னாதான தருமத்தை மீட்டவர் வள்ளலார்” என்று சமீபத்தில் ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். ரவி பேசியிருக்கிறார் என்பதாலேயே அதை நகைச்சுவையாக தமிழக மக்கள் கடந்து சென்று விடுகிறார்கள். இருப்பினும் வள்ளலாரின் சனாதானம் குறித்த பார்வையை மீள்வாசிப்பு செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இதை எடுத்துக் கொள்ளலாம்.

கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்றொரு மிகப்பெரிய தர்க்கவாதி இருந்தார். வள்ளலாரை ஒருமுறை தன்னுடன் தர்க்கம் செய்ய சவால் விட்டார். இரவும், பகலுமாக மூன்று நாட்கள் கடுமையான விவாதம் அவர்களிடையே நடந்தது. இறுதியில் வள்ளலாரே வென்றார்.

“ஞானத்தின் உறைவிடம் நீங்கள்” என்று கூறியவாறே ஓடிவந்து வள்ளலாரைக் கட்டியணைத்துக் கொண்டார்.

தன் இடுப்பில் துணிப்பையில் மடித்து வைத்திருந்த திருநீறை எடுத்து வள்ளலாரின் நெற்றியில் பூசினார்.

தனக்கும் திருநீறு பூசும்படி வள்ளலாரிடம் கேட்டார்.

“வெள்ளையுடை அணிந்தவன், காவி உடை அணிந்தவருக்கு திருநீறு பூசமாட்டேன்” என்று வள்ளலார் மறுத்தார்.

காவிகளுக்கு வள்ளலாரைத் தெரியாது என்பதற்கு இந்த சம்பவமே நல்ல உதாரணம்.

‘அவ்விருள் கடிய எழுந்த ஞாயிறு’ என்று திரு.வி.க, வள்ளலாரைக் குறிப்பிடுகிறார்.

வள்ளலார், பிறந்து வாழ்ந்தபோது நம்மை சூழ்ந்திருந்த இருள் என்ன?

பிறப்பால் ஒருவரை ஒருவர் ஒடுக்கும் வருணபேதம். அதன் விளைவாக உருவான சமூகப் புற்றுநோயான தீண்டாமை. வருணம் போட்ட குட்டிகளான ஆயிரக்கணக்கான சாதிகள். சாதி ஏற்றத்தாழ்வின் காரணமாக ஒரு பிரிவினருக்கு ஏற்பட்ட பசி, பஞ்சம். கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்ட நிலை. சனாதானத்தைப் பரப்பிய புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவை மூலம் உண்மையை அறிய முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். ‘கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப்போக’ என்று வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் ஆகியவற்றுக்கு சாபமே கொடுத்தார்.

ஆர்.என்.ரவி போன்ற சங்கிகள், சனாதானம் என்று சொல்லுவது வருண அடிப்படையிலான சமூகத்தையே.

அந்த வருண அமைப்பை முற்றிலுமாக எதிர்த்தவர் வள்ளலார்.

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே

என்று பாடியவர் வள்ளலார்.

ரவி போன்றவர்களுக்குத் தமிழ் தெரியாது. எனவே வள்ளலாரையும் தெரியாது. தமிழ் தெரிந்த, ரவிக்கு வேண்டிய சனாதானவாதிகள் எதை எழுதிக் கொடுக்கிறார்களோ, அதை மைக் முன்பாக உளறிக்கொட்டி வைக்கிறார். வள்ளலார் எழுதியவற்றை ரவியால் படிக்க முடிந்தால், பெரியாரைப் பற்றி அவருக்கு என்ன மதிப்பீடு இருக்கிறதோ, அதே மதிப்பீடுதான் வள்ளலாரைப் பற்றியும் உருவாகும்.

சனாதானத்தின் நிறமாக காவியைக் காண்பவர்கள் ரவி வகையறாக்கள். வள்ளலாரோ, கிறிஸ்தவப் பாதிரிகளை போல வெள்ளுடை தரித்தார்.

சனாதான அதிபதிகள் மடங்களை நிறுவினார்கள். வள்ளலார், பவுத்த மற்றும் சமணர்கள் பாணியில் சங்கம் அமைத்தார். மடத்துக்கும், சங்கத்துக்கும் என்ன வித்தியாசம்? மடம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. சங்கத்தில் ஆண், பெண் இருவரும் சமம்.

