருந்தது (ஆனால் மறைந்த அவளது தந்தை அவளை முழுப்பெயர் சொல்லிக் கூப்பிடுவதை ஞாபகப்படுத்திக் கொள்ளவே தன்னை அப்படி அழைக்கச் சொன்னதாகப் பின்னொரு தருணத்தில் கூறினாள்).
ஓர் அந்தியில் நானும் அவளும் காபியுடன் அமர்ந்திருந்தோம். எனக்கு அவள் மீதிருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்திவிடத் துள்ளியது மனம்.. ஆனால் மூளை வார்த்தைகளைப் பிடித்து வைத்துக்கொண்டது. உடைந்து உடைந்து சொற்கள் காற்றாக வெளிவந்தன.
“சின்னா.. உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு சொல்லணும்னு நினச்சிருந்தேன்.”
அவள் அப்படிக் கூறியதும் ஆர்வம் அதிகமாகியது காது மடல்களில் வெப்பம் பரவியது.. ஆர்வத்தைப் புன்னகையாக மாற்ற கஷ்ட்டப்பட்டேன்.
“சொல்லு யாமினி..”
”எனக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சுன்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். ஐயம் அ சிங்கிள் மதர்! என் பையன் மட்டும்தான் நான் லைஃப்ல நம்புற ஒரே ஆம்பள..”
“ம்.”
அதுக்கப்புறம் உன்கூட பேசும்போது ஒரு குட் ஃபீல் இருக்கு.”
“ம்ம்..”
“ஆபீஸ்ல நெறய ப்ரபோஸல்ஸ், அப்ரோச்சஸ் வந்துட்டே இருக்கு.. இயல்பா பேசினாலே டேக்கென் ஃபார் கிராண்ட்டடா எடுத்துக்குறாங்க..பட் யூ ஆர் யூனீக் அண்ட் ஜென்ட்டில்.. தேங்க் யூ.”
அவள் என்னைப் பற்றிச் சொன்ன புகழ்மொழிகளை ஏற்றுக்கொள்வதைப் போல நடுவாந்திரமாக ஒரு புன்னகையை உதிர்த்தேன்.
“ஆல்வேஸ் ஐ வில் பி யுவர் குட் ஃப்ரண்ட்” என்ற வார்த்தைகள் உள்நாக்கிலேயே அடைத்துக் கொண்டது. வார்த்தைகளை வெளியே விடாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தேன்.
மொபைலிலிருந்து முகப்புப் படமாக வைத்திருந்த விச்சுவின் புகைப்படத்தை காண்பித்தாள்.. அவன் பார்க்க அப்படியே அவளின் சிறுவயது ஆண் வடிவமாக இருந்தான்.
அவளுக்கு விவாகரத்தானதோ, குழந்தையிருப்பதோ, அவள் என்னைவிடவும் ஐந்து வயது மூத்தவள் என்பதோ எந்தக் காரணமும் அவள்மீதான ஆர்வத்தை எனக்குத் துளியும் குறைக்கவில்லை. மாறாக, அவளை மேலும் நெருக்கமாகவே உணர ஆரம்பித்தேன். அலுவலகத்தில் மற்றவர் முன்னிலையில் அதிகமாக அவளோடு பேசினேன். அவளுக்கு நான் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டேயிருந்தேன்.
என்ன சொன்னாலும் ஒட்டாரம் பிடிக்கும் பிள்ளையென தவித்த என் மனதை யாமினியிடம் வெளிப்படுத்த சந்தர்ப்பம் எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.. அப்படியொரு நாளில்தான் அவளது இருக்கைக்கருகே அமர்ந்திருந்த அவனைப் பார்த்தேன். சிவந்த உருவமும், முகத்தைப் பாதி மறைத்த தாடியுமாக இருந்தவனின் நெற்றியில் குளிர் கண்ணாடி அமர்ந்திருந்தது. காதில் கடுக்கன்களும், கிருதாவில் கீறல்களும் செதுக்கிய புருவங்களுமாக விளம்பர மாடலைப் போல இருந்தான்.
அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்கலாம்.. அல்லது நண்பன்? நெருங்கிய நண்பன் என்றால் என்னிடம் நிச்சயமாக சொல்லியிருப்பாளே..
எப்போதும் அலுவலகத்திலிருந்து புறப்படும்போது அருகில் வந்து டாட்டா சொல்லி விடைபெற்றுச் செல்பவள் இன்று எதுவும் சொல்லவில்லை.
அலுவலகம் முடிந்து பார்க்கிங் இடத்திற்கு நான் என் பைக்கை எடுக்க வரும்போது வாகனங்கள் வெளியேறும் வழியில் அவர்கள் இருவரும் நின்றிருந்தார்கள். அவன் உடல் மொழியிலிருந்து யாமினியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் அங்கிருந்த தூணுக்கு மறைவில் இருந்ததால் என்னை அவர்கள் பார்க்கவில்லை. நான் பைக்கை நிறுத்திவிட்டுக் குனிந்து போனை எடுப்பது போல அங்கே பார்க்க அவன் அவளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். அவள் அது பொறுக்க முடியாமல் உரக்கக் கத்த அவன் ‘பளாரென’ அவளை அறைந்துவிட்டு பைக்கை முறுக்கிக்கொண்டு சென்றுவிட்டான். அவள் விழுவது போல தடுமாறியவள் சட்டென நிலையிழந்து கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே உறைந்து உட்கார்ந்துவிட்டாள்.
’யார் இவன் அவளை அடிக்கும் அளவிற்கு?.. அதுவும் இத்தனை உரிமையாக..!
நான் பார்த்துவிட்டதை அவளறியக்கூடாது என்பதனால் வண்டியை அப்படியே ஓரம்கட்டிவிட்டு எதேச்சையாக அந்த இடத்தைக் கடப்பதுபோல அங்கே சென்றேன். முட்டியில் முகம் புதைத்து விசும்பியழுது கொண்டிருந்தாள். மெல்ல அருகில் சென்றேன். காலடிச் சத்தம் கேட்டு அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
”என்னாச்சு..?”
முகத்திலும்,மூக்கிலும் வடிந்த நீரைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே,
“என்ன கிண்டியில ட்ராப் பண்ண முடியுமா?” என்றாள்.
அவள் கேட்டதும் முகத்தில் பரவிய உற்சாகச் சுடரை அவள் பார்த்துவிடக்கூடாதென உடனே அணைத்தேன்.
பாதி தூரம் சென்றுகொண்டிருக்கும்போது அவள் என் தோளைத் தட்டி
”இங்க பக்கத்துல ஒரு பார் இருக்கு போலாம்” என்றாள்.
பீத்தோவனின் இசை பின்னணியில் ஒலிக்க அவள் தொண்டையில் மது இறங்கியது.
அவள் என்னிடம் கிளாஸ் எடுத்துத் தர, நான் வண்டி ஓட்ட வேண்டுமென்ற காரணத்தைச் சொல்லி மது அருந்தாமல் இருந்தேன்.
அவன் யாரென்ற விபரத்தைக் கேட்கலாமா என்று யோசித்தேன்.
“அவன் யார்னுதான யோசிக்கிற?”
சட்டென அவள் இப்படிக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது.
யாமினியே வாயைத் துடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
”அவன் ரத்தீஷ்.. என்னோட கஸின்.. நாங்க ஒன்னாதான் வளந்தோம்.. என்ன அவனுக்கு சின்ன வயசிலருந்தே ரொம்பப் பிடிக்கும். என்னோட டிவோர்ஸ்க்கு அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான். எனக்கும் அவனுக்கும் ஏஜ் டிஃபரன்ஸ். மேரேஜ் லைஃப் தந்த மோசமான எக்ஸ்பீரியன்ஸ்க்கு அப்புறம் என்னால யாரையும் நம்ப முடியல.”
அதன் பிறகு அவள் சொன்ன எதுவும் எனக்குள் ஏறவில்லை. அவள் சொன்னதன் சுருக்கம் இதுதான். அவனும் அவளும், அவளது விவாகரத்துக்குப் பிறகு உறவில் இருந்திருக்கிறார்கள்.. அவனது உடைமையுணர்வும், ஆதிக்கமும் அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும், அவன் தரும் பாதுகாப்புணர்வைத் தாண்டி தன் மரியாதை சீண்டப்படும்போது அவர்களுக்குள் முரண் வெடிக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.
