அண்மையில் சாரு நிவேதிதாவை பெங்களூரில் சந்தித்தபோது ரொம்ப நாட்களாகக் கேட்பதற்காக நெஞ்சில் அதக்கி வைத்திருந்த கேள்வியைக் கேட்டே விட்டேன்: “இவ்வளவு நடந்தும் உங்கள் மனைவி உங்களைவிட்டுப் பிரியாமல் இன்னும் எப்படி சேர்ந்தே இருக்கிறார்?” உடனே அவர் முகத்தில் வெட்கமும் பெருமையும் கலந்து பரவுவதை, குறும்பில் அவரது கண்கள் மினுங்குவதைக் கவனித்தேன். அடுத்து அவர் தன் மனைவி தன்னை வெகுவாகக் கொடுமைப்படுத்துவதாக சிரிப்புடன் புலம்பினார். ஆனாலும் அவருக்குத் தன்னை மிகவும் பிடிக்குமென்றும், தானின்றி அவர் இறந்தே போவார் என்றும் அதே சிரிப்புடன் சொன்னார். நான் அவர் “அன்பு: ஒரு பின்நவீனத்துவ மறுசீரமைவு மனு” நாவலில் முக்கால்வாசிக்கும் மேல் தன் மனைவி அன்பின் பெயரில் தன்னைக் கொடுமைப்படுத்துவதையும், மனைவியின் வீட்டாரை அவர் (ஒரு பக்கம் பாராட்டிக்கொண்டே) படுபயங்கரமாகப் பகடி செய்திருப்பதையும் படித்திருந்தால் நிச்சயமாக அவரது மனைவி அவரை விவாகரத்துப் பண்ணியிருக்க வேண்டுமே என்று மேலும் கேட்டேன். அதற்கு சாரு “அவங்க நான் எழுதறது ஒன்னுத்தையும் படிக்கிறது இல்லையே” என்றார். எனக்கு அதைக் கேட்டபோது சாருவைவிட மிகச்சற்றே அதிகமாக அவரது மனைவியிடத்து மதிப்பு ஏற்பட்டது – சாருவின் குழந்தைத்தனங்களையும், ‘சேட்டைகளையும்’ உணர்ச்சிமேலிட்ட பேச்சையும் புரிந்துகொள்ள மிகுந்த முதிர்ச்சி வேண்டும். மேலும் உன்னதமான காதல் வேண்டும். அந்தக் காதல் கோபமாக, வதையாக இருக்கலாம். வெறுப்பாக வெளிப்படலாம். ஆனாலும் அதுவே உன்னதக் காதல். இல்லாவிட்டால் அவரை நேசிக்கவும் அவருடன் ஆயுள் முழுக்க கழிக்கவும் முடியாது. முக்கியமாக, ஆண்களின் அடிமனத்தில் தீமையென ஒன்று இல்லை எனப் புரிந்துகொள்ளவேண்டும். (பெண்கள் விசயத்திலும் ஆண்களுக்கு இப்படித்தான்.) இதையே நாம் அன்பின், காதலின் மாந்திரிகத் தன்மை என்று நம்புகிறோம். இதை நாம் இன்று வெகுவாக இழந்து வருகிறோமா, உலகம் இன்று அ-மாந்திரிகத்தன்மையானதாக மாறிவருகிறதோ என்பதே என் கேள்வி.
இது காதலிலும், திருமண பந்தத்திலும் மட்டுமல்ல, பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் பரவியிருப்பதால் இதைப் பற்றிப் பேசப்பட்டுள்ள கருத்துக்களைப் பகிர்ந்துவிட்டு ஆண்-பெண்ணுறவுக்கு வருகிறேன்.