சாமியார்கள்தான் சனாதானத்தின் பிரதிநிதிகள். வள்ளலார் வந்ததோ மக்களை நெறிப்படுத்த, சமூகத்தை சீர்த்திருத்த வந்த மகான்களின் மரபு. திருவள்ளுவர், திருமூலர், பட்டினத்தார், தாயுமானவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் என்று தமிழ் அறிவுலகம் உலகமெல்லாம் ஒளிபரப்பி வாழ்ந்த மரபில் வந்தவர் வள்ளலார்.

சனாதானத்தின் ஆணிவேர் வைதீகம். தமிழர்களின் ஆன்மீகமோ ஆகமம். வைதீகத்தை எதிர்த்த வள்ளலார், எப்படி சனாதானக் காவலர் ஆனார் என்றே நமக்குப் புரியவில்லை.

சிதம்பரத்தில் ஆகமபூஜை நடைபெறாமல் வைதீகபூஜை நடைபெற்று வந்ததைக் குறித்து வள்ளலாருக்குக் குறை இருந்திருக்கிறது. கோயில் வழிபாட்டு முறைகள் சீர்த்திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஆகம விதிகளின் படியாக அந்த சீர்திருத்தங்கள் அமைந்திருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். தில்லைக்குரியது மகுடாகமம். அக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்து, பதஞ்சலியார் முறைப்படி நடைபெற்று வந்த வைதீகப்பூஜையை மாற்றி ஆகம பூஜையாக செய்ய வெண்டும் என்றெல்லாம் விரும்பியிருக்கிறார்.

தீட்சிதர்கள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.

எனவேதான் –

வடலூரில் தானே ஒரு சிதம்பரத்தை பின்னாளில் உருவாக்கினார். அதுவே உத்தரஞான சிதம்பரம் சத்திய ஞானசபை..

மறுபிறப்பு, முக்தி மாதிரியான சனாதான நம்பிக்கைகள் குறித்தெல்லாம் அவருக்கு மிகக்கடுமையான சந்தேகங்களும், கேள்விகளும் இருந்தன. அதனால்தான் புதிய பாதையை உருவாக்கவும் தலைப்பட்டார்.

அதுவே சமரச சுத்த சன்மார்க்க நெறி. நன்கு கவனிக்கவும். மதமல்ல, நெறி.

இந்நெறியை பின்பற்றுபவர்களுக்காக சமரச வேத சன்மார்க்க சங்கம் என்கிற அமைப்பையும் 1865இல் தன்னுடைய 41ஆவது வயதில் நிறுவினார். பின்னர் சங்கத்தின் பெயரை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று மாற்றிக் கொண்டார்.

சனாதான மதம் வேண்டாமென்று மறுத்துதான் நெறியை உருவாக்கினார். மதம், சமயம், மார்க்கம் போன்ற மரபுகளை கைவிடத் தயாராக இருப்பவர்களே சன்மார்க்க சங்கத்தில் சேர முடியுமென்று நிபந்தனையே விதித்தார்.

வள்ளலாரின் புதிய நெறிக்கு அப்போது சனாதானிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு தோன்றியது. வருணாசிரமத் தர்மத்துக்கு எதிராக தமிழ்ச் சூழலில் முதலில் ஓங்கி ஒலித்த குரலாக வள்ளலாரின் குரலே இருந்தது.

சனாதானத்தில் பிச்சை பெறுவதற்குக் கூட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. வள்ளலாரோ அன்னதானம் பெறுவதற்கு எந்தப் பேதமுமில்லை என்று ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ என்கிற நூலில் எழுதியிருக்கிறார்.

“பசியினால் வருந்துகிறவர்கள் எந்தத் தேசத்தவராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் சாதியாராயினும், எந்தச் செய்கையாராயினும், அவர்களுடைய தேச ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல் எல்லாச் சீவர்களித்திலும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்துக்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்திப்பதே ஜீவகாருண்யம்” என்றார்.

புலால் உண்பதை மறுத்து ஜீவகாருண்யம் பேசிய வள்ளலார், மாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களை சன்மார்க்க சங்கத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. அதை வைத்து ‘வள்ளலார் நம்ம ஆளு’ என்று இன்று பார்ப்பனர்கள், ரவி போன்றவர்களின் காதில் ஊதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் –

புலால் உண்போரும் கூட பசியென்று நாடி வந்தால் தருமச்சாலையில் உணவளிக்க வேண்டும் என்றவர் வள்ளலார்.