கிளாஸைக் காலி செய்துவிட்டுப் பயணத்தில் அன்னியர்களைப் பார்த்துப் புன்னகைக்கும் குழந்தையைப் போல என்னைப் பார்த்தாள். பதிலுக்கு என் முகத்தசைகள் விரிந்தது.
“என்னடா இவ அன்னைக்கு ஆம்பளைங்கள நம்ப முடியலன்னு சொன்னா.. இன்னைக்கு ஒருத்தன் கூட பார்க்கிங்ல சண்ட போடுறா.. நம்மள வேற பாருக்கு கூட்டிட்டு வந்திருக்கா.. என்ன கேவலமானவள்னு நினைக்கிறேல்ல?”
“ச்ச..ச்ச.. அப்டி இல்ல..”
“ச்ச..ச்சன்னாலே அப்டி நினச்சுருக்கேன்னு அர்த்தம்.”
”இல்லல்ல அப்டி இல்ல.”
“அப்போ என்னப் பத்தி என்ன நினைக்கிறே?”
“பீயூட்டிஃபுல் அண்ட் மிஸ்டீரியஸ்”
அவள் தரையில் நிக்கல் நாணயத்தை சுண்டிவிட்டது போல சிரித்தாள். சட்டென முகத்தை முன்னே கொண்டு வந்து புருவத்தைத் உயர்த்தி
”நோ ஐயம் பியூட்டிஃபுல் மிஸ்டீரியஸ்.”
சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
“நான் அந்த பாஸ்ட்டர்ட் ரத்தீஷ்கிட்ட லெட்ஸ் மூவ் ஆன்னு சொல்லிட்டேன்.. என் செல்ஃப் எஸ்ட்டீம்க்கு அவன் செட் ஆக மாட்டான்னு எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு.”
அவள் சொல்லச் சொல்ல எனக்கு முன்பிருந்த ஒவ்வொரு திரைகளாக விலகின. அவள் இதையெல்லாம் எனக்கு தகவலாக தெரிவிக்க்கிறாள் என்பது புரிந்தது. எல்லா பள்ளங்களும் நிறைந்தும்கூட எதோ ஒரு நிறைவின்மை மனதை ஆட்கொண்டது. யோசனையை கலைக்க அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். வியர்வை பளபளப்பில் மின்னியது அவளது முகம்.
“ரிலேஷன்ஷிப்ப ஜட்ஜ் பண்றான்னா அந்த நாயி ரிலேஷன்ஷிப்க்கே ஒர்த் இல்ல.. நான் சொல்றது கரெக்டா?”
“நிச்சயமா.. நிச்சயமா.“
என்று நான் சொல்லியதும் சிரித்தாள். பில்லைக் கொடுத்துவிட்டுப் புறப்படத் தயாரானோம்.
“தேங்க்ஸ் சின்னூ.”
சின்னா சின்னுவாக சுருங்கியதும் அவள் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி அங்கேயே அவளை முத்தமிட வேண்டுமென வேட்கை எழுந்தது.
இரவு விஸ்வரூபம் எடுத்திருந்தது. பைக்கில் அவள் ஏறும்போதே என்னைப் பின்னால் அணைப்பதைப்போலவே ஏறினாள். அலுவலகத்திலிருந்து வரும்போது இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவள் இப்போது என் வயிற்றில் கைகளால் வளைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். சட்டென பைக் புஷ்பக விமானமாகி மேகங்களை ஊடுருவிப் பறப்பதைப் போலிருந்தது. வாழ்க்கையின் மறக்கமுடியாத பைக் பயணத்தை ஒவ்வொரு நொடியும் நினைவில் வைத்திருக்க விரும்பினேன்.
வண்டியை நிறுத்தி அவள் வீட்டுக் கேட்டைத் திறந்தேன். வாசலில் பூச்செடிகள் தலையாட்டி என்னை வரவேற்றன. இரண்டடி எடுத்து வைப்பதற்குள் அவள் நிலை தடுமாறி என்மீது சாய்ந்தாள். அவளுடைய உடல் அப்போதுதான் பறித்த புதிய பஞ்சு போல மிருதுவாக இருந்தது. ஸ்லீவ் லெஸ்ஸில் கை கண்ணாடி போல வழுவழுத்தது. என் முகத்தில் யாமினியின் கூந்தல் பட்டு என் புலன்கள் அனைத்தையும் விழிப்படையச் செய்தது. அவளைத் தோளோடணைத்து மாடிப்படிகளில் ஏறி அழைப்பு மணியை அடித்தேன். வேலைக்காரப் பெண்மணி வந்து கதவு திறக்கும்போது விச்சு தூங்கியிருந்தான். யாமினியை விச்சுவின் அருகில் படுக்க வைத்தேன். அவள் மெதுவாக கண்களை மூடியதும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். ரத்தம் பாய்கிற சிலைபோல கிடந்தாள்.
ஹாலுக்கு வந்தேன். வேலைக்காரப் பெண்மணி விடைபெற்றுக் கிளம்பினார். கடிகார முள்ளின் சப்தம் அறை நிசப்தத்தை மேலும் அதிகரித்துக் காட்டியது. சுவரில் சால்வடோர் டாலியின் ’கேர்ள் அட் தி விண்டோ’ ஓவியம் என் உயரத்துக்கு மாட்டப்பட்டிருந்தது. அதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு விளக்கை அணைத்து காலை நீட்டி சோபாவில் சரிந்தேன். வலது கையை நெற்றியில் மடக்கி வைத்துக் கண்களை மூடினேன். ஆடைகள் எதுவுமின்றி தண்ணீரின் ஆழத்தில் மிதக்கிறேன். நிறைந்த அமைதியைக் கிழித்து எங்கிருந்தோ வருகிறது புல்லாங்குழல் இசை. தூரத்தில் ஜன்னல் வழியே கடலைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள் ஒரு பெண். அவள் அச்சு அசல் யாமினியைப் போலவே இருக்கிறாள். திரும்பி நின்றுகொண்டு என்னை அழைக்கிறாள்
’சின்னு..சின்னு.’
கதவு கிறீச்சிடும் சத்தம் கேட்டு துடித்து எழுந்தேன். திடீரெனத் தரை ஒளிர கண்கள் கூசியது அறை வெளிச்சம் ஹாலில் வந்து பொத்தென விழுந்தது. ஒரு உருவம் கதவுக்கருகில் நின்றது.
உற்றுக் கவனித்தேன். யாமினி ஆடை மாற்றியிருந்தாள். ஒரு கால் சட்டையும், வயிறு பகுதி முழுதாகத் தெரியும் ஒரு டீ ஷர்ட்டும் அணிந்திருந்தாள். நான் எழுந்து விளக்கை போட்டேன். கதவில் சாய்ந்து நின்றவள் என்னருகில் வந்து தோள்மீது வழிந்த கூந்தலை அள்ளிச் சுழற்றி தலைக்கு மேல் கழுத்துத் தெரியும்படி கொண்டை போட்டு ஒரு மினி திருவிழாவை கண்முன்னே நிகழ்த்திக் காட்டினாள். சொடக்குப்போடுவதற்குள் அவளைக் கண்கள் தொட்டு மீண்டதும் நீண்ட ஓட்டத்திற்குப் பிறகு துடிப்பதைப்போல இருதயம் வேகமெடுத்துத் துடித்தது. அவளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டுமென எவ்வளவு முயற்சித்தாலும் மனம் தோற்றுக் கொண்டே இருந்தது. என்னருகில் இருந்த மேஜையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள்.
”தூங்கலையா?” என்று கேட்டேன்.
என் அருகில் வந்து சோபாவில் அமர்ந்தாள். அவளிடமிருந்து எதோ ஒரு மலரின் மணம் வந்தது.
“பயங்கரமான கனவு” எனச் சொல்லிவிட்டு ”கேன் ஐ ஹோல்ட் யுவர் ஹேண்ட்” என்றாள்.
நான் தலையாட்டினேன். என் கைகளைப் பிடித்து நெஞ்சுக்கருகில் வைத்துக்கொண்டாள். வந்த பெருமூச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். மெல்லத் தோள்மீது சாய்ந்தாள். அவளது வாசனை என் நாசிக்குள் இறங்கி பித்தம் தலைக்கேறியது.
யாமினியின் கரங்கள் மலைப் பாம்பைப் போல என்னைப் பின்னிக் கொண்டன. நான் அவளை விழுங்க அனுமதித்து அவளுக்குள் அடங்கிப் போனேன்.