அ-மாந்திரிகமாக்கல் எனும் கருதுகோளை அறிமுகப்படுத்தி பிரசித்தமாக்கியவர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை வாழ்ந்த ஜெர்மானிய சமூகவியலாளர் மேக்ஸ் வெபர் (1864–1920). பல்வேறு உலக மதங்களை ஆராய்ந்து அவற்றின் தாக்கம் நமது சமூகப் பொருளதார அமைப்புகளில் எப்படித் தாக்கம் செலுத்துகிறது எனப் பேசினார். மேலும், நவீனச் சமூகத்தில் அதிகாரத்துவம் – பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிகாரப் படிநிலைகளுக்கு உட்பட்டு மக்களை வாழவைக்கிற கட்டமைப்பு – எப்படி தினசரி வாழ்க்கை, அந்தரங்க உலகம் முதல் சமூக வாழ்க்கை, உற்பத்தி உறவு வரை பெரும் தாக்கம் செலுத்துகிறது என விசாரித்தவர். இவரது “புரொட்டொஸ்டெண்ட் அறமும் முதலீட்டியத்தின் ஆன்மாவும்” நூல் மிகவும் புகழ்பெற்றது. இந்த அதிகாரத்துவத்துக்கு ஆங்கிலத்தில் உள்ள புயோரோகெரசி எனும் சொல் ‘மேஜையில் இருந்து ஆள்வது’ எனப் பொருட்படும் கிரேக்க சொல்லாட்சியில் இருந்து தோன்றியது. மேக்ஸ் வெபர் இந்த ‘மேஜையில் இருந்து ஆளுகிற நிலை’ உலகம் முழுக்க புத்தொளிக் காலத்தில் துளிர்விட்டது என்கிறார். அறிவுவாதம் தோன்றி, பகுத்தறிவுக்குப் புறம்பானதாகக் கருதப்பட்ட கடவுள் மீதான பக்தி, மதம் நம்பிக்கைகள் துவங்கி பல்வேறு மாந்திரிகக் கருத்துக்கள் அப்போது மெல்லமெல்ல ‘பிற்போக்காகவும்’ தேவையற்றவையாகவும் கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டன. பார்வைக்கு, புலனுக்கு உடனடியாகவும் நேரடியாகவும் தோன்றக்கூடியவை மட்டுமே உண்மையானவை, பயனுள்ளவை, மற்றவை பொய்யானவை, அவசியமற்றவை என இந்த அறிவுவாதம் கோரியது. இந்தப் பார்வையே பின்னர் அறிவியலின் வளர்ச்சியின் ஊடாகப் பெரும் அதிகாரமாக வளர்ந்து மக்களை முழுமையாகத் தன்வசப்படுத்தி உள்ளது. இதன்வழியாகவே மக்களாட்சியும், அதன் ஊடாக நவீன முதலீட்டியமும் உலகம் முழுக்கப் பரவியது. ஒருபக்கம் சமத்துவத்தைத் தருவதாகக் கோரிக்கொண்டே கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் ஆன்மீக வெறுமையையும் உருவாக்கியது. மதத்தில் தொடங்கிய இது இன்று நம் மடியில் கைவைத்துள்ளது – அன்பால் என்ன பயன், காதலால் என்ன பயன், நட்பால் என்ன பயன், பெற்றோரால் என்ன பயன், குழந்தைப் பெறுவதால் என்ன பயன், செக்ஸால் என்ன பயன், உடலால் என்ன பயன், மனத்தால் என்ன பயன், மண்ணால், மரத்தால், ஆகாயத்தால், நீரால் என்ன பயன் எனக் கேடக ஆரம்பித்து உடனடி சந்தை மதிப்பு, துய்ப்பு மதிப்பில்லாதவற்றை வீணென்று கருதி ஒழிக்கிற மனநிலைக்கு இது நம்மைக் கொண்டு வந்துள்ளது. எதையும் பயன்கருதி வாழாத காலம் ஒன்று இருந்தது என்று இன்று சொன்னால் யாரும் நம்பாத காலத்தில் இருக்கிறோம். இது ஒரு தலைகீழ் மாற்றம் என்பதை மேக்ஸ் வெபர் தனது “அறிவியல் எனும் தொழில்” எனும் கட்டுரையில் 1922ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் ஆய்வு செய்கிறார்.
இன்றைய சூழலை சற்றே நினைவுபடுத்திவிட்டு வெபரின் கட்டுரைக்கு வருகிறேன். இன்று நவீன கவிதையை, இலக்கியத்தை அதனளவில் ரசிக்கிறவர், புரிந்துகொள்கிறவர்கள் அருகிவருகிறார்கள். இலக்கியத்துக்கு எதாவது ஒருவிதத்தில் பயன்மதிப்புண்டு என்று நாம் இன்றைய தலைமுறையினருக்கு (வயது வித்தியாசமின்றி) விளக்க வேண்டிவருகிறது – கவிதைகளைக்கூட வாணிகப் பொருளாகவும் வைரல் பண்டமாகவும் மாற்றினால் மட்டுமே மக்கள் கவனிக்கிறார்கள். தமிழிலும் இந்திய அளவிலும் சிலர் இலக்கிய உரையாடலைக்கூட சுயமுன்னேற்றத்திற்கும் பண்பாட்டு மேனிலையாக்கத்துக்கும் இந்து சமூகமாக்கலுக்கும் அணிதிரட்சிக்குமான கருவியாகச் சித்தரித்து முகாம்கள், பயிலரங்குகள், உரை நிகழ்வுகள் நடத்திவருகிறார்கள். ஆனால் நாற்பதாண்டுகளுக்கு முன்னால்கூட இலக்கிய உலகில் இப்படியொரு பயன்மதிப்பாக்கம் நடந்திருந்தால் பலருக்கும் மாரடைப்பு வந்திருக்கும். எழுத்து, வாசிப்பு குறித்து நமக்கிருந்த நம்பிக்கை அகத்தேயிருந்து புறத்திற்கு வந்திருக்கிறது. அதை (ஒவ்வொருவரும் அவரவர் நோக்கிற்கு ஏற்ப) எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கிறோம்.