வள்ளலார் வாழ்ந்தபோது, அவருக்குப் பெரும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளித்தது ‘சன்மார்க்க போதினி’ என்கிற பாடசாலை. தருமச்சாலை நிறுவப்பட்டவுடனேயே இதுவும் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் கல்வி அப்போதுதான் அனைவருக்குமானதாக மாறிக் கொண்டு இருந்தது. அதற்கு முன்பாகக் கல்வி என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வரமாக இருந்தது. கல்வி ஜனநாயகப்பட்டது என்பதே அன்னியர் ஆட்சியால் நமக்குக் கிடைத்த சிற்சில நன்மைகளில் ஒன்று.

அந்த அடிப்படையில் ஆங்கிலேயரைப் பின்பற்றி ‘அனைவருக்கும் கல்வி’ என்கிற முழக்கத்தோடே சன்மார்க்க போதினியைத் துவக்கினார் வள்ளலார்.

வள்ளலாரின் பாடசாலைக்கு ஆண், பெண், சாதி போன்ற பேதங்கள் இல்லை. வயது வித்தியாசமில்லாமல் சிறுவர் முதல் முதியோர் வரை கற்கலாம். நவீன சனாதானமான ‘நீட்’ போன்ற வடிகட்டும் தேர்வுகள் சன்மார்க்க போதினியில் இருந்ததே இல்லை. சன்மார்க்கப் போதினியின் பெரும் சிறப்பு என்னவென்றால், முதன்முறையாக இங்கேதான் திருக்குறள் பாடமாக எடுத்து நடத்தப்பட்டது. உலகின் பொதுமொழியான ஆங்கிலமும் எல்லோருக்கும் கற்பிக்கப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்திய முன்னோடி நிறுவனமான சன்மார்க்க போதினி, வள்ளலாரின் காலத்துக்குப் பிறகு நிலைபெறாமல் போனது. காரணம், சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி கொடுப்பது என்பது வருணபேதத்தை ஒழிக்குமென அச்சப்பட்ட சனாதானவாதிகளின் பெருமுயற்சிதான்.

சதிகளுக்குப் பலியாகாமல் ஒருவேளை சன்மார்க்க போதினி தொடர்ந்திருந்தால், இன்று உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கும்.

“தேவபாஷையான சமஸ்கிருதம்தான் உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளுக்குமே தாய்மொழி” என்று அன்று இருந்த சங்கராச்சாரியார் சொன்னபோது, “அப்படியெனில் உலகத்தில் இருக்கும் அத்தனை மொழிகளுக்குமே தந்தை மொழி நம் தமிழ்தான்” என்று சீற்றத்தோடு பதிலடி கொடுத்தார். இத்தனைக்கும் வள்ளலாருக்குத் தமிழில் இருந்த அதே புலமை, சமஸ்கிருதத்திலும் இருந்தது.

குழந்தைகளுக்கு காது குத்துதல், மூக்குக் குத்துதல் போன்றவை தேவையற்ற சடங்குகள் என்று விமர்சித்தார்.

அப்போதெல்லாம் கணவரை இழந்துவிட்டால் பெண்களுக்கு கைம்மைக் கோலம் போடப்படும். மொட்டை அடிக்கப்பட்டு, நகைகளை முற்றிலுமாகத் துறந்து, வெள்ளை அல்லது காவி உடை உடுத்தப்பட்டு வீட்டின் ஒரு மூலையில் எவருக்கும் பிரயோசனமற்றவராக அமரவைக்கப்படுவார்கள்.

இந்த கைம்மைக் கோல வழக்கத்தை வள்ளலார் மிகவும் கடுமையாக எதிர்த்தார். கணவரை இழந்த பெண்கள் எப்போதும் போலவே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது குறித்த பிரச்சாரங்களை தன்னுடைய சீடர்கள் மூலமாக முன்னெடுத்தார்.