அன்றிலிருந்து தினமும் அலுவலகம் முடிந்து நான் யாமினியின் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அங்கேயே வசித்தேன். குளிப்பதும்,சமைப்பதும்,உண்பதும், உறங்குவதும் எல்லாவற்றிலும் யாமினியுடன் இருந்தேன். விச்சுவைக் குளிக்க வைத்து, சீருடை அணிவித்து, சாக்ஸ் மாட்டி அவனைப் பள்ளிப் பேருந்துக்குத் தயார் செய்வேன்.
நாங்கள் இருவரும் தனித்தனி வாகனத்தில் அலுவலகம் செல்வோம். எங்கள் உறவை வெளியே காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குள் நுழையும்போதும் பெரும் சாதனை நிகழ்த்திய மனநிலை எனக்கு உண்டாகும். மொத்த அலுவலகமும் பேசத் தவிக்கும் பெண், இரவு என்னுடன் நெருக்கமாக இருந்தாள் என்பதை நினைக்கும்போது பெருமிதம் பொங்கும்.
அப்போதெல்லாம் எங்களுக்குப் போன ஜென்மத்திலேயே திருமணம் நடந்து இடையில் காணாமல் போய் மீண்டும் ஒன்றிணைந்தவர்களைப் போல ஏதேதோ நினைவுகள் கொப்பளிக்கும். விச்சுவுக்கு நான் சொல்லும் டாம்சாயர் கதைகளில் நானே டாம் சாயராக மாறிப்போனேன். என் முகத்தைப் பார்த்து அவன் அடையும் மகிழ்ச்சியில் யாமினி பூரித்துப் போவாள். அப்போதெல்லாம் நான் கேட்காமல் அவளாக வலிந்து தரும் முத்தங்கள் நாட்களை நிறைத்தன.
நான் என் அறை நண்பர்களிடம் அலுவலகத்திலேயே தங்குவதாகக் கூறிவிட்டு முழுவதும் அவள் வீட்டிலேயே கழித்தேன். மாலை அலுவலகம் முடிந்து கதவைச் சாத்திவிட்டு யாமினியை அணைக்கும் தருணத்திற்காக அன்றைய அலுவல் முழுக்க யோசித்துக் கொண்டிருப்பேன். அவளுக்குப் பிடித்த விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பேசினேன். என்னுடைய போனில் அவளுக்குப் பிடித்த பாடல்களையே நிறைத்தேன். கண்ணுக்கு மை தீட்டுவதிலிருந்து, கணினியில் அவள் தட்டச்சு செய்யும் வேகம் வரை அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருந்த நேர்த்தியைப் புகழ்ந்தேன்.
என் அன்றாடத்தை முழுவதும் யாமினியின் நினைவு மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. நண்பர்களோடு தங்கியிருந்த அறையில் நான் யாரிடமும் முகம் கொடுத்துப் பதிலளிப்பது குறைந்து போனது. யாராவது பேசினால் அவர்கள் இரண்டாவது முறை வார்த்தையால் உலுக்கும் வரை அவர்கள் பேசியது என் மண்டைக்கு உறைக்காமல் இருந்தது. இதனால் நண்பர்கள் மத்தியில் என்னைப் பற்றிய கசப்பும் விலக்கமும் உண்டானது. எனக்கும் யாரிடமும் இயல்பாக பேசும் பொறுமை மெல்ல மெல்ல கரைந்துகொண்டே வந்தது.
அன்று விச்சு பள்ளி ஆண்டுவிழாவுக்காக வீட்டில் நடனப் பயிற்சி மேற்கொண்டிருந்தான். விச்சுவுக்கு நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் யாமினி. தாளம் உச்சத்துக்குச் செல்லும்போது யாமினிவும், விச்சுவும் உக்கிரமாக ஆடினர். யாமினி கையசைப்பில் என்னையும் நடனத்துக்குள் அழைத்தாள். நான் எனக்குத் தெரிந்த வகையில் கையைக் காலை அசைத்தேன். ஆனால் என்னுடைய அசைவு எதுவும் லயத்துக்கேற்ப இல்லை என்பது அவர்கள் இருவரும் நடனமாடுவதிலேயே புரிந்தது. ஆனாலும் சமாளித்து ஆடினேன். பாடல் முடிந்தவுடன் யாமினி என்னைப் பார்த்துக் காது வரைக்கும் வாயைப் பிளந்து சிரித்தாள்.
“நீ ஸ்கூல்ல கூட டேன்ஸ் ஆடுனதே இல்லையா சின்னா?”
”இல்ல பழக்கம் இல்ல.. “
“இந்நேரம் ரத்தீஷ் இருந்திருக்கணும் .. செம்மயா ஆடிக் கடைசியா பாட்டு முடியும்போது என்னைத் தூக்கிச் சுத்தியிருப்பான்..”
அந்த வார்த்தை என் முகத்தில் அடித்தது போல் இருந்தது. என் நெற்றிப் பொட்டுத் தெறித்தது.
ஒரு டவலை எடுத்து விச்சுவிடம் கொடுத்துவிட்டு. இன்னொரு டவலை எடுத்து தன் முகத்தில் ஒற்றி எடுத்தாள்.
“டெய்லி ரெண்டு பேரும் ஆடுவீங்களோ?”
அவளைப் பழி தீர்க்கும்படி இயல்பாக கேட்பதைப் போல நமுட்டுச் சிரிப்போடு கேட்டேன்.
அவள் வியர்வை படிந்த டீ ஷர்ட்டைத் தலைக்கு மேல் கழற்றி டவலை மேலே போர்த்திக்கொண்டு நிதானமாக என்னைப் பார்த்துத் திரும்பிக் கேட்டாள்
“நீ என்ன ஆன்ஸர் எதிர்பார்க்கிற?”
”……”
மேலாடை இல்லாமல் அவளைப் பார்த்தவுடன் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.
“ஆமா.. நானும் அவனும் டெய்லியும் ஆடுவோம்!.. ஸோ வாட்?”
அவளின் பதில் என் மூக்கில் குத்தியதைப் போலிருந்தது.. நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டேன். அந்தச் சூழலை இயல்பாக்க அவளின் உடம்பில் போர்த்தியிருந்த டவலில் முகத்தைத் துடைக்க முற்பட்டேன். விசுக்கென என்னை உதறி அவள் அங்கிருந்து சென்று குளியலறைக் கதவைப் பட்டென சாத்திக் கொண்டாள்.
ஒரு வாரம் அதற்குப் பிறகு பேசாமல் இருந்தாள். சமாதானம் செய்வதற்காக அவளுக்கு உடை எடுத்துக் கொடுக்க நினைத்தேன். அவளுக்குப் பிடித்த கடல் நீல நிறத்தில் வெள்ளைப் பூக்களிட்ட உடையை வாங்கிக் கொடுத்தேன். அவள் முகம் மலர்ந்தது.
உடையை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றவள் அறைக்குள் இருந்து கடுகடுத்த முகத்தோடு வெளியே வந்தாள்.
“என் டிரெஸ் சைஸ் என்ன சொல்லு?”
எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தேன்.
”சொல்லு..” என்று குரலுயர்த்திக் கத்தினாள்
“கடையில உன் அளவுக்கு ஒரு பொண்ணு இருந்தா, அதப்பாத்து வாங்கிட்டு வந்தேன்.”
“எவ சைஸைப் பாத்து வாங்கினயோ அவளுக்கே கொடுத்துட்டு வர்ர வேண்டியதுதானே?”
”இல்ல, அது வந்து..”
“என்ன.. வந்து.. என்கூட இவ்வளவு நாள் இருந்திருக்க? என் டிரஸ் சைஸ் என்னன்னு தெரியாதா?” என்று கேட்டாள்.
எதைச் சொன்னாலும் இன்னும் மிகையாக்க் கத்துவாள் என்று அமைதியாக இருந்தேன்.
“ரத்தீஷ் ஒரு டைம்கூட எனக்குத் தப்பான சைஸ்ல எடுத்துட்டு வந்ததே கிடையாது.. அவ்ளோ ஏன் என் செப்பல் சைஸ்கூட அவனுக்குத் தெரியும்..”
”உன் புருஷனுக்கு தெரியாததாலதான் டைவர்ஸ் பண்ணிட்டியோ?”
என்று கேட்டதும் அவள் நெஞ்சைக் கிழிப்பது போல அணிந்திருந்த உடையை சரக்கென்று கிழித்தாள்.. பட்டன்கள் தெறித்து அறையில் விழுந்தன.