இன்று குழந்தை பெற்றதுமே அடுத்த இருபதாண்டுகளுக்கான கட்டண ரசீதுகள் பெற்றோருக்கு முன்னால் ஓடுகின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன் மூன்று குழந்தைகள் பெற்றபோதோ, அதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன் பத்து குழந்தைகள் பெற்றபோதும் இப்படி நிலையில்லை. இன்று இந்தக் கட்டணங்களைச் செலுத்தாவிடில் குழந்தைகள் “நீயெல்லாம் எதுக்கு என்னைப் பெத்தே? நான் கேட்டேனா?” என்று கேட்கிறார்கள். அது மட்டுமல்ல தொடர்ந்து பெற்றோர் பருவத்தின் தகுதி குறித்த கேள்விகள் குழந்தைகளால் இன்று எழுப்பப்படுகின்றன. தினந்தினம் தாம் போதாமை மிக்கப் பெற்றோர் எனும் குற்றவுணர்வுடனே இன்றைய பெற்றோர் தூங்கப் போகிறார்கள். குழந்தைகளின் தன்மதிப்பு குறித்து பெற்றோரும் சமூகமும் இன்னொரு பக்கம் கடும் மதிப்பீடுகளை வைத்துக் கேட்பதால் அவர்களும் ஏன் தான் உயிருடன் இருக்கிறோம் எனும் குற்றவுணர்வுடன் தூங்கப்போகிறார்கள். இதனாலே குழந்தைப்பேறு உலகம் முழுக்க குறைந்து ஜப்பான், ஜெர்மனி போன்ற தேசங்கள் மக்கள் தொகை பெருமளவில் குறைந்து நிலைகுலைவால் தத்தளிக்கின்றன. இந்தியாவும் அந்நிலையை அடுத்த அரைநூற்றாண்டில் அடையும் என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
காதலில் உடனடி புலனின்பம் எனும் பயன்மதிப்பு எப்போதுமே உண்டு என்றாலும் அது போதாது எனும் எண்ணம் இன்று பரவலாகிவருகிறது – காதல் என்பது ஒப்பற்ற, மகத்தான, வாழ்வில் ஒருமுறை மட்டுமே எதிர்கொள்ளும் அனுபவமாக வேண்டும் எனும் எதிர்பார்ப்புப் பெருகிவருவதால் எப்படிக் காதலிப்பது என்பதே பெருங்குழப்பமாகி வருகிறது. விளைவாக, விதவிதமாகக் காதலிப்பது, காதலருடன் பயணம் போவது, பல்வேறு இடங்களுக்குச் சென்று சாப்பிடுவது, குடிப்பது, நடனமாடுவது, போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது, ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் காதலிப்பது எனத் தீர்வு தேடுகிறார்கள், காதல் என்னவெனும் கேள்விக்குப் பதில் நாடுகிறார்கள். இன்ன நபரைக் காதலித்தால், மணந்தால் இந்தளவுக்கு மகிழ்ச்சி, பாதுகாப்பு, சமூக மதிப்பு இருக்கும் எனக் கணக்குப் போடுகிறார்கள். அது போதாமல் ஆகும்போது அதை எப்படிப் பெருக்குவது எனச் சிந்திக்கிறார்கள். விளைவு-மதிப்பு மிக்க காதல் எதுவெனக் கேட்கிறார்கள். அண்மையில், ஒரு விவாதம் நமது ஊடகங்களில் விவாகரத்து முக்கியமான பேசுபொருளாகியது – தமிழ்நாட்டில் இவ்வாண்டு மட்டுமே 33,000 விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சன் டிவி செய்தியில் சொன்னார்கள். கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே 40% விவாகரத்து மனுக்கள் அதிகரித்துள்ளன. இப்படி நீதிமன்றத்துக்கு வராத பிரிவுகள் இன்னொரு 30,000 இருக்குமென்பது என் கணிப்பு. அதாவது, தமிழ்நாட்டு மக்கள் தொகையில் காதலிக்கும், மணம்புரியும் வயதிலுள்ளவர்களில் சுமார் 10% பிரிந்தோ இணையில்லாமலோ வாழ்கிறார்கள். அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை ஆண்களில் 65% என்கிறது ஒரு ஆய்வு. சேர்வதும் பிரிவதும் அவரவர் விருப்பம். ஆனால் அது எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும். இன்று ஏன் பிரிவு இவ்வளவு துன்பமாக மாறுகிறது என்றால் கூடலை மட்டுமல்ல, பிரிவையும் நாம் விளைவு கருதியே பரிசீலிக்கிறோம்.