மனைவியை இழந்த கணவர்கள் உடனடியாக மறுமணம் செய்து கொள்வார்கள். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியென்று தனித்தனியாக நீதி இருக்க முடியாது என்று வள்ளலார் தீவிரமாக நம்பினார். ’ஒருவனுக்கு ஒருத்தி’என்கிற கருத்தாக்கம் பெண்ணுக்கு மட்டுமல்ல; ஆணுக்கும் வலியுறுத்தப்பட வேண்டிய பண்பாடு என்றார்.

கணவன் இறந்தால் மனைவி தாலி இழக்க வேண்டியதில்லை என்கிற கருத்தை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே முற்போக்காக அவர் சொல்லியிருக்கிறார்.

வள்ளலார் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது இறப்பு குறித்த சடங்கின் போதுதான். இறந்தவரின் உடலை எரிப்பது தவறு என்பது அவரது வாதம். இறந்தவரைப் புதைக்க வேண்டும். அவர்கள் மற்றவர்கள் நினைவில் வாழ சமாதி அமைக்க வேண்டும். காரியம், கருமாதி கூடாது என்றார்.

தர்க்கரீதியாக வள்ளலார் சொன்னதைப் பலரும் ஏற்றுக் கொண்டனர்.

எனினும் –

மதத்தையே மூலதனமாக்கி தங்கள் பிழைப்புக்கு தொழிலாக அதை மேற்கொண்டிருந்தவர்கள் எதிர்த்தார்கள். இறந்தவர்களை எரிக்க வேண்டும்; கருமாதி செய்ய வேண்டும் என்பதற்கு என்ன ஆன்மீக ஆதாரங்கள் இருக்கின்றன என்று அவர்களோடு வாதிட்டார் வள்ளலார்.

பரன் அளிக்கும் தேகம் இது
சுடுவது அபராதம் எனப் பகிர்கின்றேன் நீர்
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்
செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள் வந்து
அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர்
வான் அளிக்க புதைத்த நிலை காணீரோ
கண் கெட்ட மாட்டீனீரே

என்று பாடினார்.

வள்ளலார் நிறுவிய ஞானசபையின் வழிபாட்டு முறைக்கும், சனாதானத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நாம் பார்க்க வேண்டும்.

* அருட்பெருஞ்சோதியை தரிசிக்க சாதி சமய வேறுபாடு இல்லை. அனைவருக்குமே வழிபட உரிமை உண்டு.

* வழிபாட்டுக்கு வந்தவர்கள் சபைக்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.

* புலால் உண்ணும் வழக்கம் கொண்டோர் வெகு தூரத்தில் நின்று வழிபடலாம். முன்மண்டபத்துக்கு வருவதைக்கூட அவர்கள் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* சபையின் உட்புறத்தைச் சுத்தம் செய்வது, திரி மாற்றுவது, விளக்கு ஏற்றுவது போன்ற பணிகளின் பொருட்டு மட்டும் ஒருவர் சபைக்குள் செல்லலாம். அவரும் கூட புலை கொலை தவிர்த்தவராகவும், மூவாசையைத் துறந்தவராகவும் இருப்பார்.

* வழிபாட்டுக்கு இசைக்கருவிகள் இசைக்கப்படக் கூடாது.

* படையல் செய்வதோ, தீபாராதனையோ கண்டிப்பாகத் தவிர்க்கப்படும்.

* திருநீறு மாதிரி பிரசாதம் எதுவும் வழிபாட்டுக்கு வருபவர்களுக்கு வழங்கப்படாது.

இவையெல்லாம் வள்ளலார் வகுத்த வழிமுறைகள். இன்றைய இந்துமத ஆலயங்களின் வழிபாட்டு முறை கூட, ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய வள்ளலாரின் வழிபாட்டு முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை நாம் அடையாளம் காண முடியும்.

தான் மறைவதற்கு முன்பாக செய்த மகா உபதேசத்தில், “சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்” என்று மிகத்தெளிவாகவே சனாதானக் குடுமியை அறுத்துவிட்டுச் சென்றவர்.

இத்தகைய சீர்த்திருத்தவாதியாக இருந்த வள்ளலார் கடைசிக் காலத்தில், “கடை விரித்தோம்! கொள்வாரில்லை!!” என்று வேதனைப்படக் காரணம், அவரது சனாதான எதிர்ப்பு புரட்சிக் கருத்துகளே. காலம் காலமாக அதிகாரத்தை அண்டிப் பிழைத்த சனாதானம், வள்ளலாரை வீழ்த்துவதற்கான அத்தனை சூழ்ச்சிகளையும் அரங்கேற்றியது.