“பொறுக்கி நாயே” என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினாள். இரண்டு தோள்களிலும் முடி முன்னே விழுந்து ஆங்காரத்துடன் கத்தும் அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது. இதுவரை காணாத ஒருத்தியாக இருந்தாள். அவளின் சத்தத்தைக் கேட்டு விச்சு அறைக்குள் இருந்து மிரண்ட முகத்தோடு எட்டிப் பார்த்தான். அங்கே அதற்கு மேல் இருக்க முடியாமல் வெளியே சென்றேன்.
அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்தபோது கருப்பு டீ ஷர்ட், கருப்பு ஜீன்ஸில் முடியைக் குதிரை வால் போட்டுக்கொண்டு வந்தாள். மேக்கப் மற்ற நாளை விட அதிகமாக இருந்தது. இரைக்குக் காத்திருக்கும் மிருகமென அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும்போதும் அவள் பார்க்காமலே இருந்தாள். என் இருக்கையைக் கடக்கும்போது நான் அங்கு இருப்பதையே பொருட்படுத்தாமல் அவள் சென்றது வலியைக் கொடுத்தது.
Cafeteria வில் நான் அவள் முன் சென்று நிற்கும்போது முகத்தில் கடுப்பைக் காண்பித்து திரும்பிக்கொண்டு பக்கத்து இருக்கையில் இருந்தவனிடம் சிரித்துக்கொண்டே பேச்சுக் கொடுத்தாள். அது எனக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியது. அவள் காலிலேயே நான் கிடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஒரு போதும் அப்படி என்னால் இருக்க முடியாது.
அங்கு இருக்க முடியாமல் மேனேஜரிடம் அனுமதி பெற்று அரை நாள் விடுப்பெடுத்து அறைக்குச் சென்றேன். நண்பர்களோடு கடைத்தெருவிற்குச் சென்றேன். ஜவுளிக்கடை ஒன்றில் பெண் உடைகள் அணிந்திருந்த பொம்மைகள் அவளையே நினைவுபடுத்தியது. அங்கேயும் மனம் லயிக்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றினேன்.
மறுநாள் ஆரஞ்ச் நிறத்தில் வெங்காயத் தோலைப் போன்ற மெலிதான புடவை கட்டி வந்திருந்தாள். துளியும் ஒப்பனை இன்றி நெற்றியில் சிறிதான குங்குமத் தீற்றல் முகத்தை மேலும் துலக்கமாகக் காட்டியது. நேற்றைக்கும் இன்றைக்கும் ஏகப்பட்ட வேறுபாடோடு இருந்தாள்.
“Sorry.” என்று இரண்டுமுறை வாட்ஸப்பில் அனுப்பினேன். ஒரே டிக் மட்டும் காண்பித்தது. முகப்புப் படம் காண்பிக்கவில்லை. வாட்ஸப்பில் இருந்து என்னை பிளாக் செய்திருந்தாள். உடனே ஃபேஸ்புக்,இன்ஸ்டகிராம் எல்லாவற்றையும் சென்று பார்த்தேன். எல்லா சமூக ஊடகங்களிடமிருந்தும் என்னை பிளாக் செய்திருந்தாள். என் எல்லா வகையான தொடர்புகளிலுமிருந்தும் துண்டித்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டாள். இறுதியாக அவளுக்கு Sorry என குறுஞ்செய்தி அனுப்பினேன். எந்த பதிலும் இல்லாததால் மறுபடியும் மறுபடியும் அனுப்பினேன். அன்று அலுவலகம் முடியும் வரை அனுப்பிக் கொண்டே இருந்தேன்.
மூன்று நாட்களாகப் பேசாததது நெஞ்சை இறுக்கியது. பார்க்கிங் இடத்தில் சென்று அவள் காலில் விழுந்துவிடலாமா என்று தோன்றியது. பார்க்கிங்கில் வைத்து எல்லோர் முன்புக் கத்திவிட்டால்? வீட்டிற்குச் செல்லலாம், கதவைச் சாத்திவிட்டால்? மனம் தவித்து மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. கிட்டத்தட்ட அரைப் பைத்திய நிலையில் இருந்தேன். தூங்கி மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அறைக்குச் சென்று படுத்தேன் பன்னிரெண்டு மணி வரை தூக்கமின்றிப் புரண்டுகொண்டிருந்தேன். தூக்கம் கண்ணைத் தழுவியது. அப்போது மொபைலில் ‘டிங்’ என குறுஞ்செய்தி வந்தது எடுத்துப் பார்த்தேன் யாமினி என்று திரையில் பெயரைப் பார்த்ததும் துடித்தெழுந்து பதற்றத்துடன் படித்தேன்.
“டுமாரோ விச்சு பர்த்டே.. ஹி வாண்ட்ஸ் யூ டூ கம்” எனக் குறுஞ்செய்தி வந்தது.
பொழுது எப்போது விடியுமென்று ஒவ்வொரு மணிநேரமாக கழித்துக் கொண்டிருந்தேன். காலையிலேயே விச்சுவுக்குக் கொடுக்க ஒரு பரிசு, வீட்டை அலங்கரிக்க பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற சுவரில் ஒட்டும் ஸ்டிக்கர் எழுத்துகள், பலூன் மற்றும் வண்ணத்தாள்கள், பேக்கரியில் கேக் என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவள் வீட்டுக்குச் சென்றேன்.
அழைப்பு மணியை அடித்தேன். யாமினிதான் கதவைத் திறந்தாள். புன்னகைத்தேன்.. அவள் முகத்தில் என்னைப் பார்த்ததில் எந்தச் சலனமும் இல்லை. கதவைத் திறந்துவிட்டுவிட்டு போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள். நான் அங்கிருப்பது அவளுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லை என்பது போல முகத்தை வைத்திருந்தாள். அவளின் இறுமாப்பு நொடிக்கு நொடி என் சமநிலையில் கல்லெறிந்துகொண்டே இருந்தது. அறைக்குச் சென்று விச்சுவிடம் வாங்கி வந்த பரிசைக் காட்டினேன். அவன் முகம் ஜொலித்தது. உடனடியாக அதைப் பிரித்து அதிலிருந்த கைக்கடிகாரத்தைக் கட்டிவிடச் சொல்லி யாமினியிடம் காட்டுவதற்காக ஓடினான். அவள் பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிய ஆவலோடு அவன் பின்னே சென்றேன். அவளிடம் விச்சு கடிகாரத்தைக் காண்பித்ததும் முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி “ஓக்கே” என்றாள்.விச்சுவுக்கு அவள் மேலதிகமாக எதுவும் சொல்லாதது ஏமாற்றமாக இருந்திருக்கும் ஆனால் எனக்கு அவள் எதிர்மறையாக எதுவும் சொல்லாததே சற்று ஆறுதலாக இருந்தது.
யாமினி தலையை மேலுயர்த்தாமல் குனிந்தபடி போனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதாவது செய்து அவளை என்னுடன் பேச வைக்க வேண்டுமென்பது மட்டும்தான் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. Happy Birthday Vishwa என்ற ஸ்டிக்கர்களை சுவரில் ஒட்டினேன். அதைச் சுற்றி வண்ணத்தாள்களையும், ஜிகினா பேப்பர்களையும் ஒட்ட ஆரம்பித்தேன். பலூன்களை ஒவ்வொன்றாக ஊதி அவற்றையும் மேலே கட்டினேன். சின்னஞ்சிறிய சீரியல் பல்புகளை ஹால் முழுவதும் தோரணமாகத் தொங்கவிட்டேன். நான் இவற்றையெல்லாம் செய்வதை போனைப் பார்த்துக்கொண்டே ஓரப்பார்வையில் ஒரு முறை பார்த்தாள். இந்த மெனக்கெடல்கள் சிறிதளவேணும் அவள் மனதை அசைக்கும் என நான் யூகித்தது போலவே அவளும் என் அருகில் நின்று சில பலூன்களை எடுத்து ஒட்டினாள். நான் ஒருபுறம், அவள் ஒரு புறம் ஒட்டிக்கொண்டிருக்கும்போது தாள்களை எடுக்கும்போது எதிரெதிரே மோதுவது போல வந்தோம். அப்போது கடுகளவு அவள் முகத்தில் புன்னகை வந்துவிட்டுச் சென்றது. ஓரளவுக்கு என்மீது கோபம் தணிந்திருக்கும். சீரியல் பல்புகள் ஒளிரத் தொடங்கியதும் அந்த இடமே கொண்டாட்டத்திற்குத் தயாரானது.