கூடலில் நாம் எதிர்பார்த்த பயனில்லையென்னில் பிரிவில் அதை நாடுகிறோம். பிரிவதற்காகப் பிரிவதற்கும் இதற்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது. மேற்சொன்ன டிவி விவாதத்தில் பகுத்தறிவு, பெண்ணியம் ஆகிய கொள்கைகளைக் கொண்ட பெண் உளவியலாளர்கள் தோன்றி ‘இன்றைய கணவர்களுக்கு காதலிக்கத் தெரியவில்லை, அவர்கள் மென்னுணர்வுகளில் போதுமான கவனம் செலுத்துவதில்லை, பெண்களுடைய மணவாழ்க்கையை இன்பகரமாக கணவர்கள் வைப்பதில்லை’ என்று கூறினார்கள். இதைக் கேட்கும்போது மணவாழ்க்கை / காதல் எப்போது ஒரு ‘சேவையாக’ மாறியது எனும் கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால் அதைவிட முக்கியமாக இந்த சேவை கிடைக்கவில்லை என்று புலம்புகிறவர்கள் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான் என்பதை நான் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்த ஆண்களிடமும் கண்டிருக்கிறேன். ஆக, இது இரு பாலினங்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான கலாச்சாரப் பிரச்சினையாக இன்று மாறியுள்ளது. அடுத்து, பிரிவென்பது இன்னொரு உறவின் துவக்கம் அல்ல. கணிசமானவர்கள் பிரிவைத் தனியான வாழ்க்கையின் துவக்கமாகவே கருதுகிறார்கள். தனித்த வாழ்க்கையில் மேற்சொன்ன பயன்கள் இருக்குமா? இல்லாதபோது அவை இல்லாத வாழ்க்கையை நோக்கி ஏன் போகிறோம்? அதாவது கணவரோ மனைவியோ டாக்ஸிக்காக இல்லாதபோது இன்மையிலிருந்து இன்மையை நோக்கிப் பாய்வதற்கு ஏன் அவ்வளவு போராடுகிறோம்? இதற்கான பதிலை எந்த உளவியலாளரும் நமக்குச் சொல்வதில்லை – ஏனெனில் அவர்களே மனநலத்தை பொருண்மையானதாக, விளைவு-சார்ந்த செயல்பாட்டின் சேருமிடமாகப் பார்க்கிறார்கள். சிலர் பிரிவின் விளைவாக சுதந்திரத்தையும், நிம்மதியையும் கருதுகிறார்கள். ஆனால் தனியாகவும் பேச்சிலராகவும் வாழும் பலரிடமும் கேட்டுவிட்டேன். அவர்கள் இருவிதமான பதில்களை அளிக்கிறார்கள்: குடும்ப வாழ்வுடன் ஒப்பிடுகையில் நாங்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம், ஆனால் பொதுவாக அப்படி இல்லை. இதன்பொருள் அவர்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இல்லையென்பதே. ஆக, பிரச்சினை காதலிலோ தாம்பத்யத்திலோ இல்லை, அங்கு எதை எதிர்பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது.
காதலின் பயன்மதிப்பென்ன எனும் கேள்வி இயல்பிலேயே தவறானது. காதல் தர்க்கத்துக்கு உட்படுவதோ அளக்கக்கூடியதோ அல்ல. காதலில் பகுத்தறிவையோ பயன்மதிப்பையோ நாடுவோர் தவறாமல் பெரும் வீழ்ச்சியை நோக்கிப் போவார்கள். காதலிக்க மட்டுமல்ல, இலக்கியத்தில் ஈடுபடவும் பெரும் கிறுக்குத்தனம் வேண்டும். ஆனால் கிறுக்குத்தனமாக இருக்க எனக்குத் திறனோ நேரமோ வசதியோ இல்லை என்று மக்கள் பரவலாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது சந்தையில் பொருளை வாங்கும்போது யோசிக்கும் மொழி இன்று வாழ்க்கைக்குள் வந்துள்ளதால் வாழ்வதே பெரும் சவாலாக மாறியுள்ளது.
கல்வியாளர்கள் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி கல்வியை எப்படிப் பொருண்மைப்படுத்துவது, கல்வியின் விளைவுதான் என்ன என்பதே. முழுமையாகத் தனியார்மயமாகிய பின்னர் கல்விக்கட்டணம் விண்வெளிக்கு ஏவப்பட்டுவிட்டது. ஆக, அதை நியாயப்படுத்த கல்வியாளர்கள் ஒருபக்கம் தாம் அளிக்கும் கல்விக்குத் தெளிவான விளைவு, பயன்மதிப்பு உள்ளதென்று நிரூபிக்க கட்டாயம் ஏற்பட்டது. கல்வி என்பது திறன், அறிவு எனும் புலனாகாத விசயங்களை உருவாக்குவதால் அதைப் பொருள்வயப்படுத்துவது எளிதல்ல. இதனால் பரவலாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எல்லாருக்கும் கல்விமீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி நிறுவனங்களில் 80 கல்லூரிகள் போதுமான மாணவர் சேர்க்கையின்றி விரைவில் மூடப்படவுள்ளன என்றும், அதே நேரம் ஐவி லீக் எனப்படும் பெயர்பெற்ற கல்லூரிகள், பல்கலைகளில் விண்ணப்பங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன, அவை லாபத்தில் கொழிக்கின்றன என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த கட்டுரை ஒன்று சொல்கிறது. இந்தியாவிலும் பரவலாக நிலைமை இதுதான் – கோவிட்டுக்குப் பிறகு உயர்கல்வியில் சேரும் ஆர்வம் வெகுவாக்க் குறைந்துவருகிறது; எதற்குக் கல்லூரியில் படிக்கவேண்டும், அதனால் நல்ல வேலையில் கிடைக்குமென உத்தரவாதம் தான் இல்லையே என மாணவர்களும் பெற்றோரும் நினைக்கிறார்கள்; அதனால் இங்கும் கல்லூரிகள் கிட்டத்தட்ட அந்நெருக்கடியை எதிர்கொள்கின்றன. பள்ளிகளில் இன்னொரு பக்கம் கற்கும் ஆர்வமும் கவனமும் பொதுவான ஒழுங்கும் வெகுவாக்க் குறைந்துவருவது பரவலாக ஊடகங்களில் பதிவாகி உள்ளது. இதைப் பயன்படுத்தி கல்வித்துறையில் அதிகாரக் குவிப்பும், முதலீட்டுக் குவிப்பும் நடந்து பெருமுதலாளிகள் மட்டும் கொழிக்கிறார்கள், சிறுமுதலீட்டாளர்கள் அழிகிறார்கள். கல்வியென்றால் என்னவெனும் சிறிய கேள்வியின் தாக்கம் இது.