ராமலிங்க வள்ளலார் மறைந்து, ஐந்து ஆண்டுகள் கழித்து ராமசாமி பெரியார் பிறந்தார். வள்ளலாரை வீழ்த்திய சனாதான சூழ்ச்சிகளுக்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி நின்றார்.

சுயமரியாதை சிந்தனைக்கும், கடவுள் மறுப்புக்கும் பேர் போன தந்தை பெரியாருக்கும் வள்ளலாருக்குமான ஒற்றுமை சாதி, சமய வேறுபாடுகளை எதிர்த்தது. பெரியாரின் அதிரடியான அணுகுமுறையால், அவர் காலத்தில் வாழ்ந்த ஆன்மீகவாதிகள் பலரும் பெரியாரைத் தங்கள் எதிரியாகவே கருதி வந்தார்கள்.

ஆனால், பெரியார் மிகவும் மதித்த ஆன்மீகவாதி, வள்ளலார்.

திருவருட்பாவின் ஆறாம் திருமறையில் இடம்பெற்றிருக்கும் நூறு பாடல்களைத் தொகுத்து, ‘ராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ என்று ஒரு நூல் வெளிவந்தது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சாமி சிதம்பரனார் இந்தப் பாடல்களைத் தொகுத்தார். வெளியிட்ட பதிப்பகம், தந்தை பெரியாரின் குடியரசுப் பதிப்பகம்.

குடியரசுப் பதிப்பகம் ஓர் ஆன்மீக நூலை வெளியிட்டது என்று சொன்னால், இன்று பலராலும் நம்ப முடியாது. இப்பாடல்களில் சாதி, வருணாசிரம முறை மிகவும் கண்டிப்புடன் எதிர்க்கப்பட்டதைப் பெரிதும் பாராட்டினார் பெரியார்.

எனவே –

எல்லாத் தரப்பு மக்களையும் வள்ளலாரின் இப்பாடல்கள் சென்று அடைய வேண்டும் என்கிற குறிக்கோளோடு மக்கள் பதிப்பாக, மலிவு விலையில் கொண்டு சேர்த்தார். நூல் விற்பனைக்காகப் பெரியளவில் விளம்பரமும் செய்தார்.

பின்னாளில் ஒருமுறை வடலூருக்குப் பெரியார் வந்தபோது, அவரை சபைக்கு அழைத்து மரியாதை செய்ய நினைத்தார்கள்.

சபை வாசலில் ‘புலால் உண்ணாதவர்கள் உள்ளே வரலாம்’ என்பதைப் போன்ற அறிவிப்பைக் கண்டு, பெரியார் உள்ளே வரவில்லை.

“நான் வள்ளலாரை மதிக்கிறேன். எனவேதான் உள்ளே வரவில்லை. ‘புலால் உண்பவர்கள் உள்ளே வரக்கூடாது’ என்று எழுதியிருந்தால், நான் போராட்டம் நடத்தி உள்ளே வந்திருப்பேன். ஆனால், வள்ளலாரின் அன்பு வழியில் வந்தவர்களோ விடுத்திருப்பது வேண்டுகோள். அதை நான் மதிக்கிறேன்” என்று விளக்கம் அளித்தார் பெரியார். அந்தளவுக்கு வள்ளலாரின்மீதும், அவரது கருத்துகளின்மீதும் பெரியாருக்குப் பெரும் அன்பு இருந்திருக்கிறது.

பெரியாரின் சீடரான கலைஞர், ‘ஈரோட்டு வள்ளலார் பெரியார், வடலூர் பெரியார் வள்ளலார்’ என்று இருவரையும் ஒப்பிட்டார்.

பொதுவாக ஆன்மீகத்துறையைத் தர்க்கரீதியாகக் கேள்வி கேட்டு, சங்கடத்துக்கு உள்ளாக்கும் திராவிட இயக்கத்தாரே கூட வள்ளலார்மீது வைத்திருக்கும் அளப்பரிய மரியாதைக்குக் காரணம், சனாதானத்தை இம்மண்ணில் தோலுரித்துக் காட்டியவர் என்பதால்தான்.

‘சாதி சமயங்களிலே விதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று’ என்று அன்றும் இன்றும் என்றும் வள்ளலாரின் குரல் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.