சற்று நேரத்திற்கெல்லாம் எங்களின் பொதுவான நண்பர்கள் வரத் தொடங்கினார்கள். வந்த எல்லோருமே வீடு கொண்டாட்டத்திற்கென அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பாராட்டினார்கள். ஒரு வார்த்தைகூட அவள் அவர்களிடம் என்னைப் பற்றி எதுவும் சொல்லாமல் அவர்களின் பாராட்டுகளுக்கு “தேங்க்ஸ்” சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன செய்தாலும் அவள் மனம் இரங்கவில்லை.
விச்சு கேக் வெட்டியதுமே எல்லோரையும் போல நானும் கிளம்பி விடவேண்டுமா? விச்சு உன்னை அழைக்கிறான் என்றுதான் செய்தி அனுப்பினேன். நான் உன்னை வரச்சொல்லவில்லையே என்று வார்த்தைகளால் முகத்தில் அடிப்பாள். வந்திருந்த மற்ற எல்லோரிடமும் மிகவும் சகஜமாக சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசுவதற்கெல்லாம் அடிக்கோடிடுவதைப் போல அவள் கன்னங்களில் குழி விழுந்தது.
பெரிய கேக் ஹாலில் மேஜைமீது வைக்கப்பட்டது. விச்சுவைச் சுற்றி எல்லோரும் நின்றுகொண்டிருந்தோம். விச்சு என்னை இழுத்து தன் அருகில் நிற்க வைத்துக் கொண்டான். இப்போது விச்சுவுக்கு இடவலமாக நானும் யாமினிவும் நின்று கொண்டிருந்தோம். எங்களை அறிந்த பொதுவான நண்பர்கள் எங்களை ஒரு சேர பார்த்துப் புன்னகைத்தார்கள். நாங்கள் அன்யோன்யமாக உறவில் இருக்கிறோம் என நினைத்துப் பெருமிதமாகப் புன்னகைத்தவர்களின் பார்வையை சந்திப்பது சவாலாக இருந்தது.
கையில் பிளாஸ்டிக் கத்தியுடன் நின்றிருந்த விச்சு மெழுகுவர்த்திகளை ஊதும்போது மேஜைமேல் கால் மீது எக்கி ஏற அவனது கால் இடறி கேக்கின் மேல் குப்புற விழுந்தான். பாதி கேக்கும் க்ரீமும் அவனது சட்டை மேல் ஒட்டிக்கொண்டது. யாமினி உடனே கோபமுற்று அவன்மீது கையை வீசினாள். நான் உடனே விச்சுவைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டு அங்கிருந்து அழைத்துச் சென்றேன். நீரைத் தொட்டு அவன் சட்டையை கழுவி முகத்தைத் துடைக்கும்போது விச்சு முகம் உயர்த்தி என்னைப் பார்த்து,
“சின்னா, நீங்களே என் அப்பாவா இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்”. என்றான்.
அவன் இப்படிச் சொல்லும்போது யாமினியும் அங்கு வந்துவிட்டாள். வார்த்தைகளின்றி இருவரும் ஒரு கணம் பார்த்துக் கொண்டோம். அவள் உடனே அந்த மௌனத்தைக் கலைப்பதுபோல “வந்திருக்கவங்க முன்னாடி டீஸ்ண்ட்டா நடந்துக்க விச்சு.. யூ ஆர் நாட் அ கிட் எனிமோர்!” என்று சற்று காட்டமாக சொன்னாள். அவன் சரி என்பது போல கவிழ்ந்த தலையை அசைத்தான்.
விச்சுவுக்கு வேறொரு புதிய உடையை மாற்றி ஃப்ரிஜிஜில் இருந்த இன்னொரு கேக்கை எடுத்து வைத்தேன். யாமினி என்னைப் பார்த்து சிறு புன்முறுவல் செய்தாள். சிறு மகிழ்வு எனக்குள் எட்டிப் பார்த்தது. விச்சு கேக்கை வெட்டி முதல் விள்ளையை அவன் அம்மாவுக்கும், இரண்டாவது விள்ளையை எனக்கும் ஊட்டினான். கேக்கிற்குப் பின் எல்லோருக்கும் பிரியாணி ஆர்டர் செய்திருந்தாள் யாமினி. வந்திருந்தவர்களுக்குப் பரிமாறினேன். ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள். விச்சு சாப்பிடும்போதே தூங்கி வழிந்தான். அவனை அவன் அறையில் படுக்க வைத்த பிறகு யாமினியிடம் சொல்லிக்கொண்டு புறப்படலாம் என கதவைத் திறந்தபோது அவள் உடைமாற்றியிருந்தாள் அப்போதுதான் கவனித்தேன். என்னுடைய சட்டையைப் போட்டிருந்தாள். “கிளம்புறேன்” என்று சொல்லியதும் அவள் என்னைப் பார்த்து “நான் உன்னக் கிளம்பச் சொல்லலயே” என்றாள். புருவங்களை மேலுயர்த்தி அவள் கருவிழிகளை உருட்டி எனக்கே எனக்கென அளிக்கும் பிரத்யேகப் பார்வை பார்த்தாள். உடனே எனக்குக் கண்கள், வாய் என எல்லாவற்றிலுமிருந்து மகிழ்ச்சி புன்னகையாக திமிறிக்கொண்டு வந்தது. அணை உடைந்த வெள்ளமென வந்த மோகத்தில் அவளை இறுகக் கட்டிக்கொண்டேன். பிறந்த நாள் ஏற்பாடுகளும், அதற்கான எனது மெனக்கெடல்களை அவள் அங்கீகரிக்கும் பொருட்டு பூசலை மறந்து திரும்பவும் அவள் அருகில் அனுமதித்தது கை மறந்து தொலைத்த பொருளைக் கண் முன்னே கண்டதைப் போலிருந்தது. அந்த இரவு முழுக்க ஜாக்கிரதை உணர்வுடனே இருந்தேன்.நீர்மையின் குளுமையில் இருவரின் உடல்களும் மிதந்தன. பிரிவும், கோபமும், தாபமும் எனக்குள் வெறியாய் எழுந்தது. என் ஆவேசம் அனைத்தையும் அவள் எளிதாகக் கையாண்டது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
காலை எழுந்து நான் கண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டிருந்தேன். யாமினி கையில் காபி குவளையுடன் அருகில் இருந்த சோபாவில் கால்மீது கால் போட்டு கம்பீரமாக அமர்ந்தாள். டிங்..டிங்..என போனிலிருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. அவள் முன் என் போன் கிடந்தது.
நான் போனை எடுத்துக்கொண்டு அவள் தோளை அணைத்து அவள் பின்னங்கழுத்தில் முத்தமிட்டேன். அவளுக்கு நான் கழுத்தில் முத்தமிடுவது மிகவும் பிடிக்கும். அவள் சட்டென கழுத்தைத் திருப்பி என் காதில் முத்தமிட்டாள். மறுபடியும் போனில் டிங்..டிங். என சத்தம் வந்து அழைப்புக்கான ரிங்க்டோன் ஒலிக்கத் தொடங்கியது.. நான் அவளை முகத்துடன் முகம் உரசியபடியே போனை எடுத்து அணைத்துவைக்க முயற்சித்தேன். இன்ஸ்டாவில் ரேஷ்மா என்ற பெண் என் புகைப்படங்களுக்கு அடிக்கடி கமெண்ட் இடுவாள். பதிலுக்கு நானும் அவள் புகைப்படங்களுக்கு கமெண்ட் இடுவேன். நட்பாக அவ்வப்போது இன்பாக்ஸில் பேசிக்கொள்வோம். அவள்தான் நேரம் காலம் தெரியாமல் அழைக்கிறாள். அவள் அழைப்பது தெரிந்தால் அவ்வளதுதான். பொன்னான இந்தத் தருணம் பாழாகிவிடுமென்று அழைப்பைத் துண்டித்தேன். ஆனால் விடாமல் அழைப்பு வந்தபடியே இருந்தது. யாமினி உடனே என்னை அணைப்பிலிருந்து விடுவித்தாள்
“யாருதான், பேசுறா எடுத்துப் பேசேன்” என்றாள்.
யாருமில்லை சும்மா ராங்க் கால்” என்றேன்.