அடுத்து, துல்லியமாக மதிப்பிட முடியாத பணத்தினால் என்ன பயன் எனும் கேள்வியுடன் பணப்போக்குவரத்தை ஆன்லைன் வழியாக எண்வழிப்படுத்தி அதிக வரி வசூலிக்கவேண்டும் எனும் நோக்கில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழக்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கத்தினால் இன்று நமது மக்களிடமும் நுகர்வினால் என்ன பயன் எனும் கேள்வி அதிகரித்துவிட்டது. மக்கள் எதையும் வாங்கத் தலைப்படாததால் சந்தையில் பெருகிவிட்ட பணநோட்டுகளின் மதிப்பு வெகுவாக வீழ்ந்துவருகிறது. இதனால் அரசு மேலும் மேலும் வரிகளை அதிகப்படுத்தி பணமதிப்பை அதிகப்படுத்தப் போராடுகிறது; இது மக்களை மேலும்மேலும் பணத்தைப் பதுக்கி வைக்கச் செய்கிறது. பணம் தொடர்ந்து மதிப்பிழப்பதால் பணத்தில் அர்த்தமில்லை என்று தங்கத்திலும் பங்குகளிலும் முதலீடு செய்யும்படி ஆலோசகர்கள் கூறுகிறார்கள். மேற்தட்டினரிடையே கிரிப்டோகரென்ஸியில் ஆர்வம் பரவலாகிறது. பெருமுதலீட்டாளர்களைத் தவிர அனைத்து வணிகர்களுமே பணத்தைப் பெருக்க முடியாமல் நிலைகுலைந்து வருகிறார்கள். பணத்திற்கும் வேலைக்கும் முதலீட்டுக்கும் வணிகத்துக்கும் மதிப்பில்லாததால் குற்றங்கள் பெருகுகின்றன. குற்றமும் வேலைதானே என இளைஞர்கள் நம்பும் காலம் வந்துவிட்டது. இதே போலத்தான் மருத்துவத் துறை, நீதித்துறை, அதிகார வர்க்கம் மீதான அதிருப்தியும், அவநம்பிக்கையும் பெருகிவருகிறது.
அடுத்து வேலையினால் என்ன மதிப்பு? கணிசமான முதலீட்டாளர்கள், நிர்வாகத்தினர் தம் ஊழியர்களின் வேலையினால் மதிப்பில்லை எனக் கருதி, அவ்வேலையை எப்படி மதிப்பிடுவது எனக் கவலைப்படுகிறார்கள். இதன் வெளிப்பாடுதான் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி அண்மையில் நம் இளைஞர்கள் 70 மணிநேரங்களாவது வாரத்திற்கு உழைத்து தேசத்தைக் கட்டமைக்க உதவவேண்டும் என்று கோரியதும், இது பரவலான எதிர்ப்பைக் கிளப்பியதும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தனது கார் உற்பத்தி நிறுவனத்தில் வேலைசெய்வோரின் பணியை மதிப்பிட ஹென்ரி போர்ட் கொண்டு வந்த உத்திதான் வேலைநேரக் கணக்கு. இவ்வளவு நேரத்துக்கு இவ்வளவு உற்பத்தி என்பதைத்தான் உற்பத்தித்திறன் என்றார்கள். காதல், குழந்தைப்பேறு, மகிழ்ச்சி, ஓய்வு, உடல்நலம் என பல தளங்களில் நாம் உற்பத்தித்திறனை மதிப்பிட முயல்வது இதனால்தான் (போதுமான நேரம் தன்னுடன் செலவிடவில்லை என்பதால் கணவரை வெறுக்கும் மனைவியரும் அப்பாவை வெறுக்கும் குழந்தைகளும்). ஆனால் உற்பத்தித்திறனை நேரத்தின் அடிப்படையில் பார்க்கலாகாது, ஒரு ஊழியரின் பங்களிப்பு நுண்மையானது, அரூபமானது, தரத்தின் அடிப்படையில் பார்க்கவேண்டியது என்று இன்னொரு பக்கம் ஆய்வாளர்களும் ஊழியர் அமைப்புகளும் கோருகின்றன. ஊழியர்களோ – குறிப்பாக தலைமுறை ஊழியர்கள் – வேலைக்காக அதிகப் பயிற்சியோ சிரமங்களோ மேற்கொள்ளத் தயாராக இல்லையென்பதுடன் விமர்சனங்களை ஏற்கவும் விரும்புவதில்லை. ஒவ்வொரு மூன்று மாதங்களும் அவர்கள் கம்பெனிகள் தாவுவதும் வேலையில் பொறுப்பற்று ஆர்வமற்று இருப்பதும் நிர்வாகத்தின் தலைவலியாகிறது. இது ஏனென்றால் அவர்களிடம் வேலையினால் தமக்கென்ன பயன், வேலையின் நல்விளைவென்ன