“எடுத்துப் பேசாமலே ராங்க் கால்னு எப்டி சொல்ற?” என்று சொல்லிக்கொண்டே போனை என்னிடமிருந்து வாங்கினாள்.
இன்ஸ்டாகிராம் வழியே ரேஷ்மா என வீடியோ கால் அழைப்பு வந்ததும் அதைப் பார்த்துவிட்டு முகம் மாறி சட்டென்று போனைத் தூக்கி சோபாவில் போட்டாள். நான் போனை எடுத்து அணைத்தேன்.
அவள் அருகில் சென்று அவள் கையைத் தொட்டேன்
“ச்சீ.. கைய எடு.. ”
“இல்ல அந்த பொண்ணு சும்மா இன்ஸ்டா ஃப்ரண்ட்.. ஃப்ரண்ட்லியா எதாவது கால் பண்ணிருப்பா.”
“ஃப்ரண்ட்லியாதான் பேசுவான்னா ஏன் பயந்து மொபைல ஆஃப் பண்ணினே?”
“இல்ல, நீ எதாவது சொல்லுவியோன்னுதான்”
“நான் என்ன லூசா.. நீதான் ஃப்ரண்ட்லின்னு சொல்றீல்ல அப்றம் ஏன் கால் அட்டெண்ட் பண்ணல? வீடியோ கால்ல பாத்துப் பேசுற ஃப்ரண்ட பத்தி ஒருநாள் கூட நீ என்கிட்ட சொன்னதில்லியே.”
”இல்ல, இந்த நேரத்துல போன் வேண்டாமேன்னுதான்.”
”ச்சீ.. அசிங்கமா இல்ல உனக்கு..?”
“அவள் அப்படிச் சொன்னதும் என் தன்மானத்தின் மீது சேற்றை வாரி அடித்ததைப் போலிருந்தது..
“நீ ஒருத்தன கழட்டிவிட்ட அன்னைக்கே என்னப் பிடிச்சுக்கிட்டீல்ல.. அது அசிங்கமா படலையாடி உனக்கு.”
நான் சொன்னவுடனே அவளுக்குக் கண்கள் பெரிதாக விரிந்து முகம் சிவந்தது.. ஆங்காரம் வந்தவளாக என்னை நோக்கி வந்தாள்.
“என்னடா சொன்ன.. எச்சிப் பொறுக்கி நாயே.. என் வேல்யூ தெரியாத உன்னையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டது என் தப்புடா..” என்று சொல்லிக்கொண்டே என் முகத்தில் மாறி மாறி அறைந்தாள்.. பட் பட்டென அடி விழுந்ததும் உடல் முழுக்க விறுவிறுவென்று இருந்தது. உடல் சூடேறி நெற்றிப்பொட்டில் கோபம் தெறித்தது.
“யார் மேல கை வைக்கிறடி தேவ்டியா” என்று அவள் முடியைப் பிடித்து சுழற்றினேன். அவள் தலையை உதறி என் கழுத்தைப் பிடித்து நெறித்தாள்
“நான் தேவ்டியான்னா.. நீயாருடா.. நீதாண்டா கேடுகெட்ட தேவ்டியா பய.”
அவளைப் பட் பட்டென்று நான் அடிக்கவும், அவள் திட்டிக்கொண்டே என் சட்டையைப் பிடித்துக் கிழித்தாள்.. ஏய்…. என்று பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினாள்..என்னை நகங்களால் பிறாண்டி, தலையைப்பிடித்த என் கையைக் கடித்தாள். நான் ஓங்கி அறைந்தேன் தடுமாறினாள். சீறிக்கொண்டு என்மீது பாய்ந்தாள், நான் அவளைப் பிடித்துத் தள்ள அவள் திமிறிக்கொண்டு உரக்க சத்தம் போட்டுக்கொண்டே என்னை நோக்கி வந்தாள்..
நேற்றிரவு ஆவலைத் தூண்டிய உடலின் ஸ்பரிசம் இப்போது மேலே படும்போது கோபத்தைத் தருகிறது. பதிந்த பற்தடங்களை விரும்பி ரசித்த உடல் இப்போது பதித்த பற்களை உடைக்க நினைக்கிறது, நேற்று காதலின் அடையாளமாகப் பரிமாறிக்கொண்ட எச்சில் இன்று வெறுப்பின் சாட்சியாக உமிழப்படுகிறது. அன்பைக் கொடுத்த அணைப்புப் பிடிகளும், நகக் கீறல்களும் இப்போது வலியைக் கொடுக்கிறது. மனதைக்கொண்டு உடலை வெல்ல நினைத்தவர்கள் இன்று உடலைக் கொண்டு மனதைத் தோற்கடிக்க முனையும் விசித்திரம்தான் என்ன?! எனில் இதில் எது உடல், எது மனம்? மனம்தான் உடலா அல்லது உடல்தான் மனமா? இதில் அன்பு, காதல் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம்தான் என்ன?
சண்டை போடும் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து தூங்கி எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டே விச்சு வெளியே வந்தான். அவன் வருவது தெரிந்ததுமே நாங்கள் விலகி நின்றுகொண்டோம். எங்கள் முகங்களை மாறி மாறி அவன் பார்க்க, நான் அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியே வந்தேன். யாமினி “பளார்” என கதவைச் சாத்தினாள்.
வாசல் கேட்டருகில் என்னைப் பார்த்து சிரித்தன பொன்னரளியும், போகன் வில்லாவும்.. முன்னது அழகான வெளித்தோற்றத்துடன் நஞ்சைக் கொண்டிருக்கிறது, பின்னது வெற்று அலங்காரமாக இருக்கிறது.. விழி மயக்கும் நஞ்சுக்கும், வெற்று அலங்காரத்துக்கும் என் மனம் எப்போதும் மயங்கிப் போகிறது? ஏன் இப்படி நடக்கிறது? இதுவரை நஞ்சையே அமுதென்று நம்பினேன். அப்படியானால் இனி அமுதே கிடைத்தாலும், அது நஞ்சைப்போல் இந்த அளவிற்கு என்னை ஈர்க்குமா?
பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட்டேன். உடல் சண்டையிட்ட அதிர்விலேயே இருந்தது. ஸ்டியரிங்கில் கைகள் விதிர்விதிர்த்தன.. உதடு, கன்னம் என எல்லா நகம் பட்ட இடங்களும் வெயிலில் எரிந்தன. எதிரில் வரும் வாகனங்கள் பைக்கைக் கடந்து செல்லும்போதுதான் சாலையில் போகிற நினைவு வந்தது. எங்கே சறுக்கினோம் என்பதை நினைத்து நினைத்துக் குழம்பித் தவித்தேன். என் முட்டாள்தனங்கள் அனைத்தும் மனத்திரையில் படமாக ஓடியது. பெண்களிடம் தங்கள் சுயத்தை இழந்த நண்பர்களுக்கு நான் சொன்ன அறிவுரைகளெல்லாம் நினைவுக்கு வந்தன. அப்படியே ஏதாவது மரத்தில் சென்று மோதலாம் போலிருந்தது. இப்போது இந்த எண்ணங்களைக் கலைக்க அவளே போன் செய்யலாம்.. போன் செய்து “ஸாரி சின்னா” என்று சொல்லலாம். பாக்கெட்டில் இருந்து போனை எடுத்துப் பார்த்தேன் எந்த அழைப்பும் இல்லை.
எந்த உறவிலும் அதீத அக்கறை அல்லது அக்கறையின்மை இந்த இரண்டுக்கும் நடுவில் சமநிலையைக் கடைபிடிப்பதுதான் உறவைப் பேணும் சூத்திரம். இதில் விந்தை என்னவெனில் அந்த உறவை இழக்கும்போதுதான் இந்த சூத்திரம் பிடிபடுகிறது.
எனக்கு வேலையில் கவனமின்றி தொடர்ச்சியாக சொதப்பல்கள் நிகழ்ந்து இரண்டு முறை மேலாளர் எனக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கினார். இறுதியாக அவர் “ஊருக்குப் போய் ஒரு வாரம் இருந்துவிட்டு வாங்க” என்றார்.
யாமினி என்ற பெயருக்கு நட்சத்திரங்கள் நிறைந்த இரவென்று பெயர்.. நான் மின்மினி பூச்சிகளை நட்சத்திரங்களென்று வந்து ஏமாந்து ஆழ்ந்த இருளுக்குள் மாட்டிக்கொண்டேன்! எனக்குத் தேவை இப்போது வெளிச்சம் என்னுடைய அசலைக் காட்டும் வெளிச்சம்!
அம்மாவையும் தங்கையையும் பார்த்துப் பல மாதங்கள் ஆகியிருந்தது. தங்கையின் இரட்டைக் குழந்தைகளை இருபுறமும் தூக்கி வைத்துக் கொள்ளவேண்டுமென்ற ஆவல் எழுந்தது. சென்னையிலிருந்து நேரே தங்கை வீட்டிற்குச் சென்றேன். தங்கையையும் அவள் குழந்தைகளையும் பார்த்துவிட்டுப் புறப்படுகையில் அம்மா எனக்குப் பெண் பார்த்திருப்பதாகவும், மறுநாள் திருச்சிக்குப் புறப்பட வேண்டுமென்றும் கூறினாள்.
அன்று தங்கை வீட்டிலிருந்து பேருந்தில் பயணப்படும்போது யாமினி வாட்ஸ்ப்பில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருந்ததைப் பார்த்தேன். அவளும் சின்னத்திரை நடிகர் ஒருவரும் நெருக்கமாகக் கட்டியணைத்து மது விடுதி ஒன்றில் வண்ணப் புகைக்கு நடுவில் நின்றிருந்தார்கள்.
“ஹேப்பி பர்த் டே ஹார்ட் திராப்.. மிஸ் யூ டா” என்று அதன் கீழே எழுதி இரண்டு இதயக்குறிகளைப் போட்டிருந்தாள்.
தலைக்குப் போகும் நரம்புகளில் ரத்தம் சூடேறியது. வீட்டிற்குப் போனதுமே அம்மா சொல்வது சோளக்கொல்லை பொம்மையாக இருந்தாலும் தாலி கட்டுவது என்று தீர்மானித்தேன்.
அம்மாவுக்கு நான் திருமணத்திற்கு சம்மதித்ததில் ஏக மகிழ்ச்சி. அதன் நீட்சியாக எங்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குத் தலைக்கு ஆயிரம் ரூபாய் திருவிழாவிற்கு அளிப்பதைப்போல வழங்கினார்.
மறுநாள் புதன்கிழமை பெண் பார்க்கச் சென்றோம். அம்மாவும் தங்கையும் காரில் பார்க்கச் செல்லும் பெண்ணைப் பற்றிப் பெருமையாக சொல்லிக் கொண்டே வந்தார்கள். நான் அவர்கள் பேசிய எதையும் கேட்க மனமின்றி வெளியே பார்த்துக்கொண்டே வந்தேன். திடீரென யாமினி போன் செய்துவிட்டால் என்ன செய்வது? அவள் இந்நேரம் என் எண்ணை மறுபடியும் பிளாக் செய்திருப்பாள். போனை எடுத்து அணைத்து வைத்தேன்.
பெண்ணைப் பார்த்தேன் யாமினியை விடவும் சற்று வளர்த்தியாக இருந்தாள். திருத்தமான புருவங்களும், நீண்ட விழிகளும் முகத்தை வசீகரமாகக் காட்டியது. நீண்ட முடி சுருள் சுருளாக அழகாக இருந்தது. அவளை மனதுக்குப் பிடித்துவிட வேண்டுமென கூர்மையாக அவளை அளந்தேன். எல்லாவற்றிலும் அவளை மனம் யாமினிவோடு ஒப்பிட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொன்றிலும் தத்தளித்து இறுதியாக அவளின் கார்குழலி என்ற பெயர் மொத்தமாக எடை ஏறி இவள் பக்கமே துலா தட்டு சாய்ந்தது.
இருவரையும் தனியே பேசும்படி அம்மாவும், அவர்கள் பெற்றோரும் சொல்ல நாங்கள் இருவரும் தனித்துவிடப் பட்டோம்.
அறைக்குள் நுழைந்ததுமே வியர்க்கத் தொடங்கியது. அவள் குறிப்பறிந்து ஃபேன் சுவிட்ச்சை போட்டாள். அந்த அறையில் பன்னீர் ரோஜாவின் சுகந்தம் வீசியது. அவள் எனக்கு முன் நாற்காலியை இழுத்துப் போட்டு எதிரில் இருந்த டேபிளில் சாய்ந்து கொண்டாள். மேஜையின்மீது சில புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன.
”இந்த ஷர்ட் நல்லா இருக்கு.. உங்களுக்கு.”
உரையாடலை அவள் அப்படித் தொடங்கியது என்னைப் பிடித்துவிட்டது என்பது போலத்தான் இருந்தது.
“தேங்க்ஸ்.. உங்க ஸாரியும் ரொம்ப நல்லா இருக்கு.. எங்கம்மாகிட்ட நான் உங்களப் பிடிச்சுருக்குன்னு சொல்லப்போறேன்.”
தெறித்ததைப் போலச் சொன்னேன்.
அவள் தலையைக் குனிந்தபடி,
“நான் எங்க வீட்ல ஆல்ரெடி உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்” என்றாள். எனக்கு முகமெல்லாம் வியர்த்தது. எச்சில் விழுங்கிக் கொண்டேன். சட்டென யாரோ என்னை பூமியிலிருந்து இரண்டடி மேலே தூக்கியதைப்போல உணர்ந்தேன். திருமணத்திற்கு எல்லோரிடமும் சம்மதம் தெரிவித்தேன். கார்குழலியின் மேற்படிப்புக்காக அவர்கள் திருமணத்தை ஆறு மாதங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டார்கள். எனக்கும் எல்லாப் பழைய நினைவுகளிலிருந்தும் என்னை விடுவித்துக்கொள்ள அந்த காலகட்டம் தேவையெனப்பட்டது.
சென்னைக்கு வந்ததும் இனி யாமினியைத் தேடிப் போவதில்லை என்றும், அவளை சந்திப்பதைத் தவிர்க்கவும், அவளது நினைவுகளிலிருந்து விடுபடவும் பணி மாறுதல் அவசியம் என்று பட்டது. அலுவலகத்தில் இருந்து வேலையை விட்டேன். சில நாட்களிலேயே பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள புதிய நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். ஒரு பெரிய உணவு விடுதியில் நண்பர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தேன். அறையில் நண்பர்கள் யார் வெளியில் போனாலும் அவர்களோடு வலியச் சென்றேன். ஒவ்வொருவரோடும் இணக்கமாக இருக்க விரும்பினேன். தினமும் கார்குழலியிடம் போனில் பேசத் தொடங்கினேன்.
மருத்துவமனையில் அடுத்தடுத்து ரத்தப் பரிசோதனைகளும், சி.டி ஸ்கேனும் செய்தார்கள். விச்சுவை அழைத்துக் கொண்டே ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வந்தேன். அவன் என்னோடு உடன் நடக்கும் ஒவ்வொரு தருணத்தில் மலர்ச்சியோடு இருந்ததை அவனது தொடுதல்கள் எனக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது.
குரொமோட்டாகிராஃபி சோதனைக்காக புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்றோம். தலையில் முடி கொட்டி, மூக்கு வழி குழாய்கள் பொருத்தப்பட்டவர்களைக் காணும்போதே அச்சமும், வேதனையும் சூழ்ந்துகொண்டது. சட்டென உடம்பில் காய்ச்சல் அடிப்பதைப் போல் இருந்தது. அவர்களுக்காகக் காத்திருக்கும் அவர்களின் உறவினர்களைக் காணும்போது பார்த்து மனம் வெதும்பியது.
இறுதியாக எல்லாச் சோதனைகளின் முடிவிலும் யாமினிக்கு புற்றுநோய் இல்லையென்றும் லேசர் சிகிச்சையால் அறுவை செய்து எடுத்துவிடக்கூடிய அளவிலான கட்டியாகத்தான் இருக்கிறதென்றும் தலைமை மருத்துவர் முடிவைச் சொன்னார். சட்டென நான் விச்சுவாக மாறியதைப் போல் குதூகலித்தேன். விச்சு யாமினியைக் கட்டிக் கொண்டான்.
ஒரு வாரத்துக்குப் பின் அறுவை சிகிச்சை நடந்தது. எட்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். அலுவலகத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை எனச் சொல்லி விடுமுறை பெற்றிருந்தேன். மருத்துவமனையில் தரைத்தளத்திலிருந்து நான்காவது மாடிக்கு மருந்து, காபி, உணவு என ஒவ்வொரு முறையில் லிஃப்ட்டில் ஏறி இறங்கும்போதெல்லாம் வாழ்க்கையில் எங்கு ஏறி எங்கு இறங்கப் போகிறேன் என்ற கேள்வியே உள்ளத்தில் தொக்கி நிற்கும்.