எனும் கேள்வியுள்ளது. ‘ஊதியம்’ எனும் பதில் முன்புபோல அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. ஊதியத்தினால் என்ன பயன்? தம் வாழ்வின் முக்கியமான காலத்தை முதலீட்டாளருக்கு ஒப்புக்கொடுப்பதால் என்ன பயன்? இரு தரப்புமே கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இதன் எதிர்விளைவாக முற்றதிகாரத் தலைவர்கள் எல்லா துறைகளிலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்து நம்பிக்கையைப் பெறுகிறார்கள். மதத்தைக் கொண்டு, இன அடையாளத்தைக் கொண்டு தேசப்பற்றை, தேசமுன்னேற்றத்தை அளக்கலாம் என்று சொல்கிற கட்சிகள் வெல்கின்றன.
நமது நம்பிக்கையிழப்பு சரியான கேள்வியைத் தவறான இடங்களில் நாம் கேட்பதால்தான் என்பது தெளிவானது. இந்த தவறான போக்கு எங்கு ஆரம்பித்தது எனப் புரிய நாம் மேக்ஸ் வெபரிடம் செல்லவேண்டும். ஏனென்றால் அவர் தன் கட்டுரையில் குறிப்பிடும் பிரச்சினைகள் எல்லாமே இன்று அன்றாட எதார்த்தமாகியுள்ளது. வெபர் தன் கட்டுரையை ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் கல்லூரிகள், பல்கலைகளில் பணியாற்றிய பயிற்சி ஆசிரியர்களும் பேராசிரியர்களும் – சமூகத்திலும் மாணவர்களிடத்தும் உள்ள எதிர்பார்ப்பின்படி – ஒரு கருத்தை மனசாட்சிப்படிப் பேச வேண்டுமா அல்லது நிர்வாகத்தின் எதிர்பார்ப்பின்படி தமக்குத் தரப்பட்ட விசயத்துடன் மட்டுமே நிறுத்திக்கொள்ள வேண்டுமா எனும் முரணை வைத்து ஆரம்பிக்கிறார். அப்படியே இது கல்வித்துறையின் பிரச்சினை அல்ல, சமூகம் முழுக்கப் பரவலாகியுள்ள அறிவியலாக்கத்தின் விளைவே என்கிறார். புத்தொளிக் காலம் 15-16 ஆம் நூற்றாண்டுகளில் உச்சம் அடையும் முன்பு வாழ்க்கையின் பயன் வாழ்க்கையே என்றிருந்தது, ஆனால் புத்தொளிக்காலத்தில் பகுத்தறிவும் விஞ்ஞான சிந்தனையும் முக்கியமானதுமே புலன்களால் மதிப்பிடத்தக்க ஒன்று மட்டுமே பயன் என மக்கள் நினைக்கத் தொடங்கினர் என்கிறார் வெபர். இந்த அளக்கத்தக்க புலனறி அனுபவம் தன்னளவில் மதிப்புக்கொண்டதல்ல என்பதே பிரதான சிக்கல் – இன்று முக்கியமாக இருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு நாளை மதிப்பிழக்கிறது. விஞ்ஞானம் அறிவை வாழ்நாளிலோ பிரபஞ்சத்தின் ஆயுளுக்குள்ளோ அடைய முடியாத அனாதியானது என்கிறது. அதனால் போதாமையே இயல்பென்றாகிறது; அறிவை முழுமையாக்க மனிதர்கள் காலங்காலமாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டும், விரைவில் பயன்மதிப்பிழக்கக் கூடிய ஒன்றுக்காகத் தன் வாழ்நாள் முழுமையையும் ஒப்புக்கொடுத்து உழைக்கவேண்டும் என்றாகிறது. இது ஏற்படுத்தும் பதற்றத்தையும், குற்றவுணர்வையும் முதலீட்டியம் நன்கு பயன்படுத்தி ஊழியர்களை நிரந்தர அடிமையாக்கவும், மக்களை நிரந்தரப் பயனர்கள், நுகர்வோர் ஆகவும் மாற்றியமைத்தது. இதன் தாக்கம் முதலில் கலையிலும், மானுடவியல் துறைகளிலும் ஏற்பட்டதாகச் சொல்கிறார் வெபர் – நீங்கள் விஞ்ஞானத்தில் ஒரு தற்காலிக இலக்கை வைத்துப் பயணிப்பதால் அதில் முன்னேற்றம் உள்ளதாக வரையறுக்க முடியும். ஆனால் கலையில் அது சாத்தியமில்லை, கலை தன்னளவில் முழுமையானது என்று வெபர் சொல்கிறார். கலை தன்னளவில் முழுமையானது எனில் அதன் பொருளென்ன?