ஒன்பதாவது நாள் மாலை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு வந்தோம். விச்சு கேட்டுக்கொண்டதற்கிணங்க அன்று நான் பிரியாணி சமைத்தேன். மூவரும் அமர்ந்து உணவு உண்டோம். ஆஸ்பத்திரிக் களை இப்போதுதான் யாமினியின் முகத்திலிருந்து வடிந்திருந்தது. இருப்பினும் பழைய குதூகலம் இல்லை. அவளே இயல்பாகப் பேசத் தொடங்கினாள்
“எப்டி போகுது லைஃப்?”
“ஆங்.. நல்லா போகுது.”
“ஸ்மார்ட் ஆயிட்டே.. யாராவது ப்ரப்போஸ் பண்ணாங்களா?” எனக் கேட்டுவிட்டுப் புன்னகைத்தாள்.
“அப்டிலாம் இல்ல.. ஜஸ்ட் ஹேப்பியா இருக்கேன்” என்று சொல்ல நினைத்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டேன். அப்படிச் சொல்லியிருந்தால் நிச்சயமாக “என்ன விட்டுப் போனதாலா” என்று நிச்சயமாக கிடுக்கிப் பிடி போடுவாள்.
என் போன் வைப்ரேட் ஆகிக்கொண்டே இருந்தது. மருத்துவமனையிலும், யாமினி வீட்டுக்கு வரும்போதும் என்னை அறியாமல் போனைச் சத்தமின்றி வைப்ரேட்டில் வைத்திருந்தேன், தொடர்ச்சியாக அழைப்பு வந்துகொண்டே இருந்தது. கார்குழலிதான் அழைக்கிறாள். யாமினி பார்ப்பதற்குள் போனை எடுத்து அழைப்பைத் துண்டித்தேன்.
கார்குழலியைப் பற்றி யாமினியிடம் சொல்லலாமா என மனம் தவித்தது. சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்றும் பதற்றமாக இருந்தது. பெண் பார்க்கும் அளவிற்குப் போய்விட்ட பிறகும் இவளிடமிருந்து நான் என்னை மறைத்துக் கொண்டு பழைய சின்னராஜாவாகவே இருப்பதன் மர்மம் எனக்கே விளங்க முடியாததாக இருந்தது. நிச்சயமாக இவளிடம் சொல்ல வேண்டும். சொன்னால் இவள் முகத்தில் உண்டாகும் உணர்வைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இத்தனை நாள் இவள் என்னைப் பற்றி உண்டாக்கி வைத்திருக்கும் அசல் மதிப்பீடு என்ன என்பதை நான் தெரிந்துகொள்ள முடியும். ஒரு வேளை பெண் பார்த்ததைச் சொன்னால் “என்ன நம்ப வெச்சு ஏமாத்திட்டியேடா’ என்று சொன்னால்? நான் எப்போதுமே இவளை ஏமாற்ற நினைத்ததே இல்லையே. இவள் நடந்து கொள்வதும் இவளின் திமிர் போக்கும்தானே எல்லாவற்றுக்கும் காரணம்.
சாப்பிடாமல் தட்டில் அவளது விரல்கள் அலைந்துகொண்டேயிருந்தன. அவளது பார்வை கேர்ள் அட் தி விண்டோ ஓவியத்தின் மீதே நிலைகுத்தியிருந்தது. நான் அவளருகில் அமர்ந்து அவளுக்கு ஊட்டிவிட்டேன். சாப்பிடும்போது அவள் உதடுகள் விம்மியது அழுதுவிடுவாள் என்பது போல நீர் கட்டி நின்றது கண்கள்.
சாப்பிட்டு முடித்து உடனே அவள் அறைக்குச் சென்றாள். அவளோடு முரண்பட்டு நான் தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றியது. இன்னும் பெரிய மனதோடு பிரச்சினைகளை அணுகியிருக்கலாம். வார்த்தைகளை இன்னும் கவனத்துடன் பயன்படுத்தியிருக்கலாம். கையிலிருந்து விழுந்த பிறகு உண்டாகும் ஜாக்கிரதை உணர்வு, முன்பே ஏன் ஏற்படுவதில்லை. ஒருவேளை அப்படி இழக்க விரும்பாத ஜாக்கிரதை உணர்வுதான் உடைமையுணர்வாக மாறி சண்டையிட வைத்ததா?
போன் அடித்தது. அம்மா அழைக்கிறார். அம்மாவிடம் யாமினி குறித்து சொல்லிவிடலாமா? யோசிப்பதற்குள் தன்னிச்சையாக போனை எடுத்துவிட்டேன்.
“எங்கப்பா இருக்கே?”
“கொஞ்சம் வெளில இருக்கேன்மா..”
“குழலி ரெண்டு மூணு தடவ போன் பண்ணுச்சாமேப்பா. ஏன் போன எடுக்கலன்னு பதட்டமாயி எனக்கு அடிச்சுது.”
“அம்மா, அதில்லம்மா கொஞ்சம் வேலை.. அம்மா இந்தக் கல்யாணத்த கொஞ்சம்.. தள்ளிப் போடலாமாம்மா?”
”டேய் என்னடா பேச்சு இது.. தள்ளிப் போடலாம் அது இதுன்னு.. நிச்சயம் பண்ணி ஆறு மாசம் கழிச்சுதானே தேதி வெச்சுருக்கு?”
சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தேன். மேற்கொண்டு அம்மாவிடம் என்ன பேசுவது எனப் புரியாமல் நெஞ்சு இறுகியது.
“ஏன் தம்பி, கம்பெனில லீவ் எதும் குடுக்க மாட்டாங்களாப்பா?”
“இல்ல. அது இல்லம்மா.. கல்யாணம் இப்ப தேவையான்னு யோசிக்கிறேன்.”
“தம்பி.. இதல்லாம் நல்லா இல்ல ஆமாம்.. ஆர்டர் போட்டுட்டு கேன்ஸல் பண்றீங்களே அது மாதிரி இல்ல இது.. இப்ப வந்து இதெல்லாம் பேசறது யாரையாவது எழவுல இழுத்து உடுறது மாதிரி. இனிமே இப்படில்லாம் பேசாத.. ”
எதுவும் பேசாமல் இருந்தேன்..
“அந்தப் பொண்ணுக்கு போனப்பண்ணி பேசு ஆமாம்!”
எனச் சொல்லிவிட்டு போனைத் துண்டித்தார் அம்மா. அவரது இறுதி வார்த்தைகளில் இருந்த தீர்க்கம் அச்சமூட்டியது.
என்ன முடிவெடுப்பது என்ன தெரியாமல் கால்களுக்குள் கைகளை நுழைத்து உடலைக் குறுக்கி சோபாவில் படுத்துக்கொண்டேன்.
”சின்னராஜா..” குரல் கேட்டது. எழுந்தேன் யாமினி நின்றுகொண்டிருந்தாள்.
அவள் என் முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிட்டது ஆச்சர்யமாக இருந்தது.
நான் என்ன என்பது போல அவள் அருகில் சென்றேன்.
“தேங்க்ஸ் ஃபார் எவரிதிங்க்.. நான் ரத்தீஷ வர சொல்லியிருக்கேன்.. கொஞ்ச நேரத்துல அவன் வந்துடுவான். அப்போ நீ இங்க இருந்தீன்னா தேவை இல்லாம சங்கடமாயிடும்” என்றாள். அவள் சொல்லும் குரல் தொனியிலேயே அது பொய் என்பது எனக்குப் புரிந்துவிட்டது, இருப்பினும் அதைக் கேட்பதற்கு எனக்கு மனமில்லை. சட்டென தலைசுற்றி அவள் தூரத்தில் நின்றுகொண்டிருப்பதைப் போல பட்டது. நான் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு அவள் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். படிகளில் கால் எடுத்து வைக்கும்போது ஊன்ற முடியாத அளவிற்கு என் உடலே எனக்குப் பெரும் பாரமாக இருந்தது. சாலையில் இறங்கி நடந்தேன். குளிர் ஊசியென உடலில் ஏறியது.. சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன். யாமினி ஜன்னல் வழியே நின்று பார்ப்பது போலவே இருந்தது. மறுபடியும் ஒருமுறை திரும்பி அதை உறுதி செய்துகொள்ள எனக்குத் தைரியமில்லை.