கலையை நீங்கள் அதன் அடிப்படையாக உள்ள கடப்புநிலை அனுபவத்தை வைத்து மதிப்பிடலாம் – ஒரு கவிதையை வாசிக்கையில் நீங்கள் அக்கவிதையைக் கடந்து மற்றொன்றை, இன்னதென்று வரையறுக்க முடியாத ஒன்றைத் தரிசிக்கிறீர்கள். ஒன்றை அடைவதற்கும் அடைய முயல்வதற்கும் இடையில் உள்ள இடைவெளியையே நாம் எப்போதும் அடைகிறோம், கலை மொழிக்குள் நாம் ஒரு கட்டமைப்பை உடைத்து மற்றொன்றை உருவாக்கும்போது தோன்றும் சூனியத்தை நமக்கு அளிக்கிறது என்று தெரிதா கூறினார். இந்த இடைவெளியை நீங்கள் உங்களைக் கடக்கையிலே ‘காண்கிறீர்கள்’, அதில் உங்கள் இருப்பை ‘உணர்கிறீர்கள்’, கடந்து இன்னொன்றை அடைகையில் அல்ல. ஆக, கலையை நீங்கள் நிஜத்தில் பயன்மதிப்பு கொண்டதெனக் கூறவே இயலாது – கலையின் பயன்மதிப்பு அதன் பயண முடிவில் இல்லையென்பதால், அது பயணமாகவே தன் முடிவைக் காண்பதால் அது தன்னளவில் முழுமையானது.
நான் இதைச் சொல்லும்போது உங்களுக்கு ஆன்மீகம், இறையியல், தத்துவம் நினைவுக்கு வரும் – வெபரே தன்னளவில் இருக்குமொன்றை இந்து (வைதீக) மதமும் கிறித்துவமும் ஆன்மாவென்றும், பௌத்தம் அதை இன்மையென்றும் கூறியதாகக் குறிப்பிடுகிறார். வெபர் இதையே ‘மாந்திரிகம்’ என்கிறார். நம் முன் உடனடியாக இல்லாத ஒன்றை இருப்பதாகத் தோன்றவும், அதற்காக வாழவும் செய்வதே மாந்திரிகம். இம்மாந்திரிகம் இயல்பாகவே நம் வாழ்வை, இருப்பை முடிவிலியாகக் கருத வைக்கிறது. அறிவியல் இதற்கெதிரான யுத்தத்தை, தற்காலிக இலக்குகளுக்கான யுத்தத்தை ஆரம்பித்தது. இதை வெபர்
அ-மாந்திரிகமாக்கல் (disenchantment) என்கிறார்.
வேலை, நுகர்வு, வணிகம், பண்பாடு ஆகிய தளங்களைவிட மிக மோசமாக இது நம்மை பாதிப்பது ஆன்மீகத்துக்கு வெகுநெருக்கமாக இருக்கும் காதல் உறவில்தான். காதல் மிக வேகமாக அ-மாந்திரிகப்பட்டுப் போவதால் அதில் எளிய நேரடிப் பயன்களை மட்டுமே கருதி ஈடுபடவும், உடனடியாக அதைக் கைவிடவும் செய்கிறது. குடும்பத்துக்குள்ளோ வெளியிலோ காதல் புரிவது அலுவலகத்தில் வேலைசெய்வதைப் போல மாறிவருகிறது. அன்பை தினசரி நிரூபித்துக் காட்டவேண்டிய கட்டாயம் உள்ளது. அலுவலகத்தில் ஹென்ரி போர்டு இலக்கை நிர்ணயித்து வேலை நேரத்தைத் திர்மானித்ததைப் போல காதலர்கள் பரஸ்பரம் இலக்கை வைத்து மென்னியை நெரிக்க, இதை இன்றைய முற்போக்கு உளவியலாளர்கள் நியாயப்படுத்த அன்பு கடும் நெருக்கடியாக மாறுகிறது. ‘விளைவாக’ உலகம் முழுக்க மக்கள் காதல்செய்வதைத் தவிர்த்து ‘சிங்கிளாகவே’ இருக்கத் தலைப்படுகிறார்கள். கனடாவில் நடந்த ஆய்வுப்படி அங்கு 4.4 மில்லியன் பேரும், Pew Research Centerஇன் அறிக்கைப்படி உலகம் முழுக்க 18-29 வயதுக்குட்டவர்களில் 41% காதலற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் திருமணம் செய்ய ஆர்வமில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 17% கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகியுள்ளதாக “Youth in India Report 2022” கூறுகிறது. தெ அட்லாண்டிக் இதழில் வந்த The Slow Demise of American Romance எனும் கட்டுரையில் காதலின் மறைவைக் கண்ணீருடன் எடுத்துரைக்கிறார்கள்.
எனது முந்தைய தலைமுறையில் பலரிடமும் குடும்பம், நட்பு உள்ளிட்ட மானுட உறவுகளைப் பயன்மதிப்புக்கு அப்பால் முக்கியமானதாகக் கருதி அதற்காக சிரத்தை காட்டுகிற போக்கு இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். என்னுடைய வீடுள்ள பகுதியில் ஒரு மத்திய வயதுப்பெண் சமையல், பாத்திரம் துலக்குவது உள்ளிட்ட வீட்டு வேலைக்கு வருகிறார். அவர் அண்மையில் தான் வேலைசெய்யும் வீடுகளை அதிகரித்துவிட்டதைக் கவனித்து ஏனென்று வினவினேன். அப்போது அவர் தனக்கு முக்கியமான இலக்கொன்று உள்ளதாகச் சொன்னார். அதைக் கேட்டு அசந்துபோனேன் – அவரது கணவருக்கு விபத்து ஏற்பட்டு காலுடைந்துவிட்டது. காலில் கம்பியை வைத்துப் பொருத்தியிருக்கிறார்கள். ஆனால் அதை வெளியே எடுக்க அவர்களிடம் பணமில்லை. கணவர் வேலைக்குப் போக முடியாமல் வீட்டுடனே இருக்கிறார். அந்தப் பணத்தை சம்பாதிக்கத்தான் அவர் இவ்வளவு பாடும் படுகிறார். அவருக்கு நாளை சிகிச்சை நடந்தாலும் அவர் நடப்பது சிரமமே, வேலைசெய்ய முடியாது. ஆனாலும் அவரை எப்படியாவது சரிசெய்யவேண்டும் என இவர் ஆசைப்படுகிறார். அவர் நினைத்தால் கணவரைப் பிரிந்து தனியாக நிம்மதியாக வாழலாமே. ஆனால் செய்ய மாட்டார். அவ்வப்போது இப்படியான கதைகளைக் கேட்கையில்தான் நம் வாழ்க்கையில் அந்த சின்ன மேஜிக் இன்னமும் உள்ளது எனத் தோன்றுகிறது.
நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு இவரைப் போன்றவர்களிடமே உள்ளது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சதா தராசில் துல்லியமாக அளக்காமல் அதனளவில் முழுமையாக வாழ முயல்வதிலே உள்ளது. இன்றைய மதிப்பீட்டுச் சட்டங்களை, விஞ்ஞானப் பார்வையை, உளவியலை, பொருளாதார நோக்கங்களை சிறிது உதறிவிட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுகுவதிலே உள்ளது. கடவுளில்லாத இந்தக் காலத்தில் நாம் காதலில், அந்தரங்க உறவுகளில் ‘கடவுளை’ முதலில் மீட்க வேண்டும். நமக்கான ‘சிறிய விசயங்களின் கடவுளை’ நாமே உருவாக்க வேண்டும். ஒருவேளை சமூகப் பொருளாதார அமைப்புகளிலும் மாந்திரிகம் வரும்போது இந்த அன்பின் மாந்திரிகத்தைக் கொண்டு நம்மால் எதிர்காலத்தில் மோடி, டிரம்ப் வகையிலான முற்றதிகாரங்களை, வேலையிட அதிகாரத்துவங்களை முறியடிக்க முடியலாம்.
உசாத்துணை:
Weber, Max. Science as a Vocation. 1917. Translated by H. H. Gerth and C. Wright Mills, in From Max Weber: Essays in Sociology, Oxford University Press, 1946, pp. 129–156.
Löwy, Michael. The Theory of Disenchantment: Max Weber and the Twilight of the Gods. Routledge, 2004.
Gane, Nicholas. Max Weber and Postmodern Theory: Rationalization versus Re-enchantment. Palgrave Macmillan, 2002.
Pew Research Center. “A Profile of Single Americans.” Pew Research Center: Social and Demographic Trends, 20 Aug. 2020, www.pewresearch.org. Accessed 23 Dec. 2024.
Kovacs, Anca. “Young Canadians Are Choosing to Stay Single: Study.” Global News, 2 Apr. 2023, globalnews.ca. Accessed 23 Dec. 2024.
St. Network. “Single and Happy: An Increasingly Common Status in Modern Society.” ST Network, 2024, st.network. Accessed 23 Dec. 2024.
Vignoli, Daniele, et al. “Rethinking Family Dynamics: Why Young Adults Are Delaying Marriage.” National Center for Biotechnology Information, 2021, pmc.ncbi.nlm.nih.gov. Accessed 23 Dec. 2024.
Hill, Amelia. “Why Are Increasing Numbers of Women Choosing to Be Single?” The Guardian, 17 Jan. 2021, www.theguardian.com. Accessed 23 Dec. 2024.